தமிழாக்கம்: நாகரத்தினம் கிருஷ்ணா

ஒருபக்கம் எனது ஆதரவாளர்களின் கூட்டம் அதிகரிக்க, இன்னொருபக்கம் அதற்கிணையாக எனது எதிரிகளின் எண்ணிக்கையும் பெருகியது. எனது எதிரிகளில் மிகவும் ஆபத்தான ஆசாமி, அரேபியர் ரோமானியர் கலப்பினத்தைச் சேர்ந்தவன், பெயர் லூசியஸ் குயிட்டஸ்(Lusius Quietus). டேசியர்களுடன் நாங்கள் இரண்டாவதுமுறை போரிட்டபோது அவனுடைய நுமிடியன் (Numides) படைமுக்கிய பங்கு வகித்தது, மேலும் எங்கள் ஆசியயுத்தம் கொடியதொரு யுத்தமாகத் தள்ளப்பட இப்ப்படையே காரணம். ஒட்டுமொத்தமாக அம்மனிதனை வெறுத்தேன், அப்படியொரு வடிவத்திற்கு சொந்தக்காரன்: கர்வத்தின் சாட்சியமாக, காற்றில் பறந்தவண்ணம் இருக்கிற வெள்ளைத் துவாலையை உடலில் சுற்றியிருப்பான், அதனைப் பொன்னால்செய்த கயிற்றைக்கொண்டு இறுக்கிக் கட்டியிருப்பான், அநாகரீகமானதொரு ஆடம்பரம் உருவம், ஆணவமும், பாசாங்கும் கலந்த விழிகள், தோற்றவர்களையும் சரணடைந்த மனிதர்களையும் நம்பமுடியாத அளவிற்கு கொடுமை படுத்துகிற பேர்வழி. இராணுவத்தில் பல பிரிவுகள் அதற்கேற்ப பல தலைமைகள், இதனால் உள்ளுக்குள் இவர்களுக்கிடையே நிகழ்ந்த மோதல்களில் பலர் மாண்டனர், எஞ்சியிருந்தவர்கள் தங்கள் அதிகாரத்தை முடிந்த அளவிற்குப் பலப்படுத்திக் கொண்டிருந்தனர். இந்நிலையில் குறிப்பாக பால்மா (Palma) என்பவனின் அவநம்பிக்கைக்கும் செல்சஸ்(Celsus) என்பவனின் வெறுப்புக்கும் கூடுதலாக ஆளானபோதும், அதிர்ஷ்ட்டவசமாக, அரசாங்கத்தில் எனதிருப்பு அசைக்க முடியாததாக இருந்தது. பேரரசர் தனது போர் திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததால், குடிமுறை நிர்வாகத்தை முழுக்கமுழுக்க நான் சுமக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் தங்களைக் காட்டிலும் எனக்கு முக்கியத்துவம்கொடுத்து, என்னை நேசித்த தன்னடக்கமிக்க உன்னதமான ஒருசில நண்பர்கள் இருக்கவேசெய்தனர், இவர்கள் தங்கள் திறமையினாலும், பிரச்சனைகள் குறித்த அறிவினாலும் எனதிடத்திலிருந்து செயல்பட்டு குடிமுறை நிருவாக சுமையைக் குறைக்க உதவினார்கள். பேரரசர் நம்பிக்கை கொண்டிருந்த நெரேஷியஸ் பிரிஸ்கஸ்(Neratius Priscus), ஒவ்வொரு நாளும் தாம் தேர்ச்சிபெற்றிருந்த சட்டஇயல் பிரச்சனைகளில் கூடுதலாக கவனம் செலுத்தி திருப்தியடைந்தார். அத்தியானுஸ் தமது வாழ்க்கையை எனக்கான சேவைக்கென ஒதுக்கி, அதற்கான திட்டமிடல்களுடன் வாழ்ந்தார்; ‘புளோட்டினா’வுடைய ஒத்துழைப்பை பெறுவது எளிதானதாக இல்லை. போருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு, நான் சிரியா ஆளுநராக பதவி உயர்வு பெற்றுச் சென்றேன், இப்பொறுப்புடன் பின்னர் லெகாத்தூஸ் (legatus)47 என நாம் அழைக்கிற இராணுவத் தலைமை, கூடுதல் பொறுப்பையும் ஏற்றேன். நம்முடைய இராணுவத் தளங்களை ஒழுங்குசெய்து நிர்வகிக்கும் பணி, தான் தோன்றித்தனமாக செயல்படுகிறதென நான் கருதிய இராணுவத் துறையைச் சீரமைக்கும் வேலை, சிலகாலம் இப்பொறுப்பை ஏற்கத் தயங்கி பின்னர் சம்மதிக்க இருகாரணங்கள் : முதலாவதாக இதனை மறுத்தல் என்பது, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு உதவக்கூடிய எனது வழித்தடங்களை மூடுவதாகும், இரண்டாவதாக இப்பணியில் அனைத்தையும் சாதுர்யமாக கையாளும் வாய்ப்புகள் இருந்தன, அவற்றை இழக்கவும் நான் தயாரில்லை.
