தமிழாக்கம்: நாகரத்தினம் கிருஷ்ணா

உரோமில் இரண்டாது இடத்தில் இருப்பதைகாட்டிலும் ஒரு கிராமத்தில் முதல் இடத்தில் இருப்பது மேல் என சீசர் நினைத்தது சரி. அவர் இப்படியொரு எண்னத்திற்கு வர, இலட்சியமோ வீண்பெருமையோ காரணமல்ல, உரோமில் இரண்டாவது இடத்தில் வைக்கப்பட்ட மனிதனுக்கு கீழ்ப்படிதல், கிளர்ச்சி, பிறகு மிகவும் ஆபத்தானதெனக் கருதப்படுகிற சமரச வழிமுறை இவற்றுக்கிடையேதான் அவனுடைய அபாயத்துக்குரிய தேர்வுகள் இருந்தன. நானோ, உரோமில் இரண்டாவது இடத்தில் கூட இல்லை. ஆக அவ்வாறானதொரு தேர்வை முன்னிட்டு படையுடன் சக்கரவர்த்தி புறப்பட ஆயத்தமானார், எதிர்பாராவிதமாக ஏதேனும் நடந்தால் அதைச் சமாளிக்க நிர்வாகப் பொறுப்பிற்கு இங்கு ஒருவரை நியமிக்கவேண்டும், அப்படியொருவரை மன்னர் இன்னும் வாரிசாக தெரிவுசெய்யவில்லை. இந்நிலையில் பயணத்தை முன்னிட்டு அவர் எடுத்துவைக்கிற ஒவ்வொரு அடியும் உரோமிலிருந்த அரசியல் ஸ்தானிகர்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பம். மன்னரை பொதுவாக ஓர் அப்பாவி எனலாம், தற்போது மிகவும் சிக்கலான ஆசாமியாகத் தோன்றினார், நானே தேவலாம் என்கிற நிலமை. இருந்தும் அவருடைய முரட்டுகுணம் எனக்கு நம்பிக்கை அளித்தது, காரணம் அதுபோன்ற நேரத்தில்தான் என்னை மகனாக அவர் நடத்தினார். மற்ற நேரங்களில், எனக்குரிய பணிகளை நான் நிறைவேற்றிமுடித்ததும் செனெட்டர் பல்மாவால் (Palma) வெளியேற்றப்படலாம் அல்லது செனெட்டர் குயெட்டூஸ்(Quietus) என்னைக் கொல்லக்கூடும் எனும் எதிர்பார்பிலேயே இருந்தேன். உண்மையில் அரசவையில் எனக்கு எவ்வித செல்வாக்குமில்லை. அந்த்தியோக்கியாவிலிருந்து சன்ஹெட்ரின்(Sanhedrin) என்கிற யூதர் அவையில் செல்வாக்குடனிருந்த உறுப்பினர்கள் சிலர் மன்னரைச் சந்திக்க விரும்பினார்கள், என்னால் அவர்களுக்கு உதவமுடியவில்லை. அவர்கள் எங்களைப்போலவே தங்கள் மதத்தைச் சேர்ந்த ஒருபிரிவினரின் வன்முறை தாக்குதல்களுக்குப் பயந்திருந்தனர். மன்னர் திராயானை அவர்கள் சந்திக்க முடிந்திருந்தால் கிளர்ச்சியாளர்களின் சூழ்ச்சிகளைப் பற்றிய புரிதலை அளித்திருப்பார்கள். லத்தினியூஸ் அலெக்சாண்டர் (Latinius Alexander)எனது நண்பர், ஆசியா மைனரின் பழைய அரச குடும்பமொன்றின் வம்சாவளியைச் சேர்ந்தவர், குடும்பக்கீர்த்தியும், செல்வமும் பெரும் உயர்வை அவனுக்கு அளித்திருந்தன, இருந்தும் அவனுக்கும் என் நிலைமைதான். