
சிலருக்கு எண்ணங்கள் காட்சியாக எழும்; சிலருக்கோ சொற்களாக. நாம் சிந்திக்கும் விதத்தை அவ்வளவு எளிமையாக வகை பிரிப்பதும் கடினமான ஒன்றுதான்.
‘செம்பருத்தி’ என்ற அற்புத நாவலில் தி ஜா ஒரு உரையாடலைக் காண்பிக்கிறார். “அன்று வானம் மோடிட்டிருந்தது; நீங்கள் ஆகாய வண்ண மேற்சட்டையுடன் கடைக்குப் போக ஆயத்தமாகிக் கொண்டிருந்தீர்கள். கையில் சாவிக்கொத்துடன் பையும் இருந்தது; நமக்கு ஏதும் தேவையா என்று கேட்டீர்கள்.” சாமிநாதன் அசந்து போவான். புவனா ஒவ்வொரு நாளையும் அதன் சூழல்களோடு காட்சியாக விவரிப்பது அவனுக்கு ஆச்சர்யமாக இருக்கும். (உரையாடல் இந்தச் சொற்களில் தானா என்று உறுதிப்படுத்த முடியவில்லை. நினைவிலிருந்து எழுதுகிறேன். ஆனால், கருத்து இதுதான்.)
அது ஒரு இலக்கியக் கூடுகை. குற்றாலக் குறவஞ்சியைப் பற்றி பேச்சு எழுந்தது. ‘வானரங்கள் கனி கொடுத்து’ என்று பாடலை ஒருவர் சொல்லத் தொடங்கினார். அடுத்த வரி அவருக்கு வரவில்லை. நான் தொடர்ந்தேன்- ‘மந்தியோடு கொஞ்சும், மந்தி சிந்து கனிகளுக்கு …. என்று தொடர்ந்து. செங்கதிரோன் திரைக்காலும், தேர்க்காலும் வழுகும்..’ என்று நான் சொல்லும்போது கூட்டத்தின் நடுவர் ‘அப்படி ஒரு வரி கிடையாது’ என்றார். நான் பிரமித்துப் போய் அப்படியே விட்டுவிட்டேன். அப்புறம் நினைத்துக் கொண்டேன்- நான் சொன்னது நான் படித்த குறவஞ்சி, அவர் நினைவில் எது இருந்ததோ? நான் தன்னிச்சையாக வினை ஆற்றியதும், அதில் ஒரு இடைவெட்டு வர மேலே தொடராததும், நான் சொற்களாகக் கண்ட ஒரு செய்யுள், அவருக்குக் காட்சியாகத் தெரிந்திருக்கக்கூடும் என்பதும் பின்னர் புரிந்தன. ‘தேனருவித் திரை எழுந்து வானின் வழி ஒழுகும், செங்கதிரோன் பரிக்காலும், தேர்க்காலும் வழுகும்’ என்ற வரி சூரியன் வழுக்குவதை அவருக்குக் காட்டியிருக்கக் கூடும். முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது சில சிந்தனைகளும், மீட்டெடுப்பும் வார்த்தைகளால் நிகழ, சில காட்சி மீட்டெடுப்பால் நிகழ்கின்றன.
குடும்பங்களில் நாம் பொதுவாக ஒன்றைப் பார்ப்போம். ஒருவர் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பார்/அல்லது இருப்பது போலத் தோன்றும். ‘என்ன சிந்தனை?’ என்று கேட்டோமானால், ‘ஒன்றுமில்லை’ எனப் பதில் வரும். ஒன்றுமில்லாததை எப்படிச் சிந்திக்கிறார்கள் என்பது வியப்பு. ஆனால், மனம் தாவித்தாவி எண்ணச் சொற்கிளைகளைப் பற்றிக் கொண்டிருக்கும். சிந்தனை இல்லாமல் வாழ்வை நாம் அதன் இயல்பில் வாழ்ந்தோமென்றாலும், நாம் பேசும் போது, உள்ளே ஒடுங்கி இருந்த எண்ணங்கள் வெளி வந்துவிடும். நாம் இரகசியங்களைச் சொல்வோம் என்ற பொருளில்லை இதற்கு. நாம் சிந்தனையற்று இருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தாலும், அவைகள் மூளையில் ஒடுங்கியிருந்து வாக்கினில் வெளிப்பட்டு விடுகின்றன.