உரோமாபுரி பெரிய பொருளாதாரமந்தத்தைச் சந்திப்பதற்கு சிலவருடங்களுக்கு முன்பாக, நானொரு தீர்மானத்திற்கு வந்திருந்தேன், என்னுடைய எதிரிகள் என்னைபற்றி நினைக்கிறபோது, ‘நான் எதற்கும் கவலைபடாதவன்’ என்றொரு எண்ணத்தை தரவேண்டும் என்பதுதான் அம்முடிவு. ஒருவகையில் இம்முடிவின் ஒருபகுதி என்னுடைய எதிரிகளின் அனைத்து தாக்குதல்களையும் தவிர்க்க உதவும் என்ற நம்பிக்கையில், நன்கு யோசித்து எடுத்தது. ஒரு சிலமாதங்களைக் கிரேக்கத்தில் கழிக்கலாமென சென்றிருந்தேன். இப்யணத்திற்கு வெளிப்படையாக அரசியல் காரணங்களென்று எதுவுமில்லை. பதிலாக இன்பச்சுற்றுலா என்றோ கல்விச்சுற்றுலா என்றோ கூற முடியும். பயணமுடிவில் கலை வேலைப்பாடுமிக்க கோப்பைகள், புளோட்டினாவுடன் பகிர்ந்துகொண்ட நூல்கள் ஆகியவற்றை கொண்டுவர முடிந்தது. பயணத்தின்போது உத்தியோகபூர்வ அனைத்து மரியாதைகளையும் எனக்குக் கிடைத்தன. குறிப்பாக ஏதன்ஸ்நகர மாஜிஸ்ரேட் பதவியான ‘ஆர்கோன்’(Archon)ஐ எனக்களித்து கௌவுரவித்தபோது, பூரணமகிழ்ச்சி. பின்னர் வசந்தகாலத்தில் அன்னிமோன் பூத்த மலைஅடிவாரங்களில் நடைபயணம் மேற்கொண்டும், வெற்று பளிங்குகற்களுடன உறவாடியும் சில மாதங்களைச் சந்தோஷமாக செலவிட்டேன். தீப்சின் புனித இணையர் படையைச்(Le Bataillon Sacré de Thèbes)48 சேர்ந்த பழைய நண்பர்கள் இருவரின்பொருட்டு துக்கம் அனுசரிக்க சேரொனியா(Chéronée) செல்லவேண்டியிருந்தது, அப்போது இரண்டு நாட்கள் வரலாற்றறிஞர் புளூட்டாக்(Plutarque)விருந்தினராக தங்கினேன். எனக்கென்று புனித இணையர் படையொன்றிருந்தது. ஆனால் பொதுவில் வாழ்க்கையைக் காட்டிலும் வரலாறு என்னைக் கூடுதலாக பாதித்திருக்கிறது. நான் ஆர்கேடியாவில் (Arcadie)வேட்டையாடினேன்; தெல்பியில் (Delphes)பிரார்த்தனை செய்தேன். யூரோடாஸ்(l’Eurotas) நதிக்கரையில் உள்ள ஸ்பார்த்தா(Sparta), நகரில் இடையர்கள் சிலர் மிகவும் பழமையானதொரு புல்லாங்குழல் இசையை எனக்குக் கற்றுத்தந்தந்தனர், ஒரு விசித்திரமான பறவைப் பாடுவதைப் போல அது ஒலித்தது. மேகரா அருகே பெண் விவசாயி ஒருத்தியின் திருமணம், இரவு முழுவதும் நீடித்தது; நானும் எனது தோழர்களும் விமர்சனங்களைப் பொருட்படுத்தாது நடனத்தில் கலந்துகொண்டோம், உரோம் நகரிலிருந்த கடுமையான கட்டுப்பாடுகள், இவைபோன்றவற்றில் கலந்துகொள்ள என்னை அனுமதிப்பதில்லை.
