ஒரு தபலா, சாரங்கி, கே.கே மற்றும் நான்

வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சப்தம் கேட்டது.

பாகேஸ்ரீ திரும்பி பார்த்தாள்.

மணி.

“வாங்க மாமா”

வெற்றிலைச்சாறைத் துப்பி விட்டு நுழைந்தார்.

அம்மா எட்டி பார்த்தார்.

“வா..மணி”.

“அண்ணா எப்டி இருக்கார்?”

“ஏண்டாப்பா வந்த உடனே உங்க அண்ணா தானா?”

மணி மாமா சிரித்துக் கொண்டார்.

“உள்ற போய் பாரு உங்க அண்ணாவை.”

போன வேகத்தில் வந்தார்.

“என்ன பிரச்னை அண்ணி?”

“ஏன்?”

“அழறார்.”

“ம்ஹூம்.. அவர் பண்ணினக் காரியத்துக்கு நாங்கள்ல அழணும்.”

“என்னாச்சு?”

“வீட்ட விட்டு ஓடிப் போய்ட்டார்.”

மணி அதிர்ந்தார்.

“அவரால எங்களுக்கு ரொம்ப சிரமமாம்….அதான்..”

சொல்லும்போதே அம்மாவிற்கு அழுகை பீறிட்டது.

“சரி.. சரி..”

“நம்ப நல்ல நேரம்.. இவரு கூட்டு ரோட்ல நிக்கிறதை நமச்சிவாயம் பாத்திருக்கார்.. கேட்டா பதில் சொல்லாம முழிச்சிருக்கிறார். அவர் பாக்கலைன்னா எதாவது பஸ்ல ஏறி போயிருப்பார். ஆட்டோ பிடிச்சி கையோட அழச்சிட்டு வந்துருக்கார். உங்க அண்ணாவை நானோ இல்ல இவளோ அப்டி நினைப்போமா மணி?”

“ச்சே..அண்ணா ஏதோ வருத்தத்துல செஞ்சிட்டார்.”

அம்மா முகம் பொத்தி அழுதார்.

‘போதும் மா… மாமாவுக்கு காஃபி கொண்டு வா.”

அம்மா முகம் துடைத்து உள்ளே போனார்.

“சொல்லுங்க மாமா.”

“ரஞ்சன் கிட்ட இப்பதான் பேசினேன். நாளைக்கு ஊட்டி போறனாம்.. இப்ப போனா உடனே பாக்கலாம்.”

“இப்பவேவா?” தலையசைத்தார்.

“கிளம்பு..  என்னோட ஆட்டோல போய்டலாம்.”

“நீங்க?”

“நா வரலை..நான் அவசர காரியமா மதுரை போறேன்..உன்ன இறக்கி விட்டுட்டு போறேன்.”

அம்மா காஃபி கொண்டு வந்தார்.

பாகேஸ்ரீ.

வெளிச்சுவரில் வெண் சலவைக் கல்லில் பொன் எழுத்துக்கள் மின்னின.

கதவைத் தட்டினாள்.

கதவு இலேசாகத் திறக்கப்பட்டு ஒரு குட்டித்தலை எட்டிப் பார்த்தது.

“ரஞ்சன் மாமாவைப் பாக்கணும்.”

கதவை விரியத் திறந்தான்.

“தாத்தா”

சிறுவன் கூவிக் கொண்டே உள்ளே ஓடினான்.

வராண்டா நாற்காலியில் அமர்ந்தாள்.

“வாம்மா ஸ்ரீ.”

மாமா மிகவும் மெலிந்திருந்தார்.

“என்ன மாமா இப்டி ஆய்ட்டிங்க?”

“உள்ற வா.”

உள்ளே நுழையும் இடத்தில் அந்த படம்.

அப்பாவும், மாமாவும் தழுவிக் கொண்டிருந்தார்கள்.

“கேகே எப்டி இருக்கார்.. பாத்து ரொம்ப நாளாச்சு..”

உட்கார்ந்தார்கள்.

“அப்பாவுக்கு முடியலை.. ஆமாம்.. அத்தை எங்கே?”

“நந்தாவும், மருமகளும் போன பின் உங்க அத்தை தூங்கறதேயில்ல.. காலையில ஸ்லீப்பிங் டோஸ் போட்டுருக்கா.. சரி.. அப்பாக்கு என்ன?.. மணி கூட சொன்னான்.”

“கல்லீரல் சுத்தமாக் கெட்டுப் போய்டுச்சு.”

மாமா தலை குனிந்திருந்தார்.

“கேகேகிட்ட எவ்ளோ சொன்னேன். கேட்கலை… குடிச்சே உடம்பக் கெடுத்துக்கிட்டார்.”

