அதிட்டம்

நகரப் பேருந்தில் ஏறியதும், யன்னலோர இருக்கை கிடைத்தால் நமக்கது அதிருஷ்டம். ரேஷன் கடைக்கு சாமான் வாங்கப் பையைத் தூக்கிப் போய், அங்கு நீங்கள் வாங்க விரும்பிய பச்சரிசி இருந்தால் உமக்கது அதிருஷ்டம். சீரியல் நேரத்தில் மின்சாரம் போகாதிருந்தால் அதிருஷ்டம், தாமதமாகப் புறப்பட்டுப் பேருந்து நிறுத்தம் சேர்ந்து, உடனே பேருந்து கிடைப்பது அதிருஷ்டம். பன்னப் பறட்டை சினிமாவுக்கு சீட்டுக் கிடைத்தால் அதிருஷ்டம். இப்படி எழுதிச் செல்லலாம் சில பக்கங்கள்.

அதிருஷ்டம் என்பது எத்தனை அற்ப காரியங்கள் பாருங்கள். AK 47 வைத்து மாங்காய் பறிப்பது போன்றதா, எலி பாச்சை அடிப்பது போன்றதா அதிருஷ்டம்? அதிருஷ்டம் எனும் சொல்லின் மெய்ப்பொருள் இவ்வளவுதானா?

எனதொரு புத்தகம் ‘சிற்றிலக்கியங்கள்’ நீண்டநாள் தேடியும் கண்டடைய இயலாத வருத்தத்தைச் சொன்னார் தேர்ந்ததோர் வாசகர். என்னிடம் இருந்த படியொன்றைத் தேடி எடுத்து, பேக்கிங் செய்து, முகவரி எழுதி, வீட்டில் இருந்து அஞ்சலகத்துக்கு பகல் பதினொன்றரை மணிக்கு ஆயிரத்து அறுநூற்றி முப்பத்தெட்டு காலடிகள் நடந்து நான்காண்டுகள் என்.சி.சி. பயிற்சி என்பதால் எனதொரு காலடி 0.71 மீட்டர் நீளம் – பதிவுத்தபால் பார்சலில் அனுப்ப வரிசையில் போய் நின்றேன். உலகறிந்த தூதஞ்சலில் அனுப்பினால் எண்பது பணம், பதிவுப் புத்தகப் பார்சல் என்றால் ஐம்பத்தாறு ரூபாய். அதுவே காரணம்.

வரிசையில் மூன்றாவது ஆளாக நின்றேன். நின்று நிதானித்து, செர்வர் டவுன் இல்லை என்று ஆசுவாசப் பெருமூச்சு எறிந்து, கீழே பார்த்த போது அகலவாக்கில் நான்காக மடிக்கப்பட்ட அழுக்கான பத்து ரூபாய்த் தாள் ஒன்று கிடந்தது தெரிந்தது. இடக்கண் அறுவை சிகிட்சை தீட்சண்யமும், வலக்கண் மங்கலுமாக இருந்தன. சற்று ஐயத்துடன் கீழே குனிந்து எடுத்தபோது தெளிவானது – பத்து ரூபாய் பணத்தாள்தான் என்று.

குனிந்து எடுத்ததை, வரிசையில் முன் நின்ற இருவரும் திரும்பிப் பார்த்தனர். “கீழ கெடந்தது சார்” என்று எனக்கு முன்னால் நின்றவரிடம் நீட்டினேன். வாங்கிக் கொண்ட அவர் தனது சட்டை, பேன்ட் பைகளில் எல்லாம் தடவிப்பார்த்துத் தனதில்லை எனத் தலையசைத்தார். அவருக்கு முன் நின்றவரும் தனதில்லை என்றார். கவுண்டரில் இருந்த பெண்மணி புன்னகைத்தவாறு, “எம்பணம் எப்படி வெளியே வந்து விழும்?” என்றார்.

