ஒரு குழந்தையும் இரு உலகங்களும்

கைப்பேசியில் பேசி முடித்தபின் “ஆனந்தி” என்று அழைத்துக்கொண்டே பிரசாத் ஹாலில் இருந்து படுக்கையறைக்குச் சென்றான். மெத்தையிலமர்ந்து பொம்மைகளுடன் பேசிக்கொண்டிருந்த ஆனந்தி பிரசாத்தின் அழைப்புக்குப் பதில் சொல்லவில்லை. சுற்றிலும் பரத்தி வைக்கப்பட்டிருந்த பொம்மைகளில் எதனுடன் அவள் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதை பிரசாத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. மெத்தையில் ஆனந்தியின் அருகே அமர்ந்த பிரசாத் ஒரு பொம்மையைக் கையில் எடுத்தான். 

வாலாட்டும் நாய்க்குட்டி ஒன்றை நகர்த்திக் கொண்டே, “அதைக் கீழே வை,” என்றாள் ஆனந்தி. 

“ஏன்,” என்று கையில் இருந்த பொம்மையைக் காற்றில் வீசிப் பிடித்தான் பிரசாத்.   

“ஐயோ, அதைக் கீழே வைய்யுப்பா. பாண்டா இப்போதான் ரெக்ஸ்கூட சண்டை போட்டுட்டு ரெஸ்ட் எடுக்குது.”

“எது, இந்தக் கரடியும் இந்த டைனோஸரும் சண்டை போட்டாங்களா?”

“ஆமாம்.“

“இந்தக் கரடி பொம்மை…” 

“ஆமா….“

“இந்தக் கரடி..” 

மெத்தையில் எழுந்து நின்ற ஆனந்தி பிரசாத்தின் மேல் பாய்ந்து குதித்தாள். “பாத்து, பாத்து,” என்று பிரசாத் ஆனந்தியின் இடுப்பைப் பிடித்துக் கொண்டான். 

“என் பாண்டாவக் கரடின்னு சொல்லுவயா?” என்ற ஆனந்தி பிரசாத்தின் வயிற்றில் கிள்ளினாள். 

“ஐஞ்சு வயசு ஆச்சு இன்னும் கரடிகூட விளையாடிட்டு இருக்கே?”

ஆனந்தி பல்லைக் கடித்துக்கொண்டு தன்னால் முடிந்த அழுத்தம் கொடுத்து கிள்ளினாள். “கிள்ளறேன் இல்ல, அழு.” 

“கிச்சுகிச்சுதான் மூட்டற,” என்ற பிரசாத் சிரித்துக்கொண்டே சொன்னான், “நிஜமா அனு, பாண்டாவும் ஒரு பியர்தான்.”

“இல்லையே. பாண்டா பிளாக் அண்ட் ஒயிட்டா இருக்கும், அதுக்கு குங்பூ தெரியும். பல்லூ பிரவுன்னா இருக்கும். அது மௌக்லியோட ஃப்ரெண்ட்.”

“சரி விடு. இது பாண்டாதான். தப்பா சொல்லிட்டேன். அம்மா வர இன்னும் லேட் ஆகுமாம். பசிக்குதா? உனக்கு தோசை சுட்டுத் தரட்டுமா?”

“நான் சுட்டுத் தரேன்ப்பா உனக்கு.”

“யாரு? நீ எனக்கு தோசை சுட்டுத் தரப் போறயா?” என்று ஆனந்தியைத் தூக்கிக் கொண்டு எழுந்த பிரசாத் சொன்னான், “அப்படியே தூக்கிட்டுப் போய் தோசைக் கல்லுல உன்னை சுட்டு…“ 

“விடு விடு,” என்று ஆனந்தி கத்திக்கொண்டே சிரித்தாள். 

கதவைப் பூட்டி ஆனந்தியை செருப்பு அணியவைத்து அவளை அழைத்துக்கொண்டு மளிகைக்கடைக்கு மாவு வாங்கச் சென்றான் பிரசாத். ஞாயிறு இரவு பத்து மணிக்கெல்லாம் தெருக்கள் வெறிச்சோடி இருக்க விளக்குகள் அணைக்கப்பட்டிருந்த  வீடுகளிலிருந்து தொலைக்காட்சி ஒலி மட்டும் தெருவிளக்கின் ஒளியில் உலவிக்கொண்டிருந்தது. 

