மிளகு-அத்தியாயம் நாற்பத்திரண்டு

மிர்ஜான்கோட்டை 1604

சாயந்திரம் பொன்வெய்யில் பூசிய நேரத்தில் சென்னபைரதேவி மகாராணியிடமிருந்து வந்த தூதுவன் அப்பக்கா தேவி மகாராணியிடம் கொடுத்த சிறு துணிப் பொட்டலத்தை அப்பக்காவின் மெய்க்காவலர்கள் வாங்கிக் கொண்டார்கள். பன்னீரால் அலம்பி, புது சூரிக்கத்தியால் ஜாக்கிரதையாகக் கீறிப் பிளந்து உள்ளே இருந்த ஓலை நறுக்கையும் பன்னீரால் அலம்பி அந்த ஓலை நறுக்கு அப்பக்கா சௌதா மகாராணியிடம் மரியாதையோடு வெள்ளித் தட்டில் வைத்து அளிக்கப்பட்டது. அப்பக்கா ஓலை நறுக்கைப் படித்ததும் சிரிக்கத் தொடங்கினாள்.

’ஓய்வு எடுக்க வேணும் போல இருக்கிறது. நாளைக்கு காலையில் நான் அழகான உள்ளால் நகரத்தில் உன்னோடு இருப்பேன். மிளகுக் கிழவி’.

தூதுவனைப் பார்த்து நல்ல செய்தி கொண்டு வந்ததற்காக புன்சிரிப்போடு இரண்டு வராகன் பணம் கொடுத்து அரண்மனை போஜனசாலையில் உண்டு போகச் சொன்னாள் அப்பக்கா மகாராணி. 

முக்கியப் பிரதானியை அழைத்து நாளைக்குச் செய்ய வேண்டிய அவசரமான செயல் ஏதும் இருக்கிறதா என்று கேட்டு இல்லை என உறுதிப் படுத்திக்கொண்டாள். உள்ளால் கடற்கரையில் ஏற்றுமதிச் சரக்குகளை கப்பல் வரும்வரை பாதுகாப்பாக வைக்க நிர்மாணித்த பண்டகசாலையை வருகை அறிவிக்காமல்  சென்று காணுதல் நாளைய செயலாகக் குறிப்பிட்டிருக்கிறது. அதை நாளை மறுநாள் அல்லது வெள்ளிக்கிழமை செய்து கொள்ளலாம் என்றார் முக்ய பிரதானி. ஆக நாளை முழுநாள் அப்பக்கா சௌதா மகராணி தன் பிரியமான தோழி சென்னபைரதேவியோடு இருந்து மகிழப் போகிறாள்.

சென்னா அப்பக்கா அரசியாகிய பிரதேசமான உள்ளாலுக்கும் புட்டிகே-க்கும் சுய விடுமுறை எடுத்துக் கொண்டு வந்தது இருபது வருடம் முன்பு. மங்கலாபுரமும் கொல்லூரும் சென்று தொழுது உள்ளால் நகரம் வந்தாள் சென்னா அப்போது. இப்போது தளர்ச்சி காரணம் மிர்ஜான் கோட்டையிலிருந்து உள்ளாலுக்கு நேரே வந்துவிடுவாள் என்று அப்பக்கா மகாராணிக்குத் தோன்றியது. 

போன தடவை வந்தபோது சிரித்து மாளவில்லை ரெண்டு பேருக்கும். ஒரு கவிராயர் தெலுங்கில்   துளுவ ராஜ்யகுமாரி என்று அப்பக்காவை விளித்து நாட்டியமாடத் தோதாகப் பாட்டு எழுதிக்கொண்டு வந்து பாடியும், அடவு கற்பித்து நாலைந்து கணிகையரைக் கொண்டு ஆடச் செய்தும் அப்பக்காவுக்கு பாட்டும் ஆட்டமும் காட்சி வைத்தார். 

அப்பக்கா மகாராணியே நீ உலகாளுகிறாய். உன் கேசம் மணம் வாய்ந்தது, மேகம் போல் இருண்டிருப்பது. உன் கண்கள் கரியவை. ஒளி மிகுந்தவை. உன் தனங்கள் மாம்பழங்கள்  போல் மிருதுவானவை. மிகப் பெரியவை. உருண்டு திரண்டவை. கனமானவை. இடுப்பு இல்லாதது போல் மிகச் சிறியது. பெண்குறி தேர் போல் பரந்துபட்டது. பிருஷ்டம் மலைகள் போன்றது. நீ வாழ்க துளுவ ராஜ்யரஜினியே நீடூழி வாழ்க என்று எழுதிப் பாடி ஆடி அப்பக்காவிடமிருந்து  ஐந்து வராகன் பெற்றுப் போனான்,

அந்தப் பாட்டை உற்சாகமாகத் தன் ஆருயிர்த் தோழி சென்னபைரதேவியிடம் அவள் பாடிக் காட்டினாள்.

