இன்வெர்ட்டி-வைரஸ்

முதலில்  மணிக்கு இன்வெர்ட்டி-வைரஸ் இருக்கிறது  என்று கண்டு பிடித்தது வரது மாமா தான்.  உங்களுக்கு கூட வரது மாமாவைத் தெரிந்து இருக்கலாம். ஆமாம், “வாட்ஸப் வரது”  மாமாவே தான்.  ஆனால் இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய ஒரு இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டது. அப்போது வாட்சப் இல்லை. அதனால் மாமாவும் வெறும் வரது  மாமா தான்.  ஆனால் அப்போதே மாமாவின் பிற்கால புகழுக்கான அறிகுறிகள் தெரிந்தன.  விளையும் பயிர் முளையிலே  தெரியாதா என்ன?  தவிர மாமா அப்போது  நன்றாக விளைந்து விட்ட பயிர்! வருங்கால வாட்சப்பை எதிர் நோக்கியிருந்த ஓர் உயிர்.  ( ஆஹா!  கவிதை! சத்தியமாக சொந்தக்  கவிதை. நல்ல வேளையாக  ChatGPT ல் இன்னும் தமிழ் வரவில்லை)

வரது மாமா அம்மாவுக்கு தூரத்து சொந்தம்.  எனக்கு அப்போது ஆறு   வயது.  மணிக்கு இரண்டு  வயது. ஆனாலும் எனக்கு இன்னும் அந்த சம்பவம் நேற்று பார்த்தது போல நினைவு இருக்கிறது. நானும் பக்கத்து  வீட்டு ரேவதியும்  கூடத்தில் விளையாடிக் கொண்டு இருந்தோம்.  அம்மா  மாமாவுக்கு சுக்கு காப்பி போட்டு கொண்டு வந்தார்கள்.  மணி விளையாடிக் கொண்டே அங்கே இருந்த செருப்பை எடுத்து வாயிலே வைத்து விட்டான். 

“ஏல, செருப்பை  கீழே போடுல”.

அம்மா போட்ட சத்தத்தில்  எனக்கு தூக்கி வாரிப் போட்டது.  

மணி வீல் வீலென்று  அழ ஆரம்பித்தான். ஆனால் செருப்பை மட்டும் கீழே  போடவேயில்லை.  இன்னொரு கையில் அடுத்த செருப்பையும் எடுத்து வாயிலே வைத்து கொண்டான்.

“ஏல,  அது என்ன பண்டமா வாயிலே  வெக்கருத்துக்கு?  கீழே போடுல”.

அம்மாவுக்கு ஒரே கோபம். ஓடி வந்து இரண்டு செருப்புகளையம் எடுத்து தூர வீசினார்கள்.  மணிக்கு முதுகில் ஒரு அடி.

மணி சட்டென்று  அழுகையை நிறுத்தினான்.  அம்மாவை பார்த்து முறைத்தான்.  இரண்டு வயது சிறுவன் அது போல  முறைத்தது  ஆச்சர்யமாக இருந்தது.

“என்னடா முறைக்கறே?  இன்னும் ஒரு நிமிடாம்பழம்  கொடுக்கவா?” 

அம்மா  பாஷையில் நிமிடாம்பழம் என்றால் கிள்ளுவது.

மணி ஒன்றும் பேசாமல் டக்கென்று ஓடிப்  போய்  இரண்டு செருப்புகளையும் எடுத்து கொண்டு ஒன்றை வாயில் வைத்து கொண்டான்.

“என்ன சன்மமோ, இது. குழந்தை கூட நான் சொல்றத  கேக்க மாட்டேங்குது. எல்லாம் அவரும்  அவரோட அம்மையும்  கொடுக்கற செல்லம்”.

வரது  மாமா கருமமே கண்ணாயினராய்  முதலில் சுக்கு காபியை  மெதுவாக ரசித்து குடித்தார்.

“காபின்னா உன்னோட சுக்கு காபி தான்!  பேஷ், பேஷ்” என்று  உசிலை மணி ஸ்டைலில் ஒரு பாராட்டை வாரி வழங்கினார்.

