இப்படியும் ஒரு நாள், ஒரு கதை.

எதிரும் புதிருமாக இரண்டு ஜோடிகள் கடக்கலாம்.

அவர்கள் நடுவே ஒரு சைக்கிள் வண்டியோ அல்லது லொங்கு லொங்கு என்று அரை நிஜாரும், கையிலே தண்ணீர்க் குப்பியும், காதுக்குக் கவசம்போல் தலைபேசி அணிந்து கொண்டு ஓடுபவரோ கூட போகமுடியும் !

 அந்த அகலத்தில் காலம்போல் கண்ணிற்கெட்டா தூரத்திற்க்கு போய்க்கொண்டிருக்கும்  முடிவற்ற பாதை.

இருமருங்கும் அடர்த்தியான சிறு புதர்கள்.

     நடுவே மிளகாய் விதைகளும் சோளப்பொரியும்  கலந்து தூவியது போன்ற  

     பூக்கள். கும்குமமும் சந்தனமும் தெளித்த புதர்கள். 

     தினமும் அச்செடிகளை பார்த்தும் பேசியும் நடைப் பயிற்ச்சி செய்யும் எனக்கு,

     கொஞ்சமாவது அவைகளைப் பற்றி எழுதாமல் ஒரு வரி கடந்து போவது கூட 

     செடி-கொடி தர்மமாகாது.

     ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் (அதென்னவோ எல்லாவற்றிற்குமே நாம் புரிந்துகொள்ளத் தவறிய, மறந்த அல்ல மறைக்கப்பட்ட கண்டம் இதுதானா?)   லண்டாணா (Lantana). செடிக்குத் தமிழ்ப் பெயர் ‘உண்ணிச் செடி’ என்பது சரிதானா என்று தெரியவில்லை.  மிக அழகான பூக்கள். வண்ணப்பூச்சிகளுக்கும், புழுக்களுக்கும், பறவைகளுக்கும் உணவு ! தங்ளைப் பாதுகாக்க, செங்காய்களைச் சற்றே நஞ்சாகவும், இலைகளுக்குப் பூனை மூத்திரத்தையொற்ற நாற்றத்தையும் கொடுத்தது யார் குற்றம் ? 

      இது முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட பாவப்பட்ட, தாவரம். இடத்தைக் கொடுக்காமலே மடத்தையே ஆக்ரமிப்பு செய்யக்கூடியதாம்

   நம்மவர்கள் செய்யாத வேலையா இது? உலகில் எந்த ஜீவராசி தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ள வழிகளைத் தேடாமல் இருக்கிறது ஐயா ? அழிப்பது  ‘பாஷிஸ்ட்’ மனிதர்களுக்கு  கை வந்த கலை போலும் !

   அதனால்தான் 5 சதுர கி.மீ.க்கு, 1.50 கோடி செலவழித்து,

   நம்மாட்கள்,  முதுமலைக் காட்டில் வசிக்கும் சோலிக,கொரவ,போன்ற பழங்குடியினங்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் இத்தாவரத்தை, நீதித்துறையின் உதவியோடு சூழலியல் சங்கிலியை அறுத்தோ, அழித்தோ வருகிறார்கள்.

       இன்னொரு செடியைப் பற்றியும் கூற வேண்டும்.  

   மூன்று இதயங்கள் அல்லது கிளாவர் (Clover) ஒட்டிப் பிறந்தது போன்ற அயர்லாந்தைத் தாயகமாகக் ( அல்லது தந்தை – மகன் – புனிதப்பிசாசாகவும் இருக்கலாம் ) கொண்ட மூவிலை மணப்புல் செடி (shamrock). 

   நான்கு இலைகளோடு இருப்பதை எப்பொழுதாவது பார்த்தால் பத்திரப் படுத்திக் கொள்ளுங்கள். ஏன் என்றால், அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும் என்ற (மூட, பேராசை) நம்பிக்கை ஒன்றும் உண்டு.

   வரப்போகும் கதையில் இச்செடிகளும், கும்பலில் கோவிந்தா போடும் துணை நடிகர்கள்போல எங்கேயோ வருவார்கள் என்பதால்தான் இப்படியொரு மெனக்கடு. 

   புதர்களையொட்டி  வெட வெடவென ஒங்கி உயர்ந்த, பெயர் தெரிந்த தெரியாத மரங்கள். 

       கொட்டும் அருவிபோல் ஓயாத இரைச்சலுடன் ஓடும் வண்டிகள் நிறைந்த நெடுஞ்சாலையை ஒட்டியிருக்கும் பகுதியில்மட்டும் மூன்று அடுக்கு மரங்களுக்கு மேல் !
இலைகளின் நடுவே புகுந்த காற்று, சூரியனும் சாயாதேவியும் விளையாடிக் கொண்டிருந்த வெய்யலிலும் நிழலிலும், சலசலவென இசைத்துக் கொண்டிருந்தன .


எப்பொழுதாவது, கிட்டே அணுகும்வரை  அசையாது நிற்கும் சாம்பல் – பழுப்பு நிறக் குறு முயல்கள் தென்படுவதுமுண்டு.

     ஜோடி மான்களில் ஏதாவது ஒன்று, கழுத்தை லாவகமாகத் திருப்பிக் குத்துப் பார்வையுடன் ஒரு புகைப்படம் எடுக்கும்வரை நின்ற காட்சிகளையும் கண்டதுண்டு !

வேளாவேளைக்குக்  கொடுப்பதையெல்லாம் விழுங்கிவிட்டு,  கூட்டிலே புதைந்து கிடக்கும் குஞ்சுப்பறவை போல் வீட்டுக்குள்  பதுங்கிக்கிடந்தேன். 

நாள் முழுவதும் நச நசவென்று பிசிறித் தூவிய தூரலுக்குள் ஊடுறுவிப் பாய்ந்த குளிர் இன்றுதான்  விட்டிருந்தது !
மழையில் சேர்க்க முடியாத தூரல் !

வெட்டியடிக்குது மின்னல் கடல்

வீரத்திரை கொண்டு விண்ணையடிக்குது!

கொட்டியிடிக்குது மேகம்-கூ

கூவென்று விண்ணைக் குடையுது காற்று ” 

என்றெல்லாம் வர்ணிக்க முடியாத மழை !

இலக்கியத்திலும்,கவிதை மற்றும் பல கலைகளிலும் சோகமாய்க் கொட்டிக் 

கலந்திருக்கிற மழை.

 ஜன்னல் கண்ணாடிகளில் பட்பட்டென முரசு கொட்டுவதைத்  தாளமென்றும்,  

மனதிற்கு ஆறுதல் அளிக்குமென்றும் கூறுபவர்களுமுண்டு !