நமக்கு நாமே பேசிக்கொள்வது நடக்கிறது. ‘நாளை பூஜைக்கு அதிகமாக பூக்கள் வாங்கி வர வேண்டும்’ என்று நம்மிடமே நாமே சொல்லிக்கொள்வோம். அது உரத்துக் கூட வெளியில் கேட்கும். மௌனமும், ஒன்றுமற்ற நிலையும் பெரும்பாலும் நிலவினாலும், தனக்குத் தானேயோ, பிறர் காதுபடவோ மனிதன் பேசுவான். இந்த வகை மனிதர்களின் சிந்தனைகள் சொற்களால் அமைகின்றன. கண்களின் பின்புறத்தில் ஏற்படும் அழுத்தமாக எண்ணங்கள் இவ்வகையினருக்கு ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது. ஆனால், அந்தச் சிந்தனைகள் நிறைவு பெறுவது பேச்சினால் தான். இந்தக் கட்டுரையாளரிடம் உரையாட ஒருவரும் இல்லாத போது, அவர் முணுமுணுத்துக் கொள்வாராம், எழுதுவாராம், நீந்தச் சென்று யார் காதிலும் விழாத வண்ணம் அங்கே பேசுவாராம். நம்மில் சிலர் காற்றில் கைவிரல்களால் எதையோ எழுதிக் கொண்டோ, வரைந்து கொண்டோ, முணுமுணுத்துக் கொண்டோ, பாடிக்கொண்டோ செல்வதைப் பார்த்திருக்கிறோம் இல்லையா?
‘என் மூளை காட்சிப்படுத்தலில் குறைந்த திறனுடன் உள்ளது. நான் ஆர்வமற்ற பேச்சாளன்; தொழில்முறை எழுத்தாளன்; என் மூளையில் நிறைந்துள்ளவற்றை எங்கே கைப்பற்ற முடியுமோ, அங்கே செல்வேன். தன் கனவுகளில் புரதங்களை மாற்றி அமைத்து ‘டெட்ரிஸ்’ (Tetris) விளையாடும் விஞ்ஞானியை எனக்குத் தெரியும். என் மனைவி அடிக்கடி தொலைவில் நோக்கிக் கொண்டிருப்பார். அதன் பொருள், ஒரு சிக்கலான நாடக வரிகளை அவர் தன் மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருப்பார் என்பது. சில சமயங்களில், முழு வாக்கியத்தையும் மௌனமாகச் சொல்லி, பிறகு அதை வெளியில் கேட்குமாறு பேசுவார்.’ என்று எழுதுகிறார் கட்டுரை ஆசிரியர்.
டெம்பில் கிரேண்டின் (Temple Grandin) சமீபத்தில் ஒரு நூலை வெளியிட்டுள்ளார்: ‘காட்சி சிந்தனை: படங்கள், வகைமைகள், சுருக்கக் குறிப்புகள் வழியே சிந்தனை செய்வோர் பெற்றுள்ள மறைமுகப் பரிசு. (Visual Thinking: The Hidden Gifts of People Who Thinks in Pictures, Patterns, and Abstractions) அவருடைய மனது உருவங்களால் நிறைந்துள்ளது; அவரால் அவற்றைத் துல்லியமாக, ஒத்திசைவோடு கோர்க்க முடியும் என்று சொல்கிறார். கொலராடோ பல்கலையில், விலங்கு நடத்தையியல் மற்றும் உழவுப் பொறியியலாளராகப் (Animal Behaviourist and Agricultural Engineering) பணியாற்றும் அவர், உழவுக் கட்டமைப்புகள் மற்றும், விலங்குகள் மாய்க்கப்படும் கூடங்களின் (Slaughterhouses) வடிவமைப்பில் பங்கேற்றுள்ளார். ஒரு புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டுமென்றால், அவர் திட்டத்தை ஒரு பார்வையிட்டுவிட்டு, தன் மனதில் தங்கியுள்ள பழைய திட்டங்களின் வடிவமைப்பை நினைவில் கொண்டு வந்து, இந்தப் புதுக் கட்டிடத்திற்கான செலவு முந்தைய ஒன்றைப் போல இரு மடங்கு அல்லது முக்கால் மடங்கு என்பதைத் துல்லியமாகச் சொல்லி விடுகிறார்.
