வட்டிகொண்ட விசாலாக்ஷி-2

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

நிஷ்காம யோகி நாவல் – 2

பெண்களுக்கு வீடே வாழ்க்கை. ஆண்களுக்கு சமுதாயமே வாழ்க்கை. இப்படிப்பட்ட அமைப்பில் பொது வாழ்க்கை, இலக்கியம், இயக்கங்கள் போன்றவை  ஆண்களுடையதாகவே உள்ளது. அந்தத் துறைகளில் பெண்களை தேடித்தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. பெண்கள் வீட்டு வாயிலைத் தாண்டி சமுதாய வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்வது சாதாரணமான விஷயம் அல்ல. அவளை வாசற்படியைத் தாண்ட வைப்பதற்காக சமூக சீர்திருத்த இயக்கங்கள் ஏற்பட்டன. பெண்களுக்குக் கல்வியறிவு தேவை என்று பிரச்சாரம் செய்யப்பட்டாலும் கிராமப்  பள்ளிகளில் நான்காவது, ஐந்தாவது வகுப்பு வரை பெண்கள் படிப்பதே மிக அதிகம். திருமணத்திற்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. 

பெண் கல்வியின் மீது சற்று சிரத்தையும் ஆர்வமும் உள்ளவர்கள் பெண்ணுக்குத்   திருமணம் ஆகிக் குடித்தனம் செய்ய அனுப்புவதற்குள் வீட்டில் தனியாக டியூஷன் ஏற்பாடு செய்து படிப்பு கற்றுத் தருகிறார்கள். ஆனால் குடும்பம் நடத்தத் தொடங்கி விட்டால் அந்த பெண்களின் வாழ்க்கை குடும்பத்திற்குள் மட்டுமே அடங்கி விடுவதை சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது. இந்தச் சூழ்நிலையில் சுதந்திரப் போராட்டத்திற்கோ அல்லது கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கோ பெண்கள் வருவது எவ்வாறு நடந்தது? 

மக்கள் தொகையில் சரிபாதி உள்ள பெண்கள் இல்லாமல் எந்த இயக்கமும் பொருளுடையதாகாது என்ற புரிதலோடு கட்சிகளும் தலைமையும் பெண்களின் பங்கேற்பை உற்சாகப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் எடுத்துக் கொண்ட முறையாலும், கட்சி அங்கத்தினர்களாக உள்ள ஆண்களின் மீது அவரவர் வீட்டுப்   பெண்களையும் இயக்கத்தில் சேர்ந்து பணி புரியும்படிச் செய்யும் பொறுப்பு சுமத்தப்பட்டதாலுமே அது சாத்தியமானது. இயக்கத்தில் பணிபுரியும் ஆண்கள் உள்ள வீடுகளிலிருந்து அதிகப்படியான பெண்கள் இயக்கத்தில் சேர்வது என்பது இதனையே குறிக்கிறது.

இந்தப் பின்னணியில் நிஷ்காம யோகி நாலில் ஒருபுறம் சுதந்திரப் போராட்டத்திலும் மறுபுறம் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் பெண்கள் நுழைந்த விதத்தையும் அவர்களிடம் இருந்த பன்முகத்தன்மையையும் அவர்களுக்கிருந்த எல்லைகளையும் சித்திரிக்கிறார் வட்டிகொண்ட விசாலாக்ஷி. 

ஒருவிதத்தில் பார்த்தால் இது பெண்களின் கண்ணோட்டத்திலிருந்து ஜனநாயக இயக்கத்தில் நிலவிய ஆணாதிக்க இயல்பை விமர்சனத்திற்கு உள்ளாக்குவதே.   பெண்ணிய அரசியல் சர்ச்சைகளும் போராட்டங்களும் நடந்து, புரிதல் அதிகமான கடந்த நாற்பத்தைந்து ஆண்டு கால வரலாற்றில் நமக்கு இது புதிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் அதற்கு ஒன்றிரண்டு தசாப்தங்களுக்கு முன்பே சொந்த அனுபவத்திலிருந்து ஒரு பெண், நாவல் வடிவத்தில் செய்த அதிகார பூர்வமான விமர்சனமாக இதற்கு வரலாற்று முக்கியத்துவம் உள்ளது.

இந்த நாவலில் காங்கிரஸ் தலைமையில் சுதந்திரப் போராட்ட அரசியலில் பங்கு பெற்ற பாப்பாயம்மாவும் சிட்டம்மாவும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின் கீழ்  மகளிர் அமைப்பிலும் இலக்கிய அமைப்பிலும் பங்கு பெற்ற லைலாவும்  இருக்கிறார்கள். 

மூன்று பேரும் தெலுங்கு, ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளைக் கற்றவர்கள். பாப்பாயம்மா அனைவரிலும் பெரியவள். திருமணம் ஆகி குடும்பம் நடத்துகின்ற பெண். சிட்டம்மா திருமணம் ஆகி சம்சார வாழ்க்கையை இழந்து பிறந்து வீட்டிற்கு வந்த பெண். அவளுடைய தங்கை லைலா.