இவள் கண்கள் இளகின.

“பாவம்.. அவரும் என்ன பண்ணுவார்.. இசை மேதைல்ல உன் அப்பா.”

மெலிதாகத் தலையசைத்தாள்.

“எந்தக் காலத்துல இந்த உலகம் மேதைகளை மதிச்சுது.. ஒண்ணும் இல்லாத பசங்களைத் தானே தலையிலத் தூக்கிட்டு ஆடறாங்க.”

“அதுக்காக…உலகத்து மேல காறித்துப்பறதா நினைச்சுக்கிட்டு தன் மேலேயே துப்பிக்கிறாரே.”

“அப்படிச் சொல்லாதே ஸ்ரீ. புறக்கணிக்கப்பட்ட எல்லா ஜீனியஸ்களும் போய்ச் சேர்ற இடம் அதானே!”

“சினிமாவுக்கு ஜீனியஸ்லாம் இப்ப ரொம்ப லக்ஸரி மாமா.. கட்டுப்படியாகாதுல்ல..”

“நீ சொல்றது சரிதான் ஸ்ரீ. அப்பல்லாம் உன் அப்பா இசையமைச்ச ஒரு படத்தில் வர்ற்ற எல்லாப் பாட்டுக்களையும் என்னையேப் பாடச் சொன்னார். இப்ப பாரு ஒரு பாட்டுக் கேட்டேன். நாலு பேர் பாடறங்க.என்ன பண்றது. உங்கத் தலைமுறைக்கு நெறைய வேணும். வேகமா வேணும். சீக்கிரம் முடியணும். அதனால இன்றைய சினிமா உன் அப்பாக்கு வராதுன்னு நானும் சொன்னேன்.. கேகே எம்மேலயும் கோபமாய்ட்டார்.”

“அதெல்லாம் மறந்துடுங்க மாமா.”

“எனக்கு நினைவில இருக்கறதெல்லாம நான் பாடிய அந்த முதல் பாட்டும், அந்த டியூனும் தான். அற்றைத் திங்கள் நிலவொளியில்..

பாகேஸ்ரீ  ராகத்தில் போட்ட  டியூன் எவருக்கும் மறக்க முடியாது.”

சிறிது இடைவெளி விட்டுச் சொன்னார்.  ”

”பாகேஸ்ரீ ஒரு மெலிதான சோகத்திற்கான இரவின் ராகம். சுகராகம் சோகம் தானேன்னு கேகே அடிக்கடி சொல்லுவார். அதனாலேயே அது கேகேவின் அபிமான ராகம். எல்லாப் படத்திலேயும் ஒரு பாட்டு வச்சிடுவார். உஸ்தாத் அடிக்கடி சொல்வார் கேகே, பாகேஸ்ரீ தாசன் என்று. ”

தலையசைத்தாள்.

”நல்லா ஞாபகம் இருக்கு. என்னோட முதல் பாடல் அது. ஒற்றைத் தம்பூரா, துணைக்கு ஒரு சாரங்கி, பக்கத்தில் கேகே. கண்ணாடி அறைக்குள்ளிருந்து நான் பாடிய போது கடவுளுக்கு மிக அருகே இருந்தது போல உணர்ந்தேன்.” 

பேசும் போது அவரது உதடுகள் துடித்தன.

“கேகே தேசிய விருது வாங்கிய போது ஜக்திஷ்சிங் உன் அப்பா விரல்களைப் பற்றிக் கொண்டு சொன்னது இன்னமும் என் காதில் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. “உங்கள் விரல்களின் வழி கஸல் தேவதை திரண்டெழுந்து பின் உருகி அமிழ்தம் போல் எல்லோர் இதயத்திலும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறாள்” என்று சொன்னார்.”

சிறிது நேரம் மெளனமாயிருந்தார்.

“இரு ஸ்ரீ . வந்துர்றேன்.”

உள்ளே போனார்.

வரும்போது அவர் கையில் வெண்தேக்கிலான ஓர் அழகிய நகைப் பெட்டி.

“இந்தா”

நீட்டினார்.

“என்ன?”

“பிரித்துப்பார்.”

பிரித்தாள்.

ஒளிவீசும் கற்கள் பதித்த மிக நீளமான தங்கச் சங்கிலி .

“என்ன?”

“அற்றைத் திங்கள் நூறாவது நாள் விழாவில் ரெட்டியார் உன் அப்பாக்குப் போட்ட சங்கிலி இது. ஒரு நிமிஷம் கூட அவர் கழுத்தில் இல்லை. அவருக்கு நேராகவே என் கழுத்தில் போட்டு விட்டார். அதுல ரெட்டியாருக்குக் கூட கொஞ்சம் மனத்தாங்கல் தான்.”

