அமெரிக்கக் கால்பந்து: கலாச்சார தனித்துவம்

துவக்கம்

அமெரிக்கக் கால்பந்து பற்றிய அறிமுகக் கட்டுரையில் இவ்விளையாட்டின் விதிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சம் முக்கியமாக அதன் ஒருங்கிணைக்கும் அம்சம் குறித்து விரிவாக பார்த்தோம். அமெரிக்கக் கால்பந்து(இனி என்.எப்.எல் போட்டிகள்) அதன் பெயரில் தொடங்கி விளையாட்டு உத்திகள் உட்பட அமெரிக்காவிற்கு மட்டுமேயான தனித்துவத்தை கொண்டது என்பதையும் பார்த்தோம். ஆக ஒரே ஒரு நாட்டில் மட்டும் மிகப் பெரிய செல்வாக்குடன் ஆடப்படும் விளையாட்டின் கலாச்சார முக்கியத்துவத்தை ஏதோ ஒரு புள்ளியில் துவங்கி விளக்கிச் செல்வதை விட, கடந்த பத்தாண்டுகளில் ஒரு பார்வையாளனாக இவ்விளையாட்டில் என்னை ஈர்த்த அம்சங்களும், அதன் தொடர்ச்சியாக நான் வாசித்தும், பார்த்தும் கற்றறிந்ததை சொல்வது பொருத்தமாக இருக்குமெனபடுகிறது(என்.எப்.எல் ஐரோப்பாவில் நடத்தும் ஒரு சில போட்டிகள் அங்கு பெரிய வரவேற்பைப் பெறுகின்றன. உதாரணமாக சென்ற ஆண்டு ஜெர்மனியில் பேயர்ன் ம்யூனிச் கால்பந்து அணியின் ஆட்டகளத்தில் நடந்த ஒரு போட்டி அங்கு அர்ப்பணிப்பும் வெறித்தனமும் கலந்த உணர்நிலையில் பார்க்கப்பட்டதாக ஊடகங்கள் கூறின) மேலும் அது புறத்தாக்கம்1 பெரிதும் இல்லாமல் பார்க்கும் சாதாரண விளையாட்டு ரசிகனின் குறிப்புகளாக அமையும் அதே வேளையில் தேடி அறிந்துகொள்ள சாத்தியமுள்ள இடங்களை சுட்டுவதாக இருக்கும். 

முதலில் இது எளிமையாக ஓரிரு அமர்வுகளில் அறிந்து கொள்ள சாத்தியமில்லாத விளையாட்டு. இதன் விதிகள் மற்றும் ஆட்டமுறைகளை அறிந்து கொள்ள தொடர் ஈடுபாடு தேவை. என்.எப்.எல் போட்டிகள் பெரும்பாலும் ஞாயிறுகளில் நடப்பதாலும், இதன் அணிகள் அமெரிக்கப் பெருநகரங்களில் மையங்கொண்டு அமைந்திருப்பதாலும்(பெரும்பாலும் நம்மவர்கள் பெருநகரங்களில் பணிசெய்து புறநகர்களில் தங்கும் இடம் அமைத்துக்கொள்வது வாடிக்கை), வசிக்கும் பகுதியிலுள்ள அணியின் போட்டிகளைப் பார்க்கத் துவங்கி கொஞ்சம் முயற்சி செய்தால் நம்மால் எளிதாக இவ்விளையாட்டின் விதிகளை அறிந்து ஈடுபாடு கொள்ளமுடியும். இரண்டாவது இப்போட்டிகளை (முக்கியமாக ஆரம்ப காலங்களில்) தனியாக அமர்ந்து பார்ப்பது உசிதமில்லை. சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவோ, போட்டியின் நுட்பங்களை அறியவோ, சென்ற வாரம் அல்லது ஆண்டில் நிகழ்ந்த போட்டியை நினைவுகூர்ந்து சுட்டவோ  நண்பர்கள் அல்லது சகாக்கள் தேவை. மூன்றாவது, போட்டியை ஆடுகளத்தில் சென்று பார்ப்பது. போட்டிக்கு முன்பு பலபகுதிகளில் இருந்து வரும் ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே கூடாரம் அமைப்பதற்கு ‘டெய்ல் கெட்டிங்’ என்று பெயர். ‘டெய்ல் கெட்டிங்’ பார்ட்டி என்பதை விழாக்கோலம் என்ற ஒரே வார்த்தையில் வர்ணிக்கலாம் அல்லது தங்களுக்கு பிடித்த அணியின் போட்டியை காண்பதற்கு முன்னான தயாரிப்பு (பீயர், பர்கர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடனான உரையாடல்களுடன்) என்றும் சொல்லலாம். அவ்வனுபவம் என்.எப்.எல் போட்டிகள் ஆடுகளத்திற்கு வெளியேயும் அமெரிக்க மக்களின் மீது செலுத்தும் செல்வாக்கைக் காணலாம். இம்மூன்றையும் வரிசைப்படி செய்தல் சிறப்பு, அதன் வழி ஒருவர் என்.எப்.எல் ரசிகர் ஆவார் என்பதும் உறுதி.

