மேடை உரை அனுபவங்கள்

சில நாட்களுக்கு முன்னர் நண்பர் கதிர் முருகன் போதி  தமிழக மேடைகளில் உரைகளின் வகைமைகளையும், மாறவே மாறாத சில மடமைத் தனங்களையும்  பட்டியலிட்டு பிரசுரித்திருந்தார். அவர் குறிப்பிட்டவற்றைக் காட்டிலும் அதிகமான அராஜகங்களை இந்த 20 ஆண்டுகால கல்லூரிப்பணிச் சூழலிலும், தமிழகம் முழுக்க இருக்கும் பல கல்வி நிறுவனங்களிலும், சகோதரர்கள் ரோட்டரியில், லயன்ஸ் கிளப்களில் இருப்பதால் அங்கு நடைபெறும் கூட்டங்களிலும், மகன்களின் கல்லூரி பள்ளி விழா மேடைகளிலுமாக பல வகை உரைகளில் பார்த்தாயிற்று.

கல்லூரி திறக்கும் அன்றும், மகளிர் தினம் ,பெருந்தலைவர்களின் நினைவு தினம் ,அறிவியல் முக்கிய தினங்கள், இலக்கிய கூட்டங்கள் என்று  நானும் பல மேடைகளில் உரையாற்றுவதுண்டு. சமயங்களில் எனக்கு முன்பும் பின்பும் பேசுபவர்களின் உரைகளையும் கேட்க கொடுத்து வைத்திருக்கும்.

பெரும்பாலான உரைகள் உலகம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை முற்றிலும் அறியாத, தான் பல வருடங்களாக பேசி பேசி மனனம் ஆகிவிட்டிருப்பவைகளை, அவை பேசப்படும் காலத்துக்கு எத்தனை பொருத்தமற்றவையாக இருக்கிறது என்னும் பிரக்ஞையே இன்றி பேசப்படுபவை.

அதிலும் தனியார் நிறுவனங்களின் உரைகளோ கொடுமையிலும் கொடுமை. நிர்வாக தரப்பிலிருப்பவர்களை புகழ்ந்து பேசியே ஆகவேண்டும் என்னும் தார்மீக உணர்வு கொப்பளிக்க புகழாரம் பல மணி நேரம் ஒவ்வொருவராலும் சூட்டப்பட்டு கொண்டிருக்கும். மாணவர்களும் ஆசிரியர்களும் கூட்டத்துக்கு தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டவர்களுமாக தப்பிக்க வழியின்றி கலக்கத்துடன் அமர்ந்திருப்பார்கள். காலில் விழுந்து ஆசி வாங்குவது, மனமுவந்து ஆசியளிக்கும் சடங்குகளும் நடைபெறும்.

பொள்ளாச்சி கோவை நெடுஞ்சாலையில் ஒரு மாபெரும் திறந்தவெளி மைதானம் இருக்கிறது அதில் வழக்கமாக கட்சிக் கூட்டங்கள் நடைபெறும். கூட்டத்துக்கு ஆள் எடுக்க கல்லூரியின் தூய்மை பணியாளர்களை  மொத்தமாக வண்டி கொண்டு வந்து அழைத்துச் செல்வார்கள் அதுபோலவே கல்லூரிகளில் நிர்வாகத்துக்கு வேண்டிய ஆளுமைகளுக்கு பாரட்டுவிழா வென்றால் மொத்த மாணவர்களையும் அள்ளிச் சென்று அமர வைத்துவிடுவார்கள்.

இடையில் எங்கும் வெளியில் தப்பிக்க முடியாமல் என்ன பேசப்படுகிறது என்று பொருளும் விளங்காமல் பல  மணி நேரம் அமர்ந்திருப்பார்கள். கட்சிகூட்டங்களிலாவது தண்ணீர் பாட்டிலும் உணவு பொட்டலமும் சில நூறுரூபாய் தாள்களும் கிடைக்கும் இவர்களுக்கோ கல்விக்கட்டணம் கட்டி  கற்க வந்த கல்விக்கான சமயம் பறிபோவது தான் மிச்சம்.

.  