ஆனந்தியுடன் நடக்கும் வழி முழுக்க ஆயிரம் கேள்விகள். குழந்தையின் கேள்விகள். சில புதுக் கேள்விகள். தினமும் புதிதுபோல் கேட்கப்படும் பல பழைய கேள்விகள். பதில் பிடித்ததால் திரும்பக் கேட்கப்படும் கேள்விகள், பதில் பிடிக்காததால் மறுபடியும் கேட்கப்படும் கேள்விகள், நட்சத்திரங்கள் அளவுக்குக் குட்டியாய் நிலா தெரிய வேண்டுமென்றால் நாம் எங்கு போய் நிலாவைப் பார்க்கவேண்டும் என்பது போன்ற குழந்தைகளுக்கு மட்டுமே தோன்றும் விசித்திரக்  கேள்விகள். பதில் சொல்லிவிட முடியாக் கேள்விகள். பதில் தெரியாக் கேள்விகள். 

வீட்டுத்தெருவில் இருநூறு அடி நடந்து தெருமுக்கில் திரும்பி அடுத்தத் தெருவுக்குள் நுழைகையில் பிரசாத் கேட்டான், “ஏன் அனு, இவ்வளவு கேக்கறயே? உங்க அம்மாகிட்ட இந்தக் கேள்வியெல்லாம் கேக்க மாட்டியா?”

ஆனந்தி சொன்னாள், “ஓ கேப்பேனே, அம்மாவுக்கு எல்ல்லாம் தெரியும்.”

“சரிதான்,” என்ற பிரசாத் சிரித்துக் கொண்டான். 

பிரசாத் மளிகைக்கடையில் மாவு வாங்கிவிட்டு “வேறு ஏதாவது வேண்டுமா” என்று மனைவிக்குக் கைப்பேசியில் அழைத்துக் கேட்டான். ஆனந்தி கடைக்குள்  நோட்டம் விட்டாள். திடீரென சில நாய்கள் அலறிக் குரைத்துக் கொண்டு மளிகைக்கடையைத் தாண்டி ஓடின. ஆனந்தி ஒரு அடி நகர்ந்து பிரசாத்தின் கையைப் பிடித்துக்கொண்டாள். ஆனந்தியின் தோளைத் தட்டிக் கொடுத்தபடியே பேசி முடித்த பிரசாத் கைப்பேசியை பாக்கெட்டில் வைத்துவிட்டு “அவ்வளவுதான்” என்று கடைக்கார அக்காவிடம் சொல்லிச் சிரித்தான். 

ஆனந்தி பிரசாத்தின் தொடையைத் தொட்டு “தூக்கிக்கோ,” என்றாள். 

கடைக்கார அக்கா ஆனந்தியிடம் கேட்டாள், “ஏய் பெரிய மனுஷி. இன்னுமா அப்பாவத் தூக்கச் சொல்லிட்டு இருக்கே?”

“என்ன வேணும் அனு உனக்கு?” என்று பிரசாத் கடைக்குள் கயிற்றில் தொங்க விடப்பட்ட நொறுக்குகள் அடைத்த பாக்கெட்டுகளைப் பார்த்தான். 

“எனக்கு ஒண்ணும் வேண்டாம்.” 

“தூக்கம்போல” என்று சொல்லிச் சிரித்த கடைக்கார அக்காவிடம் விடைபெற்று வீடு நோக்கி நடந்தான் பிரசாத். 

“தூக்கிக்கணுமா?” 

“வேண்டாம் போ.”

தெருமுக்கைக் கடந்த பிரசாத் எதிரே பார்த்து உறைந்து நின்று அருகே நடந்துகொண்டிருந்த ஆனந்தியை இழுத்து அவளை முன்னே பார்க்கவிடாமல் கண்களைப் பொத்தி அணைத்துக் கொண்டான். ஐம்பதடி தூரத்தில் ஒரு வீட்டுக்   கட்டுமானத்துக்காக சாலையின் வலதுபுறம் தெருவிளக்கின் கீழே குவிக்கப்பட்டுக் கிடந்த மணலின் நடுவில் இரு பழுப்பு நிற நாய்களும் ஒரு கருப்புவெள்ளை நாயும் ஓரத்தில் ஒரு வெள்ளை நாயும் நின்றிருந்தன. நடுவில் இருந்த பழுப்பு நாய்களில் ஒன்று தன் வாயில் ஒரு பூனையை முதுகோடு கவ்விப் பிடித்திருந்தது. அந்த நாய் தன் தலையை வெறி கொண்டதுபோல இப்படியும் அப்படியும் சுழற்றி அதன் வாயிலிருந்த பூனையைக் கம்பு சுற்றுவதுபோல சுற்றிக் கொண்டிருந்தது. அதன் அருகே நின்றிருந்த மற்றொரு பழுப்பு நாய் பூனையைக் கடித்துப் பிடுங்க முயன்று கொண்டிருந்தது.