“என்ன ஆச்சரியம், பட்கல் கவிஞனா அது? போன வாரம் தான் இந்த வருணனைகள் எல்லாம் இட்டு, நடுநடுவே மிளகு என்று வருமாறு வைத்து சாளுவ ராஜ்யரஜினி என்று விளிக்கும் பாட்டை கணிகையர் தெருப் பெண்களைக் கொண்டு பாடி ஆடி நூறு வராகன் வாங்கிப் போனான் அதே கவிராயன்” என்றாள் சென்னா ஆச்சர்யத்தோடு.  

”அடியே சாளுவச்சி,   ’உன் பிருஷ்டம் இமயமலை, உன் அது தேர்ன்னு என்னைச் சொன்ன பொய்யை அஞ்சே வராகன் கொடுத்து வாங்கிட்டேன். உன் மாம்பழத்துக்கும், இமயமலைக்கும், தேருக்கும் ரொம்ப அதிகமாக கொடுத்திட்டியேடி” என்றாள் அப்பக்கா. 

சென்னாவின் முகத்தைக் கையில் ஏந்தி. ’என்ன இருந்தாலும் இந்தத் துளுவச்சி சாமர்த்தியம் சாளுவச்சிக்கு வருமோ’ என்று பாட்டாகப் பாடி ஆடவும் செய்தாள். கூடவே சென்னாவையும் ஆடவைத்தாள். அந்த மகிழ்ச்சிகரமான பொழுதுகள் இப்போதும் வருமோ என்று ஏங்கி இருந்தாள் அப்பக்கா.

காலை விடிந்து வெகு நேரம் சென்று சென்னா உள்ளால் ராணிபுரத்தில் அப்பக்காவின் கோட்டை அரண்மனைக்கு வந்து சேர்ந்தாள். ராத்திரி மிகுந்த பயணக் களைப்பு ஏற்பட்ட படியால் வழியில் ஒரு சத்திரத்தில் நிறுத்தி ஓய்வெடுத்துக் கொண்டு வந்திருக்கிறாள். 

மொத்தம் மூன்று சாரட்கள். முன்னால் ஒன்று பாதுகாப்பாகப் பெட்டகத்தில் பணம், துணிமணிகள், உணவு, குடிக்கவும் புழங்கவும் கடகங்களில் தண்ணீர் ஆயுதங்கள் என்று இரண்டு சிப்பாய்கள் காவலிருக்க நகர்ந்து போனது. அடுத்து ராணி பயணம் செய்யும் ராஜரதம் என்ற பெரிய, வசதியான சாரட் நான்கு காவல் வீரர்களோடு நகர்ந்தது. அதன் பின்னால் சற்றே சிறிய இன்னொரு சாரட்,   பல   மருந்துகளோடு வைத்தியனும், அவன் மனைவியும், ராணியின் தாதியுமான   மிங்குவும் அதில் பயணம் செய்து ராணியைத் தொடர்ந்து வந்தார்கள். பின்னால் நான்கு வீரர்கள் குதிரைகளில் சவாரி செய்து மொத்தப் பாதுகாப்பு அளித்தார்கள். 

சத்திரத்தில் வசதிகள் மிகக் குறைவாக இருந்ததால் ரதத்திலேயே இரும்பு வாளிகளை மணல் நிறைத்து வைத்து அதில் கழிவைப் பிடித்துக் கொட்டி மலசல உபாதைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று சென்னபைரதேவி மகாராணிக்கு, வைத்தியர், தாதி மூலம் ஆலோசனை சொல்லியிருந்தார். எனினும், அது அசங்கியமும் அசுத்தபரமும் ஆனது என்று நிராகரித்து விட்டாள் ராணியம்மா. 

முதல் சாரட்டில் மரச்சட்டங்களுக்கு உள்ளே கெட்டித் துணி வைத்து அடித்த சாய்வாக நிற்கும் திரைகள் நான்கை ஒரு   வீரனும் தேரோட்டிகளும் எடுத்துக் கொண்டார்கள். சற்று தூரத்தில் தரையைத் துடைப்பத்தால் பெருக்கி, பூச்சி பொட்டு இல்லை என்றும் ஆள் அரவம் இல்லையென்றும் உறுதிப் படுத்திக்கொண்டு நாலு திசையிலும் சதுர அறைபோல ஒன்றோடு  ஒன்றாகக் கவியும்படி அந்த நான்கு திரைகளை நிறுத்தினார்கள். தாதி துணைக்கு வர சத்திரத்தின் வெளியே நடந்தாள் ராணியம்மா. 

சற்று தூரத்தில் இருட்டில் ஒற்றை தீபமும் தண்ணீர் வாளியும் பிடித்து தாதி நிற்க, திரைகளுக்கு நடுவே அற்பசங்கை முடித்து வந்து, சாரட்டிலேயே படுத்து நித்திரை போனாள் சென்னா. குழுவில் யாரும் உறங்காமல் கண்ணும் கருத்துமாக   காவல் செய்திருந்து வந்து சேர்ந்தார்கள் என்று சென்னா மகாராணி சொல்ல அப்பக்கா வியப்போடு அவளைப் பார்த்தாள். 