அடிப்படைகளை அறிந்தபின் கூட்டாக பார்க்கப்படும் ஒரு போட்டி பல்வேறு ரசிக்கத் தகுந்த தருணங்களின் சாத்தியங்களால் நமக்கு வெகுமதி அளித்து ஆட்கொள்ளும். அவ்வாறு நான் அடிப்படைகளை அறிந்து பார்த்த முதல் சூப்பர் பௌல் 2015ல் நடந்த மறக்கமுடியாத ஒன்று. நியூ இங்கிலாந்து பேட்ரியட்ஸ் மற்றும் சியாட்டில் சீஹாக்ஸ் அணிகளுக்கிடையே நடந்தது அப்போட்டியின் இறுதி நொடிகளில் சீஹாக்ஸ் அணி செய்த பிழை அவர்களின் வெற்றி நூலிழையில் தவறிப் போனது. இன்றுவரை பயிற்சியாளரின் தவறா? குவாட்டர் பாக்கின் தவறா? என்று பேசப்பட்டும் வருகிறது. 

அர்ப்பணிப்பு

எல்லா மொசார்ட்டின் ஓவியங்களும் முழுமையான நிறைவு கொண்டவை அல்ல, ஆனால் பிழைகள் கொண்ட சரக்கும் மில்லியன் டாலர்களுக்கு மேல் விற்பனையாகுபவை” – ஆண்டி ரீட், கான்சஸ் சிட்டி சீப்ஸ்ஸின் தலைமைப் பயிற்சியாளர். 2019ல் டெட்ராய்ட் லயன்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு கான்சஸ் சிட்டி சீப்ஸ் அணி வீரர்களின் லாக்கர் அறைக் கொண்டாட்டத்தின் போது கூறியதே மேலுள்ளது. தம் அணி களத்தில் பல தவறுகள் செய்திருப்பினும் இறுதி வெற்றியை எய்தியது மொசார்ட்டின் குறைவுகள் கொண்ட ஓவியங்களை போல் சிறப்பானது தான் என்பதே அவரின் சொற்களுக்கான உட்பொருள். ஆண்டி ரீட் ஒன்றும் சாதாரணமானவர் அல்ல, கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமைப் பயிற்சியாளர் அனுபவம் கொண்டவர்(பார்வையாளராக, அவ்விளையாட்டின் வீரராக, பயிற்சியாளராக எத்தனை ஆண்டுகள் அமெரிக்கக் கால்பந்து விளையாட்டுடன் தொடர்பில் இருக்கிறார் என்பதை தேடி அறிந்து கொள்ளலாம்). மேலும் அமெரிக்கக் கால்பந்திட்டத்தின் தாக்குல் முறைகளில், உத்திகளில் புத்துணர்ச்சியை உருவாக்கியவராக, இந்த முப்பது ஆண்டுகளில் ஆட்டமுறைகளின் மாற்றத்திற்கேற்ப தன்னை மீண்டும் மீண்டும் மறுகண்டுபிடிப்பு செய்துகொள்பவராகக் கருதப்படுவர். அப்படிப்பட்டவருக்கு மொசார்ட் ஓவியர் அல்ல இசைக் கலைஞர் என்ற அடிப்படைத் தகவல் எப்படித் தெரியாமல் போனது? அல்லது கொண்டாட்ட உற்சாகத்தில் நிகழ்ந்த பிழையா?  உங்கள் வாழ்வின் விழித்திருக்கும் பெரும்பகுதி நேரத்தை அமெரிக்கக் கால்பந்து என்னும் விளையாட்டுக்கு கொடுத்தால் ஒழிய மாற்றத்தின் தழும்புகள் தாங்கி தலைமைப் பயிற்சியாளராகத் தொடர்வது கடினம்.2 (அதற்குத்தக்க வருமானமும், தொடர்புகளும், வாழ்க்கை முறையும் கிடைக்கும் என்பது வேறு விஷயம்). அதனாலேயே ஆண்டி ரீட்டிற்கு மொசார்ட் ஓவியர் அல்ல என்று தெரியாதது ஆச்சர்யமில்லை, மொசார்ட் எதிர் அணியில் விளையாடினாரா என்று கேட்டால் தான் ஆச்சர்யம்.