“அப்பா அப்பா,” என்ற ஆனந்தி “என்னப்பா…“ என்று சட்டையைப் பிடித்து இழுக்க தன்னுணர்வு பெற்ற பிரசாத் கையிலிருந்த பையை ஆனந்தியிடம் கொடுத்துவிட்டு  அவள் கையைப் பிடித்துக்கொண்டு சாலையோரத்தில் இருந்த ஒரு குச்சியை எடுத்து தரையில் தட்டி “ஏய் ஏய்” என்று கத்தி நாய்களை விரட்ட முயன்றான். பிரசாத் எழுப்பிய சத்தத்தில் மற்ற மூன்று நாய்களும் ஓட பூனையைக் கவ்வியிருந்த பழுப்பு நாய் பூனையை மணலில் போட்டுவிட்டு ஒரு வினாடி யோசித்து நின்றது. பிரசாத் மறுபடியும் சத்தம் எழுப்ப அது ஓடிச் சென்று தெருமுக்கில் நின்றிருந்த மற்ற மூன்று நாய்களுடன் சேர்ந்து கொண்டு மணலின் நடுவே இருக்கும் பூனையை வெறித்துப் பார்த்தது. இதற்குள் கட்டுமானம் நடக்கும் வீட்டின் எதிர்வீட்டில் இருந்து ஒரு டிரவுசர்-டீஷர்ட் அணிந்த இளைஞனும், தெருமுக்கில் புகைப்பிடித்தபடி பேசிக் கொண்டிருந்த மூன்று இளைஞர்களும் பிரசாத்தின் சத்தம் கேட்டு அவன் அருகே வந்திருந்தார்கள். ஆனந்தியிடமிருந்து பையை வாங்கி தன் கையில் வைத்துக்கொண்ட பிரசாத் பூனையின் அருகே சென்று பார்த்தான். ஆனந்தி குனிந்து முட்டியில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு பூனையைப் பார்த்தாள். 

ஒருக்களித்து கால்களை நீட்டி அசைவின்றி படுத்திருந்த பூனை வயிற்றை இழுத்து மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. நல்ல வெள்ளை நிறம், காதுகளின் அருகே மட்டும் தேன் நிறத்திட்டு, புசுபுசுவென நீண்ட வால், பெண். பெரிதாய் திறந்திருந்த அதன் அடர்மஞ்சள் விழிகளில் கருவிழி முழுக்க விரிந்திருந்தது. பிரசாத்துக்கு ஒரு கணம் அந்தப் பூனை தன்னையே பார்ப்பதுபோல தோன்றியது. சற்று நகர்ந்து நின்றான். அசைய முடியாத பூனை தலையைத் திருப்ப முடியாமல் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. நாயின் வாயில் மாட்டிக்கொண்டு சுழற்றப்பட்டபோது குலுங்கிய உலகம் கொடுத்த பயத்திலேயே அந்தக் கண்கள் நிரந்தரமாகத் தங்கிவிட்டன. அந்தக் கண்களைக் கொண்டு இனி எதையும் அது புதிதாய்ப் பார்க்கப் போவதில்லை என்று பிரசாத்திற்கு தோன்றியது.

பூனையை ஆர்வமாகப் பார்த்த ஆனந்தி கேட்டாள் “அப்பா, டாம் எப்போ ஓடும்?” 

“அனு, உனக்கு பயமா இல்லையா?” 