பல மேடைகளில் பல சுவாரசியங்களும் நடக்கும். ஒரு  நாள் நானறிந்த, குடுமப நண்பருமான ஒரு கல்லூரி முதல்வரிடம் இருந்து சிறப்பு பேச்சாளரின் உரை ஒன்று இருப்பதாகவும் அவசியம் நான் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு வந்தது, அன்று இறுதியாண்டு மாணவர்களுக்கு அக்கல்லூரியில் கடைசி நாள் எனவே முக்கியமாக ஏதேனும் பேசும்படியான ஒருவரே வந்திருப்பார் என்றெண்ணினேன். ஆனால் சிறப்பு அழைப்பாளரின் பெயரை தெரிந்துகொண்டதும் ஆச்சரியமாயிருந்தது. அவரை  ஏற்கனவே  அறிவேன். கவிதையல்ல அல்லவேஅல்ல என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யுமளவுக்கு மடித்தெழுதிய வாக்கியங்களை கவிதையென்று பலவருடங்களாக எழுதிவருபவர். பெரும் செல்வந்தர் எனவே அவர் கவிஞரே என்று அவரை நம்ப செய்த ஒரு கூட்டம் அவருடன் எப்போதும் இருந்தது. சரி எழுத்துதான் அப்படி பேச்சு பேச்சாயிருக்கலாம் என்ற நப்பாசையில் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.

அவரை அறிமுகப்படுத்த துவங்கிய மாணவிகளை மேடையிலிருந்தே கையசைத்து நிறுத்தி ’’போதும் என்னை பத்தி  சொல்லத்தொடங்கினா நாளெல்லாம் சொல்லனும் இதோட நிறுத்திக்குங்க’ என்றார். அப்பட்டமான தற்புகழ்ச்சியது.

 உன்னத  மேல் நாட்டு பாணி உடை, அடுக்கடுக்கான ஒப்பனையுடன்   மேடைக்கு வந்தார், பல பேச்சாளர்கள் போடியத்திற்கு வந்ததும்  அவர்களின் உயரத்துக்கேற்றபடி மைக்கை சரி செய்து கொள்வதை பார்த்திருக்கிறேன் ஆனால் அவர்  இரண்டு கைகளாலும் போடியத்தையே தூக்கி நகர்த்தி  சரிசெய்துகொண்டார். இதுபோல எத்தனை மேடைகளை கண்டவன் என்னும் உடல்மொழி இருந்தது.

ஒரு மேடையில் இளைஞர்களுக்கு என்னவெல்லாம் சொல்லவேண்டியதில்லையோ அதையெல்லாம்  உற்சாகமாக சொல்லிக்கொண்டிருந்தார். பல கல்லூரிகளில் பேசியிருக்கும் அவரின் உரையை கேட்க எங்களுக்கு அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறது என்பதையும் அவரே சொல்லிக்கொண்டார். 

கிராமப்புறத்தைச் சேர்ந்த வெளியுலகம் அவ்வளவாக தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் குறைந்த மாணவர்களிடையே, கல்லூரியின் கடைசி நாள் அன்று எத்தனை அருமையான முக்கியமான் உரையை ஆற்றியிருக்கலாம் என்று எனக்கு ஆதங்கமாக இருந்தது.

பட்டப்படிப்பு முடித்து வாழ்வை எதிர்கொள்ளப்போகிற 400 இளைஞர்களின் மத்தியில் அவர்களுக்கு வழி காட்டவும் தன்னம்பிக்கை அளிக்கவும், உற்சாகமளிக்கவும் எத்தனை பேசலாம். இவரோ வாட்ஸ் அப்பில் வந்த சில  நான்காம் தர ஜோக்குகளை சொல்லிக்கொண்டிருந்தார். அப்பாவி மாணவர்களும் வாய் கொள்ளாமல் சிரித்தபடி இருந்தார்கள். என் தீயூழ் நான் முன் வரிசையில் அமர்ந்திருந்தேன் அவர் என்னையும் அடிக்கடி பார்த்து ’’என்ன மிஸ் நான் சொல்றது சரிதானே’’ என்று வேறு கேட்டுக்கொண்டார்.

முன்வரிசையில் எந்த உணர்வையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் தெறிக்கற தலைவேதனையை தாங்கிக்கொண்டு  அவ்வப்போது அவர் என்னை பார்த்து எதாவது கேட்கையிலும் சொல்கையிலும் மென்மையாக புன்னகைத்துக் கொண்டு  இருந்தேன். ஒரு மாதிரி ஊழ்க நிலை அது.  நான் கைதட்டவேயில்லை எனபதை அவ்வப்போது ஓரக்கண்ணால் கவனித்தார் எனினும் என் முகத்திலிருந்த மந்தகாச புன்னகையில் அவரை நான் மதிக்கிறேன் அல்லது ரசிக்கிறேன் என்றே அவர் யூகித்துக் கொண்டிருக்கக்கூடும்.