 எனக்கு என்னவோ அவை காதல் வெளிப்பாட்டின் ஒரு குறியிடு என்று ஒரு  

சம்சயம்

தத்துவார்த்தமாக ‘கொடுப்பதும் – உள்வாங்குவதும் அல்லது  

சரணடைவதும்‘.

சேமித்து வைத்திருந்த சோம்பலையெல்லாம் டக்கென  உதைத்து,  

இடக்கால் முன் வைத்து, வெளியே கிளம்பினேன், வரப்போகும்  

நிகழ்வுகளையறியாமல்.

வீட்டிற்குள் வருவதென்றால்தானே வலக்கால் !

   நம்ம ஊர்ப் பூங்காவில் உள்ளதைப் போன்ற பெஞ்ச் ஒன்றில்,  பறவை எச்சமிடாப்  பகுதியில் உட்கார்ந்தேன்.

      எனக்கு முன்னே,  பாதையைக் கடக்கலாமா வேண்டாமா என்று சகுனம்  பார்த்துக் கொண்டிருந்த இராமன் தடவாத அணில். 

      இதுதான் காட்சி …கதை இனிமேல்தான் ……..


இந்த ஊர் பெயர் கிங் ஆப் பிரஷ்யாவாம் ! 

   எங்கேயாவது ஊருக்கு இந்த மாதிரி பெயர் வைப்பார்களா ?
பிலடெல்பியா, அமெரிக்காவின் பழைய தலைநகரம் என்பதை அறிவீர்கள். வடமேற்காலே ஒரு 16 மைல் ஸ்கைகுல் (Schuylkill) நதியை ஒட்டிப்போகும்  202 பெருஞ்சாலையில் போனீர்களென்றால் நிச்சயம் இந்த ஊரை அடையலாம்.
1769 களில் வந்த ஒரு ஜெர்மானிய வந்தேரி, ஜேம்ஸ் பெர்ரி, தனது மன்னர் பெடரிக் II மேல் இருந்த விசுவாசத்தைக் காட்ட, மதுக்கடையின் பெயர்ப்பலகையில் ‘கிங் ஆப் பிரஷ்யா’ என்று பெயர் எழுத, அதுதான் அந்த ஊரின் பெயர் என்று ஒரு சோம்பேறி ஆங்கிலேய சர்வேயர் இலவச விருந்திற்கு பிறகு, இரண்டுக்கு மேல் போட்ட பெக்கினாலோ என்னவோ, அதையே கிராமத்தின் பெயர் என்று தன் பதிவேட்டில் குறித்துக் கொண்டு போனதாக ஒரு கதை உண்டு. 

   இதற்கு அருகில் உள்ள ‘வேலி போர்ஜ்’ (Valley Forge) என்ற இடத்தில் மிகப்பெரிய இராணுவ முகாமை அமைப்பதற்கு முன், ஜார்ஜ் வாஷிங்டன் 1777 இல் இந்த சத்திரத்தில் இளைப்பாறியதாகவும் தகவல் உண்டு. 

   நான் கூறுவதை நம்பாவிட்டால் அந்த இடத்தில் இன்று உள்ள, கிட்டத்தட்ட பழைய தோற்றத்தில் உள்ள ‘சேம்பர் ஆப் காமர்ஸ்’ கட்டிடத்தில் உள்ள தகவல் பலகையில் சரிபார்த்துக்கொள்ளவும்.

   அமெரிக்காவிலேயே மிக நீண்ட ‘மால்’ இந்த ஊரில் இருப்பது போல் கிங் ஆப் பிரஷ்யாவின் மஹாத்மியம் நீண்டு கொண்டே…போகிறது, என்ன செய்ய? 

  
இந்த ஊரில்தான்  என் மகள் ஒரு பத்து ஆண்டுகளுக்கு மேலாக குடும்பம் நடத்துகிறாள். நான் அவர்களுடன் ஒரு விடுமுறையைக் கழிக்க வந்துள்ளேன். நடைப்பயிற்சிக்காக இந்தப் பாதை.

   எண்ணக் கழுதைகளை மேய்த்துச் செல்வது நடை தூரத்தை மறக்க நல்லதொரு பயிற்சி என்று தெரியும். ஆனால் பாதையில் பச்சையும் மஞ்சளும் கலந்த எலுமிச்சம் பழங்களைப் போன்ற  கருப்பு வாதுமைக் கொட்டைகளைக் காலால் தட்டிக்கொண்டு போவதும் இன்னொரு பயிற்சி  என்று தெரிந்து கொண்டேன்.

வாங்க, களைத்துவிட்டீர்களா என்ற அசரீரி பேசுவதைக்கேட்டு, வாய்மூடி அண்ணார்ந்து பார்த்தேன்!

   மர உச்சிகளில் அவ்வளவு நேரம் பாடிக்கொண்டு இருந்த ஷிக்காடா சில் வண்டுகள் திடுதிப்பென்று நிசப்தமாகிப் போனதை நான் கவனிக்கவில்லை.

பிக்காஸோவின் கறுப்பு வெள்ளை சாம்பல்  ஓவியமான ‘ ‘கெர்னிகாவை’  (Guernica) நீங்கள் பார்த்திருந்தால்  புடைத்த மூக்குடன், கதறும் குதிரையைக் கவனிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள்.
அதைப்போன்ற மூக்குடன், வழுக்கைத்தலை,கூரிய பற்கள், வௌவால் இறக்கைகள் இவையனைத்தையும் சேர்ந்த பூத கணம் அல்லது குள்ள பூதம் போன்ற உருவம், காற்றில் ஆடி வரும் இலையைப் போல கீழிறங்கி 

   என்னருகே உட்கார்ந்தது.  

   இரண்டடி உயரம். 

   எனக்குச்சரி சமமாக உட்காராது ஆடிக்கொண்டே இருந்தது அந்த உருவமா அல்லது எனது தலையா ?
எனது கற்பனையோ, பிரமையோ அல்லது மருட்சித் தோற்றமோ என்னவோ,! பயந்தோ, பயப்படாமலோ ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்தேன்.
எந்த நரனும், நாரியும்  கண்களுக்கெட்டியவரை தென்படவில்லை.

