பத்ரிநாத் – ரிஷிகேஷ்

This entry is part 10 of 12 in the series கங்கா தேசத்தை நோக்கி

பத்ரிநாத்தில் உடலை ஊடுருவும் அதிகாலை குளிர் நாங்கள் எதிர்பாராத ஒன்று! இதற்கு கேதார்நாத்தே தேவலை என்று நினைக்க வைத்து விட்டது. கிட்டத்தட்ட கேதார்நாத் உயரத்தில் தான் பத்ரிநாத்தும் இருக்கிறது. நாங்கள் தங்கியிருந்த விடுதியின் மாடி அறையில் இருந்து பனிபடர்ந்த மலைகள் கதிரவனின் பொற்கதிர்களால் ஜொலிக்கும் தரிசனமும் கிடைக்க.. ஆகா! பார்க்குமிடங்களெல்லாம் பரமாத்மா. கண்ணெதிரே நீலகண்ட மலையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தது. இதோடு ‘சார்தாம்’ கோவில்கள் யாத்திரை முடிந்தாலும் அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்தியாவின் கடைசி கிராமமான ‘மனா’, புனித நதி சரஸ்வதி, பஞ்ச பிரயாகைகளைத் தரிசனம் செய்யாமல் யாத்திரை முழுமை பெறாது என்பதால் அங்குச் செல்ல தயாரானோம். சுடச்சுட இட்லி, உப்புமா, நூடுல்ஸ், ஆலு பரோட்டா, ஓட்ஸ், பிரட், பழரசம், காபி, டீ என்று காலை உணவு வகைகள் அனைத்தும் விடுதியில் கிடைத்தது. காசுக்கேற்ற கவனிப்பு. நன்றாக உபசரித்தார்கள். எட்டரை மணியளவில் விடுதியிலிருந்து ‘மனாவிற்குப் புறப்பட்டோம்.

மழையில் சாலைகள் சேதாரமாகி குண்டும் குழியுமான பாதையில் 15 நிமிடங்களுக்குள் கிராமத்தை அடைந்தோம். வழியெங்கும் நுரை ததும்ப பாய்ந்தோடும் சரஸ்வதி ஆறும் பரந்து விரிந்த இமயமலையின் அழகும் பனிச்சிகரங்களும் வசீகரிக்கிறது. பத்ரிநாத் கோவிலுக்கு வந்தவர்கள் அனைவரும் செல்லும் இடம் என்பதால் அந்தச் சாலையில் போக்குவரத்திற்கும் குறைவில்லை. அதிகளவில் சீக்கிய யாத்ரீகர்களையும் காண முடிந்தது. இந்தியாவில் சாலைகள் சீரமைப்பு நடந்திருப்பதால் பைக்குகளில் செல்லும் கூட்டமும் ‘சார்தாம்’ யாத்திரையில் அதிகரித்திருப்பது கண்கூடாகத் தெரிந்தது. “இந்த மலைப்பகுதிகளில் பைக்கில் சென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் தெரியுமா?” பயணம் முழுவதும் ஏக்கத்துடன் ஈஷ்வர் பெருமூச்சு விட்டுக் கொண்டே வந்தார். யமுனோத்ரி, கங்கோத்ரி பகுதிகளில் கரடு முரடாக அழகின்றி இருந்த இமயமலை திபெத்திய எல்லையை நெருங்குகையில் பசுமையைப் போர்த்தியபடி வலம் வந்தது கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது.

இந்திய-சீனா ஆக்கிரமிப்பு திபெத்திய எல்லையில் அமைந்திருக்கும் ‘மனா’, சமோலி மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் கடைசி குக்கிராமம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 3,200மீட்டர் உயரத்தில் இருக்கிறது. ஊரின் உள்ளே நடந்து செல்லும் பாதைகள் மட்டுமே இருப்பதால் பயணிகளுடன் வரும் வண்டிகளை கிராமத்தின் வெளியிலேயே நிறுத்தி விடுகிறார்கள். வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் தனித்துவமான மரபுகளுக்குப் பெயர் பெற்ற ‘போட்டியாஸ்’ (Bhotias) என்ற மலைவாழ் திபெத்திய வம்சாவளியினர் இங்கே வசிக்கிறார்கள். அவர்களுக்கென்ற மொழி, உணவு, உடை, கலாச்சாரம் உள்ளது. நெசவு நெய்தல் பாரம்பரிய தொழிலாக இருப்பதால் தரமான சால்வைகள், தரைவிரிப்புகள், கம்பளி உடைகளைத் தயாரித்து விற்கின்றனர். நாங்களும் சிலவற்றை வாங்கினோம். ஆடு, காட்டெருமைகளை வளர்ப்பதும் அரிசி, கிழங்கு, சோளம், சோயாபீன்ஸ் வகைகளைப் பயிரிடுவதும் தொழிலாக உள்ளது. வீடுகளின் பின்புறம் காய்கறித் தோட்டங்களை அமைத்திருந்தது சிறப்பு. குட்டையான மனிதர்கள். வீடுகளும் உயரம் குறைவாகச் சிறிதாக இருந்தது. சாலைகள் அற்ற கிராமம். குறுகிய தெருக்களில் கோவேறு கழுதைகள் மூலமாக அல்லது தங்கள் பொருட்களைத் தாங்களே சுமந்து சென்று கொண்டிருந்தார்கள். வீடு கட்டும் பணியில் ஈடுபட்டவர்கள் வண்டிகள் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து செங்கல், சிமெண்ட் மூட்டைகள், கட்டைகள் போன்றவற்றை முதுகில் சுமந்து செல்வதைப் பார்த்தோம். கடினமான வாழ்க்கை தான்! சுருக்கங்கள் நிறைந்த முகங்களுடன் பெண்கள் கம்பளி உடைகளை நெய்து கொண்டிருந்தார்கள். வயதான பாட்டிகளும் ‘துறுதுறு’வென்று வேலை செய்து கொண்டிருந்ததைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அநேகமாக அந்த சின்னஞ்சிறிய ஊரில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும். வசதிகள் அதிகம் இல்லாத ஆனால் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் ஒரு சமூகமாக ஜப்பானிய ‘இக்கிகை’ வாழ்க்கை முறையில் ஆரோக்கியமாக வாழ்வது போல தெரிந்தது.