“இல்லையேப்பா”

பிரசாத் சுற்றிப் பார்த்தான். சிகரெட் வாடையுடன் அவனருகே நின்றிருந்த மூன்று இளைஞர்களும் பூனையையே பார்த்துக் கொண்டிருந்தனர். டிரவுசர் அணிந்த எதிர்வீட்டு இளைஞன் மணலில் குந்தி அமர்ந்து பூனையை மெதுவாக நிமிர்த்தி அமரச் செய்தான். நான்கு கால்களையும் சேர்த்து வைத்துக்கொண்டு அசைவின்றி பிடித்து வைத்ததுபோல அமர்ந்தது பூனை. அதன் வலதுபுறம் கீழ்கழுத்தில் கோடு போல ரத்தம். கோட்டின் கீழ் சிவந்த மணல் உடலோடு ஒட்டி இருந்தது. ஆனந்தி பிரசாத்தின் கையைப் பிடித்துக்கொண்டாள். 

“ட்ச்… முடிஞ்ச்சு..” என்றான் ஒரு இளைஞன்.

“தண்ணி இருக்கா பிரோ,” என்று இன்னொருவன் கேட்டான். 

டிரவுசர் இளைஞன் எழுந்து அவன் வீட்டுக்குள் சென்றான். வெளிச்சுவருக்குப் பின்னால் இரு வீடுகள். ஒரு வீடு பூட்டப்பட்டிருந்தது. பிரசாத் திறந்திருந்த வீட்டின் தகரக் கதவு வழியே உள்ளே பார்த்தான். பத்துக்குக் பத்து அறை, நடுவே மரத்தடுப்பு, குண்டு பல்பின் மஞ்சள் வெளிச்சம். கிளாஸில் தண்ணீர் எடுத்துக் கொண்டு டிரவுசர் இளைஞன் வெளியே வந்தான். அவன் பின்னாலேயே வடகிழக்கு முகச்சாயலுடன் ஒரு இளைஞனும் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தான். 

இதற்குள் அருகே இருந்த வீடுகளில் இருந்தவர்கள் ஆளரவம் கேட்டு வெளியே வந்து அவரவர் கதவருகே நின்று வேடிக்கை பார்த்தார்கள். 

டிரவுசர் இளைஞன் பூனையின் அருகே அமர்ந்து அதன் தலையைத் தாங்கிப் பிடித்து கொஞ்சம் தண்ணீரை காயத்தின் மேல் ஊற்றினான். பூனை அசைந்தது. பூனையின் வாயருகே சில துளிகள் தண்ணீரை விட்டான். பூனை நாக்கை நீட்டி தண்ணீரைப் பருகியது. ஒன்றிரண்டு நொடிகளில் அதன் வாயின் ஓரத்தில் இருந்து நீர் சிவப்பாய் வழிந்து ஒழுகியது. பூனை தன் முன்னங்காலை அசைத்து முன்னே நீட்டி எழப் பார்த்து முடியாமல் மறுபடியும் அமர்ந்தது. மற்றொரு முன்னங்காலை வைத்து தன் உடம்பை இழுத்து மணலில் கொஞ்சமாய் நகர்ந்தது. பிரசாத் தலையை சிலுப்பிக் கொண்டு ஆனந்தியைத் தேடினான். அவள் அவனுக்கு முன்னால் நின்றுகொண்டு பூனையையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

நின்றிருந்த மூன்று இளைஞர்களில் ஒருவன், “இந்த நாய்களே இப்படித்தான்,” என்றான். 

இன்னொருவன், “இங்கயே பார்த்துட்டு இருக்கு பாரு,” என்றான். 

பிரசாத் திரும்பிப் பார்த்தான். தெருமுக்கில் நான்கு நாய்களும் நின்று கொண்டிருந்தன. அந்த இளைஞர்கள் “சூ சூ..” என்று கையைக் காட்டி நாய்களை அழைத்தனர். நான்கு நாய்களில் ஓரமாய் இருந்த வெள்ளை நாய் தயங்கி முன்னே வந்தது. இளைஞர்கள் மறுபடியும் அழைக்க அவர்களை நம்பிய அந்த நாய் ஓடி அவர்கள் அருகே வந்ததும் மூன்று இளைஞர்களும் ஒரே நேரத்தில் கீழே இருந்து கற்களைப் பொறுக்கி நாயை அடித்தார்கள். “கிகீ கீகீ” என்று கத்தி அழுத நாய் ஒரு வட்டமடித்து எதிர்புறம் ஓடியது. அப்பா என்று கத்திய ஆனந்தி பிரசாத்தின் உடம்போடு ஒட்டிக் கொண்டாள். பிரசாத் ஆனந்தியை அணைத்துக் கொண்டான். வீட்டுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்த பின் பூனையை ஒருமுறை பார்த்தான். 

