சுத்தமும் ஐரீனும்

‘சுத்தம் சோறு போடும்’ என்பது பழமொழி என்றாலும் அதீத  சுத்தமாய் இருப்பதும் ஒரு சாபமே.இதற்கு சான்றாய் விளங்குவது ஐரீன்.அறுபதுகளைத் தொட்டிருப்பவர்க்கு ஒரு முறை கூட மருத்துவமனையை எட்டி பார்க்காதவர்.அங்கே சுத்தம் என்பது கடுகு அளவுக்குக் கூடக் கடைப்பிடிப்பதில்லை என்பது அவரின் அசராத  நம்பிக்கை.பெற்றக் குழந்தைகளுக்கே காய்ச்சல் வந்தால் கூட மருத்துவமனை செல்லாமல் கசாயம் வைத்துக் கொடுப்பார்.கடைக்கு பொருட்கள் வாங்க சென்றாலும் பணத்தை கைகளால் கடைக்காரரிடம் கொடுக்கமாட்டார்‌.மாறாக ஏதாவது பேப்பரை பணத்துடன் சுருட்டிக் கொடுப்பார்.கொரோனாவின் அன்பு வருகைக்கு முன்பே அதீத சுத்தத்தைக் கடைப்பிடித்தவர்.ஏதாவது பொருள் கீழே விழுந்து விட்டால் அதை பயன்படுத்த மாட்டார்‌.அது பாத்திரமாக இருந்தாலும் சரி சேலையாக இருந்தாலும் சரி.இதில் விலை இரண்டாம் பட்சம் தான்.

“தரையில எவ்வளவு கிருமி இருக்கும் மக்கா”, என்று அவரின் செயலுக்கு விளக்கவுரை அளிப்பார்..கொடியில் காயப்போட்ட  சேலைக் காற்றோடு பறந்து தரையில் விழுந்தாலும் அந்த சேலைக்கு அதோடு ஆயுட்காலம் முடிந்தது.அதே போல் சமையலறையில் தன் கை பட சமையல் செய்யவே விரும்புவார்.அடுத்தவர்கள் செய்வதை விரும்பமாட்டார்.தனது மகள்கள் சமையல் செய்து கொடுத்தாலும் அதை உண்ணுவதில்லை.தன் கைகளால் சமைப்பதையே சுத்தமான உணவு என எண்ணினார்.பள்ளிக்கூடத்தில் வேலை செய்த சமயத்தில் கூட பிறந்த நாள் கொண்டாடும் குழந்தைகள் அன்பாக மிட்டாய் கொடுக்கும் போது அதை வாங்கி சாப்பிட மாட்டார்.கேக், நொறுக்கு தீனி, பலகாரங்களெல்லாம்  அவர் ருசித்துப்  பார்க்காத பதார்த்தங்கள்.அவ்வுணவுகளைக் கண்டால், அது சுத்தமான பதார்த்தமா என்ற கேள்வியே அவருக்கு முதலில் எழும்.

கணவன் தன்னை விட்டு இன்னொருப் பெண்ணை ரகசியமாகத் திருமணம் செய்தபோது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஓர் பேரிடி தன்னை வெகுண்டு தாக்கியது போல் தோன்றியது.தான் யாரை நம்பி வந்தேனோ அவரே தன்னை ஏமாற்றியதை நினைத்து ஒவ்வொரு நாளும் முள் பாதையில் வெறும் கால்களோடு நடப்பது போன்ற உணர்வை அடைந்தார்.எதை எதையோ தாங்கி கொண்ட இரும்பு நெஞ்சம் நம்பிக்கைத்  துரோகத்தை மட்டும் தாங்க இயலவில்லை.அவ்வபோது வந்து செல்லும் கணவனை கண்டிக்கவும் வழி இல்லை.அவரின் காதல் கண்ணை மறைத்து விட்டது.கணவன் செய்த தப்பை ஏற்கவும் முடியவில்லை மறக்கவும் முடியவில்லை.அவரின் பணம் குழந்தைகளை வளர்ப்பதற்கு பேருதவியாய் அமைந்தது.பணக்கஷ்டம் கழுத்தை நெரித்தாலும் சுத்தத்தை தவறாது கடைப்பிடித்தார்.

“இவ்வுளவு கஷ்டத்திலும் இந்த சுத்தம் தேவையா?” என்று ஊரார் தூற்றினாலும்.அதைக்  காதிலேப் போடாதவர்.

“உனக்கு புருஷனை வச்சு ஒழுங்கா வாழ தெரியல”, என்று தனது கடைசி மகளே தன் மீது பழி போடும் போது தன்னை மீறியும் கண்ணீர் ஆறாய் ஓடியது.

