மௌனமாய் இருந்து உன்னை நீ அறிந்து கொள்

முந்தைய பகுதி

எதைப் பற்றி சிந்தித்தாலும், அதைக் காட்சியாகக் காண்பவர்கள் இருக்கிறார்கள் அதை சொற்களாகவே கோர்ப்பவர்கள் உண்டு. இரண்டுமாக இணைப்பவர்களும் உண்டு. இந்தப் பிரிவுகளை அந்தந்த மனிதரே அறிவாரா என்பது ஐயத்திற்கு உரியது.  

வானொலியில் ஒரு வாத்திய இசையைக் கேட்கிறோம் என வைத்துக் கொள்வோம். மாண்டலின் சீனிவாசன் வாசித்த ‘மருகேலரா ஓ ராகவா’ பாடல் ஒலிபரப்பாகிறது. மேடையில், அவர் முன்னர் இதை வாசித்த போது அமர்ந்திருந்த விதம், அவருடன் வாசித்த சக கலைஞர்கள், முன்னும், பின்னுமாக அரங்கில் நிறைந்திருந்த கூட்டம், அந்த அரங்கின் துல்லிய ஒலியமைப்பு போன்ற பலதும் பாடலுடன் உங்கள் மனக்கண்ணில் எழுந்தால் நீங்கள் காட்சியால் சிந்திப்பவர். பாடலின் வரிகள் அல்லது இராக பாவம் உங்களுள் எழுந்தால் நீங்கள் வார்த்தைகளின் வழியே சிந்திக்கிறீர்கள். அந்தப் பாடல் எழுதப்பட்ட இடம், அதன் செய்தி, அதைப் போன்ற வேறு பாடல்கள் உங்கள் சிந்தையில் எழுந்தால், நீங்கள் இடம் பொருள் சார்ந்து சிந்திப்பவர் என எடுத்துக் கொள்ளலாம். 

ரஸ்ஸல் டி ஹெர்ல்பெர்ட் (Russell T Hurlburt) என்ற லாஸ்வேகஸ் பேராசிரியர் ஒரு பரிசோதனை செய்தார். பங்கு பெறுவோரிடம் ஒரு ஒலிப்பான் கொடுக்கப்பட்டது. அது ஒலி எழுப்பும் போது சோதனையில் பங்கு பெறுபவர்கள் என்ன சிந்தித்தார்கள் என்பதை உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும். சிந்தனையை உடனே பதிவு செய்தால் அது அந்த நேரத்தில் நினைத்த ஒன்றின் துல்லிய நினைவாக இருக்கும். பல ஆண்டுகள் பல நூறு நபர்களிடம் அவர் செய்த பரிசோதனைகளை அலசி அவர் ஒன்றைச் சொன்னார். ‘உள் அனுபவம்’ என்பது ஐந்து தனிமங்கள் கொண்டது. காஃபி கலப்பதைப் போல அவரவர் பாணியில் நாம் அந்த ஐந்தையும் கலக்கிறோம். உள் பேச்சு, உள் பார்வை, உணர்ச்சி மிகுதல் (புல்லரித்தல்), உணர்வுகரமாக ஆதல் (அந்த நிமிடமே நிலைத்திருக்கக் கூடாதா?), எந்தக் குறிகளும் இல்லாத வார்த்தையற்ற, உருவம் தோன்றாத, இரண்டும் கலவாத, குறிகள் அரும்பாத சிந்தனை என்ற ஐந்தினை அவர் குறிப்பிடுகிறார். 