அப்புறம் மணியைப் பார்த்து “டேய் , அந்த செருப்பை  கீழே போடுடா” என்றார்.   

என்ன ஆச்சர்யம்?  மணி ஒன்றும் பேசாமல் இரண்டு செருப்புகளையும் கீழே போட்டு  விட்டான்.  மாமாவுக்கே இது ஆச்சர்யமாக இருந்தது.  

அம்மாவிற்கும் இப்போது கொஞ்சம்  கோபம் தணிந்து இருந்தது. மணியைப் பார்த்து,

“என் ராசால்ல?. போய்  செருப்ப  வெளில வெச்சுட்டு வால “

மணி இரண்டு செருப்பையும் வெளியே எடுத்துச்  செல்லாமல் நேரே வீட்டுக்குள்ளே நடுக்கூடத்தில் வைத்தான்.  மறுபடியும் அதே முறைப்பு.

அப்போது தான்  மாமாவிற்கு  மணிக்கு ஏதோ சரியில்லை என்று சந்தேகம் வந்தது. அம்மா மட்டும் என்ன சொன்னாலும் மணி எதிர் மறையாகத் தான் செய்கிறான் என்று மாமா கண்டு பிடித்தார். 

“இது ஏதோ சரியில்ல. எப்போ பாத்தாலும்  எதிர்கட்சி மாதிரி  எல்லாமே தலைகீழா பண்றானே. நீ ஒண்ணும்  கவல  படாத. நான் பாத்துக்கறேன்”.

அடுத்த வாரம் வந்த போது  மாமா முகத்தில் ஒரு பிரகாசம்.  ஆர்கிமிடிஸின் யுரேகா ஜ்வலிப்பு. கையில் இரண்டு  புத்தகங்கள். நல்ல வேளையாக அப்போது அப்பாவும் வீட்டில் இருந்தார்.

“என்ன வேய்  முருகேசன். அதிசயமா வீட்ல இருக்கீரு ?”

அப்பாவும் வரது மாமாவும் எதிர் துருவங்கள்.  அப்பா யாருடனும் அதிகமாகி பேச மாட்டார். தானுண்டு, தன வேலையுண்டு என்று இருக்கிற ரகம்.

“உம்  பையனுக்கு கொஞ்சம் சரியில்ல. அதா சொல்லலாம்னு தான் வந்தேன்”

அப்பா அம்மா இருவர் முகங்களிலும்  இப்போது கொஞ்சம் கவலை தெரிந்தது.

“எனன சொல்றே, வரது?”  அம்மாவுக்கு எப்போதுமே  கொஞ்சம் பட படப்பு  அதிகம்.

“ஆமாம்.   இன்வெர்டிங் ஆம்பிளிஃபைர்  னு   கேள்வி பட்டு இருக்கையா?”  என்றார் தன கையில் கொண்டு வந்த ஒரு புத்தகத்தை காட்டி. 

“இன்வெர்டிங் ஆம்பிளிஃபைரா ?  எனக்கு  என்ன தெரியும்?”

“உமக்கு தெரியுமா வேய்?”

அப்பா எப்போதும் போல பதில் சொல்லவில்லை. 

“இன்வெர்ட்டிங் ஆம்பிளிபைர்னா  நாம்ப என்ன சிக்னல் கொடுக்கறோமோ அது தலை கீழாக வெளில வரும்’. உதாரணமா நம்ம  அஞ்சு வோல்ட் குடுத்தா வெளில  ஸிரோ  வரும். நம்ம ஸீரோ கொடுத்தா அஞ்சு வோல்ட் வரும்”.

மாமா  தன்  புத்தகத்திலிருந்து ஒரு படத்தை காட்டினார்.

“சரி. அதுக்கும்  மணிக்கும் என்ன சம்பந்தம்?”

“இருக்கு. இருக்கு”  ஒரு மேதாவிப் புன்னகையுடன் இன்னொரு புத்தகத்தை காட்டினார்.  அது மூளை பற்றிய உயிரியல் புத்தகம்.

