மிளகு அத்தியாயம் நாற்பத்திமூன்று

உள்ளால் 1604

அப்பக்கா அதிகாலையிலேயே எழுந்துவிட்டாள். இரண்டு நாளாக நேரம் போனதே தெரியவில்லை. 

மிர்ஜானில் இருந்து அவளுடைய அன்புக்குரிய சிநேகிதி மிளகு ராணி சென்னபைரதேவி வந்திருக்கிறாள். நாளை இந்நேரம் அவள் திரும்பப் போகிறாள். அதற்குள் பேச வேண்டியது, பகிர வேண்டிய, , பாக்கி இருக்கும் தகவல், வம்பு, சுவாரசியமான கதை, ரசிக்க வேண்டிய பாட்டு என்று இன்னும் நிறைய இருக்கிறது. 

சென்னா பகிரக் கொஞ்சமும், கேட்க, சந்தோஷப்பட, வருத்தப்பட என்று உணர்ச்சி காட்ட  நிறையவுமாகச் செய்திகள் அணிவகுத்து நிற்கின்றன. அப்பக்காவுக்குச் சென்னாவிடம் சொல்வதே சந்தோஷமான காரியம்.

அரண்மனை தோட்டத்தில்  செய்குன்றின் பக்கத்தில் அப்பக்கா அமர்ந்திருக்கிறாள். அலையடித்து நகர்ந்து போய் வட்டமிடும் சிறு ஓடையும், ஓடைக்குள் ஹோவென்று ஒலி எழுப்பித் தண்ணீர் கொட்டும் அருவியுமாக ரமணீயமான  காலைச் சூழல் அது.   

எழுந்ததும் அப்பக்கா கடைப்பிடிக்கும் நவாப், சுல்தான் அரண்மனைப் பழக்கம் ஒன்று உண்டு. ஒரு பெரிய கோப்பை நிறையக் காய்ச்சிய சூடான பால். அதில் சர்க்கரை மறந்துகூடப் போடக்கூடாது. 

தட்டின் நடுவில் அந்த உயரக் கோப்பை. இரண்டு பக்கமும் இரண்டு பெரிய ஜிலேபிகள். ஜாங்கிரி இல்லை ஜிலேபி என்பதில் அப்பக்கா உறுதியாக இருக்கிறாள்.

 ஜாங்கிரி தென்னிந்திய இனிப்பு என்பாள் அப்பக்கா. நெய் மணக்க, கோதுமைச் சாறு காய்ச்சித் திரண்ட பூங்கொத்து போன்றது அது.  எல்லா சிங்காரமும் செய்யப்பட்டு தங்க நகை மாதிரி உருவாகித் தட்டை அடைத்துக் கொண்டு காணவும், முகரவும், உண்ணவும், நினைக்கவும் மகிழ்ச்சி தரும் ஜாங்கிரி. வளைந்து நெளிந்து எங்கே தொடக்கம், எங்கே முடிவு என்று விடை காண முடியாத குங்குமப்பூ நிற   இனிப்புப் பூ.  

அமைப்பு ஒழுங்கு குலையச் சீர்கேடு வந்தாலும் கவலைப்படாமல் ஒரு விள்ளல் கிள்ளி உண்டாலோ மெத்துமெத்தென்று நாவில் கரைவதாக ஜாங்கிரி இனிப்பு இனிப்பு இனிப்பு. முழுசும் உண்ணும் வரை இனிப்புத் தின்னும் ஆசை கள்ளத்தனமாக அடங்கியிருக்கும். உண்டதும் ஆசை திரும்ப நினைவுக் குமிழிட்டு வரும். இன்னொரு முறை இனிப்பான சந்தோஷம் தேடிக் கிடைக்காமல் அது தீராது. 

ஜிலேபி அப்படி இல்லை. வெறும் ஒற்றைக் கம்பி தம்பூரா.   நெய் கலந்த எண்ணெயில் பொறித்தெடுக்கும்போதே சுற்றின் மேல் சுற்றாகத் தேங்குழல் போல, எளிதில் ஆதியும் அந்தமும் புலப்பட சர்க்கரைப் பாகு புரட்டி வரும் ஜிலேபி. விண்டால் இனிப்பு தட்டுப்படாது முதலில். புளிக்கும். புளிப்பு தணிந்து மிதமான இனிப்பு அடுத்துத் தட்டுப்படும் நாவில். 

அப்பக்கா ஒரு விள்ளல் ஜிலேபியை உண்டு ஒரு மடக்கு சூடான பாலை உறிஞ்சினாள்.  அடுத்த விள்ளலைக் கண்கள் மூடிக் கடிக்க தட்டில் விரல் ஊர்ந்தபோது தட்டு வெறுந்தட்டாக இருந்தது. 

ஓசைப்படாமல் அந்த மீதி ஜிலேபியை சென்னபைரதேவி கபளீகரம் செய்துவிட்டுச் சிரித்தபடி அருகில் அமர்ந்திருந்தாள். 

