நீண்ட வாழ்வே சாபமோ?

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
誰をかも
知る人にせむ
高砂の
松も昔の
友ならなくに

கனா எழுத்துருக்களில்
たれをかも
しるひとにせむ
たかさごの
まつもむかしの
ともならなくに

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் ஒக்கிகசே

காலம்: கி.பி 10ம் நூற்றாண்டு.

இவரது பிறப்பும் இறப்பும் எப்போது எனக் குறிப்பாகத் தெரியவில்லை. ஆனால் கி.பி 911 முதல் 914 வரை சகாமி மாநிலத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய குறிப்பு காணப்படுகிறது. தற்போது காணக்கிடைக்கும் மிகப்பழமையான ஜப்பானிய இலக்கியம் “கக்யோ ஹ்யோஷிக்கி” ஆகும். இதை இயற்றிய புலவர் ஹமானாரி இப்பாடலாசிரியரின் கொள்ளுத்தாத்தா. ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 17 பாடல்கள் கொக்கின்ஷூ தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. இவை தவிர 28 பாடல்கள் ஒக்கிகசேஷூ எனும் தனிப்பாடல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கொக்கின்ஷூவைத் தொகுத்த புலவர் ட்சுராயுக்கியின் சமகாலத்தவர். இவரும் காலத்தால் அழியாத 36 பழங்கவிஞர்களுள் ஒருவர். பல்வேறு பாடல்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றிருக்கிறார். கங்கென் எனப்படும் இசைவகையிலும் வல்லவர்.

பாடுபொருள்: முதுமையில் வாட்டும் தனிமை.

பாடலின் பொருள்: இனி நான் யாரை நண்பர் எனக் கூறுவது? என்னைவிட நீண்டகாலம் வாழும் இந்த ஊசியிலை மரமும் எனக்கு நண்பனாக இல்லையே?

முதுமை நெருங்க நெருங்க நெருங்கியவர்கள் ஒவ்வொருவராக இவ்வுலகை விட்டு நீங்குவதைப் பார்த்துக்கொண்டே உயிருடன் இருப்பது கொடிதிலும் கொடிது. இந்தப் பாடலும் அதுபோல நண்பர் எனக் கடைசியாக இருந்தவரும் இறந்துபோக, அப்போது இயற்றப்பட்ட கையறுநிலைப் பாடல். தொடர்ந்து பிரிவையே பார்த்தவர்களுக்கு அந்தத் துன்பமும் ஒரு கட்டத்தில் இல்லையென்று ஆகும் நிலையை இப்பாடல் படிப்போர்க்குக் கடத்துகிறது.

ஜப்பானிய இலக்கியங்களில் ஊசியிலை (பைன்) மரம் நீண்ட வாழ்வுக்கு உவமையாகப் பல இடங்களில் கூறப்படுகிறது. ஜப்பானின் மிக வயதான ஊசியிலை மரம் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தது எனக் கணித்திருக்கிறார்கள். கொக்கின்ஷூ தொகுப்பில் பல இடங்களில் வயதான ஆண் மற்றும் பெண் ஊசியிலை மரங்கள் இணையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இரண்டுக்கும் இடையில் நீண்ட இடைவெளி இருந்தாலும் குறையாத அன்பைக் கொண்டிருப்பவை என விதந்தோதப்படுகின்றன. ஆனால் இப்பாடலில் சோகத்தைக் கூட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இப்பாடலில் வரும் தக்காசாகோ என்னும் இடம் தற்போதைய ஹ்யோகோ மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை நகராகும். இங்குக் கடற்கரையில் ஓர் ஊசியிலைக்காடு உள்ளது. கீழேயுள்ள படத்தில் வட்டமிட்ட இடத்தைக் காண்க.

வெண்பா:

பிரிவின் வலிதனைக் கண்டோர் தொடரும்
பிரிவில் துயரெதுமில் லென்பர் – பிரிவின்
நிலைதான் நிரந்தரம் என்னும் முதுமைத்
தனிமை மிகவும் கொடிது

Series Navigation<< சக்குராவின் சலனம்மனித மனமும் மலர் மணமும் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.