இன்றையப் போர்விமானங்களின் தோற்றம்

ழங்காலத்தில் போர்விமானங்கள் மற்றும் பறக்கும் இயந்திரங்கள் குறித்த சென்ற பதிவுகளைச் சென்ற அத்தியாயம் விவரித்தது. அது பல நாடுகளில் கதையாகத் தோன்றினும், ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும், மனிதன் காற்றில் பறந்து செல்லவேண்டும் என்ற எண்ணம் சென்ற சில நூற்றாண்டுகளாகவே ஊற்றெடுத்தது.

அதனால் வெப்பக் காற்றுப் பலூன்கள் உருவாக்கப்பட்டன. அவை ஆய்வாகவும், வேடிக்கைக் கேளிக்கைப் பொருளாகவுமே அமைந்தன. சில வெற்றி பெற்றாலும், பற்பல முயற்சிகள் தோல்வியும் அடைந்தன. அவைபற்றி எழுதுவது இக்கட்டுரையின் நோக்கமும் அல்ல.

இச்சமயத்தில்தான் காற்றைவிடக் கனமான பறக்கும் எந்திரத்தை வடிவமைக்க முற்பட்டு, அமெரிக்காவில் கிட்டி ஹாக் என்னும் ஊரில் 1903ம் ஆண்டு டிசம்பர் 17ல், ரைட் சகோதரர்கள் ஆர்வில்லும், வில்பரும் முதல் விமானத்தைi வடிவமைத்துப் பறக்கச்செய்தாலும், சில ஆண்டுகளுக்கு அது புதுமைப் பொருளாகத்தான் இருந்தது.

அப்படி வடிவமைக்கப்பட்ட விமானங்கள், இக்கால விமானத்தைப்போல வானத்தில் பறக்கவில்லை. ஏனெனில், அப்படிப்பட்ட விமானத்தில் பறப்பதே துணிச்சலான, உயிருக்கு ஆபத்தான செயலாகவே இருந்தது.

அதைத் தொடர்ந்து பல முயற்சிகள் கையெடுக்கப்பட்டன. அதைப்பற்றி விவரிக்காமல் இங்கு முதன் முதலாகப் போர் விமானமாகப் பறக்கும் எந்திரங்கள் எப்போது புகுத்தப்பட்டன என்பதைக் காண்போம்.

இக்காலப் போர் விமானங்களின் பரிணாம வளர்ச்சி – முதல் உலகப்போர்:

ரைட் சகோதரர்கள் விமானம் பறப்பதைக் கூர்ந்து கவனித்தபின், தாம் விரும்பியவண்ணம் செலுத்ததக்க விமானம் இதுதான் என்பதை அமெரிக்க அரசு அறிந்துகொண்டது. போரில் எதிரிப்படைகளை உளவுபார்க்க இம்மாதிரி விமானத்தை உபயோகிக்கலாம் என்று தீர்மானித்தது. எனவே, முதன்முதலாக இக்காலப் போர்விமானத்தை வடிவடித்துக்கொடுக்கும் ஒப்பந்தத்தை ரைட் சகோதரர்களுக்கு 1908ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அளித்துப்i போர்விமான வளர்ச்சிக்குப் பிள்ளையார் சுழி இட்டது.

அவர்கள் வடிவமைத்துக்கொடுத்த, இருவர் ஏறிச்செல்லும் விமானம் 40மைல் (60 கி.மீ) வேகத்தில் 125மைல் தூரம் செல்லும்படி இருந்தது. இந்த விமானத்தின் வேகம் அச்சமயம் செய்யப்பட்ட ஃபோர்டு மாடல் டி காரின் வேகத்தைவிட இரண்டு மைல் குறைவாகவே இருந்தது. ஏனெனில் அந்தக் கார் 42 மைல் வேகத்தில் செல்லும் திறமை வாய்ந்தது.ii

ஆனால், கார்கள் அதைவிட வேகமாகச் செல்லும் திறமை வாய்ந்தன. 1909ம் ஆண்டில் இன்டியனாபாலிஸ் கார் ஓட்டப் பாதையில் நடந்த போட்டியில் ரால்ஃப் டெ பால்மா அவருடைய ஃபியட் காரிலும், பாப் பர்மன் அவருடைய ப்யூயிக் காரிலும் 100மைல் (160 கி.மீ) வேகத்தில் சென்று சாதனை படைத்தனர்.iii

ரைட் சகோதரகள் அமெரிக்க அரசுக்கு வடிவமைத்துக் கொடுத்த விமானம், 1909ம் ஆண்டில், “விமான எண் 1, காற்றைவிடக் கனமான பிரிவு, அமெரிக்க விண்படை” என்று அழைக்கப்பட்டது.