கான்சல் மம்மியஸ் (Mummius) இடிபாடுகளாக விட்டுச்சென்ற கொரிந்து(Corinth) சுவர்களும், நீரோவின் கிரேக்கப்பயணத்தில் சிலைகள் பல கொள்ளையடிக்கப்பட்டு அதன் காரணமாக வெறிச்சோடி, கடுமையான விமர்சனத்திற்குள்ளான புனிததலங்களும், இதுபோல பலவும் இன்றுங்கூட நாமிழைத்த குற்றங்களின் தடயங்களாக கிரேக்க நாடெங்கும் உள்ளன. ஏழ்மையில் வாடியபோதும் எண்ணத்தை ஈர்க்கும் செவ்வியும், தெளிந்த மதிநுட்பமும், பெருமைக்குரிய ஞானமும் கொண்ட பூமியாக கிரேக்கம் திகழ்வதைக் கண்டேன். இன்றுவரை அதில் எந்த மாற்றமுமில்லை, நாவண்மை மிக்க ஈசேயுஸ்(Isaus) ஒரு மாணவராக சூடான பதத்தில் தேனையும், உப்பையும், குங்கிலியத்தையும் முதன்முதலாக நுகர்ந்தபோது எப்படி இருந்ததோ, அப்படியே இன்றைக்கும் கிரேக்கம் உள்ளது, பலெஸ்த்திரினா மணல்கூட தனது பொன் நிறத்தை இழக்கவில்லை. மொத்தத்தில் பல நூற்றாண்டுகளாக எவ்வித மாற்றமுமில்லை. ஃபிடியாஸ்(Phdias), சாக்ரடீஸ் இருவரும் இன்றில்லை, அவர்களைப்போல செயல்படும் இன்றைய இளைஞர்களிடமும் ஷர்மிட்டுகளிடம் (Charmides) காணும் அதே சிறப்பு அம்சங்கள். கிரேக்கர்கள் மேதைமைக்கென்று பிரத்தியேக தருக்கவாத சிந்தனைகள் இருக்கின்றன, அவற்றினை முற்றுமுழுதாக எட்டுவதற்கு கிரேக்கமூளை முயற்சிப்பதில்லையென்று சிற்சில சமயங்களில் நான் நினப்பதுண்டு. இன்றைக்கும் அறுவடைக்கென்று விளைச்சல்கள் அங்கு காத்திருக்கின்றன. சூரியன் தயவில் கதிர்முற்றி அறுப்புவேலையும் முடிந்தது என்கிறபோதும், இந்த அழகியபூமி வசமுள்ள தானியத்தை முன்னிட்டு எலூசினியன் உறுதிமொழியோடு(la promesse éleusinienne)49 ஒப்பிடுகையில் இவைகளெல்லாம் அற்பம். எனது காட்டுமிராண்டி எதிரிகளான சார்மேத்தியர்களிடம்கூட முழுமையான கிரேக்கர் குவளைகளையும், அப்பல்லோ உருவம் அலங்கரிக்கும் கண்ணாடி ஒன்றையும், அதில் பனிபொழியும் காலத்தில் பளபளப்புடன் தெரிகிற சூரியனைப்போல ஒளிரும் கிரேக்கத்தையும் பார்த்திருக்கிறேன். காட்டுமிராண்டி மனிதர்களுக்குக் கிரேக்கப் பண்பாட்டைபோதிப்பது, உரோமாபுரியை கிரேக்கமாக உருமாற்றுவது, ஒரு நாள் கொடூரத்திலிருந்தும், அரூபத்திலிருந்தும், முடக்கநிலையிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளவும், அதேவேளை ஒரு முறைமைக்கான விளக்கத்தையும், அரசியல் கொள்கையையும், அழகியலையும் தரவல்ல ஒரே பண்பாடான கிரேக்க கலாச்சாரத்தை மெல்ல இவ்வுலகின்மீது திணிப்பதற்குரிய சாத்தியமிருப்பதை நான் ஊகித்திருந்தேன். கிரேக்கர்களுக்கென்று இலேசாக சிறிது அகந்தையுண்டு, அவர்களிடத்தில் மிகத் தீவிரமாக மதிப்பும் மரியாதையும் ஏற்படுகிறபோதெல்லாம், என்னிடத்திலும் அக்குணம் இயல்பாக தவிர்க்கமுடியாததுபோல இருக்கிறது, எனினும் அதனால் எனக்கு எவ்வித தீங்குமில்லை. கிரேக்கர்களிடமிருந்து என்னை வேறுபடுத்திக் காட்ட எத்தனை நற்பண்புகள் என்னிடமிருந்தாலும், கிரேக்க ஏஜினா தீவைச்(Aegean) சேர்ந்த ஒரு மீகாமனைவிட நுட்பமானவனாகவோ அல்லது அகோரா(Agora) மூலிகை விற்பனையாளரை காட்டிலும் புத்திசாலியாகவோ நான் ஒருபோதும் இருக்கமாட்டேன் என்பது நிச்சயம். இப்பெருமைமிக்க இனத்தின் சற்றே அகந்தையான வாஞ்சையை கோபப்படாமல் ஏற்றுக்கொண்டேன்; அன்புக்குரியவர்களுக்கு நான் எப்பொழுதும் விட்டுக்கொடுக்கும் எனது சிறப்புரிமைகளை ஒட்டுமொத்த மக்களுக்கும் வழங்கினேன். ஆனால் கிரேக்கர்களுக்குத் தங்கள் நற்பணியைத் தொடரவும், முழுமைப்படுத்தவும் போதுமான அவகாசம்வேண்டும், அதற்கு சில நூற்றாண்டுகாலம் அவர்களுக்கு, அமைதி தேவை, காரணம் அமைதியே, சாந்தமான ஓய்வையும், விவேகமான சுதந்திரத்தையும் அனுமதிக்கவல்லது. கிரேக்கத்தின் எஜமானர்கள்போல நாம் நடந்துகொண்டதால், தங்கள் பாதுகாவலர்களாக நாமிருப்போமென அவர்கள் நம்பினார்கள். நிராயுதபாணியாக நிற்கிற இக்கிரேக்க கடவுளை பாதுகாப்பதென்று நானும் உறுதிபூண்டேன்.