“உங்கப்பன மாதிரி நானும் உங்களை உட்டுட்டு  போயிருந்தா யாரு உங்கள பாத்திருப்பா? நீங்க எல்லாம் அனாதையா தான் நின்னுருக்கனும்”, என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.பணி ஓய்வு பெறும் வரை அவரது பணம் குழந்தைகளுக்குத் தேவைப்பட்டது.சம்பளம் வந்த முதல் வாரம் டாம் டீம் என்று செலவழிப்பார்.அடுத்த வாரமே கடனாளியாய் இருப்பார்.பேரன் பேத்திக்கு   பீஸ் கட்ட வேண்டும் என்றுக்கூறி தனது மகன் பணம் கேட்டு முதல் நாளிலேயே வந்து நிற்பான்.அடுத்த நாளிலேயே மற்றக் குழந்தைகளும் வந்து நிற்பர்.குழந்தைகள் தானே என்று ஐரீனும் வாரி வழங்கிக் கொடுப்பார்.பின்பு கடனில் தான் அடுத்தடுத்த நாட்கள் ஓடும்.வாழ்நாள் முழுவதும் கடனாளியாக தானே வாழ்கிறோம் என்ற குற்ற உணர்வு அவ்வப்போது வந்து மனதை பிசையும்.

“இந்த மனுஷன் ஒழுங்கா இருந்தா இப்படி கஷ்டப்படனுமா ”, என்ற கேள்வியும் அவ்வப்போது வந்து அவரைத்  துளைத்து எடுக்கும்.எப்போதாவது வந்து செல்லும் கணவனை கடிந்து கொள்ள முடியாது.வேலைக்கு செல்லும் அவசரத்தில் கணவனை மறந்தே வாழ்ந்து வந்தார்‌.வேலைக்கு செல்வதை கௌரவமாக எண்ணினார்‌.இந்த குடும்பக் கஷ்டத்தில் இந்த வேலை பெரிய ஆறுதலாக அமைந்தது.ஓய்வு பெற்றப் பிறகு அந்த பரபரப்பான வாழ்க்கையை நினைத்து பெரிதும் ஏங்கினார் .குழந்தைகளுக்கு தமிழ் இலக்கியம் புகட்டும் போது தன்னையே மறந்து பாடம் சொல்லி கொடுப்பார் .இலக்கியத்தில் வரும் அத்தனை அணிகளையும் சிறந்த எடுத்துக்காட்டுக்களோடு சொல்லி கொடுக்கும் புலமை பெற்றவர்.ஒவ்வொரு வருடமும் பொது தேர்வுகளிலும் தமிழ் பாடத்தில் அனைவரும் தேர்ச்சி பேற்று விடுவர்.அதனால் பள்ளி முதல்வர் பால் எப்போதுமே ஐரீனை பாராட்டுவார்.வாழ்க்கையில் சில காரியங்களை பிடிவாதமாக செய்யக்கூடாது என்று நாம் நினைத்திருக்கும் போது தான் அந்த காரியங்களை எப்படியாவது வாழ்க்கை செய்ய வைத்து விடுகிறது.கொரோனாவின்  நல்வருகையால் ஐரினின் சுத்தம் பன்மடங்கு உயர்ந்தது.ஆனாலும் எப்படியோ கொரோனா அவரைத் தாக்கியது.சாதாரண காய்ச்சல் தானே என்று விட்டுவிட்டார்.நாளுக்கு நாள் அதன் வீரியம் கூடிக்கொண்டே தான்  சென்றது..வேறு வழியில்லாமல் மருத்துவமனைக்கு சென்றார்.அங்கு அவர்க்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இறுதியாக கொரோனா பாசிட்டிவ் என்று பரிசோதனையில் முடிவு வந்தது.அச்செய்தி பேரிடியாக ஐரினைத் தாக்கியது‌.இயந்திரத்தில் தான் ஏதாவது கோளாறு இருக்குமோ என்று மருத்துவரிடம் வாதிட்டார்.அவரது வாதம் அங்கு செல்லுபடி ஆகவில்லை.அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எப்போதும் அரசு மருத்துவமனையை கடந்து சென்றாலும் மூக்கை கர்சீபால் பொத்திக் கொண்டு தான் செல்வார்.ஆனால் இப்போது வேறு வழியின்றி அங்கு அனுமதிக்கப்பட்டார்.வேறொரு உலகத்தில் சஞ்சரிப்பது போலத் தோன்றியது.வாழ்க்கையில் கடைசி அத்தியாயம் இதுவோ என்று ஓர் ஐயம் வேறு தோன்றியது.பக்கத்து கட்டிலில் அனுமதிக்கப்பட்டவர் வேறு அடிக்கடி லொக் லொக் என்று இருமிக் கொண்டிருந்தார்.ஒரு வித அருவருப்பை ஏற்படுத்தியது.முதல் முறையாக ஹோட்டலில் இருந்து வாங்கப்பட்ட இட்லியை சுவைத்தார்.உளுந்து ஒழுங்காக அரைக்கப்பட்டிருக்குமோ, வெங்காயத் தோல் சீராக நீக்கப்பட்டிருக்குமோ, தக்காளி ஒழுங்காக கழுவப்பட்டிருக்குமோ என்று ஏனைய சந்தேகங்கள் மனதில் தோன்றின.ஒரு வழியாக இரண்டு இட்லிகளை சாப்பிட்டார்.தண்ணீர் குடித்து மெதுவாக சிரமப்பட்டு இரண்டு இட்லிகளை விழுங்கினார்.மாத்திரை மருந்து சாப்பிடுவதற்காக தான் இதையெல்லாம் சாப்பிட வேண்டி இருக்கிறது என்று சலித்து கொண்டார்.கழிப்பறை எப்படி இருக்குமோ என்ற அச்சம் வேறு பாடாய் படுத்தியது.இப்படியே இந்த உயிர் போனால் தான் என்ன என்ற நிலையை அடைந்தார்.அவ்வபோது கேட்கும் மரண ஓலங்களும் தனது நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்திக் கொண்டே இருந்தது. கழிப்பறை செல்ல வேண்டிய கட்டாயத்தால் சென்றார்.”தண்ணீர் ஒழுங்காக வருமா? பிளாஸ்டிக் கப்  உடையாமல் இருக்குமா?” என்று வெவ்வேறு  சந்தேகங்கள்  மனதில் தோன்றின.

