பனிக்காலத்தின் பகல்

1.

வேகமாக மூன்று முறை அந்த மைதானத்தை ஓடி முடித்தவுடன் மூச்சு வாங்க கால் முட்டியில் கைவைத்து குனிந்து நின்றிருந்தேன். வியர்வைத் துளிகள் நெற்றியிலிருந்து இறங்கி நாசி நுனி தொட்டு பூமியில் விழுந்தபடி இருந்தன. ஒவ்வொரு துளியையும் அமிர்தம் போல ஆர்வமுடன் குடித்துக்கொண்டிருந்தது பூமி. தினம் அதிகாலை நடைப்பயிற்சி முடிந்தபின் மூன்று முறை இப்படி வியர்க்க ஓடிவிட்டு வீடு திரும்புவது வழக்கம். பின்னாலிருந்து குரல் கேட்டது.

“தம்பி”

கசங்கலான வெள்ளை வேட்டி, கதர் சட்டை. கையிலொரு பேப்பர். எழுபது அல்லது அதற்கும் மேலிருக்கும் வயதுடைய பெரியவர் நின்றிருந்தார். பார்த்தவுடன் புரிந்துவிட்டது தெக்கத்திக்காரர். 

“சொல்லுங்க”  மூச்சு இறைப்பது நின்றிருந்தது, வியர்வையை துடைத்துக்கொண்டே கேட்டேன்.

“இந்த விலாசத்துக்கு போகணும் தம்பி, ரெம்ப நேரமா தேடுதேன் ஒண்ணும் பிடிபடமாட்டிக்கி”

வெகு நாட்கள் கழித்து  ஊர் பாஷையைக் கேட்டவுடன் என்னையும் அறியாமல் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அவரிடமிருந்த விலாச பேப்பரை வாங்கிப் பார்த்தேன்.

“இது அடுத்த தெருவுலல்லா இருக்கு அண்ணாச்சி…இங்க தேடுனா போவமிடியாது…வாங்க நா கூட்டிக்கிட்டு போறேன்”

“ஓ தம்பிக்கும் தெக்கயா..எந்த ஊருப்பு?” அவரது முகத்திலிருந்த களைப்பு நீங்கி உற்சாகமாகிவிட்டார்.

“சொந்த ஊரு குரும்பூர் அண்ணாச்சி…சென்னைக்கு வந்து செட்டிலாகி பத்துவருசம் ஆவுது பாத்துக்கிடுங்க…”

“ஓ குரும்பூரா…நமக்கு நாசரேத்து…இங்க எதுலப்பு வேல பாக்க?”

“இங்க ஒரு காலேஜ்ல ப்ரொபசரா இருக்கேன் அண்ணாச்சி” அடுத்த தெருவிற்குள் நுழைந்தோம். அதிகாலை சென்னை எப்போதும் அழகானது. அந்தத் தெருவின் இருபுறமும் மரங்களிருந்தன. தனித்தனி வீடுகள். அங்கொன்றும் இங்கொன்றுமாக வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்தன கார்கள். 

வீட்டு வாசலின் முன் சென்று அழைப்புமணியை அழுத்தியவுடன் ஒரு பெண் கதவைத் திறந்தார். பெரியவரைப் பார்த்ததும் புன்னகைத்தபடியே வந்து கேட்டைத் திறந்து அவரிடமிருந்த ஏர்பேக்கை வாங்கிக்கொண்டார். பெரியவர் ரொம்ப நன்றி என்றபடி கையெடுத்து கும்பிட்டார். நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். 

2.