    நீங்கள் யார்? என்று சற்று அடக்கத்துடன் கேட்கலாம் என்பதை எப்படியோ அறிந்துகொண்ட அவர், 

  கூர்ப்புக் கொள்கையை நம்புபவரென்றால் உங்களின் அடுத்த மேல்நிலை வாரிசுகள், நெடுநாள் வாழ்பவரகவும், உயரமாகவும், எடை குறைந்தவர்களாகவும், லேசானவருமாகத் தென்படுபவர். முரட்டுத்தனம் குறைந்து மூளை சிறுத்தவராகவும் இருப்பார்கள் இது புதுச்செய்தி.

    ‘பெருந்தாவல்’ விதிப்படி அடுத்த கட்டத்தின் மூல-முன்மாதிரி (Prototype) வடிவமைப்பு நான்..

   புராணத்தை நம்புபவராய் இருந்தால் ‘சூரியனுக்கும் சரயு என்ற சஞ்சனாவிற்கும் பிறந்த இரட்டையர்களில் ஒருவரான யாமினியின் வழி வந்தவர்கள்.உங்கள் மரபணு ஆராய்ச்சியாலும் இதை நிரூபிக்க முடியும்”. 

   அந்தி வேளை மட்டுமே அதனால் செயல்பட முடியும் என்ற கூடுதல் செய்தியையும் அறிந்தேன்.

 .நான் இந்த ‘வேதாளக் கைத்தடி’  (Devil’s Walking Stick) மரத்தில் வசிக்கிறேன். இது  ஒருகாலத்தில் வசித்த செவ்விந்தியர்கள் (இப்பொழுதெல்லாம் அவர்களை அமெரிக்க பூர்வகுடிகள் என்றழைக்க வேண்டும் என்பதை வேண்டுமென்றே மறக்கவில்லை ஐயா) பூசை செய்யும் மரம். 

   இப்பாதையில் இருக்கும் இவ்வகை மரம் இது ஒன்றுதான் !
செடி,கொடி,மரங்களையெல்லாம் கவனித்துக் கொண்டு நீங்கள் நடப்பதைக் கண்டேன். ஆனால் இந்த மரத்திற்கு இரண்டு பக்கங்களிலும் இருநூறு அடிகள் தள்ளித்தான்  காட்டுப்பூண்டுச் செடிகளோ, லண்டானா செடிகளோ வளரும். 

   இது உண்மையா என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள் ! 

   இந்தக் காலத்தில்தான் தட்டிவிட்டால் தகவல்களைக் கொட்டும்,தேடும்-எந்திரங்கள்  உள்ளனவே
நான் மறுபடியும் மனதில் குறித்துக் கொண்டேன்.
பெஞ்ச் பக்கத்தில் உள்ள கம்பத்தைப் பார்த்தீர்களா? 

   என்ன எழுதியுள்ளது? 2.50 என்று தானே ? 

   அது தூரத்தைக்குறிக்கும் மைல் கம்பம் என்று புரிந்து கொண்டால் அது உங்கள் தவறில்லை.  

   2500 ஆண்டுகளாக இங்கு உள்ளேன் என்பதுதான் அதன் பொருள் என்று நீங்கள் அறியமாட்டீர்கள் ………
மற்ற கம்பங்களைப் பார்த்தீர்களென்றால், இது மட்டும் வேறுபட்டிருப்பதைக் கவனிக்கலாம். …..

   நேற்றுதான் பெருந்தூக்கத்திலிருந்து விழிப்பு நேர்ந்தது


மைல் கம்பங்களைச்  சரிபார்க்க மனதில் மறுபடியும்  குறித்துக்கொண்டேன். 


எனது மொழி ‘செத்த மொழி’ என்று நீங்கள் கருதுகிற மொழிகளுள் ஒன்று. இலக்கியம், இயல், இசை, நாடகத் துறைகளில் சிறந்த எழுத்தாளர்கள் மறைந்த பின்புதானே மதிப்பது, விழாக்கள் கொண்டாடுவது என்பது உங்களது வழக்கம்?

   அது சரி, உங்களுக்கு மம்மர் அறுக்கும்,மருந்து எது தெரியுமா”? என்று கேட்டு, என் பதிலுக்கு காத்திராமல் தொடர்ந்தது.

   நான் பேசுவது வேறு மொழி. ஆயினும் உடனுக்குடன் உங்கள் மொழியிலேயே கேட்க வைத்திருப்பது எங்கள் திறமை.

   இமயமலை குகைகளில் 900 1000 வயது ,கண்கள் செருகிய  நிலையில் மாய மந்திர பாபாக்கள் இன்றும் வாழ்ந்துகொண்டுள்ளனர் என்று எவரோ கூறுவதை மட்டும் நம்புவீர்கள்.

   விக்ரமாதித்தன் காலத்தில் பேசும் படிக்கட்டு பாவைகளும், செயலற்ற உறக்க மோன நிலை எந்திரங்களும், கூடு விட்டுக் கூடு பாயும் தந்திரங்களும் இருந்தன என்றால்  அதற்கு சாட்சியப் பதிவுகள் கேட்பீர்கள்

   முக்காலங்களைப் புரட்டிப் போடுவதும், முன்பின் மாற்றிய முரண்பாடுகளை முன் வைப்பதும், இடை இடையே தத்துவம் பேசுவதும், நக்கலும், நையாண்டியும் வேதாள உலகத்திலும் உண்டு போலும் ! 

   நம்மை காட்டிலும் வேறுபல செய்திகளை அறிந்திருக்கிறார் என்று தெரிந்ததும் அவர் மேல் எனது மதிப்பு கூடியது.. 

   இது நினைத்ததைக் கொடுக்கும் ஜீனிவேதாள ஜாதி இல்லை என்றும் தெரிந்தது. 

  ம்ம்…புரிகிறது. எத்தனை நாட்கள்தான் உங்களைத் தோளிலே சுமப்பார் ? எப்படியோ  இந்தக் கண்காணா நாட்டில் உங்களை இறக்கி விட்டு, நீள்தூக்கத்திலும் ஆழ்த்திய கதையைப் பேசும்பாவைகளிடம் பகிர்ந்தும், உரக்கச் சிரித்தும், சோமபான விருந்தொன்றும் கொடுத்துக் கொண்டாடியிருப்பார் உங்கள் விக்ரமாதித்ய அரசர் இது நான்

இந்த வேதாளம், தலை சுக்கு நூறாகும் கதைகளைச் சொல்லி, என் முதுகில் ஏறி, முடிவிலாச் சவாரி செய்ய ஆரம்பித்தால் என்ன ஆவது என்று எண்ணி ,நானே முந்திக்கொண்டு,
வழக்கத்துக்கு மாறாக, இன்று, நான் சொல்லும் கதையை, நீங்கள் கேட்டே ஆகவேண்டும் என்று கூறி, நானே என் யுக்தியை வியந்து,  மனதால்,முதுகைத்   தட்டிக்கொண்டேன் !    