நான் அடிக்கடி பதிவுத் தபாலில் நூல்கள் அனுப்பப் போவதால், அனுப்புநர் முகவரி வாசித்து – புத்தகங்கள் வாசித்து அல்ல எனையொரு எழுத்தாளன் என்று அவர் அனுமானித்திருக்கக் கூடும். என்னிடமே வந்து சேர்ந்தது அந்த பத்து ரூபாய்த் தாள். வாங்கிக் கொண்டேன். சாயாக்கடை வாசலில் இரந்து நிற்கும் எவருக்கும் தரலாம் அதை. அல்லது நடக்கும் பாதையில் இருக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயன் கோயில் உண்டியலில் போடலாம். ‘ஆனது ஆச்சு’, பத்துப்பணம் லாபம் எனக்கருதி பாக்கெட்டிலும் வைக்கலாம்.

இதையும் அதிருஷ்டம் எனச் சொல்வீராயின், எனது அதிருஷ்டத்தின் மதிப்புப் பத்துப் பணமா? வாழ்நாளில் ஏழுமுறை சபரிமலை ஏறி இருக்கிறேன், கார்த்திகை மார்கழி மாதங்களில் நாற்பத்தோரு நாட்கள் விரதம் இருந்து அல்ல. நினைத்த நாளில் திருவெண்பரிசாரம் திருவாழ் மார்பன் சந்நிதியில் மாலை போட்டுக் கொண்டு. ஒரு முறைகூட பெருவழிப் பாதையில் போனதில்லை. நாகர்கோயில் திருவனந்தபுரம் – கொட்டாரக்கரை – எரிமேலி. பம்பையில் நீராடிவிட்டு மலையேற வேண்டியதுதான்.

அலுவல் நிமித்தம் பயணம் போனபோது, எந்த விரதமும் மேற்கொள்ளாமல் தரிசித்த ஐயப்பன் கோயில்கள் செங்கோட்டை அருகேயுள்ள அச்சங்கோயில், ஆரியங்காவு. குழத்துப்புழை போனதுண்டு. சபரிமலை ஏறி இறங்கியதும், ஊர் திரும்பும் வழியில், ஏழு முறையும் பந்தளம்.

‘பாத பலம் தா! தேக பலம் தா!’ என்பது அன்றைய சரண கோஷம். துளசிமணிமாலை அணியாமலும், நோன்பு பூணாமலும், இருமுடி தரிக்காமலும், பதினெட்டாம் படி ஏறாமலும் சந்நிதானத்தில் கை கூப்பி நில்லாமலும் இன்றைய என் சரண கோஷம், “ஆன்ம பலம் தா! மூல பலம் தா!’ என்பது. மூலம் என்ற சொல்லுக்கு PILES எனப் பொருள் கொண்டு உள் மூலம், வெளி மூலம், மூலப்பவுந்தரம் என்றெல்லாம் பொருள் கொண்டால், நாமார்க்கும் பொறுப்பல்லோம், நமனை அஞ்சோம்!

சரி! பேச வந்த விடயம் – ஏழாவது முறை பம்பையில் நீராடி, கன்னி மூலை கணபதியைத் தொழுது, மலை ஏறத் தொடங்கி, கடின ஏற்றமான நீலிமலை ஏறினோம். அரையில் முழங்கால் வரை இறங்கிய நீலச் சாய வேட்டி. தோளில் நீலச் சாயத் துண்டு. கழுத்தில் துளசிமணி மாலை, தலையில் இருமுடிக் கட்டு, தோளில் தொங்கிய நீல நிற துணிப்பை, நீலிமலை ஏற்றத்தில் கல்லால் ஆன படிகளின் அடுக்கில், எனது காலடியில் தங்கச் சங்கிலியொன்று கண்பட்டது.

சபரிமலை சாஸ்தா நமக்கு அருளிய அதிருஷ்டம் எனக் கருதி, ஒரு கையால் தலைமேல் இருந்த இருமுடிக் கட்டினைப் பற்றியவாறே, குனிந்து அந்தப் பொற்சரத்தை எடுக்கப் போனேன்.

“என்ன செய்யப் போற?” என்றான் பெங்களூர் தம்பி. எங்கள் குழுவில் எப்போதும் பயணத்திட்டம் ஒழுங்கமைத்து எங்களை வழிநடத்தும் வக்கீல் தம்பி, நாகர்கோயில் அத்தான், தாழக்குடி அத்தான் எல்லோரும் மலையேறுவதை நிறுத்தி நின்றனர்.