மறுநாள் அதிகாலை மைதானத்திற்கு சென்றபோது பனிபடர்ந்திருந்த சிறுபுற்களைப் பார்த்தபடியே நடந்தேன். இந்த டிசம்பர் மாதக் காலை எப்பொழுதும் பனியுடனே மலர்கிறது. அறுபது நிமிட நடைப்பயிற்சிக்குப் பின் மூன்று முறை மைதானத்தை சுற்றி ஓடவேண்டும். முதல் இரண்டு சுற்று ஓட்டத்திற்கு பின் மூன்றாவது சுற்று கொஞ்சம் கடினமாக இருக்கிறது. ஆனாலும் அதுதானே இலக்கு, மூச்சிரைக்க ஓடி முடித்து நின்றபோது உடலெங்கும் வியர்த்து தொப்பலாக நனைந்திருந்தது டிசர்ட். 

கால் முட்டியில் கைவைத்து குனிந்து நின்றிருந்தேன். வியர்வைத் துளிகள் நெற்றியிலிருந்து இறங்கி நாசி நுனி தொட்டு பூமியில் விழுந்தபடி இருந்தன. 

பின்னாலிருந்து குரல் கேட்டது. நேற்றுக் கேட்ட அதே குரல். 

“தம்பி”

அதே பெரியவர், நேற்றைப் போலவே இன்றும் கையிலொரு காகிதத்தை வைத்தபடி நின்றிருந்தார்.

அவர் முகம் இன்று குழப்பத்திலிருப்பது போலிருந்தது. வயதானால் நாமும் இப்படித்தான் நம் வீட்டின் முகவரியை மறந்துவிடுவோமோ என்று நினைத்தபோது மனம் பதைபதைத்தது. முதியவர்களை நம் சமூகம் ஒழுங்காக நடத்துவதில்லை என்கிற குறை எப்போதும் என் மனதை அரித்தபடியே இருக்கும். வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றபோது அங்கே வயதானவர்களுக்கான வசதிகளும் வழிகாட்டுதல்களும் எவ்வளவு அதிகமாக இருக்கின்றன என்பதை எண்ணி வியந்திருக்கிறேன். நம் தேசத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியவர்களுக்குமான முக்கியத்துவம் எப்போதுமே குறைவு. அந்த நிலை மாறும் நாளுக்காக என்னால் முடிந்தவற்றை செய்தும் வருகிறேன். பல வித எண்ணங்கள் மனதில் ஓடியபடி இருந்தது. 

அவர் ஏதோவொரு கேள்வியை கேட்டார். முதல் பாதி கேள்வியை நான் உள்வாங்கிக்கொள்ள வில்லை.

“…. இங்க எதுலப்பு வேல பாக்க?”

“இங்க ஒரு காலேஜ்ல ப்ரொபசரா இருக்கேன் அண்ணாச்சி” அடுத்த தெருவிற்குள் நுழைந்தோம்.  நேற்றுப் பார்த்த அதே வீடு. அழைப்புமணியை அழுத்திவிட்டு காத்திருந்தபோது உள்ளிருந்து வந்த பெண்மணியைப் பார்த்து புன்னகைத்துவிட்டு பெரியவரை அவரிடம் விட்டுவிட்டு என் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். 

நேற்றைப் போலவே இன்றும் அவர் கையில் அந்த ஏர்பேக்கை வைத்திருந்தாரா இல்லையா என்பதை கவனிக்க தவறியிருந்தேன். ஒருவேளை அந்த வீட்டிலிருக்கும் பெண் பெரியவரை வீட்டை விட்டு துரத்தியிருப்பாரோ என்றெல்லாம் மனம் எண்ணத்துவங்கியது. வீட்டை அடைந்து என் தினசரி வேலைகளில் மூழ்கியபோது பெரியவரை மறந்திருந்தேன்.

3.