அரபிக் குதிரை போல் துள்ளிக் குதித்து வேகமாக நடந்து வேகமாகப் பேசி, வேகமாக உண்டு, கொஞ்சம் போல் உறங்கி, சதா இயங்கிக் கொண்டிருந்த மிளகுராணி எங்கே போனாள்? அவள் தன்னைத் தானே பகடி செய்து கொண்ட ’மிளகுக் கிழவி’ தான் உண்மையான நிலைமையோ? 

அப்பக்கா சிந்தனைகளில் மூழ்கினாலும், சென்னாவின் பூப்போன்ற சிரிப்பு அவளைத் தன் பழையநாள் தோழியிடம்   மீண்டும் கொண்டு வந்தது.

”பானுமதி எங்கே? இன்னும் எழுந்திருக்கவில்லையா?” என்று சென்னா கேட்க, அப்பக்கா முகத்தில் ஒரு நிமிடம் உற்சாகம் வடிந்து வெறுமை பூசியது. 

“தனியாக இருக்காள் என் செல்வ  மகள், அரண்மனைக்கு அடுத்த வீதியில் ஒரு சிறு மாளிகை வாடகைக்கு எடுத்து” என்றாள் அப்பக்கா. 

“என் ஏட்டுச் சுவடியில் புருஷன்னு ஒரு பகுதி, மகள்னு இன்னும் ஒண்ணு ரெண்டுமே சரியாக எழுதலே, சென்னா” என்றாள் அப்பக்கா கண்ணில் நீர் நிறைய. சென்னா அவளை அணைத்துக் கண்ணைத் தன் பிடவைத் தலைப்பால் துடைத்தாள்.

’வீரேந்திர குமார் எப்படி இருக்கார்?” 

சென்னா அப்பக்காவிடம் அவளுடைய மாப்பிள்ளையைப் பற்றி விசாரித்தாள். 

“வீட்டுக்காரர் குடிப்பார். மாப்பிள்ளை குடிக்க மாட்டார். அது மட்டும்தான் வித்தியாசம்”.

”எங்கே இருக்கான் மாப்பிள்ளை?”  

“போன தீபாவளிக்கு சண்டை போட்டுட்டுப் போனான் பானுமதியோடு. அவன் பட்கல்லே அவங்க வீட்டுலே. இவ இங்கே உள்ளால்-லே. குழந்தை வேணும் வேண்டாம்னு தர்க்கம்”. 

அப்பக்கா சிரித்தாள். 

“எல்லாம் சரியாகப் போயிடும்டீ துளுவச்சி”. அவளை மறுபடி அணைத்துத் தோளில் தட்டினாள் சென்னா.

பசியாறலாம் வா என்று அப்பக்கா அவளை அழைக்க, குளிச்சிட்டு வரேன் என்றாள் சென்னா. அரண்மனை தோட்டத்தில் செய்குன்றம் அமைத்து அருவி போல் விழும் நீரில் நீராடி வர அவள் விருப்பம் தெரிவித்தாள். போனதடவை வந்தபோது அவளுக்குக் கிடைத்த குழந்தைத்தனமான இன்பம் அது. 

செய்குன்றமா? அப்பக்கா சிரித்தாள். அது இயக்கம் நிறுத்தி இருபது வருஷம்  ஆகியிருக்கும் என்றபடி விளையாட்டாக அருவிக்கான விசையைச் சுற்றித் திருக, என்ன ஆச்சரியம், அருவியில் நீர் வெள்ளமென ஓடிவந்து, தடதடவென்று நிலம் அதிரத் தரை தொட்டு, ஓடையாக நடந்தது. அதன் கீழ் நின்று நீராடி வந்ததும் களைப்பெல்லாம் போயொழிய சென்னா இருபது வருடத்துக்கு முந்தியவள் ஆனாள். நானும் குளிக்கறேன் என்று அருவியில் சென்னாவோடு கூடவே குளித்து விட்டு வந்தாள் அப்பக்கா.

”வா, பசியாற முந்தி ஹளயங்காடி சமணப் பள்ளிக்கும் சோமேஸ்வர் கோவிலுக்கும், பகவதி கோவிலுக்கும் போய் தரிசனம் செஞ்சுட்டு வந்துடலாம்”. 

சென்னா கேட்பாள் என்று எதிர்பார்த்து எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்தாள் அப்பக்கா. பத்தே நிமிடத்தில் அவர்களுடைய ரதங்கள் சோமேஸ்வர் கோவில் நடைக்கு வெளியே நின்றன. சீவேலி நேரம். எடக்காவும் செண்டையும் மனதை மலையாள பூமிக்கு எடுத்துச் செல்ல, சென்னாவும், அப்பக்காவும் கரம் குவிந்து வணங்கினார்கள். சென்னா உலக நலத்துக்காக  மனமார வேண்டினாள்.