நான் சொன்னேன் – “இல்ல… கீழ ஒரு செயின் அந்து விழுந்து கெடக்கு!”

“கெடந்தா?”

“எடுத்து கோயில் உண்டியல்லே போட்டிரலாம்ணுதான்..” என்று சமாளித்தேன்.

“அதுக்குள்ளே மனசு மாறீட்டுண்ணா?”

“ஐயப்பன் கோயிலுக்கு வந்த அதிருஷ்டம்ணு நெனச்சுக்கிடுவேன்”

“ஐயப்பன் தரக்கூடிய அதிருஷ்டம் இந்த முக்காப்பவுன் செயின் தானா?” என்றான் தம்பி விடாமல், தயங்கி நின்ற என்னிடம், “பேசாம நட!” என்றான். அவன் சொற்களின் உண்மை உறைத்தது.

அதிர்ஷ்ட்டம் என்ற சொல் சமற்கிருதம். மூன்று ஒற்று சேர்ந்து வரும் சொல். அதிருஷ்டம் என்றாலும் அதிர்ஷ்ட்டமே! வடசொல்லைத் தற்பவம் என்ற தமிழிலக்கணப்படி தமிழ்ப்படுத்தினால் அதிட்டம் என்று எழுத வேண்டும். ஆயிரக்கணக்கான வட சொற்களைத் தமிழ்ப் படுத்திய கம்பன், நானறிய அதிட்டம் என்ற சொல்லை ஆண்டானில்லை.

அதிருஷ்ட கர்மா என்றொரு சொல்லுண்டு வடமொழியில். நன்மை தீமைகளைத் துய்க்கத்தரும் கருமம் என்று பொருள்.

ஹத் (Hadd) எனும் உருதுச் சொல்லின் பிறப்பே அதிர் என்ற மலையாளச் சொல் என்றும், பொருள் எல்லை மற்றும் மதிப்பு என்றும் வரையறுக்கிறது அயற்சொல் அகராதி.

“யாதினும் ஒரு அதிரு வேண்டே?” என்பது மலையாளத்தில் நாம் செவிப்படும் உரையாடல். யாவற்றுக்கும் ஒரு எல்லை வேண்டாமா என்று பொருள். மேலும் ஹத் என்றால் அதிர். இன்னொரு பொருள் மதிப்பு.

அதிர்ஷ்டக்காரன் என்பது நாம் அடிக்கடி கேட்கும் பிரயோகம். நாட்டு வழக்கில், “அவுனுக்கு மத்ததிலே மறு கெடக்கு!” என்றும், “அவுனுக்கு சக்கரையிலே மச்சம் உண்டு” என்றும் மொழிவார். பேருந்து நிலையத்தில் சில்லறைக் குற்றங்கள் பயின்று திரிந்தவன் நாடாளுமன்றத்துக்கும் பயணிப்பதைப் பார்த்து மக்கள் அங்கீகரிக்கும் வார்த்தை, அதிருஷ்டம்.

வார்த்தை எனும் சொல்லில் மயங்க வேண்டாம். வார்த்தா எனும் வடசொல்லின் தமிழாக்கமே வார்த்தை. சொல் என்பது சுத்தத் தமிழ். வார்த்தைப்பாடு எனும் சொல் விவிலியம் பயன்படுத்தும் சொல். ‘சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம்’ என்பான் கம்பன். ‘சொல்லினால் சுடுவேன்’ என்பாள் கம்பனின் சீதை.

கம்ப இராமாயணத்தில், யுத்த காண்டத்தில், நாகபாசப் படலத்தில், வார்த்தை எனும் சொல் கண்டேன். கம்ப இராமாயணம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பில் 8277-வது பாடல். NCBH அதிர்ஷ்டக்காரன் எனும் சொல்லுக்கு சுத்த தமிழ்ச் சொல் ஆகூழன். ஆனால் ஊழ் எனில் விதி. நல்லூழ் – தீயூழ், ஆகூழ் – போகூழ் என்மனார் புலவர். அதிருஷ்டசாலி எனும் சொல்லுக்கு ஆகூழன், நல் வாய்ப்பன், நற்பேற்றன் எனும் பொருள் தருகிறார் பேராசிரியர் அருளி.