இது மட்டுமல்லாது மில்லியன் கணக்கில் சம்பாதிக்கும், தங்களின் இருபதுகளில் உள்ள இளைஞர்களை வழிநடத்துவது மற்றொரு மிக முக்கியமான தேவை. மோதல்கள் கொண்ட விளையாட்டு என்பதால் வீரர்களின் தன்னகங்காரத்தை சீண்டியே திறமையை வெளிக்கொண்டு வரமுடியும். அதே சமயம் அகங்காரம் கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியம், ஒரு தலைமைப் பயிற்சியாளர் இந்த இரு கோடுகளுக்கு இடையே பயணப்படுபவராக இருக்கவேண்டும். பயிற்சியாளர்களின் தேவைகள் ஒரு வகை என்றால் என்.எப்.எல் வீரர்களுக்கான தகுதிகளும், தேவைகளும் இருக்கின்றன. தனியாக உங்களின் ஆட்டத் தேர்ச்சி மற்றும் உடற்கட்டமை மட்டுமே என்.எப்.எல் ப்ரோவாக உதவி செய்யாது. ஆரம்பத்திலேயே சரியான பயிற்சியாளர் அமைய வேண்டும், அதைவிட சரியான அணியில் விளையாட வாய்ப்பு அமைய வேண்டும், எல்லாவற்றிக்கும் மேலாக காயங்களால் விளையாட்டு வாழ்க்கை பாதிப்படையாமல் இருக்கவேண்டும். இந்த காரணங்களால் ஒரு வீரரின் சராசரியாக என்.எப்.எல் காலஅளவு மூன்றாண்டுகள் மட்டுமே. 

ஆக அர்ப்பணிப்புடன் செய்யலாற்றுவது என்பது பயிற்சியாளர்களுக்கு மட்டுமல்ல, வீரர்களுக்கும் பொருந்தும். வீரர்களுக்கு நல்ல பயிற்சியாளர் தேவை என்பதைப் போல பயிற்சியாளர்களுக்கு சிறந்த வீரர்கள் தேவை. 