செய்குன்றமும் அருவியும் ஓடையும் அவளுக்கும் பிடித்த காட்சிகள் தான். சலசலத்துத் தண்ணீர் ஓடுவதும் ஓ என்ற இரைச்சலோடு தண்ணீர் விழுவதும் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருக்க மனதில் சாந்தியும் அலாதி ஆனந்தமும் கிடைப்பதை இரண்டு சிநேகிதிகளும் உணர்ந்து வார்த்தை இல்லாமல் பேசிக் கொண்டிருந்தார்கள். 

இன்னொரு தட்டில் ஜிலேபியும் பாலும் பின்னாலேயே வைத்தியனும் வர சென்னா சிரித்துவிட்டாள். அடுத்த சிரிப்பு அப்பக்கா சௌதா மகாராணியுடையது. வைத்தியன் சிரிக்கக் கூடாது என்று தீர்மானித்தது போல் மேல் துண்டை வாயைச் சுற்றி இட்டு வேகமாக நடந்து போனது தான் இரண்டு மகாராணியரையும் மேலும் சிரிக்கவைத்தது. 

”சீக்கிரமே நீயும் எழுந்திட்டியா அல்லது நீ எழுந்திருக்கற நேரம் இதுதானா?”  அப்பக்கா சென்னாவைக் கேட்டாள்.

”உள்ளால் மழையும், குளிரும் உறங்கு உறங்குன்னு இதமா உடம்பை வருடி கண்ணை இமைமூட வைக்கறது. ஆனா உடலுக்கு உள்ளே இருக்கற ஏதோ ஒரு பெயர் தெரியாத, வடிவம் இல்லாத கடியாரம் சரியாக இந்த நேரத்துக்கு எழுப்பி உட்கார வச்சுடறதுடி துளுவி” அப்பக்கா மடியில் தலை வைத்துப் படுத்தபடி அவள் முகத்தைப் பார்த்துப் பேசினாள் சென்னா.

ஜயவிஜயீபவ. 

சீராக ஒலிக்கும் கோஷங்கள். யார் வந்திருக்கிறார்கள்? சென்னபைரதேவி அப்பக்காவை குழப்பத்தோடு பார்த்தாள். அப்பக்காவின் வீட்டுக்காரர் வீரநரசிம்மன் வந்திருக்கிறாரா? 

அவள் சந்தேகம் புரிந்ததுபோல் அப்பக்கா, ”அவரை கோட்டைக்குள்ளேயே அனுமதிக்க வேணாம்னு தடை செஞ்சு வச்சிருக்கே. அதுக்கு மேலே வரமாட்டார்” என்று திடமாகச் சொன்னாள்.

அப்பக்கா வாசலுக்குப் போய்ப் பார்த்து அங்கே இருந்து சந்தோஷமும், பதைபதைப்புமாகக் கூவினாள் – ”பானுமதி, வா வா வாடி!”

”நான் உன்னைப் பாக்க வரல்லே” என்று பதில் குரல். பெண்குரல்.

”சரி வேணாம், நீ என்னைப் பார்க்க வராட்டா போகுது..  உங்க சென்னா சிக்கம்மா இருக்கா. வந்து பாரு” என்று தன் மகள் பானுமதியிடம் சொன்னாள் அப்பக்கா. அவள் குரலில் ஒரு துயரத்தை உணர சென்னாவால் முடிந்தது.

நெடுநெடுவென்று நல்ல உயரமும், வடிவான கருப்பும் களையான முகமும் இனிமையான குரலுமாக பானுமதி அலங்காரமாக நடந்து உள்ளே வந்தாள். எத்தனையோ லட்சணத்தில் கூர்மையான அறிவைத் தவிர மீதி அனைத்தையும் கம்பீரமான அழகாக அப்பா வீர நரசிம்மனிடம் பெற்றிருந்தாள் பானுமதி. புத்தி மட்டும் அம்மா அப்பக்கா போல் சிறப்பாக அமைந்திருப்பதாக பிரதேசமெங்கும் சொல்வதுண்டு.

“சிக்கம்மா நல்லா இருக்கீங்களா?”  அவள் கையைப் பற்றித் தன் கையில் வைத்துக்கொண்டு பானுமதி சென்னாவைக் கேட்டாள். 

”தேவாங்கு மாதிரி மெலிஞ்சு போயிருக்கே நீ அப்படீன்னு அவ கிட்டே சொல்லுடி சென்னா” அப்பக்கா சொன்னாள். 

“அப்படி கரிசனம்னா தினம் சாப்பாடு கொடுத்து அனுப்பலாம்தானே சிக்கம்மா. நான் ஏதோ எனக்கு தெரிஞ்சதை பொங்கிச் சாப்பிடறேன்”.