பாப்பாயம்மாவை சுதந்திரப் போராட்ட அரசியலில் நுழைத்தவன் அவளுடைய கணவன் அச்சய்யா. ஆனால் அவன் காங்கிரஸ் கட்சி அரசியலில் இருந்தவன்   அல்ல. கதர் கட்டுவதில் தொடங்கி அங்கேயே நின்று விட்டாலும், தன் மனைவியை மறியல் போராட்டங்களில் பங்கு பெற்று சிறை செல்வதற்கு உற்சாகப்படுத்துகிறான்.

ஒருமுறை சிறைக்கு சென்று வந்தபின் பாப்பாயம்மாவுக்கு அரசியலே வாழ்க்கையாகிவிட்டது. முதலில் கதர் கட்டுவதற்கு மறுத்து, கணவனுடைய அதிகாரத்திற்கும் கட்டளைக்கும் தலைகுனிந்து கதர் உடுத்திய பாப்பாயம்மா சுதந்திரம் கிடைக்கும் வரை காங்கிரஸை விடாமல் பிடித்துக் கொண்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றது எவ்வாறு சாத்தியமானது? அதற்காக அவள் பட்ட  கஷ்டங்கள் என்ன? 

பெண்களின் வாழ்க்கை கணவனின் அதிகாரத்தின் மீதும் அவனுடைய கருணையின் மீது ஆதாரப்பட்டு உள்ளது என்பது எத்தனை சமுதாய உண்மையோ அது குறித்துப் பெண்கள் அதிருப்தியோடு கொதித்து எழுவதும் கூட அத்தனை உண்மையே என்று கூறுவதற்கு பாப்பாயம்மாவின் வாழ்க்கையே ஒரு எடுத்துகாட்டு. 

அவள் எந்த புடவை உடுத்த வேண்டும் என்பதை முடிவெடுப்பது அவளுடைய கணவன் அச்சய்யா. பண்டிகைக்கு புடவை வாங்கி வருவது குறித்து பண்டிகையின் முதல்நாள் அவர்கள் இருவருக்கும் நடந்த உரையாடலோடு நாவல் தொடங்குகிறது.

தன் ரசனைக்கு சம்பந்தமில்லாமல் புடவை எடுத்து வரும் கணவனின் பழக்கம் குறித்து அவள் வருத்தத்தை தெரிவிக்கிறாள். உனக்கு எந்த புடவை நன்றாக இருக்கும் என்று என்னை விட உனக்கு அதிகம் தெரியுமோ என்று கேட்கிறான்  கணவன் ஆணவத்தோடு.

பண்டிகையன்று காலையில் மடிப்பு கலைந்த புதுப் புடவை கட்டில் மீது கிடப்பதைப் பார்த்து போர்வை போன்ற அந்த துணிதான் தனக்காக வாங்கி வந்த   புடவையோ என்று பாப்பாயம்மா சந்தேகப்படும்போதே அவள் கணவன் ஆமாம் என்று தெளிவாக்குகிறான். போர்வையைப் போன்ற அந்த பெரிய பார்டர் உள்ள  புடவையை நான் உடுத்த மாட்டேன் என்று பாப்பாயம்மா எதிர்ப்பு தெரிவிக்கிறாள். அவள் படித்த படிப்பையும் அவள் அறிவையும் அவளுடைய தந்தையின் அறிவையும் கூட ஏளனம் செய்து பேசுகிறான் கல்வியறிவில்லாத அச்சய்யா. படிப்பறிவில்லாத தனக்கே அதிகம் தெரியும் என்று கூறி அன்றிலிருந்து அவர்கள்  இருவரும் கதர் துணியையே அணிய வேண்டும் என்ற அவனுடைய தீர்மானத்தை அறிவிக்கிறான். பண்டிகையன்று திட்டு வாங்காமல் நான் சொன்னபடி செய் என்று எச்சரித்துவிட்டு வெளியில் செல்கிறான்.

திரும்பி வந்தபோது அவள் அந்த புடவையை இன்னமும் கட்டிக் கொள்ளாமல் இருப்பதைப் பார்த்து கோபத்துக்கு ஆளாகிறான். 

அத்தனை முரட்டுச் சேலையை எவ்வாறு கட்டிக் கொள்வேன் என்ற அவளுடைய பேச்சு காதில் விழுந்ததும் கோபம் தாங்காமல் கைக்கு கிடைத்த கட்டை விளக்குமாற்றை எடுத்து அவள் மேல் வீசுகிறான். கண்ணீர் நிறைந்த கண்களோடு புடவையை எடுத்து கட்டிக் கொண்டு வருவது அவளுக்குக் கட்டாயமாகிறது .

அஹிம்சைவாதியான காந்தி கூறிய கதர் கட்டும் இயக்கத்தில் பெண்களின் ஒருங்கிணைப்பு ஹிம்சையோடு கூடியதாக இருந்தது என்பது ஒரு பெரிய முரண்பாடு.  

உண்ணும் உணவு, உடுத்தும் உடை இவற்றின் விஷயத்திலாவது பிறருடைய தலையீடு இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறாள் பாப்பாயம்மா. ஆனால் எந்த மனைவிக்கும் அத்தகைய சுதந்திரம் அனுபவத்தில் இல்லை. பாப்பாயம்மாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல. 

