காலாதீத வ்யக்துலு என்ற நாவல் – டாக்டர். பி. ஸ்ரீதேவி

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

கணவன், மனைவி, பிள்ளைகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்ததே குடும்பம். அவர்களுக்கு இருக்க வேண்டிய உறவு, பொறுப்பு, கடமைகள் அனைத்தும் சேர்ந்து அதனை ஒரு அமைப்பாக நிலைநிறுத்துகிறது. குடும்பம் என்ற அமைப்பு ஒரு கருத்து என்று கொண்டால், அதற்கு உலகியல் இருப்பாக விளங்குவது குடும்ப அங்கத்தினர் அனைவரும் சேர்ந்திருக்கும் வீடு.

இங்கு வீடு என்பது நான்கு சுவர்கள், இரண்டு மூன்று அறைகள் கொண்ட வாழ்வதற்குத் தகுதி வாய்ந்த இடம் என்று மட்டுமே பொருள் அல்ல. மனிதர்களிடையே நிலவும் உறவுகளுக்கும் பொறுப்புகளுக்கும் அது முக்கியமான குறியீடு.

திருமணம் அமைந்த பின்பு ஆண்களைப் பற்றி குறிப்பிடுகையில் ஒரு குடும்பஸ்தன் ஆகிறான் என்ற மகிழ்ச்சியோடு பாராட்டை வெளிப்படுத்துவதை உலகியல் வழக்கத்தில் இன்று கூட காண முடிகிறது. 

அதாவது வீடு என்பது உறவோடும் பொறுப்போடும் கட்டிவைக்கும் ஒரு கட்டடம் என்றுதானே பொருள்? வீடு ஒரு பெண்ணுக்கு மறுபெயராக உள்ளது. இல்லத்திற்கு விளக்கு இல்லாள். இல்லத்தைப் பார்த்து இல்லாளைப் பார் போன்ற கூற்றுகள் எல்லாம் வீட்டை நடத்துபவளும் வீட்டுக்கு முக்கியத் தூணாக நிற்பவளும் பெண்தான் என்பதைக் குறிக்கின்றன.  இவற்றைக் கணக்கில் கொண்டு ‘காலாதீத வ்யக்துலு’ நாவல் குடும்பத்தை பற்றி என்ன சொல்ல வருகிறது என்று பார்க்கும்போது ஆர்வமூட்டும் அம்சங்கள் புரிகின்றன.

ஒன்று

கணவன், மனைவி, குழந்தைகள் சேர்ந்தது குடும்பம் என்று எண்ணுகிறோம்  அல்லவா? அப்படிப்பட்ட குடும்பங்கள் இந்த நாவலில் இல்லை. ஆனந்தராவு என்ற தந்தையும் இந்திரா என்ற மகளும் மட்டுமே இருக்கிறார்கள். பிரகாசம் தனி ஆள். கிருஷ்ணமூர்த்தியும் தனி ஆள். இவர்களின் குடும்பங்கள் கிராமத்தில் இருக்கின்றன. பிரகாசத்தின் தயார், தாய்மாமனுடைய குடும்பத்தின் ஆதரவில் வாழ்கிறாளே தவிர அவளுக்கென்று சுதந்திரமாக குடும்பம் இல்லை. “என் வீடு என்ற சொல்லை மறந்து பல பத்தாண்டுகள் கடந்து விட்டன வெங்காயம்மாவுக்கு” என்று அவளை பற்றிக் கூறுகிறார் ஆசிரியை. குடித்தனம் நடத்தச் சென்ற அடுத்த ஆண்டே அவளுக்கு ஒரு மகன் பிறக்கிறான். மகனுக்கு மூன்று வயது ஆகும்போது கணவன் இறந்து போகிறான். அப்போதிலிருந்து அண்ணன் வீட்டின் ஆதரவில் வாழ்கிறாள். மகன் படிப்பு முடிந்து ஒரு பயனுள்ளவனாகி, திருமணம் செய்து கொண்டு ஒரு இல்லறத்தானாக ஆனால் மகன், மருமகள், பேரன்களோடு ஏற்படும் புதிய குடும்பத்தில் தன் வாழ்க்கை சுகமாக இருக்கும் என்று கனவு காண்கிறாள்.