  இன்னும் சில மேடைகளில் பலகாலமாக பணி ஓய்வில் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பேசுவதுண்டு. அத்தனை வருடம் பேசாமல் இருந்ததை பேசி முடித்துவிடும் உக்கிரத்துடன் இருப்பவர்கள் எந்தக் காரணம் கொண்டும் உரையை நிறைவு செய்துவிடக்கூடாது என்பதில் கருமமே கண்ணாகவும் இருப்பார்கள். நேரம் மிகுந்துவிட்டது என்னும் துண்டு சீட்டுகளை புறங்கையால் ஒதுக்கிவிட்டு இறுதியாக என்பதையே பல முறை சொல்லிக்கொண்டு மைக்கை பிடுங்க வேண்டிவரும் அளவுக்கு பேசித் தள்ளிக் கொண்டிருப்பார்கள். மேடை உரைகளில் பயங்கரவாதிகள் இவர்கள்.

மேடைகளில் தீவிரவாதிகளுமுண்டு. பேசும்போது கைகளை பலமாக  ஆட்டுக்கல்லில் மாவாட்டி தோண்டி எடுப்பது போலவும், பெரிய கிரைண்டரின் குளவிக்கல்லை தூக்க முடியாமல் தூக்குவது போலவும் கரகரவென்று எதையோ  கையில்  வைத்து சுற்றுவது போலவும், கம்பிகளில் சிக்கிக்கொண்ட மாஞ்சா கயிற்றை விடுவித்து பட்டத்தை எடுப்பது போலவும் செய்கைகளும் அல்லது சேஷ்டைகளும் செய்பவர்களும் உண்டு. முன்கூட்டியே அவர்களின் உரைகளை கேட்டிருந்தால் நான்  தள்ளி சிலவரிசகளுக்கு பின்னால் பாதுகாப்பு காரணங்களின் பொருட்டு அமர்ந்து கொள்வது வழக்கம்.

இன்னும் சிலர் ’’ஆன்றோர்களே சான்றோர்களே என்னைப் போன்றோர்களே’’ ரகம்.இவர்கள் சென்ற நூற்றாண்டில் வாழ்பவர்கள். 

இன்னும் சிலர்  குரலை அவ்வப்போது நடிகவேள் போல  போல திடீரென்று உயர்த்தி உச்சஸ்தாயியில்  மேடையில் அமர்ந்திருக்கும் பிற ஆளுமைகளுக்கு தூக்கிவாரிப் போடும் படியும், பின்னர் கிசுகிசுப்பாக காதலனிடமோ காதலியிடமோ ரகசியமாய் பேசும் குழைவான கொஞ்சும் குரலிலும், திடீரென்று முழங்கியும் மாடுலேஷனில் வித்தியாசம் வேறு காட்டுவார்கள்.

 இவையனைத்துக்கும் மேல் அவ்வபோது முஷ்டியை மடக்கி போடியத்தை படார் படாரென பலமாக குத்திக்கொண்டு ஆவேசமாகவும் பேசிக்கொண்டிருப்பவர்களும் உண்டு

கல்லூரிகளில் பல மேடைகளில்  மேஜர் சுந்தரராஜன் வகை உரைகள் சாதாரணமாக கேட்க கிடைக்கும். தமிழில் சொன்னதையே ஆங்கிலத்திலும் அடுத்தடுத்து சொல்லி இரண்டிற்கும் கைதட்டல் வேறு  எதிர்பார்ப்பவர்கள் இவர்கள்.

போன ஜென்மத்து குரு சிஷ்ய ஜோக்குகளும் நூற்றாண்டுகளாக தேய்வழக்குகளான குட்டிக்கதைகளையும் சொல்லும் மற்றொரு வகை  இம்சைஅரசர்களும் உண்டு.

இப்படியான பேச்சாளர்கள் கல்லூரிக்கு வருகையில் அவர்களுக்கு சன்மானமாக கவரில் எவ்வளவு கொடுக்கப்படுகின்றதென நான் அறிந்துகொள்ள மாட்டேன்.  பலநாள் தூக்கத்தை கெடுத்துவிடும் அந்த கசக்கும் உண்மை.

