அறுவடை

ராசம் வாளியில் தண்ணீர் அள்ளி வாசல் தெளித்துக் கொண்டிருந்தாள். இடப்பக்கம் தெளித்து விட்டு திரும்புகையில் இரண்டு நொடிக்கு முன்னால் வலப்பக்கத்தில் தெளித்திருந்த மொத்த ஈரத்தையும் பூமி உறிஞ்சியிருந்தது.

‘  மண்ணுக்கும் பசி போல. ‘ 

கோலப் பொடி டப்பாவை முற்றத்து மாடத்திற்குள் வைத்துவிட்டு திண்ணைக்குள் போனபோது, நாயகம் இன்னும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். விளக்கு வைக்கிற நேரம் வரைக்கும் அவர் எழுந்திருக்கவில்லையென்றால் எழுப்பி விட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தவள், கட்டிலருகிலேயே முந்தானையை தலைக்கு விரித்து தரையில் படுத்துக் கொண்டாள். 

ராசத்தின் வயிற்றிலிருந்து நான்கு பேர் ஓடி பிடித்து விளையாடுவதை போல கடமுடா சத்தம் வருவது அவளது காதுகளுக்கே கேட்டது. கதிரவன் இப்படி மொத்தமாக கைவிடுவான் என்று ராசமும், நாயகமும் நினைத்திருக்கவில்லை.நேற்று ரராசம் வாசலில் நின்று கொண்டிருந்த பொழுதுதான் பூபதி சாக்கை தோளில் தூக்கிக் கொண்டு வாசலைக் கடந்துப் போனான். 

‘ இந்த மனுஷன் நல்லாயிருந்திருந்தா இந்த வாசலுக்குள்ள ஏறியிருக்க வேண்டிய சாக்கு’ என்று நினைத்துக் கொண்டாள். 

பசி மயக்கத்தில் அவளுக்கு கண்ணை சொருகிக் கொண்டு வந்தது. 

நாயகம் பள்ளி பிராயத்தில் படிப்பில் சுட்டியானவர். வாத்தியார் பாடம் நடத்தும் பொழுது, கூரை ஓட்டில் ஓடிக்கொண்டிருக்கும் எலியை பார்த்துக் கொண்டிருந்தாலும், வாத்தியார் எழுப்பிக் கேள்வி கேட்டால் பிசகாமல் சொல்லிவிடுவார். ஆனால் தினமும் பள்ளிக்கூடத்திற்குப் போகத்தான் பெரும் அலுப்பு. வாரத்தில் மூன்று நாட்கள் பள்ளிக்கூடத்திற்கு போகிற வழியில் இருந்த புளியமரத்தடியில் புத்தகப்பையை தலைக்கு வைத்துவிட்டு மல்லாக்க படுத்துக்கிடப்பார். இரண்டு நாட்கள் போனால் போகிறதென்று பள்ளிக்கு தலைக்காட்டுவார். அதுவும் அப்பாவின் நச்சரிப்பு பொறுக்க முடியாமல்தான். தன்னைப் போலவே மகனையும் அரசாங்க உத்தியோகத்தில் அமர்த்திவிட வேண்டுமென்று நாயகத்தின் அப்பா மல்லுக் கட்டிப் பார்த்தார். மக்கரான வண்டியை பின்னாலிருந்து தள்ளுவதைப் போல அப்பா எவ்வளவோ தள்ளிப் பார்த்தும் நாயகம் ஆறாவது தாண்ட மாட்டேன் என்று நகராமல் நின்றுக் கொண்டார். ஆத்திரத்தில்  பொறிந்து கொண்டிருந்த அப்பாவும், ‘ அவனுக்கு அவ்வளவு தான் எழுதியிருக்கு’ என்று காலப்போக்கில் மனதை தேற்றிக் கொண்டார். 

வேலையே இல்லாவிட்டாலும் குடும்ப சொத்திற்கு ஒரே வாரிசு என்பதை மனதில் கொண்டு தாய்மாமன் மகள் ராசத்தை நாயகத்திற்கு மனம் முடித்து வைத்தார்கள். அப்பா இறந்த இரண்டு மூன்று வருடத்திற்குள் நாயகம் மொத்தத்தையும் வித்து விழுங்கி விட்டார். ராசம் பிள்ளை இல்லா குறையை நிவர்த்தி செய்து கொள்ள கோயில் குளமென்று சுற்றி வந்து கொண்டிருந்தாள். 