மறுநாள் அதிகாலை மைதானத்திற்கு சென்றபோது பனி அதிகமாக இருந்தது போலிருந்தது. எங்கும் வெண்பனி மூட்டம். சென்னையா அல்லது ஏதோவொரு மலைப்பிரதேசமா எனும் எண்ணும் அளவிற்கு சில்லென்றிருந்தது. அதிகாலைச் சென்னை எப்போதுமே என் மனதிற்கு மிக நெருக்கமானது. அரவமற்ற சாலையில் நடப்பது எவ்வளவு விருப்பமோ அதே அளவு அரவமற்ற மைதானத்தைப் பார்ப்பதும். இன்னும் நடைப்பயிற்சிக்கு வரும் மனிதர்கள் யாரும் வந்திருக்கவில்லை. அதுவரை நானும் இந்த மைதானமுமே மனதால் உரையாடிக்கொள்வோம். மைதானத்திலிருக்கும் புற்கள், மைதானத்தைச் சுற்றியிருக்கும் இரும்பு முள்வேலி அதில் அவ்வப்போது வந்து நின்று இளைப்பாறிச் செல்லும் பறவைகள் என என்னோடு பேசுவதற்கும் என்னுடனிருப்பதற்கும் இந்த மைதானத்தில் ஏராளமிருந்தன. 

மூச்சிரைக்க ஓடி முடித்து நின்றபோது உடலெங்கும் வியர்த்து தொப்பலாக நனைந்திருந்தது டிசர்ட். 

கால் முட்டியில் கைவைத்து குனிந்து நின்றிருந்தேன். வியர்வைத் துளிகள் நெற்றியிலிருந்து இறங்கி நாசி நுனி தொட்டு பூமியில் விழுந்தபடி இருந்தன. 

பின்னாலிருந்து குரல் கேட்டது. நேற்றுக் கேட்ட அதே குரல். 

“தம்பி”

அதே பெரியவர், நேற்றைப் போலவே இன்றும் கையிலொரு காகிதத்தை வைத்தபடி நின்றிருந்தார். எனக்கு அப்போதுதான் முதல் முறையாக குழப்பமும் பயமும் ஒருசேர தோன்றியது. தலை வலிப்பது போலிருந்தது. ஏன் இவர் தினமும் அந்த வீட்டைத் தேடுகிறார்? ஒருவேளை மனநலம் பாதிக்கப்பட்டவராக இருப்பாரோ எனத் தோன்றியபோது அவர் மீது இரக்கம் வந்தது.

நான் பேச ஆரம்பிப்பதற்குள் அவர் அருகில் வந்து “இந்த விலாசத்துக்கு போகணும் தம்பி, ரெம்ப நேரமா தேடுதேன் ஒண்ணும் பிடிபடமாட்டிக்கி” என்றார்.

அவரை அழைத்துக்கொண்டு அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டே அடுத்த தெருவை நோக்கி நடந்துகொண்டிருந்தேன். 

அதே வீடு. அதே பெண்மணி. 

“தாகமா இருக்கு கொஞ்சந் தண்ணீ கிடைக்குமா?” எனக்கு அந்த வீட்டிற்குள் போவதற்கு ஒரு வழி தேவைப்பட்டதால் தண்ணீர் கேட்டேன்.

“உள்ள வாங்க தம்பி” என்றபடி முன்னால் நடந்த பெரியவரை பின் தொடர்ந்து வீட்டிற்குள் சென்றேன். வரவேற்பறை மிக அழகாகவும் சுத்தமாகவும் இருந்தது. வரவேற்பறையிலிருந்த சோபாவில் அமரச் சொன்னார் பெரியவர். அந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தபோது உடம்பில் ஏதோவொரு புதுவித உணர்வு ஏற்பட்டது போலிருந்தது.வீட்டினுள்ளிருந்து ஓடிவந்த சிறுமி “ஐ…தாத்தா வந்தாச்சு..” என்றபடி அவரது கால்களைக் கட்டிக்கொண்டாள். அவளைத் தூக்கி கன்னத்தில் முத்தமிட்டு “எம்புள்ளா ஒனக்கு தாத்தா என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு..” என்றபடி தன் ஏர்பேக்கிலிருந்து ஒரு பொட்டலத்தைப் பிரித்து அதற்குள்ளிருந்த இனிப்புச் சேவை எடுத்துக்கொடுத்தார்.

தண்ணீர் வந்தது.  குடித்துவிட்டு நிமிர்ந்தபோது பெரியவர் வீட்டிற்குள் போயிருந்தார். சிறுமியுடன் அவர் விளையாடிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.