“அப்படி என்ன தலைவிதியான்னு கேளுடி சென்னா. இத்தனை பெரிசா கோட்டை மாளிகை இருக்கு. அரண்மனைன்னு சொன்னா அவளுக்குப் பிடிக்காது. இந்த மாளிகையிலே இடம் இல்லையா என்ன அவளுக்கு?” அப்பக்கா முறையிட்டாள்.

“கட்டிக் கொடுத்தும் புகுந்த வீட்டிலே இருக்காமல், வீட்டுக்காரனோடு சண்டை போட்டுக்கிட்டு வந்து அம்மா வீட்டிலே வெட்டிப் பொழுது போக்கறா, புருஷனோடு கூட இல்லாம இங்கே என்ன வெட்டி முறிக்கறான்னு பெத்தவளே சொன்னா, சிக்கம்மா, நான் என்ன பண்ணுவேன்? எலிவளைன்னாலும் தனிவளையா எனக்கே ஒரு இடம் பார்த்துக்கிட்டேன். அங்கே வந்துட்டு போங்க ஒரு நடை. கூப்பிடத்தான் வந்தேன் சிக்கம்மா. வாங்க. எழுந்திருச்சு வாங்க.  அவிச்சு இறக்கின இட்டலி வாசம் கம்முனு வருது. வெங்காய துவையலா கூட? எட்டு ஊருக்கு வாசம் அடிக்குதே” பானுமதி சென்னாவை எழுப்பிக் கையைப் பிடித்துக் கொண்டு நடக்க, அவளுடைய சாரட்டும், குதிரை வீரர்களும் தொடர்ந்ததை அப்பக்கா கவனித்தாள். 

“காலைப் பலகாரம் தின்னுட்டு போறீங்களாடி? இட்டலி கூட பால் பணியாரம், நெய்ப் பொங்கல், மிளகு வடை சென்னாவுக்காக சுட்டிருக்கு” அப்பக்கா திரும்பி நடக்கும் மகள் பானுமதியிடம் சற்றே குரல் உயர்த்திக் கேட்டாள்.

“ஒண்ணும் வேணாம்.  இன்னிக்கு என் மகளோடு காலை பசியாறப் போறேன்” என்றாள் பானுமதியின் வேகத்துக்கு ஈடு கொடுத்தபடி நடந்துகொண்டு சென்னா. பின்னால் திரும்பி ”அங்கே அனுப்பு” என்றாள் சைகையில்.

“சிக்கம்மாளாச்சு, மகளு ஆச்சு.. நல்லா இருங்கடி, நல்லா இருங்க”.

ஒரு மணி நேரம் கழித்து சாரட்கள் அணிவகுப்பு அப்பக்கா மாளிகை முன்னால் வந்து நின்றது. 

சென்னபைரதேவிதான். 

”சாப்பிட்டு நடக்க முடியலேடி துளுவச்சி, ஒரு பக்கமா கொண்டுபோய்த் தள்ளுது. அதான் சாரட்டு சவாரி, இல்லாட்டாலும் குதிரை ஆள் அம்பு எல்லாம் இந்த உடம்பிலே உசிர் இருக்கறவரை கூடவே வரும். மூச்சு நின்னா, நின்னா இல்லே, சென்னா”. சென்னபைரதேவி சிரித்தாள்.

லொளலோட்டே எல்லா லொளலோட்டே

சென்னபைரதேவி   பாட அப்பக்காவும் சேர்ந்து கொண்டாள்.

லொளலோட்டே எல்லா லொளலோட்டே

ஆன குதிர எல்லா லொளலோட்டே

சேன பண்டாரமு லொளலோட்டே

சிநேகிதிகள் கைகளை உயர்த்திச் சேர்த்துத் தட்டி நீரூற்றைச் சுற்றி பாடிக்கொண்டே ஆடினார்கள். யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, கருவூலம் எல்லாம் எந்த மதிப்பும், பயனும் இல்லாதது என்று ஒதுக்கி, விட்டலனை சரண்புகச் சொல்லும் புரந்தரதாசரின் தேவர்நாமா பாடல் அது.

 அப்பக்கா மாளிகைத் தோட்டச் சுவருக்கு அந்தப் பக்கமாக மறைவாக நின்று கொண்டிருந்த வைத்தியர் மகாராணி சென்னாவுக்கும் அப்பக்கா ராணிக்கும் கைகுவித்து வணக்கம் சொல்லியபடி வெளியே வந்தார். 

“அட நீ இருக்கேன்னு மறந்து நான் பாட்டுக்கு ஏதோ கூவறேனே” என்று சென்னா பயந்த கோலம் காட்டினாள்.

”கிறுகிறுப்புக்கு இந்த லேகியம் நீங்க எடுத்துக்கவே இல்லை. நெல்பரலி போட்டு காய்ச்சி முந்தாநாள் தான் கொடுத்தனுப்பினேன். முதல்லே அதை சாப்பிடுங்க”

நெல்பரலி கலந்த லேகியம் எடுத்துக் கொடுத்து சென்னாவை அதை விழுங்கச் சொன்ன வைத்தியர், என்னென்ன சாப்பிட்டாள் மகராணி என்று விசாரணை செய்து கொண்டிருந்தார்.

