மீச்சிறுவெளி

உயரப்பறக்கும் ஊர்க்குருவி

ஒவ்வொரு முறையும் பறக்கும் சிறகுடைந்து மனதோடு
இறகும் சருகென
விழத்தான் செய்கிறது
யாருடனும் கலந்துரையாடவோ
கலந்துகொள்ளவோ மனம் ஒப்புவதில்லை
யாருடைய புன்னகையும்
தனது அழுகையைத்தாண்டி
ஒன்றும் சொல்லிவிடப் போவதில்லை
நகர்ந்துகொண்டே இருக்கும்
காலத்தின் நகர்வில்
ஆணியடித்த ஆற்றின்
வளைவு நெளிவுகளாய்
நகராமலே வட்டமிடுகிறது
நாளைய கனவுகளும்
நேற்றைய இழப்புகளும்…
தூண்டிலை வீசியவனுக்கு கூட
விறகோ காலிப்பைகளோ
கரைவந்து சேரும்
கற்றப்பிறகும் கைக்கட்டி நிற்பதும்
காரணமில்லாமல்
கரங்களில் வியர்ப்பதுமாகத்தான்
ஒழுகலாகிறது நாட்கள்
கழுத்துப்பட்டனை
அவிழ்த்து விட்டு நடந்தாலும்
ஒருபோதும் கழுத்தை நெறித்துவிடவில்லை
அமைதியாக என்னைப்பார்த்திடும்
எனது பிம்பம்…..


மீச்சிறுவெளி

ஒருவன் தொடர்ந்து செல்கிறான்
மற்றொருவன் அமர நினைக்கிறான்
கொள்கை என்னவோ ஒன்றுதான்
சூழலினை மனமும் உடலும்
ஏந்தி நடக்க இயலாமையே குறையாகிறது….

அவனுக்கு முன்னால் நான்
எனக்கு முன்னால் யாரோ
வளைவுகளில் தவறி விழுகிறது
முன்னேற்ற பட்டியல்

வெற்றிப் பெற்றவனுக்கு
வலி சிறந்த எடுகோள்
தோல்வியை தோளில் வைத்து
செல்பவனின் கையில் அளவுகோல்

கதையம்சங்கள் நிறைந்த
நிகழ்வில் இன்றுவரை
அந்த மரமும் அல்லை
அந்த அவனும் இல்லை

கசப்பான மரத்தின் கீழ்
சர்க்கரை வியாதிகாரனின் தடங்கள்
எறும்புகளுக்கு என்ன தெரியும்
கசப்பிற்கு இனிக்குமென்று….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.