“நம்முடைய மூளையும் எலக்ட்ரிசிட்டி மூலமா தான் வேலை பார்க்கிறதான்.  நியூரல்  நெட் ஒர்க்னு  பேரு . மணியோட மூளைல  இந்த இன்வெர்ட்டிங் ஆம்பிளிஃபைர்  நிறைய இருக்கு”.

“இது  என்ன வேய் கிறுக்குத் தனம் ?  அப்போ நான்  சொல்றத எல்லாம் மணி ஒழுங்கா தானே கேக்கறான். அவன் அம்மா சொல்றத மட்டும் தான் கேக்க மாட்டேங்கறான்?”

மாமா  அப்பாவின்  கேள்வியை  எதிர் பார்த்தே வந்திருந்தார் என்பது அவருடைய புன்னகையில் இருந்து தெரிந்தது.

“எல்லோரோடே குரலுக்கும் ஒரு பிட்ச் இருக்கும் இல்லையா?  அது தான்.  அவனோட அம்மாவோட பிட்ச் தான் அந்த இன்வெர்டிங் ஆம்பிளிஃபைரா   ட்ரிகர் பண்ணும்”.

அப்பாவுக்கு நம்புவதா  வேண்டாமா என்று தெரியவில்லை.

“நிஜமாவா? இதற்கு என்ன செய்வது”

“இதற்கு பெயர்  இன்வெர்ட்டி வைரஸ்.  இது ஒரு வைரஸ் மூலமா வர வியாதி .  ஒண்ணும்  பண்ண முடியாது. ஆனா   வெந்நீர்ல மஞ்ச பொடியோட , மிளகும், மணத்தக்காளியும் போட்டு வெறும் வயித்துல சாப்பிட்டு வந்தால் பரவாயில்லாம இருக்கும்.  ஒரு   வயசுக்கு மேல அதுவாவே போயிடும்”

மாமாவின்  இன்றைய வாட்சப்  புகழுக்கு வித்திட்டது  அந்த  சம்பவம் தான்.   இப்போது  வாட்சப் வரது  மாமா தொடாத நோய்களே இல்லை.  மூக்கடைப்பு முதல் மூளைக் காய்ச்சல் வரை மாமா அத்தனைக்கும் வாட்ஸப்பில் இப்போது மருந்து எழுதி விட்டார்.  கொரோனாவுக்கு மாமா எழுதிய சுண்டக்காய்  லேகியம் வைரல் ஆனா போது  இந்தியா முழுவதும்  சுண்டைக்காய் தட்டுப்பாடு வந்தது.  நிதி அமைச்சர்  கூட மாமாவோட வாட்சப் படிச்சப்புறம் டெல்லியில் இருந்து  மயிலாப்பூர் வந்து தண்ணி துறை மார்க்கெட்டில் சுண்டைக்காய் வாங்கியதாக  கேள்வி.

வரது  மாமா அடுத்த வாரமே  மும்பைக்கு  மாற்றல்  வந்து போய் விட்டார். மாமா ஒரு புறம் வாட்சப் யூனிவர்சிட்டியில் புரபஸர்  ஆக வளர, இந்த பக்கம் நாங்களும், குறிப்பாக அம்மாவும்  மணியோடு ஒத்து வாழ பழகிக் கொண்டோம்.  அம்மா எதை சொன்னாலும் யோசித்து எதிர் மறையாக சொல்வவதை பழகி கொண்டு விட்டார்கள்.  

“மணி. படிச்சது போதும். படுத்துக்கோல !”  என்றால்  நன்றாகப்  படி என்று அர்த்தம். மணியும் கண்டிப்பாக தூங்காமல் படித்து விடுவான்.

“எதுக்குல  சுருக்க வந்துட்டே.  பைய விளையாடி விட்டு வாயேன்” என்றால்  உடனே வீட்டுக்கு வா என்று அர்த்தம்.