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பித்தினியாவுக்கு(Bithynia) செனெட்டர் பிளினி(Pliny) அனுப்பிவைக்கபட்டிருந்தார், நாட்டின் உண்மையான நிதிநிலையென்ன, அதைக்குறித்த அவருடைய உட்கிடையென்ன என்பதையெல்லாம் சக்கரவர்த்திக்கு தெரிவிக்காமலேயே அங்கே அவர் இறக்கநேர்ந்தது, விரும்பியிருப்பின் நேரம்கிடைத்திருக்கும். அவரிடம் குணப்படுத்தவியலாத நம்பிக்கையொன்று உண்டு, அதன்காரணமாக ஒருவேளை இவ்வாறு அவர் நடந்துகொண்டிருக்கலாம். ஆசிய விவகாரங்களை நன்கு அறிந்திருந்த லிசியன் வணிகர் ஓப்ரமோவாஸ்(Opramoas) தயாரித்திருந்த இரகசிய அறிக்கைகளை செனெட்டர் பல்மா ஏளனம் செய்தார். விடுவிக்கபட்ட அடிமைகள், மதுபோதையில் கழித்த இரவுகளுக்கு பின்னர், தொடர்ந்த வலிமிகுந்த நாட்களை அரண்மனை மண்டபத்திலிருந்து என்னை வெளியேற்ற பயன்படுத்தினர். பேரரசரின் ஏவலர்களில் ஒருவன் பெயர் பெடிமஸ், மிகவும் நேர்மையானவன் என்கிறபோதும் முட்டாள், இரண்டுமுறை எனக்கு எதிராக நின்று, கதவைத் திறக்க மறுத்தான். இவ்வாறிருக்க, எனது விரோதியான கான்சல் செல்சூஸ்(Celsus) என்பவனோ ஒருநாள்மாலை கதவை அடைத்துக்கொண்டு திராயானுடன் உரையாட பல மணிநேரம் எடுத்துக்கொண்டான், அன்று என்னையே தொலைத்ததுபோல உணர்ந்தேன். முடிந்தபோதெல்லாம் எனக்கென்று நண்பர்களை தேடவேண்டியதாயிற்று, அதன்பொருட்டு எந்தவிலையும் கொடுக்கத்தயார் என்பதுபோல அடிமைகள் விஷயத்தில் ஊழலில் இறங்கினேன், படகுகளுக்குகுத் துடுப்புபோட விரும்பியே அவர்களை அனுப்பிவைத்தேன். எனக்கு ஒவ்வாத சில சுருட்டைமுடிகொண்ட தலைகளைக் கூட வருட வேண்டியிருந்தது. நெர்வாவுடைய வைரம் கூட ஒளியிழந்துபோனது.
இப்படியானதொரு சூழ்நிலையில்தான் என்னுடைய அபிமான மேதைகளுக்கிடையில் ஞானம் மிக்கவரான புளோட்டினா(Plotina) உதவிக்கு வந்தார், மகாராணியை எனக்கு இருபது வருடங்களாகத் தெரியும். இருவருடைய பின்புலமும் ஒன்று, எஙகளிடையே வயது வித்தியாசமும் அதிகமில்லை. என்னைபோலவே கட்டுப்பாடுகள், நிச்சயமற்ற எதிர்காலம் இரண்டிலும் வேறுபாடற்றதொரு அமைதியான உயிரியாக, அவர் வாழ்வதை நான் பார்த்திருக்கிறேன். இக்கட்டான தருணங்களில் எனக்கு ஆதரவாக அப்பெண்மணி இருந்திருக்கிறார் ஆனாலதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதில்லை. குறிப்பாக அந்தியோக்கியாவில் நான் சந்தித்த மோசமான நாட்களில் அவருடைய உதவி எனக்கு இன்றியமையாததாக மாறியது, விளைவாக பின்னர்வந்த