சிரியாவின் ஆளுநராக ஒருவருடகாலம் பணியில்இருந்தபோது, அங்கே அந்தியோக்கியா(Antiorche)என்ற நகரில் திராயான் என்னுடன் வந்து இணைந்துகொண்டார். ஆர்மீனிய படையெடுப்புக்குரிய இறுதிகட்ட ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்த நேரமது, அதனைப் பார்வையிட அவர் வந்திருந்தார், மனதில் பார்த்தியர்கள் மீதான தாக்குதல் குறித்து எண்ணமிருந்தால் அர்மீனிய படையெடுப்பை ஒரு முன்னோட்டமாக அவர் கருதினார். அவருடன் எப்போதும்போல அவருடைய துணைவி புளோட்டினா, கரிசனமிக்க எனது மாமியார் ‘மட்டீடியா'(Matidia) ஆகியோரும் வந்திருந்தனர். திராயான் சகோதரி மகளான அப்பெண்மணி, இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகவே திராயான் தம்பதியருடன் பயணித்து, தலைமைப் பணிப்பெண்ணாக உடனிருந்துக் கவனித்துக்கொள்கிறவர். எனது முன்னாள் எதிரிகளான செல்சஸ், பால்மா, நிக்ரினஸ் மூவரும் தொடர்ந்து நிர்வாகத்தில் தலைமை பொறுப்புகளில் இருந்துகொண்டு அதிகாரம் செலுத்திக்கொண்டிருந்த நேரமது. இங்கே நாங்கள் படையெடுப்புக்கான ஆயததங்களில் ஈடுபட்டிருக்க, இத்தருணத்தை எதிர்பார்த்தவர்களாக பலரும் அங்கே அரண்மனையில் குவிந்திருந்தனர். மீண்டும் அரசவையில் சூழ்ச்சிகளும் சதிகளும் புத்துணர்வுபெற்ற காலமது. போர் எனும் பகடை ஆட்டத்தின் தாயக் கட்டைகள் உருட்டப்படுவதற்கு முன்பே அரசவையில் பணயம்வைத்து விளையாட ஆரம்பித்தார்கள்.
எங்கள் படையும் அதிகநாட்கள் காத்திராமல் உடனடியாக வடதிசை நோக்கி படையெடுத்துச் சென்றது. வீரர்கள் மட்டுமல்ல அரசாங்கத்தின் முக்கிய அதிகாரத்தில் பெரும் கனவுகளுடன் இருந்தவர்கள், நடக்கவிருக்கும் போரில், இவர்களால் எவ்விதப் பயனுமில்லை என்றிருந்த மனிதர்கள் உட்பட ஒரு பெருங்கூட்டமே படையுடன் சென்றது. பேரரசரும், அவருடன்சென்ற பிறரும் வெற்றி நிச்சயம் என்பதுபோல அதைக்கொண்டாட கோமஜென் (Commagène) இராச்சியத்தில் இடையில் ஒருசில நாட்கள் தங்கினார்கள். சத்தாலாவில்(Satala) கூடிய கீழைதேச சிற்றரசர்களுக்கிடையில் மன்னர் திராயானிடம் விசுவாசத்தைக் காட்டுவதில் போட்டாபோட்டி, பேரரசர் இடத்தில் நான் இருந்திருப்பின் எதிகாலம் கருதி, இவற்றை துச்சமாக மதித்திருப்பேன். லூசியஸ் குயிட்டஸ்(Lusius Quiétus) என்னுடைய எதிரிகளில் மிகவும் ஆபத்தானவன், அவனிடம் படையின் முன் வரிசைகளை வழிநடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது, மிகப்பெரிய அணிவகுப்பாக படையை நடத்திச் சென்றபோது வான் ஏரியின் (le lac de Van )கரையை அவன் ஆக்கிரமித்திருந்தான். பார்த்தியர்கள் துடைத்திருந்த மெசபடோமியாவின் வடபகுதியும், சிரமங்களின்றி இணைத்துக்கொள்ளப்பட்டது. ஆஸ்ரேன் (Osroène) மன்னர் அப்கார் (Abgar) எடெஸ்ஸா(Edesse)வில் எங்கள் படையிடம் சரணடைந்தார். இதற்கிடையில் சக்கரவர்த்தி அந்தியோக்கியா நகரிலிருந்த தமது குளிர்கால ஜாகைக்குத் திரும்பினார், பார்த்தியர்மீதான படையெடுப்பு வசந்த காலத்திற்கென ஒத்திவைத்திருந்தபோதும், அவர்களுடன் எவ்வித சமாதானத்திற்கும் இடமில்லை என்பதில் உறுதியாய் இருந்தோம். திட்டமிட்டபடியே அனைத்தும் நடந்தேறின. வெகுகாலமாக தளிப்போடப்பட்டு கடைசியில் செயல்படுத்தபட்ட இப்டையெடுப்புகள் அளித்த மகிழ்ச்சி அறுபத்திநான்கு வயதான சக்கரவர்த்திக்கு ஒருவகையான இளமையைத் திரும்ப வழங்கியதெனில் மிகையில்லை.