ஹளயங்காடி சமணப் பள்ளி நான்கு வாயில் கோவிலாக இல்லாமல் ஒற்றைக் கதவு மட்டும் கொண்டு சிறு பிரார்த்தனைக் கூடமாக, தூய்மையாக இருந்தது. ஒரு குழுவாகச் சமணத் துறவிகள் இரும்பு வாளிகளில் கொண்டு வந்த தண்ணீரை உள்ளங்கையில் அள்ளிக் கோவில் தரையில் இட்டுக் கரம் சிவக்க, வெறுங்கையால் தேய்த்துத் தூய்மைப் படுத்திக்கொண்டிருந்தார்கள். தீர்த்தங்கரர்கள் புடைப்புச் சிற்பங்களாக பள்ளிச் சுவர்களில் காட்சியளித்தார்கள். தோழிகள் அமைதியாக வணங்கி வெளிவந்தார்கள்.

பக்கத்திலே தான் பகவதி கோவில் என்று கை சுண்டினாள் அப்பக்கா மகாராணி.

திவ்வியமான தரிசனம் கழிந்து பகவதி அம்மன் கோவில் சந்தனம் நெற்றியில் இட்டு மலையாளப் பெண்களாகத் தோன்ற இரண்டு தோழிகளும் உள்ளால் அரண்மனைக்குத் திரும்பி வந்தார்கள். 

மகாராணி சென்னபைரதேவியின் ரதத்திலேயே அப்பக்கா சௌதா மகாராணியும் பயணம் செய்தாள். பேச்சு இடையறாது நடந்தது.

”ஏடி, இந்த சாலை முடியும் இடத்தில் கௌரங்க வசதின்னு சமண சந்நியாசிகள் இருப்பிடம் உண்டு. திகம்பரர்கள். வர்றியா? தரிசனம் செய்துவிட்டு அரண்மனை திரும்பலாம்?” 

அப்பக்கா கேட்க, நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள் சென்னா.  அவள் பேச ஆரம்பிப்பதற்கு முன், ”நீ வர்றதா இருந்தா, சொல்லிவிட்டு அவங்களை இடுப்பில் கொஞ்சம் போல துணி கட்டிக்கச் சொல்றேன். சொல்லட்டா?” என்று கேட்டாள் அப்பக்கா. 

“வேணாம். அவங்க, அவங்க சுபாவப்படி இருக்கட்டும். நாம் போகப் போறதில்லே” என்றாள் சென்னா.

நுணுக்கிக் கம்பி கம்பியாக அரிசியும் கோதுமையும் மாவாக்கிப் பிழிந்து வேகவைத்து, சேவை நாழியில் இட்டுப் பிழிந்து சுவை சேர்த்த வெல்லச் சேவையும், ஊற்றி ஊறவைத்து உண்ணத் தேங்காய்ப் பாலும், எலுமிச்சை சேவையும், மிளகு சேவையும், புளி சேவையுமாக காலைப் பசியாறினார்கள் தோழிகள் இருவரும். 

“நீ ராஜாங்க காரியம் பார். நான் கொஞ்சம் படுத்து எழுந்திருக்கறேன். ரொம்ப அசதியாக இருக்கு. நேற்று பயணம் வேறே கஷ்டப்படுத்திடுத்து. சாலை ஏற்றமும் தாழ்ச்சியும், குண்டு குழியுமா இருக்கு. உள்ளால் அரசாங்கம் பராமரிக்கற சாலையா, விஜயநகர அரசு மராமத்து செய்யறதா?” 

”விஜயநகர அரசு தான். கேலடி அரசு விஜயநகருக்கு முக்கால் வாசி பராமரிப்புச் செலவு தரணும். கால்வாசி பராமரிப்பு செலவு உள்ளால் அரசு, நான் தரணும். நான் கொடுக்கறதை வாங்கி விஜயநகரப் பேரரசு வேறே செலவுக்கு வச்சுக்கறாங்க போலே இருக்கு. நான் மட்டும் திரும்பத் திரும்ப கப்பம் கட்டும்போது அதோடு கூட சாலை பராமரிப்பு வரின்னு என் பங்குக்குக் கட்டணும். கேலடி மகாராஜா வெங்கடப்ப நாயக்கர் ஒரு சல்லி கொடுக்க மாட்டாராம். அவர் செலுத்தற கப்பத்திலேயே அது வந்துடும்னு கட்சி கட்டறார். தனி வரி தர வேண்டாமாம். நானும் வரி கொடுக்கறதை நிறுத்திட்டேன். நீ வரேன்னு ஒரு வாரம் முந்தி சொல்லி இருந்தா உடனடி மராமத்து பார்த்து சரி பண்ணி இருப்பேன். போகுது. ஓய்வு எடுத்துக்கோ” என்று எழுந்தாள் அப்பக்கா.

