‘குரவை’ நூல்– வாசிப்பு அனுபவம்

நூலாசிரியர்: சிவகுமார் முத்தய்யா

ஒரு நாவலோ சிறுகதையோ வாசித்திடும் பொழுது எடுத்து எடுப்பிலேயே அது சிரத்தன்மை உள்ளது, இல்லை என்பதை பொதுவாக கணித்து விட முடியாது. நீண்ட நெடிய பக்கங்களை வாசித்த பின்பே அந்த சிறுகதை அல்லது நாவல் எப்படிப்பட்டது என்பதை கணிக்க நேரிடுகின்றது.

சில நாவல்கள், சிறுகதைகள் அப்படி அல்ல. சில பக்கங்கள் வாசித்து கொண்டிருக்கும் பொழுதே நாமும் கதையோடு ஒன்றி கதாபாத்திரங்களோடு ஒன்றி விடும் தருணங்கள் உருவாகி நம்மை உணர்ச்சியில் ஆழ்த்தி விடுகின்றது. 

அந்த வகைமைகளில் ‘குரவை’ நாவல், நம்மை தப்படித்தான் மூலையில் நாகராஜன் குடிசைக்கு அருகிலோ, பெரிய நாயகத்தின் குடிசைக்கு பக்கத்திலோ, குமரேசன் உடனோ, நித்தியா – பேபி வீட்டிற்கு பின்புறத்திலோ, கலியமூர்த்தி தெருவிலோ, முத்துப்பட்டன் வீட்டிற்கு எதிரிலோ இப்படி எப்படியோ ஒருவர் குடிசைக்கு அருகிலேயே நாமும் ஒரு குடிசை அமைத்து வாழ்ந்து வந்த உணர்வே இந்த நாவலை வாசிக்கும் போது ஏற்படுகின்றது.

இந்த நாவலை, _”பன்முக நாட்டுப்புற கலைகளில் ஈடுபட்டு வரும் அத்தனை கலைஞர்களுக்கும்”_ சமர்ப்பித்துள்ள நூலின் ஆசிரியர், _”தஞ்சை வட்டாரத்தில் மரபார்ந்த கலையான கரகாட்டம் உள்ளிட்ட கலைகள் நீண்ட நெடுங்காலமாக நிகழ்த்தப்பட்டு வருகின்றது. அது ஒரு காலத்தில் உன்னத கலையாக இருந்தது. காலப்போக்கில் அது தனது அழகியலை இழந்து வெறும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட ஒரு நிகழ்ச்சியாக சுருங்கிவிட்டது. அந்த கலையில் திறன்மிக்க கலைஞர்களாக இருந்தவர்கள் காலச்சூழலில் அடையாளமற்று போனார்கள். அவர்கள் குறித்து நான் தொடர்ந்து பதிவு செய்து வந்தாலும், ஒரு நீண்ட கலை மரபுக்கு அவர்கள் ஆற்றி வந்த கலை சேவையை போற்றும் வகையில் இந்த நாவலை எழுதத் தொடங்கினேன்”_ என்று இந்த நாவல் எழுதத் தொடங்கியதற்கான நோக்கத்தை எழுத்தாளர் கூறுகின்றார்.

இந்த நாவலில் கரகாட்டம் நிகழக்கூடிய நிகழ்வுகளில், பங்கேற்கும் கலைஞர்களால் சொல்லப்படும் வசனங்கள், வசவுகள், ஆடல், பாடல் என அனைத்தையும் வாசித்திடும் பொழுது நேரில் பார்த்திடும் உணர்வே எழுகின்றது. இது போன்ற நிகழ்வுகள் நேரில் ஏற்கனவே கண்டவர்கள், இந்த சூழலை வாசிக்க நேர்கையில் மிகவும் ரசனையையும் மெல்லிய புன்முறுவல்களையும் தன்னகத்தே கொண்டு விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

நூலின் ஆசிரியர் கரகாட்ட கலைஞர்கள் சிலரை நேரில் பார்த்தும், சிலரை நேரில் அணுகி விவரங்களை கேட்டும், அதன்படி அவர்களின் வாழ்க்கையை நாவலாய் தீட்டியும் உள்ளாதாக தெரிவித்துள்ளார். எனினும் அவர்களின் வாழ்க்கையை எந்தவித புனைவுகளும் இல்லாமல் நுண்கண்ணோட்டத்தோடு அணுகி மிகவும் அழகாகவும், வாசிப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாத வகையிலும் அளித்துள்ளார்.