  ஹா, அதுவும் ஒருவிதத்தில் நல்லதுதான். மறந்துபோன கதைகளை நினைவுகூற அவகாசமும் கிடைக்கும் – இது வேதாளர் !

  என் கதைக்கு மன நிறைவு தரும் விடையை உங்களால் அளிக்க முடியாவிட்டால், இந்த மரத்தை விட்டு குறைந்தது இரண்டாயிரம் மைல் தொலைவில் வேறு எங்காவது ஜாகை மாற்றிக் கொள்வேன், என உறுதி மொழி கொடுத்தால்… என்று முடிப்பதற்கு முன்,சரி, ஆரம்பியுங்கள் என்றார் குள்ள பூதனார் !

   நண்பர்களே, கதைக்குள் இந்தக் கதையைக் கேளுங்கள் :

அன்று மாலை இதே பாதையில் நடந்துவரும்போது, புதர்களிடையே

வெள்ளை முழுக் காலணி ஒன்று  துருத்திக் கொண்டிருந்ததைப் பார்க்க நேரிட்டது  

கிட்டே சென்று எட்டிப் பார்த்ததில் யாரோ ஒருவர், குடித்துவிட்டோ என்னவோ மயங்கிக் கிடந்தார் ! 

சாதரணமாக நமது டாஸ்மாக் குடிமகன்கள்போல் இந்த நாட்டில் சாலை ஓர சொர்க்கத்தில் பரமபதம் பார்க்கும் மக்களைப் பார்த்ததில்லை ! தொட்டெழுப்பலாம்…… ஆனால், பழுப்பு நிறத் தொப்பியில் பாதி முகம் மறைந்திருந்தாலும் வாய்ப்பக்கம், ஈக்கள்  வட்டமிடுவதைப் பார்த்தவுடன் தெரிந்துவிட்டது  !

சட்டென்று நாலடி பின்னால் வந்து பாதையின் இருபக்கமும் பார்த்தபடி ……. கைபேசி இல்லை, இருந்தாலும் நம்மூர் சிம் உபயோகமில்லை

அந்த இடத்தைவிட்டு உடனடியாகப் பார்க்காததுபோல் கடந்துவிடலாம். ஆனால் ஃபோரன்ஸிக் ஃபைல் (Forensic Files) படங்கள் பல, கண்கள் முன் நிழலாடின.

 அடி வயிற்றில் கிளம்பிய சிறு தணலின் வெப்பம் கணகணவென்று மேலேறுவதை உணரமுடிந்தது ! 

என்ன செய்வது என்ற கவலையுடன் ஒரு படபடப்பு, இயலாமை, ஏன் இந்த அனாவசியமான வம்பு போன்ற எண்ணங்கள்  தூரத்தில் ஒருவர் வந்துகொண்டிருப்தைப் பார்த்ததும் அதிகரித்தது என்று உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை ! அந்த நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் ?

அருகில் அவர் வந்துவிட்டார். கொரியன் பாதி – சீனன் பாதி, இரு முகங்கள் கலந்த கலவை. இன்றைய தலைமுறை போலும் !

உதவி தேவையா” என்று கேட்ட அவருக்கு , நான் பேசாமல்,  நீட்டிக்கொண்டிருந்த   வெள்ளை ஷூப்பக்கம் கை காட்டினேன்.

பக்குவப்பட்ட மனிதர் போலும்.

911-க்கு அறிவித்துவிட்டீர்களா….. நீங்கள் எப்பொழுது பார்த்தீர்கள் ?” .

எனது இயலாமையை அறிந்து, உடனே கைபேசியில் அவர் பாதையில் பார்த்த என்னையும் , நான் காட்டிய சடலத்தையும், இடம் இவையனைத்தையும் கூறிவிட்டு, நம் இருவரையும் இங்கேயே இருக்கச் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் பத்து மணித்துளிகளில்  போலீஸ் வந்துவிடுவார்கள் என்றார். 

என் வாய் உலர்ந்தது  அவருக்கு எப்படியோ தெரிந்து, கையிலிருந்த தண்ணீர்க் குடுவையை என்னிடம் கொடுத்தார்.

அப்படியே தரையில் உட்கார்ந்து அடுத்து என்ன செய்யலாம் 

என்றிருந்தது நான். 

தலைப்பேசி மாட்டிக்கொண்டு பாட்டு கேட்க ஆரம்பித்தது அவர் !

கதையை நீட்டி இழுத்தடிக்க விரும்பவில்லை !

இந்த ஊர் போலீஸ்காரர்களைக் கண்டாலே மதிப்பு, மரியாதையுடன் கூடிய ஒரு பயம் ஒட்டிக்கொள்கிறது என்பதுதான் உண்மை

வந்த இருவரில் ஒருவர் சடலத்தைப் படம் பிடித்துக் கொண்டிருக்கும்போதே,  மற்றவர் என்னிடம் நீங்கள் ஆசியன் என்பதையும், எனது மொழி மற்றும் உச்சரிப்பு உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம் என்பதால் மிக மெதுவாக பேசுகிறேன். இப்பொழுது தெளிவான விவரங்களைக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.”

அவர் வெளிப்படுத்திய பாவனை அவரது செருக்கையோ, அகந்தையையோ அல்லது வெள்ளைத் தோலையோ இனம் காட்டியது.

கேட்டதுமல்லாமல் எங்களை படமும் எடுத்துக் கொண்டார். 

மூன்று நாட்களில் கலிபோர்னியாவிற்கு நான் செல்லவிருப்பதைக் கேட்டு, மறுநாள் விசாரணைக்காக வீட்டிற்கே வருவதாகவும் பயமுறுத்தினார் ! 

எப்படியோ வீடு சேர்ந்தேன். 

விவரங்களைக் கேட்ட வீட்டினர் அனைவரையும் ஒரு பதட்டநிலையில் விட்டுவிட்டு  , எப்படியோ நான் மட்டும் தூங்கப் போனேன் !

காலை மலர்ந்தது. 

நான் மெக்கார்மெக். நீங்கள் மெக் என்று கூப்பிடலாம்” 

என் முன்னால் போட்டோக்கள் பலவற்றைக் காட்டி,

உங்களுக்கு இவரைத் தெரியுமாஎன்பதுதான் காலையில்  மெக்கின் முதற்கேள்வியாக இருந்தது. வெள்ளைக்காரர்களின் முகங்கள் சட்டென்று மனதில் படிவதில்லை. அப்படியே  படிந்தாலும் அடையாளம் கூறுவதற்குறிய திறமையோ, புத்திசாலித்தனமோ என்னிடம் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

பேச்சின் கடுமையைக் குறைக்க, 

உங்கள் மூதாதையர் ஸ்காட்டிஷ்–ஐரிஷ் நாட்டினர்தானே? என்றேன்.