எனது கணிப்புகள் பொய்த்துவிடும் போலிருந்தன. யூத மற்றும் அரேபிய தரப்ப்பினர் போருக்கு விரோதமாக இருந்தனர்; மாகாணச் செலவதர்களான பெரும் நிலவுடமையாளர்கள் தங்கள் பகுதியைத் துருப்புக்கள் கடந்து செல்வதால் ஏற்படும் செலவினங்களால் எரிச்சலுற்றனர்; படையெடுப்பு காரணமாக விதிக்கப்பட்ட புதிய வரிகளை நகரங்களால் சமாளிக்க முடியவில்லை. பேரரசர் திரும்பிய மறுகணம், இவை அனைத்தையும் தெரிவிக்கின்றவகையில் பேரழிவு ஒன்று நிகழ்ந்தது: டிசம்பர் மாத நடுநிசியொன்றில் ஏற்பட்ட நிலநடுக்கம், அந்தியோக்கியாவின் கால்வாசிப் பகுதியை ஒரு சில நிமிடங்களில் நாசமாக்கியது. ஒர் உத்திரமொன்று விழுந்ததில் திராயான் காயமுற்றிருந்தார், இருந்தபோதும் பேரிடரில் காயமுற்ற பிறருக்கு உதவுவதில் அவர் காட்டிய ஆர்வம் போற்றுதலுக்குரிய அபாரமான செயல். மன்னருடன் இருந்தவர்களில் சிலரும் விபத்தில் மாண்டிருந்தனர். பூகம்பத்திற்குப் பழிசுமத்த ஆட்களைத் தேடி சிரிய மக்கள் அலைந்தனர். சக்கரவர்த்தி தனது சகிப்புத்தன்மையை சிறிது ஒதுக்கிவைக்க நினைத்ததுபோல கிறிஸ்துவர்களில் ஒர் பிரிவினரை படுகொலைச்செய்ய அனுமதித்து தவறிழைத்தார். இம் மதப்பிரிவினரின் மீது எனக்கும் பெரிதாக அனுதாபமில்லை, ஆனால் முதியவர்கள் சாட்டையால் அடியுண்டதும், குழந்தைகள் சித்திரவதைக்குள்ளான காட்சிகளும் மனதைக் கலக்கமுற செய்தன, விளைவாக மோசமான அந்தக் குளிர்காலத்தை மேலும் கொடூரமாக மாற்றியது. நிலநடுக்கத்தின் பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய பணம் இல்லை; ஆயிரக்கணக்கான வீடற்ற மக்கள் இரவில் சதுக்கங்களில் முகாமிட்டனர். சந்தேகிக்க முடியாத வகையில் ஒளிந்திருக்கும் அதிருப்தியையும், இரகசிய வெறுப்பையும் அம்மக்களிடம் குடிகொண்டிருப்பதை, அரண்மனையில் குவிந்துகிடந்த பெரிய பிரமுகர்கள் அவர்களைப் பார்வையிடும் நேரங்களில் என்னால் உணரமுடிந்தது. பேரரசரோ இப்பேரிடர் விளவுகளுக்கிடையிலும் அடுத்த படையெடுப்புக்கான ஆயத்தங்களில் இறங்கினார். டைக்ரிஸ் நதியைப் படையினர் கடக்கவேண்டும் என்பதற்காக தொங்கு பாலங்களையும், மிதவைப் பாலங்களையும் நிர்மாணிக்க ஒரு முழு காட்டையே வெட்டிசாய்க்க வேண்டிருந்தது. செனெட் அவை வரிசையாக வழங்கிய விருதுகளை பெற்று மகிழ்ந்த போதிலும், வெற்றிகளிப்புடன் தாமதமின்றி உரோமுக்கு திரும்ப பெரிதும் விரும்பினார், கீழைத்தேய வாசம் போதுமென்றிருந்தது, இவ்விஷயத்தில் சிறிதளவு தாமதத்தைகூட சகித்துக்கொள்ளும் மனநிலையில் அவரில்லை, ஆத்திரப்பட்டார்.