இந்த ‘மனா’ கிராமத்திற்கும் மகாபாரதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இங்குள்ள ‘வியாஸ் குஃபா’ என்னும் குகையில் தான் வியாச முனிவர் மகாபாரதத்தை இயற்றியதாக ஐதீகம். ‘மகாபாரத கிளைக்கதைகள்’ புத்தகத்தை எழுத நான் மகாபாரதம் வாசித்துக் கொண்டிருந்த நேரம். மானசீகமாக குருவிடம் ஆசியையும் மன்னிப்பையும் கேட்டுக் கொண்டேன்😔 அருகிலேயே விநாயகருக்கும் ‘கணேஷ் குஃபா’ கோவில் உள்ளது. அங்கே சென்னையிலிருந்து வந்திருந்த தமிழ் குடும்பத்தினருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். வேற்று மொழி பேசுமிடத்தில் தமிழ் மொழியில் பேசுபவர்களைப் பார்த்தவுடன் ஒரு சினேக புன்னகை. குசலம் விசாரிப்புகள் என்று சின்ன சின்ன சந்தோஷங்கள்! நாங்கள் பேசிய மக்கள் பலரும் “அமெரிக்காவிலிருந்து யாத்திரைக்கு இங்கே வந்திருக்கிறீர்கள் பரவாயில்லையே!” என்று ஆச்சரியப்பட்டதைத் தான் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

‘மனா’ கிராமத்தில் உயரமான செங்குத்தான படிகளில் ஏறுவது கொஞ்சம் சிரமமாகத் தான் இருந்தது. எல்லா இடங்களுக்கும் மூச்சு வாங்க கூட்டம் கூட்டமாய் சென்று கொண்டிருந்த கூட்டத்தோடு நாங்களும் ஐக்கியமானோம். புராணத்தின் படி, குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு பாண்டவர்களும் திரௌபதியும் தங்கள் ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறி இறுதி நாட்களில் இமயமலை வழியாக இந்த கிராமத்தைக் கடந்து சென்றதாக நம்பப்படுகிறது. திரௌபதி சரஸ்வதி நதியைக் கடக்க பீமனால் உருவாக்கப்பட்ட ‘பீம் புல்’, வேத வியாசரை வழிநடத்திய சரஸ்வதி தேவிக்கு ஒரு கோயிலும் இங்கு உள்ளது. சொர்க்கத்திற்குச் செல்லும் வழியில் திரௌபதியும் பாண்டவர்களும் ஒவ்வொருவராக மரணித்த இடம் இந்த மலைப்பகுதியில் அரங்கேறியதாகவும் குறிப்பிட்ட தூரம் வரை மக்கள் அப்பகுதிகளுக்கும் சென்று வர முடிகிறது. சரஸ்வதி தேவி கோவிலில் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் பாதை மூடப்பட்டிருந்தது. மக்கள் பக்திப்பரவசத்தோடு இடங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள். ‘தேவபூமி’யில் நின்று கொண்டிருந்த ஒவ்வொரு நிமிடமும் பரவசமாகத் தான் இருந்தது!