அவர் தலையைப் பக்கவாட்டில் இருபுறமும் அசைத்தது, ஆம் என்றோ இல்லை என்றோ என்பது புரியவில்லை. இந்த மெக் என்பது அவர்களது பெயர்களுடன் ஒட்டிப்பிறந்தது என்பதை மட்டும் அறிவேன்.

இவர் யார் என்பது எனக்குத் தெரியவில்லையே !

இவர் எழு வீடுகள் தள்ளி வசிப்பவர். இவரைச் சில நாட்களுக்கு முன்பு அவர் வீட்ட்டருகே நீங்கள் சந்தித்ததாகவும், $6000  கடனுதவி கேட்டதாகவும் அவரது மனைவி மிஸஸ் ட்யூனர் கூறுகிறாரே !

கிணறு வெட்ட பூதம் கிளம்பியது என்ற கிழமொழிக்கு வேறு மொழி தெரியவ்வில்லை. 

இதை முற்றிலும் மறுக்கிறேன் – மென்று முழுங்காமல் முழுதாகக் கூறமுடிந்தது

கூடுதல் நேரம் பெற நான் அவரிடம் என் பாஸ்போர்ட் – விசா விவரங்களை எடுத்து வருகிறேன்” என்று எழுந்து உள்ளே போனேன்.

என் மகள் என்னிடம் இரகசியமான குரலில் என்ன அப்பா இது?” என்னிடம் கேட்டிருந்தால் நானே கொடுத்திருப்பேனே. எதற்காக அக்கம் பக்கத்தில் எல்லாம்? ” 

மூச்சு முட்டியது. நீயுமா இந்தக்கட்டுக் கதைகளை நம்புகிறாய்/? 

அவர் என்னுடைய விரல்கள், காலணி மற்றும் கால்களின் பதிவுகளை எடுத்துக் கொண்டு நன்கு யோசித்து முழு விவரங்களை எழுதிக் கொடுக்கவும். மாலைக்குள் புலன் விசாரணை அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை விவரங்கள் தெரிந்து விடும்.”

என் மகளைப் பார்த்து தேவையானால் இவரைக் காவல் நிலையத்திற்கு நீங்கள் அழைத்து வர வேண்டியிருக்கும்

என் மகள் தயாரித்த பனீர் பட்டர் மசாலாவை ருசிக்க அவரை அழைப்பதா என்று நான் யோசித்துக்கொண்டிருந்தபோது, அவர் மற்ற பல வெள்ளையர்களை போலல்லாமல், “ஸ்மெல்ஸ் குட்” என்று சுற்றும் முற்றும் பார்த்தார்!

நண்பர்களே, முன் பின் காவல் நிலையத்திற்கே போகாத எனக்கு அவர்களது சிறையைப் பற்றிய மோசமான நிகழ்வுகள் (ஹாலிவுட் படங்களில் பார்த்த இழவுகள்தான்) எனது மனத்திரையில் ஓட்டமாய் ஓடின.

பின்னோக்கி நினைவுகூற்கையில், நான் சில நாட்களுக்கு முன்பு எங்களது தெருவில் நடந்து போகையில் ஒரு வீட்டின் முன்பு தெருஓர நூலக அலமாரியில் இருந்த நூல்களை இலவசமாகப் படிக்கலாம் என்று அறிந்து. புத்தகம் ஒன்றை எடுத்துப் படிக்கும் பொழுது, வீட்டிலிருந்து வந்த நடுத்தர வயது வெள்ளைக்காரர் தன்னை வில்சன் ட்யூனர் என்று அறிமுகம் செய்து கொண்டு சிறிது நேரம் பேசினார். 

அவர் தான் இறந்த மனிதர் என்பதை அறிந்தேன்.

மாலையில் நான் எடுத்து வந்த ‘Silence of the Lambs’ நூலை எடுத்த இடத்தில் திருப்பி வைத்து விடலாம் என்றும், இந்த மிஸஸ் ட்யூனர் ஏன் என் மீது வீண் பழி சுமத்தினார் என்பதை அறியும் ஆவலினாலும் அவர்கள் வீட்டு பக்கம் போனேன்.

கண்ணாடிப் பெட்டியில் நூலை வைக்கும் சாக்கில் ட்யூனர் வீட்டு பக்கம் என் கண்கள் தானாகப்  பார்த்துக் கொண்டிருந்து.

நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் கொஞ்சம் அவசர நடை போட்டு என்னருகில் வந்து “ நீங்கள் தானே ஹேரி” என்று எனது வழுக்கைத் தலையை கேலி செய்வது போல் கேட்டார். 

தலையை அசைத்ததும், வீட்டிற்குள் வந்து தேநீர் அருந்த உங்களை அழைக்கறேன் என்றார்.

ஆர்வத் துடிப்பு சில சமயம் நம்மை கொல்லும் என்று ஆங்கிலப் பழமொழியைப் பொய்யாக்க, அவருடன் வரவேற்பரைக்குள் சென்றேன்.

ஐந்து நிம்டத்தில் தேநீரும், கேக்கும் வரும் வரை தயவு செய்துக் காத்திருக்கவும் ”. என்று சொல்லி உள்ளே போனார்.

நண்பர்களே ‘கட்டிகை, கடினி’ என்று கூறப்படும் கேக் வகையறாக்களை விரும்புபவன் நான் அல்லன். 

அவரது வரவேற்பறையில் அலங்காரப் பொருட்கள் இல்லாவிட்டாலும் தூய்மையாக இருந்தது. 

தனித்தனியாக இருவரது சட்டமிடப்பட்ட புகைப்படம் தெரிந்தது.

ட்யூனரின் படத்திற்கு மாலை எதுவும் போடக் காணோம். அந்த ஊர் வழக்கம் இல்லையோ என்னவோ? ஒரு அலங்கார சட்டத்துக்குள் ஒரு சிறுமி ! அது அவர்களின் பெண்ணோ அல்லது மிசஸ் ட்யூனரின் சிறு வயதுப் படமோ, யான் அறியேன் பராபரமே ! 

முதலில் எனது ஆழ்ந்த வருத்தம்” 

நான் சொல்ல வேண்டியதை அவர் சொன்னார். 