அவளுக்கு புலால் உணவு என்றால் வெறுப்பு என்றாலும் கணவனுக்கு விருப்பம் என்பதால் சமைத்து அருகில் இருந்து பரிமாற வேண்டி வருகிறது. அவளுக்கு விருப்பமான சக்கரை வள்ளிக்கிழங்கு வாங்கி வந்து சுட்டுச் சாப்பிடலாம் என்றால், வயிற்று வலி என்று முனைகினால் சும்மா இருக்க மாட்டேன் என்று அவன் எச்சரித்த போது அவள் சும்மா இருக்க வேண்டி வந்தது.

சுரபி கம்பெனிக்காரர்கள் வந்து டிராமா போட்ட போதோ ஊரில் ஹரிகதை நடக்கும் போதோ, ‘தூக்கம் இல்லாவிட்டால் உடம்பு கெட்டுவிடும்’ என்று   பார்ப்பதற்கும் கேட்பதற்கும் கூட அவன் வரைமுறை விதிக்கையில் அவள் தன் விருப்பங்களை அடக்கிக் கொண்டு வீட்டிலேயே இருக்க வேண்டி வந்தது.

ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் பிறருடைய விருப்பத்தின் மீது சார்ந்து இருப்பதில் உள்ள கஷ்டம் தெரிந்த பாப்பாயம்மா பெண்களை இறைவன் ஏன் அவ்வாறு படைத்தான் என்று வேதனைப்படுகிறாள். ஆண்களின் அதிர்ஷ்டத்தைப் பார்த்து பொறாமைப்படுகிறாள்.

மீறி எதிர்க்க வேண்டும் என்று எண்ணினாலும் வேறொரு வாழ்வாதாரம் இல்லாததால் வாழ்க்கையை கண்ணை மூடிக்கொண்டு கழித்து விடுவதற்கு பழக்கப்படுத்தி கொண்ட பெண்களின் பிரதிநிதியான பாப்பாயம்மாவுக்கு சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள், சுதந்திர உலகிற்கான கதவுகளைத் திறந்து விட்டன.

சமுதாய வாழ்க்கையும் சரி, சுதந்திர போராட்டத்தில் செயலூக்கத்தோடு பங்கு பெற்றதும் சரி, பாப்பாயம்மாவுக்கு கணவனின் கருணையால் கிடைத்தது என்ற விஷயத்தை மறக்கக் கூடாது. 

ஆண்கள் எதை நல்லது என்று நினைகிறார்களோ அதனையே நடைமுறைப்படுத்துவதற்கு ஆயத்தமாகிறார்கள். தம் அதிகார எல்லையில் இருப்பவர்களுக்கும் அதுவே நல்லதென்று நிர்ணயிக்கிறார்கள். அது தமக்கு நல்லதா இல்லையா என்று சுயமாக சிந்தித்து முடிவெடுப்பதற்கான உரிமை   பெண்களுக்கு இல்லை.

கதர் உடுத்துவது தன் லட்சியம் என்று எண்ணும் அச்சய்யா அந்த லட்சியத்தைப்   பாப்பாயம்மாவின் மீதும் திணிக்க முடிகிறது. சுதந்திரப் போராட்டத்தின் பயன்களை முன்னிட்டு பெண்களிடம் அதனை சொந்த லட்சியமாக கடைபிடிப்பதற்கு பயிற்சியளிப்பதை விட்டுவிட்டு தண்டனையாக அமல்படுத்துவதில் ஆணாதிக்க அதிகார அமைப்பின் இயல்பு வெளிப்படுகிறது.   

முதலில் மிகக் கஷ்டமாக கதர்ப் புடவை கட்டத் தொடங்கிய பாப்பாயம்மாவுக்கு விரைவிலேயே அது விருப்பமாகி போனதென்பது பழக்கத்தினால் ஆகியிருக்கலாம். அல்லது ஊரில் கதர் உடுத்திய முதல் பெண்ணாகக் கிடைத்த  கௌரவத்தால் ஆகியிருக்கலாம். 

ஹிந்தி படிப்பதற்கு விருப்பத்துடன் ஆயத்தமானாள் பாப்பாயம்மா. அதற்குக்  காரணம் திருமணத்திற்கு முன்பே அவள் படித்தவளாக இருந்ததால் படிப்பின் மீது அவளுக்கு விருப்பம் வேரூன்றி இருந்தது.

காங்கிரசின் அழைப்பை ஏற்று அச்சய்யா ஊரிலிருந்த இளைஞர்களோடு கூட பாப்பாயம்மாவும் ஹிந்தி படிப்பதற்கு ஆசிரியரை ஏற்பாடு செய்தான். ஆனாலும் கூட வீட்டுக்குள்ளேயே கதவுக்குப் பின்புறம் யார் கண்ணிலும் படாமல் உட்கார்ந்து அவள் ஹிந்தி கற்க வேண்டி வந்தது என்பது கவனிக்க வேண்டிய அம்சம். பெண்களின் வாழ்க்கை வீட்டிற்குள் அடைந்து கிடப்பதே என்று அடித்து கூறுகிறது இந்த சம்பவம்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து பாப்பாயம்மா கதவைத் தாண்டி வெளியில் எவ்வாறு வர முடிந்தது? தேசிய கீதம் பாடியபடி ஊருக்குள் வந்து அச்சிட்ட அறிவிப்புத் தாள்களை விநியோகித்த பெண்கள் ஏற்படுத்திய தாக்கத்தாலா? வீடு வீடாகச் சென்று பெண்களை சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெறும்படி உபதேசித்த பெண்ணின் தாக்கத்தாலா என்றால், அது அல்ல.