பெருந்தொற்றுக் காலத்தில், மருந்துகள் நம்மை எப்படி கோவிட்-19லிருந்து காக்கும் என்பதைப் பற்றி பல கட்டுரைகளை அவர் படித்தார். அப்படிப் படிக்கையில் முற்றுகைக்கு உள்ளான இராணுவ முகாமாக உடலை உருவகித்துக் கொண்டார். சைடோகைன் புயல் (Cytokine Storm)- அதாவது நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகச் செயல்படும்போது, கட்டுப்பாடில்லாமல் வீங்கி- என்பதையெல்லாம் அவர் சொற்களாக உள்வாங்கவில்லை. அவர் எழுதுகிறார் : “என் நோய் எதிர்ப்புச் சக்தி வீர்ர்கள் வன்முறை கொண்டவர்களானார்கள். அவர்கள் குழப்பமடைந்து அடியிலே தீ வைத்தார்கள்.” தன் இளம் பருவ நினைவுகளை முப்பரிமாணப் படங்களாக அவர் வெளியிடுகிறார். ‘பனிச்சறுக்குதல், அந்த வண்டி ஏறி இறங்கி ஒடிய விதம்’ என்ற நுண்ணிய விவரங்கள் அவரது மனக் கண்களில் எழுகிறது. நம்மில் பலர் இத்தகைய திறனிற்காக ஏங்கவும் கூடும். நாம் சிலதை நினைவு கூருகையில், அது நிகழ்ச்சியை அவ்வாறே நினைவு வைத்திருக்கிறோமா அல்லது நம் கற்பனையும் கலந்துள்ளதா என்ற ஐயம் நமக்கு (சொற்களால் சிந்திப்பவர்களுக்கு) ஏற்படும். காட்சியாக சிந்திப்பவர்களின் மனம் ஐமேக்ஸ் தியேட்டர் என்றால், சொற்களால் சிந்திப்பவர்கள் தொலை நகலைப் (Fax) போன்றவர்கள்.
நம் தத்துவமே ‘உன் மனதைக் கவனி’ என்பதுதான். தியான வழிமுறைகளில் நம் சிந்தனையை பலவந்தமாகக் கட்டுப்படுத்தாமல், அதன் போக்கை கவனிப்பது முக்கிய இடம் பெறுகிறது. வில்லியம் ஜேம்ஸ் (William James) இதை ‘உணர்வுகளின் பெருக்கு’ என்று சொல்கிறார். நம் மன வாழ்வென்பது பறவைகளைப் போல பறப்பதும், அமர்வதும் தான் என்று அலங்காரமாகச் சொல்கிறார். இது முழு சித்திரமல்ல. ஆனால், திண்ணமாக, தன் மனதினுள் என்ன சிந்தனை ஓடுகிறது என்பதை கிரேண்டினால் சொல்ல முடிகிறது. அவரது எழுத்து பலவகை மனங்களைக் காட்டுகிறது. மெய்யியலாளர் தாமஸ் நேகல் (Thomas Nagel) தனது 1974ம் வருடக் கட்டுரையில் ‘ஒரு வௌவாலைப் போலிருப்பது எப்படி?’ (What it is likely to be a Bat?) என்றொரு சிந்தனைக் கேள்வியை முன் வைத்தார். நாம் பார்க்கும் விதமும், வௌவால் பார்க்கும் விதமும் முற்றிலும் மாறுபட்டவை என்பதால் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது அது.
சொல்லால் சிந்திப்பவர்களோ, காட்சியால் எண்ணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளவரோ, வேறு வழிகளில் ஒரே இடத்திற்குத் தான் செல்கிறார்கள். நாம் மாறுபாடு கொண்டவர்கள் என்று எவ்விதம் நம் மனம் தீர்மானிக்கிறது? அந்த மாறுபாட்டை எப்படிக் கையாள்வது?
ஆடிச பாதிப்புள்ள கிரேண்டின், 1995-ல் தன் பலவருட நினைவுகளை, அதாவது காட்சியாகவே அவருக்குப் புலப்படும் எண்ணங்களை, எவ்விதத்தில் ஒரு அரிய பரிசாக மாற்றலாம் என்பதை ‘திங்கிங் இன் பிக்ஸர்ஸ்’ (Thinking in Pictures) என்ற கட்டுரையாக வெளியிட்டு புகழ் வெளிக்கு வந்தார். பண்ணை வீடுகளை விலங்குகளின் கண்ணோட்டத்தில் பார்த்தார். விலங்குகள் கொலையுறும் இடங்களில் அவைகள் சிறு அசைவிற்கும் கவனம் சிதறி, குழப்பமடைவதைப் பார்த்தார். இந்தக் கட்டுரை, பல்வகையில், நரம்பு வேறுபாடுகள் இருப்பதைக் கோடிட்டுக் காட்டியது.
இந்த ‘காட்சி சிந்தனை’ நூலில் அவர் தன் கருத்தை அழுத்தமாக முன் வைக்கிறார்- சொற் சிந்தனையாளர்கள், வேறுவகைப்பட்ட சிந்தனையாளர்களை ஒரம் கட்டிவிட்டனர் என்று சாடுகிறார். இவர்கள், காட்சி வழிக் கற்றலை, ஊக்குவிக்கவில்லை. மாறாக, பயமுறுத்தும் சொல்வலைகளால் அனைவரையும் பிணைத்து அதற்குள் அடைக்கின்றனர். அமெரிகாவில் இதனால் கூர்மதியாளர்கள் குறைந்து விட்டனர். மின்னாளர், கட்டிடம் கட்டுவோர், குழாய்களை அமைப்போர், செயற்பொறி வல்லுனர், கருமார்கள் ஆகியோர் காட்சித் திறன் படைத்தவர்கள் என்று சொல்பவர், அவர்களை நாம் இருட்டில் வைத்துள்ளோம், அவர்களுடைய பங்களிப்பை போற்றுவதில்லை என்றும் சொல்கிறார்.
