
1.
சாயத்துவங்கின
தாழப்பறந்த
பசுந்தோகை விரித்த
செங்கரும்புகள்.
கதிர்அறுத்த
தரிசு நிலங்களில்
இதமான வெப்பத்தில்
குளிர்வடங்கிய
ஆலங்கட்டிகளை
கக்கிச் சென்ற
நிறைசூல் மேகங்கள்
கிடத்தி இளைப்பாறுகின்றன
அந்தியின் தொலைவு நீண்ட மடியில்.
கோரப்பாய் விரித்த
தாழ்வாரத்தின் ஓரத்தில்
தாய்க் கோழியின் கதகதப்பின்
கூதல் தணிக்கும் குஞ்சுகள்
தலைதூக்கி முண்டுகையில்
விரவிப் பிடிக்கும் சிறுவனுக்கு
நினைவுச் சுழியாய்
வந்து விழுகிறது
அம்மையின் கதகதப்பு …
2.
காயம்பட்டு காய்த்துப்போன
செங்கச்சூலையில்
வேலை முடிந்த கையோடு
பின்னல்கூடையுடன்
கீழடிக்கு வந்தவள்
சண்டாளி
இம்புட்டு ஆழத்துல
கெடக்க குலுமபானைய பாருடி
அந்தக் காலத்துல
நூறு மரக்கா புடிக்கும்டி
இந்த பானை யென்றாள்
கூட வந்தவ
ஆமக்கா என்றதோடு
எங்கமத்தா கொண்டாந்த சீர்ல
இன்னும் அடுப்படியில
அடுக்குப் பானைக
அடஞ்சு கெடக்குன்னு
நகர்கிறாள் மெல்ல,
எலுமிச்சை சர்பத்
மோர் என்ற
தள்ளுவண்டிக்காரரிடம்
வேண்டாமென்று
மறுத்துவிட்டு
தென்னங்கீற்று பரப்பிய
தோப்போரத்தில்
ஒக்கார்ந்து
கூடயில இருந்த
ஒத்த வாழைப்பழத்தில
பசியாற்றும்
பாமரத் தாய்மார்கள்,
இளைப்பாறிவிட்டு
மீண்டும் நடையைக்கட்டினர்
செங்கல் சூலைக்கே…
3
உதிரம் நிறம் மாறா
தொலைவு நீளும் பாதையில்
தலைநீளும் படுகொலைகள்
சிதறிய வடுக்களாக
நதியைப் பின் தொடரும்
மிதப்புக் கதிராய்
இன்னுமொரு
தலைமுறையாய்
நகர்கின்றன
இனங்களின் எச்சத்தில்…
4
கிராமத்து வீதிகளில்
பொன்னிகளின் சலங்கையொலி
நெல்தூற்றல்…
கிழவன்களின் நாகரீகத்தை
கீழடியில் அகலத்தோண்டுகிறது
தமிழ் சிற்றுளி…
முந்தையவை
One Reply to “அய்யனார் ஈடாடி கவிதைகள்”