இன்னும் பலர் காந்தி, நேரு, அப்துல் கலாம், நெல்சன் மண்டேலா, அன்னைதெரசா உள்ளிட்ட பல பேராளுமைகள், பெருந்தலைவர்கள்  எல்லாம் கனவில் கூட நினைத்துப்பார்த்திருக்காத உத்வேக மொழிகளை அவர்கள் சொன்னதாக மேடையில் சத்தியம் செய்து சொல்லுவார்கள். இதெற்கெல்லாம் மானநஷ்ட வழக்கு போட அவர்கள் யாரும் உயிருடன் இல்லையென்பதால்.

இப்படி சொல்லிச்சொல்லி அதை உண்மையாக்குவார்கள். ஒரு தலைமுறை இளைஞர்கள் மேடைப்பேச்சுக்களை கவனித்து உண்மையென்று நம்பும் சாத்தியம் உள்ள போது எத்தனை கவனமாக மேடைகளில் பேச வேண்டும்?

பார்வையாளர்களின் தரம் என்ன என்பதை அறியாமல் தன் மேதாவித்தனத்தை காண்பித்துக் கொள்ள முழுவதும் ஸ்டைலான ஆங்கிலத்தில் பேசுபவர்களும் உண்டு. எங்கள் கல்லூரிக்கு அப்படியான விருந்தினர்கள் வந்து பேசிக்கொண்டிருக்கையில் பதினெட்டு பட்டிகளை சேர்ந்த, பெரும்பாலும் முதல் தலைமுறை பட்டதாரிகளான மாணவர்கள் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருப்பார்கள்.

இன்னும் சிலர் எதிர்பராமல் கண்ணை மூடிக்கொள்ளுங்கள் என்றோ, கைகளை நான் சொல்லும் விதத்தில் தட்டுங்கள் என்றோ, எழுந்து நின்று ஏதேனும் ஒரு செய்கையை செய்யுங்கள் என்றோ  சொல்லி பயங்காட்டுவார்கள், வேறு வழியின்றி ஆசிரியர்களும் கோமாளித்தனமாக மாணவர்களுடன் நின்று செய்ய வேண்டி வந்திருக்கிறது.

இன்னும் சிலர் சொன்னதையே சில முறை முறை திரும்ப திரும்ப சொல்லிட்டு பின்னர் அதையே  முதல் பாதி அவரும் மறுபாதி மாணவர்களுமாக சொல்லச்சொல்லி fill in the blanks  விளையாட்டு  நடத்துவார்கள்.

சில ஆண்டுகளுக்கு  முன்னர் கல்லூரி முதல்வரின் பள்ளி, கல்லூரிக்கால நெருங்கிய நண்பர் ஒருவர் சிறப்பழைப்பாளராக பேச வந்திருக்கையில் மேடையிலேயே தான் அன்றைய நண்பனாக இருந்த முதல்வரை எப்படி ஓட ஒட விரட்டிஅடித்தார் என்பதையும், நெஞ்சில் எட்டிஉதைத்து இந்நாள் முதல்வர் அந்நாளில் சாகக்கிடந்ததையும்  சிரிப்பான சிரிப்புடன் சொல்லிக்கொண்டிருந்தார். மேடையிலிருந்த முதல்வரின் முகம் அன்றே சிகிச்சையளிக்காமல் விட்டிருந்தால் செத்துத்தொலைந்திருக்கலாமே என்பதை  சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது. இதுபோன்ற அந்தரங்கங்களை பொதுவெளியில் சொல்லக்கூடாதென்னும் குறைந்தபட்ச நாகரீகமும் இல்லாமல் போன உரை அது.

மற்றுமொருமுறை பல்கலைகழகமொன்றில் பட்டுப்பூச்சிகளில் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த ஒரு மிக உயர்மட்ட பொறுப்பிலிருந்தவர் பேராசிரியர்களுக்கு ஆற்றிய உரையில் பட்டுபூச்சிகளின் இனப்பெருக்கத்தை குறித்தும்  அவற்றின் காதல் உணர்வு குறித்தும் சொல்லத்துவங்கி, பேச்சு வேகத்தில் எங்கோ ஒரு புள்ளியில் அவரது கட்டுக்கள் அவிழ்ந்து அது பொதுமேடை என்பதை மறந்து  பார்வையாளர்கள் எங்களை நோக்கி ’’நீங்க எல்லாம் பட்டாம்பூச்சி படத்தை படுக்கையறையில் ஒட்டி வச்சுகிட்டீங்கன்னா’’ என்று தொடங்கி பெண்கள் என்ன ஆண்களையே கூச்சத்தில் நெளிய வைத்துக்கொண்டிருந்தார்.