செப்பெலின் என்று அழைக்கப்பட்ட நீர்வாயு (ஹைட்டிரஜன்) நிரப்பப்பட்ட பலூனைப் போன்ற, காற்றைவிடக் கொள்ளளவில் இலேசான வானூர்திகளே முதலாம் உலகப்போருக்கு முன்னர் எதிரிகளின்மீது குண்டுவீச உபயோகிக்கப்பட்டன. இறக்கைகள் உள்ள விமானங்கள் உளவுக்கு மட்டுமே உபயோகப்படுத்தப் பட்டன.

குண்டுவீசும் விமானமாகிய பிலெரியோ 11 – (Bleriot XI) இத்தாலிக்கும், ஆட்டோமன் பேரரசுக்கும் இடையே நடந்த போரில்அக்டோபர் 23, 1911ல் முதன்முதலாகச் செயலாற்றியது. அதை இயக்கியவர் கார்லோ பியாசா என்னும் இத்தாலிய விமானி.iv அதற்கு ஒன்பது நாள்கள் கழித்து ஜியொலியோ கவொட்டி என்ற விமானி ஐன் சாரா என்ற இடத்தில் நான்கு எறிகுண்டுகளைத் இரண்டாயிரம் வீரர்களுள்ள துருக்கிய எதிரிகளின் பாசறையில் எறிந்து விமானக் குண்டுவீச்சைத் துவக்கிவைத்தார். ஆனால் அது எவ்வளவு சேதத்தை விளைவித்தது என்று தெரியவில்லை. அவர் பாசறையிலிருந்து புகை வந்தது என்று மட்டும் தெரிவித்துள்ளார்.

இதை அறிந்தவுடன் போர் விமானங்களின் பரிணாம வளர்ச்சி சூடுபிடித்தது.

இருவர் அமர்ந்துசெல்லக்கூடிய ரம்ப்லர் என்னும் ஜெர்மானிய விமானம். கடல் மட்டத்திலிருந்து 24000 (7300 மீட்டர்கள்) அடி உயரத்தில் பறந்து எதிரிப்படைகள் இருக்குமிடத்தை வானொலி உதவியுடன் பீரங்கிப்படைக்குத் தெரிவித்து, குறிவைத்துத் தாக்க உதவியது,v இது பறக்கும் உயரம், இமயமலைச் சிகரங்களில் ஒன்றான கைலாசத்தைவிட இரண்டாயிரத்து இருநூறு அடி உயரமாகும். இமயத்தின் ஜோமேல்ஹாரி சிகரத்தின் உயரத்துக்கு ஈடாகும்.

விமானத்தின் மேன்மையை அறிந்தவுடன், அதில் எந்திரத் துப்பாக்கிகளை வைத்து எதிரிகளைத் தாக்கும் போர்முறை துவங்கியது.

பிரான்சு நாட்டைச் சேர்ந்த விமானி லூயி க்வெனோல் (Louis Quenault), தன் விமானத்திலிருந்த எந்திரத் துப்பாக்கியை உபயோகித்து ஒரு ஜெர்மானிய போர்விமானத்தை வீழ்த்தினார். அக்டோபர் 5ம் தேதி, 1914ல் நிகழ்ந்த இதுவே, முதன்முதலாக வானத்தில் விமானங்களுக்கிடையே நிகழ்ந்து, எதிரியின் விமானம் வீழ்த்தப்பட்ட போராகும்.vi.

முதலில் மரச்சட்டங்களில் கெட்டியான துணியைப் போர்த்தி வலுவாகப் பெட்டியைப் போல இரட்டை அடுக்கும், மூன்றடுக்கு இறக்கைகளும் உள்ள விமானங்கள் தயாரிக்கப்பட்டன. மேலும் அப்பொழுது விமானத்தின் விசிறியை இயக்கும் இயந்திரங்கள் அவ்வளவு திறன் படைத்தவையாக இல்லை. ஆகவே, இரட்டை/மூன்றடுக்கு இறக்கைகள் திறன் குறைந்த இயந்திரமுள்ள விமானத்திற்கு அதிகமான தூக்கும் திறனைக் கொடுத்தன. ஏனென்றால், விமானத்தின் தூக்கும் திறன், இறக்கைகளின் பரப்பைப் பொறுத்தது. அதனால், இறக்கைகளின் நீளமும் குறைந்து விமானம் எளிதில் இயக்க வல்லதாக இருந்தது.vii

அதன்பின், விமானத்தின் வடிவமைப்புகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. இரண்டடுக்கு/மூன்றடுக்கு இறக்கைகள் போய், இக்காலத்தில் நாம் காணும் ஒற்றை இறக்கை விமானம் உருவெடுத்தது.