ஆரவாரத்துடன் பாய்ந்தோடும் சரஸ்வதி நதி, பசுமையான காடுகள் மற்றும் உயர்ந்த மலைகளால் சூழப்பட்டுள்ள இந்த கிராமம் மலையேற்றத்திற்குப் புகழ் பெற்றது என அறிந்து கொண்டோம். அதற்கு வசதியாக மலைகளில் கூடாரங்கள் அமைத்திருந்தார்கள். திபெத்திய எல்லை வரை சென்று வர முடிகிறது. சூடான சமோசா, பிரட் பஜ்ஜி, நூடுல்ஸ், மோமோஸ், டம்ப்ளிங்ஸ் விற்றுக் கொண்டிருக்கும் கடையில் மக்கள் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். அருகே இருந்த மற்றொரு கடையில் டீ அருந்தினோம். சில ஹிமாலய பறவைகள் அங்குமிங்கும் பறந்தோடிக் கொண்டிருந்தது கொள்ளை அழகு. ஊரின் நடுவே பழமையான ‘கண்டகர்ணா’ கோவில் இருந்தது. நாங்கள் சென்றிருந்த நேரம் மூடியிருந்ததால் அக்கோவிலைப் பற்றின வேறு தகவல்கள் எதுவும் தெரியவில்லை. உள்ளூர்ப் பெண் ஒருவர் தங்களுடைய ‘இஷ்ட தேவதா’ என்று கூறினார். அந்தக் காலை வேளையில் ஊர் முழுவதும் பயணிகளின் நடமாட்டம் அதிகம் இருந்தது!

மலைப்பகுதிகளில் கொஞ்சம் வெயிலடித்தாலும் உச்சந்தலையில் ‘பொடேர்’ என்று சாத்துகிறது. கண்களைக் கூச வைக்கும் வெளிச்சம்! ஒரு பக்க மலைகள் பசுமையாக. மற்றொரு பக்கம் கரடுமுரடாக. நடுவில் ஆறு. ஆற்றின் கரையில் குறுகிய பாதையில் வீடுகளையும் மனிதர்களையும் பார்த்துக் கொண்டே வண்டிகள் நிறுத்துமிடத்திற்கு வந்து சேர்ந்தோம். இப்படி ஒரு பாரம்பரிய மிக்க குட்டி ஊரைப் பார்த்த திருப்தியுடன் ‘பஞ்ச பிரயாகை’ தரிசனத்திற்காக ஆவலுடன் தொடர்ந்தது எங்கள் பயணம். வழியில் ‘Valley of Flowers’ பதாகையைப் பார்த்ததும் கோடையில் மலர்களுடன் மலைகள் சூழ்ந்த பரந்த சமவெளி வண்ணமயமாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அதுவும் மிகவும் பிரபலமான, அதிக பயணிகள் சென்று வரும் இடம். இப்படி உத்தரகாண்ட் முழுவதும் இயற்கை எழிலுடன் இமயம் விரவிக் கிடக்கிறது. பார்க்கத்தான் நமக்கு நேரமில்லை.

முதன் முதலில் எட்மண்ட் ஹில்லரியின் ‘From the Ocean to the Sky’ புத்தகத்தை வாசிக்கும் பொழுதே ‘பஞ்ச பிரயாகை’யை வாழ்வில் பார்த்து விட வேண்டும் என்ற ஆசை. ‘ருத்ர பிரயாகை’க்குப் பிறகு அவர்களால் படகுகளில் மேலேறிச் செல்ல முடியாது. அந்த அளவிற்கு நதியின் வேகம் இருக்கும். அங்கிருந்த கோவில், மக்களைப் பற்றி தன்னுடைய அனுபவங்களை அழகாக விவரித்திருப்பார் எட்மண்ட் ஹில்லரி. வாசிக்கையிலே அத்தனை வசீகரமாக இருக்கும்! இரு வேறு வண்ணங்களுடன் நதிகள் கலக்குமிடத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் ‘பஞ்ச பிரயாக்’ம் எங்கள் பயணத்திட்டத்தில் சேர்ந்து கொண்டது.

நதிகள் கூடுமிடம் ‘பிரயாகை’ என்று அழைக்கப்படுகிறது. ‘சார்தாம்’ செல்லும் வழியில் தேவ பிரயாகை, விஷ்ணு பிரயாகை, கர்ண பிரயாகை, ருத்ர பிரயாகை, நந்த பிரயாகை என அலக்நந்தா நதியுடன் வேறு ஐந்து நதிகள் சங்கமிக்கும் இடங்கள் உள்ளன. இமயத்தில் உற்பத்தியாகும் கங்கையின் இரு கிளைநதிகளில் ஒன்றான ‘அலக்நந்தா’ அலக்புரியிலிருந்து ஓடோடி வந்து சரஸ்வதி நதியுடன் கலக்கும் இடத்தில் ‘கேஷவ் பிரயாக்’ என்றும் பத்ரிநாத்தில் ‘விஷ்ணு கங்கா’ என்றும் அழைக்கப்படுகிறது. பத்ரிநாத்திற்கும் ஜோஷிமத்திற்கும் இடையில், மழை நீரை அடித்துக் கொண்டு மண்ணின் நிறத்தோடு ‘அலக்நந்தா’வும் வெளிர் நீல வண்ணத்தில் ‘தெளலி கங்கா’ ஆறும் சங்கமிக்கும் இடம் ‘விஷ்ணு பிரயாகை’ ஆகும். இங்கு நாரதர் விஷ்ணுவை வழிபட்டதால் இந்த காரணப்பெயர் என்று தெரிந்து கொண்டோம். நிறைய படிகளில் இறங்கி ஏறும் பொழுது தான் தெரிந்தது எத்தனை செங்குத்தாக இருக்கிறது என்று! முழங்கால் பத்திரம் என்று எனக்குள் நானே எச்சரித்துக் கொண்டேன்😉

