உபநதிகள் – 5

This entry is part 5 of 6 in the series உபநதிகள்

“உனக்கு ஒரு தம்பியோ தங்கையோ-” அம்மா வாக்கியத்தை முடிப்பதற்குள், 

“எப்போ? எப்போ?” என்றாள் மானசா.  

பள்ளிக்கூடம் முடிந்ததும் அவள் சைக்கிளில் வந்து எதிரிலே இருக்கும் தாத்தா வீட்டின் முன் இறங்குவாள். அவள் வாசல் கேட்டைத் திறக்கும் சத்தம்கேட்டு தாத்தா வீட்டில் இருந்து சாவிக்கொத்துடன் வெளியே வருவார். அதில் ஒரு சாவியை எடுத்து வீட்டை ஒட்டிய தட்டுமுட்டு சாமான்கள் வைக்கும் அறையின் பூட்டைத் திறப்பார். சைக்கிள் அங்கே. நான்கு நாலரைக்கு அம்மா வீடு திரும்பும்வரை அவள் தாத்தா வீட்டில். அவள் தந்தை வருவதற்கு ஏழுமணியாவது ஆகும். 

அன்று அவளை வரவேற்க அம்மாவே காத்திருந்தாள். ஐஐடிக்குப் போகும்போது அணியும் சுடிதார்-சட்டைக்குப் பதில் பட்டு-பருத்தி சேலை. அவள் பிறந்தநாளுக்கு பாட்டியின் பரிசு. 

அவள் வகுப்புத் தோழர்கள் கிட்டத்தட்ட எல்லாருக்குமே தம்பி தங்கைகள். அவர்களில் ஒரு சிலர் அதே ‘நிலமடந்தை வித்யாலயா’வில் இரண்டு மூன்று வகுப்புகள் குறைவாகப் படித்தார்கள். தம்பி குட்டிக்கரணம் போட்டான், தங்கை ‘சின்ன சின்ன ஆசை’ பாடினாள் என்று இன்னும் சிலருக்குப் பெருமை. 

“பொங்கல் சமயம்.”  

வீட்டிற்குள் நுழைந்ததும், 

“அப்பாக்கு ஆதவன் கதைகள் பிடிக்கும். அதனால ஆதவன், பெண்ணா இருந்தா ஆதவி, பேர் உனக்குப் பிடிச்சிருக்கா?”  

“ம்ம்.. ஆதவனைவிட ஆதவி நன்னா இருக்கு.” 

“ஆதவனுக்கு என்னடி குறைச்சல்?” என்று பாட்டி அவளை அடக்கினாள்.   

“யாரா இருந்தாலும் நான் நிச்சயம் போட்டி போட மாட்டேன்.” 

வாக்குறுதியை மறக்காமல்… அம்மாவுக்கு உதவியாக ஆதவியைத் தட்டித்தூங்க வைத்து, அவள் அழுக்காக்கிய துணிகளைத் துவைத்து உலர்த்தி, ஆதவியின் அழகிலும் வளர்ச்சியிலும் பெருமைப்பட்டு… என்ன வெள்ளை! என்ன உயரம்! ஆதவியும் அந்தந்த பருவத்துக்கு ஏற்றபடி தவழ்ந்து, தத்திதத்தி நடந்து, அக்கா கையைப் பிடித்துக்கொள்ளாமல் ஓடி ஒளிந்து… 

ஒன்றரை வயதில் ஆதவியைப் பேச வைக்க முயற்சித்தபோது மானசாவுக்கு ஏமாற்றம். மா என்று அம்மாவையோ ஏன் அவளையோ கூட ஆதவி அழைக்கவில்லை. அவள் படித்துக்கிழித்த கொட்டை எழுத்துப் புத்தகங்களைத் தங்கைக்கு வாசித்தாள். 

பார்வதியும் ஏழு சித்திரக்குள்ளர்களும்

முன்னொரு காலத்தில்…  

ஆர்வத்துடன் கேட்டாலும் மானசாவின் குரலில் இருந்த உணர்ச்சி ஆதவியின் முகத்தில் பிரதிபலிக்கவில்லை. 

ரவணப்ரியாவின் சென்னை வருகைகள் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வதால் மானசாவுக்கு அவை மறக்காது. அந்த ஒன்று மற்ற வருகைகளில் இருந்து தனித்து அவள் நினைவில் நின்றது. 

சனிக்கிழமை காலை. சரவணப்ரியா வாங்கிவந்த பரிசுகள் கூடத்தின் நடுவில் – வினதாவுக்கு எம்ராய்டரியில் அழகுசெய்த சட்டை, மானசாவுக்கு ‘த க்ராஃப்ட் ஆஃப் ரைடிங்’ மற்றும் கதைப்புத்தகங்கள், ஆதவிக்கு எழுத்துகளும் எண்களும் போட்ட மரக்கட்டைகள். பொருத்தமான பரிசுகள் என்றாலும் அவை இல்லத்தில் மகிழ்ச்சியைப் பரப்பவில்லை. ஏன்? 

மானசா வேகவளர்ச்சியின் நிலைப்படியில். ஆதவி அம்மாவின் மடியில். புதிதாக வந்தவளை ஆச்சரியத்துடன் பார்த்தாள். விரல் அளவுக்கு ஒரேசீராகத் தலைமயிர். அதன்மேல் சரவணப்ரியாவின் கவனம் படிந்தது.  

“வைதீஸ்வரன் கோவில் மொட்டை.” 

“ஆதவி! அத்தை கிட்ட வரயா?” என்று இருகரங்களையும் நீட்டினாள்.  

“தபி தபி.” தலையசைவில் மாட்டேன் என்ற அர்த்தம். 

“மானசா இந்த வயசில நல்லா பேசினா.” ‘ஆதவி அப்படி இல்லை’ என்பது வினதா குரலின் ஏமாற்ற தொனியில்.  

“எங்க பையன் மெதுவா பேசினாலும் மெகானிகல் விஷயங்களில சாமர்த்தியமா இருந்தான். அதனால நாங்க கவலைப்படல.”  

“இவளும் அப்படித்தான்.” 

“ஆதவி ரொம்ப புத்திசாலி” என்றாள் மானசா தன் தங்கைக்குப் பரிந்துகொண்டு. “சூடா இருந்தா மின்விசிறியைக்காட்டி உடம்பை ஒரு சுத்து சுத்துவா. அதை ஆன் பண்ணணும்னு அர்த்தம். அப்புறம், மூணு சக்கர சைக்கிள் வாங்கிக்கொடுத்த ஒரே நாளில் அதை ஓட்ட ஆரம்பிச்சா. அது தாத்தா வீட்டின் வெளிப்புற அறையில இருக்கும். தாத்தா கிட்ட சாவிக்கொத்தை காட்டுவா. அவர் அதை எடுத்துக் கொடுத்ததும் சரியான சாவியைத் தனியாப்பிரிச்சு தாத்தா கிட்டயே கொடுப்பா. அவர் பூட்டைத் திறந்து கதவுகளைத் தள்ளினதும் உள்ளே போய் என்னோட சைக்கிளைக் காட்டி என்னைப்பார்த்து சிரிப்பா. தன் சைக்கிளை வெளியே தள்ளிவந்து வீட்டு முன்னால ஓட்டுவா.” 

“அப்பல்லாம் காரேபுரேன்னு என்னன்னமோ சொல்றா.” 