அவை எல்லாம் அச்சய்யா மீது தாக்கம் ஏற்படுத்தின. அந்த தாக்கத்தின் காரணமாக, மறியலில் பங்கு பெற்று ஜெயிலுக்குச் செல்வதற்கு பாப்பாயம்மாவை ஆயத்தம் செய்தான் என்பது கவனித்த வேண்டிய அம்சம்.

அதற்கு ஆயத்தமாகும் போது பாப்பாயம்மா அடைந்த மனக் கஷ்டங்கள் கூட குறைவானது அல்ல. 

கதவுக்குப் பின்னால் மறைந்து படித்த படிப்பு, மறைவாக இருந்து சொன்ன பதில்கள், வீதியில் ஆண்களுக்கு எதிர்வராமல் தயங்கித் தயங்கி மறைந்து மறைந்து நடப்பது, அல்லது ஆண்களின் முன்பாக போக வேண்டி வரும் என்றால்  போவதையே நிறுத்தி விடுவது இப்படிப்பட்டவற்றின் இடையில் வாழ்ந்த  பாப்பாயம்மாவை கொடி பிடித்துக் கொண்டு வீதிகளில் அலைவது குறித்த சிந்தனை மூச்சடைக்கச் செய்வது இயல்பு தானே. 

ஆனால் அவள் அதிலிருந்து மீண்டு ஜெயிலுக்குச் செல்வதற்கு தீர்மானிக்கிறாள். அவள் அந்த தீர்மானத்திற்கு வருவதற்குக் காரணம் சுதந்திரப் போராட்ட இலட்சியங்கள் அல்ல. சிறிது காலமாவது வீட்டிலிருந்து தப்பிக்க வேண்டும் எனற ஆழ்ந்த ஆசை மட்டுமே. ஜெயிலுக்குச் சென்றால் சாப்பாட்டு விஷயம் தவிர மற்ற  எதுவும் இங்கிருப்பதை விட அங்கு தன்னை பாதிக்காது என்று அவள் நினைத்தாள். அப்படியென்றால் வீடு என்பது பெண்களுக்கு எத்தனை சமமற்ற, சுதந்திரமற்ற இயல்புகளால் உறைந்து போன அடக்குமுறைக் கட்டமைப்பாக நிலைபெற்று விட்டது என்பதை அனுபவத்தில் அறிந்ததால்தான். சிறையில்  அனுபவிக்கப் போகும் தடைகள் குறித்துக் கூறும் பாப்பாயம்மா ஜெயிலில் அடைத்த பின்பு எங்கும் செலவிட மாட்டார்கள் என்ற சிந்தனைக்கு பதிலாக   இங்கு வீட்டில் மட்டும் என்னை எங்கு செல்ல விடுகிறார்கள் என்ற கேள்வியை கேட்டுக் கொள்கிறாள். வீட்டை விட்டு பிறந்த வீட்டுக்குக் கூட நினைத்த போது செல்ல முடியாத தன் சுதந்திரமற்ற நிலையின் புரிதலால் வந்த கேள்வி அது. 

கடந்த ஆண்டு பிறந்த வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று மூன்று முறை அவள்  செய்த முயற்சிகளை கணவன் பலிக்காமல் செய்தது நினைவுக்கு வந்து அவளை   கணவன் அவ்வாறு தடுத்து நிறுத்துவதற்குத் தகுந்த காரணங்கள் கூட எதுவுமிருக்காது என்று கருதுகிறாள். மறு கணமே வெறும் ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் கணவனுடைய கருணையின் மீது ஆதாரப்பட்டிருக்க வேண்டி வருகின்ற தன்னைப் போன்றவர்கள் காரணங்கள் பற்றி சிந்திக்கவே கூடாது என்று எண்ணுகிறாள். சம்சாரம் என்பது பெண்களுக்கு எத்தனை மூச்சு விட முடியாத நிர்பந்தம் மிகுந்த வாழ்க்கையாக இருக்கிறது என்பதை பாப்பாயம்மாவின் அந்தரங்கச் சிந்தனையுலகின் வெளிப்பாட்டின் மூலம் வாஸ்தவமாக நிரூபிக்கிறார் விசாலாட்சி. 

இந்தச் சூழ்நிலையில் வெளியில் நிலவிய சுதந்திரப் போராட்டம், உள்ளுக்குள் சுதந்திரத்திற்காக தவிக்கின்ற பெண்களின் மன அழுத்தத்திற்கு ஒரு சேஃப்டி வால்வாக உதவிக்கு வந்தது. பாப்பாயம்மா சிறைக்குச் செல்வதற்கு தயாராவதில் இவ்விதமான குடும்பத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்பதே முக்கிய ஈடுபாடாக ஆனது.