அங்கிருந்து ‘அலக்நந்தா’வும் நந்தா மலைச்சிகரத்தில் உற்பத்தி ஆகும் நந்தாகினி ஆறும் சங்கமிக்கும் ‘நந்த பிரயாகை’ யை அடைந்தோம். கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள இடத்தில் யாதவ குல மன்னன் கிருஷ்ணனின் வளர்ப்புத் தந்தையான நந்தனின் நினைவாக கோவில் ஒன்றும் உள்ளது. இரு வேறு திசைகளில் இருந்து பலத்த ஓசையுடன் துள்ளி ஓடிவரும் ஆற்றின் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. நீண்ட தூரம் நடந்து சென்று வந்தோம். ஈஷ்வருக்குப் பசியோ என்னவோ முகம் வாடிப் போயிருந்தது. வழியில் இனிப்புக்கடையில் எனக்குப் பிடித்த இனிப்புகளையும் சமோசாவையும் சாப்பிட்டு ‘சாய்’ குடித்த பிறகு கொஞ்சம் தெம்பாக இருந்தது. சிறிது நேரம் அங்கிருக்கும் கடைகளை வேடிக்கைப் பார்த்து விட்டு ‘கர்ண பிரயாகை’க்கு கிளம்பினோம்.

வழியில் வரும் பாலத்தின் ஓரத்திலேயே வண்டியை நிறுத்தி அங்கிருந்து கீழிறங்கிச் சென்று பார்த்து விட்டு வருமாறு டிரைவர்ஜி சொல்ல, அலக்நந்தாவும் பிண்டர் ஆறும் சங்கமிக்கும் இடத்திற்குச் சென்றோம். இன்னொரு குடும்பமும் அவர்களின் குழந்தைகளும் கரையில் ஓடிக்கொண்டிருந்தார்கள். வெவ்வேறு வண்ண நதிகள் ஒன்றோடு ஒன்று இனைந்து இரண்டற கலந்து ஓடும் அழகே தனி! மிக அருகில் நின்று பார்க்கும் பொழுது தான் அதன் ஓட்டமும் பாய்ச்சலும் தெரிகிறது. மனதிற்குள் பயமும் எழுகிறது! இங்கு பார்வதி தேவிக்கும் கர்ணனுக்கும் கோவில்கள் உள்ளன. சுவாமி விவேகானந்தர் 18 நாட்கள் தவம் செய்த இடம். கர்ணன் தவம் புரிந்து கவச குண்டலத்தைப் பெற்றதால் ‘கர்ண பிரயாகை’ என்று அழைக்கப்படுகிறது. போக்குவரத்துடன் பரபரப்பாக இருந்த சாலையைக் கடந்து ‘ருத்ர பிரயாகை’யில் நாங்கள் தங்கவிருக்கும் ‘சாம்ராட் ரிசார்ட்’டுக்குச் சென்று கொண்டிருந்தோம்.

மாலை நான்கு மணி. வழியில் சாலையோர உணவகத்தில் மீண்டும் ஒரு ‘சாய்’. ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த உணவகங்களில் பூனைக்குட்டிகள் விளையாடிக் கொண்டிருந்ததைக் காண அழகாக இருந்தது. குழந்தைகள் என்றாலே அழகு தான்! வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அருகே மிகப்பெரிய குருத்வாராவில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்க, “எந்நேரம் சென்றாலும் அங்கு செல்பவருக்கு இலவச உணவு கிடைக்கும்” என்றார் டிரைவர்ஜி. அங்கு தங்கும் வசதிகளும் இருக்கிறது. ஒரு வழியாக, ஐந்து மணிக்கு விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.

பெட்டிகளை இறக்கிக் கொண்டிருக்கும் பொழுது செட்டியார் குடும்பங்களை மீண்டும் சந்தித்தோம். அங்கே தேநீர் அருந்துவதற்காக வந்திருந்தார்கள். அவர்கள் ஸ்ரீநகர் என்னுமிடத்தில் இரவு தங்கி மறுநாள் டேராடூன் சென்று சென்னைக்குத் திரும்புவதாகக் கூறினார்கள். எதிர்பாராமல் மீண்டும் அவர்களைச் சந்தித்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்ததது. இரு வேன்களில் வந்திருந்த அனைவரும் அன்புடன் பேசி “குடும்ப உறுப்பினர்களைக் கண்டது போல் இருக்கிறது” என்று ‘டச்சிங் டச்சிங்’ ஆக பேசி உருக வைத்தார்கள். பெரும்பாலானவர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் செட்டிலாகி இவர்களும் அடிக்கடி வந்து செல்கிறார்கள். உலகமே சுருங்கிவிட்டது!