தன்னைப்பற்றித்தான் பேசுகிறார்கள் என்பதைக் கவனித்த ஆதவி, 

“தபிபதி வரிகரிதரி  கபிதகி கரிபரிவிரி”  

அது தான் வீட்டில் ஒட்டடை போலத் தொங்கிய கவலைக்குக் காரணம்.  

“டாக்டர் கிட்ட காட்டலயா?”  

“போகப்போக சரியாயிடும்னு இருந்தேன். இதுக்கு நடுவில சகாதேவனை பாங்காக்குக்கு மாத்திட்டாங்க. போன மாசம் அவரோட பேசினப்ப ஒரு பீடியாட்ரிஷியன் கிட்ட காட்டுனு சொன்னார். ஜெகதீசன்னு ஒரு டாக்டரைக் கூப்பிட்டேன். இன்னிக்கு மத்தியானம் அப்பாய்ன்ட்மென்ட். உங்களுக்கு டயர்டா இருந்தா…” 

“இல்ல, நானும் உங்களோட வரேன்.” 

மீதி காலைநேரத்தில் குடும்பச் செய்திகளைப் பகிர்ந்துகொண்டாலும் சரவணப்ரியாவின் கவனம் ஆதவியின் மேல். ஒருசில வார்த்தைகளை வெட்டிக்குறுக்கிச் சொன்னாலும் புரியும்படி இருந்தால் இன்னும் சில வார்த்தைகளைக் கற்றுக்கொடுக்கலம். புரியாத ஒலிகளை ஆதவி வேகமாகக் கொட்டுவது எவ்விதமான குறைபாடு? இரட்டைக் குழந்தைகள் தங்களுக்கு மட்டுமே புரிகிறபடி பேசிக்கொள்வதை அவள் கணினியில் பார்த்து இருந்தாள். பெரும்பாலும் அந்த வார்த்தைகள் ஒலிசார்ந்தவை. கடிகாரத்துக்கு டிக்டிக், பாலுக்கு ம்மாஆ, சோளப்பொரிக்கு பாப்-பாப். ஆதவி எழுப்பிய சப்தங்கள் அப்படி எளிமையாக இல்லை. தம்பி தங்கைகளுக்கு அக்கா அண்ணனைப் பார்த்து வேகமாகப் பேச்சு வரும் என்ற சொல்வது உண்டு. அக்காவைப் பார்த்து ஆதவி ஏன் பேசக் கற்றுக்கொள்ளவில்லை?    

ரு மணிக்கு வீட்டு வாசலில் காத்திருந்தார்கள். ஆதவிக்கு காலையில் அவள் அணிந்திருந்த சாயம்போன சட்டைக்குப் பதில் அதைப்போலவே புதிதாக ஒன்று. 

கார் வந்து நின்றது. 

“எங்க ஆஸ்தான ட்ரைவர் முரளி.” 

முரளி இறங்கி முன்கதவைத் திறந்தார். சதுரமான கண்ணாடி, மெல்லிய மீசை, காக்கி ஆடை அவர் தொழிலைக்காட்டின. அவர் முகத்தைக் கவனித்த சரவணப்ரியாவுக்கு, பௌதீக மற்றும் உயிருள்ள, நகரும் மற்றும் நிலையான பொருட்களில் இடிக்காமல் ஊர்தியைச் செலுத்துவதுடன் மற்ற விஷயங்களிலும் தன் மூளையை செலுத்தியதாகத் தோன்றியது.  

ஏறப்போன அவள்,  

“முக்கியமான வேலைக்கு மூணு பேரா போகக்கூடாதுன்னு சொல்வாங்க. நான் கூட வர்றதில ஒரு லாபம்” என்றாள்.  

“ஏன், ட்ரைவர் கணக்கு இல்லையா?” 

“ஊகும். அவர் காரின் ஒரு பாகம்” என்றதும் அவளுடன் சேர்ந்து அவரும் புன்னகைத்தார். உட்கார்ந்ததும் மறக்காமல் இருக்கையுடன் இணைத்துக்கொண்டாள். 

“நீங்க வெளிநாட்டிலேர்ந்து வந்திருக்கணும்.”  

“ஆனா பார்த்தாலோ பேசினாலோ அப்படித் தெரியாது” என்றாள் வினதா. 

அவர்களுக்கு அவர் பின் கதவைத் திறந்தார்.  

காரை நகர்த்துவதற்கு முன் ஒரு காகிதத்துண்டை எடுத்துப்படித்தார். 

“டாக்டர் ஜெகதீசன் க்ளினிக். நாயுடு ஹாலுக்கு அடுத்த தெரு.”  

“ஏற்கனவே அங்கே போயிருக்கீங்களா?” 

“ஒரு வருஷம் முந்தி.”  

“அபாய்ன்ட்மென்ட் ஒன்றரை மணிக்கு.” 

“அதுக்குள்ள போயிரலாம்.” 

கார் பிரதான சாலையில் திரும்பியது. 

“போன தடவை பார்த்ததுக்கு எல்லாம் புதுசா இருக்குதா?”  என்றார் முரளி. 

“புதுசு தான். ஆனாலும் பிறந்த மண்ணுக்குத் தனி கவர்ச்சி.”  

ருத்துவரின் நுழைவுக்கூடத்தில் இருபதுக்கும் அதிகமான நாற்காலிகள். ஒன்றுகூட காலியாக இல்லை. வரவேற்பு மங்கையிடம் பெயரைப் பதிவு செய்து, பதினைந்து நிமிடங்கள் ஒரே இடத்தில் கால்கடுக்க நின்று, யாரோ அழைக்கப்பட்டு எழுந்துபோன பிறகுதான் மூன்று நாற்காலிகளின் முதுகு தெரிந்தது. ஆதவி வினதாவின் மடியில். நாற்காலியின் கைப்பிடிகளுக்குள் அடங்க முடியாமல் அவள் பெரிய உடல் நெளிந்தது. காத்திருந்த சிறுவர்களின் உணர்ச்சியற்ற முகங்களைப் பார்த்து ஆதவிக்குப் பெரிதாக ஒன்றும் இராது என்ற எண்ணம் பெரியவர்களுக்கு.  

நேரத்தைக் கடத்த மானசா கதைப்புத்தகத்தில் ஆழ்ந்தாள். அவள் பல பக்கங்களைத் திருப்பியபிறகே, 

“ஆதவி!” மருத்தவர் அறையில் இருந்து வெளியே வந்த நர்ஸின் அழைப்பு.  

அவளைத் தூக்கிக்கொண்டு வினதா நடந்தாள்.  

மானசா புத்தகத்தில் ஒரு அடையாள அட்டையை வைத்து அதை மூடினாள். மெல்லிய குரலில், 

“அத்தை! ஆதவிக்கு சரியாயிடுமா?”  

முதல்முறை கேட்கப்பட்ட கேள்வி என்றாலும் அது அவள் மனதில் சிலகாலமாக அலைந்திருக்கும் என்பதில் சரவணப்ரியாவுக்குச் சந்தேகம் இல்லை. பெருமை அடித்துக்கொள்ளும்படி இல்லாவிட்டாலும் தன் தங்கை மற்ற குழந்தைகளைப் போல இருக்கக்கூடாதோ என்கிற ஏக்கம்.  

