சங்க நிதி, பதும நிதி, வங்கி கதி

புதையல் காத்த பூதம் என்றொரு சொல்லாடல் உண்டு. இவ்வகை மனிதர்கள் தங்கள் வருமானத்தைக் காப்பதிலேயே கவனம் வைத்து அத்தியாவசிய செலவுகளுக்குக் கூட அஞ்சுவார்கள். இன்றைய நுகர்வு யுகத்தில் சேமிப்பின் அவசியங்களைப் பற்றி பலர் அறிந்து கொள்வதில்லை. முதலீடுகள் செய்தாலும் ‘மிக விரைவில் அதிகப்பணம்’ என்பது குறிக்கோளாக இருக்கிறது. ஒரு நண்பரின் பாட்டி சொல்வார் “நாங்கள் மதிப்பு ஏறும் சொத்துக்களைச் சேமித்தோம்- வீடு, நிலம், தங்கம் போன்றவை. நீங்கள் ஒரு இலட்சம் கொடுத்து நேற்று வாங்கிய தொலைக்காட்சிப் பெட்டியை அதே கடையில் அதே விலைக்கு இன்று விற்க முடியுமா என்று சொல்லுங்கள்.”

எந்தக் காலத்திலும் மனிதனின் சேமிப்பு ஒரு நாட்டின் பொருளாதார அச்சாகச் செயல்பட்டிருக்கிறது. நிதி மிகுந்தோர் பொற்குவையாய்ச் சேமிக்க, அதன் தேவையுள்ளவர் அதை வட்டிக்குக் கடனாகப் பெற்று வணிகம், வர்த்தகம் செய்து அன்னியச் செலாவணியையும் ஈட்டி தன் நிலையையும் மேம்படுத்திக் கொள்வார்கள். அரசியல், பொருளாதாரம், சமூக நீதி பேசிய உலகின் முதல் நூலான கௌடில்யரின் ‘அர்த்த சாஸ்திரம்’ நிதி நிர்வாகம், நிதி மேலாண்மை, வட்டி, வரி அனைத்தையும் பற்றி சொல்கிறது.

தரக் கட்டுப்பாடுகளும், தகவல் மலைகளும், மதிப்பு எடை போடும் நிறுவனங்களும் பல்கிப் பெருகிய இன்றைய தொழில் நுட்ப யுகத்தில் வங்கிகளின் நிதி நிலைமை கவலை தரும் ஒன்றாகி விட்டது. பல அமெரிக்க வங்கிகள் கிட்டத்தட்ட திவால் நிலையிலும், சில திவாலாகிவிட்ட நிலையிலும் இருப்பதாக நோரியல் ரொபினி1 (Nouriel Roubini) கட்டுரை எழுதியுள்ளார். 

கால ஆபத்து (Duration Risk) ஓங்கி அடித்ததில் சிலிக்கான் வேலி பேங்க் (Silicon Valley Bank) சேதமுற்றது; இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. இன்றைய தொழில் நுட்ப அதி பாய்ச்சலில், பெருந்தொற்றுக் காலம் அதி தீவிரமாகி இருந்த ஆண்டுகளில், பல “ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் பல்கிப் பெருகிய நிதிகளைப் பெற்றன. அதை வங்கிகளில் வைப்பு நிதியாக வைத்திருந்தன. அந்த ஏறுமுகம் இறங்கும் போது  இந்த தொழில் தொடங்கு நிறுவனங்கள் தங்கள் வைப்புத் தொகையை வங்கிகளிலிருந்து எடுத்து விட்டன. எங்கும் ஆள்குறைப்பும், வினியோகத் தொடர் சீராக இல்லாததையும் அறிந்தும், சிலிகான் வங்கி விழித்துக் கொள்ளவில்லை. வங்கித்துறையை கண்காணித்து முறைப்படுத்துவோரும், வங்கிகளும் இதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. காலம் என்று நிதித்துறையில் சொல்லப்படுவது, கடன் பத்திரங்களின் விலை, வட்டி விகிதத்திற்கு ஏற்றாற்  போல மாறும் கால அளவைச் சொல்லும் ஒன்று என்று பொதுவாகப் புரிந்து கொள்ளலாம். வட்டி விகிதம் ஏறும் போது, நீண்ட ஆண்டுகளுக்கான கடன் பத்திரங்களின் மதிப்பு குறையும். அத்தகைய கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளவர்கள் இழப்பை எதிர் கொள்ளும் நிலை ஏற்படும்.