அதிர்ஷ்டம் எனும் சொல்லுக்கு அகராதிகள் தரும் பொருள்கள் 1. காண இயலாதது 2. நல் வாய்ப்பு 3. நல்லூழ் 4 ஆகூழ் என்பன. அதிருஷ்ட போக்கியம் என்றால் மறுமை, வினை, துய்த்தல் என்பன பொருளாம். அதிருஷ்ட யத்தினம் என்றால் பயன் – முயற்சி, பயன் தரு முயற்சி. யத்தினம் எனும் சொல்லையே நாமின்று யத்தனம் என்கிறோம். பிரயத்தனம் எனும் சொல்லும் அறிவோம். அதிருஷ்டானுகூலம் என்றால் ஆகூழ், நற்காலப் பயன், அதிருஷ்டத்தால் கிடைக்கும் அனுகூலம் என்பன பொருள்.

சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி, மேலும் சில தெளிவுகளைத் தருகிறது. அதிட்டம் எனும் சொல் வடமொழி மூலம் கொண்டது என்கிறது. தரும் பொருள்கள் –

1. பார்க்கப்படாதது. That which is unseen.

2. பாக்கிய வாய்ப்பு Luck, Fortune

3. இன்ப துன்பங்களுக்குக் காரணமானது.

Merit or sin accruing from a virtuous or vicious action as the ultimate cause of pleasure or pain

மேலும் பேரகராதி கூறுவது: அதிருஷ்டம் என்றால் –

1. காணப்படாதது. That which is not seen.

2. ஊழ், Destiny, Luck.

3. நல்லூழ். Good Luck.

திருஷ்டி எனும் சொல்லுக்குக் காண்பது, பார்ப்பது, காட்சி, பார்வை என்பன பொருள். பார்வையில் விடமுள்ள பாம்புக்கு கம்பன் பயன்படுத்தும் சொற்றொடர் ‘திட்டி விட அரவு’ என்பது. திருஷ்டிதான் திட்டி என்றாகும் தமிழில். அதிர்ஷ்டம் என்றாலும் அதிருஷ்டம் என்றாலும் பார்க்கப் படாதது, காணப்படாதது எனப் பொருள் கொள்வதைக் காணும்போது திருஷ்டியின் எதிர்மறை என்பது நினைவுக்கு வருகிறது. திட்டி அதிட்டம் என்று.

அதிருஷ்டக் கட்டை எனும் சொல்லும் கண்டேன். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொல்தான். பொருள் – 1. துரதிட்டம். Lack of good fortune 2. அதிட்டவீனன். One who suffers ill fortune.

ஆகவே அதிருஷ்டசாலி என்றால் பாக்கியசாலி, Fortunate person என்பதுதானே! அதிருஷ்டம், துரதிருஷ்டம் எனும் சொற்களுக்கு மாற்றாக, நல்லூழ், தீயூழ் என்றும் ஆகூழ், போகூழ் என்றும் குறிப்போம் எனின் ஊழ் எனும் சொல்லின் பொருள் என்ன? பேரகராதி ஊழ் எனும் சொல்லுக்குப் பதினொன்று பொருள் தரும்.

  1. பழமை. That which is pristine, of long date

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான, திருத்தக்கத் தேவர் இயற்றிய, சீவக சிந்தாமணியில் ஆறாவது இலம்பகமான கேமசரியார் இலம்பகத்துப் பாடல் –

“தாழ்தரு பைம்பொன் மாலைத் தடமலர்த் தாம மாலை

வீழ்தரு மணிசெய் மாலை இவற்றிடை மின்னி நின்று சூழ்வளைத் தோளி செம்பொற்தூணையே சார்ந்து நோக்கும் ஊழ்படு காதலானை ஒரு பிடி நுசுப்பினாளே!”

என்று பேசும்.

கைப்பிடியில் அடங்கும் இடையினைக் கொண்ட, ஆபரணங்கள் அணிந்த தோள்களை உடைய கேமசரி, பொருந்திய பைம்பொன் மாலையும் வரிசையாக மலர்கள் தொடுக்கப் பெற்ற பூமாலையும் அரிய மணிகளால் கோர்த்த மாலையும் சூடி, மின்னலைப் போல் செம்பொன் தூண் சார்ந்து நின்று, தொன்று தொட்டு வருகின்ற தன்காதலனை நோக்கும் – இது பாடலின் பொருள்.