சில ஆண்டுகளுக்கு முன் இதைப் படித்த போது நான் ஒன்றைப் புரிந்து கொண்டேன்- என் மனம்/சிந்தனை காலியாக இல்லை; அதற்குக் குறியீடுகள் இல்லை. ஆயினும், ஹெர்ல்பெர்ட் சொல்கிறார், தான் இந்த வகைதான் என்று அறுதிப்படுத்துதல் அவ்வளவாகச் சரியான ஒன்றல்ல. நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பது நமக்குத் தெரிவதில்லை, அந்தச் சோதனை ஒலிக்கு முன்னரும், பின்னருமான பதிவுகள் இதைக் காட்டித் தருகின்றன. நாம் சிந்திப்பதைப் பற்றி, சிலர் கேள்வி கேட்கையில் பொத்தாம்பொதுவாக நாம் பதில் சொல்கிறோம் அல்லவா? நம் எண்ண ஓட்டங்கள் மறைந்துள்ளதாக, மாறுபடுவதாக இருப்பதை ஓரளவிற்கேனும் நாமும் உணர்கிறோம். ஒரு மூளையில் சிந்தையின் பல வடிவங்கள் இருக்கின்றன.  மனதைப் பற்றி எழுத ‘யுலிசி’யில் (Ulysses) ஜேம்ஸ் ஜாய்சிற்கு 18 அத்தியாயங்கள் அல்லவா தேவைப்பட்டன? 

குவாண்ட இயற்பியலாளர்கள் இந்தச் சிக்கலை, குவாண்ட நிலையை நிர்மாணிக்கும் போது எதிர் கொள்கிறார்கள்; ஏனெனில் அந்தத் துகள் உறுதியான நிலையில் இருப்பதில்லை. அதைப் போலத்தான் நாம் எப்படி சிந்திக்கிறோம் என்பதை நம்மால் கட்டுக்குள் வகைப் படுத்த முடியாது. நாம் சிந்திக்கும் விதத்தைப் பற்றிய சிந்தனையே நம்மை வலுக்கட்டாயமாக, அதற்கில்லாத வடிவத்தை கொடுக்கும் அபாயமும் இருக்கிறது. 

டுசானில், (Tucson) 2002ல் நடந்த ‘உணர்வு’ சம்பந்தமான ஒரு கருத்தரங்கில் ரச்ஸல், எரிக் ஸ்விட்ஸ்கெபெல் (Eric Schwitzgebel) என்ற தத்துவவாதியுடன் இதைப் பற்றி விவாதித்தார். நம் சிந்தையில் என்ன உள்ளது என்பதைச் சொல்லும் திறன் நம்மிடமில்லை என்பதை உறுதியாக நம்புபவர் எரிக். தன்னுடைய “உணர்வெனும் தன்மையின் குழப்பங்கள்” (Perflexibities of Conscience) என்ற நூலில் அவர் சொன்னார் : “1950களில் கறுப்பு வெள்ளையாகக் கனவைக் காண்பதாகச் சொன்ன மனிதர்கள், அவைகளை வண்ணங்களில் காண்பதாக 1960களில் சொன்னார்கள். கனவில் காணும் வண்ணங்கள் அதிக அளவில் நம்மைச் சூழ்ந்திருப்பதாலேயே நாம் வெள்ளை கறுப்பிலிருந்து, வண்ணம் எனச் சொல்லத் தொடங்கிவிட்டோம் என்கிறார் எரிக். ஏதோ ஒரு வகைப்படுத்துதலைச் செய்வது கூடாது என்பவர், நம் கனவுகள் வண்ணங்கள் அல்லது அவையில்லாத கறுப்பு வெளுப்பு என்றாகத்தான் 

இருக்க வேண்டும் என்ற பிரிவுகளை விட்டுவிட்டு, அவ்வாறாக இல்லாத சாத்தியங்களையும் நினைக்க வேண்டும் என்று தொடர்கிறார். கனவுகள் உண்மையல்ல, நாம் விழித்திருக்கும்போது அவற்றை விரித்துரைக்கும் வசதி  தருபவையும் அல்ல என்பது அவரது கருத்து.  

இந்தியாவில் கனவுகள், சகுனங்கள், உள்ளுணர்தல் இவைகளுக்கு மதிப்பு இருக்கிறது. பொல்லாத சொப்பனம் கண்டு, கணவனைப் போருக்குப் போகாதே என்று சொல்லும் மனைவியரின் பாடலில் உருகுபவர்கள் இருக்கிறார்கள். நல் நிமித்தம், துர் நிமித்தம் செய்திகளைச் சொல்கிறது என்று உணர்வோர் இருக்கிறார்கள். பழங்குடியினரின்  உள்ளூணர்வுகள் நம் மரபணுவில் இருக்கலாம்.  

