காலாதீத வ்யக்துலு – டாக்டர். பி. ஸ்ரீதேவி 

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

டாக்டர் பி. ஸ்ரீதேவி எழுதிய ஒரே ஒரு நாவல் ‘காலாதீத வ்யக்துலு’ – (காலத்திற்கு அப்பாற்பட்ட மனிதர்கள்). ஆனாலும் அந்த ஒரு நாவலே இலக்கிய வரலாற்றில் அவர் பெயரை நிலைநாட்டி விட்டது. 1929 செப்டம்பர் 21ம் தேதி அனகாபல்லியில் பிறந்த ஸ்ரீதேவி மருத்துவப் படிப்பு படித்து மருத்துவராகப்  பணியாற்றினார். இலக்கிய ஆர்வம் மிக்கவர். சொந்தமாக கவிதைகளும் கதைகளும் எழுதினார். 1957 ல் அவர் எழுதி வெளியிட்ட உருமுலு – மெருபுலு (இடியும் மின்னலும்) என்ற கதைத் தொகுப்பிற்கு முன்னுரை எழுதிய கோரா சாஸ்திரி, அவரை “சொந்த ஆளுமையுள்ள ஆத்மார்த்தமான பெண்மணி” என்று   பாராட்டியுள்ளார். காலாதீத வ்யக்துலு என்ற நாவலின் கதைப் பொருளில்  பெண்களிடம் உள்ள அந்த சொந்த ஆளுமைத் திறனையே முக்கியமாக எழுதியுள்ளார் ஸ்ரீதேவி.

காலாதீத வ்யக்துலு நாவல் ‘தெலுகு சுதந்திரா’ பத்திரிகையில் 7 – 9 -1957 ல் இருந்து 25- 1 -1958 வரை 21 வாரங்கள் தொடராக வெளிவந்தது. உடனுக்குடன் அதற்கு பதில்வினையாற்றி பி. சரளாதேவி அந்த நாவல் குறித்து விமர்சனம் எழுதினார். (தெலுகு சுதந்திரா 8 -2 -1958). இது அன்றைய இலக்கிய உலகில்  ஏற்பட்ட ஆர்வத்திற்கும், விவாதத்திற்கும், சிறந்த ரசனைக்குமான எடுத்துக்காட்டு.

இந்த நாவலை ஸ்ரீதேவி, “எல்லா நேரங்களிலும் நான் இருக்கிறேன் அம்மா என்று துணையாக உடனிருந்த அம்மாவுக்கு’ என்று சமர்ப்பணம் செய்துள்ளார். அதன் பிறகு நான்காண்டுகளிலேயே 1961 ஜூலை 29 அன்று தன் 32 வது வயதில் ஸ்ரீதேவி  மரணமடைந்தார்.

ஒன்று

காலாதீத வ்யக்துலு நாவலின் கதையம்சம் நடந்த மையம் விசாரப்பட்டினம்.   நாவலில் பாத்திரங்களாக வருபவர்களுள் கிருஷ்ணமூர்த்தி, விசாகா ஜில்லா பாலகொண்ட என்ற இடத்தைச் சேர்ந்தவன். கல்யாணியுடையது துனி அருகில் உள்ள நந்தூரு. இந்திராவுக்கு அனகாபல்லி அருகில் உள்ள ஊர். பிரகாசத்திற்கு நிடதவோலு அருகில் உள்ள வெலிவென்னு. வசுந்தராவின் அக்கா ராஜமன்ட்ரியில் இருந்தாள். பிரகாசத்தின் தாய்மாமன் சேஷாவதாரம் ராஜமன்ட்ரியில் வீடு கட்டிக் கொண்டுள்ளான். அவன் பிரகாசத்திற்குப் பார்த்த பெண் ராஜமன்ட்ரியைச் சேர்ந்தவள். சக்கரவர்த்தியின் நண்பன் டாக்டர் கோபாலராவு நெல்லூரில் இருந்தான். திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பிய ஜோடிகளான சக்கரவர்த்தி – கல்யாணி, கிருஷ்ணமூர்த்தி – இந்திரா, அந்த டாக்டரின் வீட்டிலேயே சந்தித்துக் கொள்கிறார்கள். அங்கிருந்து அனைவரும் திருப்பதிக்கு சென்றார்கள். அந்த திருமணங்கள் நடந்த பின் விசாகப்பட்டினத்திற்கு திரும்ப பிரயாணம் செய்கிறார்கள், இவ்விதமாக விசாகப்பட்டினத்தில் தொடங்கி ஆந்திர தேசத்தில் உள்ள ஊர்களுக்கு விரிந்து திருப்பதி வரை சென்ற இந்த நாவலின் கதை நடந்த இடம் ஆந்திரப் பிரதேசம்

காலாதீத வ்யக்துலு நாவல் எழுதிய காலம் 1957. அப்போது சுதந்திரம் கிடைத்து  பத்தாண்டுகள் ஆகியிருந்தது. இந்திய அரசியல் சட்டம் ஆணும் பெண்ணும் சமம்   என்பதை எடுத்துரைத்து அடிப்படை உரிமைகள் அனைவருக்கும் பொது என்று வடிவமைத்தது. அதிகாரப்பூர்வமான விதிமுறைகளில் பெண்களின்  முன்னேற்றத்திற்காக பிரத்யேக வழிமுறைகளைக் கூறியது. தன்மானத்தோடும்  சுதந்திரத்தோடும் பெண்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியது. 

14 வயதுக்குள் உள்ள சிறுமிகளுக்கு இலவசக் கல்வி கிடைக்க சட்ட அமைப்பு உறுதியளித்தது. ஐந்தாண்டுத் திட்டங்களில் பெண்களின் நலனுக்கு அனுகூலமாக திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன. 1955 ல் ஹிந்து திருமண சட்டம் பெண்களுக்கு விருப்பம் இல்லாத திருமண பந்தங்களிலிருந்து விடுபடுவதற்கு ஏற்ப விவாகரத்துக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியது. 1957ல் வரதட்சணை ஒழிப்பு சட்டம் ஏற்படுத்தப்பட்டது. இவை அனைத்தும் பெண்கள் சுதந்திரமாக   வளர்வதற்கு ஏதோ ஒரு வழியில் உதவி செய்தன. படித்த பெண்களின் எண்ணிக்கையும் உத்தியோகம் செய்யும் பெண்களின் எண்ணிக்கையும் சற்று உயர்ந்தது. சமுதாயத் துறைகளுக்கு வந்த பெண்கள் தம் சுய இருப்புக்காக ஏங்கி,   சம்பிரதாயங்கள் மிகுந்த சமுதாயத்தோடு மோதுவதென்பது அந்த நேரத்தில்தான் தொடங்கியது. இந்தச் சூழலில் வளர்ந்து, வாழ்ந்து, மோதி வந்த பெண்களின் வாழ்க்கையை கருப்பொருளாகக் கொண்டு ஸ்ரீதேவி காலாதீத வ்யக்துலு நாவலின்  கருவை வடிவமைத்தார்.

