- 1/64, நாராயண முதலி தெரு
- 1/64, நாராயண முதலி தெரு – 2
- 1/64, நாராயண முதலி தெரு – 3

தாமு, நோட்டுப் புத்தகத்தின் இடது மார்ஜினில் அன்றைய தேதியை 28.03.1971 என்று முழுமையாக எழுதினான். அப்போதைய நாட்டு நடப்பையொட்டி அடுத்த நாள் கட்டுரை சமர்ப்பிக்க வேண்டுமென்று தமிழாசிரியர் பணித்திருந்தார். அவன், வீட்டருகிலுள்ள தங்கசாலை ‘சனாதன தர்ம உயர் பள்ளி’யில் ஐந்தாம் வகுப்பு படிப்பவன்.
கண்டிப்பான தமிழ் வாத்தியாருக்குப் பயந்து கொண்டே, அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தும் சீக்கிரமே எழுந்து வாசல் திண்ணையில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தான். எதைப் பற்றி எழுதுவது என்று குழப்பமாக இருந்தது. பள்ளிக்கூடத்திற்கு எடுத்துச் செல்லும் ஜோல்னாப் பையை நோட்டம் விட்டான். அப்பா பைண்ட் பண்ணிக் கொடுத்த சரித்திர, விஞ்ஞானப் பாடப் புத்தகங்களும், தைத்துக் கொடுத்த ரஃப் நோட்டும், பென்சில், ரப்பர் இவற்றிற்கிடையே பழைய ஸ்லேட்டும், பலப்பமும் இருந்தது.
அந்தச் சமயம் இரண்டு பேர் கையில் கத்தை கத்தையாய் காகிதப் படிவங்களுடன் வாசல் கதவைத் தட்டினர். அவன் திண்ணையிலிருந்து குதித்து, தன்னுடைய அரை டிராயரை இழுத்து விட்டுக் கொண்டே போய்த் தாழ்ப்பாளைத் திறந்தான்.
“நாங்க மெட்ராஸ் கார்ப்பரேஷன்லேருந்து வரோம்.. சென்ஸஸ் எடுக்கணும்.. பெரியவங்க யாராவது இருந்தா கூப்பிடு..” என்றார் வந்தவர்.
தாமு “அப்பா..” என்று அழைத்தவாறே ரேழியைத் தாண்டி உள்ளே போய் முன்கட்டில் அவர்களது படுக்கை அறையை அடைந்தான். “யாரோ ரெண்டு பேரு வந்திருக்கா.. சென்சஸ் எடுக்கணுமாம்..” என்றான் “அப்படின்னா என்னதுப்பா..”
தினமணி சுடர் வாசித்துக் கொண்டிருந்த அனந்தசயனம் வெற்றிலைப் பாக்குக் கலவையைத் துப்பிவிட்டு, “மக்கள் தொகைக் கணக்கெடுப்புடா.. நம்ப நாட்டுல எவ்ளோ ஜனங்க இருக்கா.. அவாளோட ஜாதி, மதம்.. தாய்மொழி.. இப்படி நிறைய விஷயங்களை கேட்டு எழுதிப்பா.. பத்து வருஷத்துக்கு ஒரு வாட்டி இந்த மாதிரி பண்றது வழக்கம்.. கடைசியா, அறுபத்து ஒண்ணுலே நீ பொறந்தப்போ நடந்தது.. “என்றபடி வேட்டியை இறுக்கிக் கொண்டு வாசலுக்கு விரைந்தார்.
தாமு, பின்கட்டு சமையலறையில் குமுட்டி அடுப்பு கரிப்புகையுடன் போராடிக் கொண்டிருந்த அம்மாவிடமும் தகவல் தெரிவிக்கச் சென்றான். அவள் சாதம் கொதித்துக் கொண்டிருந்த வெண்கலப்பானையை துணியால் பிடித்து இறக்கி வைத்து விட்டு வந்தாள்.