ஒரு காலத்தில் செலூசிட்களால்(Sellucides) கட்டப்பட்டது, நம்முடைய இந்த அரண்மனை, இதன் பரந்த மண்டபங்களெங்கும் ஆர்வ்முடன் அம்மனிதர் உலவி வந்திருக்கிறார், அவரைக் கொண்டாடுகின்ற வகையில் என் பங்கிற்கு போற்றத் தக்க வாசகங்களையும், டேசியன் யுத்தம்சார்ந்த கவச உடைகள், ஆயுதங்கள் ஆகியவற்றையும் நானும் இம்மண்டபங்களில் பொறித்திருக்கிறேன் (எனக்கு மிகவும் எரிச்சலூட்டிய பணி). ஆனால் இருபது ஆண்டுகளுக்கு முன்பாக கொலோஜ்ன் முகாமில் என்னை வரவேற்றபோது நான் கண்ட மனிதர் வேறு, அவர் இன்றில்லை. அவருடைய நற்பண்புகள் கூட காலாவதியாகிவிட்டன. அவரது சந்தோஷம் என்பது சற்று கடுமையானது, உண்மையான அன்பை அறியமுடியாமல் மறைத்த அப்பண்பு, கீழ்மையானதொரு மனப்பாங்கு. எதிலும் திடமாக இருந்த அவருடைய குணம் காலப்போக்கில் பிடிவாதமாகவும், உடனடித் தேவைகளுக்கான திறன்களாகவும், முற்றாக சிந்திக்க மறுக்கும் நடைமுறைக்கும் பழகிக்கொண்டது. பேரரசியின் மீது அவர் கொண்டிருந்த கனிவான மரியாதையும், தம்முடைய சகோதரி மகள் மட்டிடீயாவிடம் கொண்டிருந்த அளவற்ற பிரியமும், இன்று பெண்களை பற்றுகோலாக மட்டுமே அணுகும் முதுமையாக மாறியுள்ளது, எனவே இப்பெண்களின் ஆலோசனைகளை ஏற்பதில்லையென்பதில் பிடிவாதமாக இருக்கிறார். அவரது கல்லீரல் பாதிப்புகள் அரண்மணை மருத்துவர் கிரிட்டோவை கவலையடையச் செய்தது; மன்னருக்கோ அதுகுறித்த எக் கவலையுமில்லை. அவரது இன்பங்களில் ஒருபோதும் கலை பங்களிப்பதில்லை, மூப்புகாரணமாக அது மேலும் சரிந்தது. முன்பெல்லாம், படையெடுப்பின்போது நாள் முடிவுக்குவந்ததும் படைவீடுகளில், தமக்கு இணக்கமான மற்றும் அழகான இளைஞர்களுடன் வரம்புமீறிய ஒழுக்கக் கேடுகளில் முற்றாகத் தம்மை ஒப்படைத்து மகிழ்வதுண்டு, அவைகளெல்லாங்கூட இன்று முக்கியத்துவத்தை இழந்துவிட்டன. பதிலாக மது அருந்தும் விஷயத்தில் தடுமாற்றம் இருக்கிறது, அளவின்றி குடிக்கிறார், ஒழுங்கில்லை. மற்றொரு பிரச்சனை, அதிகரித்துள்ள கீழ்நிலை அலுவலர் கூட்டம், இவர்கள் தவறான மனிதர்களால் தேர்வுச்செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டவர்கள், மன்னருக்கும் எனக்குமான உரையாடலின்போது, தவறாமல் ஆஜராகி, நடந்தவற்றை எனது எனது எதிரிகளிடம் தெரிவித்தார்கள். பகற்பொழுதில், பேரரசர் எப்போதும் முக்கிய இராச்சிய நிர்வாகிகளுடன் திட்டவிவரங்களைக் குறித்து மிகத் தீவிரமான ஆலோசனையில் இருப்பார், சுதந்திரமாக எனது கருத்தைக் கூறும் தருணம் ஒருபோதும் வாய்ப்பதில்லை. பிற நேரங்களிலோ, தனிப்பட்டவகையில் உரையாட அவர் விரும்புவதில்லை, தவிர்த்தார். நுட்பங்களில் போதாமைமிகுந்த இம்மனிதருக்கு வழங்கப்பட்ட மது, அநாகரீகமான தந்திரங்களுடன் கையளிக்கப்பட்ட ஓர் ஆயுதக் குவியல். அவற்றைக் கையாளும் திறன் என்றோ முடிந்திருந்தது, அவருடைய சந்தோஷங்களில் என்னைக் கூட்டாளியாக இருக்கக்கூறி வற்புறுத்தினார். கூச்சலும், சிரிப்பும், எப்போதும் அவரிடம் நல்ல வரவேற்பைப்பெற்ற இளைஞர்களின் அர்த்தமற்ற பகடிகளும், இதுபோன்ற இன்னும்பலவும் தீவிரமான பிரச்சனைக்குரிய தருணமெல்லாம் முடிந்ததென்கிற எண்ணத்தை எனக்குத் தந்தன. அவரோ கூடுதலாக ஒரு குவளை மதுவை நான் அருந்தி, எதையாவது உளறுவேனென எதிர்பார்த்து அத்தருணத்திற்காகக் காத்திருந்தார். காட்டுமிராண்டிகளின் கோப்பைகளை ஒத்த காட்டெருதுகளின் தலைகள் அலங்கரிக்கும் மண்டபத்தில் அனைத்தும் என்னச் சூழ்ந்துகொண்டு முகத்தின் முன்பாக கைகொட்டி சிரிப்பதாக எனக்குத் தோன்றியது. அடுத்தடுத்து வரிசையாக மது நிரம்பிய ஜாடிகள்; அங்குமிங்குமாக குடிபோதையில் ஒலிக்கும் ஒரு பாடல், அல்லது துடுக்குத்தனமும் வசீகரமும் கலந்த ஒரு பணியாள் ஒருவனின் சிரிப்பு என்றிருக்க, அங்கு சக்கரவர்த்தி நடுங்குவது அதிகரித்துவரும் தமது கையை மேசையில் அழுந்த ஊன்றி, போதையில் கட்டுண்டு சிறிது போலிமையுடன், தொலைதூர ஆசிய பயணங்களில் தம்மைத் தொலைத்து, அவைபற்றிய கனவுகளில் மூழ்கியிருப்பார்.