எனக்கு தெரிந்து இலக்கிய உலகில் ஆகச்சிறந்த, மிகச்சரியாக கட்டமைக்கப்பட்ட ஒரு நொடி கூட நேரம்பிசகாத  தேவையற்ற ஒரு சொல் கூட பேசப்படாத, பேச அனுமதிக்காத எப்பொழுதும் மட்டுறுத்துனர் ஒருவரின் மேற்பார்வையில் மட்டும் கச்சிதமான ஒழுங்குடன் நிகழும் மேடை உரைகள் விஷ்ணுபுரம் அமைப்பினர் நடத்தி கேட்டிருக்கிறேன் பங்கு பெற்றுமிருக்கிறேன்.

பல மேடைகளில் மிக சுவாரஸ்யமான உரைகளும் நிகழ்ந்திருக்கின்றன, மறுப்பதற்கில்லை.

சமீபத்தில் ஊட்டியில் ஒரு மகளிர் கல்லூரியில் சிறுதானிய திருவிழாவில் கலந்து கொண்டேன். கோடைக்கால துவக்கமென்பதால்  கல்லூரிக்கு செல்லும் வழியெங்கும் தீக்கொன்றைகளும், நீல ஜகரண்டாக்களும்  போட்டிபோட்டுக்கொண்டு மலர்ந்து மலைச்சரிவெங்கும்  வண்ணமயமாயிருந்தது.

மிக அழகிய ஒரு சிறுவனம் போல மரங்கள் அடர்ந்த பழைய கால கல்லூரி. வளாகமெங்கிலும் குரங்குகள் திரிந்தன. கல்லூரி முழுக்க  ஸ்வெட்டெர் போட்டுக்கொண்ட பெண்களும் பேராசிரியர்களும், மருந்துக்கு கூட ஆண்கள் இல்லை விழாவின் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த  இரண்டு விஞ்ஞானிகளை தவிர. 

கூட்டம் நடந்த அரங்கு நூற்றாண்டுகள் பழமையானது. மேடைக்கு செல்ல  சிவப்பு சிமெண்ட் பூசிய அரைவட்டப் படிகள் இருந்தன. அரங்கின் கதவை மாணவிகள் ஒவ்வொருமுறையும் கவனமாக மூடிக்கொண்டிருந்தார்கள்,  அதற்கென்று ஒரு சிவப்பு ஸ்வெட்டர் அழகி ஒருத்தி கதவருகில் நாற்காலி போட்டு அம்ர்ந்துகொண்டு திறப்பதும் மூடுவதுமாக இருந்தாள். ஊட்டி என்பதால் அரங்கில் ஏ ஸியும் இல்லை என்னால் காரணமும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மேடையில் மேல் விளிம்பில் பண்டைய சினிமா அரங்குகளில் இருந்ததை போல சிவப்பிலும் பொன்னிறத்திலுமாக துணிச்சுருணை  அடுக்குவளைவுகள்  தொங்கிக்கொண்டிருந்தன. எனக்கு சிறுவயதில் எங்கள் ஊர் திரையரங்குகளில் திரையை மூடியிருக்கும் அத்தைகைய திரைச்சீலைகள் நினைவுக்கு வந்தது. திரைப்படம் தொடங்குமுன்பு சரியான சமயத்தில் அவை மெல்ல  மெல்ல மேலெழும்புகையில் சீர்காழியின் ’’விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்’’ என்னும் கனத்த குரல் ஒலிக்கும். அப்போதெல்லாம் திரைப்படம் பார்த்தல் என்னும்  அரிய அனுபவத்துக்கு நிகரான பரவசமளித்தவை அந்த திரைச்சீலை உயருதல். அந்த பரவச கணங்களை இப்போதைய  நெட்ஃப்ளிக்ஸ்  கால தலைமுறை அனுபவிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