ஈண்டு ஊழ் எனும் சொல்லின் பொருள் பழமை.

2. பழவினை. Karma

ஊழ் எனும் சொல் முன்வினை, பழவினை எனும் பொருளில் நான்கு திருக்குறளில் ஆளப்பெற்றுள்ளது. ஊழ் அதிகாரத்தில் –

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துறும்”

என்கிறார்.

ஆள்வினை உடைமை அதிகாரத்தில் –

“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்”

என்கிறார்.

3. பழவினைப் பயன். Fruit of karma, fruit of deeds commited in a former birth or births.

4. முறைமை. Rule

சோழன் நலங்கிள்ளியை, உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரி, “பண்புடை ஊழிற்றாக, நின் செய்கை” என்கிறது. ஈண்டு ஊழ் எனில் முறைமை.

5. குணம். Disposition, Temper. (திவாகர நிகண்டு)

6. தடவை. Time, Turn, Occasion

7. முதிர்வு, Maturity

8. முடிவு, End, Completion

9. பகை. Hatred, Enimity, Malice (பிங்கல நிகண்டு)

10. மலர்ச்சி. Blossoming

11. சூரியன், Sun

மேற்சொன்னவை ஊழுக்கான பதினோரு பொருள்கள். ஆக ஊழ் எனில் விதி எனும் ஒன்று மாத்திரமே அல்ல. ஊழ் சார்ந்து வேறு சில சொற்களும் உண்டு.

ஊழ்த்துணை: மனைவி. Wife. As ones distined help male

ஊழ்பாடு: முடிவு படுகை. Coming to an end

ஊழ்முறை: வினைப்பயன் முறை Order of experience resulting from the karma in previous birth

ஊழ்மை : முறைமை. Established rule. Regulation.

ஊழ்விதி: பழவினைப் பயன். Inevitable result of deeds done in former births.

ஊழ்வினை : பழவினை

ஊழ்வினைப் பயன்: கரும பயன்.

எல்லாம் சரிதான், ஆனால் அதிருஷ்டம் எனும் சொல்லுக்கு ஊழ் என்பது பொருத்தமான மாற்றுத் தமிழ்ச்சொல்தானா என்று எவரிடம் கேட்டு யாம் உறுதி செய்து கொள்வது?

எனில் அதிர்ஷ்ட்டம், அதிர்ஷ்டம், அதிருஷ்டம், அதிட்டம் எனும் சொற்களின் துல்லியமான பொருள் உணர்த்தும் தமிழ்ச்சொல் யாது? பேறு எனலாமா! நற்பேறு, தீப்பேறு என்பன அதிருஷ்டம், துரதிருஷ்டம் என்பனவற்றுக்குப் பொருத்தமான மாற்றுச் சொற்களா? எனில் நற்பேறு, தீப்பேறு எனும் இரண்டு சொற்களுமே பேரகராதிப் பதிவில் இல்லை.

குதர்க்கமாக, குசும்பாக, விண்னாணமாக, வித்தாரமாக அல்லது விபரீதமாக எனக்குத் தோன்றுவது ஒன்று. பேறு என்றாலே அது பெரிய காரியம் அல்லவா? பெறற்கரியதுதானே? தீய, கெட்ட, அவம் ஆன சமாச்சாரம் எவ்விதம் பேறு ஆக இயலும்? பேறு என்றாலே அது அரியது, சிறந்தது, அருளப்படுவது எனும்போது அதில் நற்பேறு என்ன, தீப்பேறு என்ன? பேரகராதி தொகுத்த தமிழறிஞர் பெருமக்கள் இதனை ஆலோசிக்காமலா இருந்திருப்பார்கள்? அவர்கள் என்ன அரசுகள் வழங்கும் விருதுகள் கைப்பற்றியவரா?

வினை என்பது வேறு விடயம். நல்வினையும் தீவினையும் உண்டாங்கே! பேறு அது போலவா?