துரதிஷ்டவசமாக இதுபோன்ற கனவுகள் அழகாக இருந்தன. முன்பொருமுறை இப்படிப்பட்ட கனவுகளை காண நேர்ந்ததன் விளைவாகத்தான் அனைத்தையும் மறந்து, ஆசியாவைக் குறிவைத்து கக்கேசியாவுக்கு அப்பால் புவியின் வடதிசையில் நாங்கள் பயணிக்க வேண்டியிருந்தது. வயோதிகரான மன்னரும், போர்குறித்த வசீகரத்தில் மயங்கி தன்னை பறிகொடுத்தார், இவருக்கு முன்பு அலெக்சாண்டர், இதுபோன்றதொரு இக்கட்டைச் சந்தித்தவர், இவைபோன்ற கனவுகளை நனவாக்கியபின், முப்பது வயதில் அவர் மாண்டார். ஆனால் இன்றுங்கூட இதுபோன்ற பெரிய பெரிய திட்டமிடல்களில் பலநேரங்களில் மோசமான ஆபத்தை அழைத்துவருவது, அவர்களுடைய விவேகம். அபத்தத்தை நியாயப்படுத்தவும், சாத்தியமற்றதை நிறைவேற்றவும் நடைமுறை காரணங்கள் வழக்கம்போல ஏராளமாக இருந்தன. பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து எங்களை ஆட்டுவிக்கிற கீழ்த்திசை நாடுகளின் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென நாம் நினைப்பதும் இயற்கை. இந்தியாவுடனான பண்டக வர்த்தகமும், விநோதமான தேசத்தோடு நடந்த பட்டு வணிகமும், யூத வணிகர்களையும், ஏற்றுமதிசெய்த அரபு நாட்டவரையும் முற்றிலும் நம்பி இருந்தன, காரணம் இவர்களால் வரிச்சுமைகளின்றி இலவசமாக பார்த்தியர் துறைமுகங்களையும், வழித்தடங்களையும் உபயோகிக்க முடிந்தது. அடுத்து, பரவலாக சிதறிக் கிடக்கும் அர்சிது (Arsacide) மரபுவழியி வந்த பார்த்தியர் வீரர்களை முற்றாக ஒழித்தோமெனில் உலகின் வளமான பகுதிகள் எங்கள் கைவசம் என்றாகும், விளைவாக ஒருங்கிணைந்த ஆசியா, வருங்காலத்தில் உரோமப் பேரரசுக்குள் அடங்கிய மற்றுமொரு மாகாணமாக உருவாகும் வாய்ப்பு உள்ளது. அப்போது எகிப்தில் உள்ள அலெக்ஸாண்டிரியா துறைமுகம் மட்டுமே இந்தியாவுக்கான எங்கள் தொடர்புக்கு உதவும் என்கிற நிலையில் இருந்தது, காரணம் பார்த்தியர்களின் தலையீடு அங்கில்லை. ஆனால் அங்கு யூத சமூகத்தினர் தொடர்ந்து பலகோரிக்கைகளை முன்வைத்து பிரச்சனைகள் கொடுத்துவந்தனர். சக்கர்வர்த்தி திராயான் மேற்கொண்ட படையெடுப்புகளில் கிடைத்த வெற்றி, ஐயத்திற்கிடமான இந்நகரத்தை நாங்கள் புறக்கணிக்க காரணமானது. ஆனால் இதுமட்டுமல்ல நான் புறக்கணிக்க மேலும் பல காரணங்கள் உண்டு: புத்திசாலித்தனமாக செய்துகொண்ட வணிக ஒப்பந்தங்கள் அளித்த மன நிறைவு, கிரேக்கத்தில் இரண்டாவது பெருநகரத்தை செங்கடலில் உருவாக்குவதன் மூலம் அலெக்ஸாண்ட்ரியாவின் பங்கைக் குறைக்க முடியுமென்கிற எனது நம்பிக்கை போன்றவை அவற்றில் சில. இதனைப் பின்னர் ஆன்டினோபோலிஸ்(Antinoöpolis) நகரை உருவாக்கி அதனை உறுதிசெய்தேன். ஆசிநாடுகள் எவ்வளவு சிக்கலான உலகமென்பது புரிய ஆரம்பித்தது. டேசியர்களை முற்றாக அழிப்பதில் வெற்றியடைந்த எங்கள் எளிய திட்டங்கள் மிகவும் வளமான பல்வகையான