அமெரிகாவின் பத்தாண்டு கருவூலக் கடன் பத்திரங்கள், (10-year US Treasury Bonds) சுமார் 1% யீல்ட் (yield) தந்த ஜனவரியிலேயே பணவீக்கம் (Inflation) பங்குச் சந்தைகளையும், கடன் பத்திரங்களையும் பாதிக்கும் என நோரி்யல் சொன்னார்.

பொருளாதார வீக்க நிலை, கடன் பத்திரங்களின் ‘யீல்ட்டை’ அதிகரிக்கும். இக்காரணத்தால், ஈவுத் தொகையின் தள்ளுபடி காரணி, (Discount factor of Dividends on Shares) பங்கு பத்திரங்களை பாதிக்கும்.

‘யீல்ட்டை’ விளைச்சல் எனச் சொல்லலாம் என்றால் கூட அதன் முழுப் பொருளை அந்த வார்த்தை தருகிறதா என்பது சந்தேகமே. அதை இவ்வாறு புரிந்து கொள்ளலாம். கடன் பத்திரம் ஒரு குறிப்பிட்ட வட்டியை (6% என) தருவதாக வைத்துக் கொள்ளுங்கள். முதலீடு செய்தவர் அந்த 6% வட்டி பெறுவார். ஆனால் ‘யீல்ட்’ என்பது அந்தக் கடனைப் பெற்றவர், தன் முதலீடுகளிலிருந்து எத்தனை சதவீதம் அடைகிறார் என்பதுதான் அதன் மதிப்பை நிர்ணயிக்கும். (A Bond’s Coupon rate is the rate of interest it pays annually, (மேலே சொன்ன 6%) while its yield is the rate of return it generates.) இந்தக் காரணத்தால் தான் கடன் பத்திர விலையும், வட்டிவீதங்களும் தலைகீழ் உறவில் (Inverse relationship) இருக்கின்றன. உயர்ந்து வரும் வீக்கமும், பொருளாதார மந்த நிலையும், கொண்டு வரும் ‘கால ஆபத்தினை’  நிதி நிர்வாகத்துறை, அதை முறைப்படுத்துவோர், நிலைத்த வருமானம் வேண்டுவோர்  உணரவில்லை.  அமெரிக பத்தாண்டு கடன் பத்திரம் தன் மதிப்பில் 20% இழந்தது; எஸ்&பி (S&P) 15% இழந்தது. காரணம் ‘யீல்ட்’ மிகுந்ததால். அதே நேரம் இதையும் நாம் நினைக்க வேண்டும்; பாதுகாப்பான பத்திரங்கள் கொள்ளும் அதி விளைச்சல், அவைகளின் விலையில் வீழ்ச்சியைக் கொண்டும் வரும். சுருக்கமாக ‘யீல்ட்’ என்பதை கூப்பன் தொகையை, விலையால் வகுத்து வருவது என்று புரிந்து கொள்ளலாம். விலை மாறினால், ‘யீல்ட்டும்’ மாறும்.

பத்திரங்களில் முதலீடு செய்வோர், சந்தையை  எந்த விதத்தில் அறிந்து கொள்வார்களோ, அந்த வி்தத்தில் பல விளைவுகள் உண்டாகும். இன்றைய அமெரிக சந்தையில், ‘யீல்ட்’ காட்டுவது, கருவூலப் பத்திரங்களை வாங்க ஆர்வம் குறைந்து, மக்கள் அதிக ஆபத்தும், அதிக வருவாயும் தரும் இலக்கை நோக்கி நகர்கிறார்கள் என்பதே.

