
தரவை வெளியில் பறக்கிறது
உந்துருளி
காததூரத்தைக் கடக்கும் ராஜாளியென
வேகத்தைக் கூட்டி
ஓட்டுகின்ற
தந்தையை இறுகப் பிடித்தபடி
அவன் முதுகில் முகத்தையும், உடலையும்
ஒட்ட வைத்திருக்கிறாள் அச் சிறுமி
காற்று அவள் சிறுமுடியைக் கலைக்கிறது
குட்டை முடியில் சிறகடிக்கும் மயிர்ப்பிசிறுகள்
மென்சாமரமாய் அவன் முதுகை வருடுகிறது
வீதிக்கு அருகில் நீர்நிலையில்
மீனுக்குத் தவமிருக்கும் கொக்கு
ஒரு கணம் திரும்புகிறது
தந்தையின் முதுகோடு சாய்ந்து
பறந்தபடியிருக்கும் சிறகற்ற மகளைப் பார்த்தபடி
காலத்துள் உறைகிறது வெண்கொக்கு
மென்சிவப்பு உலகம்
குதிகாலை ஊன்றி
மென்சிவப்பு முழுநீளச் சுருக்குப் பாவாடை
சுழலச்
சுழன்றுகொண்டேயிருக்கிறாள் சிறுமி
பாவாடை ஒரு வட்டக் கூம்பாகச் சுழல்கிறது
அவள் கண்களின் முன்
வீடு சுழல்கிறது
மரங்கள் சுழல்கிறது
வானம் சுழல்கிறது
மென்சிவப்பு நிறத்தில்
அவள் உலகம் சுற்றிக் கொண்டிருப்பதை
அணுவணுவாய் ரசித்துக் கண்மூடி
விகசித்துச் சிரிக்கிறாள்
ஒரு கணம் நின்று
அவள் கண் மூடிக் குனியும் அத்தருணம்
அவளுள்
அவள் வீடும், மரங்களும்
நீலவானமும்
இன்னமும் மென்சிவப்பில்
சுழன்று கொண்டேயிருக்கின்றன
சுழற்சி
விர்ரென்ற சக்கரத்தின் சுழற்சி
இன்னும் நிற்கவில்லை
கம்பிகளில் குருதித் திவலைகள்
தெறிக்கின்றன
சற்று நேரத்திற்கு முன்
சக்கரத்தின் வேகத்தை
ஒரு நண்பன் போல
அணைக்க வந்த நாய்க்குட்டி
தூக்கி எறியப்பட்டு
வேலியோரம் கிடக்கிறது
சக்கரம் இன்னும் துடிதுடிக்கிறது
ஒரு மலரினை
அதன் அருகில் எடுத்து வைக்கும்
அருகதையற்ற
ஒரு கொலைகாரன் ஆகினேன்
என்ற புலம்பல்
அதன் கம்பிகளில் கிறுகிறுத்துக் கொண்டிருப்பதை
நீங்கள் கேட்டிருக்க முடியாது