“இந்த வீட்டுல அஞ்சு ஒண்டு குடித்தனங்கள் இருக்கு” என்று மாநகராட்சி ஊழியர்களிடம் விவரித்த அப்பாவை உரசிக்கொண்டு நின்றபடியே வேடிக்கை பார்த்தான் தாமு.
“முதல்ல உங்க குடும்பத்தைப் பத்தி சொல்லுங்க..” என்றவாறு அவர் கேம்லின் பேனாவிலிருந்து இங்க்கை உதறிவிட்டு எழுதத் தயாரானார்.
“எம்பேரு அனந்தசயனம்.. நாப்பத்தொம்போது வயசாறது.. பிரைவேட் கம்பெனியில வேலை.. நூத்தைம்பது ரூபா சம்பளம்.. “என்றார் “இவ என் ஆம்படையா சுந்தரவல்லி.. இது ரெண்டாவது பிள்ளை தாமோதரன்…”
“அக்கா, அண்ணாவைப் பத்தி சொல்ல வேண்டாமாப்பா..” என்று தாமு கிசுகிசுத்தான்.
“எம்பொண்ணு வஸுதா கல்யாணமாயி போயிட்டா.. பெரிய பையன் ஆராவமுது வெளியூர்ல இருக்கான்..”
“இங்க இருக்கறவங்களை மட்டும் சொன்னா போதும்.. மத்த குடித்தனக்காரங்களை கூப்பிடுங்க..” என்றார் கணக்கெடுக்க வந்தவர். அந்த வீட்டிலிருந்த எல்லோரும் வாசலில் கூடிவிட்டனர்.
சற்றே ஆகிருதியாக திருநீறு மணத்துடன் இருந்தவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் “நான் ராமச்சந்திரன்.. எஸ்எஸ்எல்ஸி படிச்சிருக்கேன்.. என் ஒய்ஃப் தில்லை சிவகாமசுந்தரி.. ஒரே வாரிசு மேனகா..”
தொடர்ந்து, மாத்வ மாமா தான் ஓண்டிக்கட்டை என்றும் கல்யாண சமையல் வேலைகளுக்குச் சென்று வருவதாகவும் குறைந்த வரும்படியே கிடைப்பதாகவும் தெரிவித்தார்.
அவரையடுத்து தெலுங்கு பிராமணப் பெண்மணி “எங்க வீட்டுக்காரரு வளையல் வியாபாரம் பண்றார்.. அவருக்கு இப்ப உடம்பு சரியில்ல.. படுத்த படுக்கையா இருக்காரு..” என்றாள்.
இறுதியாக சாம்பவி மாமி வந்தாள். பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட நடுத்தர வயது விதவை. அவளது புத்திரன் ஆறரை அடி உயரத்தில் தலையைக் குனிந்தபடியே பின்தொடர்ந்தான். தாமுவுக்கு அவனைக் கண்டாலே கொஞ்சம் உதறல்.
ஒரு வைசிய அறக்கட்டளைக்குச் சொந்தமான அந்தப் புராதன வீடு பல ஆண்டுகளாக சாம்பவியின் பொறுப்பில் இருந்து வருகிறது. ‘அக்ரிமென்ட் ஹோல்டர்’ என்ற பெயரில் அவள் எல்லாக் குடித்தனக்காரர்களிடமிருந்து வாடகை வசூல் போன்ற காரியங்களைச் செய்து வந்தாள்.
தருமமிகு சென்னையின் ஜார்ஜ் டவுன் பகுதியில் குறுகிய வீதிகளின் ஒன்றில் அமைந்துள்ள அவ்வீடு சிதிலமடைந்து ஆங்காங்கே காரை பெயர்ந்து, ஜன்னல் கம்பிகள் துருப்பிடித்துக் கிடந்தன. பின்புறம் நாட்டு ஓடுகளால் கூரை வேயப்பட்டிருந்த அந்த இல்லத்திற்கு மின்சார இணைப்பு கொடுக்கப்படவில்லை. பொதுவான குளியலறை மற்றும் ‘லாட்ரின்’களை அனைவரும் பகிர்ந்து கொண்டனர்.