கிருஷ்ணமூர்த்திக்கு வீடு என்றால் பயம். வீட்டுக்காரர்களிடமிருந்து முடிந்தவரை தப்பித்துக் கொண்டு திரிகிறான் என்று சக்கரவர்த்தி அடையாளம் காண்பதோடு அந்தச் சொற்களை கிருஷ்ணமூர்த்தியிடமே கூறுகிறான். ஊருக்குச் செல்லும் கிருஷ்ணமூர்த்தியிடம் பிரகாசம், “மீண்டும் எப்போது வருவாய்?” என்று கேட்டபோது, “அங்கு சென்ற பிறகு அடுத்த பஸ்ஸிலேயே திரும்ப வர வேண்டும் என்று தோன்றும். அங்கு எங்கள் ஊரும் என் குடும்பமும் அப்படிப்பட்டது” என்று கூறுகிறான். அதாவது சுதந்திரத்தை விரும்புவார்களான நவீன இளைஞர்களையும் யுவதிகளையும் சேர்த்துக் கொள்ளும் ஜனநாயகத்தின் பரந்த மனம் சம்பிரதாயமான குடும்பத்தில் குறைவாகவே உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

கல்யாணி தனியாக இருகிறாள். வசுந்தரா தன் சித்தியோடு இருக்கிறாள். வசுந்தராவுக்கும் வைதேகிக்கும் பின்னால் பலமான குடும்பங்கள் இருந்தன. அண்ணன்மார்கள், அண்ணிகள், அன்பு, பாசம் அதிகாரம் அனைத்தும் இருந்தன. தம் தனித்தன்மையை மதிக்காத அந்த பாசமும் அதிகாரமும் இருவருக்கும் வெறுப்பை ஏற்படுத்தின. அவள் யாரோடு நட்பு கொள்ள வேண்டும்? யாரைத் திருமணம் செய்ய வேண்டும்? எப்படிப்பட்ட வசதி உள்ள வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்? என்பவற்றை வசந்தராவின் அண்ணன் அவளிடம் சொல்லிக் கொண்டேயிருப்பான். வைதேகிக்கு இருபத்தைந்து வயது வந்தாலும், “அவளுக்குத் திருமண வரனை நாங்கள் தான் பார்போம்” என்று பின் தொடர்ந்தார்கள் அவளுடைய அண்ணன்கள். அப்படிப்பட்ட அதிகாரம் கொண்ட குடும்ப உறவுகளின் மீது இருவரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

வசுந்தரா தன் மீது உடனடி அதிகாரம் செய்யும் சித்தியை அவமதிக்கிறாள்.  வைதேகி தன் அண்ணன்களின் நடவடிக்கை குறித்து எதிர்ப்பு காட்டும் விதமாக ஒரு நாள் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டாள். கல்யாணியோடு நட்பு வளர்ந்து அவளுக்குத் தன் வீட்டில் இடம் கொடுக்கும் வரை வசுந்தராவுக்குத் தன் குடும்பம் குறித்து கௌரவம் இருந்தது. 

வசுந்தராவுக்கு சமைத்துப் போட்டு, துணையாக இருந்த சித்தி அண்ணனுக்கு என்ன எழுதினாளோ தெரியவில்லை. ஆனால் பெரிய அண்ணன் வசுந்தராவை கண்டித்து ஒரு கடிதம் எழுதினான். “உதவி செய்யும் குணம் நல்லதுதான். ஆனால் தேவையில்லாத பிரச்சினைகளை இழுத்து விட்டுக் கொள்வது நல்லதல்ல” என்று எழுதினான். அண்ணனை எதிர்த்து தான் எதுவும் செய்ய இயலாது என்று அவள் அறிந்த சந்தர்ப்பம் அது. கல்யாணிக்கு வெகு காலம் தன் வீட்டில் இடம் அளிக்க முடியாது என்று அறிந்தபின் அவள் வேறு அறையை வாடகைக்கு எடுத்துச் செல்வதற்கு முயன்ற போது, ‘சரி’ என்று சம்மதிக்கிறாள்.