பேறு எனும் சொல்லுக்குப் பேரகராதி தரும் பொருள் பதினைந்து.

1. பெறுகை, Receiving, Obtaining திருக்குறள் மூன்று இடங்களில் பேறு எனும் சொல் பயன்படுத்துகிறது.

அ.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம் நன்மக்கட் பேறு

  • வாழ்க்கைத் துணைநலம் அதிகாரம்.

ஆ. “பெறும் அவற்றுள்யாம் அறிவதில்லை அறிவறிந்த மக்கட் பேறு அல்லபிற” 

  • புதல்வரைப் பெறுதல் அதிகாரம்

இ. “விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்

  • அழுக்காறாமை அதிகாரம்.

மூன்றாவது குறளுக்குப் பொருள் உரைத்தல் நலம். யாரிடமும் பொறாமை கொள்ளாதிருப்பது உயர் பண்பு. அப்பண்புக்குச் சமமான சீரிய பேறு வேறேதும் இல்லை – இது உரை.

2. அடையத்தக்கது. Anything worth obtaining.

நாம் மேற்சொன்ன மூன்றாவது திருக்குறள் இப்பொருளுக்கு மேற்கோள்.

3. இலாபம். Profit. Gain. (பிங்கல நிகண்டு)

4. வரம். Boon. Blessing.

5. நன்கொடை. Gift, Prize, Reward 

6. பயன். Advantage, Benefit, Result

கம்ப இராமாயணத்தில், யுத்த காண்டத்தில், இரணிய வதைப் படலத்தில், பிரகலாதன் – நரசிங்கப் பெருமாளின் அருள் வேண்டி நிற்கும் பாடல்

ஒன்றுண்டு.

முன்பு பெறப் பெற்ற பேறோ முடிவு இல்லை; பின்பு பெறும் பேறும் உண்டோ? பெறுகுவனேல், என்பு பெறாத இழி பிறவி எய்தினும் நின் அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் என்றான்

என்பது முழுப்பாடல். பொருள் எழுதினால் “எம்பெருமானே! உன் அடியவனாகிய யான் முன்பு பெற்ற பேறுகளுக்கு எல்லையே இல்லை. இனிமேலும் நான் பெறவேண்டிய பேறு ஏதும் மீதம் உண்டா? அப்படி வேறேதும் வேண்டிப் பெறுவதனால், எலும்பு இல்லாத இழிந்த புழுவாக நான் பிறக்க நேர்ந்தாலும், உனது அன்பினைப் பெற்று வாழும் பெரும் பேற்றினை, உனது தொண்டனாகிய எனக்கு அருள்வாயாக என்றான். ஒரே பாடலில் மூன்று பேறுகள் பேசுகிறார் கம்பர். 

7. தகுதி. Worth, Merit, Desert.

8. மகப் பெறுகை, மகப்பேறு, Child Birth.

பேறுகாலம், பிள்ளைப் பேறு என்போம்.

9. முகத்தல் அளவையில் ஒன்றைக் குறிக்கும் சொல். Term meaning one in measuring out grains. வயலறுத்து, சூடடித்து, மரக்காலால் பொலியளக்கும்போது, நாஞ்சில் நாட்டில் ஒன்று என்று தொடங்குவதற்குப் பதிலாக ‘லாபம்’ என்று ஆரம்பிப்பார்கள். சில பகுதிகளில் ‘பேறு’ எனத் தொடங்குவார் போலும்!

10. பதினாறு பேறுகள் ‘பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க’ என்பது வாழ்த்து. அந்தப் பதினாறு செல்வங்கள் எவை? எண்ணிக் கொள்ளலாம் – புகழ், கல்வி, வலி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு அழகு, பெருமை, இளமை, துணிவு,

நோயின்மை, வாழ்நாள். வலி என்றால் Pain அல்ல, வலிமை – Strength.

Acquisition. Of which there are sixteen.

கும்பமுனி பொருமுவது எனக்குக் கேட்கிறது – “எதுக்கு இந்தப் பதினாறு பேறு? எம்.எல்.ஏ. இல்லாட்டா எம்.பி. ஆனாப் போராதா?” 