காரணம், ஒற்றை இறக்கை விமானத்தின் பின்னிழு விசை (drag) முன்சொன்ன விமானங்களைவிட மிகக் குறைவு. ஆகவே, அவை அதிக வேகமாகச் செல்லக்கூடியவை. இந்த அதிகப்படியான வேகம் விண்ணில் விமானச் சண்டையில் உதவியாக இருக்கும். தரையிலிருந்து விமானத்தைப் பார்த்து சுடுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் உதவும். அச்சமயம் அதிகத் திறனுல்ள இயந்திரங்களும் வடிவமைக்கப்பட்டன.

எப்படிப்பட்ட போர்விமானமாக இருப்பினும், விமான உற்பத்தியில் பிரான்சும், பிரிட்டனும் ஜெர்மனியை மிஞ்சியதால்தான், முதல் உலகப்போரில் ஜெர்மனி தோற்பதற்குக் காரணமாக அமைந்தது. இந்த உண்மை தெரிந்தவுடன் போர்விமானங்களின் மதிப்பு உயரத் துவங்கியது.

முதல் உலகப்போரில் கலந்துகொண்ட புகழ்பெற்ற விமானங்களில் முக்கியமாக சாப்வித் காமல், ஃபோக்கர் டி-7, இல்யா முரொமெத் ஆகியவற்றைச் சொல்லலாம்.

பிரிட்டனின் சாப்வித் காமல் விமானம்தான் 3000 எதிரி விமானங்களை வீழ்த்தி, முதல் உலகப் போரிலேயே மிக அதிகமாக எதிரி விமானங்களை வீழ்த்தியது என்ற பெயரைத் தட்டிச் சென்றது.viii

ஜெர்மனியில் வடிவமைத்து உருவாக்கப்பட்ட ஆயிரம் ஃபோக்கர் டி-7 விமானங்களில் இன்னும் 775 சேதமின்றி இருப்பதிலிருந்து, அதன் எதிரியிடமிருந்து தப்பிக்கும் திறமையை அறிந்துகொள்ளலாம். எர்ன்ஸ்ட் உடெட் என்ற ஜெர்மானிய விமானி 62 எதிரி விமானங்களை வீழ்த்திப் புகழ் பெற்றார்.ix

இகோர் சிகோர்ஸ்கியால் ரஷ்யாவில் 1913ல் பயணி விமானமாக வடிவமைக்கப்பட்ட சிகொர்ஸ்கி இல்யா முரோமெட்ஸ் விமானம், நான்கு இயந்திரங்களும்,இரட்டை அடுக்கு இறக்கைளும் கொண்டது. முதல் உலகப் போரில் அது குண்டுவீசும் போர்விமானமாக மாற்றப்பட்டது. இதுவே அக்காலத்தில் மிகப்பெரிய போர்விமானமாக இருந்தது. விமானியையும் சேர்த்து எட்டுப் பேரை அது சுமந்து சென்றது. 1100 பவுண்ட் எடைவரை குண்டுகளையும், ஒன்பது இயந்திரத் துப்பாக்கிகளையும், எதிரி விமானங்களின் விசிறியைச் சேதப்படுத்தக் கயிறுகளையும் வீச வல்லது. அது பத்து மணி நேரம் பறக்கவும் வல்லது. ஆனால் அதன் வேகம் 68 மைல்தான் (110 கி.மீ).x

போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சி – இரண்டாம் உலகப்போர்:

விமானங்கள் எந்த அளவுக்குப் போரில் வெற்றிபெற உதவியாக இருக்கும் என்பதை முதல் உலகப் போர் மூலம் வல்லரசுகள் அறிந்துகொண்டன.  உளவுபார்க்கவும், எதிரிகளின்மீது குண்டுவீசுவதற்கும் அதிகமாக எப்படி விமானங்கள் உபயோகிக்கப்படலாம் என்று அறிந்தாலும், அவற்றை மென்மேலும் எப்படி உபயோகப்படுத்தலாம் எனப் போர்விமான வல்லுனர்கள் சிந்திக்கத் தொடங்கினர்.