பிறந்தநாளன்று தன்னிடம் வந்த கல்யாணியை சித்தி அவமதித்து நள்ளிரவில் வெளியில் செல்லும்படி நடந்து கொண்டாள் என்ற கோபத்தால் வசுந்தரா சித்தியை எதிர்த்தாள். வீடு, வாசல், கடந்த காலம், நிகழ் காலம், அண்ணன்மார்கள், அதிகாரம் அனைத்தும் அவளிடம் அந்தக் கணத்தில் தோன்றிய குரோத அக்னியில் சாம்பலாகிப் போயின என்று எழுதுகிறார் ஆசிரியை.

இரண்டு

குடும்பம் என்று கூறும்போது அதோடு கூட குடும்ப கௌரவமும் இருக்கும். அதற்குத் தீங்கு ஏற்படுத்தும் விதமாக யாரும் நடந்து கொள்ளக்கூடாது. வசுந்தரா, சக்கரவர்த்தியிடமும் கிருஷ்ணமூர்த்தியிடமும் கொண்ட நட்பு குடும்ப கௌரவத்தைக் குலைக்கும் என்று சித்தியும் அவளுடைய அண்ணனும் நினைத்தார்கள். அதனால் அவளை எச்சரித்தார்கள்.

வைதேகி, தாங்கள் கொண்டு வந்த திருமண வரன்களை நிராகரித்ததோடு  தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறி வீட்டை விட்டுச் செல்வது குடும்ப கௌரவத்திற்கு கேடு விளைவிக்கும் என்று நினைத்தனர் அவருடைய அண்ணன்கள்.

வைதேகியைத் தேடிக்கொண்டு இந்திராவிடம் அவருடைய அண்ணன் பிரசாத் வந்தபோது குடும்ப கௌரவம் பற்றி அவனுக்குள்ள தவிப்பைப் பார்த்து இந்திரா எரிச்சல் அடைந்தாள். ஒரு பெண் வீட்டை விட்டுச் சென்று விட்டாள் என்று போலீசில் ரிப்போர்ட் கொடுப்பதற்கு வம்ச கௌரவம் தடையாக இருப்பதால்  அவன் அதனை மறுத்த விஷயம் கவனிக்கத்தக்கது. 

‘குடும்ப கௌரவம்’ தான் முக்கியம் என்ற சிந்தனை இன்று எத்தனை கோரமான வடிவம் எடுத்துள்ளது என்பதை ‘கௌரவக் கொலைகள்’ என்ற நிகழ்காலக் காட்சி நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

மூன்று

குடும்பம் ஒரு பாதுகாப்பான வட்டம். அந்தப் பாதுகாப்பு மனதுக்கு அமைதியை அளிக்கிறது. வைதேகியின் அண்ணன்மார்கள் அவள் ஒரு கணம் கண்ணில் படாவிட்டாலும் தேடிக் கொண்டு வந்து பரபரப்பை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தில் இந்திரா தன்னைப் பற்றி அவ்வாறு எண்ணித் தவிக்கும் மனிதர்கள் இல்லையே என்று உள்ளுக்குள் ஏங்குகிறாள். அதாவது குடும்ப அதிகாரத்தை எதிர்த்து ஏளனம் செய்யும் இந்திராவுக்குக் கூட குடும்பப் பாதுகாப்பால் கிடைக்கும நன்மை மேல் ஆசை உள்ளது. 

சக்கரவர்த்தி கல்யாணயிடம் தனக்குள்ள ஆசையைப் பற்றிய சுய விமர்சனம் செய்து கொண்டு, அவளுக்கு ஒரு நிறைவான எதிர்காலமும் அம்மா, அப்பாவும் இருந்தால் அவளோடு இவ்வாறு மணிகணக்காக பேசுவதற்கும் வெளியில் செல்வதற்கும் அனுமதிப்பார்களா? அவளைப் பற்றி அவ்வளவு தூரம் யோசிப்பதற்கு தனக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று எண்ணினான். குடும்பம் என்பது பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் என்ற கருத்து இங்கும்    தென்படுகிறது.