ஆனால்  என்னதான் கவனமாக இருந்தாலும் சில முறை தவறாக  சொன்னதும் உண்டு.  உதாரணமாக கிரிக்கெட் விளையாடும்போது அம்மா  ஒரு முறை “அடுத்த பாலை அடிடா சிக்சருக்கு” என்று கத்திய போது  அடுத்த  பாலில் அவுட் ஆகி வந்து நின்றான்.  அதிலிருந்து அம்மா கிரிக்கெட் மாட்ச்சுக்கு வருவதை நிறுத்தி விட்டார்கள்.

மணி இப்போது டாக்டருக்கு படித்து முடித்து விட்டான். திருநெல்வேலி டவுன் பக்கத்தில்  அன்சர்  கிளினிக்கில் வேலை. எனக்கு  இப்போது கல்யாணம் ஆகி ஒரு குழந்தை வேறு இருக்கிறது. எங்களுக்கும் அதே ஊரில் தான் வேலை என்றாலும் அம்மா அப்பாவை அடிக்கடி பார்க்க முடியவில்லை.  அன்றைக்கு நானும் என்  கணவரும் உணவகம் சென்ற போது   தான் மணியைப்  பார்த்தேன். அவன் என்னைப்  பார்க்காமல் யாரோ ஒரு  பெண்ணோடு பேசிக் கொண்டு இருந்தான். அவர்கள் இருவரின் உடல் மொழியை பார்த்தாலே தெளிவாக தெரிந்தது இது வெறும் நட்பல்ல என்று.

அந்த ஞாயிறன்று  வீட்டிற்கு போன போது நான் அம்மாவிடம் மணியின் கல்யாணம் பற்றி விசாரித்தேன். அம்மா சந்தோஷமாக  “ஒரு நல்ல சம்பந்தம் வந்துருக்கு.   நல்லா  போடுவாங்க போல இருக்கு.  பொண்ணோட அப்பா பெரிய டாக்டராம்.  பாளையம்கோட்டைல சொந்தமா  கிளினிக் வெச்சு இருக்காராம்.   நம்ப  மணி அங்கேயே பிராக்டிஸ் பண்ணிக்கலாம் என்று சொல்லறாங்க . எனக்கும் சரியா  படுது. ஆனா இன்னும் மணி கிட்ட சொல்லல”.

நான் மெதுவாக அம்மாவிடம் நான் மணியை இரண்டு நாள் முன்னாள் ஒரு பெண்ணோடு பார்த்த விஷயத்தை சொன்னேன்.   அம்மாவின் முகம் தொங்கி போனது.   நான் அம்மாவிடம் 

“நீ ஒண்ணும்  மணி கிட்ட பேச வேண்டாம். அவனுக்கு இன்னும்  இன்வெர்ட்டி-வைரஸ் வேறே இருக்கு. நானே அவன் கிட்ட பேசிக்கறேன்”. என்றேன்.

மணி  “என்ன அருணாக்கா? எப்ப வந்த? ஆச்சர்யமா இருக்கே? ” என்றான்.

“காலைல வந்தேன். உன்ன ரெண்டு  நா முன்னாலே நெல்லை சரவண  பவன்ல  பார்த்தேன்”.

மணியின் முகம் மாறியது.

“யாருல உன் கூட?”

எனக்கு சுற்றி வளைத்து பேச தெரியாது.  மணி அந்த பெண் அவனுடன்  வேலை பார்க்கும் ஒரு நர்ஸ் எனவும் அவர்கள் பூர்விகம் கேரளா என்றும் சொன்னான்.  நான் மெதுவாக அவனுக்கு அம்மா பார்த்திருந்த சம்பந்தம் பற்றி சொன்னேன்.   “ஓ.  அந்த கிளினிக்கா? எனக்கு தெரியுமே. ரொம்ப பேமஸ்”  என்றான்.

“என்னடா சொல்றே இப்போ?”

“என்னக்கா. அவ கூட பழகிட்டு இப்போ எப்படி விட முடியும்” என்று இழுத்தான்.

அம்மா பக்கத்துக்கு அறையில் இருந்து அத்தனையும் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.  நான் எத்தனை  முறை படித்து படித்து சொன்னதை மறந்து விட்டு  அந்த அறையிலிருந்து கோபமாக வந்தார்கள்.