துருப்புகளை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டுசெல்லவும், சண்டையிட்டுக்கொண்டிருக்கும் படைகளுக்கு இராணுவ தளவாடங்களை விரைவில் அனுப்பவும், இன்னும் பலவிதத் தேவைகளயும் நிறைவேற்றினாலதான் போரில் தங்கள் கை ஓங்கும், அதுவே வெற்றிக்கு வழிவகுக்கும் என்று இராணுவத் தளபதிகள் முடிவுக்கு வந்தனர்.

ஆகையால், இதைச் செய்து முடிக்கக்கூடிய பல்வேறு விமானங்களை வல்லுனர்கள் வடிவமைக்கத் தொடங்குவதற்காகவும், விமானக் கலைநுட்பத்தை விரிவாக்கவும் ஆய்வுகளை மேற்கொண்டனர். வேகமாகப் பறப்பது, அதிக தொலைவு பறப்பது, அதிக உயரம் பறப்பது, அதிக ஆயுதங்கள் தளவாடங்களை ஏற்றிச் செல்வது, எதிரி விமானங்களிக் குறிவைத்து அடிக்கக் கருவிகளைச் செய்வது போன்ற துறைகளில் அவர்கள் கவனம் செலுத்தினர்.

எனவே, அக்கால வல்லரசுகளான பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி ஆகியவை அதற்குத் தகுந்த நிதியைச் செலவிட்டன. முதல் உலகப்போர் 1918ல் முடிவடைந்து இரண்டாம் உலகப்போர் ஜெர்மனியால் 1939ல் போலந்து படையெடுப்புமூலம் தொடங்குவதுவரை விமான அறிவியல் மேற்கொண்ட துறைகளில் முன்னேற்றம் அடைந்தது.

விமானங்கள் அதிகநேரம் விண்ணில் பறந்தால்தான் போரில் எதிரிகள் இருக்குமிடத்திற்குச் சென்று அவர்களின் தளவாடங்களையும், ஆயுதக் கிடங்குகளையும் குண்டுவீசி அழிக்க முடியும். அது வெற்றிக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆனால், அதற்கு விமானத்தில் அதிக அளவு எரிபொருளை ஏற்றிச்செல்ல வேண்டும். அப்பொழுது விமானத்தின் அளவும், அதன் எடையும் அதிகமாகும்.  எடை அதிகமானால் அது சுழன்று சுழன்று எதிரிவிமானங்களைத் தாக்குவதென்பது இயலாதுபோய்விடும்.  எனவே, அவ்வகைப் போர்விமானங்களைக் எவ்வளவுக்கு எவ்வளவு எடைகுறைவாக வடிவமைக்கமுடியுமோ, அவ்வளவு குறைந்த எடையுடன் வடிவமைக்க வேண்டியிருந்தது.

இக்குறையை நீக்க, பறக்கும்போதே அவற்றில் எரிபொருளை நிரப்பமுடியுமா என்ற கேள்வியும் எழுந்தது.

அதற்குப் பதிலளிக்கும் விதத்தில் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த லெஃப்டினென்ட்கள் காட்ஃப்ரி காபாட் என்பரும், ஹாரிஸ் என்பவரும் 1920 அக்டோபர் 3ம்தேதி அதை நிறைவேற்றிக்காட்டினார்கள்.i

அச்சாதனையால், போர்விவிமானங்களில் பறக்கும்போதே எரிபொருள் நிரப்பும் வசதியையும், எரிபொருளுடன் பறக்கும் விமானங்களையும் வடிவமைக்கத் துவங்கினார்கள்.  ஆயினும் இரண்டாம் உலகப்போர் முடியும்வரை அது வெற்றிபெறவில்லை.

அதுவரை மெதுவாக நடைபெற்றுக்கொண்டிருந்த போர்விமானங்களின் தொழில்நுட்பம், இரண்டாம் உலகப்போரில்தான் மிகவும் வேகமாக வளர்ச்சிபெற்றது. மரத்தின்மேல் துணிபோர்த்திய இரட்டை இறக்கை விமானங்கள், பளபளக்கும் அலுமினியப் போர்வை போர்த்திய ஒற்றை இறக்கையுடன், சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட, அதிக சக்திபடைத்த பிஸ்டன் விமானங்களுக்கு வழிவிட்டன. 