கல்யாணியை அறிமுகம் செய்யும் ஆசிரியை கூறும் கதையைத் தொடர்ந்து பார்த்தால் இந்த நாவலின் கதை நடக்கும் காலம் புரியும். பீகாரில் பெரிய பூகம்பம் வந்தது என்று ஒரு செய்தியை அந்த மதிய நேரத்தில் கிராமத்திற்கு வந்த ஆந்திர பத்திரிக்கை சுமந்து வந்தது. விடியற்காலை நான்கு  மணிக்கு அச்சுதராமய்யாவின் மனைவி பெண் குழந்தையைப் பிரசவித்து உடனே மாரடைப்பால் மரணம் அடைகிறாள். அந்தப் பெண்ணே கல்யாணி. (காலாதீத வ்யக்துலு, எமெஸ்கோ புக்ஸ் 2002, பக்கம்-10).

பிகார் பூகம்பம் வந்தது 1934 ஜனவரியில். அந்த செய்தி ஜனவரி 16ம் தேதி பத்திரிகையில் வந்தது என்று போகராஜூ பட்டாபி சீதாராமையாவின் ‘காங்கிரஸ் சரித்ரம்’ மூலம் தெரிகிறது. மத்தியானம் அந்த செய்தியை பத்திரிக்கைகள் எடுத்து வருகையில் விடியற்காலையில் கல்யாணி பிறந்தாள் என்றால் அது ஜனவரி 16 ஆகத்தான் இருக்க வேண்டும். நாவலில் கல்யாணியின் பிறந்த நாள் ஜனவரி 17 என்று உள்ளது. பீகார் பூகம்பம் 16ம் தேதி வந்திருந்தால் அது 17 ஆகிறது. மொத்தத்தில் கல்ராணி பிறந்தது 1934 ல் என்பது தெளிவு. பதினைந்து வயதில்  கல்யாணி ஸ்கூல் பைனல்ஸ் தேர்ச்சி பெறுகிறாள். அப்படியென்றால் அது (1934+ 15) 1949ம் ஆண்டு. பதினேழு வயதில் இன்டர் பாசாகிறாள் என்றால் அது (1949+ 2) 1951ம் ஆண்டு.  ஓராண்டு காலம் வீட்டிலேயே இருந்து, அடுத்த ஆண்டு வால்டேர் யுனிவர்சிட்டியில் ஹானர்ஸ் சேர்ந்தாள். அப்படியென்றால் 1953 ல் ஹானர்சில் சேர்ந்தாள். நாவலில் அவள் கதையில் இணைவது இங்கிருந்தே.

அந்த ஆண்டு செப்டம்பரியே அவளுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. டிசம்பரில் தந்தை இறந்து போனார். 1954 ஜனவரி முதல் வாரத்தில் வாடகைக்கு அறை எடுத்துக் கொண்டு வசுந்தராவைச் விட்டு செல்கிறாள். ஜனவரி 17 அன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடினாள். அன்று அவளுக்கு இருபது வயது நிரம்பியது. அன்றைய தினமே சக்கரவர்த்தியோடு அவளுக்கு நெருக்கம்  ஏற்பட்டது. ஒரு வார காலம் வாதங்களும் விவாதங்களுமாகக் கழிந்தபின் அவனைத் திருமணம் செய்து கொள்வதற்கு அங்கீகாரம் தெரிவிக்கிறாள். பிப்ரவரியில் அவர்களின் திருமணம் நடந்திருக்க வேண்டும். அவ்விதமாக 1953 ஜூன், ஜூலையில் தொடங்கிய நாவலின் கருப்பொருள் 1954 பிப்ரவரியில் முடிகிறது.

அது முதலாம் ஐந்தாண்டு திட்டக் காலம் என்ற குறிப்பு கூட நாவலில் உள்ளது. இந்திராவின் தந்தை ஆனந்தராவு ஐந்தாண்டுத் திட்டத்தை ஒரு லாட்டரி போன்றது என்கிறார். வெற்றி தோல்வி பற்றிக் கூற முடியாது. வெற்றியின் மீது ஆசையோடு பொறுமையாக எதிர்பார்த்து இருந்தால் பலன் கிடைக்கலாம். கையில் காசு  இல்லை என்று முணுமுணுக்கும் இந்திராவிடம் ஆனந்தராவு கூறிய சொற்கள் இவை.

அதைத்தவிர 1953-54 ஆண்டு காலத்தோடு தொடர்புடைய குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் எதுவும் இந்த நாவலின் கதைப்போக்கில் ஒரு பகுதியாக ஆகவில்லை. ஆனால் அன்றைய சமுதாய நிலையை பற்றி குறிப்பிடும் அம்சங்கள் பல இதில் உள்ளன. ஆனந்த மூர்த்தியின் நண்பன் பாவநாராயணா பற்றிய குறிப்பு, போலீஸ் அமைப்பின் ஊழலையும், காங்கிரஸ் அரசியலில் நுழைந்த களங்கத்தையும் பேசுகிறது. மதுவிலக்கு அமலில் இருந்த அந்தக்  காலத்தில் ஆனந்தமூர்த்தி நண்பர்களோடு சேர்ந்து குடித்து போலீசார் கண்ணில் பட்டு ஜெயிலுக்குச் செல்வது கவனிக்கத்தக்கது.

இந்த நாவலில் ஆனந்தராவைப் பற்றி கூறும்போது முதல் உலகப்போர் பற்றிய குறிப்பும், கல்யாணி பற்றி கூறும்போது இரண்டாவது உலகப் போர் பற்றிய பேச்சும் வருகிறது. கல்யாணியின் தந்தை அச்சுதராமய்யா பற்றி கூறும்போது உப்பு சத்தியாகிரகம் பற்றிய பேச்சும், ஜான்சி லட்சுமிபாய், சரோஜினி நாயுடு பற்றிய பேச்சும் வருகிறது. இவை அனைத்தும் ஆனந்தராவின் மன நிலையையும், தனித்தன்மையையும், அச்சுதராமய்யாவின் மனநிலையையும் தனித்தன்மையையும் புரிந்து கொள்வதற்கான குறிப்புகள் என்று கருதலாம்.

பெண் கல்வி பற்றிய அனுகூலக் கண்ணோட்டம் கல்யாணியை துனி என்ற ஊரில் வைத்து ஹை ஸ்கூல் படிக்க வைப்பதிலும் உயர் கல்விக்காக விகாசாவுக்கு தனியாக அனுப்புவதிலும் தென்படுகிறது. வசுந்தராவின் படிப்புக்காக அவள் அண்ணன்கள் செல்வந்தர்களானதால் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து, சித்தி உறவுள்ள ஒரு பெண்மணியை சமைத்துப் போட்டு துணையாக இருந்து பார்த்துக் கொள்வதற்கு அமர்த்தினார்கள். ஆண் பிள்ளைகள் படிப்பதற்காக கிராமங்களை விட்டு நகரங்களுக்கு வருவதும், லாட்ஜ் அறைகளிலும் பிற இடங்களிளும் இருந்து ஹோட்டலில் சாப்பிட்டு படிப்பதையும் கிருஷ்ணமூர்த்தி, பிரகாசம் இவர்களின் விஷயத்தில் பார்க்கிறோம்.

கல்யாணி வளர்ந்த முறையைக்  கூறுகையில், பத்து வயதில் கல்யாணி கஜேந்திர மோட்சம், வேமனா சதகம், ருக்மிணி கல்யாணம் போன்றவற்றை மனப்பாடம் செய்தாள் என்றும் கிராமக் கணக்காளர் கர்ணத்தின் மருமகளிடம் சிலகமர்த்தியின் நாவல்கள் சிலவற்றைக் கடன் வாங்கிச் சென்று படித்தாள் என்றும் கூறிய விஷயம் 1940 ம் தசாப்தத்தில் பெண்களுக்காக அறிவுறுத்தப்பட்ட படிப்பின் வடிவத்தைக் காட்டுகின்றன.