சிறையில் இருந்து வந்தபின் வெளி உலகத்தோடு தொடர்புடைய எந்த வேலையும் இல்லாமல் போனது பாப்பாயம்மாவுக்குப் பெரிய குறையாக ஆனது. அதனைப் பூர்த்தி செய்வதற்காக பஜனைகளுக்குச் செல்ல வேண்டுமென்று எண்ணுகிறாள். அதன் மூலம் பிரயோஜனம் இல்லை என்று அச்சய்யா கருதினான். ஆதலால் அவளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. தன் வாழ்க்கை மீது அவனுடைய விருப்பங்களின் அதிகாரமும் ஆதிக்கமும் எப்படிப்பட்டது என்பது மீண்டும் ஒருமுறை வெளிப்படட்ட அந்தக் கணத்தில், தேசம் முழுவதுமாகச் சேர்ந்து எத்தகைய அடிமைத்தனத்தை அனுபவிக்கிறதோ நான் ஒருத்தி மட்டுமே அத்தனை அடிமைத்தனத்தை அனுபவிக்கிறேன் என்று எண்ணுகிறாள். இந்த அடிமைத்தனத்திலிருந்து நான் விடுதலை அடைந்தால்தான் என் தேசமும் விடுதலை அடையும் என்று எண்ணுகிறாள்.

அடிமைத்தனம், அதிலிருந்து விடுதலை என்ற இரண்டுக்கும் இருக்கும் தொடர்பு பற்றிய தெளிவு அவளுக்கு எப்போது வந்ததோ, அந்தக் கணத்தில் இருந்து அவளுக்கு திரும்பத்திரும்ப பார்த்து மகிழும் தன் நகைகள் மீது பார்வை போகவில்லை என்கிறார் நாவலாசிரியை. பெண்களை கொத்தடிமையாக சம்சாரத்தில் கட்டிப் போடும் கைவிலங்கே நகைகள் என்ற அறிவின் புரிதல் அது. இனி அங்கிருந்து பாப்பாயம்மா கணவரின் உத்தரவையும் அனுமதியையும் எதிர்பார்க்கும் நிலையைத் தாண்டி விட்டாள்.

பஜனைகள் கூடாது என்று கணவன் ஆணையிட்ட பிறகு, பாப்பாயம்மா சிறையில் நாடகம் போட்ட அனுபவத்தை கொண்டு பெண்களை ஒன்று திரட்டி நாடகம் போட வேண்டும் என்று ஒரு நிகழ்ச்சியை கையில் எடுக்கிறாள். அதற்குப் பார்வையாளர்கள் பெண்கள் மட்டுமே. மாமியார் வீட்டுக்கோ பிறந்த வீட்டுகோ செல்ல வேண்டிய தேவையிருக்கும் பெண்கள், பிறரை அண்டி இருப்பதும் அவர்களுக்கான வரைமுறைகளும் நாடகம் போடுவதற்குத் தடையாக நின்றன. என்ன செய்வதென்று தோன்றாமல் தவித்த அவளுக்கு காங்கிரஸ் முன்னெடுத்த ஹரிஜன இயக்க நிகழ்ச்சிகள், தேர்தல் நிகழ்ச்சிகள், ஒத்துழையாமை இயக்கப் பிரச்சார நிகழ்ச்சிகள் போன்றவை மீண்டும் கை நிறைய வேலையளித்தன. கணவனிடம் அவள் செய்யும் பணி குறித்தும் எப்போது போவாள் எப்போது வருவாள் என்பது பற்றியும் மட்டும் கூறுவாளே தவிர கணவன் அவளுக்குப் பணி கொடுப்பது, அவனைப் பின்தொடர்ந்து வெளியில் செல்வது போன்ற பழைய பழக்கங்கள் இப்போது வழக்கத்திலிருந்து நழுவி விட்டன. அது சிறிது சிறிதாக பாப்பாயம்மா சுதந்திரப் பெண்ணாக மாறுகிறாள் என்பதைக் காட்டின.  

பாப்பாயம்மாவோடு சிறைக்குச் சென்ற மற்றொரு பெண் சிட்டம்மா. இவள் திருமணமானவள். கணவன் சொத்தையெல்லாம் அழித்தபின் வேறு வழியில்லாததால் பிறந்து வீட்டிற்கு வந்தாள். வீட்டைத் தாண்டி வெளியில் சென்றறியாத சிட்டம்மா, ராட்டினம் நூற்க வேண்டும் என்று கூறிய காந்தியின்   அழைப்பை ஏற்றாள். சம்சாரம் இல்லாத பெண்ணாக, தாய் கொடுக்கும் வேதனையையும் உலகத்தின் பரிதாப பார்வைகளையும் தாங்க முடியாமல் மூச்சு விடக் கூட முடியாத நிலையை அனுபவிக்கையில். சிறைக்குச் செல்லத் துணிந்த பாப்பாயம்மாவை ஆதரிசமாக ஏற்று தானும் சிறைக்குச் செல்வதற்கு தயாரானாள். சிறைக்கும் சென்றாள். அதன் பின்பு ஹரிஜன சேவை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டாள். ஹரிஜன குடியிருப்பகளுக்குச் சென்று வந்தபின் குளிக்கக் கூட  மாட்டாயா என்று தாய் லபோ திபோ என்று அடித்துக் கொண்டு கூறிய  சொற்களை பழங்காலம் என்று எடுத்தெறிந்து பேசக் கூடிய அறிவு வளர்ச்சி அவளிடம் தென்படுகிறது. அதைத் தவிர, அதற்குப் பிறகு சுதந்திரப் போராட்ட நிகழ்ச்சிகளில் பங்குபெறும் முயற்சியை எடுக்க முடியாத தனிப்பட்ட வரைமுறை அவளுக்கு இருந்தது.    