நாங்கள் காசிக்குச் செல்வதை அறிந்து செட்டியார்கள் சத்திரத்தில் இருப்பவரைத் தொடர்பு கொண்டு கோவிலுக்குச் செல்ல தொலைபேசி எண்களைக் கொடுத்து உதவினார்கள். யாரோ? எவரோ? கேதார்நாத்தில் சந்தித்து அறிமுகமாகி அவர்களில் ஒருவராக எங்களைக் கவனித்துக் கொண்டார்கள். பத்ரிநாத்தில் மீண்டும் சந்தித்த பொழுது அத்தனை சந்தோஷம். இப்பொழுது பிரியும் நேரத்தில் “சென்னைக்கு வந்தால் கண்டிப்பாக வீட்டுக்கு வாருங்கள்” என்று அவர்களும்”நியூயார்க் வந்தால் கண்டிப்பாக எங்கள் வீட்டுக்கு வாருங்கள்” என்று நாங்களும் அன்புடன் பேசி வாட்ஸப் பரிமாற்றங்கள் செய்து கொண்டு விடைபெற்றோம். இந்த யாத்திரையில், “குழந்தைகளை விட்டுவிட்டு ஹனிமூன் வந்திருக்கிறீங்களா” என்று சிரித்த முகத்துடன் ஹரித்வாரில் கேட்ட தென்காசி வெள்ளந்தி மனிதர்கள், மலேசியா தமிழ் மக்கள், உத்தரகாசியில் தென்னாப்பிரிக்கா, மலேசியா, அட்லாண்டா, ராஜஸ்தாலிருந்து வந்திருந்தவர்கள், குப்தகாசியில் தெலுங்கு, மும்பைப்பெண், ரஷ்யர்கள் முதல் செட்டியார் குடும்பங்கள் வரை பலரைச் சந்தித்துப் பேசியது உற்சாகமாக இருந்தது. நாடு, இனம், மொழி கடந்து மனிதர்களுக்கிடையில் இருக்கும் வாஞ்சையும் அன்பும் தான் இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த பொழுதில் இந்த யாத்திரையின் பலனை முழுமையாக அனுபவித்தோம்.

பெரிய விடுதியில் கூட்டம் இல்லை. முதன் முதலில் உத்தரகாசியில் சந்தித்த ராஜஸ்தானி குடும்பமும் அங்கே தான் தங்கியிருந்தார்கள். “நீங்களும் இங்கே தானா?” என்று சிறிது நேரம் அவர்களுடன் ‘கலகல’ பேச்சு. கணவரும் மகனும் ஆங்கிலத்தில் உரையாட, அந்தப் பெண்மணி ஹிந்தியில் பேசிக்கொண்டு இருந்தார். நாங்களும் “அச்சா”, “டீகே” என்று எங்களுக்குத் தெரிந்த “தோடா தோடா” ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்தோம். இரவு உணவிற்கு ‘வெங்காய சாலட்’ கேட்டால் தட்டு நிறைய வெங்காயத்தை நறுக்கிக் கொண்டு வைத்தார்களே பார்க்கணும்! ஐயோ! “நான் சாலட் கேட்டேன்” என்று பிறகு பன்னீர் ஐட்டம் வாங்கிச் சாப்பிட்டேன். அங்கு வேலை செய்தவர்களுக்குச் சுட்டுப் போட்டால் கூட ஆங்கிலம் தெரியவில்லை. ‘பேசும் படம்’ கமல் மாதிரி வித்தையெல்லாம் கொஞ்சம் கற்றுக் கொண்டுச் சென்றால் அவர்களுக்குப் புரியுமோ என்னவோ? பல இடங்களில் மொழி மிகப்பிரச்னையாக இருந்தாலும் மனிதர்கள் தன்மையாக இருக்கிறார்கள். ஹிந்தி தெரியாதவர்களை அதிசயமாகப் பார்க்கிறார்கள்! நாங்களும் ஆங்கிலம் தெரியாதவர்களைக் கவலையுடன் பார்த்தோம்😟 விடுதியில் வேலை செய்வோர் எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது. அதுவும் இளைஞர்கள் கணிசமாக இருக்கிறார்கள்! படித்தவர்கள் நகரங்களை நோக்கிச் சென்று விட, படிக்காதவர்கள் உள்ளூரில் தங்கி கிடைக்கும் வேலையைச் செய்கிறார்கள் போல!