“அண்ணாச்சி அடிக்கடி வீட்ட மறந்துருவாவ போல…”  அந்தப் பெண்மணியிடம் கேட்டேன்.

“வயசாயிருச்சு…அதான் மாமாவுக்கு தெருவும் வீடும் பிடிபடல”  என்றவரின் முகத்தில் கொஞ்சமாய் கவலை தென்பட்டது. 

“செரிங்க பத்திரமா பாத்துக்குங்க…நான் கிளம்புறேன்” வீட்டை விட்டு வெளியேறி என் வீடு நோக்கி நடந்தேன். வீட்டிற்குள் நுழைந்து உடைமாற்றி கல்லூரிக்கு கிளம்புவதற்காக பைக்கை வீட்டை விட்டு வெளியே எடுத்து ஸ்டார்ட் செய்ய முயன்றபோது வேகமாக என்னைக் கடந்து உரசும் தொலைவில் சென்றது ஒரு ஸ்கூட்டி. தன் துப்பட்டாவினால் தலையைச் சுற்றி முகக்கவசம் போல் அணிந்திருந்தாள். இந்தச் சிறிய தெருவில் ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறாள் என்கிற எரிச்சலுடன் கிளம்பியபோது எனக்கு முன்னாலிருந்து பெரும் சப்தம் கேட்டது.அவள் சென்ற ஸ்கூட்டி கீழே கிடந்தது. யார் மீதோ மோதியதில் சற்று தொலைவில் கீழே விழுந்து மெல்ல எழ முயற்சித்தபடி இருந்தாள். என் பைக்கை நிறுத்திவிட்டு ஓடினேன். 

அங்கே தலையிலிருந்து ரத்தம் சிதற கீழே கிடந்தார் பெரியவர். அதே பெரியவர். இவர் ஏன் இங்கே வந்தார் என சிந்திக்கும் முன், கீழே விழுந்திருந்த அந்தப் பெண் வேகமாக தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து விரைந்து சென்றாள். ஓடிச்சென்று பெரியவரைத் தூக்க முயன்றேன். அவர் வலியில் முனகியபடி இருந்தார்.108ஐ அழைத்தேன்.

4.

ஆம்புலன்ஸ் வந்து பெரியவரை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். போலீஸ் என்னிடம் விசாரித்தது. அந்தப் பெண்ணை அடையாளம் காட்ட முடியுமா என்றனர். அவள் சென்ற ஸ்கூட்டியின் மாடலும் நிறமும் என்னவென்று சொன்னவுடன் சீக்கிரம் பிடித்துவிடலாம் என்றார் ஏட்டு ஒருவர். அன்று கல்லூரிக்கு விடுப்பு சொல்லிவிட்டு வீட்டிற்குள் வந்து அமர்ந்தேன். அந்தப் பெண் என் மீது உரசியிருந்தால் பெரியவர் தப்பித்திருப்பாரே எனத் தோன்றியது. எதுவும் செய்யத் தோன்றவில்லை. ஒருவேளை பெரியவர் இறந்துவிட்டால் அந்தச் சிறுமியிடம் என்ன சொல்லி தேற்றுவது? தாத்தா இனி வரமாட்டார் என்றால் புரிந்துகொள்ளும் வயதில்லையே. மனம் கனத்தது. இனி யார் அந்தச் சிறுமிக்கு இனிப்புச்சேவு வாங்கி வருவார்கள்? இதையெல்லாம் நான் ஏன் யோசிக்கிறேன்? ஒரு மரணத்தை தடுக்கக்கூடிய சக்தி நமக்கிருந்தால் எப்படி இருக்கும்? பலவித கேள்விகளால் கழிந்தது அன்றைய பொழுது.

5.