“நீ அரசாங்க காரியம் பார்த்து முடித்து எப்போ வருவே?” சென்னபைரதேவி கேட்டாள். 

“இன்னிக்கு இவ்விடம் வேலை பார்க்கப்பட மாட்டாது. பிரியமான தோழியோடு முழு நாளையும் கழிக்கறதே அப்பக்கா சௌதா பூலோக சக்கரவர்த்தினியின் வேலை” என்றாள் அப்பக்கா கௌரவமாகப் பார்த்துக் கொண்டு. 

“என்ன வேலை வச்சிருந்தே இன்னிக்கு வேணாம்னு தள்ளிப் போட?” 

“புதுசா ஒரு பண்டகசாலை கட்டி ஏற்றுமதிக்குப் போகிற பொருள் எல்லாம் தற்காலிகமா கப்பல்லே ஏறும் வரைக்கும் அங்கே பாதுகாப்பாக வச்சிருக்கு.  அது சரியாக நடக்குதான்னு முன்னால் சொல்லாமல் கண்காணிப்பு. அதை அடுத்த வாரம் வச்சுக்கொண்டால் ஆச்சு” அப்பக்கா உற்சாகமாகச் சொன்னாள். 

”பண்டகசாலையில் என்ன என்ன பொருள் எல்லாம் கப்பல் ஏறத் தயாராக வச்சிருக்கும்?” சென்னா ஆர்வத்தோடு கேட்டாள்.

வெல்லம், கிராம்பு, லவங்கப் பட்டை, வெடி உப்பு, சாயம் ஏத்தின துணி. அப்பக்கா அடுக்கிக்கொண்டே போக, அவள் சொன்னதில் வெடி உப்பு சென்னாவின் கவனத்தை உடனே ஈர்த்தது.

”துளுவச்சி, பண்டகசாலைக்கு இன்னிக்கே போகலாம். எதுக்குத் தள்ளிப் போடணும்? நானும் வரலாமில்லே?”

 சென்னா கேட்க, ”தாராளமா வா. உன் ஜெருஸோப்பா பண்டகசாலை மாதிரி அவ்வளவு பெரிசா இல்லாட்டாலும் ஓரளவு வசதியாகத்தான் கட்டியிருக்கேன்” என்றாள் அப்பக்கா சௌதா.

”என் ரதத்திலேயே போகலாம்’ என்றாள் சென்னா மகாராணி. 

“வேணாம், நீ ஜெருஸோப்பா போய்ச் சேரும் வரை உன் ரதம் ஒழுங்கா இருக்கணும். சாலை மோசமாக இருக்கே. ஆகவே உன் சாரட்களுக்கு ஓய்வு கொடுத்திடு. என்னோட சாரட்டுலே போகலாம்”. அப்பக்கா வாசலுக்குப் போனாள். 

”வைத்தியா, மிங்கு சௌகரியமா தங்கி இருக்கீங்களா? சாப்பிட்டீங்களா? பிடிச்சிருந்ததா?  உங்க கோஷ்டியிலே மத்தவங்க எங்கே?” அப்பக்கா மகாராணி கேட்க வைத்தியர் வணங்கிச் சொன்னார் – ”குதிரை வீரர்கள் எழுந்து குளித்துப் பசியாறி மிளகு ராணியம்மா சொல்றபடி செய்ய தயாராக இருக்காங்க. நானும் தாதியும் கூட தயாராக இருக்கோம், அபயராணியம்மா”.

அப்போ உள்ளே போய்ப் பாருங்க போங்க என்றாள் அப்பக்கா. 

சென்னாவின் தாதி பாதுகைகளை எடுத்து வந்தாள்.  வைத்தியர் குளிகைகளை எடுத்து வந்தார். 

“விடாம மருந்து கொடுக்கற வைத்தியனையும் எதுக்கு கூட்டி வந்தே?”
அப்பக்கா சிரித்தபடி கேட்க, சென்னாவும் சிரிப்பில் கலந்து கொண்டாள். 

“மிளகு ராணியம்மாளுக்கு மட்டுமா மருந்து தர வந்திருக்கேன். அடுத்து அபயராணி அப்பக்காதேவியம்மாளுக்கு புதுசா கொடுக்க ரெண்டு குளிகையும் ஒரு லேகியமும் எடுத்து வச்சிருக்கேன்” வைத்தியர் மருந்துப் பெட்டியைத் திறந்தபடி சொல்ல பயந்ததுபோல் அப்பக்காவும் சென்னாவும் நடித்து ஓடி நிற்க சிரிப்புக்குக் குறையே இல்லை. 

இரண்டு ரதங்கள் – ஒன்றில் மகாராணியர், மற்றதில் மருத்துவனும் தாதியும் – ஓட ஆரம்பிக்க, குதிரை வீரர்கள் பின்னால் இடைவெளி விட்டு பாதுகாப்பு அளித்தபடி வருகின்றனர்.