உங்களுக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்ததற்கு எனது மன்னிப்பு.. போலீஸிடம் நான் அறிந்த உண்மைகளையும் கூறிய பொழுது உங்கள் பெயரைக் கட்டாயமாகச் சேர்க்க வேண்டியிருந்தது. போலீஸ் புலன் விசாரணையின் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி ட்யூனர் தடுக்கி விழுந்து தலையின் பின்புறம் ஏற்பட்ட உள்காய இரத்தக் கசிவால் இறந்தார் எனவும், எந்த குற்றச்செயலுக்கான அறிகுறிகளும் தென்படவில்லை.

வெளியே எந்த காயமும் இல்லை. அவரது இரத்த பரிசோதனையில் ஆல்காஹால் அல்லது எந்த நச்சுப்போருளோ இருக்கவில்லை என்று கூறியதால் நீங்கள் ஒரு குற்றமும் அறியாதவர் என்று தெரிகிறது என்று கூறினார். ஒரு முறை முகத்தை கை குட்டயால் துடைத்துக்கொண்டது எனது பதட்டத்தைக் குறைத்தது.

எனது கணவரின் வேலை ஓய்வுக்குப்பின், ஒரு குடிகாரரானார். அதிலிருந்து மீண்டு வந்த பிறகு சூதாட்டத்தின் அடிமையானார். அன்றிலிருந்து வீட்டு நிதி நிர்வாகத்தை நானே எடுத்து எப்படியோ காலத்தைக் கடத்தி வருகிறேன். எங்களுக்கு குழந்தைகள் இல்லாக்குறை அவரைப் பலபழக்கங்களில் ஈடு படுத்தின. அவரது மனநல மருத்துவர் அவ்வப்பொழுது காரணம் ஏதும் கேட்காது அவருக்கு சிறு பண உதவிகள் செய்யுமாறு எனக்கு அறிவுறைக் கூறினார்.. 

உங்களுக்கு வேண்டுமென்ற பண உதவியைப்பற்றி அவர் கூறிய போது, அது சூதாட்டத்திற்கான பணத்தை என்னிடமிருந்து பெறுவதற்கு கூறிய கதை என்று தெரிந்தும், மறுப்பேதும் கூறாது $3000 மட்டும் ஒரு உறையில் போட்டுக் கொடுத்தேன். 

எது எப்படி ஆயினும் அவர் ஒரு நல்ல மனிதர். அன்று காலை வெளியே போனவர் வெகு நேரம் திரும்பாததால் கவலையுற்றேன். அவரது மேஜை இழுப்பறையில், உங்களுக்குக் கொடுக்க வேண்டிய உறையை எடுத்துப் போக மறந்திருந்ததையும் கவனித்தேன். அது அவருடையது என்பதால் அதை அப்படியே சவப்பெட்டியில் அவருடன் அடக்கம் செய்ய வைத்துள்ளேன். 

வரும் ஞாயிறன்று காலை ‘ஹோப் கம்யூனிட்டி சர்ச்சில்’ அவரது உடலடக்கத்திற்கு உங்களை தயவு செய்து அழைக்கிறேன்

மனது லேசாகி ஒரு உற்சாகத்துடன் வீடு திரும்பினேன். 

வீட்டிற்கு வந்த போலீசார் தங்கள் விசாரணையில் என் மேல் எந்தக் குற்றமும் இல்லை என்று தெரிந்ததால் நிம்மதியாக நான் கலிபோர்னியா செல்லலாம் என்ற நற்செய்தியை கூறி, கலிபோர்னியாவின் சிறந்த தட்ப வெட்ப நிலையையும், அழகிய கடற்கரைகளையும் அனுபவிக்கும்படி கூறி, எனது ஒத்துழைப்பிற்கு நன்றி கூறி விடை பெற்றனர்.

 ‘ரோசே கிரேப் வைனுடன்’ ஒரு சிறிய விருந்துக்குப் பிறகு, அந்த நாள் இனிதாகக் கழிந்தது. படுக்கப் போகுமுன், நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் எண்ணி அடக்க முடியாத பெருங்குரலில் சிரித்த சிரிப்பு வீட்டிலுள்ள அனைவரையும் எனது அறைக்கு வரவழைத்தது. 

கதையும் முடிந்தது.

வேதாளத்தைப் பார்த்து “ நண்பரே இப்பொழுது கேட்கக் கூடிய கேள்விக்கு நீர் சரியான விடை அளிக்கவும். அவ்வாறு இல்லாவிட்டால், நமது ஒப்பந்தத்தின்ப்படி நடப்பீர் என்று நம்புகிறேன். எனது கேள்வி இதுவே :

எனது அறையில் நான் பெருங்குரலில் சிரித்ததற்கு காரணமென்ன ? 

வேதாளம் மெல்ல நகைத்து, தனதுக் கோரைப் பற்களையும், சிவந்த ஈறுகளையும் காட்டி, கண்களை உருட்டாது 

.வெளிநாட்டில் சிறை செல்ல பயந்து நடுங்கிய நீங்கள், போலீஸின் கிடுக்கிப்பிடியிலிருந்து தப்பியதை நினைத்துச் அதனால் உங்கள் குடுமத்தினருக்கு வரவிருந்த அவப்பெயரிடமிருந்து எப்படியோ விடு பட்டதால் உம்மை அறியாமல் பெருஞ்சிரிப்பு ஏற்பட்டது. – சரிதானே? ” 

 “ மிகத்தவறான பதில் வேதாளரே. நான் நீங்கள் நினைத்தபடி ஒரு அப்பாவி அல்ல. சடலத்தைப் பார்த்த போது, அடையாளத்தைத் தெரிந்து கொள்ள அவரது சட்டைப்பையைத் தேடிய போது, அதிலிருந்த $3000 நோட்டுகளை எடுத்துப் போன என்னைப் போலீஸாரோ, மிசஸ் ட்யூனரோ கொஞ்சங்கூட சந்தேகிக்காத ஏமாளிகள் என்ற நினைப்பு எனக்கு பெரும் சிரிப்பை கொடுத்தது.

அப்படியானால், மிசஸ் ட்யூனர் மேஜையில் பார்த்த உறைக்கு என்ன பொருள்.? – இது வேதாளம்.