ஆனால் குடும்பங்கள் தம் மீது தமக்கு எந்த அதிகாரமும் அளிப்பதில்லை என்பதால் நவீன இளம்பெண்ணுக்கும் இளைஞர்களுக்கும் அதன் மீது மறுப்பு உள்ளது. ஆணானாலும் பெண்ணானாலும் அந்த அதிகார வரம்புக்கு உட்பட்டவர்களே. கிருஷ்ணமூர்த்தி தன் குடும்பத்திலிருந்து தப்பித்துக் கொண்டு திரிவதற்கு, அவ்விதமான அதிகாரங்கள், அழுத்தங்கள், வம்ச கௌரவங்கள், மான அவமானங்கள் போன்றவையே காரணமாக இருக்கும். 

இவற்றை நான் ஏற்க மாட்டேன் என்று கூறி குடும்பத்தை விட்டு வெளியில் திரிவதற்கு ஆண்களுக்கு விசாலமான உலகம் உள்ளது. பணம் உள்ள ஆண்ளுக்கு அது மிகவும் எளிதாக உள்ளது. கிருஷ்ணமூர்த்தி அவ்விதமாகவே தன் மீது அதிகாரம் செய்ய முயன்ற குடும்பத்திலிருந்து ஒதுங்கி, தோல்வியடைந்த பரீட்சைகளை மீண்டும் எழுதும் காரணத்தைக் காட்டி விசாகாவை விடாமல் வாழ்ந்தான் என்று எண்ண முடிகிறது.

கிருஷ்ணமூர்த்திக்கு மூச்சு விட முடியாமல் அழுத்தம் கொடுத்த குடும்பம், பெண்களுக்கு மேலும் குறுகியதாக அமைகிறது. அந்த நெருக்கிப் பிழியும் அழுத்தத்தில் குமைந்த குமைந்து இனி தாங்க முடியாமல்தான் வைதேகி வீட்டை விட்டு வெளியேறினாள். அது பெரிய விஷயமாகப் போய்விட்டது. ஒரு இரவு இந்திராவின் வீட்டில் தங்கிக் கொண்டாலும் மீண்டும் அவள் சேர வேண்டிய இடம் குடும்பமே ஆனது.

தாயின் அன்பும் தந்தையின் அரவணைப்பும் இல்லாத குடும்பத்தில், ‘சத்திரத்தில் இருப்பது போன்ற வாழ்க்கை நடத்திய’ இந்திராவுக்கும் குடும்பம் தேவையாக இருந்தது. தாயைச் சிறுவயதிலேயே இழந்து விட்டதால் தன்னில் தானே முடங்கிப் போன தந்தையின் வளர்ப்பில் கல்யாணிக்கு அன்பையும் பாசத்தையும் பொழியும் குடும்பம் தேவையாக இருந்தது. 

தாய் தந்தையாரின் தயவு தாட்சண்யமற்ற நடத்தையால் தத்து கொடுக்கப்பட்டு, வளர்ப்புத் தாயின் மூர்க்கமான வளர்ப்பில் பெரியவனாகி, தன்னைப் புரிந்து கொண்டு அன்பு செலுத்த இயலாத மனைவியின் துணையில் வாழ்க்கையை  நரகமாக உணர்ந்து, அனைவரையும் இழந்து தனியாக வாழும் சக்கரவர்த்திக்கும் குடும்பம் வேண்டும்.

தந்தையை சிறுவயதிலேயே இழந்து தாய்மாமனின் உதவியோடு வளர்ந்த பிரகாசத்திற்கும் குடும்பம் வேண்டும். இந்திரா, கல்யாணி, சக்கரவர்த்தி, கிருஷ்ணமூர்த்தி… என்று அனைவருமே  இருக்கும் குடும்ப உறவை உள்ளது உள்ளபடியே ஏற்றுக்கொள்ள இயலாமல் போனார்கள். 

ஒருவர் மீது ஒருவருக்கு உரிமையும் அதிகாரமும் இருக்கக் கூடாது. ஆனால் அதேசமயம் பாசத்தைப் பகிர்ந்தளிக்கும் அமைப்பாக குடும்பம் இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அவ்விதமாக அதனை புனரமைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணினார்கள். பிரகாசம் மட்டுமே உள்ளது உள்ளபடி குடும்பக் கட்டமைப்பை ஏற்று அடங்கி  இருந்தான். வசந்தராவும் வைதேகியும் கூட புதிய குடும்ப உறவுகளைப் பற்றி கனவு கண்டவர்களே! 