நாட்களிலும் அவரிடம் எனக்கிருந்த மதிப்பு நிரந்தரம் பெற்றது. அதனை அவர் இறக்கும்வரை கட்டிக்காத்தேன். ஒரு பெண் எந்த அளவிற்கு எளிமையாக இருக்கவியலுமோ, அந்த அளவிற்கு உடுத்தும் வெள்ளாடைகளில், காட்டும் அமைதியில், பதில்களுக்கு மட்டுமே உபயோகித்த வார்த்தை சிக்கனத்தில் இப்பெண்வடிவு கடைபிடித்த நடமுறைகளுக்கு நானும் பழகிக்கொண்டேன். பழமைப் பெருமையில் உரோமாபுரிக்கு எவ்விதத்திலும் குறையாத அரண்மனைக்குப் பங்கம் நேராத வகையில், அருடைய தோற்றமிருந்தது: நினைத்ததை சாதித்த இப்பெண்மணி, செலூக்கிய(Séleucides) வம்சத்தின் மேன்மைக்கு உரியவராகவே இருந்தார். கிட்டத்தட்ட அனைத்திலும் எங்களுக்குள் இணக்கம் இருந்தது. எங்கள் ஜீவனை அலங்கரிக்கவும் பின்னர் அவற்றைக் களையவும், உரைகற்கள் ஊடாக எங்கள் உணர்வுகளை சோதிக்கவும் அதீதமாக விரும்பினோம். எபிகியூரியன் தத்துவத்த்தின் (philosophie épicurienne)51 மீது பெண்மணிக்கு நாட்டமிருந்தது, இருந்தும் அப்படுக்கை குறுகியது ஆனால் சுத்தமானது, சிற்சில வேளைகளில் எனது சிந்தனையை அதில் கிடத்துவதுண்டு. புதிரான இறை மரபுகள் சில என்னை ஆட்டிப்படைத்தன, ஆனால் அதுகுறித்து பெண்மணி கவலைப்பட்டதில்லை. தவிர மனித உடல்கள்மீது அதீத ருசி எனக்குண்டு, அப்படிபட்ட குணம் அவரிடமில்லை. அப்பெண் தன்னைக் களங்கங்களிடமிருந்து காப்பாற்றிக் கொண்டமைக்கு எளிதாக ஒன்றை வெறுக்க முடிவதும், இயற்கை பண்பை ஒதுக்கி, எடுக்கும் முடிவினால் பெருந்தன்மையுடன் இருப்பதும், எச்சரிக்கையில் விவேகமிருப்பதும் காரணங்கள், அதேவேளை ஒரு நண்பனுக்காக அவனுடைய தவிர்க்க முடியாத தவறுகள் உட்பட அனைத்தையும் ஏற்கும் மனநிலையில் பெண்மணி இருந்தார். நட்பு என்பது ஒரு தெரிவு, தன்னை முழுமையாக அதற்கு ஒப்படைத்து, உயிர்வாழ்க்கையை அதற்காக தியாகம் செய்தார். எனக்கோ தெரிந்ததெல்லாம் காதல்செய்வது மட்டுமே. பிறரைக் காட்டிலும் என்னை நன்றாக அறிந்தவர் அவர் ஒருவர்தான். மற்றவர்களிடமிருந்து கவனமாக மறைத்ததையெல்லாம் அவர் தெரிந்துகொள்ள அனுமதித்தேன்: உதாரணத்திற்கு என்னிடம் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த கோழைத்தனம். அவர் தரப்பில், அவரைப்பற்றிய அனைத்துமே எனக்குத் தெரிந்திருக்கிறது, எனபதை நானும் விரும்பினேன். உடல்களுக்கிடையிலான நெருக்கங்கள், எங்களிடையே ஒருபோதும் இருந்ததில்லை, அதனை இருமனங்களும் ஒன்றோடொன்று நெருக்கமாக கலந்து பழகி ஈடுசெய்தன.