எட்டு

சிட்டம்மாவின் தங்கை லைலா. பாப்பாயம்மா, சிட்டம்மா இருவரும் சிறைக்குச் சென்ற போது பத்து வயதுப் பெண் லைலா. அவர்களோடு கூட ஹரிஜனக்  குடியிருப்புகளில் அலைந்தது வரை மட்டுமே சுதந்திரப் போராட்டத்தில் அவளுடைய பங்கு இருந்தது. பாப்பாயம்மாவையும் சிட்டம்மாவையும் பார்த்து காங்கிரஸ் பற்றியும் சுதந்திரப் போராட்டம் பற்றியும் அறிந்து அவற்றின் மேல் விருப்பத்தை வளர்த்துக் கொண்டாள். 

ஆனால் அவளுடைய உண்மையான அரசியல் வாழ்க்கை கம்யூனிஸ்ட் கட்சியோடு சேர்ந்து மலர்ந்தது. மாமியார் வீட்டுக்குச் சென்றபின் அவளுடைய கணவன், சுற்றத்தார், நண்பர்கள் மூலம் கம்யூனிஸ்ட் கட்சி பற்றி அறிந்து கொள்கிறாள். பரீட்சை எழுதுவதற்கு நகரத்திற்குச் சென்ற கணவன் மோகனராவு, கிராமத்தில் இருக்கும் அவளுக்குப் பொழுது போவதற்காக ஊரில் நடக்கும் அரசியல் பாடசாலையில் சேரும்படி கூறிச் சென்றதால் அதில் சேர்ந்தாள். கம்யூனிஸ்ட் கட்சியரசியல் குறித்த அறிவை வளர்த்துக் கொள்வதற்கு அது அவளுக்கு உடனடி வாய்ப்பாக அமைந்தது.

அவள் காங்கிரஸில் பிறந்து காங்கிரஸில் வளர்ந்தாலும் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை பற்றியும் கம்யூனிஸ்ட்களின் அர்பணிப்பு, தியாகம் பற்றியும் அறிந்தபோது இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து கம்யூனிஸ்ட் கட்சிக் கொள்கையின் பக்கம் நின்றாள்.

மகளிர் சங்கத்தின் செயலாளராக பொறுப்பு வகிப்பதில் உற்சாகம் காட்டினாள். இலக்கியத்தோடும் அவளுக்கு அறிமுகம் இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின்  இலக்கிய அமைப்பிலும் அங்கத்தினராக ஆனாள். 

பெண்களின் விருப்பங்கள், உற்சாகங்கள் எதுவாக இருந்தாலும் கணவன் அனுமதி அளிக்கும் வரைதான் இருக்கும் என்ற உலகியல் நீதியிலிருந்து லைலாவின் வாழ்க்கையும் வேறுபடவில்லை என்பதுதான் வருந்தத்தக்க விஷயம். 

மோகனராவுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலைப் புரிந்து கொளண்டு அந்த அரசியல் சிந்தனையோடு கவிதை எழுதுவது மட்டுமே பிடிக்கும். அவனுடைய விருப்பத்திற்கு ஏற்புடையதாக இருந்த கட்சியின் எழுத்தாளர் சங்கத்தில் சேர்ந்து பணி புரிவதில் அவன் திருப்தியடைந்தான் 

அதற்கு அனுகூலமாகவே மனைவி லைலாவையும் அரசியலைப் புரிந்து  கொள்வதற்கும் பத்து பேருக்கு எதிரில் தயக்கமின்றி செல்வதற்கும் உற்சாகப்படுத்தினான். ஆனால் அவள் அதோடு நில்லாமல் மகளிர் சங்கத்திற்கும் கட்சிக்கும் கட்சியின் எழுத்தாளர் சங்கத்திற்கும் கூட அங்கத்தினராக முன்னேறினாள்.

மோகனராவுக்கு எழுத்தாளர் சங்கத்தில் வேறுபட்ட அபிப்பிராயங்கள் வந்தபோது அதிலிருந்து வெளிப்பட்டு, தன் மனைவி கூட அதில் இருந்து விடுபட வேண்டும் என்றும் வெளியே வந்துவிட வேண்டும் என்றும் கருதினான். நான் சொன்னால் வெளிவராமல் வேறு என்ன செய்வாள்? என்று எண்ணினான். அவள் ஒரு பெண். அதிலும் என் மனைவி. நான் அனுமதித்ததால் அவள் பணி புரிகிறாள். நான் போகக்கூடாது என்று சொன்னால் நின்று விடப் போகிறாள் என்ற திடமான  அபிப்பிராயங்கள் உள்ள ஆண் அவன். 

பெண்களை வெளியில் செல்ல விடுவதோ, போகக் கூடாது என்று நிறுத்துவதோ சுவிட்ச் போட்டு விளக்கு எரிப்பதும் அணைப்பதும் போன்றது என்று அவனுடைய பார்வையில் நாவலாசிரியை விளக்கம் அளிக்கிறார்.