சிறப்பு விருந்தினர் ஒருவர் சிறுதானியத்தில் பல வகைகளை புகைப்படங்களுடன் ஆர்வமாக விளக்கிக் கொண்டிருக்கையில் எப்படியோ கவனக்குறைவாக மூட மறந்துவிட்ட கதவின் வழியே அன்னை குரங்கொன்று அரங்கினுள் நுழைந்தது. மாணவிகள் யாரும் ஆச்சர்யக்குரலோ, அபயக்குரலோ எழுப்பாததிலிருந்து அது வழக்கமான நிகழ்வென்றும் அதனை தவிர்க்கவே கதவை மூடிவத்தார்களென்றும் புரிந்துகொண்டேன். குரங்கு  சில படிகள் மேலேறிச்சென்று திரையில் காட்டப்பட்டுக்கொண்டிருந்த சோளத்கதிர்களின் வகைகளை பார்வையிட்ட பின்னர் பார்வையாளர்களான எங்களை ’’அடப்பாவமே இதையா இத்தனை நேரம் பேசிட்டிருக்கீங்க’’ என்பதுபோல பார்த்துவிட்டு அலட்சியமாக வெளியே சென்றது. பேச்சாளரோ அலட்டிக்கொள்ளாமல் அல்லது அச்சத்தை காட்டிக்கொள்ளாமல் உரையை தொடர்ந்து கொண்டிருந்தார்.

உணவு இடைவேளைக்கான நேரம் மிகப் பிந்தியபின்னும் உரை தொடர்ந்து நடந்தது. அவர் நிறுத்துவதாக காணோமே என்று நான் கவலைப் பட்டு கொண்டிருக்கையில் பின்னிருக்கையிலிருந்த ஒரு மாணவி ஒருத்தி பெரிய தடியொன்றை எடுத்துக்கொண்டு மேடையை நோக்கி சென்றாள் ’’கொஞ்சம் அதிகமாக பேசிவிட்டார் தான் அதற்காக இப்படியா’’? என்று நான் மனதிற்குள் பதறிக்கொண்டிருக்கையில் அவள் பேச்சாளரிடன் அந்த தடியை கொடுத்து திரையில் இருப்பவற்றை தொட்டுக்காட்டும் லேஸர் தொடுமுனைக்கு பதிலாக அதை உபயோகப்படுத்த சொன்னாள். வியர்த்துப்போயிருந்த முகத்தை துடைத்துக்கொண்ட பேச்சாளர்  ’’வேண்டாம்  இதோ முடிச்சுட்டேன்’’ என்றபடி உரையின் நிறைவுப் பகுதிக்கு வந்தார்.

கடந்த ஜனவரியில் சென்னை இலக்கிய விழாவில்  என்னை உரையாற்ற அழைத்திருந்தார்கள். 1 மணிநேர உரை அதுவும்  ’’இயற்கையை அறிதல்’’ என்னும் மிக முக்கியமான தலைப்பு , இலக்கிய விழாவில் இப்படியான துறை சார்ந்த  தமிழ் உரைகளுக்கான வாய்ப்புக்கள் அரிதினும் அரிதாகவே கிடைக்கும் என்பதால் நான் வழக்கத்தை காட்டிலும் சிறப்பான தயாரிப்புகளோடு எங்கள் கிராமத்திலிருந்து சுமார் 11 மணி நேரம் ரயிலில் பயணித்து சென்னை சென்றிறங்கினேன். மறுநாள்  காலை 10 மணிக்கு எனக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. 9 30க்கு என்னை அழைத்து மிக முக்கிய அரசியல் புள்ளி ஒருவர் உரையாற்ற  ஒத்துக்கொண்டிருப்பதால் அரைமணி நேரத்தில் என் உரையை முடித்துக்கொள்ளும்படி  அறிவுறுத்தினார்கள். ஏமாற்றத்துடன்  சொல்ல வேண்டியவற்றில் சரிபாதியை மட்டும் சொல்லிவிட்டு நிறைவின்மையுடன் மீண்டும் 11 மணி நேர  ரயில் பயணத்தில் ஊர்  வந்தேன், ஏராளம் மாணவர்களும் பெற்றோர்களும் இருந்த அந்த அரங்கில் பேசப்படவேண்டிய மிக முக்கியமான உரையை அவசரகோலமாக அள்ளித்தெளித்துவிடட் மனக்குறை இன்னும் தீர்ந்தபாடில்லை.

கொரோனாவுக்கு பின்னரான இணைய சந்திப்புகளிலும் அதிகம் கலந்துகொள்கிறேன் அவற்றில் இன்னும் சுவாரசியங்கள் நடைபெறும்.

