அமித் ஷாலினியும் நரேந்திர மோதினியும்

உங்களுக்கு இசையில் ஆர்வம் இருந்தால், புதிய ராகம், நரேந்திர மோதினி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.  நரேந்திர மோதினி ராகம்  சித்திர வீணை இசைக் கலைஞர், தலைவர் ரவி கிரண் அவர்களின் கண்டு பிடிப்பு. கிராமிய மக்களின் முன்னேற்றம்  (rural  empowerment )  என்ற  ஒரே ஒரு  நோக்கத்தோடு  மட்டும் உருவாக்கப் பட்ட ஒரு ராகம்.  நீங்கள் கேட்கவில்லை இல்லை என்றால், இதோ:

உங்கள் எதிர்வினை என்னவென்று எனக்குத் தெரியாது. அது  வெறுப்பு, கோபம், பிரமிப்பு, மகிழ்ச்சியாக இருக்கலாம். இல்லாவிட்டால் இதை ஒரு கேளிக்கையாக, வேடிக்கையாக  நீங்கள் பார்க்கலாம்.    இந்த கட்டுரையைப் படித்தால் உங்களுக்கு  எவ்வாறு இது கர்நாடக இசை மேடையை மாற்றப் போகிறது என்று புரியும்.   படிப்பதற்கு முன் இருக்கையில்  உட்கார்ந்து, பட்டியை  சரியாக அணிந்து கொள்ளவும். 

இந்த ராகத்தின் கண்டு பிடிப்புக்கு  இசை வட்டாரத்தில் இருந்து பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இது ஒரு தீவிரமான கலைப் படைப்பு அல்ல என்று  தலைவர் டி.எம்.கிருஷ்ணா கருத்து தெரிவித்துள்ளார். தலைவர் டி.எம்.கிருஷ்ணாவிடம் இருந்து இப்படியொரு கருத்து வருவது சுவாரஸ்யமானது.  தலைவர்  டி.எம்.கிருஷ்ணா பல சமயங்களில் கலையின் வரையறை குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.  எது கலை , எது பண்பாடு என்பது  ஒருவருக்கு ஒருவர் வேறு படும்.  கச்சேரியின் நடுவில் வர்ணம் பாடுவது தான் கலை சுதந்திரம் என்றால் புது ராகம் கண்டு பிடிப்பதும்  கலை சுதந்திரம் தான்.  

நமது முதல் கேள்வி, புதியதாக இராகம்  கண்டு பிடிப்பது அவசியமா?  ஏற்கனவே நூற்றுக்கணக்கில் ராகங்கள்  உள்ளன. அவற்றை கண்டு பிடிப்பதற்கே  ரசிகர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு இருக்கும் போது  இது எதற்கு என்ற கேள்வி எழலாம்.  இதற்கு கண்ணதாசன் “ஏன்  என்ற கேள்வி ஒன்று  என்றைக்கும் தங்கும்,  வெறும்  இன்ப துன்பம் எதிலும் கேள்வி தான் மிஞ்சும்” என்று பதில் அளித்து இருக்கிறார்.  இந்த பாடல்,  “ஏழு ஸ்வரங்களுக்குள்  எத்தனை பாடல்”, இடம் பெற்ற  படம் ” அபூர்வ ராகம்”.   அந்த  திரை படத்திலேயே இன்னொரு பாடல் (அதிசய ராகம், ஆனந்த ராகம்) வழியாக  நம்  கேள்விக்கு விடையும் அளித்து இருக்கிறார்கள்  MSV  மற்றும்  Dr  பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்.   அந்த திரைபாடப் பாடலின் துவக்க ராகம் “மஹதி”.  நான்கு  சுரங்களில்  ( ஸ  க  ப  நி )  இராகம் பாடலாம் என்பதை நிருபிக்க  Dr  பா.மு.கி  அவர்கள் உருவாக்கிய ராகம்.  வலஜி  ராகத்தில்  ( (ஸ  க  ப  த  நி ) இருந்து தைவதத்தை ( த )  நீக்கினால்  மஹதி கிடைப்பாள்.  வலஜிக்கு  இந்த  அநீதி இழைத்ததை தட்டிக் கேட்க ஒருவரும் இல்லையா என்று கவைலைப் பட வேண்டாம்.  பண்டிட் ரவி ஷங்கர் வலஜியை  சமாதானப் படுத்த   ஒரு  எக்ஸ்ட்ரா  ரிஷபம் (ரி)  சேர்த்து அதை  ஜன சம்மோதினி  என அழைத்தார். ( ஸ் க  ப   த நீ  ஸ,    ஸ  நீ த ப க ரி  ஸ ).   வலஜிக்கும் , அவள்  சகோதரி  கலாவதிக்கும் இதுவும் பிடிக்கவில்லை என்று கேள்வி. 