“எங்கே எல்லாம் பொருள் அனுப்பறீங்க?” என்று அப்பக்காவைக் கேட்டாள் சென்னா. 

”வேறே எங்கே? போர்த்துகல் தான் முக்கியமாக” என்றாள் அப்பக்கா. 


”பத்து தடவை அவங்களோட யுத்தம் செய்து ஓட ஓட விரட்டி இருக்கே. அவங்களுக்கு பணிஞ்சு நடக்கணும்னு சொன்னதுக்காக கட்டின புருஷனோடு சண்டை போட்டு அனுப்பியிருக்கே. போர்த்துகல்லுக்கு ஏற்றுமதியா?” தீர்க்கமாகப் பார்த்தபடி சென்னா கேட்டாள்.

”என்ன பண்ணச் சொல்றே? அவ்வளவு வியாபாரம் வேறே எந்த தேசத்தோடும் ஏற்பட மாட்டேங்குது. உனக்குக் கிடைச்சா சொல்லு” என்றாள் அப்பக்கா.

“பாரேன், நான் உன்கிட்டே கேட்டா நீ என்கிட்டே திருப்பறியா?” 

“என்ன செய்ய, நிரந்தரமான பகைவர்களும் இல்லே. நிரந்தரமான நண்பர்களும் இல்லை. நாம் யாரோட இருக்கோம் நட்பா பகையா தெரியலே” என்றபடி அப்பக்கா தாழப் பறந்த ஒரு நாரையின் கூவலைப் போலி செய்தாள். சென்னா இன்னொரு நாரையாகச் சேர்ந்து கொண்டாள். 

”கூவ் கூவ் கூ கூவ் கூ”.

உள்ளால் கடற்கரையோடு சாரட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. அரபிக் கடலின் சாம்பல் வண்ணமும், ஆகாயத்தின் நீலமும் கலந்தும் தனித்தும் வெளிப்பட்டு   நிறபேதமில்லாமல் வெளி விரிந்து கொண்டிருந்தது.

 கடற்கரை நெடுகக் கரும்புச் சர்க்கரையைக் காய்ச்சி வெல்ல மண்டைகளாக உறைய வைத்து விற்பனைக்கு வைக்கும் மும்முரம் தட்டுப்பட்டது. உள்ளால் கடற்கரை மற்ற கடல் தீர நிலம் போல் மீன் வாடை அடிக்காமல், கடல் வாடையும் சற்றே குறைவாகி, வெல்ல வாடை மிகுந்திருந்தது. சாரட்டுகள் தென்னந்தோப்பு அடர்ந்த பிரதேசத்தில் போய் நின்றன.

“இங்கேதான்” அப்பக்கா கை சுண்டினாள். பண்டகசாலை நீண்டு பரந்து பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. வாசலை அடுத்து கொட்டகை போட்டு வெல்லம் காய்ச்சிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது. 

”விட்டால் பண்டகசாலைக்கு உள்ளேயே வெல்லம் காய்ச்சுவாங்க போலே இருக்கே” என்றபடி அப்பக்கா ரதத்தில் இருந்து குதித்து இறங்கினாள்.  

தாதி மிங்கு உதவி செய்ய சற்றுப் பிரயாசையோடு சென்னாதேவியும் இறங்கினாள். அவளை வரவேற்ற கடல் அலைகள் ஊன்றிய காலை அலம்பித் திரும்பின. கடல் காக்கைகள் அடர்த்தியான இருளைப் பிய்த்துப் போட்டதுபோல் கருமை மின்ன இலக்கின்றிப் பறந்தன. 

அப்பக்கா காலில் காலணி அணியாததைக் கவனித்த சென்னா கேட்டாள் – ’கால்லே ஆணி வந்து செருப்பு வேணாம்னு வச்சே தெரியும். அது ரெண்டு வருஷம் முந்தித்தானே. இன்னும் செருப்பு ஏன் கால்லே ஏறலே அப்பி?” 

”அது இல்லாமலேயே பழகிடுத்து. கடற்கரையிலே தினம் வேலையாகவும், உடல் பயிற்சியாகவும் நடக்கும்போது செருப்பு அவஸ்தை. நீயே பார்க்கலாம் இப்போ”. ஆம் என்றாள் சென்னா மிங்குவின் தோளில் கை வைத்துப் பிடித்தபடி.

தாதி மிங்கு செருப்பை வாங்கிப் போய் சாரட்டில் பத்திரமாக வைத்தாள். “ஓடாதடி.. பிள்ளைத்தாச்சி பொம்பளை” என்று சென்னா அவளைக் கண்டிக்க, அப்பக்கா மிங்குவின் தலை தடவி,”அப்படியா, பெத்துப் பொழச்சு சுகமா வாடி” என்று ஆசிர்வதித்தாள்.