அந்த விதத்தில் இவர்கள் தம் காலத்தை விட முன்னுள்ள சமுதாயத்தை நூதன அறிவாற்றலோடு முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் செயல்வீரர்களாக தம்மைத்தாமே உருவாக்கிக் கொண்டார்கள் என்றே கூற வேண்டும். பிரகாசம் கால ஓட்டத்தின் வேகத்திற்கு அடித்துச் செல்லப்பட்டவன். ஆனால் மீதி உள்ளவர்கள் அதனை எதிர்த்துப் போராடி காலாதீத மனிதர்களானார்கள்.

நான்கு

ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே பாலியல் உறவுகள் அன்போடும் திருமணத்தோடும் முடியிடப்பட்டு இருப்பது மட்டுமின்றி, அவற்றோடு தொடர்பின்றி இருப்பதையும் உலக வழக்கத்தில் பார்க்க முடிகிறது. இதுவும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் அவற்றை ஒழுக்கம், ஒழுக்கமின்மை என்ற விழுமியங்களைக் கொண்டு தராசில் நிறுத்துவது என்பது குடும்பம் என்ற அமைப்போடு கூடவே ஆரம்பமானது. 

ஆண்களின் வம்சத்திற்கும் சொத்துகளுக்கும் வாரிசுகளை உருவாக்கும்  லஷ்யத்தோடு பெண்களின் பாலுறவு மீது கட்டுப்பாடுகளை விதித்தது  ஆணாதிக்க சமுதாயம். அது ஏற்படுத்திய கற்பு, புனிதம், உரிமை போன்ற விழுமியங்களின் கூட்டம் ஆண்களால் அவ்வளவாக காப்பாற்றப்பட வேண்டியது அல்ல என்று கூறியது. ஆனால் அந்த பாலியல் நீதி பெண்களின் விஷயத்தில் கச்சிதமாக கடைபிடிக்கப்பட வேண்டியதாக ஆனது.

பாலியல் விஷயத்தில் இருவித மதிப்பீடுகள் இருப்பது குறித்து மேற்சொன்ன விமர்சனம், பெண்களின் பாலியல் கட்டுப்பாடு மீது எதிர்ப்பு, மறுப்பு போன்றவை   பெண்ணிய சித்தாந்தங்களிலும் போராட்டங்களிலும் இயக்கங்களிலும் முக்கியமான விஷயங்களாயின. 

1990 வது தசாப்தத்தில் தெலுங்கு சமுதாயத்திலும் இலக்கியத்திலும் வாதங்களுக்கும் விவாதங்களுக்கும் கற்பனையின் தாக்கத்திற்கும் உள்ளான இந்த விஷயங்கள் அன்றைக்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்பாகவே ‘காலாதீத வ்யக்துலு’ நாவலின் கதையம்சத்தில் மிகவும் இயல்பாக ஒரு பகுதியாக ஆனது வியப்பை ஏற்படுத்தாமல் போகாது.

இந்த நாவலில் இந்திரா ஆண்களோடு நட்பு கொண்டு, சிரித்துப் பேசி,  அவர்களோடு சினிமாவுக்குச் சென்று, ஊர் சுற்றி, அவர்களை செலவழிக்க வைத்து சந்தோஷமாக துள்ளித் திரியும் பெண்.

மேல் அறையில் வாடகைக்கு இருந்த பிரகாசமும், அவனைப் பார்க்க வந்த நண்பன் கிருஷ்ணமூர்த்தியும் அவ்விதம் அவளுடைய வாழ்க்கையில் நுழைந்தவர்களே. அவர்களோடு அவளுக்கு பாலியல் தொடர்பு இருந்தது. அது  உலகத்தின் கண்ணோட்டத்தில் தவறான வாழக்கை முறை. ஒழுக்கமற்ற பெண் என்ற குற்றச்சாட்டை சுமத்தக் கூடியது. ஆனால் உலகத்தைப் பற்றியும் அது சுமத்தும் குற்றச்சாட்டுகளைப் பற்றியும் கவலைப்படாத குணம் கொண்டவள் இந்திரா. 

அந்த இயல்பு அவளுக்கு எங்கிருந்து வந்தது? நோய்வாய்ப்பட்ட தாய். குடிகாரனும் பெண் லோலனுமான தந்தை. பாதுகாப்போ, சிரத்தை காட்டுபவரோ இல்லாமல் வளர்ந்த பெண் அவள்.  