அருகே இருந்த வீட்டு வாசலில் நின்றிருந்த முதியவர், “தம்பி அந்த நாய் பாவம்யா.  வயித்துல குட்டி இருக்கு,” என்றார். 

இளைஞர்களில் ஒருவன் சொன்னான், “அது பூனையைக் கடிச்சிருச்சு.” 

முதியவர் சொன்னார், “அவ கடிக்க மாட்டா. சாது. யாரு கூப்பிட்டாலும் வரும், வேற ஏதோ நாய் கடிச்சதுக்கு இந்த நாய் என்ன பண்ணும்?”

“அப்போ எல்லா நாயையும் கூப்பிட்டு உன் வீட்டுல வெச்சுக்க வேண்டியதுதானே?” என்ற இளைஞன் மற்ற இரு இளைஞர்களோடு சேர்ந்து பூனையின் அருகே வந்து நின்றான்.

ஒருத்தன் சொன்னான், “இப்படியே விட்டா நாய் திரும்பியும் வந்து பூனையைத் தூக்கிட்டு போயிடும்.”

இன்னொருவன் சொன்னான், ”கெரகம் பிடிச்சது. தின்னாலும் பரவால்ல, கடிச்சு கொன்னு தூக்கி வீசிட்டுப் போயிடும்.”

மூன்று இளைஞர்கள், டிரவுசர் இளைஞன், அவன் அறை நண்பன், பிரசாத், பிரசாத்தின் கால்களைக் கட்டிக்கொண்டு ஆனந்தி, எல்லோரும் பூனையைச் சுற்றி நின்று பார்த்தனர். 

“அண்ணே, உங்க வீட்டுக்கு எடுத்துட்டு போறீகளா?” என்று டிரவுசர் இளைஞன் பிரசாத்திடம் கேட்டான். 

“போலாம், பகல்ல வீட்டுல யாரும் இருக்க மாட்டோம். அதான் யோசிக்கறேன்,” என்றான் பிரசாத். 

“அப்பா… நான் பாத்துக்கறேன்பா,” என்று பிரசாத்தின் முகத்தைப் பார்த்துச்  சொன்னாள் ஆனந்தி. 

“அனு, சும்மா இரு,” என்று ஆனந்தியின் தோளைப் பிடித்து அழுத்தினான் பிரசாத். 

நடந்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த டிரவுசர் இளைஞனின் அறை நண்பன் மணலில் மண்டியிட்டு பிறந்த குழந்தையைத் தூக்குவதுபோல பூனையை இரு கைகளிலும் தாங்கிக்கொண்டு எழுந்து அவர்கள் வீடு நோக்கி நடந்தான். வீட்டுக்கதவுக்கும் வெளிச்சுவருக்கும் இடையே இருந்த செருப்புகளை நகர்த்தி ஒரு சாக்கை விரித்து பூனையைப் படுக்க வைத்தான். 

“கொஞ்சம் பால் குடுத்துப் பாக்கலாமா?” என்று டிரவுசர் கேட்டான். 

“ஒரே நிமிஷம்” என்று மூன்று இளைஞர்களில் ஒருவன் மளிகைக் கடைக்கு ஓடிச் சென்று கால் லிட்டர் பால் பாக்கெட் ஒன்றை வாங்கிக்கொண்டு வந்து பிரசாத்திடம் கொடுத்தான். பிரசாத் ஒரு பிளாஸ்டிக் டப்பா மூடியில் கொஞ்சம் பாலை ஊற்றி பூனையின் அருகே வைத்தான். பூனை எந்தக் கவனமும் இல்லாமல் ஓய்ந்து படுத்திருந்தது. “டாம், பால் பாரு, எந்திரி. பாலைக் குடி” என்று ஆனந்தி பூனையின் அருகே வந்து நின்றாள். 

பாலை பூனையின் முகத்தருகே கொண்டுசென்று அதன் வாயை நனைத்தான் பிரசாத். பூனைக்கு அந்த நேரத்தில் பாலில்கூட விருப்பமில்லாமல் போயிருந்தது. 

பால் கவரை டிரவுசர் இளைஞனிடம் தந்து இரவு வேண்டியிருந்தால் கொடுக்கச் சொன்னான் பிரசாத். மூன்று இளைஞர்களும் அங்கிருந்து நகர்ந்தார்கள். டிரவுசர் இளைஞனிடம், “இங்கதான் இருக்கீங்களா?” என்று பிரசாத் கேட்டான். 