எங்கள் புரிதலுக்கு உண்மைகள் மட்டுமே போதுமென்கிற நிலைமை, எனவே செய்தவற்றிர்க்கு ஒப்புதல், போதுமான விளக்கங்கள் அல்லது முற்றாக மறுத்தல் போன்றவை எங்களுக்கிடையில் அவசியமற்றவையாக மாறின. அதிலும் அப்பெண்மணி என்னைக்காட்டிலும் அனைத்தையும் கூர்ந்து அவதானிப்பவராக இருந்தார். நாகரீகத்தின் தேவைகாரணமாக கனமான பின்னல் சடைகள், நீதியரசர்களுக்குரிய மென்மையான நெற்றி என்றிருந்த ஒரு பெண்மணி. அவருடைய நினைவாற்றல் மிகச் சிறிய பொருட்களைக்கூட, அச்சுஅசலாக தன்னுள் பதிவுசெய்துகொள்ளும். ஒரு முடிவினை எடுக்கிறபோது, என்னைப்போல நீண்ட நேரம் தயங்குவதோ அல்லது அதி விரைவாகவோ செயல்படும் வழக்கமோ ஒருபோதும் அவரிடமில்லை. என்னுடைய எதிரிகளில் அதிகம் ஒளிந்து செயல்படுகிறவர்கள் யார் என்பதை ஒரே பார்வையில் கண்டுபிடித்துவிடுவார், அவ்வாறே என் ஆதரவாளர்களைச் சர்வசாதாரணமாக எடைபோடும் ஆற்றலும் அவரிடமுண்டு. உண்மையில், நாங்கள் இருவரும் கூட்டுக் களவாணிகள், நன்கு பயிற்சி எடுத்துக்கொண்ட செவிகள் மட்டுமே எங்களுக்கிடையில் பரிமாறிகொள்ளப்படும் இரகசிய ஒப்பந்தமொன்றின் குறியீடுகளை அரிதாகப் புரிந்துகொள்ளும். சக்கரவர்த்தியைப்பற்றி குறைகூறல், போன்ற பெறும் தவறையும், அவரை மன்னித்தல் அல்லது புகழ்ந்துரைத்தல் போன்ற சிறுதவறையும் அப்பெண்மணி ஒருபோதும் எனக்கு முன்பாக செய்ததில்லை. எனது தரப்பில், அரசகுடும்பத்தின் மீதான எனது விசுவாசம்குறித்து எவ்விதக் கேள்வியும் எழவில்லை. விடியவிடிய உரையாடுவோம், உரோமில் இருந்து வந்துள்ள அட்டியானுஸ், எங்களுடன் சில சமயங்களில் கலந்துகொள்வார். இரவெல்லாம் பேச்சு நீண்டாலும் மென்மையும் எளிதில் அமைதிகுலையாத குணமும் கொண்ட இப்பெண்மணி சோர்வடைவதில்லை. எனது முன்னாள் ஆசிரியரை என்னுடைய அந்தரங்க ஆலோசகராக நியமிப்பதில் பெண்மணி ஜெயித்திருந்தார், இதனால் என் எதிரியான செல்சஸை ஒழிக்கவும் உதவினார். பிறமனிதர்களிடம் திராயானுக்கிருந்த அவநம்பிக்கை ஒருபுறம், பின்னிருந்து செயல்படுவதற்கு எனது இடத்தை நிரப்ப வேறு தகுந்த மனிதரை கண்டுபிடிக்க முடியாதது மறுபுறம் என்ற சூழமில் அந்த்தியோகியாவிலேயே நான் தங்கவேண்டியதாகிவிட்டது. உத்தியோக பூர்வமாக அறிய வாய்ப்பற்ற தகவல்களுக்கு இவர்களைச் சார்ந்தே இருந்தேன். திடுமென பேரிடரைச் சந்திக்கிறபோது இராணுவத்தின் ஒரு பகுதியினர் விசுவாசத்தை எனக்கு ஆதரவாக திரட்ட அவர்களால் இயலும், அதில் அவர்கள் வெற்றி பெறுவார்கள். மூட்டுவலியினால் அவதிபட்ட வயதான மன்னர், எனது தேவைகளுக்காக அன்றி வேறுகாரணங்களுக்காக என்னை பிரிவதில்லை என்றிருந்தார், அவரையும், ஒரு போர்வீரருக்குரிய உள்ளுரத்தை தனக்குள் தேடிப்பெறும் திறன்கொண்ட இப்பெண்மணியையும் என் எதிரிகள் சமாளிக்க வேண்டியிருந்தது.