ட்யூனர் ஒரு கெட்டிக்காரர். மனைவி அறியாமல் உறையை வைத்து விட்டு உள்ளிருந்த பணத்தை மட்டும் சூதாட்டத்திர்காக உருவிக்கொண்டு வந்தது அவருடைய சாதுர்யம்,.தற்செயலாக இறந்தது அவரது துரதிர்ஷ்டம்”–இது நான்

நண்பர்களே நீங்கள் என்னை ‘பிக்பாகெட்’ என்று கருதலாம். அவர் பையிலிருந்த பணம் சூதாட்டத்திற்கு சேர வேண்டிய பணம். அது அவர் வழியாகவோ, என் மூலமாகவோ போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு அது போயே தீரவேண்டும் என்பது  நானே விதித்ததுக் கொண்ட விதி. இறந்த ட்யூனரின் ஆத்மா சாந்தி அடைய இது ஒரு நல்ல வழி.

நானும் ஒரு சராசரி மனிதன். கலிபோர்னியாவில் உள்ள லாஸ் வேகஸ் நகரத்தில் உள்ள சூதாட்ட அரங்கில் விளையாடுவதற்கு, எடுத்து கொண்ட பணம், உதவியாக இருக்கும் என்பதை யாரிடம் சொல்வேன்.!

   வேதாளம் கடுத்த முகத்துடன் “கொடுத்த வாக்கை மறக்கவோ, மாற்றவோ நான் உங்கள் அரசியல்வாதிகள் மற்றும் சந்தர்ப்பவாதிகளைப் போலவோ கிடையாது. என்று கூறி மாயமாய் மறைந்தார். 2500 மைல் தொலைவில் ஏதோ ஒரு இடத்தைத் தேடிப் பறந்திருக்கலாம். 

‘செங்கண்’-விமானப் பயணம்

(‘Red Eye Flight’ to Los Angels)

பக்கத்து இருக்கையில் இருந்தவரைப் பார்த்தவுடன் இவர் தமிழர் என்பதை அறிய முடிந்தது ! 

நவீன வேதாளக்கதை புகழ் எழுத்தாளர் விந்தன் அல்லது சேனாதிபதி அவர்களை ஞாபகப்படுத்துகிறீர்கள் என்று அவரிடம் கூறியதும், வந்த புன்சிரிப்பு, நன்றாக ஒருவர் மாட்டினார், நல்ல வாய்ப்பு” என்றெண்ணி, நானும் என் புத்திசாலித்தனத்திற்கு ஒரு சபாஷ் போட்டுக்கொண்டு, “உங்களுக்கும் பொழுதுபோகும், எனக்கும் உங்கள் கருத்துரை கிடைத்தமாதிரி இருக்கும். இது நான் எழுதிய முதல் கதை அதனால்தான் “என்று கூறி அவர் கைகளில் கதைத்தாள்களைத் திணித்தேன்! 

விமானப் பணிப்பெண்கள், குப்பிகள் கிணுகிணுக்க,

குறுகிய வழியை அடைத்தவாறு, சாப்பாட்டு வண்டியைத்  தள்ளிக் கொண்டு வந்தனர். 

நமது விந்தன் சார்  தலையைத் தூக்காமலே. தக்காளிச்சாறு, அதனுடன் சிறிது மிளகையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்றார் சுருக்கமாக ! 

எப்பொழுதும் கூச்சத்தினால்,’இலவச’(இல்லை,இல்லை), ‘விலையில்லா’ மதுபானங்கள் வேண்டாம் என்று கூறி, முன் இழந்த வாய்ப்புக்களை ஈடுகட்ட, இன்று இலவசக் ‘கருத்துரை’ கிடைக்கும் உற்சாகத்தில், கட்டாயம், அசல் வெளிநாட்டுச் சரக்கையோ அல்லது ஒரு காக்டெயிலையோ கேட்கலாம் என்ற எண்ணத்திற்கு ஒரு கேடு வந்தது!

ஸ்குரு டிரைவர்,பிளடி மேரிஎது வேண்டும், 10 டாலர்கார்டில்தான் 

 (எல்லாப் பெயர்களும் கெட்ட அல்லது டமாஷ் பெயர்கள் என்பதைப் பின்னால், படித்துத் தெரிந்து கொண்டேன்)

நான் நாணிக்கோணிக்  கூறியது புரிந்தோ புரியாமலோ என்னிடம் சிவப்பு வைனை (ஒயின் என்று தமிழ் நாட்டில் அறியப்பட்டது) 

எங்கள் அன்பளிப்பு (with compliments)  என்று சொல்லி HVML என்று எழுதப்பட்ட தட்டைக் கொடுத்துவிட்டு அந்த வெண்மணிகள் அகன்றனர் ! 

திடீரென்று  முகச்சுருக்கங்களுடன் ஐம்பது வயதைக் கடந்தவர்கள் போல் அவர்கள் தோற்றமளித்தது எனது காட்சிப்பிழையோ என்னவோ ! 

இரண்டு மிடறு குடித்தவுடன் என் முகத்தைக் கண்ட நம்மவர் 

 இந்த  விமானங்களில்,குடிப்பதற்கு சற்றும்

லாயக்கற்ற, மட்டமான  வைன்களையே பயன் படுத்துகின்றனர் என்று கூறியதுமட்டுமல்லாமல், குரலைத் தாழ்த்தி இதை எப்படிக் குடிக்கிறீர்கள்?. உயர்வகுப்பு பயணிகள் மிச்சம் மீதி வைத்த வைனையும், இந்த ஏர் லைனில் கொடுக்கிறார்கள் என்ற வதந்தியும் உண்டு ….. 

எனக்கென்னவோ அவர் என்னைப் பழிவாங்க வேண்டும் என்று  வேண்டுமென்றே கூறியதுபோல் தோன்றியது ! …………

அவர் தோளைத்தட்டி எழுப்பி இன்னும் சிறிது நேரத்தில் விமானம் இறங்கப் போகிறது.அசந்து தூங்கிய உங்களை எழுப்ப மனம் வரவில்லை.கதையை அப்போதே படித்து விட்டேன் என்று கூறியபோதுதான் பல மணி நேரம் கடந்ததை அறிந்தேன் !

தவறாக நினைக்க வேண்டாம், உங்கள் கதையை எந்த ஜானரில் (Genre) சேர்ப்பது என்று புரியவில்லை ! அபுதினம் இல்லை, ஆட்டோ பிக்‌ஷனோ,‌ மெட்டாபிக்‌ஷனோ இல்லை. ரியலிஸத்தில் கட்டாயம் சேர்க்க முடியாது. பான்ட்டஸியிலோ, மேஜிக் ரியலிஸத்திலோ ஒட்டாது. யதார்த்தம் துளிக்கூட இல்லை !