தந்தை ஒரு குற்றத்திற்காக ஜெயிலுக்குச் செல்வதும் தாய் மரணிப்பதுமாக   தன்னந்தனியாக வாழ்க்கையை எதிர்கொள்ள நேர்ந்த இளம் பெண் இந்திரா.

படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்றுக்கொண்டு உத்தியோகம் சம்பாதித்துக் கொண்ட சுதந்திரமான பெண். 

தந்தை இருந்த போதிலும் அனைத்திற்கும் அவளையே சார்ந்திருந்த நிலை. தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதைத் தவிர பெண்ணின் தேவை பற்றி அவன் எப்போதுமே கண்டு கொள்ளவில்லை.

“வாழ்க்கையில் எனக்கு வேண்டியது ஒன்று. கிடைப்பது வேறொன்று” என்று இந்திரா பிரகாசத்தோடு உறவை முறித்துக்கொண்ட சந்தர்ப்பத்தில் கூறுகிறாள்.

அவளுக்கு வேண்டியது என்ன? வீடு, குடும்பம், கணவன், குழந்தைகள். ஆனால் அவளுக்குக் கிடைத்தது? ஆபிஸ், ஃபைல்ஸ், அவளைச் சார்த்து வாழும் தந்தை. அத்தகைய சூழ்நிலையில் அவளுக்குத் தேவையானதை அவளே தேடிக் கொள்ள வேண்டும். சம்பாதித்துக் கொள்ள வேண்டும். பிரகாசத்தை தன்னை நோக்கி ஈர்த்துக் கொண்டதில் உள்ள உத்தேசமும் அதுவே. அவனை அவளுக்குப் பிடித்த உடன் பாலியல் சுகத்தை பெறுவதற்கு திருமணம் வரை காத்திருக்க வேண்டிய தேவையிருப்பதாக அவள் நினைக்கவில்லை.

அவன் தாய் மாமனின் அதிகாரத்தை எதிர்க்க முடியாதவன் என்றும் மாமன் தேடிக் கொணரும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்கு இணங்கி, வாய்ப்பு வந்தவுடன் ஓடிப்போய் விட்டுத் திரும்ப வந்து, பொறுப்பைத் தன் மீது சுமத்தப் பார்க்கிறான் என்றும் தெரிந்த பின் பிரகாசத்தின் மீது அவளுக்கு மோகம் தீர்த்து விட்டது. பிரகாசத்தைத் திருமணம் செய்து கொள்வது என்றால் மீண்டும் ஒரு பாரத்தை தலை மீது சுமப்பதாகவே ஆகும் என்று புரிந்த பின் திருமணத்திற்குத் தான் தயாராக இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்லி விடுகிறாள். அவ்வாறு கூறுவதற்கு அவனோடு ஏற்படுத்திக் கொண்ட உடலுறவு அவளுக்கு எவ்விதமான தடையாகவும் இருக்கவில்லை.

உயிரினங்களிடம் பாலியல் இச்சைகள் இயல்பானவை. பிரகாசத்தோடு உறவு ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்திரா காட்டிய உரிமையில் அவனைத் தனக்கு கட்டுப்பட்டு இருக்கும்படி செய்வது என்ற திட்டத்தை விட இளமையின் சகஜமான ஆசைகளை கட்டுப்படுத்துவதில் இஷ்டம் இல்லாததே காரணம். ஒரு வேளை அது திட்டமிட்ட செயலாக இருந்தால், பிரகாசம் தன் தாய் மாமன் கொண்டு வந்த வரனை ஒப்புக்கொண்டு வந்தபோது, “என்னோடு உடல் தொடர்பு வைத்துக் கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள எவ்வாறு முன்வந்தாய்?” என்று கேட்டிருப்பாள். ஆனால் அவள் அந்த விஷயத்தைப் பற்றி  பேசவே இல்லை. 

ஒரு முறை உடலுறவு ஏற்பட்டதால் அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற குறுகிய நீதிக்கு தலைகுனியும் குணம் கொண்டவள் அல்ல இந்திரா. திருமணத்திற்கு தனிமனித குணத்தை விட கற்பு முக்கியமல்ல. கற்பு என்பது ஒரு மாயை. உடல் என்பது ஒரு உண்மை. இதுவே இந்திராவின் பார்வை.