இதற்குக் கீழ்க்கண்ட முன்னேற்றகளைக் குறிப்பிடலாம்:

  • சூப்பர்-சார்ஜ் செய்யப்பட்ட பிஸ்டன் இயந்திரங்கள் அதே எடையுள்ள சாதா இயந்திரங்களைவிட அதிக சக்தி வாய்ந்தவை. இது விமானத்தின் எடையைக் குறைத்து வேகத்தை அதிகப் படுத்தியது.
  • வாலில் உள்ள சுக்கானும், முன் இறக்கை, பின் இறக்கைளில் உள்ள தொங்கற்பகுதிகளின் (wing flaps) கோணத்தை மாற்றி விமானத்தின் வேகத்தைக் கூட்டவோ, குறைத்தோ, தூக்கும் வலிமையை மாற்றவோ முடிந்தது.
  • காற்றாடிகளின் கோணத்தை மாற்றுவதன் மூலம் விமானத்தின் வேகத்தை மாற்ற முடிந்தது.
  • அலுமினியப் போர்வை இலேசாக இருந்ததால் விமானத்தின் எடை குறைந்தது.
  • விமானச் சக்கரங்களை உள்ளித்துக் காற்றின் எதிர்ப்பைக் குறைத்து, வேகமாகச் செல்லவும், எரிபொருள் தேவையைக் குறைக்கவும் உதவியது.
  • விமானத்தை வேகமாக இயக்காவும், சுழலவும், விரைவில் விண்ணில் ஏறவும் உதவியது.ii

பிரிட்டனின் ஸ்பிட்ஃபைர் (நெருப்பு உமிழி), ஜெர்மனியின் மெஸ்ஸெர்ஷ்மிட் விமானங்களும், பின்னர் அமெரிக்காவின் பி-51 மஸ்டாங் (காட்டுக் குதிரை) விமானமும் வானத்தில் பறந்து சண்டையிட்டபோது, பி-17 ஃப்ளையிங்க் ஃபோர்ட்ரஸ் (பறக்கும் கோட்டை) மற்றும் புகழ்பெற்ற பி-29 என்னும் அமெரிக்க விமானங்கள் அவற்றுடன் சேர்ந்துகொண்டன.

ஆனால், போர் இறுதியில் புதுவிதமான விமான இயந்திரங்கள் (எஞ்சின்கள்) — ஜெட் எந்திர வடிவத்தில் உபயோகத்திற்கு வந்தன. எர்ன்ஸ்ட் ஹைங்க்கல் நிறுவனத்தில் பணியாற்றிய இளம் விஞ்ஞானியான ஹன்ஸ் ஃபான் ஓஹைன் (Hans von Ohain) என்பவர் உலகத்தின் முதல் ஜெட் விமானத்தை வடிவமைத்தார். எச்.இ 178 என்னும் அது 1939 ஆகஸ்ட் 27ல் பறந்து, உலகத்தின் அனைத்து ஜெட் விமானங்களுக்கும் முன்னோடியாக அமைந்தது.iii

ஜெட் இயந்திரங்கள் டர்பைன் என்னும் வடிவமைப்பைக் கொண்டன. ஒரே படித்தான வலிமையுள்ள பிஸ்டன் இயந்திரங்களைவிடச் சிறியதாக இருந்தாலும் , அதிக ஒலி எழுப்புவதாலும், சுழற்சி நிமிடத்துக்கு 10,000க்கு மேல் உள்ளதாலும், அதன் வேகத்தைக் குறைத்துக் கார் சக்கரங்களுச் செலுத்த இயலாததாலும் அவற்றைக் காரில் உபயோகப்படுத்த இயலவில்லை. விமானத்தின் காற்றாடிகள் நிமிடத்திற்குச் சிலநூறு சுழற்சிகளே கொண்டவை. ஆனால், ஜெட் இயந்திரத்துடன் ஒரு காற்றழுத்த இயந்திரத்தை (air compressor) ஒன்றாக இணைத்துச் இயக்கினால், மிகவும் வேகத்துடன் காற்றை அவை வெளியேற்றும்.