”நாலு ஜிலேபியா, அப்போ இந்த குளிகை ரெண்டு. பால் பணியாரமா? இந்த லேகியம் ஒரு மடக்கு. நெய்ப் பொங்கலா? சீரக இஞ்சி மொரபா. மிளகு வடை நாலா சரிதான். நெல்லிக்காய் லேகியம் உடனே சாப்பிட்டாகணும் என்று வீட்டுப்பாடம் எழுதாமல் வந்த குழந்தைக்கு பாட ரீதியாகத் தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கும் வாத்தியார் மாதிரி வைத்தியர் ஒவ்வொன்றாகக் கொடுக்கப் பொறுமையோடு விழுங்கிக் கொண்டிருந்த சென்னா, ’போதும் போடா’ என்று வேகமாக உள்ளே போய்விட்டாள். வைத்தியருக்கும் அப்பக்காவுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

”என்ன சொல்றா சிக்கம்மா மகளு?” அப்பக்கா சென்னாவை ஆர்வத்தோடு கேட்டாள்.

”உன் மகள் வீட்டை நல்லா வச்சிருக்காடி”. 

“ஆமா என்னைவிட வீடு, கோட்டை மாளிகை எல்லாம் அருமையா வச்சிருப்பா. என்ன பிரயோஜனம்? இதுவரை ஒரு வாரம் சேர்ந்து இருந்திருக்காங்களா அவளும் மாப்பிள்ளையும்?” அப்பக்கா அங்கலாய்த்தாள். 

“நான் அடுத்த வாரம் உன் மாப்பிள்ளையை மிர்ஜானுக்கு அழைக்கப் போறேன். பானுமதியும் வருவா. நீ கிடையாதுடி துளுவச்சி”. 

“ஐயே நான் வரணும்னு அலைஞ்சுட்டிருக்கேன் பாரு.. ஏதோ இந்தக் குடும்பத்துக்கு நல்லது செய்ய நீ நினைக்கறே. குறுக்கே நிக்க எனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?” என்று குரல் தழுதழுத்தாள் அப்பக்கா.

”பானுமதி கூட பேசிக்கிட்டே சாப்பிட்டேன்.. நல்ல பேச்சு நல்ல பலகாரம். குளிச்சுட்டு வரேன். நீ சாப்பிட்டதுக்கு அப்புறம் கொஞ்சம் பேசலாமாடி என் செல்லி அப்பக்காளே. நேரம் இருக்குமாடி பொண்ணே?” 

அப்பக்கா கண் நிறைய கோரிக்கையோடு நிற்கும் சென்னபைரதேவியைப் பார்க்கிறாள். 

“உனக்கு இல்லாததா நேரமும் மத்ததும் எல்லாம்? குளிச்சுட்டு வா. நானும் குளிக்கணும்”.

சொல்லி விட்டாளே தவிர குளித்ததும் நேரம் உடனே இருவருக்கும் கிடைக்கவில்லை. சென்னா வைத்தியரோடு வைத்தியராகவும், ஒற்றர் படை மறைவிலிருக்கும் அதிகாரியாகவும் பேசவும்,  மிங்குவுக்கு சென்னா தரிக்கப் போகும் உடை, விழுங்க வேண்டிய மருந்து என்று நிர்தேசம் நல்கவும், தன்னோடு வந்த சாரட் ஓட்டிகளும், குதிரை வீரர்களும்   சாப்பிடவும் இருக்கவும் உறங்கவுமான சௌகரியங்கள் பற்றி விசாரிக்கவும், குதிரைகளின் நலம், இருப்பு பற்றி விசாரிக்கவுமாக நேரம் கடந்து போனது. அடுத்து வந்தவர் ஒற்றர் படை சார்பில் ராணியிடம் தகவல் தெரிவித்து உத்தரவு கோர வந்தார்.

ஒற்றர் படை மூத்த ஒற்றரான செங்கமலத் தாயார் வீட்டுத் தோட்டத்தில் காய்கறி பறித்துக் கொண்டிருந்தபோது யாரோ சீனப் பட்டாசைக் கொளுத்தி அவள் மேல் போட்டதாக முதல் விசாரணை தெரியப்படுத்தியது.  தெருக்கோடியில் விபரீதமாக விளையாடும் பதின்ம வயதுப் பையன்கள் ஏழெட்டுப் பேரை காவலர்கள் வளைத்துப் பிடித்து மேலும் விசாரணை நடந்தது. விளையாட்டாக அவர்கள் பட்டாசு கொளுத்தி செங்கமலத் தாயார் மேல் போடக் காரணம் அவள் சிடுசிடுவென்று தெருமுனை கூட்ட அரட்டைகளைக் கலைத்து விடுவதை அடிக்கடி செய்வது தானாம். இவர்கள் பயங்கரவாதிகளோடு தொடர்பு இல்லாதவர்கள். இது ஒரு விசாரணை முடிவு.