என்ன குறை என்று தெரியாமல் அவள் கேள்விக்கு எப்படி பதில் சொல்ல முடியும்? முகத்தை நேராகப் பார்க்கிறாள், மற்றவர்கள் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிறாள். அவள் மூளையில் அவளுக்கு மட்டுமே ஒரு தனி இடம். 

“குணப்படுத்த முடியாத குறை இருக்கறதா தெரியல.”  

“அம்மாக்கு நாள்முழுக்க இதே கவலை.”  

“இருக்கத்தான் செய்யும்.” 

இப்படியே ஆதவி வளர்ந்தால் என்ன செய்வது? பள்ளிக்கூடம், விளையாட்டு, தோழிகள் இல்லாத பாலைவன வாழ்க்கை. 

“நான் என் தங்கையை நல்லபடியா பார்த்துப்பேன்.” 

இளம் வயதின் லட்சியம், நம்பிக்கை. 

தனக்குப்பிறகு தன் குழந்தைகள் யார் தயவும் இல்லாமல் வாழவேண்டும் என்கிற ஆசை எல்லா பெற்றோர்களுக்கும் இருக்கும். ஒரு குழந்தையின் பொறுப்பை இன்னொரு குழந்தை மேல் சுமத்த முடியுமா? 

“டாக்டர் என்ன சொல்றார்னு பார்க்கலாம்.” 

பெரிய கோளாறு ஒன்றும் இராது என்கிற எதிர்பார்ப்பில் பல நிமிடங்கள் சென்றன. 

கதவு திறந்தது. மானசாவும் சரவணப்ரியாவும் சலனமற்ற முகத்தை அணிந்தார்கள். வினதாவின் முகத்தில் இருந்து எதுவும் படிக்க முடியவில்லை. 

“நர்ஸ் ஆதவியின் தலையை டேப் வச்சு அளந்தா. எதுக்கு?” 

“மூளை வளர்ச்சி சரியா இருக்கான்னு தெரிஞ்சுக்க இருக்கலாம்.” 

அலைபேசியில் முரளியை வினதா அழைத்தாள். அவர்கள் வெளியே வந்தபோது கார் காத்திருந்தது. அதில் அமர்ந்ததும், 

“போற வழியிலே ஒரு அஞ்சு நிமிஷ வேலை” என்றார் அவர் மன்னிப்புக்கோரும் குரலில். 

“எங்களுக்கு நேரா வீட்டுக்குப் போகணும்னு இல்ல.” 

“பெரிய பெண்ணுக்கு மாச…” மானசாவின் இளமையைக் கவனித்து நிறுத்தினார். “அவளுக்கு எப்பவாவது வயிற்று வலி வரும். டாக்டர் விமலா கிட்ட மருந்து வாங்கிக் கொடுக்கறோம். ரெண்டு வாரமா நான் வெளியூர் போயிருந்தேன்…” 

“டாக்டர் எங்கே இருக்காங்க?”  

“மாம்பலம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில. மருந்து தயாரா எடுத்து வச்சிருக்கேன்னு இப்பத்தான் கூப்பிட்டு சொன்னாங்க.”  

“உங்க சௌகரியப்படியே செய்வோம்.” 

“தாங்க்ஸ்ங்க.” 

போக்குவரத்தில் கார் கலந்தது. 

“ஆதவி பேசறதை டாக்டர் கேட்டாரா?” 

“எங்கே கேக்கறது? ஆஃபீஸ்ல நுழைஞ்சதும் அதைச் சுத்தி ஓட ஆரம்பிச்சுட்டா. ஒரு நிமிஷம் கூட ஒரு இடத்தில உட்காரல.” 

கும்பலான இடத்தில் நீண்ட நேரம் அடைபட்டுக்கிடந்த அவள் விசாலமான அறைக்குப் போனதும் சுதந்திரமாக அலைந்ததில் அதிசயம் இல்லை. 

“அதனால அவர் ஹைபர் ஆக்டிவ்னு சொல்லி ஒரு மாசத்துக்கு மருந்து கொடுத்திருக்கார். மறுபடி போய் பார்க்கணும்.” 

ஆதவியைக் கட்டுப்படுத்த மருந்துமட்டும் போதுமா? வேறு எப்படி குணப்படுத்துவது? ஒருவேளை ஸ்பீச் தெரபிஸ்ட்டிடம் அழைத்துப்போக வேண்டுமோ? அவர்கள் பார்க்கும் குறைபாடுகளில் ஆதவியின் ‘கரதலபர’ அடங்குமா? இந்த வயதில் குழந்தையின் பேச்சைத் திருத்தத் தவறினால் பிறகு எப்போதுமே முடியாமல்- 

“அடப்பாவிகளா?” 

சரவணப்ரியாவின் சிந்தனை அறுந்தது.  

நடேசன் சாலையின் இடப்பக்கம் அதன் நீளத்துக்கு ஒரு பள்ளம், மின்சாரம் தண்ணீர் என எதோவொரு காரணத்துக்காக. எதிரில் வந்த வண்டிகளை இடிக்காமல் கார் ஒரு பழங்கால கட்டடத்தின் முன் நின்றது. பின்னால் வந்த ஊர்திகள் கூச்சல் போடவே அவள் முரளியிடம்,  

“நீங்க இங்கே நிறுத்த முடியாது. நான் போய் உங்க மருந்தை வாங்கிட்டு வரேன். நீங்க ஒரு சுத்து சுத்திட்டு வாங்க!” 

அவளை வேலைவாங்குவதா என அவர் யோசித்தபோது,  

“நீங்க போக வேண்டாம். நான் போறேன். மாடிப்படி ரொம்ப குறுகலா இருக்கும்” என்றாள் வினதா.   

“நான் ஜாக்கிரதையா ஏறுவேன்.”  

“நீங்க விருந்தாளி. நான் சொல்றதைக் கேக்கணும்.” 

வினதா கதவைத் திறந்தாள். ஆதவி முகத்தைக் கோணவே, 

“படியிலே நீயே ஏறணும். என்னால உன்னைத் தூக்க முடியாது” என்று கரங்களை உயர்த்திக் காட்டினாள்.   

ஒப்புதலான தலையசைவுடன், “கல.”

அவர்கள் இறங்கியதும் நின்ற நேரத்துக்கு ஈடுகட்ட ஊர்திகள் வேகமாக நகர்ந்தன. 

வினதா ஆதவியைத் தூக்கிக்கொண்டு பள்ளத்தை அதன்மேல் கிடத்திய மரப்பலகையால் தாண்டி மாடிப்படியின் முன் அவளை இறக்கினாள். அவள் கையைப் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு படியாக ஏறி மேல்தளத்தை அடைந்தாள். ஒப்பொந்தத்தை நிறைவேற்றி யாகிவிட்டது என ஆதவி இரண்டு கரங்களையும் நீட்ட வினதா அவளைத் தூக்கிக்கொண்டாள். டாக்டர் விமலா பெயர் தாங்கிய கதவைத் தள்ளித் திறந்தாள். 