”யேசப்பா என்ன எப்டிய்யாவது இந்த நரகத்துலே இருந்து காப்பாத்து” என்று மன்றாடினார்.’

“சாகனும்னு விதி இருந்தா கூட வீட்டுல நிம்மதியா குழந்தைகளோட பேர குழந்தைகளோடே முகத்தை பாத்து சாகனும்”, என்று நினைத்தார்.ஆனால் நினைத்ததற்கு பதிலாக ஓரளவு கழிப்பறை சுத்தமாகவே இருந்தது.தண்ணீரும் சீராக வந்தது .நிம்மதி பெருமூச்சு விட்டார்.”கர்த்தருக்கு ஸ்தோத்திரம்”,  என்று ஒரு முறை கடவுளை நினைத்தார்.ஆண்ட்ராய்டு கைப்பேசி பயன்படுத்த தெரியாததால் எப்படி நேரத்தை செலவழிப்பது என்பதும் பெரிய சிக்கலாக அமைந்தது.பைபிள் எடுத்து வந்தால் கூட அதையாவது படித்து கொண்டு இருக்கலாம்.பக்கத்து மேசையில் ஆனந்த விகடனும் , குமுதமும் இருந்தது.இந்த மாதிரி பத்திரிகைகளை படித்து பல வருடங்கள் ஆகின்றன.அதிலுமே கொரோனா குறித்த செய்திகளே அட்டைப் படங்களாக இருந்தன.எரியும் தீயில் எண்ணெய் ஊற்ற வேண்டாமே என்று அந்த இதழ்களை எடுக்கவே இல்லை.கடைசி ஆசை ஏதும் இருக்கிறதா என்று ஆழ்ந்த யோசனையில் இருந்தார்.

தனது குழந்தைகளையும் பேரக்குழந்தைகளையும் கடைசியாகப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.குழந்தைகள் எச்சில் ஒழுக கைகளை வாயில் வைப்பதை கண்டாலே அருவருப்பாக இருக்கும்.பேர குழந்தைகள் ஐரினிடம் ஆசை தீர ஓடோடி வரும்போது பக்கத்திலே அண்ட விடமாட்டார்.மருமகன்களும் மருமகள்களும் இப்படி ஒரு பிறவி இருக்குமா என்று வியந்தனர்.இதுவரை தனது பேரக்குழந்தைகளை ஒரு முறைக் கூடத் தூக்கி கொஞ்சியதில்லையே என்ற வெறுமை வேறு ஆட்கொண்டது.ஒரு முறை கூட குழந்தைகளின் கன்னத்தில் முத்தமிட்டதில்லை.ஆசை ஆசையாய் வரும் குழந்தைகளின்  கைகளை கூட தொட்டதில்லை.குழந்தைகள் தன்னை மாதிரி இருக்கிறதா அல்லது தனது கணவன் போல இருக்கிறதா என்று ஒரு முறை கூட ஆராய்ச்சி செய்ததில்லை.பாட்டி என்று அவர்கள் வாய் நிறைய அழைக்கும் போது அதை பெரிய விஷயமாக எடுத்து கொண்டதில்லை.குழந்தைகள் சுத்தமாக இருக்காது என்று