எல்லோராலும் கொண்டாடப்பட்ட கலைஞர்கள் அவர்களின் வாழ்க்கை, அவர்கள் வாழ்ந்த பொழுதுகளில் அவர்களின் குடும்ப சூழல், வாழ்க்கை அமைப்பு எந்த வடிவில் இருந்தது என்பதை இந்த நாவல் அழகாக சுட்டுகிறது.

எல்லோராலும் ஆராதிக்கப்பட்ட கரா காட்டகாரிகள், அவர்கள் எதற்காக புகழ் பாடுபட்டார்கள், அவர்கள் வாழ்க்கை இளமையின் போதும் முதுமையின் போதும் எப்படி உருமாறி செல்கின்றது என்பதையும், எத்தகைய நபர்கள் செல்வந்தர்கள் திருமணம் செய்து கொள்ள எத்தனிக்கும் பொழுதும், கலை தாகத்தில் மட்டுமே குறியாக இருந்து அவர்கள் ஒருவரையும் சீண்டாமல் திருமணமே செய்திடாமல் இருப்பவர்களின் வாழ்க்கையையும், விரும்பி திருமணம் செய்து கொண்டவர்கள் செல்வந்தர்களால் கைவிடப்பட்டு மீளவும் பிறந்த இடம் வந்து உழலும் நிலையையும் இந்த நாவல் சிறப்பாக விவரிக்கின்றது.

இந்த நாவலின் முன்பகுதியில் அவன் என்ற தலைப்பிலும், பின்பகுதியில் அவள் என்ற தலைப்பிலும் வரக்கூடிய விவரணைகள் கரகாட்ட கலையின் மீது இருந்த கலை தாகத்தின் விளைவாகவும், கலை போதை, மது /மாது போதையினாலும் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்ட ஒவ்வொரு நபர்களுக்கான பொதுவான உணர்வுகளின் வெளிப்பாடுகளாகவே உள்ளது. இந்த உணர்வுகள் வாழ்க்கையின் விரக்தியில் உள்ள, துணையை இழந்த, துணையை தேடும் கலைஞர்களின் மன வெளிப்பாட்டின் சிறந்த ஓவியமாய் வெளிப்படுகின்றது.

தை மாதம் தொடங்கி சித்தரை மாதம் வரையிலும் கிராமங்களில் நடைபெறுகின்ற கோவில் மற்றும் இதர திருவிழாக்களில் பங்கேற்கும் கரகாட்டக் கலைஞர்களுக்கு கிடைக்கும் சொற்ப தொகைகளை வைத்து குடும்பம் நடத்துவதும், மற்ற நாட்களில் அவர்களுக்கு நிகழ்ச்சி அல்லாமல் ஏதாவது நிகழ்ச்சிகள் வருமா என்று எதிர்நோக்கி இருப்பதும், தப்படிக்கும் முறைகளில் இருந்து மாறி சிலர் நாதஸ்வரம் தவில் என வாசிப்பதும், தப்படித்தான் மூலை என்றாலே பிறர் முகம் சுளிப்பதும் என அந்த கலைஞர்கள் வாழ்க்கையை நாவல் அழகாக விவரித்து செல்கின்றது.

 _’வந்த வேகத்தில் பாட்டிலைத் திறந்து தம்ளரில் ஊற்றி கடும் கோடைகாலத்தில் மேய்ச்சலுக்குச் சென்று திரும்பும் மாடு தீராத தாகத்துடன் தொட்டி தண்ணீரை பருகுவதைப் போல அவசரத்துடன் பருகினார்’_ என்ற சொற்றொடர்களில் இருந்து கரகாட்ட கலைஞர்கள் தங்களின் ஆடிய களைப்பை ஆண் பெண் பேதமின்றி எப்படி நிவர்த்தி செய்து கொள்வதால், அவர்கள் வாழ்வில் மதுப்பழக்கம் எந்த அளவில் ஆக்கிரமிப்பு கொண்டுள்ளது என்பதை காட்டுகின்றது.