மக்கள் வாழ்ந்துவரும் இப்பகுதிக்குப் பொருந்திவரவில்லை, தவிர உலகின் வளமும், இதனைச் சார்ந்திருந்தது. எங்களுக்கென்று அபாயங்களும் அருவக் காட்சிகளும், புதைந்துபோக சாத்தியமுள்ள மணல்வெளிகளும், முடிவின்றி நீளும் சாலைகளும் யூப்ரடீஸுக்கு அப்பால், காத்திருந்தன. சிறிதளவு பின்னடைவுபோதும், நம்முடைய கீர்த்தியை ஆட்டம் காணச் செய்து, பல பேரழிவுகள் தொடர்வதற்கு வழிவகுக்கும். இப்பிரச்சனையில் வெற்றி பெறுவது மட்டுமே நோக்கமல்ல அவ்வெற்றியை நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்வது அவசியமென்கிற முயற்சியில் நம்முடைய படையினர் களைத்துப் போகக்கூடும் என்கிற நிலைமை. நாம் இவற்றையெல்லாம் ஏற்கனவே முயன்றிருக்கிறோம்: ஹெலெனிஸத்தை(கிரேக்கபண்பாடு) ஓரளவு தெரிந்திருந்த காட்டுமிராண்டிகளின் அரசனொருவன் ஒருமுறை நம்மை யுத்தத்தில் ஜெயித்திருந்தான், அன்று மாலை யூரிப்பிடீஸ்(Euripides)50 எழுதிய பாகெண்டி (Bacchantes) துன்பவியல் நாடகம் நிகழ்த்தது, ஒரு காட்சியில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு உரோமாபுரி பழைய தலைவர்களின் ஒருவரான க்ராஸஸ்(Crassus) தலை பந்தாடப்படும், அதனை திகிலுடன் நினைவுபடுத்திக் கொண்டேன். இப்ழைய தோல்விக்கு வஞ்சம்தீர்த்துகொள்ள திராயான் விரும்பினார், போரில் வெற்றிபெற்றாலும், அப்படியொரு சம்பவம் மீண்டும் நிகழக்கூடாதென்பது எனது கனவு. நிகழ்கால கூறுகளைப் பற்றியத் தகவல்களை நன்கு அறியமுடியுமெனில் எதிர்காலத்தை கணிப்பதில் நமக்கு பிரச்சனைகள் இருபதில்லை, அந்தவகையில் மிகவும் துல்லியமாக சிலவற்றை நான் யூகித்திருந்தேன். ஒரு சில பயனற்ற வெற்றிகள், நமது துருப்புகளை மிகவும் எச்சரிக்கையுடன் காக்கவேவேண்டிய எல்லைப் பகுதிகளிலிருந்து வெகுதூரம் அழைத்துச்சென்றது, இறக்கும் சக்கரவர்த்தியை கீர்த்திகளால் போர்த்த முடிந்தது, ஆனால் உயிர்வாழவேண்டிய நாமோ எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கவும், எல்லா தீமைகளையும் களையவும் பொறுப்பேற்க வேண்டியிருந்தது
தொடரும்…
———————————————————–
பிற் குறிப்புகள் …..
47. லெகாத்தூஸ் (Legatus) உரோமுக்கு வெளியே ஒரு பணியை நிறைவேற்ற குறிப்பாக இராணுவத்தை வழிநடத்தும் பொறுப்பிற்கு செனட்டோ, மாஜிஸ்ட்ரேட்டுகளோ, சக்கரவர்த்தியோ நியமிக்கும் ஒரு தலைமை.
48. தீப்சின் புனித இணையர் (Le Bataillon sacré de Thèbes) பண்டைய கிரேக்கத்தில் 150 வீரர்களைக்கொண்ட ஒரு படைப்பிரிவு.
49. எலூசியன் புதிர் அல்லது மர்மம்(Mystère d’Eleusis) : புராதன கிரேக்கத்தில் எலூசியன் விசாய சமூகத்தினரிடையே நிலவிவந்த கர்ணபரம்பரைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.
50. யூரிப்பிடீடீஸ் (Euripides) (B.c 480 -406)பண்டைய கிரேக்க துன்பவியல் நாடவியலாளர்
—————————————————————————————————————