11. செல்வம். Wealth. (யாழ்ப்பாண அகராதி)

12. தருமம், அருத்தம், காமம், ஆத்மானுபவம், இறையனுபவம் ஆன்மாவினால் அடையப் பெறும் ஐவகைப் பேறு. அருத்தம் எனும் சொல்லுக்கு சொற்பொருள், கருத்து. செல்வப் பொருள், பொன், பயன், பாதி என ஆறு பொருள் தருகிறது பேரகராதி. 

13. நல்லூழ், Good Fortune (யாழ்ப்பாண அகராதி) என

14. நிலத்தின் அனுபோக வகை. A kind of land tenure.

குத்தகை, பாட்டம், வாரம், போக்கியம் போன்று பேறு. 

15. இரை. Prey, Food.

ஆனால் நாம் ஊழ் எனில் விதி எனப் பொருள் கொண்டு பழகி விட்டோம். எனவே அதிருஷ்டம் எனும் வட சொல்லுக்கு, ஊழ் என்ற தமிழ்ச்சொல்லை விட பேறு எனும்  சொல்லே பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. நானோர் மொழி அறிஞனோ, சொற்பிறப்பியல் ஆய்வாளனோ, பேராசிரியனோ, தமிழ்ச் செம்மலோ, உலகத் தமிழ் மாநாடுகளில் கட்டுரை வாசிப்பவனோ இல்லை என்பதை நினைவில் இருத்திக் கொண்டே நானிதைப் பேசுகிறேன்.

அல்லது தொல்காப்பியரின் வழிகாட்டுதலின்படி அதிருஷ்டம் என்பதை அதிட்டம் என்றே புழங்கிப் போகலாம். முகூர்த்தம் எனும் வடசொல்லை கம்ப இராமாயணத்தின் யுத்த காண்டத்தில், நாக பாசப் படலத்தில், கம்பன் ‘முழுத்தம்’ என்று பயன்படுத்தும்போது, அதிருஷ்டத்தை அதிட்டம் எனப் பகன்றால் ஏழு கீழுலகும் ஏழு மேலுலகும் தலைகீழாய்ப் பெயர்ந்து விடுமா என்பதே என் வினா முழுத்தம் எனும் சொல்லே வடமொழி உருவாக்கப்பட்ட போது முகூர்த்தம் ஆயிற்று என்பாரும் உளர்.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் பேறு எனும் சொல் புறநானூற்றில் மட்டுமே ஆளப்பெற்றுள்ளது. மோசிகீரனார் கொண் கானங்கிழாளைப் பாடிய பாடாண் திணை. பரிசில்துறைப் பாடலில், “பெற்றது ஊதியம்; பேறு யாது? என்னேன்’ என்கிறார்.

உற்றனென் ஆதலின் உள்ளி வந்தனனே!

ஈஎன இரத்தலோ அரிதே; நீ அது 

நல்கினும், நல்காய் ஆயினும்”

என்று தொடர்ந்து பேசுகிறார். பெற்ற பொருள் சிறிது எனினும் இகழ மாட்டேன். பெற்றதைப் பேறாகக் கருதுவேன் என்கிறார்.

நாலடியாரில் பேறு என்ற சொல் காணக் கிடைக்கவில்லை. மாணிக்க வாசகர், திருவாசகத்தின் 656 பாடல்களில், ஒரேயொரு பாடலில் பேறு எனும் சொல்லைப் பயன்படுத்துகிறார். 

செய்வது அறியாச் சிறு நாயேன் செம்பொன் பாத மலர் காணாப் 

பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன் பொய்யிலா

மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டும் கேட்டிருந்தும்

பொய்யனேன் நான் உண்டு உடுத்து இங்கு இருப்பதானேன் போரேறே” 

என்று பாடுகிறார்.

மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர் உரை சொல்கிறார் – “போர் புரியும் சிங்க ஏறு போன்றவனே! செய்யத் தக்கது ஒன்றும் அறியாத சிறுமைத் தன்மை உடைய நாய் போல்பவனாகிய யான் திருவடித் தாமரையைக் காணப் பெறாத பொய்மையாளர்கள் பெறுகின்ற அப்பேறுகள் அத்தனையும் பெறுதற்குரியவன்; பொய்மை கலவாத மெய்யடியார்கள் உன்னுடைய மணம் பொருந்திய திருவடித் தாமரைகளை அடைய நான் நேரில் கண்டிருந்தும், பிறர் சொல்லக் கேட்டிருந்தும், பொய்யேனாகிய யான் உண்டும் உடுத்தும் இவ்வுலகில் வாழ்ந்திருக்கலானேன்; என் அறியாமை என்னே?” என்று.