தனக்கு தானே கட்டிக்கொண்ட   பிம்பம் வலுவாக இருந்ததால் அதனை உடைக்க அவர் மனம் இடம் கொடுக்கவில்லை.எத்தனையோ பேர் தனக்கு பேரன் பேத்தி இல்லையே என்று வருத்தத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.தனக்கு எல்லாம் அமைந்தும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வில்லையே என்ற ஆற்றாமை வெகுவாக பரவியது.தான் இதுவரை வாழ்ந்த  வாழ்க்கையில் ஏதாவதொரு அர்த்தம் இருக்கிறதா என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.தனது குழந்தைகள் தன் மீது உண்மையான அன்பு வைத்திருக்கின்றனரா என்ற சந்தேகம் வேறு எழுந்தது.தன்னை வீட்டில் இப்போது யாராவது தேடுவார்களோ அல்லது கிழவி இல்லை என்று மகிழச்சியாக இருப்பார்களா என்று யோசித்து கொண்டிருந்தார்.இந்நாட்களிலில் தனது கணவனை பற்றிய நினைவு ஒரு துளி கூட வரவே இல்லை.தன் கணவனை நம்பி இப்படி ஒரு உப்பு சப்பு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேனே என்று நினைத்து வருந்தினார்.

எல்லா கணவன்மார்களும் தனது மனைவியை அழைத்து கொண்டு வெளியே சுற்றுவர்.அனால் அப்படி ஒரு சம்பவம் தனது வாழ்க்கையில் நடந்ததே இல்லையே என்று எண்ணி வருந்தினார்.ஓடி ஓடி உழைத்தோமே ஆனாலும் ஒரு மன நிறைவான வாழ்க்கை வாழவில்லை என்ற ஆற்றாமை வேறு துருத்தி கொண்டிருந்தது.ஆசை வார்த்தைகள் சொல்லி தன்னை காதலித்து தானும் அந்த வார்த்தைகளுக்கு மயங்கி காதல் என்ற வலையில் விழுந்து வத வதையாய் குழந்தைகள் பெற்றதோடு சரி.அந்த குழந்தைகளை வளர்ப்பதற்கு தான் பட்ட பாடு இப்பொது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.வாழ்க்கையை பின்னோக்கி பார்க்கும் போது ஒரு நல்ல சுற்றுலா கூட சென்றதில்லை.மரணப்படுக்கையில் இருக்கும் போது தான் வாழ்க்கையில் தான் செய்த தவறுகள் எல்லாம் தெரிய வரும் என்று சொல்வார்கள்..தானும் மரணப்படுக்கையில் தான் இருக்கிறோமோ என்ற சந்தேகம் வேறு எழுந்தது.அது ஊர்ஜிதம் ஆகுமோ என்ற பயம் வேறு பாடாய் படுத்தியது.நாம் அவ்ளோ  நல்ல வாழ்க்கையா வாழ்ந்து விட்டோம் இந்த வாழ்க்கையை நாம் தொடர வேண்டுமா போன்ற சிந்தனைகள் வேறு உதித்து கொண்டிருந்தது.இதை எல்லாம் எண்ணும் போது கண்ணில் நீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது.இதை பார்த்து கொண்டு பக்கத்தில் இருந்த முதியவர் “கவல படாதீங்கம்மா எல்லாம் சரியாடும் ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் ஆயிடுவோம்” என்று கூறினார்.தன்னை மறந்து சிரித்தார்.”நமக்கு எந்த ஊரு?” என்று மறுபடியும் அந்த வயோதிகர் பேச்சை தொடர்ந்தார்.எதுவும் கேட்காதது போல் அந்த பக்கம் சாய்ந்து படுத்தார்.