 _’கலியமூர்த்தி தவிலால் தட்டி டும்… டும்… என அடித்து ஓசையெழுப்பி கேட்கச் சொல்லி சமிக்ஞை செய்தான். தவில் வாசிப்பவர்களுக்கும் ஆடுபவர்களுக்குமான ரகசிய மொழி அது. வாசிப்பவர்கள் தங்களுக்கு சோர்வு ஏற்படும் போது குறைவான சத்தத்தை எழுப்பினால் ஆடுபவர்கள் அதனை புரிந்து கொண்டு கூட்டத்திலிருந்து எவ்வளவு விசில் சத்தம் வந்தாலும் வேகம் எடுத்து ஆட மாட்டார்கள். அதுபோல ஆடுபவர்கள் ஆட முடியாது கால் வலிக்கும் போது காலில் அணிந்திருக்கும் சலங்கையை தரையில் வைத்து இரண்டு முறை குலுக்கினால் அடியின் வேகத்தை குறைப்பது தொடங்கி, சாப்பிடுவது, சம்பளம் அதிகம் கேட்பது வரையிலும் பல சங்கதிகள் அதில் உண்டு’_ – என்பது நாம் நிகழ்வை மட்டுமே ரசித்துக் கொண்டிருக்கும் பொழுதுகளில், கலைஞர்கள் ஆட்டம், இசை, நடனம், நளினம், தாளம் என அனைத்திலும் தங்களுக்கான உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றார்கள் என்பது புலனாகின்றது.

 _’அன்று தப்பிடித்தவன் இன்னும் தப்பிடித்துக் கொண்டுதான் இருக்கின்றான். அன்று ஆட்டத்துக்கு போன ஒருத்தியின் பேத்தி இன்றும் ஆடிக் கொண்டுதான் இருக்கிறாள். அன்னைக்கு தவில் தூக்கி தோளில் மாற்றியவன் பரம்பரையில் யாரோ ஒருவர் வாசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒன்றும் மாறவில்லை, இன்னும் பிழைப்புக்காக அலைந்து திரிகிறார்கள்’_ என்பது அவர்களின் சமூக வாழ்க்கையில் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் வாழ்க்கையை கடத்தவும் கரகாட்ட கலையை தவிர வேறு எதுவும் தெரியாது என்பதையும், அவர்கள் கலைக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்காமல் வறுமையின் பிடியில் உள்ளார்கள் என்பதையும் காட்டுகிறது.

 _’எல்லாம் கடந்த பிறகும், அந்த கசப்பான நினைவுகளில் இருந்து மீள்வது தான் சற்று பலப்பரிட்சையாக உள்ளது’_ என்பது வாழ்க்கையில் கடந்த காலங்களில் நிகழ்ந்தவைகளை மறந்து புதிதாய் ஒரு வாழ்க்கையை தொடங்க எத்தனிக்கும் கரகாட்ட கலைஞர்களின் ஒவ்வொருவரின் மனசாட்சியின் வெளிப்பாடாகவே தெரிகின்றது.

நிலைத்து நின்று புகழ் பறந்து விரிந்த கரகாட்டக் கலைஞர்களின் வாழ்வானது, எப்படிப்பட்ட இன்னல்களாலும் சமூக அமைப்புகளாலும் உருமாறி சிறுத்து, எங்கே உள்ளார்கள் அவர்கள் என்ற கேள்விக்கு உரியவர்களாய் ஆளானார்கள் என்ற வினாவிற்கு தன் பங்கிற்கு பதிலுரைத்தும், அக்கலைஞர்களின் வாழ்வியலுக்கு தக்கதொரு சான்றாகவும், இந்த ‘குரவை’ நாவலும் இலக்கிய முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த நாவலின் ஆசிரியர் எழுத்தாளர் சிவகுமார் முத்தய்யா, தான் எடுத்துக்கொண்ட களத்தின் மீது எந்தவித ஆடம்பரத்தையும் காட்டாமல் நாவலை மிகவும் அழகாகாய் வடித்துள்ளார். எழுத்தின் நடையும் மிகவும் அழகியல் நோக்கில் சிறப்பாக அமைந்துள்ளது. கரகாட்ட கலைஞர்களின் வாழ்வியலை கூறும் மிகச்சிறந்த நாவலாய் இது அமைந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.