பெரும்பாலும் வீடுகளில் இருந்து கலந்து கொள்பவர்கள் மைக்கை அணைத்து வைக்க மறப்பது வாடிக்கை. கழிவறை ப்ளஷ் உபயோக்கும் ஒலிகள், ’’இந்நேரத்துக்கே காபி காபின்னா’’ எனும் இல்லத்தரசிகளின் அதட்டல்கள், காற்றின் ஒலி, .குழந்தைகளின் வீறீடல் எதிர்பாராமல் உரையின் நடுவே கேட்கும் குடும்ப உரையடல்கள் என்று உரையைக் காட்டிலும் அவையே சுவாரஸ்யமாயிருப்பதும் உண்டு.  ஒரு பெண்ணெழுத்தாளரின் உரையின் போது அவர் மகளை ஒரு பிரபல அரசியல் தலைவரின் மகனுக்கு பேசி முடித்திருந்ததை மைக்கை அணைத்திருக்காத ஒருவீட்டு அம்மாள் தன் கணவரிடம் சொல்ல கேட்டு தெரிந்து கொண்டேன் .

மகன்களின் இளமை காலத்தில் அவர்களின் பள்ளிகளில் என்னை  அவ்வப்போது உரையாற்ற அழைப்பார்கள் நானும் ஒத்துக்கொண்டு செல்வேன்  எனக்கு சன்மானம் ஏதும் தரவேண்டியதில்லை என்பது பள்ளி நிர்வாகத்திற்கும், கூட்டம் முடிந்து திரும்புகையில் மகன்களை கூடவே அழைத்துக்கொண்டு வீடு செல்லலாம் என்பது எனக்கும் வசதியாக இருக்கும். அப்படி ஒரு ஆரம்பகால உரையொன்றின் போது சிறு குழந்தைகளின் சலசலப்புக்கு மத்தியில் ’’அது என் மீமீ’’ என்னும் குட்டித்தருணின்  பெருமிதம் ததும்பிய கீச்சுக்குரல் எனக்கு தனித்து தெளிவாக கேட்டது. அந்த  உரைமுழுக்க முகம் புன்னகையில் நிறைந்திருந்தது.

காலம் ஓடிவிட்டதில் இப்போது நிலைமை மாறி என் மேடைப்பேச்சின் உச்சரிப்பு பிழைகளை கவனமாக கண்டறிந்து மகன்கள் தருணும் சரணும் திருத்துகிறார்கள், நானும் திருத்திக்கொள்கிறேன் கசடற கற்கவேண்டும் இல்லையா எந்த கல்வியாகினும்? மேலும் கற்றனைத்து ஊறி ஊறி பெருகுவது தானே அறிவு!

நண்பரும் எழுத்தாளருமான செல்வெந்திரன் மேடைப்பேச்சின் பொன்விதிகள் என்று இப்போது ஒரு நூல் எழுதி இருக்கிறார் நான் இன்னும் வாசிக்கவில்லை, அதையும் கதிர் முருகன் போதி சொல்லி இருக்கும் மேடைப் பேச்சில் வழக்கமாக பின்பற்றப்படும் அசட்டுத்தனங்களையும் வாசித்து தெரிந்து கொண்டு மேடை உரையாற்ற இருப்பவர்கள் தரமான உரையை இனியாவது அளிக்க முயற்சிக்கலாம்,முடியாவிட்டால் இதுபோன்ற பிழைகளையாவது தவிர்க்கலாம். 

சென்னையில் நண்பர் ஜாஜா என்னும் ராஜகோபாலனின் சமர்த் நிறுவனம் தொடர்ந்து நடத்தும் ஆளுமை பயிற்சிகளில்  சில வருடங்களுக்கு முன்னர்  கலந்துகொள்கையில் இத்தனை வருட ஆசிரியப்பணியில் எனக்கு தெரியாததை என்ன இவர் சொல்லித் தர போகிறார் என்னும் இறுமாப்பு எனக்கு இருந்தது. ஆனல் என் உரையை படம்பிடித்து எனக்கே திரையிட்டபோது பல பிழைகள்  சுட்டிக்காட்டப்பட்டன. உடனே திருத்திக்கொண்டேன். அவை பிழைகளென்ற புரிதலே என்னை திரையில்  நானே கவனிக்கையில்தான் தெரியவந்தது. எனவே மேடை உரைகளை மேம்படுத்த நினைப்பவர்கள் தங்கள் உரைகளை இப்படி தாங்களே மீண்டும் திரையில் பார்த்து கவனிப்பதும் சிறந்தவழி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.