பண வீக்கம் ஏற்படும் போது மத்திய வங்கிகள் வட்டி சதவீதத்தை ஏற்றும். விளைவாக, கடன் பெறுபவர்கள் அதிக வட்டியில் கடன் வாங்க நேரிடும். அதே சமயம், குறுகிய கால, அரசு, அரசு சார்ந்த, முதல் தரமான, கருவூலக் கடன் பத்திரங்கள் அளிக்கும் வட்டியால் கவரப்பட்டு முதலீடுகள் அவற்றை நோக்கித் திரும்பும்.  மேலும், பல வங்கிகள் தங்களது முதலீடுகளான கடன் பத்திரங்களின் மதிப்பை சந்தை நிலவரத்திற்கேற்ப ஒவ்வொரு மாறுதலிலும் திருத்தி அமைப்பதோ, அல்லது அதை ஈடு செய்யும் விதமாக தனி நிதி இருப்பு வைப்பதோ செய்வதில்லை. விளைவு, ஏட்டில் இருக்கும் மதிப்பில் அவை நாட்டில் செல்லுபடியாவதில்லை. இதனால், இதுவரை உணராத நிலையில் இருந்து வந்த நட்டங்கள் (Unrealized losses) உணரப்படும் கட்டாயத்தில் தள்ளப்படும். எளிமையாகச் சொல்வதென்றால், நீங்கள் ரூ1000ல் 6% கடன் பத்திரம் வாங்கியிருக்கிறீர்கள். உங்களுக்கு இப்போது அந்தப் பணம் தேவை. ஆனால், அதை ரூ 400/-க்குக் கூட விற்க முடியவில்லை. புராதன மதிப்பில் அது ரூ 1000/-; அசல் மதிப்பு இப்போது ரூ 400/- தனி நபருக்கே இது கடினம். வங்கிகள் எத்தனை கோடிகள் முதலீடுகளை புராதன மதிப்பில் வைத்திருக்கின்றன என்பதும், அந்த முதலீடுகளின் எழுச்சி, மீட்சியை கணக்கில் கொண்டு வருவதில்லை என்பதும் ‘கால ஆபத்தில்’ அவைகளை சிக்க வைக்கின்றன. 2022 இறுதியில் அமெரிக வங்கிகளில் ‘உணரப்படாத நட்டம்’ $620 பில்லியன். அந்த வங்கிகளின் மூலதனமான $2.2 டிரில்லியனில் கிட்டத்தட்ட 28%.

ஏற்கெனவே குரங்கு, அதற்குக் கள்ளும் கொடுத்தது போல, அதிகரிக்கும் வட்டி வீதம் வங்கிகளின் பிற சொத்துக்களின் மதிப்பையும் பாதிக்கிறது. 

வங்கிகளுக்கு, அவை பெறும் வைப்பு நிதி அவற்றின் கடன்; அவை வழங்கும் கடன் அதன் சொத்து. 

நீண்ட கால வட்டி வீதம் 1%லிருந்து (10 வருட கால அளவிலான கடன்) 3.5% என்று அதிகரிக்கையில், கடனின் (சொத்தின்) உண்மையான மதிப்பு குறையும். இந்த வகையில் பார்த்தால், அமெரிக வங்கிகளின் உணரா நட்டம் அவைகளின் மூலதனத்தில் 80% என்பதை சிந்திக்கவே நடுக்கமாக இருக்கிறது

கணக்கியலில் அரிச்சுவடியான பாடம் ‘உணரா நட்டங்களை’ பதிவு செய்து அதை ஈடு செய்ய நிதி ஏற்படுத்தி விடு; ஆனால், உணரா இலாபங்களை அவ்வாறு செய்யாதே’ இந்த பால பாடத்தை நிதி அமைப்புகளை முறைப்படுத்துவோர் நினைவிலேயே கொள்ளவில்லை. இதைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது வெளியில் தெரியாவிடினும் பல வங்கிகள் திவால் நிலையில் இருக்கின்றன; பல ஏற்கெனவே திவாலாகிவிட்டன.

வங்கிகள் தங்கள் ஆண்டு அறிக்கையில் காட்டாத ஒரு சொத்து இருக்கிறது. அதற்கு ‘வைப்பு உரிமம்’ (deposit Franchise) என்று பெயர். வங்கியில் முதலீடு செய்பவர்கள், அந்த வங்கியின் மதிப்பை இந்த உரிம மதிப்பைக் கொண்டு நிர்ணயம் செய்கிறார்கள். அவர்கள் எவ்வெவற்றைக் கண்டு மதிப்பை நிர்ணயிக்கிறார்கள் என்பதை இந்தப் பட்டியல் உணர்த்தும்

• வட்டி தரத் தேவையில்லாத வைப்பு நிதி- இந்திய வங்கிகளின் நடப்புக் கணக்கு போல (current account)

• மிகக் குறைந்த வட்டியில் சேமிப்புக் கணக்கு

• குறிப்பிட்ட காலத்தில் முழுத் தொகையாய் பெற சிறிது சிறிதாக சேமிக்கச் சொல்லும் வைப்பு நிதி- இந்தியாவின் மீள் வைப்பு முறை (recurring Deposit)