மறுநாள் அதிகாலை எழுந்து மைதானத்திற்கு போக விருப்பமில்லாமல் படுக்கையில் புரண்டபடி இருந்தேன். உடல் சோர்வாக இருந்தது. ஆனாலும் மைதானத்திற்குப் போவது உடலுக்கும் மனதுக்கும் இதமாக இருக்கும் என்பதால் என் நடைபயிற்சிக்கான உடையை மாற்றிக்கொண்டு மைதானம் நோக்கி நடந்தேன். ஒவ்வொரு காலையும் ஒவ்வொரு விதமாக புலர்கிறது. அதிலும் பனி நிறைந்த அதிகாலைகள் பவித்திரமானவை. அந்தப் பனியினூடாக மனம் பயணித்து எங்கெங்கோ சென்று திரும்பும். நடையை துவக்கினேன். மனது கொஞ்சம் கொஞ்சமாக உற்சாக நிலைக்கு மாறிக்கொண்டிருந்தது. நடைப்பயிற்சியின் முக்கிய அம்சம் அது உடலுக்கு மட்டும் உற்சாகத்தை தருவதோடு நின்றுவிடுவதில்லை. மனதின் சோர்வையும் உடனே நீக்கும் கருவியாக நடைப்பயிற்சி இருக்கிறது என்று நினைத்தபடியே நடந்து முடித்துவிட்டு, இரண்டு சுற்று ஓட்டத்தையும் தொடர்ந்தேன். 

மூன்றாவது சுற்றையும் ஓடிமுடித்துவிட்டு மூச்சிரைக்க நின்றபோது உடலெங்கும் வியர்த்து தொப்பலாக நனைந்திருந்தது டிசர்ட். 

கால் முட்டியில் கைவைத்து குனிந்து நின்றிருந்தேன். வியர்வைத் துளிகள் நெற்றியிலிருந்து இறங்கி நாசி நுனி தொட்டு பூமியில் விழுந்தபடி இருந்தன. 

பின்னாலிருந்து குரல் கேட்டது. நேற்றுக் கேட்ட அதே குரல். 

“தம்பி”

அதே பெரியவர், நேற்றைப் போலவே இன்றும் கையிலொரு காகிதத்தை வைத்தபடி நின்றிருந்தார். திடுக்கிட்டு விழித்தேன். இதயம் பலமாக அடித்துக்கொண்டது. படுக்கையில் எழுந்து உட்கார்ந்தபோது தலை அதிகமாக வலித்தது. என்ன இது கனவு? நேற்றிரவு பெரியவரை நினைத்துக்கொண்டே உறங்கியதால் வந்த கனவாக இருக்குமோ என்று நினைத்துக்கொண்டே மொபைலை எடுத்து மணியைப் பார்த்தேன். ஐந்து முப்பது. வழக்கமாக எழுகின்ற நேரம்.

நடைபயிற்சிக்கான உடையை மாற்றிக்கொண்டு மைதானம் நோக்கி நடந்தேன். மனதை ஏதோ செய்தபடியிருந்தது அந்தக் கனவு. மைதானத்தில் வழக்கம் போல யாருமில்லை. பனி அதிகமாக இருந்தது.  அந்தச் சிறுமியின் ஞாபகமாக இருந்தது. நடை எல்லாவற்றையும் மாற்றிவிடும். வேகமாக நடக்கத் துவங்கினேன். அறுபது நிமிட நடைக்குப் பின் வழக்கம்போல மூன்று சுற்று மைதானத்தை ஓடிமுடித்தவுடன் மூச்சிரைக்க நின்றபோது உடலெங்கும் வியர்த்து தொப்பலாக நனைந்திருந்தது டிசர்ட். 

கால் முட்டியில் கைவைத்து குனிந்து நின்றிருந்தேன். வியர்வைத் துளிகள் நெற்றியிலிருந்து இறங்கி நாசி நுனி தொட்டு பூமியில் விழுந்தபடி இருந்தன. 

பின்னாலிருந்து குரல் கேட்டது. நேற்றுக் கேட்ட அதே குரல். 