அந்தக் கருத்தரங்கத்திற்குப் பின்னர் அவர்கள் இருவரும் இணைந்து “உள் அனுபவங்களைச் சொல்லுதல்- ஆதரவாளர், ஐயம் கொள்பவரை சந்திக்கிறார்’ (“Describing Inner Experience? Proponent Meets Skeptic.”) என்ற தலைப்பில் எழுதினார்கள்.  

இந்த நூலில் ஒரு பரிசோதனையைப் பற்றி சொல்கிறார்கள் அவர்கள். மெலனி (Melanie) என்ற கல்லூரி பட்டதாரியிடம் ஒலிப்பான் தரப்பட்டது.18 மாதங்களாக ஒலி ஓசையிடும் போதெல்லாம், அவர் மனதில் ஓடிய சிந்தனைகளின் உரையாடல், ஹெல்பெர்ட்டிற்கு, மெலனி மனதில் நினைப்பதை அடையாளப்படுத்த முடியும் என்ற எண்ணத்தைத் தந்தது; சிந்தனையே கனவைப் போல, உள்ளார்ந்த ஒன்று என்றும், அது வெளியில் சொல்லாக வரும் போது அத்தனை நம்பிக்கைக்கு உரியதல்ல என்றும் சொல்பவர் எரிக். நாம் உள்ளே ஒத்த அமைப்புக் கொண்டிருந்தாலும், நம் அனுபவங்களைப் பற்றிய கேள்விகளுக்கு மாறுபட்ட வகைகளில் தான் பதில் சொல்கிறோம் என்றார் எரிக். 

இந்த நூல் திறந்த முடிவுடன் (open ended) இருக்கிறது. யார் சரி என்று தீர்மானிப்பது நமது வேலை. 

அந்த ஒலிப்பானை (Beeper) அவர் அணிந்த இரண்டாம் நாளின் மூன்றாம் ஒலியைப் பார்ப்போம். 

“அவர் அப்போது குளியல் அறையில் இருந்தார். சாமான்கள் பட்டியல் தயாரிப்பதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தார். மனக்கண்ணில் அவர் எப்போதும் பயன்படுத்தும் வெள்ளைத்தாளும் , பேனாவும் வந்தன. ‘கண்டிஷனர்’ (Conditioner) என்று நினைவில் எழும் போது ஒலிப்பான் ஒலித்தது- அவர் அந்த ஆங்கில வார்த்தையின் நாலாவது எழுத்தான ‘டி’யை மனக் கையால் அந்த மனத் தாளில் எழுதிக் கொண்டிருந்தார். அதே நேரம் தன் உட்குரலில் அவர் கண்- டி-ஷ-னர் என்றும் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அதே சமயம் விரல்கள் குளிர்ச்சியாக இருப்பதை உணர்ந்திருக்கிறார். ஒலிப்பான் ஒலி எழுப்பும் முன்னர் அவருள் இருந்த தோல் உணர்ச்சி இது. அது ஒன்றும் வெளிப்படையான சிந்தனையைத் தூண்டவில்லை.” 

இதைப் பற்றி ஹெர்ல்பெர்ட்டும், எரிக்கும் பின்னர் உரையாடினார்கள். ஒரே நேரத்தில் இத்தனையும் அவருக்கு நினைவில் இருக்குமா, அதைப் பற்றிய தெளிவும் இருக்குமா என்ற கேள்வி எரிக்கிற்கு எழுந்தது. 