அன்றைய அழகான தினத்தின் அனுபவங்களை எண்ணியபடி தூங்கிப் போனோம். விடியலில் நாங்கள் தங்கியிருந்த அறையிலிருந்து தவழும் கருமேகங்களுடன் மலைகளும் ஓசையின்றி ஆற்று மணலை அள்ளிச் செல்லும் அலக்நந்தா ஆறும் மனதை கொள்ளை கொண்டது. ஃபேஸ்டைமில் வந்த மகனிடம் இடத்தைக் காண்பிக்க, “அழகாக இருக்கிறது. என்ஜாய்” என்றான். அவனிடம் பேசிமுடித்து விட்டு ரிஷிகேஷ் பயணத்திற்குத் தயாரானோம். அதற்குள் காலை உணவு தயாராக, அங்கே சென்றால் பூரி, ஆலு மசாலா, அவலில் செய்த உணவு, பிரட், இனிப்பு, சாய், காஃபி என்று குறைவில்லாமல் இருக்க, சமையற்காரர் சிரித்த முகத்துடன் பரிமாறினார். “அனைத்தும் சுவையாக இருக்கிறது” என்றவுடன் மகிழ்ச்சியுடன் நன்றி கூறினார். எங்கு சென்றாலும் உணவு நன்றாக இருந்தால் சமையற்காரரை அழைத்து “நன்றாக இருக்கிறது. மிக்க நன்றி” என்று சொல்வது எங்கள் வழக்கம். மேலாளர்களிடமும் சொல்லத் தவறுவதில்லை. அநேகமாக நாங்கள் தங்கியிருந்த அனைத்து விடுதிகளிலும் உணவு மிக நன்றாக இருந்தது மட்டுமில்லாமல் உபசரிப்பும் திருப்தியாக இருந்தது. அனைவரிடமும் விடைபெற்று அன்றைய பயணம் துவங்கியது.

ஒன்பது மணியளவில் காளியின் அம்சமான ‘தாரி தேவி’ கோவிலை வந்தடைந்தோம். ‘சார்தாம்’ கோவில்களைக் காக்கும் சக்தி வாய்ந்த எல்லை அம்மன். உள்ளூர் மக்களின் ஆஸ்தான கோவில். 2013ல் ‘அலக்நந்தா ஹைட்ரோ எலெக்ட்ரிக் பவர் பிளாண்ட்’ கட்டும் பொழுது இடைஞ்சலாக இருக்கிறது என்று அங்கிருந்த அம்மனை இடம்பெயர்த்திருக்கிறார்கள். அன்று தான் கேதார்நாத்தில் வரலாறு காணாத வெள்ளமும் மலைச்சரிவும் ஆயிரக்கணக்கில் உயிர்பலியும் ஏற்பட்டுள்ளது. இதற்கு நடுவே இந்த திட்டத்தில் பணிபுரிந்த தலைமைப் பொறியாளர், திட்டத்திற்கு ஒத்துழைத்த அரசியல்வாதியின் இறப்புகளுக்குப் பிறகு காவல் தெய்வத்தை இடம் பெயர்த்ததால் தான் இந்த பேரழிவு நடந்திருக்கிறது என்று உள்ளூர் மக்கள்
தீவிரமாக நம்பி எதிர்ப்புகளைத் தெரிவிக்க, ஏப்ரல், 2022ல் அதே இடத்தில் ‘ஹைடெல் பவர் கம்பெனி’ புதுக்கோவிலைக் கட்டி அம்மனை மீண்டும் இடம்பெயர்த்திருக்கிறார்கள்.

இந்தக் கோவிலின் முகப்பு இரு நிலைகளுடன் தென்னிந்திய கோபுரமாக இருந்ததைப் பார்த்து ஆச்சரியமானோம்! சாலையோரக் கடைகளில் அம்மனுக்கான பூஜைப்பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். அலக்நந்தா ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் கோவிலுக்குச் செல்ல ‘கிடுகிடு’ வென்று படிகளில் இறங்கும் போதே, “அடடா! ஏறி வரும் பொழுது நமக்கு இருக்கு” என்று பயம் கலந்த திகைப்புடன் அம்மனைப் பார்க்கும் ஆவலுடன் வழியெங்கும் இருந்த கடைகள், ஜடாமுடி தரித்த துறவிகளைக் கடந்து கோவிலுக்குள் சென்றால் எங்கும் சிகப்புத்துணியினை முடிந்து வைத்திருந்தார்கள். நாங்கள் நவராத்திரி சமயத்தில் அங்கே சென்றிருந்ததால் நல்ல கூட்டம். வட இந்தியர்கள் தேவிக்குப் பூஜைகள் செய்ய தாராளமாகச் செலவுகள் செய்கிறார்கள். பலர் கோவிலுக்குள் மந்திரித்த தாயத்துகளை வாங்கிக் கொண்டிருந்தார்கள். மஞ்சள் குங்கும அலங்காரத்துடன் தேவி அமர்க்களமாக இருந்தாள். ஆற்றில் வெள்ளம் வந்தால் கோவில் அடித்துச் செல்லப்படுமோ என்ற அச்சம் மக்களுக்கு இருக்கிறது. வெளியில் உணவகங்களில் சாப்பிடும் இடத்தில் குரங்குகளின் அட்டகாசத்தைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. அங்கிருந்த தொங்கு பாலத்தில் நடந்து சென்று ஆற்றைப் பார்த்து விட்டு வந்தோம். அது ஏனோ சிலர் குதித்துக் கொண்டே இருந்தார்கள். உள்ளுக்குள் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது.