நவீன மயமாக்கப்பட்ட ஆங்கிலக் கல்வி முறையிலிருந்து மாறுபட்டதாக பெண்களுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிக்கும் வடிவத்தை இது காட்டுகிறது. நாவல் என்பது பெண்கள் படிக்கும் செயல்முறை என்று நிலைபெற்ற விஷயம் கூட இங்கு தெளிவாகிறது.

கல்யாணிக்கு பதினோரு வயது வந்த போது மணமகனைத் தேடச் சொல்லி சித்தி கூறிய சொற்கள் பெண் குழந்தை பிறந்தது என்றால் கல்யாணத்திற்காகவே என்று எண்ணும் சமுதாய கலாச்சாரத்தைக் காட்டுகிறது.

சுதந்திரப் போராட்டத்தால் அறிவூக்கம் பெற்ற அச்சுதராமையா, “இன்னும் முழுமையாக கண்திறக்காத இந்த குழந்தைக்குத் திருமணமா? முடியாது” என்று சித்தியின் சொற்களுக்கு மறுப்பு கூறி, நூறு ரூபாய் கடன் வாங்கி பெண்ணையும் சித்தியையும் துனி என்ற ஊரில் அமர்த்தி படிக்க வைக்கிறார். ஹைஸ்கூல் படிப்பு முடிந்தபின், “புத்திசாலியான பெண். மேல் படிப்பு படிக்க வையுங்கள்” என்று ஒருபுறம் டீச்சர்கள் கல்யாணியைப் பற்றி கூறினாலும், சித்தி மட்டும், பெண்ணுக்குக் கல்யாணம் செய்ய வேண்டும் என்று மீண்டும் பிடிவாதம் பிடிப்பது சமுதாயத்தில் பெணகள் படிப்பதில் உள்ள கஷ்டத்தைக் காட்டுகிறது.

மருத்துவக் கல்வி அன்றைக்கு மிகவும் செலவுள்ள கல்வியாக இருந்தது. எம்.பி.பி.எஸ். படித்து லேடி டாக்டராக வேண்டுமென்பது கல்யாணியின் கனவு. ஆனாலும் அத்தனை படிப்பதற்கு தந்தையால் செலவழிக்க முடியாது என்று உள்ளுக்குள் பயப்பட்டு கொண்டே ஹானர்ஸ் படிப்பதற்கு முடிவெடுக்கிறாள்.

படிக்கும் பெண்கள் ஆண்களோடு நட்பு செய்து வம்ச கௌரவத்திற்கு களங்கம் ஏற்படுத்துவார்களோ என்ற சந்தேகத்தோடு அவர்கள் மேல் ஒரு கண் வைத்திருப்பதும் எச்சரிப்பதும் வசந்தராவின் விஷயத்தில் அவளுடைய சித்தியின்  நடத்தை மூலமும் பேச்சு மூலமும் வெளிப்படுகிறது.

கல்யாணத்தில் வரதட்சணை ஒரு முக்கிய அம்சமாக இருப்பது கல்யாணிக்கு வரன் தேடும் அச்சத்தராமையாவுக்கு ஏற்பட்ட அனுபவம். இரண்டாயிரம் ரூபாய்   வரதட்சனை கூட இல்லாவிட்டால் கல்யாணிக்கு திருமணம் நடக்காது என்று தெரிந்தபின், அவர் அதைவிட பெண்ணை மேல்படிப்புக்கு அனுப்புவதே மேல் என்று எண்ணுகிறார்.

திருமணச் சந்தையில் அதிக விலைமதிப்புள்ளவன் என்ற பிரகாசத்தைப் பற்றி தெரிந்தவன் ஆதலால் அவனைக் குறைவான விலைக்கு வாங்கி விட வேண்டும் என்று எண்ணும் தாய்மாமன், கல்யாணியிடமிருந்தும் இந்திராவிடமிருந்தும் பிரகாசத்தை காப்பாற்றித் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சித்து அதில் தோல்வியுறுகிறான்.

பணம் ஒரு முக்கியமான மதிப்புப் பொருளாக மாறியதென்பது, பணம் சம்பாதிப்பதில் தன், பிற என்ற பேதம் இல்லாத சுயநலம் ஆழமாக வேரூன்றி இருந்த அன்றைய சமுதாய பரிணாமங்களில் ஒரு அம்சம்.

ராமிநாயுடு தனக்களித்த ஆயிரம் ரூபாய்களை ராமிநாயுடு இறந்தபின்   உடலோடு கூட வாரிசுகளிடம் ஒப்படைத்தபோது அவர்கள் மேற்கொண்ட தொகை பற்றி விசாரிப்புகள், பணமே உலகமாக இருந்த நிலையைப் பற்றியும், பணம் பிறரைக் கொல்லும். ஆனால் ஆனால் அது சாகாது என்ற புதிய ஞானத்தையும்   கல்யாணிக்கு உணர்த்துகிறது.

பிரகாசத்தின் தாய்மாமன் சேஷாவதாரம் பண வடிவத்தில் கிடைக்கும் லாபம் இன்றி எந்த வேலையும் செய்ய மாட்டான். தங்கையின் சொத்தைக் கொண்டு  தங்கை மகனைப் படிக்க வைத்ததும் சரி, ஊரில் திருமணங்கள் நடத்தியதும் சரி,  மருமகனின் திருமணத்தைப் பேசி முடித்ததும் சரி அனைத்திலும் அவனுடைய பங்கு அவனுக்கு வந்து தீர வேண்டும். அவ்விதமாக பணம் சம்பாதிப்பதும் சொத்து சேர்ப்பதுமே வாழ்க்கையின் லட்சியமாகப் பணிபுரிந்தான். அரக்குப் பள்ளத்தாக்கின் அருகில் நிலம் குறைந்த விலையில் கிடைக்கிறது என்றறிந்து வாங்குவதற்காக விசாகப்பட்டினம் வருகிறான். விசாகாவில் ரியல் எஸ்டேட் வியாபாரத் தொடக்கத்தைக் குறித்து பேசுகிறது இந்த நிகழ்வு.

விசாகப்பட்டினத்தில் பூர்ணா தியேட்டர், செங்கல்ராவு பேட்டை, டாபா தோட்டம், கார்டன் பள்ளத்தாக்கு போன்றவை பற்றி குறிப்பிடுவது நாவலின் கதையமைப்புக்கு ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.

“லட்சக் கணக்கான பெருமூச்சுகளும் லட்சக் கணக்கான கண்ணீர்களும் கொண்ட நகரம் இது” என்று பிரகாசம் விசாகப்பட்டினம் பற்றி எண்ணும் சிந்தனை   கவனிக்கத்தக்கது. நகரமயமாக்கல் மனிதர்களின் வாழ்க்கையைத் தனிமை வேதனைக்கு உள்ளாகியது என்ற விஷயம் இங்கு குறிப்பிடப்படுகிறது. இப்படிப்பட்ட நகரத்தில் நவீன இளைஞர்கள், பெண்கள், அவர்களுடைய வாழ்க்கையின் மோதல்கள் ஆகியவற்றைச் சித்தரிக்கிறது காலாதீத வ்யக்துலு  நாவல்.