அபயராணி அப்பக்காவும் மிளகுராணி சென்னபைரதேவியும் பண்டகசாலைக்குள் நுழைய பரபரப்பானது அந்த இடம். ஊழியர்கள் உறைந்து போய் ஒரு வினாடி நின்று நிகழ்காலத்துக்கு மீள, அவர்கள் செய்யும் பணியில் அதிக பட்ச கவனமும் ஆழ்தலுமாகச் செய்யத் தொடங்கினார்கள். பண்டகசாலைச் செயல் இயக்குநர் ராணியர் இருவரை வரவேற்றுத் தக்க ஆசனங்கள் அளித்து அமரச் செய்தார்.  

வர்த்தகர்கள் என்று கருதக்கூடிய இருவர் பாரவண்டியில் கொண்டு வந்த தகரப் பெட்டிகளை கீழே கோரைப் பாய் விரித்து ஈரம் பூரிக்காமல் செய்து பெட்டிகளை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். என்ன செய்யறீங்க என்று சென்னா அந்த வர்த்தகர்களில் ஒருவரைக் கேட்டாள். 

”வெடியுப்பு சூரத்துக்கு அனுப்ப தயார் செய்யறேனம்மா” என்றார் அவர். தன் சிரத்தைவிடப் பெரிய சிவப்பு நிற முண்டாசு அணிந்திருந்தார் அவர்.

வெடியுப்பு என்ற பெயர் கேட்டதுமே சுவாரசியம் ஏற்பட்டு சுறுசுறுப்படைந்தாள் சென்னபைரதேவி ராணி. 

”போர்த்துகல்லுக்கு நேரடியா அனுப்ப முடியாதா?” என்று மிளகு ஏற்றுமதி நினைவில் கேட்டாள் அவள். 

”பெரிய கப்பல்லே அனுப்ப குஜராத்து பிரதேச சூரத் துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கிறது தான் சுலபம். இங்கே பெரிய கப்பல் கொண்டு வர நிறைய மெனக்கெடணும். ஆழம் சற்று குறைவான கடல்பிரதேசம். சூரத்திலே இருந்து ஒரு மாசத்திலே லிஸ்பன் போயிடலாம். சின்னக் கப்பல்லே ஒரு அளவுக்கு மேலே வெடியுப்பு எடுத்துப் போக வழியிலே துறைமுகங்களிலே தடை இருக்கு. பெரிய கப்பல்லே எடுத்துப் போக அதொண்ணும் கிடையாது.”.

குளிகைகளோடு உள்ளே வந்த வைத்தியர் ஒற்றர்படைத் தலைவராகிக் காது கொடுத்து அங்கே பேசியதைக் கவனித்து வந்தார். 

”வெடியுப்பை என்ன பண்றாங்க போர்த்துகல்லே?” சென்னா கேட்டாள். 

”மருத்துவத்திலே பயன்படுத்தப்படுது. முக்கியமாக துப்பாக்கி வெடிமருந்து, சீனவெடி, மத்தாப்பு இப்படியான உபயோகம் அதிகமா இருக்கு”.  நீலத் தலைப்பாகை அணிந்த இரண்டாவது வர்த்தகர் சொன்னார்.

”உங்களுக்கு வெடிமருந்து எப்படி பண்றாங்கன்னு தெரியுமா?” அப்பக்கா கேட்டாள். 

’”நல்லா தெரியும். கந்தகம், வெடியுப்பு, கரித்தூள் இதை  விதிக்கப்பட்ட நுண்ணிய விகிதப்படி தண்ணீர்லே கரைச்சு சரியான வெப்பம் வரக் காய்ச்சினால் வெடிமருந்து கிடைக்கும். தப்பாகக் காய்ச்சினால் கையில் காயம் பட்டு விரலே  போறதும் உண்டு. இந்த சேர்மானங்களோட விகிதத்தை மாற்றி சக்தி வாய்ந்த அல்லது விளையாட்டுக்கான வெடி பண்ண மருந்து தயார் பண்ணுவாங்க. மருந்தைத் திணித்து திரி வச்சா வெடி விற்பனைக்குத் தயார்” என்றார் முதல் வர்த்தகர். 

”போர்த்துகல்லே இருந்து ஸ்பெயின், இத்தாலி, மெக்சிகோ எல்லா நாட்டுக்கும் துப்பாக்கி வெடிமருந்தும் பட்டாசு மத்தப்பும் லட்சக் கணக்கான வராகன் மதிப்புக்கு வருஷா வருஷம் ஏற்றுமதி ஆகுதாம்”. இரண்டாவது வணிகர் சொன்னார்.

” எங்கே   எல்லாம் வெடியுப்பு கிடைக்கறது?” அப்பக்கா கேட்டாள்.

”வடக்கு கன்னடம், தெற்கு கன்னடம் பிரதேசங்கள்லே குகைகளுக்கு உள்ளே இருந்து, தானே ஊறிக் குகைச் சுவர்கள் பூரிச்சு வெடியுப்பு படியும். நிலத்திலேயும் படிவமா கிடைக்குது. இங்கெல்லாம் வெடியுப்பு சேகரித்து அனுப்பறோம்”. 