ஒரு ராகத்திற்கு அரசியல்வாதியின் பெயரை வைப்பது சரியா என்பது இன்னொரு கேள்வி.  படைப்பாளிக்கு  ராகம் பெயரிட சுதந்திரம் இருப்பது போல, அதனை விமர்சிக்க விமர்சகர்களுக்கும் சம உரிமை உண்டு. நீங்கள்  விமர்சகரானால் உங்கள் வயதுக்கும், தமிழ் புலமைக்கும்  தக்கவாறு   முகத்துதி, கூஜா, சோப்பு, இச்சகம் பாடல், sychophancy  என்று என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்.  அது உங்கள் உரிமை.  

நரஸ்துதி பாடுதல்  கலை உலகத்துக்கு ஒன்றும் புதியது அல்ல. ஒரு சில கலைஞர்களைத்  தவிர, முந்தைய காலத்து கலைஞர்கள் பலர் அரசர்களின் ஆதரவைப் பெற்றனர், பதிலுக்கு அவர்கள் தங்கள் புரவலர்களைப் பற்றி எழுதினர்  / பாடினர். இசை உலகத்திலும் இது புதியது அல்ல. பிரதமர் இந்திரா காந்தியை கவுரவிக்கும் வகையில் அம்ஜத் அலிகான் பிரியதர்ஷினி என்ற ராகத்தை உருவாக்கினார்.

இதை கேளுங்கள்:

பிரியதர்ஷினியில் சஞ்சய் சுப்ரமணியனின் Ragam  Tanam  Pallavi  (RTP )  இதோ.

என்னை பொறுத்த வரையில்  ராகம் ராகப் பெயரிடுதலை    ஒரு  சில அரசியல்வாதிகளுக்கு மட்டும்   என்ற குறுகிய வட்டத்துக்குள்  ஏன்  அடைக்க  வேண்டும் நினைக்கிறேன். மற்றவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

நீங்கள் கவனித்திருப்பீர்கள், தலைவர்  ரவிகிரண் “சுனாத வினோதினி” மற்றும் பூர்வி கல்யாணி ஆகிய ராகங்களை  கலந்து  நரேந்திர மோதினியை உருவாக்கி உள்ளார். அனேகமாக அவர் “வினோதினி” , “மோதினி” உள்ள மோனை ஒற்றுமைக்காக  தேர்ந்து எடுத்து இருக்கலாம்.  இது  நமக்கு ஒரு பாடம். 

ஆர்வமுள்ள இசைக்கலைஞர்களுக்கான சில குறிப்புகளை  இங்கே கொடுத்து உள்ளேன் .   (Copyright  பற்றி கவலை வேண்டாம்.   நீங்கள் அகாடமியில் பாடும் போது  என்னை நினைத்துக் கொண்டால் போதுமானது)

முதலில் அமித் ஷாவில் இருந்து தொடங்கலாம்.   ராகத்தின் பெயர் அமித் ஷாலினி,  இல்லாவிடில்  அமித் ஷாமா.   நீங்கள் சாமா  ராகத்தில் இருந்து  (சாமா = ஷாமா) எடுத்து ஒரு ராகத்தை உருவாக்கவும். 

