கோடைநிலா எங்கே?

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
夏の夜は
まだ宵ながら
明けぬるを
雲のいづこに
月やどるらむ

கனா எழுத்துருக்களில்
なつのよは
まだよひながら
あけぬるを
くものいづこに
つきやどるらむ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: கவிஞர் ஃபுகாயபு

காலம்: கி.பி 9ம் நூற்றாண்டின் பிற்பகுதி (பிறப்பு இறப்பு பற்றிய குறிப்பான தகவல்கள் இல்லை).

இளவரசர் தொனேரியின் வம்சத்தில் வந்த இவர் காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். இத்தொகுப்பின் 42வது பாடலை இயற்றிய மொதோசுகேவின் தாத்தா, 62வது பாடலை இயற்றிய ஷோகனொனின் கொள்ளுத்தாத்தா. இவர் இயற்றிய 41 பாடல்களில் 7 பாடல்கள் கொக்கின்ஷூ தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தனது பிற்காலத்தில் தலைநகர் கியோத்தோவில் இருந்த ஒஹாராவுக்கு அருகிலுள்ள ஃபுதராகுஜி கோயிலைக் கட்டி வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

பாடுபொருள்: கோடையின் குறுகிய இரவு.

பாடலின் பொருள்: ஆஹா! இதோ கோடை காலத்தின் இதமான மாலை வந்துவிட்டது. அட! அதற்குள் விடிந்துவிட்டதே? சற்று நேரம் மட்டும் தலைகாட்டிய நிலா எந்த மேகத்தின் பின் மறைந்துள்ளதோ! 

இயற்கையைப் போற்றும் இன்னோர் எளிய பாடல். கோடைகால இரவுகள் எப்போதும் குறுகியவை. மாலை வந்துவிட்டதே என்று மகிழ்வதற்குள் விடிந்துவிட்டதே என்ற குறிப்பால் நீண்ட நேரம் இரவின் இதத்தை அனுபவிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் வெளிப்படுத்தப்படுகிறது. இதனுள் ஓர் அழகியலாக அவ்விரவை அழகாக்கிய நிலவை விடியலின்போது காணமுடியாமல் போவதை, அதற்குள் மேல்வானில் சென்று மறைந்திருக்க இயலாதே! எந்த மேகத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு ஓய்வெடுக்கிறதோ என்ற கேள்வியின்மூலம் உணர்த்துகிறார் கவிஞர். ஒருவேளை இரவு முழுவதும் நிலவையே பார்த்துக்கொண்டு இருந்திருப்பாரோ?

வெண்பா

குளிரந்தி தண்ணிதம் நல்கத் தணலைக்
களிகூட்டு பொன்மாலை நீக்க – ஒளியுமிழ்
திங்களும் கொண்டலின் பின்னே ஒளிய
விரைவாய் மறையும் இரவு

Series Navigation<< மனித மனமும் மலர் மணமும்கொடிவழிச் செய்தி >>புல்நுனியில் பனிமுத்து >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.