“என்னல  பெரிய பளக்கம்?  எனக்கு தெரியாதல உனக்கு என்ன  பண்ணனும்னு?  இந்த  மாதிரி சம்பந்தம் ஒனக்கு வேறு எங்கியும்  கிடைக்காது.  பேசாம அவளை விட்டுட்டு நான் சொல்ற பொண்ண பண்ணிக்கோல “.

அறை  முழுவதும் அமைதி.  நான் அம்மாவைப் பார்த்தேன்.  அம்மாவுக்கும் தான் செய்த தவறு அப்போது தான் உரைத்தது.  இன்வெர்ட்டி-வைரஸ்!  தான் உணர்ச்சி வசப்பட்டு சொல்லியதை  மணி  கண்டிப்பாக கேட்க போவது இல்லை. ஒரு வயது முதல் தான் சொன்ன ஒன்றையும் அவன் கேட்டதில்லை என்பது நினைவிற்கு வந்தது.

மணி மெதுவாக  திருவாய் மலர்ந்தான். 

“அம்மா,  சரிம்மா.  நீ  பார்க்கற பொண்ணு எனக்கு ஓகே “.

நானும் அம்மாவும் எங்கள் காதுகளை நம்ப முடியாமல்  மணியைப் பார்த்தோம்.  வரது  மாமா சொன்னது சரிதான்.  இன்வெர்ட்டி-வைரஸ் தானாவே  போய் விட்டது.

வரது  மாமாவை பல வருடம்  கழித்து மணி  கல்யாணத்தின் போது   தான் பார்த்தேன்.

“மாமா, மணிக்கு இன்வெர்ட்டி-வைரஸ்  போயிடுச்சு”

“இன்வெர்ட்டி-வைரசா?  அப்படின்னா  என்ன?”

மாமாவின் பதில் கேள்வி எனக்கு  அதிர்ச்சியைத் தந்தது என்றால் அது மிகையாகாது.  நான் மாமாவுக்கு மணி சம்பவத்தை  நினைவு படுத்தினேன்.  

“ஓ, அதுவா.  நான் சொல்லி இருக்கலாம்.  எனக்கு நினைவு இல்லை. நான் தினமும் இப்படித் தான் புதுசு புதுசா கண்டு பிடிப்பேன். ஆனா இப்போ நான் வைரஸ் பத்தி மட்டும் சொல்றது  இல்ல.  எவனோ ஒத்தன்  கொரனோ  லேகியம்  சரியில்லன்னுட்டு எம் மேலே கேஸ் போட்டுட்டான், அதான். எல்லாம் நல்ல படியா  முடிஞ்சா சரி.  எல்லா பயலுகளும் பொண்ணு விஷயத்தில  மட்டும் தனக்கு  எது சௌகரியமோ அத மட்டும் தான் பண்ணுவாங்க.  அப்படி பாத்தா  அத்தன  பசங்களுக்கும் இன்வெர்ட்டி-வைரஸ் இருக்கு தான்.”

வரது மாமா ஏதோ  சிந்தனையில் ஆழ்ந்தார்.

“ஒண்ணு  பண்ணலாம். இன்வெர்ட்டி-வைரஸ் பேரை மாத்தி “மறதி சோகை”ன்னு வெச்சுடலாம்.  பொன்னாங்கண்ணி கீரையோட  , கண்டங்கத்திரியும்  சேர்த்து  அரைச்சு மஞ்சப்பொடியோடே வெந்நீர்ல காலைலே  சாப்பிட்டா மறதி சோகை  சரியாயிடும்”  என்று என்னிடம் பேசிக்கொண்டே வாட்ஸப்பில் தட்டி விட்டார்.

இப்போதெல்லாம்  பொன்னாங்கண்ணி கீரையும்.  கண்டங்கத்திரியும்  மார்க்கெட்டில்  கிடைப்பது இல்லை!   அதனால் தான்   இன்னும்  நிறைய இளைஞர்களுக்கு   இன்வெர்ட்டி-வைரஸ்/மறதி சோகை  இருக்கிறதோ என்னமோ?  

4 Replies to “இன்வெர்ட்டி-வைரஸ்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.