• முகவர்கள் கொண்டு வரும் வைப்புக் கணக்குகள். (deposits procured through Agents)

இப்படி ஆண்டு நிதி கணக்கு அறிக்கையில் (annual balance sheet) இடம் பெறாத இந்த ‘வைப்பு உரிமம்’, வைப்பு நிதியாளர்களுக்கு பண வீக்கக் காலங்களில் அவர்களின் வைப்புத் தொகையின் மதிப்பைக் குறைத்துவிடும் என்பது ஒருபுறமிருக்க, மறுபுறம், வங்கிகளின் ‘வைப்பு உரிமத்தின்’ மதிப்பு ஏறுகிறது என்பதுதான் நிதர்சனம். ஏறுகின்ற வட்டியினால் அமெரிக வங்கிகளின் இந்த ‘வைப்பு உரிமம்’ $1.75 ட்ரில்லியன் அளவில் அதிகரித்துள்ளது என அனுமானித்திருக்கிறார்கள்.

வைப்பு கணக்கு வைத்திருப்போர் அந்த வங்கியிலிருந்து தங்கள் கணக்குகளை முற்றிலுமாக, ஏறக்குறைய அனைவருமாக விலக்கும் போது, இந்த ‘வைப்பு உரிமம்’ ஆவியாகிவிடும். வைப்பு இருக்கும் வரை கவலையில்லை. அது போய்விட்டால், உயிர் போன சடலமாகி விடுகிறது வைப்பு உரிமம். விளைவு, சிலிகான் வங்கி சந்தித்த திவால் நிலை. அதுவரை ‘உணரா நட்டமாக’ இருந்த ஒன்று உயிருடன் அரக்கனைப் போல எழுந்து வந்து தன் இருப்பை உணர்த்தி அந்த வங்கியை விழுங்கி விடும்.

இந்த உரிமம் எதன் பேரில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது? மேலே நாம் பார்த்த பட்டியலை நினைவில் கொண்டு வாருங்கள். வட்டி கொடுக்கத் தேவையில்லாத நடப்புக் கணக்குகள், வங்கிகளுக்கு அல்வா போன்றவை. இந்தியாவில் ‘காசா’ (CASA) என்று ஜெபிக்காத வங்கிகள் இல்லை. காசா என்றால் கரென்ட் அக்கவுண்ட், சேவிங்க்ஸ் அக்கவுண்ட். ஆனால், பொது மக்கள் அவ்வளவு ஏமாளிகளல்ல. தங்கள் சேமிப்பு, பாதுகாப்பாகவும், வட்டி ஈனும் வகையிலும் இருப்பதை விரும்புகிறார்கள். வங்கி வைப்பு நிதி காப்பீட்டு நிறுவனம் நிர்ணயம் செய்துள்ள வரம்பிற்குள் தங்கள் சேமிப்பை வைத்திருப்பவர்களும், அதை மீறிய தொகையை வைத்திருப்பவர்களும், வங்கிகளின் ‘உணரா நட்டம்’ பற்றிய செய்தி கசியும் போதோ, வங்கிகளின் முதலீடுகள் புராதன மதிப்பில் தான் காட்டப்பட்டுள்ளன என்று அறியும் போதோ, குறுகிய கால வைப்புக் கணக்குகளும், நீண்ட கால கடன் கணக்குகளும் வங்கிகளின் நிதி அறிக்கையில் புலனாகும் போதோ, பண வீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய வங்கி வட்டியை ஏற்றும் போதோ தங்கள் வங்கிகளிலிருந்து கணக்கை முடித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கிறார்கள்.