ராசத்தின் வேண்டுதல்கள் வீண் போகவில்லை. அவள் சுற்றி வந்த முப்பிடாரி அம்மை அவளுக்கு இரண்டையும் பெண்ணாகவே கொடுத்தாள். இரண்டும் பெண் என்றான பின்தான் நாயகத்திற்கு வாழ்க்கை உரைக்கத் துவங்கியது. முடிந்ததை பிடிக்கமுடியாது, மிச்சத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென கிடைக்கும் வேலைகளை பார்க்கத் துவங்கியிருந்தார் நாயகம். பிள்ளைகள் வளர்ந்து கொண்டிருந்தார்கள். வருடங்கள் ஓடியது. இரண்டு பெண்டுகளும் பருவத்தை கடந்து நின்றார்கள். பொட்டும் பொடியுமாக சேர்த்து வைத்திருந்ததை திரட்டி மூத்தவள் கரையேற்றிவிட்டாள். கொஞ்சம் ஆசுவாப்பட்டு அடுத்தவளுக்காக ஓட ஆரம்பித்தபொழுது, உடல் கடும் வேலைகளுக்கு ஒத்துழைக்காமல்  தளரத் துவங்கியிருந்தது. 

வாழ்க்கையை பற்றிய பெரும் பயம் அப்பிக் கொண்டு இருள் சூழ நின்ற பொழுது,  ‘ ‘ நிலத்த சரி வர பாத்துகிடுவான்னு நம்பி பூபதிட்ட பொறுப்ப கொடுத்திருந்தேன். அவன் நடவடி சரியா இல்ல. கைமாத்தி விடலாம்ன்னு பேச்சு வார்த்தை வரையில வீட்டில அவ உங்கள ஓர்ம படுத்தினா. சரின்னு சொன்னா உபகாரம் இருக்கும். ‘ கதிரவன் இப்படி வந்து கேட்டது நாயகத்திற்கு பெரும் ஆசுவாசமாக இருந்தது.கதிரவன் நாயக்கத்தின் ஒன்று விட்ட மூத்த அக்காவின் பேரன். வயதில் நாயகத்தை விட இரண்டு வயது இளையவன். பட்டணத்தில் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறான். உத்தியோகத்தையும் குடும்பத்தையும் பார்க்கவே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது. மேற்பார்வை பார்ப்பதற்கு பெரும் உடல் உழைப்பு தேவையிருக்காது என்பதால் நாயகமும் யோசிக்காமல் தலையாட்டினார்.

அடுத்தவனின் நிலத்திற்கு ஊழியம் பார்க்கிறோம் என்கிற நினைப்பில்லாமல், சொந்த நிலத்தைப்போல கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளத் துவங்கினார். அவர் பொறுப்பெடுத்திருந்த முதல் பூ போகத்திற்கான அறுவடை வந்த பொழுது   இரண்டு பக்கமும் கட்டுபடி ஆகிற வகையில் சம்பளம் பேசி  வேலையாட்களை கொண்டுவந்தார்.  நிலத்தில் அறுவடை நடக்கும் பொழுது, வேலை சரியாக நடக்கிறதா என்று மேற்பார்வை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவர்கள் பாடும் எம். ஜி. ஆர் பாட்டிற்கு எதிர்பாட்டு பாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். 

நெல்லை சண்டு விட வந்திருந்த சூசை நாயகத்தின் பேச்சு தருகிற உற்சாகத்தில் மணிக்கு இரண்டு சுளவு நெல் அதிகமாக சண்டு விட்டுக் கொண்டிருந்தான். ‘பசி கண்டாச்சுபோல சாப்பிட்டுகிட்டு மீதிய பார்த்துகிடலாம். ‘ பசியில் சூசையின் கை தளர்ந்து கொண்டிருந்ததை பார்வையிலேயே மோப்பம் பிடித்து விட்டிருந்தார் நாயகம். 

‘ இல்ல மீனாரே. கொஞ்ச நேரங்கூட பிடிக்கட்டும்.’

‘ வயித்த நிரப்பாம பார்க்க வேலை விளங்காது. இந்த சுளவோட நிறுத்திக்கோ.’ நாயகம் கறாராக சொல்லிவிட்டார். அதற்குமேல் மீற முடியாமல் கைகழுவி கரையேறிய சூசை வீட்டை நோக்கி நடையை கட்டிய பொழுது. சூசையை தன் வீட்டிற்கு சாப்பிட அழைத்தார்.  சூசை பிடிவாதமாக மறுத்த பொழுது, ‘ ஒரு வாய் சோத்துலியா நான் கோவுரம் வைக்க போறேன். வா. ‘ என்று அவனை கையோடு இழுத்துப் போய்விட்டார். சூசையின் தயக்கத்தை உடைக்கிற மாதிரியாக ராசமும் அவன் போதும் என்று சொல்வதையும் மீறி இலையை நிரப்பினாள். 