1990களில் மீண்டும் தன் சோதனையைச் செய்தார் ஹெர்ல்பெர்ட். ஃப்ரேன் (Fran) என்ற வங்கிக் காசாளர் ஒருவர், ஒரே நேரத்திலேயே தனக்குள் 5 முதல் 10 வரை காட்சிகள் எழும்பும் என்று சொன்னார். அவை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டது போல வரும் எனவும் சொன்னார். பல சோதனைகள் நடத்தப்பட்டன. பணத்தை எண்ணுவதையும், சக ஊழியர்களிடம் பேசுவதையும் அவரால் எளிதாக ஒரே நேரத்தில் செய்ய முடிந்தது; அவரது பேச்சு தொல்லை தந்து பிறரை தத்தமது எண்ணிக்கையில் கோட்டை விட வைத்தது, 

மெலனியின் சிந்தனைகள் செழுமையாக, வினோதமாக, வேடிக்கையானவைகளாக இருந்தன. ஒலி 3.1ல் அவரது ஆண் நண்பன், காப்பீடுக் கடிதங்களைப் பற்றி கேட்டுக் கொண்டிருக்க, அவர் ‘பெரியோடென்டிஸ்ட்டைப்’ (பற்கள் சார்ந்த எலும்பு மற்றும் ஈறு மருத்துவர்- Periodontist) பற்றி நினைத்திருந்திருக்கிறார். ஒலி 3.2ல் தன் காரை நோக்கி நடக்கையில், பெரிய, கருப்பான வடிவத்தையும், தன் நினைவு வழக்கமான வேகத்தில்லாமல் பனி படர்ந்தாற் போல் இருப்பதாகவும் அவருக்குப் பட்டிருக்கிறது. ஒலிக்கும் சமயத்தில் அந்தப் பனி அடர்வு கண்களின் பின்னே, புருவங்களில் கனமாக உணர்ந்திருக்கிறார். 

ஒலிப்பான் 6.4ல் அவர் காய்ந்த பூக்களைக் வெளியில் கொட்டிக் கொண்டிருந்தார். நான் நினைத்துக் கொண்டிருந்தேன் ‘இந்தப் பூக்கள் பல நாட்களாக நீடித்து இருந்திருக்கின்றன.’ ‘இது ஒரு சும்மா பேச்சுதான். அந்த ஒலி வரும் போது நான் ‘பூக்கள் நீடித்து…’ என்று நினைக்கவில்லை; ஆனால், அந்தச் சொற்கள் எதிரொலித்துக் கொண்டிருந்தன. 

தன் மனதை இவ்வளவு நுணுக்கமாக அவர் அறிந்திருப்பது வியப்பு. அவரே அவரது மோ(ல்)லி ப்ளூம் (Molly Bloom) போலும். (படுக்கையில் ப்ளூமுடன் படுத்துக் கொண்டு, நிறுத்தல் குறியில்லாது மிக நீண்ட வசனமாக தன் எண்ணங்களை வெளியில் தனி உரையாடலாகச் சொல்லும் யுலிசி கதாபாத்திரம்.) 

நான் இந்த புத்தகத்தைப் படித்த பிறகு என் உள் பேச்சைக் கூர்ந்து செவிமடுக்க ஆரம்பித்தேன். அது கடினமாக இருந்தது; நான் ஒருக்கால் ‘குறிகளற்ற’ வகையைச் சேர்ந்தவனோ? உங்கள் உள்  அனுபவங்களை நீங்கள் சிந்திக்கத் தொடங்கும் போது அதன் தெளிவின் தரம் சற்றுக் குறைகிறதோ? ஹெர்ல்பெர்ட் தன் உள் அனுபவங்களைச் சொல்லவது கடினம் என்பார்; எரிக்கோ, அது விவரணைக்கு உட்பட்டதில்லை என்பார். இன்னும் ஆழமாகப் போனால், நம் உள் எண்ணங்கள், வௌவால்களின் ஒலியைப் போல கேட்கக் கிடைக்காதவை. 

நம் சிந்தனையே நமக்கு மர்மமாக இருக்கிறது. 