இரவுச் சாப்பாட்டின் போது “கரமது இல்லையாம்மா..” என்றான் தாமு.
“மாசக்கடைசியில ஒனக்கு மூணு வேளையும் காய் வேணுமா..” என்றாள் சுந்தரவல்லி அதட்டலாக “கொழம்பை தொட்டுண்டு சாப்பிடு.. “
“குழம்பு சாதத்துக்கு அதையே தொட்டுக்கறதா..“
“அப்போ.. மோருஞ்சாம் போடட்டுமா..”
“எனக்கு எதுவும் வேண்டாம்..”
அனந்தசயனம் “அடம் பிடிக்காம இருக்கறதை தின்னுடா..” என்றார் “எதையும் வீணாக்கக் கூடாது.. நீ தூக்கி எறியற ஒவ்வொரு சோத்து பருக்கையும் சாக்கடை வழியா போய் கடல்ல கலக்கும்.. அங்க சமுத்திர ராஜன்கிட்ட அழுவாளாம் அன்னலட்சுமி..“
தாமு அப்பாவின் வார்த்தைகளை அப்படியே நம்பினான் “மெரீனா பீச்சுக்கு போவேமே.. அங்கேயாப்பா.. வங்காள விரிகுடான்னு பூகோளத்துல வருதே.. அதுவா.. ”
அம்மா “நாம பணத்துக்கு எவ்ளோ கஷ்டப்படறோம்.. ரேஷன் கடைக்கு போய் வரிசையில நின்னு அரிசி வாங்கிண்டு வரேன்.. மளிகை சாமான் நாடார் கிட்ட கடனுக்கு வாங்கி அப்பா சம்பளம் வந்ததுக்கப்பறம் பணம் குடுக்கறா..“ என்றாள். சிம்னி விளக்கின் ஒளியை மட்டுப்படுத்தினாள். புடவைத் தலைப்பால் அதன் கண்ணாடியைக் கழற்றி அதனுள் படிந்திருந்த கரிப்புகையைத் துடைத்து விட்டு மீண்டும் பொருத்தினாள்.
“காய்கறி கொத்தவால் சாவடியில வாங்கறதுக்கு வசதியில்லே.. செங்காங்கடை மார்க்கெட்ல கூறு கட்டி விக்கறாளே.. அதுலதான் பொறுக்கிண்டு வரேன்.. காசை எண்ணி தான் செலவு பண்ண வேண்டியிருக்கு.. ”
அனந்தசயனம் சாப்பிட்டு விட்டு கை அலம்பி வேஷ்டியில் துடைத்தவாறே முன்கட்டு அறைக்குச் சென்றார். தாமுவும் பின் தொடர்ந்தான். அவர் ராஜாஜியின் ‘சக்ரவர்த்தித் திருமகன்’ புத்தகத்தை விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தார்.
“டேய்.. தெருமுக்கு கடையில கும்மோணம் வெத்தலையும் களிப்பாக்கும் வாங்கிண்டு வா.. ‘மூணாவது’ கொஞ்சம் வேணும்னு கேளு.. அப்படியே மைதீன் புகையிலை ஒரு பாக்கெட்.. எல்லாத்தையும் கணக்குல எழுதிக்கச் சொல்லு.. “
“அப்பா.. நியூட்ரின் சாக்லேட் ரொம்ப நாளா கேட்டுண்டிருக்கேனே.. “
“இப்ப எதுக்குடா.. ராத்திரி வேளையில..”
“நாளைக்கு ஸ்கூல்ல.. ‘ரீஸஸ் பீரியட்’ல சாப்பிடுவேன்பா..”