‘ இவரு இப்படி இனம் பார்க்காம நடு வீட்ல ஏத்திவச்சு சோறு போட்டா நாளைக்கு அவனுக நமக்கு சரிச்சமமா தோள்ல கைபோடலாமானு பார்ப்பானுக.’

‘ இந்த சூசை பயலுக்கு சோறு போடுகதில இவருக்கு ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் உண்டா சொல்லும். ‘

‘ இவரு கதிரவன்ட வாங்குக அரையணா கூலிக்கும் ஒரு சாக்கு நெல்லுக்கும் இதெல்லாம் தேவையா. பூபதி பொழைக்க தெரிஞ்ச பய. இவருக்கு சூசகம்  பத்தாது. ‘

‘ இப்ப நம்ம பேசிட்டு இருக்கது அந்த மனுஷன் காதுல விழுந்திச்சு இந்த சந்திய  ரெண்டாக்கிபோடுவாரு. ‘

சூசைக்கு நாயகம் வீட்டில் பந்தி நடந்த அடுத்த நாள் காலையில் டீக்கடை கூடலில் இப்படி ஆளுக்கு ஒன்றாக புலம்பி தீர்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த பேச்சுகள் எதுவும் சூசை அடுத்த அடுத்த பூ போகத்திற்கு சண்டு விட வந்தபொழுதும் நாயகத்தின் வீட்டில் சாப்பிடுவதை நிறுத்தி விட முடியவில்லை. 

இரண்டாவது மகளுக்கும் மாலைப்பூக்க அவள் திருமணத்தையும் அவர் சக்திக்கேற்ப சிறப்பாக நடத்தி முடித்தார் நாயகம். இரண்டாமானவளின் திருமணம் முடிந்திருந்த மூன்றாவது மாதம் நாயகத்திற்கு உடல் தளர்வு இன்னும் அதிகமானது. ராசம் பயந்து போய்விடுவாள் என்று தளர்வை வெளிக்காட்டாமல் தன்னோடு வைத்துக் கொள்ள நாயகம் முயற்சி செய்த போதிலும் நிலைமை கைமீறிப் போய் விஷயம் ராசத்திற்கு  தெரிய வந்தது. வயோதிகத்தில் வருகிற தளர்வு தான்.பயப்படுவதற்கு ஒன்றுமில்லை, ஆறு ஏழு மாதங்கள் முழுமையான ஓய்வு எடுத்துக் கொண்டு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் சரி செய்து விடலாமென்று மருத்துவர்கள் சொன்னார்கள். 

கதிரவன் நேரில் வந்து சம்பிரதாயத்திற்கு விசாரித்து விட்டு, அடுத்த பூ போகத்திற்கான மேற்பார்வையை பூபதிக்கே மீண்டும் கைமாத்தி விட்டுவிட்டுப் போய்விட்டான். வீட்டின் செலவுகள் இடிக்கத் தொடங்கியிருந்தது. பெண்களை கட்டி கொடுத்த இடத்தில் கையேந்தி நிற்க கூடாதென்பதில் நாயகமும், ராசமும் உறுதியாக இருந்தார்கள். அரிசிப்பானை தூரை தொட ஆரம்பித்திருந்தது. அரிசி தட்டுபாட்டை நாயகத்திடம் சொல்லாமல், இருக்கிற அரிசியை முடிந்த அளவிற்கு நீட்டித்து கொண்டு வரும் எண்ணத்தில் நாயகத்திற்கு மட்டும் வயிற்றுக்கு குறை வைக்காமல் பரிமாறி விட்டு, தனக்கு அரைவயிறும் கால்வயிறுமாக நிரப்பி ஒரு வாரமாக சமாளித்துக் கொண்டிருக்கிறாள் ராசம். 

வெளியில் சொல்லிக் கொள்ளாவிட்டாலும் நெல்லை பற்றிய பெருங்கவலை சிலந்தி வலையை போல அவள் மனது பூராவும் பீடித்து படர்ந்திருந்தது. பானையின் அடித்தூர் நாளுக்கு நாள் அதிகமாக வெட்ட வெளி ஆகிக்கொண்டே போவதை நினைத்து அவள் அடிவயிற்றின் பதைபதைப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. 

‘ நீதான் படியளக்கணும் ஈசா’ கடந்த ஒருவாரமாக சாமி முன் நிற்கும்பொழுதெல்லாம் இதை மட்டுந்தான் ராசம்  வேண்டுதலாக வைத்துக் கொண்டிருக்கிறாள். 

ராசம் திடுக்கிட்டு எழுந்த பொழுது, நன்றாக இருட்டியிருந்தது. முகத்தை சேலை தலைப்பால் அழுத்த துடைத்துக் கொண்டாள். 