பலூனில் காற்றை நிரப்பி, அதன் வாயை மூடாமல் விட்டால், அது விர்ரென்று மேலே கிளம்பிச் செல்வதை நாம் அறிவோம். அதுபோல, ஜெட் இயந்திரங்கள் காற்றை வெளியேற்றும் வேகத்தில் விமானம் முன்னேறிச் செல்லும். இதே ஜெட் இயந்திரங்கள் விமானத்தின் விசிறியையும் சுழற்ற உபயோகப் படுத்தப் பட்டன. இவற்றை டர்போ-பிராப் இயந்திரங்கள் என்பர். இந்த அமைப்புள்ள விசிறிகள் பிஸ்டன் இயந்திரங்களின் சுழற்சியைவிட அதிகச் சுழற்சி உள்ளவை.

ஜெர்மானிய எந்திர வடிவமைப்பாளர் ஆன்செல்ம் ஃபிரான்ட்ஸ் (Anselm Franz) ஜெட் போர்விமானத்திற்கேற்ற எந்திரத்தை உருவாக்கினார். இந்த ஜெட் எந்திரத்தை மெஸ்ஸெர்ஷ்மிட் நிறுவனம் எம்.இ-262 என்ற விமானத்தில் பொருத்தி வழங்கியது. ஆயினும் இரட்டை ஜெட் பொருத்தப்பட்ட இந்த விமானம் பறப்பதற்குக் கடினமாகவும், ஆபத்தானதாகவும் இருந்தது, மேலும் விமான தளத்தில் பறப்பதற்குத் தயாராவதற்குமுன் மிகவும் மெதுவாகச் செயல்பட்டது.iv அதனால் பெரும்பாலும் அது தரையிலேதான் தன் பொழுதைக் கழிக்க நேரிட்டது. அதனால் அதை நேசநாடுகள் தாக்கும் வாத்துக்கள் (sitting ducks) என அழைத்தனர்.v இதுமட்டும்தான் இக்காலத்தின் விசிறியில்லாத ஜெட் விமானங்களுக்கு முன்னோடி.

ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் பிரிட்டன் வடிவமைத்த ஜெட் இயந்திரத்தை அமெரிக்காவில் உற்பத்தி செய்து, அந்த நாட்டின் முதல் ஜெட் போர்விமானமான பெல் எக்ஸ்-பி-5 உருப்பெற உதவிசெய்தது.

அவ்வகை விமானங்கள், அதுவரை இயங்கிகிவந்த காற்றாடி (புரொபெல்லர்) விமானங்களைவிடச் சிறியதாகவும், அதிக விரைவாகவும், அதிக உயரத்திற்கும் செல்லும் திறமைவாய்ந்தனவாகவும் இருந்தன. ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா இந்த ஜெட் இயந்திரங்களைப் பொருத்தி, விமானங்களைச் சோதனைசெய்தபோதிலும், பிரிட்டனும், ஜெர்மனியும், அமெரிக்காவும் டர்போஜெட்டால் இயக்கப்பட்ட விசிறி விமானங்களை உபயோகப்படுத்தின. சில போர்த்தாக்குதல்களுக்கு ஜெட்விமானங்களை உபயோகப்படுத்தின.vi ஜப்பானும் யோக்கோசுகா என்ற ஜெட் போர் விமானத்தை தற்கொலைத் தாக்குதலுக்குத் தயாரித்தாலும், அதை உபயோகிக்கவில்லை.

போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சி – இரண்டாம் உலகப்போருக்குப் பின்:

இந்திய-பாகிஸ்தான் விடுதலைக்குப் பிறகு பிரிட்டன் ஆதிக்கம் செலுத்திய நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அதன் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டன., முன்போல அந்நாடுகளின் இயற்கை வளத்தைச் சுரண்டி தன்னை மேம்படுத்திக்கொள்ள பிரிட்டனால் இயலாதுபோனது. அதனால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டன் தனது வல்லரசு நிலையை இழந்தது. அதன் தொழில் வளர்ச்சி அதை முன்னேறிய நாடுகளில் ஒன்றாக்கியது.

அதைத்தொடர்ந்து பிரான்சும் தனது ஆதிக்கத்தின் கீழுள்ள நாடுகளை இழந்தது. இருப்பினும், ஜெனரல் டிகால் அதன் அதிபரானாதும், தனித்துத் தன் தொழில்நுட்பத்தை உயர்த்தத் தொடங்கியது.