சிந்திப்போம், பேசுவோம், சில நேரங்களில் எதைப் பற்றி சிந்திக்கிறோம் எனும் வினாவிற்கு நமக்கும் விடை தெரியாது. விவரணைக்கு உட்பட்ட சிந்தனை என்பது, நாம் எண்ணங்களைப் பழக்குவது போன்றது. இதனால் தான், பிறரிடம் பேசுவது சுவாரசியமாகவும், கடினமாகவும் இருக்கிறது; நம்மை அறிந்து கொள்வது சிரமமாக இருக்கிறது. (உன்னை அறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்) 

என்னை நான் அறியாவிடில், என் வாழ்வின் பொருள் என்ன? இதை தத்துவக் கேள்வியாக எடுத்துக் கொள்ளாமல் கூட சிந்திக்கலாம். தனது  “The Self as a Center of Narrative Gravity,” கட்டுரையில், மெய்யியலாளர் டேனியல் டென்னெட்,(Daniel Dennett) மனிதனில் புனைவு உள்ளது என்று சொல்கிறார். புனைவுகள் சற்று பழுதானவை; ஒரு புதினத்தைப் படிக்கும் போது ‘எத்தனைக் கட்டுக்கதை?’ என அதை நாம் வீசிவிடுவதில்லை. செய்யப்படுவது தான் அதன் அழகு இல்லையா? வேண்டுமென்றே, நிர்மாணிக்க முடியாத தன்மை தான் புனைவின் ஈர்ப்பு. அதுதான் அதனது உண்மை. நம் மனமும் அதைப் போலத்தான். பல உள் அனுபவங்கள், கனவுகள், நாம் வார்த்தைகளால் அதைப் பிறருக்குக் கடத்த முயல்கிறோம். ஆமாம், நம் விவரணைகளும், அனுபவங்களும் உண்மையா, புனைவா? இது ஒரு பொருட்டா? வாழ்வின் ஒரு பகுதி கதைகள். 

கதைகள் உண்மையாக இல்லாதிருக்கலாம்; ஆனால், பொருள் பொதிந்தவை. நாம் வெவ்வேறு வகைகளில் நம் மனதை  பேசுகிறோம். என் சிந்தனையைப் பற்றி நான் எனக்குச் சொல்லிக் கொள்ளும் கதை என் சிந்தனைக்கு உதவியாக இருக்கிறது.  

அன்றொரு நாள் என்னைத் தொல்லை செய்யும் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டேன். ஈர உடை உடுத்திக் கொண்டு நீந்தப் போனேன். நீரில் குளிராக இருந்தது- நான் அந்தக் குளிர்ச்சியிலும், மூச்சை சீராக வெளியிட்டு உள்வாங்குவதிலும் கவனம் செலுத்தினேன். நான் ஒய்வாக உணர்ந்தேன்; அலைகளில் பயணிக்க கரை மீறிச் சென்றேன். என் மனதை இப்போது என் சிக்கலை நோக்கித் திருப்பினேன். கடற்பறவை அருகில் நீந்துவதை கவனித்தேன். சில நிமிடங்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை. வெள்ளி அலைகளையும், மேகத்தையும், பறவையையும் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு சிந்தனை, வெளியாக விரும்புவதை உணர்ந்தேன். இப்படி நடக்கும் என்பதும் எனக்குத் தெரிந்திருந்தது. நான் தொண்டையை கனைத்துக் கொண்டேன்; பறவை பறந்தது. 

நம் இதிகாசங்கள், வரலாறுகள் இவற்றைத் திறம்படப் பேசுகின்றன, 

கவனத்திற்கோர் பார்த்தன்; காட்சிக்கோர் வான்மீகி; காட்சி நாடகத்திற்கோர் கம்பன்; சுருங்கச் சொல்வதற்கோர் வள்ளுவன்; நம்முள் புகுந்து நம்மை அடையாளம் காட்டுவதோ கீதை. மௌனமாய் இருந்து உன்னை நீ அறிந்து கொள் என்பதற்கு தென்முக தக்ஷிணாமூர்த்தி. சொல்லாச் சொல்லை இசைக்கும் கலைவாணி. சப்த ப்ரமாணம் வேதம். 

உசாத்துணை

One Reply to “மௌனமாய் இருந்து உன்னை நீ அறிந்து கொள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.