திடமான உறுதியும், வியக்கத்தக்க அமைதியும் முகத்தில் தேக்கி குதிரையில் ஆரோகணித்து சக்கரவர்த்தி, காயமுறும் வீரர்களுக்குச் சிகிச்சைஅளிப்பதற்கென சிவிகைகளில் பெண்கள், ஆற்றல்மிக்க லூசியஸ் குயெட்டூஸ், நுமிடியன் (Numidian)சாரணர்களோடு கூடிய பிரித்தோரியன் காவலர் படையினர் என அனைவரும் முன்னோக்கிச் செல்ல கண்டேன். யூப்ரடீஸ் நதிகரையில் குளிர்காலத்தைக் கழித்த இராணுவம் தங்களை வழிநடத்தும் தலைமை வந்துசேர்ந்த மறுகணம் பயணம் துவங்கியது, பார்த்தியர்மீதான படையெடுப்பு குறைகளுக்கு இடமின்றி நல்லவிதமாகவே தொடங்கியிருந்தது. கிடைத்த முதல் செய்தியே அற்புதமானது ; பாபிலோனை வென்று, டைக்ரிஸ் நதியைக் கடந்து, டெசிஃபோன் (Ctésiphon)ஐயும் வீழ்த்தினார்கள். அனைத்தும் எப்போதும் போல, இந்த மனிதரின் வியக்கத்தக்க ஆளுமைக்கான சான்று. அரேபியாவின் இளவரசர் சாரரசீன் அடிபணிந்தார், விளைவாக டைக்ரிஸ் நதிபோக்கு முழுவதும் உரோமானிய நாவாய்களுக்கு என்றாயின. பேரரசர் பாரசீக வளைகுடா முனையிலிருந்து சராக்ஸ்(Charax) துறைமுகத்திற்குச் சென்றார், அதன் அற்புதமான கரைகளை நெருங்கியதாகவும் அறிந்தேன். இருந்தும் இப்படையெடுப்பில் என்னநேருமோ,ஏது நேருமோ என்பதுபற்றிய கவலைகள் என்னிடம் அப்படியே இருந்தன, இருந்தும் நம்முடைய சொந்தக் குற்றங்களை மறைப்பதுபோல அவற்றை நான் வெளிக்காட்டவில்லை. அவசரப்பட்டு எல்லாம் சரியாக நடக்கிறது எனமுடிவுக்கு வருவதுகூட தவறாகிப் போகலாம். போதாதற்கு, என்னையே நான் சந்தேகித்தேன்: அனைவரும் நன்கறிந்த ஒருமனிதரின் மகத்துவத்தை சந்தேகிக்கும் என்னுடைய இக்குணத்தின் அடிப்படையில், நான் குற்றவாளியாக இருக்கக்கண்டேன். சில உயிரினங்கள் தங்கள் விதியின் எல்லைகற்களை இடமாற்றம்செய்து வரலாற்றை மாற்ற வல்லவை என்பதை நான் மறந்துபோனேன். நான் பேரரசரின் மேதைமையை நிந்தித்தேன். பதற்றத்துடன் எனது பணியை செய்துகொண்டிருந்தேன். தற்செயலாக நடக்கக் கூடாதது ஏதேனும் நடந்து, என்பங்கிற்குகென்று எதையும் ஆற்றாமல் விலக்கப்பட்டிருந்தேன் என்ற பழிச்சொல் வருமோ? என அஞ்சினேன், காரணகாரியத்தை ஆய்ந்து முடிவெடுப்பதைவிட சராசரி அணுகுமுறைககள் எப்பொழுதும் சுலபமானவை என்பதால் சர்மேத்தியன் போரிலணிந்த கவச ஆடையைத் திரும்ப அணியவும், எனது சினேகிதியும் மகாரணியுமான புளோட்டினாவின் செல்வாக்கைப் பயன்படுத்தி, இராணுவத்தில் திரும்பச் சேரவும் விரும்பினேன். ஆசிய பாட்டைகளில் உடலில் படியும் புழுதிக்கும், பெர்சியா கவசப் படைகள் தரும் அதிர்ச்சிக்கும் ஆசைபட்டு குறைந்தபட்சம் எங்களுடைய துருப்ப்புகளில் ஒருவனாக இருக்கமுடியவில்லையே என்பதற்காக அவர்களிடத்தில் பொறாமைகொண்டேன். செனட் இந்த முறை பேரரசருக்கு ஒரு வெற்றியைக் அல்ல வரிசையாக பலவெற்றிகளை, அவரது வாழ்நாள்வரை கொண்டாடும் உரிமைக்கு வாக்களித்தது. விழா நடைமுறைகளுக்குரிய உத்தரவை பிறப்பிப்பது, காசியஸ் மலை உச்சிக்குச் சென்று பலியிடுவதென என்தரப்பிலும் கொண்டாட்டங்களுக்கு வேண்டியவற்றை செய்தேன்.