“தம்பி”

அதே பெரியவர், நேற்றைப் போலவே இன்றும் கையிலொரு காகிதத்தை வைத்தபடி நின்றிருந்தார்.  என்னுடலின் வியர்வை அதிகமானது, இதயத் துடிப்பின் ஓசை செவிகளில் கேட்டது. இது கனவல்ல என்பதை எனக்கு முன்னால் நடைபயிற்சியில் இருக்கும் மனிதர்களும் மைதானத்தைச் சுற்றி ஓடுகின்ற மனிதர்களும் உறுதி செய்தனர். 

இது சத்தியமாக கனவல்ல. இதோ என் முன்னால் அந்தப் பெரியவர் நிற்கிறார்.

அப்படியெனில் இது என்ன? நான் யோசிப்பதை கண்டவர்,

“இந்த விலாசத்துக்கு போகணும் தம்பி, ரெம்ப நேரமா தேடுதேன் ஒண்ணும் பிடிபடமாட்டிக்கி” என்றார். 

அவரை அடுத்த தெருவிலிருக்கும் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். அதே பெண்மணி பெரியவரிடமிருந்து ஏர்பேக்கை வாங்கிக்கொண்டு அழைத்துச் சென்றார். தண்ணீர் கேட்டு அவர்களைப் பின் தொடர்ந்தேன். “ஐ…தாத்தா” என்றபடி சிறுமி பெரியவரின் கால்களைக் கட்டிக்கொண்டு என்னை வினோதமாகப் பார்த்தாள்.

என் வீட்டிற்கு வந்து ஷவரின் கீழ் நின்று குளிக்கும் போது நடந்தவை அனைத்தும் காட்சிகளாக மனதில் ஓடியபடி இருந்தது. கல்லூரிக்கு கிளம்பி பைக்கை வெளியே எடுத்த வேகத்தில் என்னை உரசுவதுபோல வந்த பெண்ணின் ஸ்கூட்டியின் குறுக்கே புகுந்தேன். என் மீது மோதிய ஸ்கூட்டியிலிருந்து சிதறி விழுந்தாள் அவள்.

எனக்குக் கீழே விழுந்ததில் கையில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் துளிர்த்திருந்தது. அவள் மெல்ல எழுந்து அடிபட்டிருந்த தன் காலைத் தடவி விட்டபடி அமர்ந்திருந்தாள். அருகில் சென்றபோது அவளது முகத்தைச் சுற்றியிருந்த துப்பட்டா விலகியிருந்ததில் அவளது முகம் தெளிவாகத் தெரிந்தது. முகத்தைப் பார்த்தவுடன் அதிர்ச்சியில் உறைந்து நின்றேன். சற்று தொலைவில் நடந்து போய்க் கொண்டிருந்தார் பெரியவர்.

6.

மறுநாள் காலை எழுந்தவுடன் இன்றைய நாள் வாழ்வில் முக்கியமானதொரு நாளாக இருக்கப்போகிறது என்கிற எண்ணம் தோன்றியது. மைதானம் நோக்கி நடந்தபோது லேசான தூரல் போட்டது வானம். தெருநாயொன்று தன் குட்டியை கவ்விக்கொண்டு மழைக்கு ஒதுங்க இடம் தேடியபடி அலைந்துகொண்டிருந்தது. மனிதர்களை விட தெருநாய்கள் எவ்வளவோ மேல் எனத் தோன்றியது. நேற்றிரவு அவளைச் சந்தித்தபோது அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் மனதில் ஊசியாய் குத்திக்கொண்டே இருக்கிறது. இப்படியும் சில மனிதமிருகங்கள் உலவுகின்றனவா என நினைத்தபோது ஆத்திரம் தலைக்கேறியது. வேகமாக நடக்க ஆரம்பித்தேன். வழக்கத்தைவிட வேகமாக நடைப்பயிற்சி முடித்து, மூன்று சுற்று ஓடி முடித்தபோது உடலெங்கும் வியர்த்து தொப்பலாக நனைந்திருந்தது டிசர்ட். 