அமெரிக்கா — சோவியத் யூனியன் என்று அழைக்கப்பட்ட ரஷ்யா – இந்த இரண்டு நாடுகள் மட்டும் உலகின் இருபெரும் வல்லராசாகின. அவை வெறும் வல்லரசுளாக மட்டும் ஆகியிருந்தால் அவ்வளவு சிக்கல் இருந்திருக்காது.  ஆனால், அமெரிக்கா முதலாளித்துவ நாடாகவும், ரஷ்யா பொதுவுடமை நாடாகவும் இருந்ததே பெரும் பிரச்சனையாகிவிட்டது.  மேற்கு ஐரோப்பிய நாடுகள் முதலாளித்துவத்தையும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், சீனாவும் பொதுவுடைமையைத் தழுவின., இந்த வேறுபாடு, அவைகளுக்குள் ஒரு இழுபறிப் போராட்டத்தை ஏற்படுத்தியது. 

சோவியத் யூனியனின் ஆதிக்க எல்லையைக் கட்டுப்படுத்தவும், ஐரோப்பியத் தேசியவாத இராணுவப்போக்கை, அமெரிக்காவின் வலுவான இருப்பின் துணையுடன் தடுக்கவும், ஐரோப்பிய அரசியலமைப்பின் மூலமாக இணையவும் திட்டமிடப்பட்டு, வட அட்லான்டிக் ஒப்பந்த நிறுவனம் (North Atlantic Treaty Organization, or NATO) 1949ல் ஏப்ரல் மாதம் 4ம் தேதி அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் தோற்றுவிக்கப்பட்டது.vii அப்பொழுது அவ்வமைப்பில் 12 நாடுகளே இருந்தன.  உக்ரேன் போர் தொடங்கியதற்குப்பின் புதிதாகச் சேர்ந்த ஃபின்லாந்தைச் சேர்த்து, இப்பொழுது 31 உறுப்பினர் நாடுகள் உள்ளன.

இதற்கு எதிராக சோவியத் யூனியன் வார்சா உடன்படிக்கை (Warsaw Pact) என்ற அமைப்பைத் தொடங்கியது.

ஆனால், இந்த இரண்டு வல்லரசுகளுடன் சேர்ந்துகொள்ளாமல் தனித்து இயங்கவேண்டும், உலகம் இரண்டுபட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் கூட்டுசேரா இயக்கம் (Non-aligned Countries) என்ற அமைப்பு இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, எகிப்து அதிபர் அப்டெல் கமால் நாசர், யுகோஸ்லாவிய அதிபர் டிட்டோ, கானா முதல்வர் நக்ருமா, இந்தோனேசியத் தலைவர் சுகார்ட்டோ ஆகியோரால், யுகோஸ்லாவியாவின் பெல்கிரேடு நகரில் 1961ல் தொடங்கப்பட்டது.viii

கூட்டுசேரா அமைப்பின் நோக்கம், பழையபடி உலகப் போர் தொடங்கக் கூடாது, ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்பதே.

ஆயினும், கொள்கை வேறுபாடுகளும், வல்லரசுகளின் கூட்டமைப்புகளும், அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் (cold war) தொடங்கும் நிலைமையை உருவாக்கியது.  இருநாடுகளும் தங்கள் இராணுவ வலிமையை அதிகரிக்கத் துவங்கின.  அதனால் போர்விமானங்களின் முக்கியத்துவமும் வளரத் துவங்கியது.

இத்துறையில் விரைவில் முன்னேற்றமடைந்த நாடுகள் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்சு ஆகியவை. ஏனெனில், இந்த நாடுகள் தொழில்நுட்பம், உற்பத்தி, ஆய்வுத்துறைகளில் அதிகமாக முன்னேற்றமடைந்தவை.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் இரண்டாகப் பிளக்கப்பட்ட ஜெர்மனியின் விஞ்ஞானிகளையும் அமெரிக்காவும், ரஷ்யாவும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டது அவற்றின் திறமையை மிகவும் வளர்த்தது.