இன்னொரு விசாரணை இழை, லிஸ்பனில் இருந்தபடிக்கே சென்னாவை ஓய்த்து உட்கார வைக்க நிகழக்கூடிய சதி பற்றியது. சக்தி குறைந்த வெடிவெடிப்பில் இருந்து தொடங்க வேண்டும்.  சக்தி அதிகரித்து, நெருப்புப் பற்றி வெடித்ததுமே அடுத்து நிற்கும் ஆளைக் கொல்லும் அதிக அளவு வெடியுப்பு கலந்த வெடிகளை உருவாக்க  வேண்டும். அவற்றை உபயோகப்படுத்திக் கூடுதல் நாசம் விளைவிக்கும் முயற்சிகளை மேலெடுத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் அழிவு தான் குறிக்கோள். சிறுவர்களை முன்னால் நிறுத்தி வட்டத்துக்கு உள்ளே செயல்படுகிறவர்கள் அந்தத் தீவிரவாதிகளாக இருக்கக் கூடும் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வு, நடக்கக் கூடியது என்ற வகையில் பட்டது. சாட்சியங்களோ ஆதாரங்களோ எதுவும் இல்லாத, தர்க்கரீதியான ஆய்வுமுடிவு.

இப்போதைக்கு செங்கமலத் தாயார் விஷயமாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் பதின்ம வயதினர் முதல் வெடியுப்பைக் கையாண்டவர்களின் பட்டியல் எடுத்துப் பெயர் உள்ளவர்களின் பின்புலத்தை உடனடியாக வேகமாக ஆராய வேண்டும் என்றும் சென்னாதேவி மகராணி ஆணை பிறப்பித்தாள். சிறுவர்களைச் சிறைவைக்க அவள் மனம் ஒப்பவில்லை. 

சென்னா அரசாங்கக் காரியங்களை இப்படி கவனிக்க, அடுத்த அறை ஒன்றில் அப்பக்கா மகராணி உள்ளால் பிரதேச சமாசாரங்களில் ஆழ்ந்திருந்தாள். பெரும்பாலும் ஏற்றுமதி தொடர்பானவை அவை.

அப்பக்கா பண்டகசாலை நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளோடு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து அடுத்த நாள் காலை கூட்டம் நடைபெறத் தீர்மானித்தாள். 

இரண்டு பேரும் இந்த ராஜாங்க காரியம் எல்லாம் முடிந்து அப்பக்கா சாப்பிட உட்காரும்போது இட்டலிகள் சூடு ஆறியிருந்தன. 

“முன்னொரு காலத்திலே ஆறின பலகாரத்தை களைஞ்சுட்டு புதுசா சூடா கேப்பேன். அந்த ருசிபேதம் எல்லாம் இந்த அப்பக்காவுக்கு தெரியாது. ஒரு நாள் முழுக்க தணுத்து போய்க் கிடந்தாலும் ஏதோ சாப்பிடணும்னு சாப்பிட்டுடுவேன். ருசியா தின்னு என்னத்தைக் கண்டோம். செலவு தான் ரெட்டையா ஆகுது. பழைய பலகாரத்தை பண்ண, எறிய, புதுசா செய்ய இப்படி தண்டச் செலவு செய்ய ராஜாங்க கஜானாவிலே வராகன் கம்மி. என்ன சொல்றே?” அப்பக்கா சிரித்தாள். மங்குஸ்தான் பழச்சாற்றை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக்கொண்டு அப்பக்கா சொன்னதை ஆமோதித்தபடி சென்னா அவள் அருகில் அமர்ந்திருந்தாள்.

”அப்பி ஒரு கோரிக்கை, கிறுக்கச்சியாயிட்டா இந்த சென்னான்னு நினைக்காதே. முதல்லேயே சொல்லிட்டேன்”. திடுதிப்பென்று சென்னா ஆரம்பித்தாள்.

“சொல்லு, வெடியுப்பா?” 

சட்டென்று அப்பக்கா விஷயத்துக்கு வந்து விட்டாள். ”அதுவும் தான் அதுக்கு மேலேயும் தான்” என்றாள் சொல்லிப் புரிய வைக்க வேண்டிய தேவை இல்லை என்பதை உணர்ந்த சென்னா. கற்பூர புத்தி அப்பக்காவுடையது என்று அவள் அறிவாள்.