கால் முட்டியில் கைவைத்து குனிந்து நின்றிருந்தேன். வியர்வைத் துளிகள் நெற்றியிலிருந்து இறங்கி நாசி நுனி தொட்டு பூமியில் விழுந்தபடி இருந்தன. 

பின்னாலிருந்து குரல் கேட்டது. நேற்றுக் கேட்ட அதே குரல். 

“தம்பி”

அதே பெரியவர், நேற்றைப் போலவே இன்றும் கையிலொரு காகிதத்தை வைத்தபடி நின்றிருந்தார். 

“இந்த விலாசத்துக்கு போகணும் தம்பி, ரெம்ப நேரமா தேடுதேன் ஒண்ணும் பிடிபடமாட்டிக்கி” என்றார். 

“இப்படியொரு அட்ரசே இங்க இல்லியே அண்ணாச்சி…யாரோ ஒங்ககிட்ட தப்பா எழுதி கொடுத்துட்டாங்க”

அவர் முகம் கலவரமடைந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பதை முகம் காட்டிக் கொடுத்தது.

“போன் நம்பர் ஏதும் வச்சிருக்கியளா? இல்லன்னா இங்க வேற தெரிஞ்ச ஆளுவ இருக்காவளா?” தோளைத் தொட்டுக் கேட்டேன். இல்லை என்பது போல தலையாட்டினார்.

“அப்ப ஒண்ணுஞ் செய்யமிடியாது அண்ணாச்சி…எங்கூட வாங்க ஊர்க்கு பஸ் ஏத்தி விடுதேன்” என்றபடி அவரது ஏர்பேக்கை எடுத்துக்கொண்டு ஆட்டோவொன்றை பிடித்து கோயம்பேட்டிற்கு சென்று அவரை வழியனுப்பி வைத்தேன். 

வீட்டிற்கு வந்து குளியலறைக்குச் சென்று தாழிட்டு ஷவரைத் திறந்துவிட்டேன். வெந்நீரில் உடல் நனைந்துகொண்டிருந்தபோது அன்று அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்ததும் அவள் சொன்னதும் ஞாபகம் வந்தது. முதியவரின் வீட்டிலிருந்த அதே பெண்தான் ஸ்கூட்டியில் வந்தது. அன்று தன் மகளை மாமனாரிடம் விட்டுவிட்டு காய்கறி வாங்கச் சென்றவள் கடை மூடியிருந்ததால் உடனே வீடு திரும்பியிருக்கிறாள். பெயர்த்தி என்றும் பாராமல் அந்த வயதான மிருகம் தன் இச்சையை தீர்த்துக்கொள்ள அந்தப் பிஞ்சுப்பெண்ணிடம் தவறாக நடக்கத் துவங்கியதைப் பார்த்தவள் அவரை அடித்து வீட்டை விட்டு துரத்தியிருக்கிறாள். அவர் போன பின்னும் ஆத்திரம் தீராமல் தன் இருசக்கர வாகனத்தில் சென்று இடித்து தள்ளியதை அவள் சொல்லி முடித்தபோது இந்த வக்கிர உலகில் பிறந்ததை எண்ணி வெட்கித் தலைகுனிந்திருந்தேன். 

கால வளையத்தில் சிக்கியிருந்ததால் அவளுக்கு உதவி செய்கிறேன் என்று சத்தியம் செய்திருந்தேன். அந்தச் சத்தியத்தை இன்று நிறைவேற்றிதால் மனம் நிறைந்திருந்தது. இதுவொரு தற்காலிக முடிவுதான் என்றபோதும் இனி அவள் கவனமாக தன் மகளைப் பார்த்துக்கொள்வாள் என்று நினைத்தபோது மனசு லேசானது போலிருந்தது.

நாளை காலை மைதானத்திலிருந்து அவள் வீட்டிற்கு தனியாக செல்ல வேண்டும் என்று நினைத்தபடியே உறங்கிப் போனேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.