மேலாண்மை

என்.எப்.எல் அணிகளுக்கிடையே சமநிலையை தொடர்ந்து தக்கவைக்க சம்பள வரம்பு பின்பற்றுகிறது. அதாவது எல்லா அணிகளும் தங்கள் 53 வீரர்களையும் அவ்வருடத்திய அதிகபட்ச சம்பள வரம்பிற்குள் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இதனால் ஒவ்வொரு அணியும் தங்கள் தேவைகள் கருதி பணத்தை அள்ளி எறியமுடியாது. உடனடி தேவைகளும், முக்கிய வீரர்களின் சம்பளமும் வரம்பிற்குள் அமைய ஐவீ பல்கலைக் கழகங்களில் பயின்ற வணிக நிர்வாகப் பட்டதாரிகளையும், சட்ட வல்லுநர்களையும் அணிகள் ஆலோசனையாளர்களாவோ, பணியாளர்களாகவோ வைத்திருக்கின்றன. அடுத்து போட்டிகளுக்கு முன் எதிர் அணியின் உத்திகள் மற்றும் முக்கிய வீரர்கள் (சில நேரங்களில் போட்டியின் நடுவர் குழு குறித்தும்) குறித்து தகவல் சேகரித்து அனலிடிக்ஸ் அறிந்த தொழில்நுட்ப ஆட்களும் இருக்கிறார்கள். என்.எப்.எல் நடக்கும் மாதங்களில் வீரர்களின் உடற்தகுதி மற்றும் உணவு முறைமைக்கு தகுந்த வல்லுநர்கள் ஒவ்வொரு அணியும் கொண்டிருக்கும். உடற்பயிற்சியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் மசாஜ் தெரபிஸ்ட் என தனிப் பட்டாளமே விளையாட்டு போட்டியின் போதும் மைதானத்தின் ஓரங்களில் இருப்பார்கள். ஒரு அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் நிர்வாக இயக்குனரின் கீழ் முந்நூறில் இருந்து ஐநூறு பேர் வேலை செய்வார்கள்.

போட்டியின் போது தலைமைப் பயிற்சியாளரின் மிக முக்கியமான பணி என்பது ஆட்டநேர மேலாண்மை. இதை சரியான அணித் தலைவர்(தாக்குதல் அணியில் குவாட்டர் பாக், தற்காப்பு அணியில் லைன் பாக்கர்கள் பொதுவாக அணித்தலைவராக இருப்பார்கள்) அமைந்தால் எளிதாகவும் இல்லையெனில் அனுபவத்தின் மூலமாகவே பெற முடியும். இதில் சிறு தவறுகள் கூட தோல்விக்கு காரணமாகிவிடும். வீரர்கள் ஒருங்கிணைவு தாண்டி பல விஷயங்கள் தலைமை பயிற்சியாளரின் பொறுப்பில் இருப்பதால் போட்டியின் போது அவர்களை அமைதியான நிலையில் காண்பது அரிது.   

இது போன்று பல காரணிகள் சரியான விகிதத்தில் அமைக்கையிலே சூப்பர் பௌல் வெற்றி சாத்தியம் என்பது மறுக்க முடியாதது.

குறிப்புகள்:

1 – என்.எப்.எல் போட்டிகள் நிகழும் மாதங்களில் புறத்தாக்கம் இல்லாமல் இவ்விளையாட்டு பற்றி ஒரு வார்த்தை சொல்வதுகூட கடினம். தொலைக்காட்சிகளில், ரேடியோப் பண்பலைகளில் வரும் கருத்துக்கள்   தொடர்ந்து நம்மீது மோதித் தெறித்தவாறே இருக்கும்.

2 – இதனாலேயே பெரும்பாலான என்.எப்.எல்லில் விளையாடிய அமெரிக்கக் கால்பந்து வீரர்கள் பயிற்சியாளர்களாக மாறுவது குறைவு. அதும் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படுவது அபூர்வம். இன்றைய தலைமைப் பயிற்சியாளர்கள் பலர் தங்களின் இருபதுகளின் இறுதியிலிருந்து தொழிற்முறையாக தங்கள் விருப்பத்திற்குரிய ஆசிரியரின்(அவர் தலைமைப் பயிற்சியாளராக அமைந்து உங்களை எடுத்துக் கொண்டால் உயர்வது சில படிகளில் அமையலாம்) கீழ் பலக்கட்ட பயிற்சிகள் மற்றும் முன்னெடுப்புகளின் மூலம் மேலேறி வந்தவர்கள் தான்.

முந்தைய பகுதி

One Reply to “அமெரிக்கக் கால்பந்து: கலாச்சார தனித்துவம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.