நாம்  நமது திராவிட தலைவர்களை மறந்து விடக்  கூடாது.  தமிழக – மன்னிக்கவும் – தமிழ் நாட்டு முதல்வர் பெயரில்  அமைந்த ராகம் M.K.ஸ்டாலக  பைரவி – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பெருமையை உலகத்திற்கு பறை சற்றும். நீங்கள் சாலக  பைரவி ராகத்தை  கொஞ்சம் மாற்றினால் போதுமானது.

நடை மன்னன்  ராகுல் பெயரில்  நாம்  ராகுல பிரியா ராகத்தை  உருவாக்கலாம்.   ருத்ர பிரியா என்று ஒரு ராகம் நாம் காப்பிய அடிக்க – மன்னிக்கவும் “insprirationஉக்காக எடுத்துக்கொள்ள இருக்கிறது.

ஒரு அரசியல் வாதியின்  பெயரில் ஏற்கனவே ஒரு ராகம் இருக்கிறது. அந்த அதிர்ஷ்டசாலி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஏற்கனவே “நிர்மலாங்கி” என்ற ராகம் உள்ளது. (அட – நிஜமாகத் தான்.  30 மேள கர்த்தா நாகா  நந்தினி ஜன்யம் – ஸ் ரி ம ப த ஸ்  – ஸ் நீ த ப ம க ரி ஸ்).  

அந்த வரிசையில் அடுத்து  வருபவர்  இளைய  தலைமுறையினரின் வழி காட்டி  திரு  உதய  நிதி அவர்கள்.  கர்நாடக இசையில்  ஏற்கனவே கோலோச்சும்  உதய ரவி சந்திரிகா ராகம்,   திரு உதய நிதிக்கு பெருமை சேர்க்கும் என்பதில்  ஐயமே இல்லை.   சுத்த  தன்யாசி ராகத்தின் இன்னொரு பெயர்  தான்  உதய  ரவி சந்திரிகா.   இன்னும் வேண்டுமானால்  ராகத்தின்  பெயரை கூட கொஞ்சம் தமிழ் படுத்திக்க கொள்ளலாம்.    இதோ  ஒரு புதிய  பெயர் “உதய சூரிய  நிலா ” ராகம். (என்னது?  உதய நிதி என்பதே தமிழ் பெயர் இல்லையா?  அதை பற்றி நாம் கேட்க கூடாது ).  

சஷி தரூர் தலைப்புச் செய்திகளை உருவாக்கி, காங்கிரஸ் தலைமைக்கு தீவிரமாக சவால் விடுகிறார். அவர் நிச்சயமாக “சஷி தரூரிணி” ராகத்திற்கு தகுதியானவர். அவர் ஒரு தனித்துவமான அரசியல்வாதி என்பதால், நான் எந்த கூட்டணி ராகங்களையும் முன்வைக்கவில்லை.

கர்நாடக இசைக்கலைஞர்கள் தங்கள் அரசியல் விருப்பங்களில்  அடிப்படையில் தங்கள் படைப்பாற்றலை வெளிக்கொணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.  டிசம்பர் சீசனில் தீம் (theme ) கச்சேரிகள் இப்போது  நிறைய நடக்கின்றன. அடுத்த  டிசம்பர் சீனில் பிஜேபி தீம், காங்கிரஸ் தீம், திமுக தீம் போன்ற கருப்பொருள் கச்சேரிகள் நடைபெறலாம். நிச்சயமாக, உங்களுக்குப் பிடித்த தலைவர்களின் ராகத்தில் RTPயைச் சேர்க்கவும். ஆனால் ஒரு எச்சரிக்கை.  இப்போதைய ட்ரெண்ட் ஒரே வரியில் இரண்டு ராகங்களை  பாடுவது த்வி-ராக பல்லவி என்ற பெயரில்.  நீங்கள் ஒரு த்வி-ராக  RTPக்கு திட்டமிடுகிறீர்கள் என்றால் கவனமாக இருங்கள். தயவு செய்து நரேந்திர மோதினியையும் பிரியதர்ஷினியையும் கலந்து  விடாதீர்கள்.

One Reply to “அமித் ஷாலினியும் நரேந்திர மோதினியும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.