இரண்டு

பிரகாசம், கல்யாணி, இந்திரா, கிருஷ்ணமூர்த்தி, சக்கரவர்த்தி, வசுந்தரா இவர்களைச் சுற்றி 1950 களில் ஆந்திர தேசத்தில் நிகழ்கிறது காலாதீத வ்யக்துலு நாவலின் கதை.

இந்தக் கதையை நடத்தும் வகையில் எழுத்தாளர் கதையின் ஒரு பகுதியாக, பாத்திரங்களின் எண்ணங்கள் மற்றும் அபிப்ராயங்களின் வடிவத்தில் பாத்திரங்களின் நடத்தை பற்றி பிற கதாபாத்திரங்களின் வியாக்கியானங்களாவோ, எழுத்தாளரின் விளக்கமாகவோ காதல், திருமணம், குடும்பம் முதலான அம்சங்களின் மீது விவாதிப்பது கருப்பொருளின் ஒரு அங்கமாகத் தெரிகிறது.

புதிதாக வளர்ச்சியடைந்து வந்த பெண்களின் அறிவூக்கமும் அதிலிருந்த  பன்முகத்தன்மையும் நாவலின் கருப்பொருளில் வெளிப்படுகிறது. இத்தகு சைதன்யத்தின் காரணமாக திருமணத்திற்கான விளக்கமும் பொருளும் மாறுவதையும் காண முடிகிறது. 

திருமணத்தால் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் வாழ்நாள் உறவு குடும்பத்திற்கான அஸ்திவாரம். திருமணத்திற்கு காதல் அடிப்படையாக இருக்க  வேண்டும் என்பது நவீன காலக் கண்ணோட்டம். திருமணம் என்பது இரு புறப் பெரியவர்களும் பெண்ணையும் மாப்பிளையையும் தேர்ந்தெடுத்து ஒன்றிணைக்கும் சம்பிரதாய முறை. இந்த முறைத் திருமணங்களில் தம்பதிகளாகும் பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் எண்ணங்களின் ஒற்றுமையோ, அறிவு நிலைச் சமத்துவமோ குறைபாடாகவே இருக்கும்.

இந்த நாவலில் தென்படும் தம்பதிகளின் விஷயத்தில் இது நிரூபணமாகிறது. கல்யாணியின் தந்தை அச்சுதராமய்யாவைப் பற்றிக் கூறும் ஸ்ரீதேவி, “அநாகரீகமான மனைவியோடு முப்பத்தைந்து ஆண்டுகள் குடும்பம் நடத்தினார்” என்கிறாள். டாக்டர் சக்கரவர்த்தி இன்டர் படிக்கும்போதே அவனுடைய தாய் ஒரு பன்னிரண்டு வயது பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைக்கிறாள். மாமியார் காட்டும் பாசத்திற்கு நன்றியுள்ளவளாக மாமியாரின் கண்கள் மூலமாக கணவனைப் பார்த்து அவனை வெறுத்து சம்சாரத்தை நரகமாக்கிக் கொள்ளும் அந்த மருமகளை, ‘தூய்மையான பெண்’ என்று குறிப்பிடுகிறாள். இந்திராவின் தந்தை ஆனந்தராவுக்கு வாய்த்த மனைவி ‘ஒரு அநாகரீகமான பேராசைக்காரி’ என்று குறிப்பிடப்படுகிறாள்.

அழகும் படிப்பும் சமமாக இல்லாததோடு பல குடும்பங்களில் முட்டாள்தனம் முக்கிய குணமாக இருப்பதாக தாம்பத்தியம் பற்றி இந்த நாவலில் ஸ்ரீதேவி கூறிய சொற்கள் குறிக்கின்றன.

பால்ய விவாகங்கள் நடப்பதும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் சூழ்நிலையோ பண்பாடோ இல்லாமல் போவதும் வீட்டைத் தவிர வெளி  உலகத்தோடு தொடர்பு இல்லாத பெண்களின் விஷயத்தில் அது வேரூன்றிய முட்டாள்தனமாக மாறுவதுமாக தாம்பத்தியங்கள் உருவாகுகின்றன. அந்த முட்டாள்தனத்தின் உச்சகட்டவடிவமாக இருப்பவள் டாக்டர் சக்கரவர்த்தியின் தாய். அவள் சக்கரவர்த்தியின் வளர்ப்புத் தாய். அவளுடையது அட்டைப் பூச்சி போன்ற பாசம் என்கிறார் ஸ்ரீதேவி.

மகனை எங்கும் நகரவிடாமல் தன் கண் முன்பாகவே இருக்க வைத்துக் கொள்வதே அன்பு என்று நினைக்கிறாள். அதனால் அவனை மேல் படிப்புக்காக வெளியூர் செல்ல விடாமல் தடுக்கிறாள். தகராறு செய்கிறாள். பன்னிரண்டு வயதுப் பெண்ணை அழைத்து வந்து இன்டர் படிக்கும்போதே சக்கரவர்த்திக்குத்  திருமணம் செய்து வைக்கிறாள்.

அந்த திருமணத்திற்கு அவன் ஒத்துக்கொண்டால் அவனுடைய மேல் படிப்புக்கு அவள் அனுமதிப்பதாக ஒப்பந்தம் செய்கிறாள். மகன் படிப்பை முடித்து வருவதற்குள் தன் அன்பினால் மருமகளை தனக்கு நகலைப் போல் தயார் செய்கிறாள். தனக்கு அருகாமையில் இல்லாமல் தன்னோடு அன்பாக இல்லாமல் இருக்கிறான் என்று நினைத்து அதனையே நம்பி வாழ்ந்து சக்கரவர்த்திக்கு சுகம் இல்லாமல் செய்கிறாள் அந்த மனைவி. தன் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறாள். இறுதியில் காசநோய்க்கு ஆளாகி இறந்து போகிறாள். இப்படிப்பட்ட மூர்க்க குணத்தால் குடும்பத்தில் இருக்கும் ஆண், பெண் இருவரின் வாழ்க்கையும் அழிகிறது.

இது கடந்த காலத்தோடு தொடர்புடையது. நவீன சமுதாயத்தில் திருமண   உறவில் ஆணும் பெண்ணும் சுகமாக இருக்கும்படி எவ்வாறு மாற்றிக்கொள்வது? 

தகுந்த வயது வந்தபின் திருமணம் செய்து கொள்வதும், ஆணும் பெண்ணும் விருப்பத்தோடு திருமணம் புரிந்து கொள்வதும் மட்டுமே உகந்தவை. இந்த விஷயத்தை நாவலின் கதைப் போக்கில் பலவிதமாக நிரூபிக்கிறார் ஆசிரியை.

காலாதீத வ்யக்துலு நாவலின் கதை முடியும் போது பிரகாசத்தின் திருமணம், கல்யாணிக்கும் சக்கரவர்த்திக்கும் திருமணம், இந்திராவுக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் திருமணம் ஆகியவை நடக்கின்றன. வைதேகியின்  திருமண விஷயம், வசுந்தராவின் திருமண விஷயம் பற்றி பேச்சு வருகிறது.

கல்யாணி ஒருத்தி மட்டுமே தன் வாழ்க்கையின் பொருள் என்று எண்ணும் பிரகாசம், இருவரும் ஒருவருக்கொருவர் துணை என்றும் இனி அவளுக்குத் தனிமையே இல்லை என்றும் கல்யாணிக்கு நம்பிக்கை அளிக்கிறான்.

தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றறிந்து கல்யாணி ஊருக்குச் சென்ற பின்  கல்யாணியைப் பற்றியே சிந்தித்து, அவளுக்குத் தேவையான பணம் அனுப்பும் தகுதி தனக்கு இருக்கிறதா என்று கவலைப்படுகிறான். ஆனால் இந்திராவின் அருகாமையில் அந்தக் கவலையை மறந்து, “எல்லா விதத்திலும் தனித்து விடப்பட்ட என்னைத் தள்ளி விடாதே” என்று இந்திராவின் அருகாமைக்காக ஏங்கி அவளோடு தொடர்பு வைத்துக் கொள்கிறான். தாய்மாமனை எதிர்க்கும் துணிவில்லாமல் அவன் காட்டும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்குத்  தயாராகிறான்.

“இந்திரா, கல்யாணி இவர்களெல்லாம் யார்? தமக்குப் பயன்படும் ஆண்களைப் பொறிவைத்துப் பிடிக்கும் ரகம்” என்று அவர்கள் மீது குற்றம் சுமத்தும் தாய்க்காகவும், தாய்மாமனுக்காகவும் அவ்வாறு நடந்து கொள்வதாக தன் நடத்தைக்கு ஒரு அர்த்தத்தை கூட்டிக்கொண்டு ராஜமன்ட்ரி பெண்ணை திருமணம் செய்து கொள்வதே நல்லது என்று எண்ணுகிறான். “எத்தனை காலம் ஆனாலும் சம்பிரதாயத்தில் இணைந்து வாழ்வதில்தான் சுகம் உள்ளது” என்ற முடிவுக்கும் வருகிறான். திருமணத்தின் மூலம் புது உறவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விருப்பமோ முயற்சியோ பிரகாசத்திடம் இல்லை. அப்படிப்பட்ட எண்ணம், லட்சியம், முயற்சி ஆகியவற்றிற்கு மனிதனிடம் பொறுப்பும் பண்பாடும் இருப்பது தேவையாகிறது. தன் வாழ்க்கைக்குத் தான்தான் பொறுப்பு வகிக்க வேண்டும் என்ற நிலை பிரகாசத்திடம் இல்லை.

மருத்துவப் படிப்பு படிக்கும் போது தனிமையில் இருக்க வேண்டிய நிலை இருந்ததால் ஒருமுறை கல்யாணியையும் ஒரு முறை இந்திராவையும் அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தானே தவிர அவன் எப்போதுமே சுதந்திரமானவனாக இருக்கவில்லை. தாய்மாமனின் கருணையை நம்பி இருக்கும் தன் நிலையை அவன் எப்போதும் மறக்கவில்லை.

சொத்துக்குச் சொந்தக்காரன் தான் என்பதும் தன் ஆஸ்தி மூலம் கிடைக்கும் லாபத்தை மாமன் செலவு செய்து கொள்கிறான் என்பதும் தெரிந்தும் கூட  மாமனை எதிர்த்து எதுவும் செய்ய இயலாமல் இருக்கிறான். தாய்மாமனுடைய  அதிகாரத்திற்கும் சம்பிரதாயத்திற்கும் அவன் எப்போது அடிமையாகவே இருக்கிறான். சுதந்திர நடத்தை இல்லாதவன் ஆகையால் பிரகாசம் தன் திருமண விஷயத்தில் நவீன கண்ணோட்டத்தோடு நடந்து கொள்ள முடியாமல் போகிறான்.

சுதந்திர நடத்தை இல்லாதவன் என்பதால் இந்திரா அவனை வெறுக்கவும் மறுக்கவும் செய்கிறாள்.

சம்பிரதாயத்தில் சுகம் இருக்கிறது என்று எண்ணி பிரகாசம் பெரியவர்கள் நிச்சயித்த திருமணத்திற்கு தலை குனிகையில், வைதேகி எதிர் நீச்சலடிக்க முயற்சிக்கிறாள்.

பள்ளி இறுதி வகுப்பில் இருக்கும் போதே படிப்பை நிறுத்திவிட்டு அவளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். பி.ஏ. வரை பெண்ணை படிக்க வைக்க வேண்டும் என்ற தாயின் சங்கல்பத்தால் அவளுடைய படிப்பு தொடர்ந்தது. ஆனால் திருமணம் முயற்சிகள் மட்டும் நடந்து கொண்டே இருந்தன.

அண்ணன்கள் ஏதோ வரன் கொண்டு வருவதும் முன்பின் தெரியாதவனின் முன்னால் பெண்பார்க்கும் படலத்திற்கு உட்கார மாட்டேன் என்று அவள் ஒவ்வொருமுறையும் பிடிவாதம் பிடிப்பதும் நடகிறது. இருபத்தைந்து வயது தாண்டியும் உத்தியோகம் செய்து வரும் அவளுக்குத் துன்பங்கள் வராமல் இல்லை. திருமணத்திற்கு வரன் தேடுவதும், பெண் பார்ப்பதற்கு லீவு போடுவதும் பிள்ளை வீட்டாரின் பேராசை திருமணத்திற்குத் தடையாக இருப்பதும் நடந்து கொண்டே இருந்தது. ஒரு ஆண்டில் ஐம்பது பேருக்கு தன்னைக் காட்டினார்கள் என்று இந்திராவிடம் ஒரு முறை அவள் கூறினாள். “எனக்குப் பிடித்தவனை நான் தேடிக் கொள்கிறேன்” என்று அவள் முடிவாகக் கூறினாலும் அவர்கள் காதில் வாங்காமல் பழைய முறையில் நடந்து கொண்டதால் வீட்டை விட்டு வெளியே வருகிறாள்.

திருமணங்களை முடிவெடுக்கும் சம்பிரதாய முறையின் மீது நவீனப் பெண்கள் அறிவித்த எதிர்ப்பாக இந்த சந்தர்ப்பத்தைப் புரிந்து கொள்ளலாம்.

வீட்டை விட்டு வந்த வைதேகி இந்திராவின் வீட்டுக்கு வருகிறாள். மாலை அலுவலகத்திலிருந்து வந்த இந்திரா விவரத்தை அறிந்து கொள்கிறாள்.  உரையாடல் சந்தர்ப்பத்தில், “யாராவது கனவு அழகன் இருக்கிறானா உன் மனதில்?” என்று கேட்கிறாள் இந்திரா.

“அப்படி எதுவும் இல்லை” என்று கூறும் வைதேஹி, “அத்தனை அதிர்ஷ்டம் கூட எனக்கு உள்ளதா?” என்று கூறியதில் அந்த அதிர்ஷ்டம் தனக்கு கிடைக்கவில்லையே என்ற நிராசை வெளிப்படுகிறது. தானாகவே ஒருவனைக் காதலித்து திருமணம் செய்யும் அதிர்ஷ்டமும் வாய்ப்பும் தனக்கு இல்லாமல் போய்விட்டதே என்ற கவலை அவளுக்குள் இருந்தது. அதனால்தான் அவள் தனக்கு அப்படிப்பட்ட ஆசைகள் இல்லை. இருந்தாலும் அவை நடக்காது என்று கூற முடிகிறது.

இந்திரா மீண்டும் மீண்டும் கேட்டபோது, “அவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அதனால் அதையெல்லாம் முழுமையாக மறந்து விட்டேன்” என்று கூறுகிறாள்.