2008 உலக நிதிச் சிக்கலிற்குப் பிறகு 15 ஆண்டுகள் வனவாசம் சென்றிருந்த குறும் கால வட்டி, பூஜ்ய வட்டி என்பவை எத்தகைய தாக்கத்தை உண்டாக்கும் என்பது சிலிகான், சில்வர் கேட் நிலையிலிருந்து தெளிவாகிறது. பொருளாதாரம் என்பது நேர் கோடல்ல, அது பல காரணிகளால் வெவ்வேறு வழிகளில் செயல்படுகிறது. வங்கிகளின் பொதுவான மெத்தனம் இதில் தெரிகிறது. அவர்களால், கால ஆபத்தை அறிய முடியும் என நினைத்தார்கள். அதற்கான காரணம் ஒன்று இருக்கிறது- அதுதான் அவர்கள் கொழுத்த நிகர வட்டி விளிம்பில் (Fat Net Interest Margin) வைத்திருந்த ஆசை. மூலதன வரிகள்(capital Tax), அரசின் கடன் பத்திரங்களில், ஈட்டுப் பத்திரங்களில்(Mortgage bonds) பூஜ்யமாக இருந்தது வசதியாக இருந்தது. எனவே, அத்தகைய சொத்துக்களின் சந்தை மதிப்பைப் பற்றிய அக்கறையின்மை நிலவியது. முடிவில் சுனாமி அடித்து விட்டது. 

நிகர வட்டி விளிம்பு என்பதை இப்படிக் கணக்கிடுவார்கள்.

முதலீட்டிலிருந்து வரும் வருமானம்- வட்டிச் செலவினங்கள்/ வருமானம் தரும் சொத்துக்களின் சராசரி மதிப்பு (100-90=10; 10/5= 2)

இதில் மேலும் வியப்பிற்குரியது மத்திய வங்கிகள், மாறி வரும் சூழல், வட்டி ஏற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தாங்கும் நிலையில் வங்கிகள் இருக்கின்றனவா என பரிசோதிக்காதது.

நாம் முன்பே பார்த்தது போல ஏறும் வட்டி, கடன் பெறுவதை கடுமையாக்கும்; வட்டார வங்கிகள் சிறு, குறு தொழில்களுக்கு வழங்கும் கடன் பாதிப்படையும் அல்லது அதிக வட்டியில் கிடைக்கும். அதிக வட்டி, முதலீட்டுச் செலவினங்களை கடன் வாங்குபவர்க்கு ஏற்றும். அதை இந்தச் செலவினங்களையும் காரணியாக வைத்து விலை நிர்ணயம் செய்தால் பயனர்கள் பயந்து ஓடிவிடுவார்கள். (நான் எப்போதும் பயன்படுத்தும் நல்லெண்ணயின் விலை ரூ150க்கும்  மேலாக அதிகரித்துள்ளது; எனவே வாங்கவில்லை. உபயம் ருஷ்ய-உக்ரைன் போர்) நீண்ட கால பணச் சந்தை சொத்துக்களை(Long term money market instruments) வைத்திருப்போரையும் வட்டி ஏற்றம் பாதிக்கிறது. விளைவு பொருளாதாரம் கடன் வலையில்(debt trap) மாட்டிக்கொண்டு விட்டது. கடன் வலை, பற்றாக்குறையை(depression, deficiency) கொண்டு வரும்; பணவியல் கொள்கையின் மீது, (Monetary Policy) நிதிக் கொள்கை (financial Policy)  அதிகாரம் செய்யும்; அதிக வட்டிக்கு கடன் வாங்கும் சூழல் பெருகி வளரும்.

வட்டி ஏற்றம், பணவியல் கொள்கை, நிதிக் கொள்கை அனைத்துமே மத்திய வங்கிகளின் தலையீட்டைக் கோரும் நிலையில் தான் உள்ளன. வெறுக்கத்தக்க மூன்றில் ஒன்றைத் தேர்வு செய்யும் துர்பாக்கியத்தில் இருக்கும் மத்திய வங்கிகள், பணவியல் கொள்கையின் சாதாரணமான அம்சங்களை சற்று கத்தரித்து, பணவீக்க நிலையை நங்கூரமிட்டு நிலை நிறத்த வேண்டியும், நீர்த்த பொருளாதார, (Liquidity crisis) நிதிக் கடினங்கள் மீள வராமல் காக்க வேண்டியும் துரிதமாக செயல்பட வேண்டிய தேவையில் இருக்கின்றன. பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டியை உயர்த்துவதும், நிலைத்த நிதியாண்மையும், ஒரே கல்லில் விழக்கூடிய மாங்காய் இல்லை என்பதை மத்திய வங்கிகள் புரிந்து கொள்ள வேண்டும். கடன் வலையில் சிக்கியிருக்கும் பொருளாதாரச் சூழலில், அதிகரிக்கும் வட்டி விகிதம் அமைப்பு ரீதியிலான கடன் சிக்கலை வீர்யப்படுத்திவிடும்; நிதி நீர்மை இந்த இடரைச் சரி செய்யப் போதுமானதல்ல.