மோகனராவ், எழுத்தாளர் சங்கத்திற்கு ராஜினாமா கொடுக்க நினைத்த செய்தியை அறிந்த லைலா, இனி தன் மீது வரப் போகும் அழுத்தத்தை யூகித்து அறிந்தாள். மோகனராவுக்கு சங்கத்தில் அபிப்பிராய பேதம் வந்ததால் அவன் ராஜினாமா செய்கிறான். எனக்கு கட்சியின் மகளிர் சங்கத்திலோ எழுத்தாளர் சங்கத்திலோ அப்படிப்பட்ட தகராறுகள் எதுவும் இல்லாதபோது ராஜினாமா செய்ய வேண்டிய தேவை என்ன உள்ளது? என்பது அவளுடைய கேள்வி.

ஆனால் தன் வாதம் எடுபடாது என்று அவளுக்குத் தெரியும். சங்கத்திலும் கட்சியிலும் தனக்கு எவ்விதமான சம்பந்தமும் இருக்கக்கூடாது என்று கணவன் அணியிடுவான் என்று உணர்ந்து கவலை கொள்கிறாள்.

ஒரு மோகனராவ் மட்டுமே அல்ல. ஒரு கணவனாக தன் மனைவியிடம் எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆனாலும் ஆண்கள் அனைவரும் அவ்வாறே நடந்து கொள்வார்கள் என்பது லைலாவுக்கு தெரிகிறது.

சுதந்திரத்தை விரும்பும் ஆண்கள், பெண்களும் அப்படிப்பட்ட சுதந்திரத்தையே விரும்புவார்கள் என்ற உண்மையைப் புரிந்து கொள்ள மறுக்கும் வழக்கத்தை  அறிந்து கொண்ட லைலா, பெண் சுதந்திரத்திற்காக இத்தனை நாட்கள் போதித்த   தானே ஒரு கொத்தடிமையாக, சொந்த வீட்டிலேயே ஒரு கைதியாக எவ்வாறு இருப்பது என்று குழப்பத்தில் அழுந்தாள். 

மோகனராவை எதிர்த்துப் பேசுவது என்றால் அவனோடு உறவை அறுத்துக் கொள்வதற்கு ஆயத்தமாவதே என்று அவளுக்கு தெரியும். அவனுக்கு அடங்கிப் போனால் வாழ்க்கை முழுவதும் தன்னைத் தொடரும் அதிருப்தியையும் அவமானத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். அவனை எதிர்த்து நின்றால்   பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வரும். பெற்றோர் முதற்கொண்டு  அனைவரும் அவளையே குற்றம் சுமத்துவார்கள். வருந்துவார்கள். அது அவளுக்கும் வருத்தத்தை அளிக்கும். அமைதி இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டிவரும். இந்த இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது? என்று  உள்ளுக்குள்ளையே அவளுக்கு ஒருவித குழப்பம் இருந்தது.

இறுதியில் சம்சாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அமைதி, திருப்தி போன்றவை இனி தனக்கு இருக்காது என்பது தீர்மானமாகிவிட்ட நிலையில் கணவனை எதிர்த்து நின்றால் தன்மானமாவது மிஞ்சும் என்ற முடிவுக்கு வருகிறாள்.

அவள் எழுத்தாளர் சங்கத்திற்கும் கட்சிக்கும் ராஜினாமா அளிப்பதற்கு சம்மதிக்கவில்லை. அதன் பரிணாமமாக மோகனராவ் அவளை அழைத்து வந்து பிறந்து வீட்டில் விட்டு, சங்கத்தின் வேலையை விடா விட்டால் சேர்ந்து வாழ்வது அசாத்தியம் என்று மறைமுகமாக பெற்றோருக்குக் கூறி, சென்று விடுகிறான்.

அவன் சொல்வதை ஒப்புக்கொள் என்று லைலாவிடம் பிறந்த வீட்டில் அழுத்தம் கொடுத்தார்கள். அதற்கு அவள் அடங்கிப் போனால் அவனுக்கு வெற்றி. அடங்காவிட்டாலும் ஆண்களின் நீதியின்படி தவறு ஆணுடையதாகாமல்  மனைவியுடையதே ஆகும் என்பது மோகனராவின் கணக்கீடு.

இவ்விதமான எதிர்மறைச் சூழ்நிலையில் தனிமைப் போராட்டம் செய்வதற்கு லைலா அனுபவித்த மனப்போராட்டம் கொஞ்சமல்ல. தன்னை வஞ்சித்துக் கொள்ளாமல் தன்மானத்தோடு தன்னுடைய உரிமைகளுக்காகவும் அபிப்ராயங்களுக்காகவும் நிற்கும் பெண்கள் எத்தனை இம்சைக்கு உள்ளாவார்களோ அத்தனை இம்சையையும் லைலாவும் அனுபவித்தாள்.

மாப்பிள்ளை சொன்னபடி கேள் என்று தாய் அழுத்தம் கொடுத்தாள். சொன்ன வார்த்தையைக் கேட்டால் நகையும் பணமும் கொடுப்பதாக ஆசை காட்டினாள்.  கேட்காவிட்டால் நாங்கள் ஏதாவது கிணற்றில் போய் விழுந்து இறப்போம் என்று எச்சரித்து அச்சுறுத்தினாள்.. உனக்கு இரண்டு வேளையும் சோறு யார் போடுவார்கள் என்று அதட்டினாள். வீட்டை விட்டு அண்ணன் வீட்டுக்குச் சென்று சாப்பாட்டை நிறுத்தி உவபாவசம் இருந்து தன் எதிர்ப்பைத் தெரிவித்தாள்.