அழகான கோவில் தரிசனம் முடித்து வண்டியிலேறி காலை நேர பரபரப்புடன் இருந்த ஸ்ரீநகர் வழியே ‘ருத்ரபிரயாகை’யை மலையில் இருந்தே பார்த்துக் கொண்டோம். அழகான சங்கமம் அது. உச்சியிலிருந்து பல தெருக்களைக் கடந்து அங்கிருக்கும் கோவிலுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிப்பதே சவாலாக இருக்கும் என்று நினைக்கிறேன். கூட்டமாக மக்கள் சங்கமத்தில் குளித்துக் கொண்டிருந்தார்கள். ஆற்றின் வேகம் அதிகமாக இருந்தது. சங்கிலிகளைக் கட்டியிருந்தார்கள். பழுப்பு நிற அலக்நந்தாவும் கேதார்நாத்திலிருந்து பச்சைநிற மந்தாகினியும் இரண்டற கலந்தோடும் அழகு வசீகரிக்கிறது. இங்கே சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடியதாகவும் ருத்ர வீணையை மீட்டியதாலும் ‘ருத்ர பிரயாகை’ என்றழைக்கப்படுகிறது. ருத்ரனுக்கும் சாமுண்டிக்கும் இங்கே கோவில்கள் இருக்கிறது. பல தலபுராணங்களும் இக்கோவில்களுக்கு உள்ளது. மலையிலிருந்து வீடுகளும் கோவில்களும் மிக அழகாகத் தெரிய, அந்த வழியாகச் செல்லும் வண்டிகள் அனைத்தும் அங்கே நின்று பயணிகள் கண்டுகளிக்க அனுமதிக்கிறார்கள். யுடியூபர்களுக்கும் இன்ஸ்டா, ஃபேஸ்புக்வாசிகளுக்கும் மிகவும் பிடித்தமான இடம். வளைத்து வளைத்துப் படங்களும் பேசிக்கொண்டே காணொளிகளும் எடுத்துக் கொண்டிருந்தார்கள். பார்த்துப் பார்த்து இடத்தைத் தேர்வு செய்து செல்ஃபி எடுப்பவர்கள், முகத்தைக் கோணலாக்கி நாக்கைத் துருத்தி இரு விரல்களைக் காட்டிக் கொண்டு என்று பலவிதமான கோலங்களில் படங்களை எடுத்து அப்லோட் செய்து கொண்டிருந்தது இளைஞர் பட்டாளம். அங்கிருந்து செல்ல மனமில்லாமல் பயணத்தைத் தொடர்ந்தோம்.

ஒன்றரை மணிநேரத்தில் ‘தேவ பிரயாகை’ வந்தடைந்தோம். கங்கோத்ரியில் இருந்து பாய்ந்து வரும் பாகீரதியும் ருத்ர பிரயாகையில் இருந்து அலக்நந்தாவும் கலக்கும் இடமே ‘தேவ பிரயாகை’. ஓடோடி வரும் இரு கிளைநதிகளும் சங்கமித்து அமைதியான கங்கையாக உருவெடுப்பதால் ‘ஆதிகங்கை’ எனவும் அழைக்கப்படுகிறது. இங்கும் படிகளில் இறங்கி சங்கமத்தில் குளிக்க முடிகிறது. இந்த தெய்வீக சங்கமத்தில் கங்கை, ஹனுமன் சிலைகள் உள்ளது. ஐந்து பிரயாகைகளைத் தரிசித்த திருப்தியுடன் ரிஷிகேஷ் நோக்கி விரைந்தோம்.

யோகாவிற்கும் இந்து மடங்களுக்கும் பெயர் பெற்ற ரிஷிகேஷ் என் கனவு நகரங்களில் ஒன்று. தூர்தர்ஷன் காலத்தில் இரவு பத்துமணிச் செய்திகளுக்குப் பிறகு இமயமலை, கங்கையில் சாகசப்பயணம் செல்லும் ஆவணப்படங்களைப் பார்த்து ரிஷிகேஷின் அழகில் மயங்கியிருக்கிறேன். இன்னும் இரண்டு மணிநேரத்தில் அங்கு இருப்போம் என்ற நினைவே அத்தனை ஆனந்தமாக இருந்தது. வழியெங்கும் சாலை விரிவாக்கம், புதிய ரயில் திட்டத்திற்காக ஏகப்பட்ட சுரங்கப்பாதைகள், பாலங்கள் கட்டும் வேலை தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. இத்திட்டம் நிறைவேறினால் ரிஷிகேஷிலிருந்து கர்ணபிரயாக் வரை ரயிலில் பயணிக்கலாம். அங்கிருந்து ‘சார்தாம்’ செல்வது எளிதாக இருக்கும். சாலைவழிப் போக்குவரத்து சிறிது குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் ‘தடதட’ ரயிலின் ஆட்டத்தை இமயம் தாங்குமா? அப்பகுதிகளில் மலைநாட்களில் பயணித்த பத்து நாட்களில் கண்ட மலைச்சரிவுகளும் சாலைப்பிளவுகளும் தான் மனதை அரித்துக் கொண்டிருந்தது. ஈஷ்வரா! ஆபத்தின்றி எல்லோரையும் காப்பாத்துப்பா! என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டிருக்கும் பொழுதே ‘ஹார்ன்’கள் எழுப்பும் ஒலியும், புழுதி பறக்கும் சாலையில் நடந்து செல்லும் கூட்டமும், வண்டிகளும், மடங்களும், தங்கும் விடுதிகளும், உணவகங்களும், சாலையோர கடைகளும் அதிர்ச்சியைத் தந்தது! சிவானந்த ஆசிரமத்தின் பெயர் பொறித்த சாலை வளைவு வழியே உள்ளே நுழையும் பொழுது என் கனவு நகரத்தைத் தேடிக் கொண்டிருந்தேன்.