”உள்ளால் தவிர வேறே எங்கே இருந்து வெடியுப்பு அனுப்பறிங்க?” சென்னா வினவினாள். 

அமைதி நிலவியது. அப்பக்கா அதே கேள்வியைக் கேட்டாள். தயக்கத்துக்குப் பிறகு இரண்டு வர்த்தகர்களில் ஒருவர் சொன்னது – ”அம்மா இது கேள்விப்பட்டது தான். உண்மையா இல்லாமலும் இருக்கலாம்”. 

சொல்லுங்க என்று அப்பக்கா ஊக்குவித்தாள். 

“சில காலம் வரை அதாவது நாலு வருஷம் மூணு வருஷம் முன்பு வரை ஜெருஸோப்பாவிலே இருந்தும் நிறைய அனுப்பிட்டிருந்தோம். ஆமா, சூரத்துக்குத்தான். இப்போ எல்லாம் உள்ளால்லே ஏற்றித் தான் அனுப்பறோம். ஏன்னு கேட்டா, ஜெரஸோப்பாவில் மிளகு ஏற்றுமதிக்கு மிக அதிக முக்கியத்துவம் இருக்கறதாலே வெடியுப்பு அவ்வளவா கவனிச்சு செய்யறதில்லே. லிஸ்பன் வாடிக்கையாளர்கள் புகார் சொல்றாங்க’. 

”என்ன புகார்?” சென்னாவும் அப்பக்காவும் ஒருசேரக் கேட்டார்கள். 

”அனுப்பற வெடியுப்புலே சில பெட்டி ரொம்ப மோசமான தரத்திலே இருக்கு. அல்லது எடை குறைவா இருக்கு. அல்லது பெட்டியே காணாமல் போகுது. இப்படித்தான் புகார். இவ்வளவுக்கும் நாங்க அனுப்பி வைக்கிறது நயம் வெடியுப்பு தான்”. 

முண்டாசு நனைந்து முகம் வியர்ப்பில் குளிக்க இரு வர்த்தகர்களும் தர்மசங்கடமான நிலையில் நின்றார்கள். இதைக் கேட்க ஆரம்பித்திருக்க வேண்டாம் என்று சென்னாவுக்குப் பட்டது. அப்பக்காவும் இதை முடிவுக்குக் கொண்டுவர அவசரம் காட்டினாள். என்ன இருந்தாலும் அவளுடைய குடிமக்கள் இந்த வணிகர்கள் இருவரும். அவர்களை இக்கட்டில் விடக்கூடாது.

”ஜெர்ஸூப்பாவில் உங்க சரக்கைக் கையாண்டு வெடி உப்பை அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் எடுத்துக்கறாங்களா?”

 ”அப்படித்தான் தோணுதுங்கறாங்க”. 

”எங்கே? இங்கே வர்ற சிறு கப்பல்களிலா?” 

”இல்லே கப்பல்லே இதை செய்ய முடியாது. ஜெர்ஸூப்பா பண்டகசாலையிலே தான்”. 

யாரோ தேங்காய் வழுக்கையும், புதிதாகக் காய்ச்சி உறைய வைத்த வெல்லமுமாக வந்து இரண்டு மகாராணியாரிடமும் தட்டுக்களை நீட்டினார்கள். 

சென்னாவும், அப்பக்காவும் பயத்தோடு வைத்தியரைப் பார்த்தார்கள். 

”பரவாயில்லே அம்மாவரே, தேங்காய் விள்ளலும் மண்டை வெல்லமும் சாப்பிட நல்லா இருக்கும். சாப்பிடுங்க. அப்புறம் வேப்பிலை லேகியம் இருக்கவே இருக்கு”.

பண்டகசாலை வாசலில் சத்தம். 

”நீங்க உள்ளால், பனகுடி, ஜெர்ஸூப்பா, ஹொன்னாவர், பட்கல் இப்படித்தான் சுத்திட்டிருப்பீங்க. நான் ராஜா இல்லே சக்கரவர்த்தி ஆகப் போறேன். ஆப்பிரிக்காவுக்கு சக்கரவர்த்தி. ஆவி வந்து சொல்லிட்டுப் போச்சு. அப்பக்காளே நீயும் உன் சிநேகிதியும் குண்டு சட்டியிலே குதிரை ஓட்டுங்கடி. லிஸ்பன்லே இருந்து கூப்பிட்டுத் தருவாங்க பார்த்துக்கிட்டே இரு. கிழவிங்க காலம் எல்லாம் முடியப் போகுது பாரு”. 

அப்பக்காவின் கணவன் வீரு என்ற வீரநரசிம்மன், அங்கே போதையில் நின்றான்.

Series Navigation<< மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்றுமிளகு அத்தியாயம் நாற்பத்திமூன்று >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.