ஆண்கள் இல்லாமலே ஒற்றை ஆளாய் குழந்தைகளை வளர்த்தக் காரணத்தால் முன்பின் தெரியாத ஆண்கள் பேச முயற்சிக்கும் போது அதை வெகுவாகவே தடுக்க முயற்சிப்பார்.ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக கழிந்து கொண்டிருந்தது.எல்லா காலைகளும் சுறுசுறுப்பு இல்லாமல் மலர்ந்தது .எல்லா இரவுகளும் ஓர் மிரட்சியுடன் முடிவடைந்தது.நாளை எழுவோமா என்ற சந்தேகம் அவ்வபோது எழுந்தாலும், தன்னுடன் அனுமதிக்கப்பட்ட மூன்று பேர் அந்த வார்ட்டில் மரணமடைந்ததால் மரணபீதி வேறுத் தொற்றிக் கொண்டது.நன்றாக பேசி கொண்டிருந்தவர்களும்  திடீரென்று அட்டாக் வந்து மரணம் அடைந்தார்கள்.ஒவ்வொரு நாளும் உயிருடன் இருப்பதே பெரும் சவாலாகவும் பேரதிசயமாகவும் இருந்தது.ஆனாலும் மருத்துவமனை வந்து ஒரு வாரம் ஆகி இருந்தது.ஒவ்வொரு நாளும் திகிலுடனும்  பரபரப்புக்கும் நடுவில் தான் சென்றது.இறுதியாக கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது.நெகடிவ்  ரிசல்ட் வந்ததால் உற்சாகம் அடைந்தார்.வாழ்க்கை இதோடு முடிந்து போகுமோ என்ற கவலை பட்டாம்பூச்சி போல பறந்து சென்றது.அகத்தில் மட்டும் அல்லாமல் முகத்திலும் ஒரு மலர்ச்சி ஏற்பட்டது.புதிதாய் இந்த உலகத்தில் பிறந்தது போல புத்துணர்ச்சியும் ஒரு சேரக் கலந்தது.”நாளைக்கு டிஸ்சார்ஜ்” என்று நர்ஸ் கூறும் போது விடுமுறை விட்ட குழந்தை போல துள்ளிக் குதிக்க வேண்டுமென்று தோன்றியது.

இன்று இரவு எப்போது முடியும் காலை எப்போது விடியும் என்று ஆவலுடன்  எதிர்ப்பார்த்து கொண்டிருந்தார்.எப்போது இல்லாமல் புன்னகையோடு இருந்தார்.”டிஸ்சார்ஜ் ஆக போறோம்னு சந்தோஷமா இருக்கீங்களா ?” ,என்று நர்ஸ் கேட்கும் போது , “ஆமா” என்று புன்முறுவலோடு சொன்னார்.எதிர்பார்த்தது போலவே மறுநாளும் வந்தது. மருத்துவமனையை விட்டு செல்லும் போது எப்போதும் பார்க்கும் வானமும் சூரியனும் புதிதாகத் தெரிந்தது.பறவைகள் கூடைடவது போல் தானும் வீட்டிற்கு செல்லும் போது பேருவகை அடைந்தார்.எல்லோரும் வாசலில் காத்திருந்தனர்.ஆசையோடு காத்திருந்த பேரனை கட்டி ஆரத்தழுவி முத்தமிட்டார்.இதை சிறிதும் எதிர்பாக்காத பேரனும் பேரதிர்ச்சி அடைந்தான்.

“காபி ஏதும் கொடுத்தா குடிப்பாங்களா மாட்டாங்களா எதுக்கு வம்பு?” என்று தயங்கி நின்றாள் மருமகள்.தனது அறைக்கு செல்லாமல் ஹாலிலே இருந்தார் ஐரீன்.இதுவே பேரதிசயமாக இருந்தது. பேரன்  வாய்ப்பாடுகள் சொல்லுவதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்  ஐரீன்.

 “பேரன் பக்கத்தில வந்தாலே சீண்டாத கிழவி இப்போ இவ்ளோ கொஞ்சுதே”, என்று மகனும் திகைத்துப் பொய் நின்றான். “கொரோனா வந்ததுல  புத்தி எதுவும் மாறி போச்சா?, கிழவி இவ்ளோ அன்பா பேசுது”, என்று மகனும் மருமகளும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.மதிய நேரம் வேறு ஆனது.சமையல் செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாள் மருமகள்.

“மணி வேற ஆச்சு, யம்மாடி எனக்கும் சேத்து சமையல் செஞ்சிடு.ஆஸ்பத்திரில சாப்பாடு சாப்ட்டு நாக்கு செத்து போச்சு”, என்று ஐரீன் கூறும் போது ‘இது கனவை நிஜமா என்று மருமகளால் நம்பமுடியவில்லை.வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை வாழ தொடங்கினார் ஐரீன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.