தந்தை ஜெயில் தண்டனை அனுபவித்த போது தனியாக வசித்த இந்திரா ஆபீசிலிருந்து வந்து சாலையில் தனக்காக எதிர்பார்த்திருந்த கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து வீட்டுக்கு வந்த அன்று இரவு அவன் அங்கேயே தங்கி விட்டான்.

இந்திராவிடம் பல விஷயங்களைப் பற்றி கேட்க வேண்டும் என்றும் அவளுடைய நடத்தை பற்றி தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் நினைத்த கிருஷ்ணமூர்த்திக்கு, “என் வாழ்க்கையில் ஆட்சேபிக்கத்தக்கது எதுவும் இல்லை” என்று அவள் கூறிய வார்த்தையில், அமைதியாக, கிடைப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்வதே வாழ்க்கையின் லட்சியம் என்று சமரசம் செய்து கொண்ட தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணின் மனம் வெளிப்படுத்துகிறது.  

அவளுடைய வாழ்க்கைக் கதையை கேட்டபின் வாழ்க்கை மீது ஒரே நேரத்தில் பற்றையும் பற்றின்மையையும்  வெளிப்படுத்திய அவளுடைய தனித்தன்மை புரிந்த பின், அவளைப்பற்றிய தன் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அர்த்தமற்றவை என்று அறிந்து, “இவளிடம் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது?” என்ற எண்ணத்தோடு அவளை காதலிக்கத் தொடங்குகிறான். அன்று இரவு கிருஷ்ணமூர்த்தி அவளுடன் உடலளவில் நெருக்கமாகிறான். அதில் அவளுடைய திருப்தியும் மகிழ்ச்சியும் இருக்கிறது எனபதால் அதனை மிகவும் சகஜமான விஷயமாகவே ஏற்றுக் கொண்டாள். கிருஷ்ணமூர்த்திக்கும் இந்திராவைப் போலவே, “வாழ்க்கையில் எனக்கு வேண்டியது ஒன்று. கிடைப்பது வேறு” என்று எண்ணும் நாள் ஒன்று வந்தது. அது இந்திராவோடு சேர்ந்து ஒரு இரவு அவர்கள் வீட்டில் கழித்த பின்னர் வந்த எண்ணம்.

உல்லாசமாகத் திரிவதில் ஈடுபாடு உள்ள அவனுக்கு இந்திராவின் வாழ்க்கையும்  அவளுடன் ஏற்பட்ட சேர்க்கையும் உண்மையான அறிவை ஏற்படுத்தின. தனக்கு வசந்தரா வேண்டுமென்று தோன்றினாலும் அவளுக்குத் தான் தகுந்தவன் அல்ல என்று அறிவு வந்தது. இந்திராவைத் தக்க வைத்துக் கொள்வதே இப்போது தான் செய்ய வேண்டிய வேலை எனபது தெளிவாகப் புரிந்தது. தன் பட்டணத்து ஆசைகள், நடத்தைகள் அனைத்தையும் மறுபரிசீலனை செய்து கொண்டான். ‘இந்திரா தன்னைப் போன்றவள்’ என்று புரிந்து கொண்டான். ஒருவரின் பலவீனத்தை ஒருவர் அறிந்தவராக, தாம் இருவரும் திருமணம் செய்து கொள்வது சரியாக இருக்கும் என்று தோன்றியதால் அதற்கு அவளை சம்மதிக்க செய்கிறான்.

அவ்விதத்தில் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒருநீதி என்று இருந்த பாலியல் நீதிச் சட்டத்தை உடைத்து பாலியல் சமன்பாட்டைச் செய்தவனாகிறான். இந்திராவின் ஒழுக்கம் பற்றிய யோசனை அவனுடைய எண்ணத்தில் வராமல் போனதை இங்கு கவனிக்க வேண்டும். இந்திராவிடம் கற்பு பற்றி கேள்வி கேட்டால் தன் ஒழுக்கம் பற்றியும் கேள்வி எழும் அல்லவா என்ற சுய விவேகம் அதற்குக் காரணமாக இருக்கலாம். இது நவீனகால மனிதர்கள் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டிய விவேகம் என்பது நாவலாசிரியை ஸ்ரீதேவியின் புரிதல்.