மத்தியகிழக்கு பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பு எல்லா இடங்களிலும் திடீரென ஒரேநேரத்தில் பரவியது. யூதவணிகர்கள் செலூசியா(Séluicie)வில் வரி செலுத்த மறுத்தனர். சைரீன்(Cyrène) மக்களும் கிளர்ச்சியில் இறங்கினர். விளைவாக கிழைக்கூறுகள் கிரேக்க கூறுகளை துவம்சம் செய்தன. எங்கள் படைதுருப்புகள் முகாமிட்டிருந்த பகுதிவரை எகிப்து கோதுமையைக் கொண்டுவர சாலைகள் இருந்தன, அவற்றை ஜெருசலத்தைச் சேர்ந்த ஜெலட்ஸ்(Zélotes) என்ற கும்பல் துண்டித்தனர். சைப்ரஸில் குடியிருந்த கிரேக்க மற்றும் உரோமானிய குடிகள் பாமர யூதர்களின் பிடிக்குள் சிக்கி, கிளாடியேட்டர் சண்டைகளில் ஒருவரையொருவர் வெட்டிமடியவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர். சிரியாவில் ஒழுங்கை நிலைநாட்ட என்னால் முடிந்தது, ஆனால் யூதர் ஜெப ஆலயங்களின் வாசலில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களின் கண்களில் தீப்பிழம்புகளையும், ஒட்டக பராமரிப்பாளர்களின் தடித்த உதடுகளில் ஊமை ஏளனங்களையும் கண்டேன், உண்மையில் அவ்வெறுப்புக்கு நாங்கள் உரியவர்களே அல்ல. யூதர்களும், அரேபியர்களும் ஆரம்பத்திலிருந்தே தங்கள் வர்த்தகத்தை அச்சுறுத்தும் யுத்தமொன்றுக்கு எதிராக பொதுவான காரணத்தை முன்னிட்டு கைகோர்த்திருந்தனர். தமக்கென ஒரு சமய மரபு, தனித்துவமான சடங்குகள், இறைமரபில் இறுக்கமான தன்மை என்பவற்றைக் காரணமாகக்கொண்டு தம்மை ஓர் உலகு விலக்கிவைத்ததை சகித்துக்கொள்ளாத இஸ்ரேல் இந்நிலைமையைச் தமக்குச் சாதமாக பயன்படுத்திகொண்டு, அவ்வுலகின் மீது பாய்ந்தது. அவசர அவசரமாக பாபிலோனுக்குத் திரும்பிய பேரரசர், கிளர்ச்சியடைந்த நகரங்களைத் தண்டிக்க குயெட்டூஸை நியமித்தார்: மத்திய கிழக்கின் பெரிய ஹெலனிக் பெருநகரங்களான சைரீன், எடெசா, செலூசியா ஆகிய நகரங்கள் தீக்கிரையாயின, காரணம் இந்நகரங்களில் சரக்கு வாகனங்களை தாமாகவோ அல்லது வேண்டுமென்றோ நிறுத்தி யூதர்கள் திட்டமிட்டு தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள், அவர்கள் செய்த துரோகங்களுக்கு இந்நகரங்களுக்குத் தண்டனைகள் வழங்கப்பட்டன. பின்னர், புனரமைக்கப்படவிருந்த இந்த நகரங்களுக்குச் சென்றபோது, உடைந்த சிலைகளின் வரிசைகளுக்கு இடையிலும், இடிபாடுகளாக நின்ற தூண்களின் கீழும் நடக்கவேண்டியிருந்தது. இக்கிளர்ச்சிகளுக்கு காரணமாகவிருந்த பேரரசர் ஆஸ்ரோஸ்(Osroës)52, உடனடியாக தாக்குதலில் இறங்கினார்; அப்கார் கிளர்ச்சியில் இறங்கி எரிந்து சாம்பலாகியிருந்த எடெசாவுக்குத் திரும்பினார். திராயான் நம்பிக்கைவைத்திருந்த எங்கள் ஆர்மீனிய கூட்டாளிகள், சத்ரபதிகளுக்கு(Satraps)53 பெரிதும் உதவினார்கள். இப்படொயொருகட்டத்தில் பேரரசர் திடீரென்று ஒரு பெரிய போர்க்களத்தின் மையத்தில் நின்று, அனைத்து பக்கங்களிலும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார்.