ரிஷிகேஷ் பற்றின முதல் அபிப்பிராயம் ஏமாற்றத்தில் முடிய, நாங்கள் தங்கவிருக்கும் விடுதியைத் தேடினால் வரைபடம் “போய்க்கிட்டே இரு” என்று காட்ட, வழியில் மிகப்பெரிய சந்தை, ஆற்றுப்பாலம், மூக்கைப்பொத்திக் கொண்டு துர்நாற்றப்பாதையைக் கடக்க, “என்னங்க, இந்த ஊர் இப்படி இருக்கு?” என்று ஈஷ்வரைப் பார்த்தால் அவர் எனக்கு மேல் அதிர்ச்சியில் இருந்தார். வழியில் சிலரிடம் முகவரியைக் காட்டி விடுதிக்குச் செல்லும் குறுகிய தெருவில் கஷ்டப்பட்டு வண்டியை நிறுத்தினார் டிரைவர்ஜி. “எத்தனை பெரிய விடுதிகள் நகருக்குள் நுழைந்தவுடன் இருக்க, இங்கே ஏன் தங்குகிறீர்கள்? இதுவரை நான் இந்தப்பக்கம் வந்ததே இல்லை.” என்று கடுவன் பூனை மாதிரி கோபத்துடன் கேட்டார். மனிதர் பசியில் வேறு இருந்திருப்பார் போல! அவர் வண்டி எடுக்கத் திரும்பக்கூட முடியாது. ரிவர்ஸில் தான் செல்ல வேண்டும். அதற்குள் ஒருவர் இந்த தெருவுக்குள் வெளி வண்டியெல்லாம் வரக்கூடாது என்று சொல்ல, விடுதியில் இருந்து இருவர் பெட்டிகளை எடுத்துக் கொண்டுச் செல்ல, “எங்கே போய் இந்த மனுஷன் இடத்த பிடிச்சிருக்காரு? வழியில எத்தனை நல்ல விடுதிகள் இருந்தது?” யோசித்துக் கொண்டே நடக்க, தெருவில் தூங்கிக் கொண்டிருந்த பைரவர்களும் கூடவே வர, டிரைவருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு வேகமாக வந்தவர், “உனக்குப் பிடிக்கலைன்னா வேற இடத்துக்குப் போகலாம். நீ தானே கங்கைக்கரையோரம் தங்கணும்னு சொன்ன. அதான் இங்க போட்டேன். ஆனா இந்த சின்ன சந்துக்குள்ள இருக்கும்னு எனக்கும் தெரியாது. ரெவியூஸ் எல்லாம் நல்லா இருந்ததுன்னு தான் இங்க ரூம் போட்டேன்” என்று ஈஷ்வர் சமாதானம் செய்து கொண்டே வர, பசியின் போது ஏதாவது பேசினால் சண்டையில் முடியும். அதனால் முதலில் அறைக்குச் சென்று பெட்டிகளை வைத்து விட்டு மதிய உணவிற்குச் சொல்லி மாடியில் இருந்த வரவேற்பாளர் அறைக்கு வந்தால் வெளியே சில அடிகளில் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தாள் “மா கங்கா”.

“ஆஆஆ ! இங்க பாருங்க” என்றவுடன் தான் ஈஷ்வருக்கும் நிம்மதியாக இருந்தது. “அதான. நல்லா பார்த்து தான் இந்த இடத்தைத் தேர்வு செய்தேன். இப்ப சந்தோஷமா? அதுக்குள்ள😌…” மேற்கொண்டு பேசுவதற்குள் சுடச்சுட உணவும் வந்து சேர, வெளியில் அமர்ந்து நிம்மதியாக சுவையான உணவை உண்டு முடித்தோம்.

ரிஷிகேஷுக்குள் நுழையும் பொழுது ஏற்பட்டிருந்த ஏமாற்றம் மெல்ல மெல்ல கங்கையின் ஓட்டத்தில் கரைந்து கொண்டிருக்க, இன்னும் இரு நாட்கள் இங்கு தங்கி இருக்கப் போகிறோம் என்ற நினைவே அத்தனை சுகமாக இருந்தது😍


Series Navigation<< குப்தகாசி – பத்ரிநாத்ரிஷிகேஷ் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.