மேலே பேச முடியாமல் தவித்தார்.

தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.

“வைத்துக் கொள். மணிகிட்ட கொடுத்தால் நல்ல விலைக்கு விற்றுத் தருவான். மருத்துவச் செலவுக்கு வைத்துக் கொள். என்னிடம் இந்த வீட்டைத் தவிர வேறு ஒன்றும் இல்லே குழந்தே. என் செல்வம் எல்லாத்தையும் அழித்து விட்டு என் மகனும் போய்ச்  சேர்ந்திட்டான். அவன் புள்ளையைக் கரையேத்த வேண்டிய வேலை என்னை அழுத்திக் கொண்டிருக்கிறது ஸ்ரீ.”

அவர் கண்களில் கண்ணீர்.

“வேண்டாம் மாமா.” 

கை நீட்டித் தடுத்தார்.

“இதுவரைக்கும் கேகேக்குப் பிரதி உபகாரம் எது செய்யலை. மலையை தூக்கிக் கொடுத்தவருக்கு என்னால் கொடுக்க முடிந்த கூழாங்கல் இது மட்டும்தான்.”

“மாமா.. வேண்டாமே…”

மறுத்துத் தலையாட்டினார்.

“சரி. கிளம்பறேன் மாமா.”

“ஒரு நிமிஷம் இரு.” எழுந்து உள்ளேப் போனார்.

அந்தச் சிறுவனை அழைத்து வந்தார். எதிரில் அமரச் சொன்னார்.

“பாடு தம்பி.”

சிறுவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பாட ஆரம்பித்தான்.

”அற்றைத் திங்கள் நிலவொளியில்

சுற்றம் துறந்து தனித்திருந்தோம்

அந்த நதிக்கரையிலே நாம்.

இற்றைத் திங்கள் இவ்வெளியில்

குற்றம் சுமந்து தவித்திருந்தேன்

இந்த விதிச்சிறையிலே நான்….. 

பாடல் அப்பாவின் குரலில் மனசுக்குள் ஒடிக் கொண்டிருந்தது.

கண்கள் மூடி லயித்து இருந்தாள்.

பாட்டு முடிந்தும் கண்கள் திறக்க மனமில்லை.

“ஸ்ரீ .”

கண் திறந்தாள். 

கை நீட்டி சிறுவனை அழைத்தாள்.

வெட்கப் புன்னகையுடன் வந்தான்.

“உன் பேர் என்ன தம்பி?”

“கருணாகரன்… நானும் இன்னோரு கேகேதான்.”

சிலிர்த்தாள்.

மாமா சொன்னார்.

“உன் அப்பா பேருதான். இவனுக்கு அவர் பெயரைத் தவிர வேறு எந்தப் பெயரையும் யோசிக்கத் தோணலை. அவர் அளவு இல்லேன்னாலும் ஏதோ பாடறான்.”

அந்த யோசனை மின்னல் போல் அவளைத் தாக்கியது.

நகைப் பெட்டியைத் திறந்தாள்.

சங்லிலியை எடுத்து சிறுவனின் கழுத்தில் அணி்வித்தாள்.

“ஸ்ரீ .”

மாமா எதிர்ப்புக் குரலெழுப்பினார்.

“என் அப்பா என்ன செய்வாரோ அதைத்தான் நான் செய்தேன் மாமா. அப்பாக்குத் தெரிந்தால் ரொம்ப சந்தோஷப்படுவார்.”

புன்னகையுடன் சொன்னாள்.

எழுந்தாள்.

“வர்றேன் மாமா.”

மெளனமாய்த் தலையசைத்தார்.

வெளியே வந்தாள்.

பாகேஸ்ரீ.

வெண் சலவைக் கல்லில் பொன்னிறத்தில்  மின்னிய எழுத்துக்களை விரல்களால் தடவிப் பார்த்து விட்டு வேகமாய் நடக்க ஆரம்பித்தாள்.

4 Replies to “ஒரு தபலா, சாரங்கி, கே.கே மற்றும் நான்”

  1. ஒரே நேர்கோட்டில் ஒரு எழுத்து கூட அதிகம் செலவழிக்காமல் சுவாரசியமாய் எழுதப்பட்ட கதை.. நன்றாக எழுதுகிறீர்கள்.. உங்களின் மற்ற கதைகளையும் படிக்க ஆசை.. நிறைய எழுதுங்கள்.. வாசகனை புத்திசாலியாக மதித்து எழுதும் எழுத்துகள் குறைவு.. அந்த வரிசையில் இது ஒரு நல்ல கதை..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.