கஞ்சுகம்

அதாகப்பட்டது நீங்கள் வனத்துள் 
மடுப்படுக்க விரும்புகிறீர்கள். பைன்மர முட்கள்
விலங்குகளின் கூர்மையான ரோமத்தைப் போல்.
ஏரி ஒன்று மரங்களின் பொய்த்தோற்ற 
சுரங்கப் பாதையின் முடிவில். 
மீன்கள் துள்ளுகின்றன ஆனந்தமாக
நீரின் அகன்ற மேற்பரப்பில். 
அந்த மலைப்பூனை மற்றும் கரடி.
குழி முயல்களின் அந்த வீறிடல்,
எரிமலையின் சாம்பல், மலைகளில்
எதிரொலிக்கும் கூச்சல், அழைப்பு. அதாகப்பட்டது
நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்கள், அற்றமழிவு
சலசலக்கும் சருகுக் கம்பளத் தரை.
எது ஒரு காலத்தில் பாதுகாப்பாக இருந்ததோ
அந்த சிறகை நீங்கள் உதிர்க்கிறீர்கள், 
தோலைக் கழற்றுகிறீர்கள்.
சுதந்திரமாக இருப்பது பேரிழப்பன்று.


மூலம்:”Slough” by Ada Limón (Poet Laureate of the United States), 

Published in ‘Orion’ Magazine (16 April 2023)

*

ய்டா லிமான் (28 மார்ச், 1976): . 47 வயதான அமெரிக்கக் கவிஞர். அமெரிக்க-மெக்ஸிக மரபுவழி வந்தவர். கலிஃபோர்னியாவில் வளர்ந்தவர். சென்ற ஆண்டு (12 ஜூலை 2022) அமெரிக்காவின் 24_வது அரசவைக் கவிஞராக அறிவிக்கப்பட்டவர்.  வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் நாடகக் கலை பயின்றவர். நியூயார்க் பல்கலைக் கழகத்தில் நுண்கலையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 2003_ஆம் ஆண்டு கவிதைக்காக சிகாகோ இலக்கிய விருதைப் பெற்றவர்.

இவரது படைப்புகள் New Yorker, Harvard Review, Pleiades, Barrow Street உட்பட பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. 2015_ஆம் ஆண்டு வெளியான Bright Dead Things கவிதைத் தொகுப்பானது தேசிய புத்தக விருது, தேசிய புத்தக விமர்சகர் வட்ட விருது, கிங்ஸ்லி டஃப்ட்ஸ் கவிதை விருது ஆகிய மூன்று விருதுகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது. இவரது பிற நூல்கள்: Lucky Wreck (2005, மறுபதிப்பு 2021); This Big Fake World (2005); Sharks in the Rivers (2010); The Carrying (2018); The Hurting Kind (2022).

*

தமிழாக்கம்: ராமலக்ஷ்மி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.