“சரி.. இந்தா..“ என்றவாறே சட்டையின் உள்ஜோபியைத் துழாவி பத்து பைசா நாணயத்தைக் கொடுத்தார். தாமு மகிழ்ச்சியாக டிரவுசரை கையில் பிடித்துக் கொண்டே தெருமுனைக்கு ஓடினான்.
வாங்கி வந்த மிட்டாய்களைத் தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு, மூட்டைப்பூச்சிக் கடியை மீறி நிம்மதியாக உறங்கிப் போனான்.
வசுதா சீக்கிரமே திருமணமாகிப் போய் விட்டதால் தாமுவுக்கு அவளைப் பற்றிய ஞாபகங்கள் மிகுதியாக இல்லை. அந்தக் கல்யாணம் ஏதோவொரு சந்தின் கடைசியிலிருந்த சத்திரத்தில் நடந்தது மங்கலாக அவன் நினைவில் தேங்கியிருந்தது. அக்கா ஆண்டாள் கொண்டையுடனும், அத்திம்பேர் தலைமுடியைத் தூக்கிச் சுருட்டி வாரிக்கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுத்த கருப்பு வெள்ளைப் புகைப்படத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டேயிருப்பான்.
தனது பள்ளித் தோழிகளுடன் நின்றபடி வசுதா புறங்கையைத் தொங்கப் போட்டுக்கொண்டு ரத்னா ஸ்டூடியோவில் எடுத்த ஃபோட்டோவும் டிரங்க் பெட்டியில் பத்திரமாக இருக்கிறது. ஒரு மழை நாளின் போது வீட்டு முற்றத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மிதக்க விடுவதற்கு தமக்கை செய்து கொடுத்த காகிதக் கப்பல் தாமுவுடைய சிறுவயது சந்தோஷம்.
ஆராவமுது ஒரு நாள் அப்பாவிடம் சண்டையிட்டு, ‘நான் சொந்தக் கால்ல நிக்கப் போறேன்’ என்று சொல்லி துணிமணிகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பும் போது தாமு வாசல் திண்ணையில் அழுது கொண்டிருந்தான். ‘கவலைப்படாதடா.. நான் எங்கேயிருந்தாலும் உன்னை மறக்க மாட்டேன்’ என்று அண்ணா சொன்ன வார்த்தைகள் அவன் மனதில் உறைந்து போனவை.
நண்பர்களுடன் எம்யூஸி மைதானத்தில் தமையன் கிரிக்கெட் விளையாடப் போவதும், வசந்த் விஹார் ஓட்டலின் ‘ஜுக் பாக்ஸ்’ கருவியில் காசு போட்டு கிராமஃபோன் ரெகார்டை தேர்ந்தெடுத்து சினிமாப் பாட்டு கேட்டதும், மெத்தையில் அவனிடம் ஒரு சமயம் புகை நெடி வீசியதும் தாமுவுக்கு மலரும் நினைவுகள்.
ஆண்டர்ஸன் தெரு முழுக்கக் காகிதம், அட்டைகள் விற்கும் நிறுவனங்கள் அதிகம். எழுதுபொருட்களும் அச்சு மையும் உப தொழில்களாக இருக்கும். அவற்றில் ‘ஆனா ழானா’ கடை மிகவும் பிரசித்தி பெற்றது. அதன் உரிமையாளர் அழகப்பனுக்கு சொந்த ஊர் தேவகோட்டை.
‘டி.ஏ.சி அண்ட் ஸன்ஸ்’ என்ற அந்த ஸ்தாபனத்தில் அனந்தசயனம் இருபது வருடங்களுக்கு மேலாக ‘குடோன் கிளார்க்’காக வேலையில் இருக்கிறார். முதலாளியிலிருந்து கடைநிலை ஊழியர் வரை ‘ஐயங்கார் சார்’ என்றே அவரை விளிப்பர்.