அதுமட்டுமின்றி, “இப்போது நான் சுமாரான எந்த ஆணுடனும் சுகமாக வாழ்க்கை நடத்த முடியும். ஆனால் எங்களவர்கள் கொண்டுவரும்  பிருகஸ்பதிகள் அனைவரும் செல்லாக்காசு போன்றவர்கள். என் அண்ணன்மார்கள் தம் எண்ணம் போல் தேடினால் அப்படிப்பட்டவர்களே கிடைப்பார்கள். அதுதான் என் கவலை” என்று கூறும் கருத்து கவனிக்கத்தக்கது.

அவளுடைய அண்ணன்மார்களின் மனநிலை என்ன? பெண்ணை எப்போதும்   அதிக பாதுகாப்போடு காப்பாற்ற வேண்டும் என்ற மனநிலை, குடும்ப கௌரவம் என்றால் மதிக்கும் இயல்பு. அப்படிப்பட்ட மனநிலையும் குணமும் உள்ள   மணமகனையே அவர்கள் அழைத்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களோடு வாழ்வது சாத்தியம் இல்லை என்று வைதேகி அவற்றை ஒதுக்குகிறாள்.

நவீன யுவதி தனக்கான ஒரு ஆளுமைத் தன்மையை வளர்த்துக் கொண்டு அந்த ஆளுமையை நிலைநிறுத்திக் கொள்வதற்கு வாய்ப்பு இருந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வதில் நாட்டம் செலுத்துகிறாள் என்பதை வைதேகியின் நடத்தை தெளிவாகக் காட்டுகிறது.

வசுந்தரா கிருஷ்ணமூர்த்தியோடு நடந்து கொள்ளும் முறை பற்றி சித்தி எழுதிய கடிதத்திற்கு பதில் எழுதாமல் நேரில் வந்த வசுந்தராவின் அண்ணன், ஒரு கௌரவமான வம்சத்தைச் சேர்ந்த கல்வி கற்ற பெண் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், தங்கள் அந்தஸ்துக்கு ஏற்ற வரன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும் என்றெல்லாம் விவரித்து விட்டுச் சென்றான்.

கிருஷ்ணமூர்த்தியோடு தான் நடந்து கொள்ளும் முறையில் ஏதாவது தனித்தன்மை உள்ளதா என்று வசுந்தரா அடிக்கடி நினைத்துப் பார்க்கிறாள். 

ஒருவேளை அவ்வாறு இருந்தாலும் அதனைத் தவறாகப் பார்த்து எச்சரிக்கை செய்ய வேண்டிய தேவை என்ன உள்ளது என்று எண்ணுகிறாள்.

“என்னிடம் உள்ள பெண்மை விழித்துக் கொண்டால் அதன் பொறுப்பும் அதிலுள்ள  நல்லது கெட்டதும் என்னுடையதல்லவா? ஆனால் எனக்கு அத்தனை தனித்துவம் என்பது எங்கேயிருக்கிறது?” என்று வசுந்தரா சிந்திப்பதை கவனிக்க வேண்டும்.

பெரியவர்கள் நிச்சயிக்கும் திருமணத்தில் பெண், மாப்பிள்ளை இருவருக்கும் எந்த பொறுப்பும் இல்லை. தம் வாழ்க்கைக்குத் தாமே பொறுப்பு வகிக்க வேண்டும் என்று நினைப்பது நவீன யுவதி, இளைஞர்களின் இயல்பு. வசுந்தரா அந்த இனத்தைச் சேர்ந்தவள். ஆணோடு தொடர்பும் உறவும் ஏற்படுத்திக் கொண்டாலும் அதனைத் தன் சுய பொறுப்பில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற பார்வை அவளிடம் இருந்தது. தன் வாழ்க்கைக்குத் தான் பொறுப்பு வகிக்க இயலாமல் போவதென்பது தன் தனித்துவத்தை விட்டுவிடுவதாகி விடும் என்பது அவளுடைய கருத்து.

இந்தக் கருத்தை வாழ்நாள் முழுவதும் நடத்திக் காட்டியவர்கள் கல்யாணியும் இந்திராவும்.

பிரகாசத்தைத் தன் துணையாக தேர்ந்தெடுத்ததில் கல்யாணியின் சுய தனித்தன்மை வெளிப்படுகிறது. யாருடைய தூண்டுதலும் இல்லை. யாருடைய அழுத்தமும் இல்லை. தன் உடல் வேதனைகளுக்கும் மன உளைச்சல்களுக்கும்    நிவாரணம் அளிக்கும் இரக்கமும் சினேகமும் அவனிடமிருந்து கிடைத்தன என்பதால் ஒருவருக்கொருவர் துணையாக இருப்போம் என்ற அவனுடைய அழைப்பினை ஏற்கிறாள். அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பொறுப்பு வகிக்கிறாள். ஊருக்கு சென்று வருவதற்குள் பிரகாசம் மாறிப்போகிறான். ஆனால் அந்த விஷயம் குறித்து அவனை எதுவும் கேள்வி கேட்காமல் விலகிக் செல்கிறாள். 

சக்கரவர்த்தி தன்னிடம் காட்டும் ஆர்வத்தையும் சிரத்தையையும் கண்டுகொள்ளாதது போல் நடந்து கொண்டாலும் தனது தனிமைக்கு ஆறுதலளிக்கும் பற்றுக்கோடாக அவனை மாற்றிக் கொள்கிறாள். அவன் தன்னை மணம் செய்து கொள்வானா மாட்டானா என்ற கேள்வியே இல்லாமல் அவனுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறாள். அவ்விதமாக தன் வாழ்க்கைக்கு முழு  பொறுப்பையும் அவளே ஏற்கிறாள்.

“எனக்கு வேண்டியது பொருளாதாரப் பாதுகாப்பு அல்ல. இன்னும் கூறவேண்டுமென்றால், கணவன் என்ற சொல்லுக்கு சமுதாயம் அளிக்கும் பொருளை நடைமுறைப்படுத்தும் மனிதன் கூட அல்ல” என்று கல்யாணி நினைக்கும் கருத்து கவனிக்கத்தக்கது. கணவன் என்றால் தாங்குபவன் என்பது பழங்காலக் கருத்து. நவீன காலத்துப் பெண் பொருளாதார சுதந்திரத்தை விரும்புகிறாள். அதனால் அவளுக்குப் பொருள் கொடுக்கும் கணவன் தேவையில்லை.

அதேபோல் திருமணம் என்பது பெண்ணுக்கு ஒரு சமுதாய கௌரவத்தை அளிக்கும் அமைப்பு என்பார்கள். ஆண் என்பவன் ஒரு பெண்ணின் துணைக்காக  திருமணத்தை ஏற்கிறான். பெண் சமுதாயத்திற்காக திருமணத்திற்குள் நுழைகிறாள்.

ஆனால் நவீனப் பெண் தனக்குத்தானே ஒரு சமுதாய களத்தைத் தேர்ந்தெடுத்து ஒரு பிரத்தியேக மனுஷியாக வளர்வதற்கும் அடையாளம் பெறுவதற்கும் விரும்புகிறாள் அப்படி இருக்கையில் அவள் சமுதாய அந்தஸ்துக்காக திருமணம் செய்து கொள்ள வேண்டிய தேவை இல்லை.