அதனால், ரஷ்யாவுக்கு அணுகுண்டு உற்பத்திசெய்யும் நுண்ணறிவும், தொழில் நுட்ப உதவி ஆகியவை சிறைபிடிக்கப்பட்ட/அழைத்து வரப்பட்ட ஜெர்மன் விஞ்ஞானிகளில் வாயிலாகக் கிட்டியது. அமெரிக்காவுக்கு நிகரான மன்ஹாட்டன் அணுகுண்டு திட்டத்திற்கு ஜெர்மன் விஞ்ஞானிகள் பெரும் அளவில் உதவிசெய்தனர்.ix

இதைப்போல அமெரிக்காவும் ‘ஆபரேஷன் பேப்பர்க்ளிப்’ செயல்பாட்டின் மூலம் எண்பத்தெட்டு ஜெர்மன் விஞ்ஞானிகளை ராக்கெட் தொழில்நுட்பத்துறைக்கு உதவ இட்டுச் சென்றது. இதில் பெரும்பான்மையோர் நாட்சி (Nazi) ஆட்சிக்கு உதவிசெய்தவர் என்பதால் அமெரிக்காவில் எதிர்ப்புக் கேள்வியும் எழுந்தது.x

அப்படிப்பட்ட விஞ்ஞானிகள், போர்விமானத் துறையிலும் அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் உதவினர் என்றால் மிகையாகாது.

ரஷ்யாவும் அமெரிக்காவும் தத்தம் கூட்டாளி நாடுகளுக்கு ஆயுத உதவியும், போர்விமானங்களையும் தந்து உதவின. பலவித முன்னேற்றங்களைச் செய்து, போர்விமான வடிவமைப்பிலும், உற்பத்தியிலும் வியக்கத்தக்க முன்னேற்றத்தை அடைந்தன.  காரணங்கள் — அந்நாடுகளின் செல்வச் செழிப்பு; ஐரோப்பா இரண்டுவிதக் கொள்கையுள்ள வல்லரசுகளால் பிரிக்கப்பட்டுவிட்ட நிலையில், மீண்டும் ஒரு உலகப்போர் தொடங்கிவிடாமல் பாதுகாத்துக்கொள்வது ஆகியவை.

ஆனால், கூட்டுசேரா அமைப்பு நாடுகள் தமது இராணுவத்தைப் பெருக்கிக் கொள்ளவோ, போர்விமான உற்பத்தித் திறனைப் பெருக்கிக் கொள்ளவோ, அதற்கான தொழில் நுட்பத்தை வளர்த்துக் கொள்ளவோ முழுமனதுடன் செயல்படவில்லை.

நிலைமையும் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. போர் விமானங்களின் வளர்ச்சியும் பெருகியது. அது அடுத்த பதிவில் விளக்கப்படும்

(தொடரும்)

உசாத்துணை

i ..the first an aircraft was refueled in flight is generally attributed in Lt. Godfrey L. Cabot of the US Naval Rserve and Lt. harris of the NUS Navy on Oct 3, 1920, Background Paper on the History of Air Refueling, by SMSgt. M.A. Gentry, SNCOA Student,Air Force Enlisted Heritage Research Institute, 3rd May, 1994

ii How The Second World War Changed Aviation, by Joanna Bailey and Sunit Singh, Simple Flying, updated Jul 24, 2022, https://simpleflying.com/second-world-war-aviation/

iii Jet Planes and World War II – The Development of Jet Engine During The War, https://cs.stanford.edu/people/eroberts/courses/ww2/projects/jet-airplanes/planes.html

iv The Messerschmitt Me 262 Jet Fighter, by Robert F. Dorr, Jul 6, 2012, published Apr 19, 2023, DefenseMediaNetwork, https://www.defensemedianetwork.com/stories/the-messerschmitt-me-262-jet-fighter/

v மேற்படிக் குறிப்பு

vi World War II Aircraft, sep 28, 2015, https://ethw.org/World_War_II_Aircraft 

vii A Short History of NATO, https://www.nato.int/cps/ie/natohq/declassified_139339.htm

viii Non-Aligned Movement international organization by Andre’ Munro, Brittanica, updated Mar 20, 2023, https://www.britannica.com/topic/Non-Aligned-Movement

ix From Hitler to Stalin: The secret story how German scientists helped built the Soviet A-bomb by Oleg Yegorov, Russia Beyond, June 8, 2018, https://www.rbth.com/history/328489-german-scientists-who-helped-to-create-soviet-bomb

x German scientists brought to US to work on weapons tech in Operation Paperclip, by History.com Editors, A&E Television Networks, updated Nov 13, 2020, https://www.history.com/this-day-in-history/german-scientists-brought-to-united-states-to-work-on-rocket-technology

Series Navigationபோர்விமானங்களின் பரிணாம வளர்ச்சி – 1 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.