ஆரம்பத்தில் ஆண் பெண் உறவு விஷயத்தில் கல்யாணி சம்பிரதாயமான பார்வை கொண்டிருந்தாள். பிரகாசம் தனக்கு அளித்த காதலையும் நம்பிக்கையையும் மறுத்து நடந்து கொண்டது பற்றி வேதனையோடு வசுந்தராவிடம் கூறும் போது, “எடுத்துக் கொள்ள கூடாத உரிமை எதுவும் அவர் என்னிடமிருந்து எடுத்துக் கொள்ள நான் அனுமதிக்கவில்லை” என்கிறாள் கல்யாணி. திருமணத்திற்கு முன்பு பாலியல் ஆசைகளை கட்டுப்படுத்திக் கொள்வது என்ற சம்பிரதாய பாலியல் ஒழுக்கச் சட்டப்படி கல்யாணி நடந்து கொண்டாள். கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி வசுந்தராவிடம் “கொஞ்சம் ஆடம்பரமான ஆண்” என்று கூறுகிறாள். 

அப்படிப்பட்ட கல்யாணி பிறந்தநாளன்று வசுந்தராவின் வீட்டிற்குச் சென்று அவளுடைய சித்தி செய்த அவமானத்தைப் பொறுக்க முடியாமல் அக்கணமே அந்த வீட்டில் இருந்து இரவு பத்து மணிக்கு, வசுந்தரா ‘வேண்டாம்’ என்று தடுத்தும் கேட்காமல் வீட்டை விட்டு வெளியில் வந்து அருகில் இருந்த சக்கரவர்த்தியின் வீட்டிற்குச் சென்று துயரம் பொங்கி வந்த தருணத்தில் ஆறுதலளித்த அவனுக்கு மிகவும் இயல்பாக நெருக்கமாகி விடுகிறாள். திருமணம் பற்றிய யோசனை இல்லாமல் சக்கரவர்த்தியோடு உறவில் ஈடுபட்டதிலும் அதன் பிறகு அவனோடு திருமணம் பற்றி தொந்தரவு செய்யாமல் இருப்பதிலும் கல்யாணியின் தனித்தன்மை வளர்ச்சி அடைவதை உணர தெரிகிறது. 

“இப்போதுதான் என் வாழ்க்கை பயனடைந்தது. என் தனிமை நீங்கியது. இனி  எழுந்து நிம்மதியாக நிற்கலாம். உலகத்தைப் பார்த்து புன்னகை செய்யலாம்” என்று எண்ணுகிறாள். பாலுறவை மனிதர்களின் மானசிக மற்றும் உடல் ரீதியான இயல்பான ஆரோக்கிய வளர்ச்சியாகப் பார்ப்பது இங்கு கவனிக்கத்தக்கது. 

பாலியல் உறவுகள் இயல்பான மனித உறவுகளின் ஒரு பகுதி என்றும் அவற்றை அலட்சியம் செய்வதோ அதிகமாக கட்டுப்படுத்துவதோ அதிகமாக முக்கியத்துவம் அளிப்பதோ சரியான முறை அல்ல என்றும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மனித நேய வளர்ச்சிக்குத் தேவையான சாதனமாக அதற்கு ஒரு கௌரவமான இடம் இருக்கிறது என்றும் டாக்டர் ஆனதால் ஸ்ரீதேவி அழகாக கதையம்சத்தில் ஒரு பகுதியாக சொல்ல முடிந்தது. 

மனிதர்களின் ஒழுக்கம், ஜனநாயகத்தின் விழுமியங்களான ஆசை, சமன்பாடு,    சுதந்திரம் போன்ற பிரதிநிதிகளின் மீது வளர்ச்சியடைவதை விரும்பக் கூடிய  காலத்தை விட முன்னிற்கிறார் நாவலாசிரியை ஸ்ரீதேவி. 

Series Navigation<< காலாதீத வ்யக்துலு – டாக்டர். பி. ஸ்ரீதேவி காலத்திற்கு அப்பாற்பட்ட மனிதர்கள் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.