”என் பெயரைக் கெடுத்து பதவியிலே இருந்து தள்ள ஒரு குழு வேலை பார்த்துக்கிட்டிருக்கு. இந்துக்களுக்கும் சமணர்களுக்கும் மதவேறுபாடு கற்பித்து நான் ஒரு மதத்தோட ஆதரவா செயல்படறதாக பொய்ப் பிரச்சாரம் பண்ணறதும், யாருக்கும் எதுக்கும் சேதம் இல்லாமல் ஆனால் அதிர்ச்சி உண்டாக்கறதாக வெடி மருந்து வெடிச்சு பயமுறுத்தறதும் இவங்க வேலை. இப்படி செய்யறவங்களோட, உங்கிட்டே சொல்லறதுக்கு என்ன, அவங்க கூட அவங்க தலைமையே நேமிநாதன் தான்னு தோணுது. என் மகன். நான் அவனோடு எப்படி நடக்கணும்? ரெண்டு மதத்து மகாஜனங்களோடும் எப்படி நடந்துக்கணும்னு நீ நினைக்கறே? உற்ற தோழியாக உன்கிட்டே மட்டும் தான் ஆலோசனை கேட்கறேன் அப்பி. சொல்லுடி”

சென்னா அப்பக்கா கையைப் பற்றிக் கொண்டாள். 

”ஒ இது இப்போ நான் பதில் சொல்ல வேண்டிய கேள்வியா?” அப்பக்கா கேட்டாள்.

“இப்ப உடனே முடியாதுன்னா  பசியாறிட்டு சொல்லு. இல்லே, ரெண்டு நாள் எடுத்து யோசிச்சு எழுதி வைத்தியன் மூலம் அனுப்பு”. 

“வேணாம் இப்பவே சொல்றேன். ஜெர்ஸோப்பா, மிர்ஜான், பட்கல், ஹொன்னாவர், ஏன் ஸ்ரீகோகர்ணம் இங்கே எல்லாம் சமணவழிபாடு, பிரார்த்தனை அரங்கமான சதுர்முக வசதி உடனே கட்டுவதை ஆரம்பிக்கலாம். பணம் சேகரிச்சு, நீயும் கொடுத்து வசதிகளை கட்டு. சமண செல்வந்தர்கள் பணம் இல்லே நீ சேகரிக்க வேண்டியது. இந்து செல்வந்தர்கள். அவங்களாக வந்து மனமுவந்து தரணும். செய்ய வைக்கறது உன் சாமர்த்தியம். நிச்சயம் மாட்டேன்னு சொல்ல மாட்டாங்க அவங்க யாரும். உன்மேல் நல்ல மதிப்பும் அன்பும் எல்லாரும் வச்சிருக்கறது உனக்குக் கிடைத்த பெரும் செல்வம். அது வெளியே தெரியணும். அதே போல் ஜெர்ஸோப்பாவிலேயும், ஹொன்னாவர்லேயும் மகாகணபதி ஷேத்ரம் கட்டணும். ஜைன மத செல்வந்தர்கள் பணம் தரட்டும்”. அபயராணி அப்பக்கா உற்சாகமாகப் பேசிக்கொண்டே போனாள்.

“அருமையான யோசனை. அது செய்யறது மட்டுமில்லே. பெண்கள், அதுவும் இளம் பெண்கள், புதுசா கல்யாணம் ஆன பெண்கள் நடுவிலே ஸ்ரீதுர்க்கை அம்மன் வழிபாடு பிரபலமாகிட்டு இருக்கறதை நீ பார்த்திருப்பே அப்பக்கா. விரலை குத்தி ரத்தம் எடுத்து பூவிலே சொட்டி வழிபடறதாம். கேரளம் சோட்டாணிக்கர காளி கோவில் வழிபாடு மாதிரி இது. என் தாதி மிங்கு கூட அன்னிக்கு விரல்லே கட்டுப் போட்டுட்டு வந்தா. குருதி பூஜையாம். இவங்க மாதிரியே வெறியர்களும்   ரத்தம் சிந்தி வெடிமருந்து செய்து பயன்படுத்தறதாலே, யார் பக்தர், யார் பயங்கரவாதின்னு குழம்பிப் போக வேண்டியிருக்கு. இந்தப் பெண்களுக்காக ஜெர்ஸூப்பாவிலேயும், பட்கல், ஹொன்னாவரிலும்,   துர்க்கை கோவில் கட்டப் போறேன். ரத்தம் சிந்தாத வழிபாடு அங்கே எல்லாம் பெரிய அளவிலே நடக்கும். ரத்தம் தான் வேணும்னு யாராவது ஆகம விதிகளைக் காட்டினால், குங்குமத்தைக் கரைச்சு ரத்தத்துக்குப் பதிலாக வச்சுக்கிட்டு குருதி பூஜை பண்ணலாம். துர்க்கை கோவித்துக்கொள்ள மாட்டாள்” என்றாள் சென்னா.