நீளமான கூடம். நிறைய பெட்டிகள். ஒரு மூலையில் அலமாரி முழுவதும் ஜாடிகள். ஒரு மேஜையும் நாலைந்து மடிக்கும் நாற்காலிகளும். அவற்றில் ஒரு ஆணும் மூன்று பெண்களும். கதவு திறந்த சத்தம் அவர்கள் பேச்சை நிறுத்தியது. அவர்கள் உரையாடலில் அவள் குறுக்கிடவில்லை என்பதைக் காட்ட வினதா சற்று தள்ளியே நின்றாள். எல்லாருக்கும் பொதுவாக,

“முரளியோட பெண்ணுக்கு மருந்து” என்றாள். 

சந்தன நிறப்புடவை அணிந்த ஒருத்தி மேஜைமேல் வைத்திருந்த பொட்டலத்தை எடுத்துவந்தாள். நாற்பது வயதின் பக்கம். முகத்தில் ஒரு பாடகிக்கான கவனக்குவியம்.  

“முரளி வரலயா?” 

“நாங்க அவர் கார்ல வந்தோம். அதை நிறுத்த இடமில்ல..” 

“ஒரு வாரமா இதே தொந்தரவு.”    

விமலாவின் கவனம் ஆதவியின் கண்கள்மேல் பதிந்தது. 

“பாப்பா! உன் பேர் என்ன?”  

அவள் புரியாமல் விமலாவைப் பார்த்தாள். 

“இன்னும் பேச்சு வரல. சரியா சொல்லணும்னா நிறையப் பேசறா. எங்களுக்குத்தான் ஒண்ணும் புரியல.”  

விமலா கண் இமைக்காமல் ஆதவியை ஒரு நிமிடம் பார்த்தாள். அவளுக்கு அது வேடிக்கையாக இருந்திருக்க வேண்டும், கோலிகுண்டுகள் சிதறுவது போல சிரித்தாள்.

“கலகர கலகர தபா கல.” 

“இந்த மாதிரி தான்.” 

“என்ன வயசு?”  

“இப்பத்தான் இரண்டு முடிஞ்சுது. வயசுக்கு நல்ல வளர்த்தி.” தொடர்ந்து, “மூளையில ஏதோவொரு இடத்தில சின்ன பிசிர். அது என்னன்னு எங்களுக்குத் தெரியல” என்றாள். ‘உங்களுக்குத் தெரிகிறதா?’ என்ற மறைமுகக் கேள்விக்கு விமலா, 

“இப்ப நேரமில்ல. இன்னொரு நாள் கூட்டிட்டு வா! நிதானமா பார்க்கறேன்.”  

“நீங்க நாளை இருப்பீங்களா?”  

“காலை பதினோரு மணிக்கு மேல இங்க தான் இருப்பேன்.” 

“கட்டாயம் வரேன்.”  

“பாப்பா! உனக்கு எது ரொம்பப் பிடிக்கும்? லட்டு..” என்று கண்களை விரித்து கையை உருட்டிக் காண்பித்தாள். ஆதவி, “கர” என்று தலையசைத்தாள். “மைசூர் பாகு?” நீட்டிய கையின் விரல்களை மடக்கி வைத்தாள். ஆதவி இன்னும் வேகமாகத் தலையை ஆட்டினாள். “கரகரகர.”

“உன் பேர்…” 

“வினதா. குழந்தையின் பேர் ஆதவி.” 

“வினதா! நாளைக்கு வர்றப்ப ஆதவிக்கு கொஞ்சம் மைசூர் பாகு எடுத்துட்டு வா!”  

வினதா கதவு பக்கம் திரும்பினாள். 

“மருந்தை மறந்திட்டியே” என்று விமலா பொட்டலத்தை நீட்டினாள்.  

அவள் அதை வாங்கிக்கொண்டு அவசரமாகப் படிகளில் இறங்கினாள். சில நிமிடங்கள் கழித்துத்தான் வண்டி வந்து நின்றது. அவள் முகத்தில் முன்பு இல்லாத மலர்ச்சியை சரவணப்ரியா கவனித்தாள். 

காரில் அமர்ந்ததும் வினதா மருந்துப்பையை முரளியிடம் நீட்டினாள். வாங்கிக்கொண்டதும், 

“ரொம்ப தாங்க்ஸ்ங்க.” 

“நீங்க செஞ்ச உதவிக்கு இது ஒண்ணுமே இல்ல.”  

“அப்படி என்னங்க நான் செஞ்சேன்?”  

“ஆதவி பேசறது எங்களுக்குக் கொஞ்சமும் புரியல. ஆடிசமா இருக்குமோன்னு வேற கவலை. குழந்தையைக் காட்டத்தான் ஜெகதீசன் க்ளினிக் வந்தோம். டாக்டர் சொன்ன காரணம் எனக்கு சரியாப்படல. உங்களுக்காக விமலா கிட்ட மருந்து வாங்கப் போனப்ப, அவங்க ஆதவியைக் கவனிச்சாங்க. என்னமோ தெரியல அவங்க சரி செய்வாங்கன்னு ஒரு நம்பிக்கை.” 

“உங்க குழந்தைக்கு என்ன குறை இருந்தாலும் விமலா அம்மா கணக்கா மருந்து கொடுப்பாங்க. என் பெண்ணுக்கு மூணுநாலு டாக்டர்களைப் பார்த்தோம். ஒண்ணும் சரிப்படல. இப்ப மாசக்கணக்கு தவறாம…” 

“ஆதவியை நாளைக்கு விமலா பார்க்கறேன்னு சொல்லியிருக்காங்க.” 

“எத்தனை மணிக்கு கார் வேணும்?” 

ரவணப்ரியா ஞாயிற்றுக்கிழமை காலையில் கிளம்புவதாக இருந்தது. அதை மாலைவரை தள்ளிப்போட்டாள். 

விமலாவின் மருந்தகத்திற்கு முன்னால் நால்வரும் இறங்கினார்கள். 

“முரளி! டாக்டர் பார்த்து முடிச்சதும் கூப்பிடறேன். ஒரு மணியாவது ஆகும்.”  

“ஆகட்டும்மா.” 

மற்றவர்கள் மரப்பலகையைக் கடந்தபிறகே சரவணப்ரியா அதன்மேல் கால்வைத்து நடந்தாள்.  

“அக்கா! ஜாக்கிரதையா வாங்கோ!”  

ஆதவிக்கு முந்தைய தினம் அங்கே வந்தது மறக்கவில்லை. படி ஏறுவதற்கு முன்பே அம்மாவின் மடியில் இருந்து இறங்கினாள். 

கூடத்தில் விமலா மட்டும் தான். அட்டைப்பெட்டிகள் ஒரு ஓரமாக அடுக்கப்பட்டு இருந்தன. விமலாவின் மேஜைக்கு எதிர் மூலையில் தரையில் அமர்ந்து மானசா வாசிக்கத் தொடங்கினாள். 

விமலாவைப் பார்த்ததும் ஆதவி, “கர கர தகமல கதமல” என்றாள். இவளை எனக்குப் பிடித்திருக்கிறது என்ற அர்த்தமோ? விமலா ஆர்வத்துடன் கேட்பது போல பாவனை செய்ததும் இன்னும் நீளமான பேச்சு. அது முடியும்வரை வினதா காத்திருந்தாள்.  

“டாக்டர்! இது சரவணப்ரியா. யூ.எஸ்.ல இருக்காங்க. அது என் முதல் பெண் மானசா.” 

“உக்காருங்கோ!”  