இந்திய மத்திய வங்கி ஏப்ரல் காலாண்டிற்கான பணக்கொள்கையை வெளியிட்டுள்ளது. ‘ரிபோ’(Repo rate) வட்டியை 6.5% என்ற நிலையிலிருந்து மாற்றவில்லை. ‘ரிபோ ரேட்’ என்பது மத்திய வங்கியிடமிருந்து பொது வங்கிகள் கடன் பெற்றால், அதற்கான வட்டி வீதம். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த ‘ரிபோ ரேட்டை’ உலகெங்கிலும் அனைத்து மத்திய வங்கிகளும் செய்யும். அமெரிக்க ஃபெடரல் செய்து வருவதும் அதுதான். மே மாதத்திலிருந்து தொடர்ந்து இதை ஏற்றி வந்த இந்திய மத்திய வங்கி இந்த முறை அதை ஏற்றாமல் விட்டிருப்பது திறமையான ஒரு செயற்பாடு. ‘வட்டி விகிதம் மட்டுமே கொண்டு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது; அதே நேரம் அது கட்டுக்கடங்காமல் செல்லவும் விட்டுவிடக் கூடாது. நிதி நிலைத்தலுடன், வினியோக சங்கிலிகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதும், தேவைகளின் அழுத்தத்தைத் தாங்கும் வழியிலுமே இம்முறை ‘ரிபோ’ வை மாற்றவில்லை, தேவையை உணர்ந்தால் நாங்கள் உடனடியாக வட்டி வீதத்தை மாற்றுவோம்’ என்று பணக் கொள்கையில் அறிவித்திருப்பது என்னைப் பொறுத்த வரை வரவேற்பிற்குரியது. பொதுவாக மேலை நிதிச் சித்தாந்தங்களைப் பின் தொடரும் தன்மையிலிருந்து ஒரு சிறு மாறுதல். 

கடன் தேவைகள், பொருள் தேவைகளுக்கான மொத்த கோரிக்கைகளை கட்டுப்படுத்தி, எதிர் வரும் கடன் நெருக்கடி மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தலாம் என்ற அனுமானத்தில் மத்திய வங்கிகள் இருக்கக் கூடாது. வினியோக சங்கிலிகள் இன்னமும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. உழைப்பாளர் சந்தை மிக இறுக்கமாக இருக்கிறது ஓய்வுதியம், ஒய்வு பெறும் வயது, செவிலியர்கள் ஊதியம், ஆசிரியர்களின் சம்பளம் போன்ற பல் வேறு துறைகள் ஊதிய உயர்வைக்கேட்டும், ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கக்கூடாதென்றும் பிரிட்டனில், ஃப்ரான்ஸில் போராட்டம் நடத்துகின்றன. 

பொருளாதார மந்த நிலை, ஓரளவிற்குப் பயன் தரலாம். ஆனால், அது கடன் சிக்கலை ஆழமாகப் பாதிக்கும்; அதன் விளைவாக பொருளாதாரம் சரியும் நிலை ஏற்படும். அமைப்பு சார்ந்த இந்த கடன் சிக்கல் நம் அனைவரின் தலையில் இடியாய் இறங்கியுள்ளது.

பொருளாதார, நிதி வல்லுனர்கள், கூடிக்கூடி பேசுவார்கள். சாதாரண சொற்களுக்குப் பதிலாக மிரட்டும் சொற்களைப் பயன்படுத்துவார்கள். இவர்கள் தேவனைப் போல சொன்னவுடன் “எங்கும் ஒளி உண்டாகிவிடும்”. நுனி மரத்தில் அமர்ந்து கொண்டு அடி மரத்தை வெட்டும் திறமைசாலிகளைப் போற்றுவோம்!

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு.” திருக்குறள்.

Ref:

https://www.msn.com/en-us/money/-saving-investing/most-us-banks-are-technically-near-insolvency-and-hundreds-are-already-fully-insolvent-roubini-says/ar-AA19joLW?ocid=sapphireappshare

1Nouriel Roubini, Professor Emeritus of Economics at New York University’s Stern School of Business, is chief economist at Atlas Capital Team and the author of MegaThreats: Ten Dangerous Trends That Imperil Our Future, and How to Survive Them (Little, Brown and Company, 2022).

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.