 ”பிரமாதம். இப்படி ஜனத்தொகையிலே ஒரு  முக்கியமான பகுதி மதம் கடந்து தெய்வத்தை தேடறதை நீ போகிற இடத்தில் எல்லாம் பிரதானப்படுத்து.  அப்புறம் ஒண்ணு. வெடியுப்பு ஏற்றுமதி நிர்வாகத் தலைமையை இப்போதைக்கு நேமிநாதனுக்கு கொடு. எவ்வளவு உற்பத்தியாகிறது, எவ்வளவு விற்குது, யாருக்கு, எவ்வளவு ஏற்றுமதி, எங்கே ஏற்றுமதி, யாருக்கு, யார் இங்கே செய்யறாங்க இப்படி எல்லா தகவலும் மாதம் ஒரு தடவை உனக்கு அனுப்பி விவாதிக்கணும். பாதுகாப்பு மந்திரி- சுரக்‌ஷா பிரதானின்னு அவனுக்கு ஒரு பெரிய பதவி கொடு. பதவி அவனை மாற்றுதா பார்க்கலாம்”.

”அப்பக்கா, நல்லா இருக்கு உன் யோசனை. இன்னும் ஒண்ணே ஒண்ணு. கையைக் காய வச்சுக்காதே. இன்னொரு இட்டலி போட்டுக்க. அதைத் தின்னு முடிக்கறதுக்குள்ளே சொல்லிடறேன்” அப்பக்கா தட்டில் இட்டலி போட்டபடி சொன்னாள் சென்னபைரதேவி மகாராணி.

”இட்டலிக்கும் ராஜாங்கத்துக்கும் என்ன சம்பந்தம்?”

“ஒண்ணும் இல்லே. லிஸ்பன் போகலாமான்னு யோசிக்கறேன்”

அப்பக்கா சிரித்து விட்டாள். “என்னடி ஏதோ உடுப்பி போகறேன், மங்களூர் போகறேன்னு சொல்ற மாதிரி சர்வசாதாரணமா லிஸ்பன் போகறேன்னு சொல்றே? விளையாடறியா?”

“விளையாட்டு எல்லாம் கிடையாது.  நான் லிஸ்பன் போய் பிலிப்பு அரசரை சந்தித்து மிளகு வர்த்தகத்தை போர்த்துகல்லோடு பெரிய அளவிலே ரெண்டு நாட்டுக்கும் ரொம்ப பிரயோஜனமானதா ஆக்கலாமான்னு யோசனை. அவரும் ஜெர்ஸோப்பா பிரதேச அரசோடு நல்ல வர்த்தக உடன்படிக்கை கையெழுத்து போட தயாராக இருக்கார். இமானுவேல் பெட்ரோ துரை, அதான் போர்ச்சுகீஸ் அரச பிரதிநிதி இருக்காரே, அவர் எல்லாம் தயார்நிலையிலே வச்சிருக்கார். நான் போனால் உடனே முடிஞ்சுடும். இப்போ போக வர, ஒப்பந்தம் கையெழுத்தாக இப்படி கிட்டத்தட்ட ரெண்டு மாசம் ஆகும். அந்த காலத்திலே இங்கே என் சார்பிலே அரசாங்கம் நீ தான்  நடத்தணும். என்னோட அரசவை பிரதானிகள் எட்டு பேரும் உனக்கு கீழ்ப்படிவாங்க. தளபதி, உதவி தளபதி இருவரும் பிரதானிகள் குழுவுக்கும் அடுத்து உனக்கும் காரியம் நோக்குவாங்க. ஒற்றர்படைத் தலைவர் எனக்கும் உனக்கும் நஞ்சுண்டையா பிரதானிக்கும் காரியம் நோக்குவார். வாராவாரம் நீயும் நானும் விளக்கமாக கடிதம் எழுதி தகவல் பரிமாறிக்கொண்டு இருப்போம். உனக்கு சரிப்படுமா? முடியும்னா சொல்லு,  நான் லிஸ்பன் போகலாமான்னு முடிவு பண்றேன். மூணு மாசம் வெளியே இருந்தே என் அருமை தோழியோட முழு ஆதரவோடு நான் ஆட்சி நடத்துவேன்னு யாருக்கும் நிரூபிக்கறதுக்கு இல்லே. எதிரி இல்லாத தீவிரவாதம் நசிச்சு போகும்னு காட்டறதுக்கும் தான்.” சென்னா தொலைவில் கண்கள் நிலைக்கத் தெளிவான எண்ணங்களைத் தெளிவான வார்த்தைகளாக எடுத்துச் சொன்னாள்.

”தாராளமா போய்ட்டு வா. நான் கவனிச்சுக்கிட்டிருப்பேன். நீ வந்ததும் திருப்பிக் கொடுத்துடுவேன். அது முக்கியம்” அப்பக்கா நிதானமாகச் சொன்னாள். 

ஓ என்று பெருங்குரல் எடுத்து ஆனந்த மிகுதியால் பேரொலி எழுப்பினாள் சென்னா. அவள் உடல் மயிர்க்கூச்செறிந்திருந்தது. கண்கள் கண்ணீர் மல்க, உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. ”அப்பக்கா அப்பக்கா அப்பக்கா” என்பதைத் தவிர வேறேதும் சென்னாவால் சொல்ல முடியவில்லை.