பேப்பர் ஆலைகளிலிருந்து லாரியில் வந்திறங்கும் சரக்குகளை கைவண்டி மூலம் கம்பெனியின் கிடங்குகளில் கொண்டு போய்ச் சேர்ப்பது, அதற்காக ‘டில்லி’ போன்ற கூலித் தொழிலாளிகளை மேற்பார்வையிடுவது, சில்லறை வியாபாரிகளுக்கு காகிதப் பாக்கெட்டுகளை விநியோகம் செய்வது அவருடைய அன்றாடப் பணிகளாக இருக்கும்.
அனந்தசயனம் பெரும்பாலும் குடோன்களிலேயே இருக்க வேண்டி வந்தது. அங்கு எழும்பும் தூசியும் புழுதியும் இருமல் சாட்சியாக அவருடைய நுரையீரலைப் பாதித்தது. அபூர்வமாக சில தினங்களில் அலுவலகத்தில் அமர்ந்து காகிதப் பண்டல்களின் இருப்புக் கணக்கைச் சரிபார்ப்பார். வேலையில்லாத சமயங்களில் ‘வியாசர் விருந்து’ நூலை வாசித்துக் கொண்டிருப்பார்.
தாமு பள்ளி விடுமுறை நாட்களில் அப்பாவுடன் ஆபீசுக்கு வருவான். டியூப் லைட் வெளிச்சமும், மின்விசிறிக் காற்றும் அவன் வீட்டில் அனுபவிக்க முடியாத சொகுசு அம்சங்கள். மேசையில் வைக்கப்பட்டிருக்கும் கருப்பு நிற தொலைபேசி அவனுக்கு ஆச்சர்யமான விஷயம். யாரும் இல்லாத சமயத்தில் அதிலுள்ள எண்களைச் சுழற்றிப் பார்க்க வேண்டுமென்று ஆசை.
அனந்தசயனத்திடம் காசு புழங்கும் நாட்களில் தாமுவை அருகிலுள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வார். நாலணாவுக்கு இரண்டு இட்லியும் வடகறியும் கிடைக்கும். அவன் சாப்பிட்டு முடிப்பதற்குள் அவர் காபி குடித்து விடுவார். அந்த டபரா டம்ளரில் ‘அம்பாள் கஃபேயில் திருடியது’ என்று பொறிக்கப்பட்டிப்பதை தாமு தவறாமல் கவனிப்பான்.
(அடுத்த ஆண்டு அடுத்த இதழில் தொடரும்)
அந்த கால கதை அருமையான முறையில் விவரிக்கும் பட்டுள்ளது
பாராட்டுக்கு மிக்க நன்றி.
Whether this story ends or continues…? Kindly upload full story…Thanks…
ஒவ்வொரு இதழிலும் தொடரின் ஒரு பகுதி வெளியாகும்.
மாதத்திற்கு இரு முறை சொல்வனம் வெளியாகிறது.
இரண்டாவது ஞாயிறு அன்றும், நான்காம் ஞாயிற்றுக்கிழமைதோறும் புதிய இதழ்கள் வெளியாகின்றன.
இது ஒரு குட்டித் தொடர் / குறுநாவல். அடுத்தடுத்த இதழ்களில் வாசிக்கலாம்.
அருமையான ,தெளிந்த நீரோட்டம் போன்ற நடை.சித்ரூபனின் முதல் குறுநாவல் சிறப்பு.
பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி சார்..
நல்ல அழகான வரிகள்…சீரான நடை…1961 ல் பிறந்த எனக்கு என்னையே திரும்ப பார்த்தது போல இருந்தது…தத்ரூபமான வர்ணனைகள் ….waiting for next episode
உங்கள் பின்னூட்டம், பாராட்டுகள் எனக்கு மிகுந்த ஊக்கமளிக்கின்றன.. நன்றிகள்..