அடுத்தடுத்த நாற்காலிகளில் சரவணப்ரியாவும் வினதாவும் அமர்ந்தார்கள். வினதாவின் மடியில் ஆதவி. விமலா ஒரு நாற்காலியை வினதாவின் முன் இழுத்துப்போட்டு ஆதவியின் கண்களையே நெடு நேரம் உற்றுப்பார்த்தாள். கண்கள் வழியே மூளையை சோதிப்பது போலத் தோன்றியது. பிறகு அவள் சட்டையை உயர்த்தி கையை மார்பில் சில நிமிடங்கள் வைத்தாள். 

“ஆதவி! நான் ஓடிப்போய் மானசாவைத் தொட்டுட்டு வரப்போறேன்.”  

அப்படிச் செய்தபோது ஆதவி கண்களை அகல விரித்து அதை ஆர்வத்துடன் பார்த்தாள். 

“வினதா! நீ..”  

ஆதவியை நாற்காலியில் உட்கார வைத்து அவளும் அதைச் செய்தாள். அவளைத் தொடர்ந்து சரவணப்ரியா. புரியாவிட்டாலும் ஆதவி முகத்தில் ஒரு புன்சிரிப்பு.  

“இப்ப, ஆதவி! நீ..” என்று அவள் மார்பைத் தொட்டாள். 

தயக்கத்துடன் நாற்காலியில் இருந்து அவள் மெல்ல நழுவினாள். அம்மாவைப் பார்த்துக்கொண்டே பின்னால் நகர்ந்தாள். 

மானசா, “ஆதவி! அக்கா கிட்ட வா!” என்று அழைத்ததும், திரும்பி நடந்து அவளைத் தொட்டுவிட்டு ஓடிவந்து அம்மாவின் கால்களைக் கட்டிக்கொண்டு நின்றாள். 

“வெரி குட்! ஆதவி! இந்த சத்தகங்களைச் சொல்லணும். ப  ம  வ  ள  ழ.” 

அம்மா மடியில் அமர்ந்து அவள் ஒலிகளை எழுப்பினாள்.  

ழவை அவள் சரியாகச் சொன்னதும் சரவணப்ரியா, “தமிழ் ஜீன்ஸ் இருக்கு” என்றாள்.  

அடுத்து ஆங்கில எழுத்துக்களின் சத்தங்கள் ச்ச, ஜே, ஹா, ஷி, எக்ஸ், இஸ்ஸட்.  

சிலவற்றைச் சொன்னாள், மற்ற ஓசைகளைச் சொல்ல முயற்சித்தாள். கடைசியில் பரிசாக அவளுக்கு பாட்டி செய்த மைசூர் பாகு. வினதா தோள்பையில் இருந்த டப்பியைத் திறந்து ஒன்றை எடுத்துக் கொடுத்தாள். 

“நிதானமா சாப்பிடு! அவசரமில்ல.” 

விமலா சொன்னதற்காக ஆதவி கடிக்காமல் அதை நக்கினாள். “கர கர கர.”  

“சப்தங்களை உச்சரிக்க முடியறது.”  

“அப்ப ஆப்ராக்ஸி இல்லன்னு ஆறது” என்றாள் சரவணப்ரியா.   

“எங்க மருத்தவத்தில அப்படி தனியாப் பிரிச்சு பார்க்கறதில்ல. ஏதோவொரு காரணத்தினால உடல் இயற்கையான பாதையில இருந்து விலகிப் போயிட்டிருக்கு. அதைத் திருப்பிக்கொண்டு வரணும்.” 

“விலகி ரொம்ப தூரம் தள்ளிப்போயிடலன்னு நினைக்கிறேன்.”  

“எனக்கும் அப்படித்தான் தோணறது. பேசத்தொடங்கும்போது ஏன் அதுக்கு முந்தியே கூட குழந்தைகள் தாங்களே சில வார்த்தைகளை உருவாக்கிக்கொள்ளும். ஒண்ணரை வயசில என்னோட பையன் வாழைப்பழத்தை தானான்னு சொல்லுவான், அக்கா சூர்யாவை பாப்பின்னு கூப்பிடுவான். என்ன காரணம்னு தெரியாது. பல குடும்பங்களில பார்த்தீங்கன்னா குழந்தைகள் வளர்ந்து நல்லா பேசத் தொடங்கினாலும் பெரியவங்க அதை மறக்கமாட்டாங்க. இப்பவும் எங்க பெண்ணுக்கு வீட்டில கூப்பிடற பேர் பாப்பி. நாங்க தினம் ஒரு தானா கேட்டுத் திங்கறது வழக்கம்.”  

“எங்க பையன் சின்ன வயசில பல்தேய்க்கறதை ஈஈஈன்னு சொல்லுவான். அவன் காலேஜ் முடிச்சிட்டான். நாங்க இப்பவும் படுக்கப்போறதுக்கு முந்தி தவறாம ஈஈஈ செய்யறோம்.”  

“அவங்க நாலுஐந்து வார்த்தை வித்தியாசமா பேசுவாங்க. பெத்தவங்களும் ரசிச்சுக் கேப்பாங்க. ஆனா ஆதவியோட அகராதில அதுக்கும் மேல இருக்கும்போலத் தெரியறது” என்றாள் வினதா.  

“அது தான் பிரச்சினை. குழந்தைகளுக்கு அறிவு வளரும்போது தன்னோட வார்த்தைகளை மறந்துட்டு மத்தவங்க பாஷையை ஏத்துக்கணும்னு தெரிய வரும். அதுபடி செய்வாங்க.” 

ஆதவி தன் மொழியை மறந்து தமிழுக்கு மாற வேண்டும்.  

“நீ வேலைக்குப் போறப்ப என்ன செய்யறே?”  

“மானசா குழந்தையா இருந்தப்ப நான் பார்ட்-டைம் ஸ்டூடன்ட். எதிர்லேயே தாத்தா பாட்டி. அவங்க கிட்ட விட்டிட்டுப் போவேன். இவ பொறந்தப்ப தீஸிஸ் எழுதணும்னு வீட்டிலே இருந்தேன். ஒரு வருஷமா ஆன்லைன்ல பாடம் எடுக்கறேன்.”  

தணிந்த குரலில் விமலா வினதாவிடம், “ஆதவிக்கு பழக்கமான ஒரு சூழலை விட்டு வெளியே வர்றதுக்கு பயம்னு நினைக்கிறேன்” என்றாள்.  

சிறிய யோசனைக்குப்பிறகு, 

“டாக்டர்!” 

“விமலான்னு சொல்லு போதும்.”  

“நீங்க சொல்றது ரொம்ப சரி. அழுக்கு சட்டையை எடுத்துட்டு குளிப்பாட்டினா மறுபடி அதே சட்டை போடுன்னு அழுவா. அதனால அவகிட்ட இருக்கறது எல்லாம் ஒரே மாதிரி சட்டை, இப்ப போட்டிருக்காளே சிவப்புல சூரியகாந்திப்பூ, இது தான் எப்பவும். நாங்க போன மாசம் கார்ல திருச்சி போயிருந்தோம். கிளம்பும்போது என் அம்மா டிரைவர் பக்கத்தில உக்காந்திருந்தா. பின்னால நாங்க மூணு பேர். செங்கல்பட்டு தாண்டினதும் சாப்பிட்டோம். அம்மாக்கு கண் அசரணும்போல இருந்தது. மானசாவை முன்னால வரச்சொல்லி அவ பின்னால எங்களோட உட்கார வந்தா. அது ஆதவிக்குப் பிடிக்கல. பாட்டி கையைப்பிடிச்சு முன்னால அழைச்சிட்டுப்போனா. கிளம்பும்போது கார்ல எந்த வரிசையோ அதே தான் கடைசி வரைக்கும் இருக்கணும்.” 