“ஆமான்னே. ஒரு வருஷமா இங்கதான். இவன் அஜய், ஹிந்திக்காரன். திருப்பூர்ல இருந்தானாம், இங்க புதுசா சேர்ந்திருக்கான்,” என்று கதவருகே நின்றிருந்த அறை நண்பனைக் காட்டினான். 

“உங்க பேரு?” 

“மாரி” 

“எங்க வேலை செய்யறீங்க?” 

“ரெண்டு தெரு தள்ளி பர்னிச்சர் பேக்டரி இருக்கில்ல, அங்கனதான்” 

“எதுக்கும் நாளைக்கு வந்து பாக்கறேன்,” என்று மாரியிடம் சொல்லி அஜயையும் பார்த்து சிரித்துவிட்டு வெளிச்சுவர் தாண்டி சாலைக்கு வந்த பிரசாத் ஆனந்தியைத் தேடினான். அவள் பூனையின் வெகுவருகில் நின்று விரல் சொடுக்கி “ச்சு ச்சு” என்று அழைத்துக் கொண்டிருந்தாள். 

“அனு, வா போலாம்,” என்று பிரசாத் அழைத்தான்.

வீட்டுக்குச் சென்றதும் ஆனந்தியை சாப்பிடவைத்து உறங்கவைக்க மெத்தையில் அவள் அருகே படுத்தான் பிரசாத். 

“அம்மா எப்பப்பா வருவா?” என்று ஆனந்தி கேட்டாள். 

“டாக்ஸி ஏறிட்டா. அரை மணிநேரத்துல வந்திடுவா,” என்றான் பிரசாத். 

“அந்தப் பூனைக்கு ஒண்ணும் ஆகாது. இல்லைப்பா?” 

“ஒண்ணுமே ஆகாது அனு.”

“போய் அதைப் பாத்துட்டு வரலாமாப்பா?”

“அந்த மாமா எல்லாம் தூங்கணும் இல்ல. நாளைக்குப் போய் பாப்போம்,” என்ற பிரசாத் ஆனந்தியின் கண்களை மூடவைத்து அவளுக்குத் தட்டிக்கொடுத்து தூங்க வைத்தான். 

அடுத்தநாள் மாலை வேலை முடிந்து பள்ளியில் இருந்து ஆனந்தியை வீட்டுக்கு அழைத்து வரும்போது காரில் ஏறியவுடன் அவள் பிரசாத்திடம் கேட்டாள், “அப்பா வீட்டுக்குப் போனதும் நாம அந்தப் பூனையைப் போய் பாக்கலாமா?”   

“எந்தப் பூனை?” என்று பிரசாத் கேட்டான். 

“டாம் பா. நேத்து விட்டுட்டு வந்தோமே?”

“ஓ” என்ற பிரசாத் யோசித்துக்கொண்டே காரை ஓட்டினான். வீட்டுக்கு முன் காரை நிறுத்தியதும் பிரசாத் சொன்னான், “அனு, அப்பா மதியம் வீட்டுக்குச் சாப்பிட வந்தேனா, வந்தப்போ அந்த மாமா வீட்டுக்குப் போய் பாத்தேன். டாம் வெச்ச பால் முழுசும் குடிச்சுட்டு நைட்டே எங்கயோ ஓடிப் போயிடுச்சாம்.”

ஆனந்தியின் முகம் வாடியது. “ஏன்பா என்னை விட்டுட்டு போன?” என்று கேட்டாள். அடுத்த இரு வினாடிகளில் அழுது விடுவாள். 

“சாரி அனு. நான் உனக்கு ஒரு குட்டி டாம் வாங்கித் தரட்டுமா?”

பிரசாத்தைப் பார்க்காமல் உதட்டைத் தூக்கி வைத்துக்கொண்ட ஆனந்தி அமைதியானாள். காரிலிருந்து இறங்கி, “எனக்கு அந்த டாம்தான் வேணும்,” என்றாள். ஒரு நொடி யோசித்து “நீ இனிமேல் என்கிட்ட பேசாத,” என்று சொன்ன ஆனந்தி “அம்மா,” என்று அழைத்துக்கொண்டே கதவைத் திறந்து பாண்டாக்களும், ரெக்ஸ்ஸுகளும், டாம்களும் என்றென்றும் வாழும் வீட்டுக்குள் நுழைந்தாள். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.