அவ்விதமாகத் தானும் வருந்தி, அவளையும் வருத்தி, பெண்களுக்குத் தன்மானம், லட்சியங்கள் போன்றவை இருந்தாலும் ஆண்களுக்கு அடங்கி இருப்பது தான் நியாயம் என்று கூறிய தாயின் நடத்தையும் உலகத்தாரின் அறிவுரைகளும் விமர்சனங்களும் லைலாவை நிறைய கேள்விகளுக்கு உள்ளாகின.

ஒருவருக்கு எது கஷ்டம், எது சுகம் என்று இன்னொருவர் நிர்ணயிப்பது சரியான வழக்கம்தானா? சொத்துரிமை இல்லாமல் சாப்பாட்டுக்கு பெற்றோரின் கருணை மீது அல்லது கணவனுடைய கருணை மீது ஆதாரப்பட்டு பெண்கள்  தன்மானத்தையும் லட்சியங்களையும் அழித்துக் கொண்டு வாழ வேண்டியதுதானா? 

காதல் என்பது மற்றவரை தமக்கு விருப்பமான வழிமுறையில் நடத்துவதற்கு பயன்படுத்தும் உணர்ச்சி வேகம் மட்டும்தானா? இவ்விதமான கேள்விகள் அவளை  வறுத்தெடுத்தன.

படித்து ஒரு டிகிரியாவது சம்பாதித்து உத்தியோகம் செய்து சுதந்திரமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நினைத்தவள், எழுத்தாளர் சங்கத்திற்கு ராஜினாமா செய்ய வேண்டும் என்ற ஷரத்தைப் பற்றிப் பேசாமல்,  கணவன் தன்னோடு வா என்று அழைத்த போது அவனோடு சென்று விட்டாள். 

வீட்டிலும் வெளியிலும் ஆதரவும் அன்பும் செலுத்தி தன்னைப் பார்த்துக் கொள்ள யாருமே இல்லாத தனிமை வாழ்க்கைக்கு முடிவு கட்டவோ அல்லது தன்னை பிறந்த வீட்டில் கொண்டுவிட்டதால் எப்படியாயினும் மகளிர் சங்கத்திற்கும் கட்சிக்கும் தொலைவாகத் தானே இருக்கவேண்டி வருகிறது என்பதாலோ, எழுத்தாளர் சங்கத்திற்கு ராஜினாமா செய்ய வேண்டும் என்ற ஷரத்தை கணவன் வற்புறுத்தாத போது அவனோடு சமரசமாவதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைத்ததாள்.

இவ்விதமாக, ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லாமலே லைலாவை மகளிர் சங்கத்திலிருந்தும், கட்சயிலிருந்தும், எழுத்தாளர் சங்கத்திலிருந்தும் விலக்கி வைத்த மோகனராவின் சாமர்த்தியமும் சர்வாதிகார குணமும் லைலாவுக்குத் தெரியாதது அல்ல.

வெறும் எழுத்தில் தவிர, நடத்தையில் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையை அவள் கடைபிக்கக் கூடாது என்ற கணவனின் கட்டளைக்கும் அதிகாரத்திற்கும் அடங்கி இருக்கவேண்டி அவள் பட்ட அவஸ்தைகளை, ரயிலின் குறுக்கே விழும் மனிதன் அடையும் வலியோடு ஒப்பிட்டுக் கூறுகிறார் நாவலாசிரியை.

லைலாவின் அந்தரங்கத்தில் மனைவிகளுக்குக் கிடைக்காத சுதந்திரம் பற்றிய சிந்தனை நிரந்தரமாக இருந்து வந்தது. சமத்துவம் குறித்துப் பேசும் கட்சிகளோ ஜனநாயகம் குறித்து பேசும் ஆண்களோ தம் குடும்பத்தில் சமத்துவம் நிலவவேண்டும் என்பது பற்றியோ ஜனநாயகம்  பற்றியோ ஆலோசிக்க மாட்டேன் என்கிறார்கள். ஏன் அப்படி கடைபிடிக்க மாட்டேன் என்கிறார்கள் என்பது அவளைப் பின்தொடரும் சந்தேகங்கள்.

1957 ல் கடந்து சென்ற இயக்கங்கள் கொடுத்த அனுபவத்தால் லைலாவுக்கு ஏற்பட்ட இந்த சந்தேகங்களோடு நாவல் முடிகிறது. 

அதன் பிறகு இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து தெலுங்கு மண்ணில் அந்த சந்தேகங்களுக்கு விடை தேடும் நூதன பெண்ணிய இயக்கங்கள் ஆரம்பமாகித்   தொடர்கின்றன என்பது வரலாறு.

வட்டிகொண்ட விசாலாக்ஷியின் சொந்த வாழ்க்கை அனுபவங்களும் மோதல்களும் நிஷ்காமயோகி நாவலில் லைலாவின் கதாபாத்திரத்தைப்  படைப்பதற்கு கருப்பொருள் ஆனது. ஆதலால் இதனை, தன் வரலாற்று நாவல் என்று கூடக் கூறலாம்.

Series Navigation<< நிஷ்காம யோகி நாவல்காலாதீத வ்யக்துலு – டாக்டர். பி. ஸ்ரீதேவி  >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.