விமலா விவரங்களை ஜீரணிக்க நேரம் எடுத்தாள். ஆதவிக்கு இன்னொரு மைசூர் பாகு. அவள் அதை நிதானமாகத் தின்று முடித்ததும், 

“சரிப்படுத்த முடியும்னு நினைக்கிறேன்” என்ற வார்த்தைகள் வினதாவின் காதில் தேனாக விழுந்தன.  

அலமாரியின் முன்னால் நின்று சில ஜாடிகளை எடுத்துத் திறந்தாள். நான்கு குட்டி பாட்டில்களுடன் திரும்பி வந்தாள். அவற்றின் மேல் எண்களை எழுதினாள். 

ஒன்று அடையாளம் இட்ட பாட்டிலில் இருந்து ஒரு வெள்ளை மாத்திரை. அதை வாங்கி வினதா ஆதவியின் வாயில் வைத்தாள். 

“இந்தா, நாலு பாட்டில். ஒரு மணி கழிச்சு இரண்டாவது பாட்டில் மாத்திரையைத் தரணும். அப்புறம் மூணு நாலு. மறுபடி முதலாவது. இப்படியே மணிக்கு ஒருவாட்டி. முழிச்சிட்டிருக்கும் போது தான். எழுப்பிக் கொடுக்க வேணாம். பழக்கமான இடத்தைத் தாண்டி இன்னொரு உலகம் இருக்கு. அதுக்கு பயப்பட வேண்டாம்னு அவளுக்கு நம்பிக்கை தர இந்த மருந்து.”  

“ஜூன் லேர்ந்து ப்ரீ-கேஜி போறதா ஏற்பாடு.”  

“பக்கத்தில தானே.”  

“வேன் வந்த கூட்டிண்டு போகும்.”  

“இங்க்லீஷ் மருந்து மாதிரி இல்ல. பலன் தெரிய பல மாதங்கள் ஆகும். ஆதவியோட இடத்தில வச்சுப்பார்க்கணும். தமிழை சுத்தமா மறந்திட்டு ஹிந்தி கத்துக்கணும்னா நமக்கு எவ்வளவு நாள் ஆகும்?”  

“ஒரு வருஷம் ஆனாலும் சரியானா சரி.”  

“எனக்கும் அந்த நம்பிக்கை. மருந்து தீர்றதுக்கு முன்னே கூப்பிட்டா எடுத்து வைப்பேன்.” 

“உங்களுக்கு எப்ப சௌகரியமோ அப்ப வந்து குழந்தையைக் காட்டறேன்.”  

சரவணப்ரியா சுற்றிலும் பார்த்தாள். விரிசல் விட்ட சிமென்ட் தரை. கையில்லாத நாற்காலிகள். திறந்த ஜன்னல், அதன் வழியே தெருவின் போக்குவரத்து ஓசை மற்றும் மனிதர்களின் குரல்கள். காற்றுடன் க்ரீச்சையும் தாராளமாக வழங்கும் மின்விசிறி. ஒரு அலமாரியில் விதவிதமான ஜாடிகள். ஜெகதீசன் க்ளினிக்குடன் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. 

ஒரு மணி நேரத்தில் ஒரு குழந்தையின் குறையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப ஒரு சிகிச்சை முறையை உருவாக்க எவ்வளவு அறிவு வேண்டும்? அவள் ஞானமும் அனுபவமும் அவளுடன் முடிந்துவிடுமோ? 

“உங்களுக்கு ஃபீஸ்” என்று வினதாவின் புன்னகையுடன் பாட்டி செய்த ஒரு மைசூர் பாகு. விமலா அதை வாங்கிக்கொண்டதும், அவள் கண்ணீர் நனைத்த ஒரு தங்கச்சங்கிலி.  

“எதுக்குமா இதெல்லாம்?”  

“இந்த ஒரு நாளில என்னோட மனபாரம் எவ்வளவு குறைஞ்சிருக்குன்னு உங்களுக்குத் தெரியாது. நீங்க மறுக்கக்கூடாது. உங்களுக்கு இல்ல இது, பாப்பிக்கு” என்று மறுபடி புன்னகை. 

வீட்டிற்குத் திரும்பியபோது மானசா காரின் முன்னாலும் சரவணப்ரியா பின்னாலும் உட்கார்ந்தார்கள். அதைக் கவனித்த ஆதவி புருவத்தை உயர்த்தி உதட்டைப் பிதுக்கினாள். காரின் அசைவுகளால் தூக்கம் அழுகையை முந்திக்கொண்டது. 

உளவியலில் தனிமனிதனின் ஆளுமையை விவரிக்கும் ஐந்து பெருங்குணங்கள்.. நவீனத்தில் நாட்டம், மனத்திறப்பு, மனசாட்சி, இணக்கப்பண்பு, பதற்றநிலை. ஒவ்வொரு குணமும் ஆளுக்கு ஆள் பரந்த அளவில் வேறுபடும் என்றும், பொதுவாக ஒருவரின் குணநிலைகள் வாழ்நாளில் அதிகம் மாறுவது இல்லை என்றும் சொல்வது வழக்கம். முதலாவது சரவணப்ரியாவின் நினைவுக்கு வந்தது.  

“ஆதவி என்ன, நமக்கும் பழகிவிட்ட ஒண்ணை விடறதுக்கு மனசு இல்ல. அதே சமயம் புதுசை அனுபவிக்கணும்னு ஆவல். சிலருக்கு பழசைப் பிடிச்சிட்டு இருக்கறதில ஆசை அதிகம், வேற சிலருக்கு வருஷம் ஒரு செல்ஃபோன் மாத்தறதுன்னா ரொம்பப் பிடிக்கும்” என்றாள். 

“நீங்க சொல்ற முதல் கட்சியில நான். என் தம்பி இரண்டாவதுல. எதிர்ல அப்பா அம்மா இருக்காங்களே அந்த வீட்டிலதான் நாங்க வளர்ந்தோம். எங்கேயாவது போகணும்னு அப்பா சொன்னா அவன் டக்னு கிளம்பிடுவான். நான் தாத்தா பாட்டிக்குத் துணையா இருக்கேன்னு வீட்டிலயே தங்கிடுவேன். எனக்கு எல்லா வேளையும் வீட்டு சாப்பாடு போதும், அதே அவனுக்கு வாரம் ரெண்டு தடவை ஓட்டல்ல விதவிதமா சாப்பிட்டாகணும். ஆதவி என்னை மாதிரி இருக்கா…” என்று சொல்லும்போதே காரின் ஆட்டத்தில் வினதாவின் கண்கள் மூடிக்கொண்டன. 

சரவணப்ரியாவுக்கு ஒரு வினோத மனச்சித்திரம். மொழியியல் பேரறிஞர் நோம் கோம்ஸ்கியின் முன்னால் ஆதவி நிற்கிறாள். 