மேலும் குறிப்பாகச் சொல்கிறார் – “பொய்யர் பெறுவன துன்பமாகிய ஊறே அன்றி, இன்பமாகிய பேறு ஆகா எனினும் அதனைப் பேறு என்றது நகைச்சுவை தோன்றக் கூறிய குறிப்பு மொழி” – என்று.

நாம் முன்பு சொன்ன நற்பேறு, தீப்பேறு குறித்த கருத்தானது உரையாசிரியர் குறிப்பிடுவதுதான். எனவே மனங்கொள்ள வேண்டியது அதிட்டமோ, ஆகூழோ, நல்லூழோ, நற்பேறோ எதுவானாலும் அது பெறற்கரிய பேறு.

என்னிடம், “A classified collection of Tamil Proverbs” என்ற நூலின் ஒளி நகல் உண்டு. Rev. Herman Jensen, Danish Missionery, Madras தொகுத்தது. 1897-ல் இலண்டனில் அச்சிடப்பெற்றது. தமிழ்ப் பழமொழிகளும் அவற்றுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பும். அதில் Fortune குறித்து முப்பது சொலவங்கள் உண்டு. சில இங்கு காணத்தருவேன்.

1. அதிஷ்டமும் ஐசுவரியமும் ஒருவர் பங்கல்ல.

2. அதிஷ்டம் ஆறாய் பெருகுகிறது.

3. அதிஷ்டம் இல்லாதவனுக்குக் கலப்பால் வந்தாலும் அதையும் குடிக்கும். 

4. அதிஷ்டம் இருந்தால் அரசு பண்ணலாம்.

5. அதிஷ்டவான் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும்.

(இங்கு மண் என்பதை ஆற்றுமணல் என அர்த்தப்படுத்தலாகாது)

6. அவுசாரி ஆடினாலும் அதிஷ்டம் வேண்டும். திருடப் போனாலும் திசை வேண்டும்.

7. அழகு இருந்து அழும், அதிஷ்டம் இருந்து உண்ணும். 

8. அழகு சோறு போடுமா, அதிஷ்டம் சோறு போடுமா?

9. வந்ததும் அப்படியே, சிவன் தந்ததும் அப்படியே!

10. எனக்கு முன் என் அதிஷ்டம் போய் நிற்கிறது.

இப்படியே நீண்டு போகும் பட்டியல்.

எதை நொந்து கொள்வது ஏமான்மாரே! ஊழ்வினையோ சூழ்வினையோ. குப்பைமேடு உயர்ந்து குணக்குன்று ஆகும். கோபுரம் சரிந்து குப்பைமேடும் ஆகும்.

ஊரில் சொல்வார்கள், ‘விடியா மூஞ்சி விறகுக்குப் போனால், விறகு கெடச்சது, கட்டக் கொடி கிடைக்கலே!’ என்று. மேலும் சொல்வார்கள், ‘ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிருஷ்டம் இருக்கு மாடு மேய்க்க’ என்று.

ஈண்டு நாம் அரசியல் முதலாளிகள் பற்றிப் பேசப் புகுந்தோம் இல்லை. உயிரச்சமே காரணம். என்றாலும் ஒரு தெளிவு உண்டு.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துறும்

என்று ஆயாசப் படுத்துவான் திருவள்ளுவன். அவனே,

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்

என்று ஊக்கமும் தருகிறான்.

ஆம்! நம் கடன் தாழாமல் போராடி நிற்பதே!

8 Replies to “அதிட்டம்”

  1. இவ்வாறு தெளிவாக, உரிய விளக்கங்களுடன், எடுத்துக்காட்டுக்களுடன் சிறப்பாக எழுத நாஞ்சில் நாடன் ஐயாவை தவிர யாராலும் இயலாது. வாழ்க எம்மான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.