
வெயிலிற்கு பழக்கப்பட்ட
அலுமினிய குண்டான்களில்
பனங்கீற்று கூப்புகளுக்குள்
பிய்த்த நுங்குகள்
பறித்து நிரப்பி வைக்கப்பட்ட
தலையில்லாத இளநீர்கள்
நீரற்றக் கண்ணாடித்
தொட்டிகளுக்குள்
நீந்திடாத பலாசுளைகள்
இன்னும் மெழுகு பூசை
நடைபெறாத
மாம்பழங்களும்
கோடை ஆரஞ்சும்
முழுதாகவோ
சட்டையுரித்த
துண்டங்களாகவோ
கோசாப் பழங்கள்
உட்புகுத்தப்பட்ட
மலர் ஒப்பனைகள்
அணிந்த முலாம் பழங்கள்
பழக்கப்படுத்திய
மண் பானைகளில்
கம்பு கேழ்வரகு கஞ்சியுடன்
நீர்மோரும் மிளகாய் வற்றலும்
இவ்வளவுக்கு மத்தியிலும்
மிதிவண்டியின் வேகத்தில்
விரைகிறான் சிறுவன் ஒருவன்
குளிரூட்டப்பட்டு நெகிழிகளில்
அடைபட்ட குச்சி ஐசையும்
சோடாக்களையும் வாங்க!!!