பாலைவனம் சூழ்ந்த பகுதியில் கிட்டத்தட்ட வலிமைவாய்ந்த கோட்டையாகவிருந்த ஹத்ராவின்(Hatra) முற்றுகையை கடுமையான குளிர்காலத்தில் மன்னர் மேற்கொண்டிருந்தார், நமது இராணுவத்திற்கு ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள். அவரது பிடிவாதம் மேலும் மேலும் அதிகரித்து, தனிப்பட்டதொரு துணிச்சல் வடிவத்தை அவருக்குக் கொடுத்திருந்தது. ஆரோக்கியமற்றிருந்த நிலையிலும், தமது காரியத்தில் உறுதியாக இருந்தார். பக்கவாதத்தின் அறிகுறிகள் இருந்தபோதிலும், திராயான் தனது வாரிசென்று ஒரு பெயரைக் குறிப்பிடாமல் பிடிவாதமாக இருந்தாரென விடாப்பிடியாக இருந்ததை புளோட்டினா மூலமாக எனக்குத் தெரியவந்தது. அலெக்சாண்டரைப் பின்பற்றும் மனிதர், காய்ச்சல் அல்லது சுகவீனம் காரணமாக ஆசியாவின் பிரச்சனைகளுள்ள ஒரு மூலையில் திடீரென மன்னர் இறக்க நேரிடின் அந்நியருடனான யுத்தம் சகோதரயுத்தமென்ற சிக்கலில் விடும். எனது கட்சிக்காரர்களுக்கும் செல்சஸ் அல்லது பல்ல்மாவுக்கும் இடையே வாழ்வா சாவா என்கிற போராட்டம் வெடிக்கும், இந்நிலையில் திடீரென்று, எவ்வித தகவலுமில்லை. சக்கரவர்த்திக்கும் எனக்கும் இடையிலான தகவலிழை எனது மிகவும் மோசமான எதிரியியுடைய நுமிடியன் குழுவினரால் மட்டுமே பராமரிக்கப் பட்டது. இந்த நேரத்தில்தான் முதன்முறையாக என் மருத்துவரிடம் என் இதயம் இருக்குமிடத்தில் மார்பின் மீது சிவப்புமையால், குறிக்கச் சொன்னேன். கூடாதது ஏதேனும் நடந்தால், லூசியஸ் குயூட்டஸின் கைகளில் உயிருடன் சிக்க விருப்பமில்லை. எனது வழமையான கடமைகளோடு தீவுகளிலும், எல்லையோர மாகாணங்களிலும் அமைதியை நிலைநாட்டவேண்டியக் கடினமான பணி புதிதாக சேர்ந்தது, ஆனால் தூக்கமில்லாத நெடிய இரவுகளோடு ஒப்பிடும்போது பகற்பொழுதுகளின் சோர்வுதரும் பணிகள் சாதாரணம். பேரரசின் அனைத்துப் பிரச்சனைகளும் என்னை ஒரேயடியாக பாரமாக அழுத்தியதுபோக, என்னுடைய சொந்தபிரச்சின கூடுதல் சுமையாக ஆனது. நான் அதிகார பலத்தை விரும்பினேன், எனது தீர்வுகளை முயற்சிக்கவும், அமைதியை மீட்கவும் விரும்பினேன்.நான் இறப்பதற்கு முன் நான் நானாக இருக்க வேண்டும், தற்போதைய விருப்பம் அதுமட்டுமே.
தொடரும்…
———————————————————–
51. எபிகியூரியன் தத்துவம் (Philosophie Epicurien) : தத்துவவாதி எபிகூரஸ் என்பவரின் புலன்கள் சார்ந்த கோட்பாடு, காலம் கி.மு 307. மனமகிழ்ச்சியை, சந்தோஷசத்தை இயற்கையான, தவிர்க்கவியலாத வேட்கைகளால் பூர்த்திசெய்தல் கோட்பாட்டின் அடிப்படை.
52. ஆஸ்ரோஸ் (Oseroës, Khosrô) கி.பி 109-129, பார்த்திய மன்னன்
53. சத்ரபதி (Satrap) கி.மு 5ஆம் நூற்றாண்டில் மீடியா(Medias) பேரரசு (பாரசீகம் அல்லது இன்றைய ஈரானின் வடமேற்குப் பகுதி) கவர்னருக்கு சத்ரபதிகள் என்று பெயர்.