மனித மூளையில் பொதுவான ஒரு இலக்கண அறிவு இயற்கையாகவே இருக்கிறது, அது குழந்தைகள் வளரும்போது தானாகவே வெளிப்படுகிறது என்பது உங்கள் உலகப்புகழ் பெற்ற கொள்கை. சரியா?  

கரெக்ட். அதனால் தான் இரண்டிலிருந்து நான்கு வயதுக்குள் ஒரு மொழியின் அடிப்படை விதிகளில் ஒரு குழந்தை அத்துப்படி ஆகிறது. தன் எண்ணங்களை வெளிப்படுத்தவும் மற்றவர்கள் சொல்வதைப் புரிந்துகொள்ளவும் அதனால் முடிகிறது. இரண்டு மொழிகள் காதில் விழும்போது அவற்றைத் தனித்தனியே வைக்கவும் தெரிந்துகொள்கிறது. அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களின் குழந்தைகள் வீட்டில் பெற்றோரின் தாய்மொழியிலும் சிறுவர் காப்பகத்தில் ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசுகிறார்கள். இந்த அதிசயம் வேறு எப்படி நிகழ முடியும்? 

உங்கள் பொதுவான இலக்கணத்தில் இன்னொன்றையும் சேர்த்தால் தான் அது முழுமை பெறும் என்பது என் எண்ணம்.  

நான் யோசிக்கத் தவறியது என்ன? 

பொருட்களை, மனிதர்களை, செயல்களை உருவமில்லாத குறியீடுகளால் சுட்டிக்காட்டலாம் என்ற அறிவு குழந்தைகளுக்குத் தானாகவே உண்டாகிறது. 

ம்ம்.. 

அதன்படி ஒருசில ஒலிச்சேர்க்கைளைத் தாங்களே உருவாக்கவும் அவர்களால் முடியும். இதைப் பால்மொழி என்று சொல்லலாம். பால்பற்கள் விழுந்து அவற்றின் இடத்தில் நிரந்தப் பற்கள் வளர்வதுபோல பால்மொழியும் கொஞ்சம்கொஞ்சமாகத் தேய்ந்து அதன் இடத்தைத் தாய்மொழி நிரப்புகிறது. எப்படி என் தியரி? நான் ரொம்ப ப்ரில்லியன்ட், இல்ல? ப்ரொஃபசர் கோம்ஸ்கி!

ம்ம்.. ஒருவிதத்தில் நீ சொல்வது சரியென்று தான் தோன்றுகிறது. ஆனால், இந்த மொழி மாற்றம் ஒரு குறிப்பிட்ட குழந்தைக்கு நத்தை வேகத்தில் நடக்கிறது என நினைக்கிறேன். 

தபிபதி வரிகரிதரி

ஆதவியின் தூக்கம் வீட்டிலும் தொடர்ந்தது. அப்போது கூடத்து நடுவில் சரவணப்ரியா தான் கொண்டுவந்த கனசதுரக் கட்டைகளை வைத்து ஒரு பிரமிட் செய்தாள். கண்விழித்த ஆதவி அதை நின்று குனிந்து உட்கார்ந்து படுத்து நீண்ட நேரம் ரசித்தாள். பல கட்டைகளைப் பிரித்து சரவணப்ரியா ஆதவியிடம் கொடுத்தாள். அவளுக்கு அவை எந்த இடத்தில் இருந்தன என்று நினைவில்லை. அதனால் ஒரு புதிய கோணல்மாணலான அடுக்குவரிசை.  

ள்ளிக்கூட வேன் வருவதற்கு வினதா ஆதவியுடன் காத்திருந்தாள். யாராவது பெயர் கேட்டால் “ஆவி”. உடலின் கழிவுப்பொருளை வெளியேற்ற “போக”. இரண்டு வார்த்தைகள் தான், ஆனால் அவை இல்லையென்றால் மழலை வகுப்பில் நுழைய அனுமதி இல்லை. அதை சில மாதங்களுக்கு முன்னால் விண்ணப்பம் வாங்கிக்கொண்ட போதே, ஹெட்மிஸ்ட்ரஸ் கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். “உடற்குறை உள்ள குழந்தைகளோட எங்களால மல்லுக்கு நிற்க முடியாது. அதுக்கு நீங்க வேற ஸ்கூல் பார்க்கணும்!” ஆதவியின் வார்த்தைகளில் மட்டுமல்ல, ஆடையிலும் வித்தியாசம். தினப்படி சட்டைக்குப் பதில் புதிய சீருடை – வெளிர்நீலச் சட்டை, கருநீல ஸ்கர்ட், வெள்ளைக் காலுறைகள், கறுப்புக் காலணிகள். அவற்றை அணிந்த மானசாவின் சிறுவயதுப் படத்தை வினதா ஆதவிக்குக் காட்டினாள். 

“திசி” என்று அக்காவைப் பார்த்து சிரித்தாள். 

“தபாவும் திசி மாதிரி.” 

நீண்ட யோசனைக்குப்பின், “கல கல.”  

இந்த மாறுதல்கள் – வினதாவின் பார்வையில் முன்னேற்றங்கள் – சாத்தியமா என்ற சந்தேகம் விமலாவை சந்திப்பதற்கு முன். 

அவள் கொடுத்த மாத்திரைகளின் சக்தி. அவற்றில் என்ன இருந்தது என்று தெரியாது, நிச்சயம் கசப்பான எதுவும் இல்லை. வரிசை தப்பாமல் ஒரு மணி இடைவெளியில் அவற்றை ஆதவி விழுங்கச் செய்தாள். அதற்காக நிரந்தர வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை. ருக்மணி க்ருஷ்ணா கல்லூரியின் கணிதத்துறையில் இருந்து வந்த அழைப்பைக்கூட மறுத்துவிட்டாள். 

சிறிய தப்படிகளில் ஆதவியை மாற்றங்களுக்குப் பழக்கினாள். சரவணப்ரியா வாங்கிவந்த கட்டைகளை இருவரும் சேர்ந்து ஒருவிதமாக அடுக்குவார்கள். ஆதவி அதைத்தள்ளி கட்டைகள் சிதறும்போது சிரிப்பாள். திருப்பி அடுக்கும்போது ஆதவியின் மூளை சலனப்படுவதை முகம் காட்டும். இந்த வரிசை முன்பு இருந்தது போல இல்லையே என்று கலைத்துவிட்டு வேறுவிதமாக அடுக்குவாள். முதல் அடுக்கைத் திரும்பக் கொண்டுவர முடியாத ஏமாற்றம் ஆரம்பத்தில். கொஞ்சம் கொஞ்சமாக புதிய வரிசையை ஏற்றுக்கொள்ளும் மனநிலை. 

மஞ்சள் சட்டையில் சிவப்பு சூரியகாந்தி போட்ட சட்டையை பலமுறை திருப்பித்திருப்பிப் பார்த்து கடைசியில் மறுக்காமல் அணிந்துகொண்டாள். 

தாத்தா பாட்டியுடன் காரில் கோவிலுக்கோ கல்யாணத்திற்கோ போய்விட்டுத் திரும்பும்போது காரில் உட்காருவதற்கு முன் ஒரு நாடகம்.   

“வரும்போது நீ முரளி பக்கத்தில தானே உட்கார்ந்து இருந்தே” என்று மானசாவைத் தாத்தா கேட்க,  

“இல்லை நீங்க” என்று அவள் மறுக்க.   

“நான் இல்ல. நீ பொய் சொல்றே.”  