இவ்விதமான நவீன இளம்பெண்களின் உலகத்திற்குப் பிரதிநிதியாகவே கல்யாணி விளங்குகிறாள். அதானால்தான் அவளால், பொருளாதார தேவைகளுக்காகவோ சமுதாய கௌரவத்துக்காகவோ என்றால் தனக்குத் திருமணமோ, திருமணத்தால் கிடைக்கும் கணவனுடைய தேவையோ இல்லை என்று திட்டவட்டமாகக் கூற முடிகிறது.

கிருஷ்ணமூர்த்தியின் நண்பனான முனுசீப் ராவிநாயுடுவுக்கு மருத்துவம் செய்ய வந்து, பொறுப்பு எடுத்துக் கொண்டு அவனோடு கூட மருத்துவமனையில் தங்கி, அவனுக்கு உற்ற நண்பானாகிறான் டாக்டர் சக்ரவர்த்தி. தான் தனிமை வேதனையில் தவித்தபோது துணை நின்று தைரியம் கூறிய டாக்டர் சக்கரவர்த்தியை மணம் செய்து கொள்ள விரும்புகிறாள் கல்யாணி. கணவன் என்ற உறவோடு அவன் தன்னை அவ்வாறு ஏற்றுக் கொள்வானா என்ற சந்தேகத்தோடும் கற்பனையோடும் அவள் அதற்குத் தயாராகிறாள்.

பெரியவர்கள் நிச்சயித்த திருமணத்தில் தன் தாயின் கோணத்திலிருந்து தன்னைக் கணக்கீடும் மனைவியோடு சுகத்தை அறியாத சக்ரவர்த்தி, கல்யாணியை   தானாகவே தேர்ந்தெடுத்து மணம் செய்து கொள்வதற்குத் தயாராகிறான். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்ந்த ராமிநாயுடுவுக்கு சேவை செய்யும் கல்யாணியை உதவியற்ற நிலையில் பார்த்து இரக்கப்படுகிறான்.  இரக்கப்படுவது அவளுக்குப் பிடிக்காது என்று தெரிந்தபின் அவள் மேல் கௌரவத்தை வளர்த்துக் கொள்கிறான். அவள் இல்லாவிட்டால் தனக்கு வாழ்க்கையே இல்லை என்று எண்ணுகிறான். கணவனாக தனக்கு புதிய மதிப்பு அளிப்பதற்கு பயப்படுகின்ற கல்யாணியைப் புரிந்து கொள்கிறான். கணவன் என்றால் அதிகாரம் செய்பவன். உற்ற நண்பனாக விளங்கும் சக்கரவர்த்தி இதுவரை காட்டும் அன்பையும் கௌரவத்தையும் கணவன் என்ற உறவுமுறையில் கூட காட்டுவானா என்பது அவளுடைய சந்தேகம். தன் மீது தன்னைத் தவிர யாருக்குமே, சக்கரவர்த்திக்குக் கூட உரிமை இல்லை என்று நினைக்கும் தன்மானம் கொண்டவள் கல்யாணி. அது தெரிந்தே திருமணத்திற்குத் முன்வருகிறான் சக்கரவர்த்தி.

அவளுடைய பயம் உண்மையானதே என்று புரிந்து கொண்டு, அந்த பயம் வெறும் வாக்கு கொடுப்பதால் விலகாது என்ற அறிவும், சேர்ந்து வாழ்ந்தால் சில நாட்களில் போய்விடும் என்ற நம்பிக்கையும் சக்கரவர்த்திக்கு இருந்தன. நவீன யுவதிக்குக் கணவனாக இருப்பதற்கு தன் அதிகார சுபாவத்தை விட்டு விட வேண்டிய தேவையை அடையாளம் கண்டு, அதற்குத் தகுந்த நடத்தையை வாழ்க்கையின் இயல்பாகச் செய்து கொள்வதில் சக்கரவர்த்தியின் பண்பாடு வெளிப்படுகிறது.

இப்படிப்பட்ட பண்பாடு கொண்ட சக்கரவர்த்தி போன்ற ஆண்களும் அப்படிப்பட்ட தன்மானம், உரிமைகள் பற்றிய அறிவு கொண்ட கல்யாணி போன்ற பெண்களும் தாமாகவே முடிவெடுத்து செய்து கொள்ளும் திருமணங்கள் நல்ல குடும்பத்திற்கு அடித்தளம் ஆகும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்திராவுக்கு வேண்டிய கணவன் அனைத்து விதத்திலும் பலமான ஒரு ஆண்மகன். “நான் இருக்கிறேன். உனக்கு பயம் இல்லை. உன் பிரச்சனைகளின் பாரத்தை எல்லாம் என்மீது போடு” என்று கூறக்கூடிய பெரிய இதயம் உள்ள ஆண். தேவையானால் அவளுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு வரக்கூடிய ஆணாக இருக்க வேண்டும். ஆண்களின் குணம் இந்திராவுக்குத் தெரியும். ஆண்கள் என்றால் பெண்களின் ஒய்யாரத்தில் மயங்கி போவார்கள். கொஞ்சிப் பேசி தன் பிரச்சினைகளைக் கூறினால் தீர்ப்பதற்கு தயாராக இருப்பவர்கள். பணம் செலவு செய்பவர்கள். பின்னாலே அலைபவர்கள் என்பது அவளுக்கு அனுபவத்தில் தெரிந்திருந்தது.

இப்படிப்பட்ட குணங்களுக்கு அப்பாற்பட்ட மனிதனாக, சக மனுஷியாக மனைவியை மதித்து, ஆதரவோடு நடந்து கொள்பவனாக இருக்க வேண்டும். அனைத்து விதத்திலும் பலம் கொண்டவனாக இருக்கு வேண்டும். பலமான ஆண் என்றால் உடலளவில் மட்டுமல்லாமல் புத்தி பலமும் கூடியவனாக இருக்க  வேண்டும் என்பது இந்திராவின் எண்ணம். “காதலே திருமணத்திற்கு அடித்தளம்” என்ற கருத்தை வெளிப்படுத்திய பெண்ணும் இந்திராதான். பிரகாசத்தின் கோழைத்தனத்தை வெறுத்து ஒதுக்கும் சந்தர்ப்பத்தில் அவள், “காதல் எதிர்பார்க்கும் தியாகத்தைச் செய்ய முடியாதவர்கள் காதலுக்கு அருகதையற்றவர்கள்” என்று முன்பு யாரோ சொன்ன வார்த்தைகளைக்  கூறுகிறாள். பிரகாசம் காதலிப்பதற்கு அருகதையற்றவன் என்று அறிவிக்கிறாள். இந்த நாவல் முழுவதிலும் இங்கு தவிர காதல் என்பது பற்றி வேறு எங்குமே குறிப்பிடப்படவில்லை.

இந்திரா காதலை விரும்புகிறாள். தன்னைக் காதலிப்பவன் எதை வேண்டுமானாலும் விட்டு விட்டு வருவதற்கு தயாராகி இருக்க வேண்டும் என்று கருதுகிறாள்.

சக்கரவர்த்தி தாய்மாமனையும், அவனுடைய அதிகாரத்தையும், அவனுடைய அதிகாரத்தில் உள்ள சொத்துக்களையும் எதையுமே விட்டுவரும் தைரியம் இல்லாதவனாக இருக்கிறான். அதனால் அவனை மறுத்து விடுகிறாள்.