‘ எந்திரிச்சு உட்காருகேளா. விளக்கு வைக்க நேரமாச்சு. ‘ நாயகத்தை தோள் பட்டையில் லேசாக தட்டி எழுப்பிவிட்டாள். 

‘ விளக்கு வச்சிட்டு காப்பி போட்டு தாரேன். நல்ல உறங்குதியலேனு எழுப்ப மனசில்லாம விட்டுட்டேன்’ திரும்பி பூஜையறை நோக்கி எட்டு வைத்தவளை மணிக்கட்டை பிடித்து நிறுத்தினார் நாயகம். 

‘ எனக்கு காப்பி இருக்கட்டும். எத்தன நாள நீ பட்டினி கிடக்க?’

‘ என்னத்த உளருகிய.’

‘ எப்பவும் என் முன்னாடி இருந்து சாப்பிடுகவ, ஒருவாரமா அடுக்களைக்குள்ளயே சாப்பிடுகது ஏன்னு கூடவா தெரியாம இருப்பேன். உடம்பு தான் செத்து போச்சு. மனசு இன்னும் சாகலேலா. ‘

‘ என்ன வார்த்தை பேசுதிய. ‘ ராசத்திற்கு கண்மணிக்குள் கண்ணீர் நிரம்பியது. 

‘ மீனாரே’ நாயகம் அடுத்த வார்த்தை பேசுவதற்குள்  வாசலில் இருந்து வந்த குரல் இடைமறித்தது. 

கண்ணீரை உள்இழுத்துக்  கொண்டு ராசம் வெளியே எட்டிப் பார்த்தாள். 

‘ வா, உள்ள வா சூச. ‘

‘ நல்ல இருக்குதியளாம்மா. ‘ கேட்டுக் கொண்டே கையிலிருந்த குட்டிச் சாக்கை முற்றத்தில் வைத்துவிட்டு திண்ணைக்குள் நுழைந்தான் சூசை. 

நாயகத்தின் முகம் சூசையை பார்த்ததும் மலர்ந்தது. 

‘ மேலுக்கு கொள்ளாமா மீனாரே. ‘

‘ ம்ம் பரவாயில்லை. அப்படியே ஓடுகு.’  கட்டிலின் விளிம்பை தட்டிக் காட்டி சூசையை உட்காரும்படி சைகை செய்தார் நாயகம். 

‘ இருக்கட்டும் மீனாரே. ‘

‘ அட இரிங்கேன். ‘ நாயகத்தின் குரல் தளரந்திருந்த பொழுதும் குரலில் இருந்த கம்பீரம் அப்படியே இருந்தது. 

மார்பிற்கு குறுக்காக கட்டியிருந்த முழங்கைகளை தளர்த்திக் கொண்டு சூசை அவர் அருகில் அமர்ந்து கொண்டான். ராசத்தின் கவனம் நாயகமும் சூசையும் பேசிக் கொள்வதை கவனிப்பதில் முழுமையாக ஈடுபடவில்லை. இடை இடையே  முற்றத்தில் வைத்திருந்த குட்டிச் சாக்கை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தாள். அது சூசைக்கு கிடைத்திருக்கும்  கூலியாக இருக்கக் கூடும் என்பதும் அவளுக்கு நன்றாகத் தெரியும். 

‘ மீனார்கிட்ட ஒன்னு சொன்னா தப்பா எடுத்துகிடகூடாது. ‘ சூசை தயங்கிக் கொண்டே சொன்னான். 

‘ நம்ம பய நீ. எதுனாலும் சொல்லு. ‘

‘ இந்த வருஷம் சண்டு விட்ட எல்லா வீட்டிலேயும் நிறைவா கூலி தந்தாவோ. அதுலயிருந்து ஏதோ என்னால முடிஞ்சத கொண்டாந்திருக்கேன்.’

‘… .. ‘ நாயகம் அமைதியாக இருந்தார்

‘ இவன்ட வாங்கி நம்ம திங்கணும்மான்னு மீனாரு நினைக்க கூடாது. வேண்டாம்ன்னு சொல்லாம வாங்கிட்டா மனசு நிறைஞ்சு இறங்கி போவேன்.’

‘… .. . ‘ நாயகம் பதில் பேசாமல், சூசையின் கைகளை தன் உள்ளங்கைக்குள் பொத்திப் பிடித்தார். கருவிழிகள் நீரில் தளும்பிக் கொண்டு மிதந்தது.

இருவருக்கிடையே நடந்து கொண்டிருக்கிற பேச்சு வார்த்தை இன்னதென்பதை ராசம் உணர்வதற்குள், வெளியே வைத்திருந்த சாக்கு சரிந்ததில் சிதறிய நெல்மணிகள் முற்றத்தில் அறுவடையாக துவங்கியிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.