“பாட்டியை வேணும்னா கேளுங்கோ!”  

“நான் சுலோகம் சொல்லிண்டு வந்தேன்.”   

“முரளி! நீங்களே சொல்லுங்க! முன்னாடி உட்கார்ந்து வந்தது நானா இல்ல தாத்தாவா?”   

“உங்களுக்கே ஞாபகம் இல்லாட்டி கார் ஓட்டற எனக்கு எப்படி இருக்கும்?” 

இந்த விளையாட்டை வேடிக்கை பார்த்த ஆதவி பெரியவர்களின் அசட்டுப்பேச்சைப் பெரியமனதுடன் மன்னித்து, யார் எந்த இடத்தை எடுத்துக்கொண்டால் என்ன என்று தலையை அசைத்து ஒப்புதல் தெரிவிப்பாள்.  

மொழி மாற்றம் தான் பெரிய சவால். 

“ஆதவியின் பாஷைல கொஞ்சத்தை நீ கத்தக்கணும்” என்பது விமலாவின் அறிவுரை. 

தெரிந்த வார்த்தையை குழந்தை மழலையில் சொல்லும்போது இதுவாக இருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. ஆதவி எழுப்பிய ஒலிகளில் அப்படி எதுவும் தென்படவில்லை. அவள் பேச்சை இரண்டு வாரங்கள் திரும்பத்திரும்பக் கேட்ட பிறகு வினதா எழுதிப்பார்த்தாள்.   

பாட்டியின் மைசூர் பாகு தின்னும்போது கலகர (பிடித்திருக்கிறது), 

மஞ்சள் பூ சிவப்பு சட்டையைக் காட்டினால் கல (சரி, ஆமாம்) வேறு சட்டைக்கு தபி (வேண்டாம், இல்லை). 

வினதா தன்னைக் காட்டினால் தான, அக்காவுக்கு திசி. 

அவள் பாப்பா பொம்மை தபா. தன்னைக் குறிப்பிடவும் அதே வார்த்தை. 

நெய் கலந்த பருப்பு சாதம் ஊட்டும்போது பெதோ, வயிறு நிரம்பியதும் தோபே. 

அவசியமான இன்னும் சில வார்த்தைகள் சேகரித்ததும், 

“தான” என்று தன்னைத்தொட்டு, அவளைச் சுட்டி, “கலகர தபா” என்று முடித்தாள்.  

ஆதவிக்கு ஆச்சரியம் மட்டுமல்ல, வேற்று நாட்டில் மற்றவர்கள் பேசுவது புரியாமல் தவிக்கும்போது தன் மொழி பேசும் ஒருவரை சந்தித்தது போல சந்தோஷம். 

“தபா தான கரகல” என ஆதவி அவளைத் திருத்தினாள். 

“தபா தான கரகல” என வினதா திருப்பிச்சொன்னாள். 

“கலகர தான கலகல தரகல.”  

ஒரு மாதம் ஆதவியின் காதில்விழும்படி அவள் மொழியில் வினதாவும் மானசாவும் பேசினார்கள். அப்போது ஆதவியின் பாஷையில் இன்னும் சில வார்த்தைகள் தெரியவந்தன. தாத்தா அல்லது பாட்டி – தினரா. சரவணப்ரியா வாங்கிவந்த கட்டை – ப்ரக். விமலாவின் மருந்து – தகமி. 

பள்ளிக்கூட வேனின் கதவைக் குழந்தைகளை வழிநடத்தும் பெண் திறந்தாள். 

“உள்ளே வாம்மா!” என்று கைகொடுத்தாள். 

அவள் நட்புமுகம் நம்பிக்கை தந்து இருக்க வேண்டும். ஆதவி அவள் கையைப் பிடித்து ஏறி அவள் சொன்ன இடத்தில் அமர்ந்தாள். 

“உன் பேர்?” 

“ஆவி.” 

“ஆதவி” என்று வினதா திருத்தினாள். 

அனுபவப்பட்ட மற்ற குழந்தைகள் தங்கள் இடங்களைத் தேடிப்போனபோது,  

“உங்க பேர்…” 

“ஜெயசந்திரா.”  

“ஜெயசந்திரா! ஒரு உதவி பண்ணணும்.”  

“சொல்லுங்க!”  

“மதியம் குழந்தைகளை திரும்பக் கூட்டிவர்ற வரைக்கும் என்ன செய்வீங்க?”  

“வீட்டுக்குப் போயிருவேன். பக்கத்தில தான்.”  

“வீட்டில உங்களுக்கு வேலை இருக்கும். ஆனாலும் எனக்காக…”  

“என்ன?” 

“நர்ஸரி க்ளாஸுக்கு வெளியே ஆதவி பார்க்கற இடத்தில உக்கார்ந்து இருக்கணும். அவளுக்கு உங்களைத் தவிர மத்தவங்க எல்லாரும் புதுசு. ஜன்னல் வழியா உங்களைப் பார்த்தா பயம் இருக்காது.” 

“சரிங்க!” 

ஜன்னல்களில் இருந்து பிஞ்சுக்கரங்கள் அசைந்தன.  

வேன் பலத்த சத்தததுடன் வந்து நின்றது. ஜன்னல் வழியாக அம்மாவைப் பார்த்ததும் ஆதவி, “தான தான!” என்று கையாட்டினாள். பதிலுக்கு, வினதா, “தபா தபா!” ஜெயசந்திராவுக்கு நன்றி சொல்லி ஆதவியின் கையைப்பிடித்து இறக்கினாள். அவள் ஜெயசந்திராவைப் பார்த்துக்கொண்டே வீட்டிற்கு நடந்தாள். மற்ற குழந்தைகள் போல ஆதவி பள்ளிக்கூடக் கதைகள் சொல்லவில்லை. வீட்டிற்குள் நுழைத்த பிறகு தான், “தான…” என்றாள். சாப்பிட்டு துங்கியெழுந்ததும் ஆதவியின் வார்த்தைக்குப் பொருத்தமான தமிழ் வார்த்தை சொல்லித் தரும் பாடம். 

வினதா ஆதவியை டாக்டர் விமலாவிடம் அழைத்துப்போனாள். அவளைப் பார்த்ததும் ஆதவி, “தகமு!” என்றாள். கூடத்தின் குறுக்கே ஓடிவிட்டுவந்தாள்.  

“ஆதவி பாஷையில தகமுன்னு சொன்னா டாக்டர், தகமின்னா மருந்து.” 

“தகமு விமலா, கேட்க நல்லா இருக்கு.” 

“வீட்டுக்கு வெளிலே மத்தவங்களுக்கு தான் பேசறது புரியாது, தமிழ்லதான் சொல்லணும்னு தெரியறது. அதில அதிக வார்த்தை தெரியாததனால வாயை மூடிண்டு இருக்கா.” 

“இப்பத்தானே கின்டர்கார்டன் போக ஆரம்பிச்சிருக்கா. அது முடியறதுக்கு முன்னே மத்தவங்களோட பேச தைரியம் வரும்.” 

“எனக்கு அதில சந்தேகமே இல்ல.” 

“அது வரைக்கும் தகமியை வரிசை தப்பாம கொடு!” என்று தகமு சிரித்தாள். 

(தொடரும்)

Series Navigation<< உபநதிகள் – 4உபநதிகள் – 6 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.