கிருஷ்ணமூர்த்தி அவளுக்காக குடும்பத்தையும் உறவினர்களையும் சமுதாயத்தையும் விட்டுவிட்டு வருவதற்குத் தயாராகி அவளை திருமணத்திற்கு சம்மாதிக்கச் செய்கிறான். இந்திரா அவனுடைய காதலை அந்த காரணத்தாலேயே நம்புகிறாள். அவனுடைய அந்தத் தியாகமே அவன் மேல் அவளுக்கு காதலை ஏற்படுத்தியது. இந்த திருமணத்தால் கிருஷ்ணமூர்த்திக்கு மேலும் ஏதாவது நஷ்டம் ஏற்பட்டால் அது தன்னால் நிகழக் கூடாது என்று எண்ணுகிறாள். அவனுடைய சந்தோஷத்திற்காக எதை செய்வதற்கும் தயாராகிறாள். ஆனால் தன் தனித்துவத்தை மட்டும் விட்டுக் கொடுப்பதற்கு சம்மதிக்க மாட்டேன் என்று அறிவிக்கிறாள்.

“என்னுடைய தேவைகளை கௌரவிப்பதற்கு கற்றுக் கொள்ளுங்கள்” என்று கிருஷ்ணமூர்த்தியிடம் அறிவுறுத்துகிறாள். “என் விருப்பத்திற்கு என்னை விட்டால்தான் இருவருக்கும் சுகம் கிடைக்கும். இல்லாவிட்டால் இருவருக்கும் நரகமே” என்று எச்சரிக்கிறாள்.

கிருஷ்ணமூர்த்திக்கு பெண்களின் மீது மோகம் அதிகம். இந்திராவை பார்த்தது முதல், “யாரடா இந்த மின்னல் கொடி?” என்று அவளைப் பற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இந்திராவோடு பேச வேண்டும் என்று உற்சாகம் காட்டியதும், இந்திராவோடு முடிந்த போதெல்லாம் பொழுது போக்கியதும், ஊர் சுற்றியதும்,   இந்திராவின் தந்தையிடம் மாமா என்று உறவோடு பேசியதும், ஆனந்தராவின்  தேவைகளைத் தீர்ப்பதற்கு தாராளமாக பணம் செலவு செய்ததும் – எதைத் காட்டுகிறது என்றால், அழகாக, உள்ளத்தைக் கவரும் விதத்தில் சிரித்து, சிரிக்க வைக்கும் இந்திரா அவனுக்கு ஒரு விளையாட்டு பொம்மையாகத் தென்படுகிறாள் என்பதை காட்டுகிறது. அந்த பொம்மையோடு நன்றாக விளையாடினான்.

ஆனால் கல்யாணி தந்தையை இழந்து திரும்பி வந்தபின் இந்திராவின் வீட்டில இருக்க முடியாது என்று கூறிச் சென்றுவிட்ட சந்தர்ப்பத்தில், அந்தச் செய்தி அறிந்து, எங்கு சென்றாள்? எதற்குச் சென்றாள்? என்ற கேள்விகள் அவனைத் துளைத்த போது, கிருஷ்ணமூர்த்தியிடம் முதன்முறையாக பெண்களின் மனதை அடையாளம் காணும் அறிவு விழித்தது.

கல்யாணி மென்மையான மனம் கொண்டவள் என்று அறிந்து அவளுக்கு உதவ வேண்டும் என்று முயற்சி செய்கிறான். தன்னைப் போலவே கல்யாணியிடம் நட்பு கொண்டு உதவியாக நின்ற வசுந்தராவைப் பாராட்டுகிறான்.

இந்திராவை அழகான உடலாக, மின்னல் கொடியாக, விளையாட்டு பொம்மையாக மட்டுமே பார்த்த கிருஷ்ணமூர்த்தியின் பார்வை கல்யாணியிடமும் வசுந்தராவிடவும் அதற்கு அப்பாற்பட்டு மனம் குறித்தும் மனிதர்கள் குறித்தும்  சிந்திக்கும்விதமாக மாற்றம் பெற்றது.

இந்திரா மற்றும் அவள் தந்தையின் தேவைகளுக்காக கிருஷ்ணமூர்த்தி பணம் தாராளமாக செலவு செய்தது அவனுடைய ஆடம்பரத்துக்காகவே. ஆனால் கல்யாணிக்காக அவன் பணம் செலவு செய்வதற்கு முன்வருவது மட்டும் அவளுக்காகவே. அவருடைய படிப்பு தொடர வேண்டும். அவள் தன் வாழ்க்கையை விரும்பியபடி வாழ்வதற்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே.

வசுந்தராவோடு பேசிய சந்தர்ப்பத்தில், “கொடுப்பதற்கு கையில் சல்லிக் காசு கூட   இல்லாமல் போகலாம். ஆனால் உள்ளத்தைக் கொடுப்பதற்கு செலவு என்ன?” என்கிறான் கிருஷ்ணமூர்த்தி.

உள்ளம் குறித்து சிந்திக்கும் நிலையை அடைந்த பின்னர், இந்திரா அவனுக்கு புதிதாகப் புரிகிறாள். வாழ்க்கையில் நிலைபெறுவதற்கும் வாழ்க்கையில் எழுந்து நிற்பதற்கும் நித்திய போராட்டம் செய்கின்ற இந்திராவுக்குத் துணையாக நிற்பது தன்னுடைய கடமையாக எண்ணி அவளைத் திருமணத்திற்கு சம்மதிக்கச் செய்கிறான். அதில்தான் தனக்கு மன நிம்மதி இருக்கிறது என்று நம்பி நடந்து கொள்கிறான்.

நம் நன்மையை விரும்புபவர்களையும், கஷ்ட சுகங்களில் நம்மை ஆதரவளிப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது தன் வழக்கம் என்பதாக அறிவித்த கிருஷ்ணமூர்த்தி, இந்திராவை சந்தோஷப்படுத்தி தானும் சந்தோஷப்படும் பண்பாட்டை வளர்த்துக் கொள்வான் என்று எதிர்பார்க்கலாம்.

காதல் என்ற சொல்லைப் பயன்படுத்தாமலே திருமணத்திற்கு ஆண், பெண் இருவருக்கும் இடையில் இருக்க வேண்டியது சமமான மனம், சமமான அறிவு நிலை என்று உரத்து அறிவிக்கிறது இந்த நாவல்.

ஒருவரிடம் ஒருவருக்கு நட்பும் தன்னார்வத்தோடு சுயமாகவே ஏற்கும் பொறுப்பும்  தவிர ஒருவர் மீது ஒருவருக்கு அதிகாரத்தை அளிக்கும் அமைப்பு அல்ல திருமணம் என்ற புதிய விளக்கத்தை அளிக்கிறது இந்த நாவல்.

கணவனுக்கு, கணவன் ஆவதால் மனைவியின் மீது ஏற்படும் சம்பிரதாய உரிமைகளையும் அதிகாரங்களையும் ரத்து செய்வதற்கு பெண்ணுக்கு பொருளாதார சுதந்திரம் கட்டாயம் தேவை என்று அடித்துக் கூறுகிறது காலாதீத வ்யக்துலு நாவல்.

Series Navigation<< வட்டிகொண்ட விசாலாக்ஷி-2காலாதீத வ்யக்துலு என்ற நாவல் – டாக்டர். பி. ஸ்ரீதேவி >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.