வரலாறு,  புராண வகைகளில் வரவில்லை. மாயா பஸார்…..ஹூ ஹும்… ஓரு ஆணாதிக்கத்தையோ, பெண்விடுதலை பற்றியோ, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பற்றியோ,சுற்றுச்சூழல் உண்மைகளையோ, அரசியல் சூது வாதுகளைப் பற்றியோ, நாடெங்கும் பரவிக் கொண்டிருக்கும் சாமியார்கள், பணக்கார ஜகத்குருமார்களைப் பற்றியோ, அகலக் கால்வைக்கும் காவிக் கூட்டங்களைப் பற்றியோ, தேசிய இடதுசாரி இயக்கமற்றுப் போனதையோ, மய்யங்கள் எதைச் சுற்றுகின்றன என்பதைப்பற்றியோ, ஒரு சமூக நல்லுறவு பற்றியோ  யோ..யோ..யோ..”—- இப்படி எத்தனையோ யோக்கள். 

ஒரு மாதிரியான மேட்டுக்குடி மனவோட்டத்தில் டைம் பாஸுக்காக எழுதப்பட்டது   போல் தெரிகிறது ! 

இங்குமங்குமாக, பி.டி.சாமி, சுஜாதா, சாரு. பட்டுக்கோட்டை, ரமேஷ் பிரேதன்,கோணங்கி, வெங்கடேசன், இவர்களை படித்தோ, கேட்டோ இந்த முயற்சியில் இறங்கினீர்கள் போலும். !

உங்கள் எழுத்து தட்டையாகவும், கதை மொண்ணையாகவும் உள்ளது. ஒன்று கூறுகிறேன்,கேளுங்கள் ! நீங்கள் ஒரு மாதம் இங்கு இருக்கப் போவதானால் எங்கள் சங்கத்தில் சேரலாம். அறிவு முதிற்சி அடைய குறுக்குவழிகளை நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம் !

 பயிற்சிக்கட்டணம் ஏதுமில்லை,ஆனால் நன்கொடையாக ஐநூறு டாலர்கள் மட்டும் கட்டாயம் உண்டு என்று மூச்சு விடாது பேசி அவரது பிசினஸ் கார்டை ஒன்றுக்கு இரண்டாகவும்  கொடுத்ததுவிட்டு,

  அது முடியாவிட்டால் இன்னொன்றைச் சொல்லுகிறேன்.

இலக்கியம், மதம்,வரலாறு , தத்துவம், தாந்த்ரீகம் ஏன் எதைப் பற்றி வேண்டுமானாலும் நேராகவோ, மறைமுகமாகவோ,மூக்கைச் சுற்றிப்பிடிக்கும் வித்தைகளையோ அறிய,  நீங்கள் ஜெமோ பயிற்சிப்பட்டறையில் சேரலாம், ஜேகே சொற்பொழிவுகளைக் கேட்கலாம் , ஜக்கிகளின் கூத்துப் பட்டறைகளில் கற்கலாம் ! பகுத்தறிவுப் பாசறைகளில் அறிவைச் சாணம் தீட்டிக்கொள்ளலாம் ! தமிழ் நாட்டில் எல்லாமே கிடைக்கிறது.  

ம்ம்,….. உங்கள் கதையைப்பற்றி‘ டிஃபமிலியரைசேஷன்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுத ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. 

அம்புலிமாமாக்களும் இந்திரஜால காமிக்ஸ்களும் உங்களக்கு பிடித்தவையாக இருக்கலாம்.. ஆனால் அவை உங்களை எழுத்தாளராக்க முடியாது

புளிப்புடன் உவர்ப்பும் சேர்ந்து வந்த ஏப்பம் இவர் கொடுத்த சிற்றுரையாலோ அல்லது குடித்த வைனாலோ தெரியவில்லை ! இவ்வளவு ‘இஸங்களை’ உள் வாங்க முடியுமா என்று வாய் பிளந்த நிலையில் இருந்த எனக்கு  ‘தட்’என்று  விமானம் தரை தட்டிய போதுதான்  இவ்வறிவுரை முன்பெங்கோ கேட்டதுபோல் உள்ளதே என்று எண்ணும் போது வேகமாக நடந்து நமது விந்தன் எங்கோ மறைந்துவிட்டார் ! 

பிஸினஸ் அட்டையில்

வேதா, எம்.டி (மைன்ட் ட்யூனர்) LA-19406 என்றிருந்தது.

ஆனால் அது லாஸ் ஏன்ஜில்ஸ் அஞ்சல் எண் இல்லை. 

2400 மைல் தூரத்தில் உள்ள கிங் ஆப் பிரஷ்யா  வினுடையது என்று புரிந்தது !

வழுக்கைத்தலையும், கெர்னிகா குதிரையும் ஏனோ கண்முன் வந்தது !

இன்னொரு பா(தி)(தை) இருக்கிறது போலும் !

அது VEDAAL STORY – VS part 2 வாக இருக்கலாம் !     

7 Replies to “இப்படியும் ஒரு நாள், ஒரு கதை.”

  1. மிகசிறப்பாக உள்ளது.பயங்கர twist,வேதாளத்தின் முகத்தை அருமையாக வர்ணித்திருக்கிரார்.சகபயணியை அவரின் பிஸினஸ்ஸை நகச்சுவையுடன் வர்ணித்திருப்பது அருமை. போரபோக்கில் நீதிமன்றங்களும் பழங்குடிமக்களுக்கு எதிராகச்செயல்படுவதைச்சுட்டிக்காட்டியிருக்கிரார். எண்ணக்கழுதைகளை மேய்பது!!! அருமையான consapt .First attempt itself he has shown his showcased his talent. Hope to see more stories from Mr.Hariharan.

  2. மிகசிறப்பாக உள்ளது.பயங்கர twist,வேதாளத்தின் முகத்தை அருமையாக வர்ணித்திருக்கிரார்.சகபயணியை அவரின் பிஸினஸ்ஸை நகச்சுவையுடன் வர்ணித்திருப்பது அருமை. போரபோக்கில் நீதிமன்றங்களும் பழங்குடிமக்களுக்கு எதிராகச்செயல்படுவதைச்சுட்டிக்காட்டியிருக்கிரார். எண்ணக்கழுதைகளை மேய்பது!!! அருமையான consapt .First attempt itself he has shown his showcased his talent. Hope to see more stories from Mr.Hariharan.

  3. கதை மிகச் சிறப்பாக உள்ளது. கடைசியில் Twist பிரமாதம். எண்ணக்கழுதைகளை மேய்பது! அருமையான வார்த்தைப்பிரயோகம் தொப்என்றுகுதித்த அந்தஜந்து வேதாளத்தின் அழகியமுகத்தின் வர்ணணைஅழகோஅழகு..முதல்கதையா இது !! Hope to see more and more stories from Mr Hriharan.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.