”எதுக்கும் நல்லா ஆராய இன்னும் ஒரு வாரம் எனக்குக் கொடு. ஸ்பெயின் மன்னர் போர்த்துகல்லுக்கும் அரசராக இருந்து ஒரு தலை – இரு உடல் இப்படி நிர்வாகம் பண்றதை நாம் பகடி பண்ணிட்டிருந்தோம். இப்போ நாமே அதைச் செய்யலாமான்னு பார்க்கறோம். நான் உன் நிலத்தையும் சேர்த்து நிர்வாகம் செய்தால், என் பிரதேசத்துலே நிர்வாகம் பாதிக்கப்படக் கூடாது. அதுக்கு நான் கூடுதல் நடவடிக்கை எடுக்கணும். விஜயநகரப் பேரரசு இந்த ஏற்பாட்டுக்கு என்ன சொல்வாங்கன்னு தெரியாது. அவங்க வேண்டாம்னு சொன்னால், இதை மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும்” என்றாள் அப்பக்கா. புன்முறுவலுடன் எல்லாம் சரிதான் என்றாள் சென்னா.

“விஜயநகரம் வலுவான பேரரசாக இருந்தது ஒரு காலம். இப்போது பாதுகாப்புச் சேவை அளித்து நம் போல குறுநில அரசர்களிடம் கப்பம் வாங்கி கஜானாவுக்கு வருமானம் சேர்க்கறதிலே மும்முரமாக இருக்காங்க. அவங்களுக்கு விஜயநகரத்தையே அப்பக்காவும், சென்னபைரதேவியும் ஆட்சி செய்தால் கூட பெரிய புகார் இருக்காது. விதிச்ச கப்பம், வேறே வரி ஏதும் இருந்தா அது எல்லாம் நேரத்தோடு கட்டினால் போதும். அவங்க நம்ம செயல்களிலே இடைபுகுந்து செய்யக் கூடியது எதுவுமில்லை. செய்யவும் ஆள், அம்பு, சேனை, கருவூலம் எதுவும் கைவசம் இல்லை” என்றாள் சென்னா. 

”அப்புறம், நீ சொல்றதை ஏற்றுக்கொள்ள நானும் நிபந்தனை விதிக்கட்டுமா?” புதிராகப் பார்த்தபடி அப்பக்கா கேட்டாள். 

“சொல்லுடி. உனக்கு இல்லாத நிபந்தனை உரிமை வேறே யாருக்கு இருக்கு?”

”உன் மிளகோடு கூட நான் ஏற்றுமதி பண்ற வெல்லம், பழுப்பு சர்க்கரை, சாயம் தோய்த்த துணி, கடுக்காய், வெடியுப்பு இதுகளும் உனக்கும் போர்த்துகல் அரசர் முதலாம் பிலிப்பு அவர்களுக்கும் நடுவிலே ஏற்படப் போகிற பெரும் வர்த்தக ஒப்பந்தத்திலே சேர்க்கப்படட்டும். வெடியுப்பை நீயும் நானும் சேர்ந்து இன்னும் பாதுகாப்பான வகையிலே ரெண்டு பிரதேசத்துக்கும் பொதுவான வெடியுப்பு பண்டகசாலை ஏற்படுத்தி வர்த்தகம் செய்வோம். வெடியுப்பு தேவை இல்லாதவங்க கையில் கிடைக்காமல் இருக்க,   வழி பண்ணுவோம். அப்புறம், இதற்கான சிறப்பு சிறு கப்பல் கட்டி வழியிலே எல்லாத் துறைமுகங்களிலும் அனுமதி வாங்கி வெடியுப்பை தகுந்த பாதுகாப்போடு ஏற்றுமதி செய்வோம். சூரத் போய் பெரிய கப்பல்லே அனுப்ப வேண்டாம். அவ்வளவு பெரிய லிஸ்பனோடு பேசி நல்லது நடத்த முடியும்னா மற்றவங்களோடு பேசி சாதிக்க என்ன கஷ்டம்?” அப்பக்கா நம்பிக்கையோடு உற்சாகமாகச் சொன்னாள்.

சென்னா புன்முறுவலுடன் அமர்ந்திருந்தாள். தட்டில் மிச்சம் இருந்த ஒற்றை இட்டலியை அப்பக்காவுக்கு ஊட்டுவது போல் பிடித்துக் கொண்டு ”வாயைத் திறடி” என்றாள்.

அவசரமாகச் சாப்பிடுவது போல் போக்குக்காட்டி சட்டென்று அப்பக்கா மௌனமானாள். பேச முயற்சி செய்து தோற்றாள். மறுமுறை முயன்றாள். 

“இட்டலி தின்னாளாடி என் மகளு? எத்தினி? பிடிச்சிருந்ததாமா?”  அப்பக்கா அழ ஆரம்பித்தாள்.

Series Navigation<< மிளகு-அத்தியாயம் நாற்பத்திரண்டுமிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.