இந்த உலகம் சொற் சிந்தனையாளர், காட்சி சிந்தனையாளர் என்ற இரு பிரிவாக இருந்தது. இந்தக் கருத்தை மென்மையாக மாற்றி சிந்தனைத் தொடர்ச்சியை அடையாளம் கண்டு, அதை ஏறக்குறைய மூன்று பகுதிகளாகக் காட்சி சிந்தனையாளர்கள் செய்துள்ளனர். ஒரு முனையில் இருக்கும் சொற் சிந்தனையாளர்கள், வார்த்தைகளால் எந்த ஒரு சிக்கலையும், பகுத்துப் பகுத்து, அதன் அங்கங்களை அறிந்து தீர்வு சொல்கிறார்கள். இந்தத் தொடரியின் மறு முனையிலோ, ‘பொருளைக் காண்பவர்கள்’ (Object Visualisers) இருக்கிறார்கள். இவ்வகையினர் புகைப்படம் போல காட்சிகளைக் காண்கிறார்கள். இந்த இரண்டு முனைகளுக்கிடையில் ‘இடம் சார்ந்த சிந்தனையாளர்கள்’ (Spatial Visualisers) வருகிறார்கள். இவர்கள், மொழியையும், உருவினையும் இணைத்து, காண் வகைகளாகவும், அதன் அடர்ந்த சுருக்க வடிவாகவும், கவனித்து செயல்படுகிறார்கள்.
அவர் ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறார்: சொற் சிந்தனையாளர்கள், ஒரு தேவாலயத்தின் அலங்கார செங்குத்து கோபுரங்களை, (steeple) இரு தெளிவற்ற கோடுகள் தலைகீழ் ‘v’யைப் போல என்று சொல்வார்கள். பொருளை மனக் கண்ணில் காண்பவர்கள், தேவாலயங்களில் அவர்கள் கண்ட குறிப்பிட்ட செங்குத்துக் கோபுர வடிவங்களைச் சொல்வார்கள். அவர்களின் மனக் கண்ணில் அத்தகைய ஒரு புகைப்படமோ அல்லது அதை ஒத்த ஓவியமோ தோன்றும். ‘ஸ்பேஷியல் விஷுவலைசர்ஸ்’ (Spatial Visualizers) பொதுவான, தாங்கள் பார்த்திருந்த தேவாலய செங்குத்து அலங்காரக் கோபுரங்களை இணைத்து பதில் சொல்வார்கள். இதற்குக் காரணம், அவர்கள் அதன் வகைமைகளை தம்முள் வகைப்படுத்தி வைத்திருப்பதுதான்.
இரண்டு வகை காட்சி சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள் என்ற கருத்து கிரேண்டின்னுக்கு ஏற்புடையதாக இருக்கிறது. ஒத்த மனமுடைய மனிதர்களிடத்திலும் தென்படும் மாறுபாடுகளை இந்த இரட்டைப் பிரிவு தெளிவு படுத்துகிறது. ஒரு பொறியியலளர், மற்றும் செயற்பொறியாளரை எடுத்துக் கொள்ளுங்கள். இருவருமே காட்சி சிந்தனையாளர்கள். இயந்திரத்தின் பாகங்களை மனதில் கொண்டு அது எப்படி வேலை செய்யும் என்று நினைப்பவர் பொறியியலாளர். ஆனால், அந்த இயந்திர இயங்கு ஓசையின் மூலம் அதை அறிபவர் ‘மெகானிக்’.
கலைஞர்களும், கலை வினைஞர்களும் பொருளை மனக்கண்ணில் பார்ப்பவர்கள். இந்தச் சிலை எந்த வடிவில் வர வேண்டும், இந்தத் தையல், உடுப்பில் எங்கே இடம் பெற வேண்டும் என்பதை அவர்கள் மனதால் பார்க்கிறார்கள். அறிவியலாளர்கள், கணிதவியலாளர்கள் போன்றோர் ‘இடம் சார்ந்த சிந்தனையாளர்கள்.’
இந்த நூலில் அவர் ஒரு பரிசோதனையைப் பற்றி சொல்கிறார். ‘மரைன் கார்ப்ஸ்’ (Marine Corps) நடத்திய இந்தப் பயிற்சியில் ஒரு புறம் விஞ்ஞானிகளும், பொறியியலாளர்களும்; மறுபுறம் வாகனங்களை சீர் செய்வோரும், வானொலி சீரமைப்போரும் இடம் பெற்றனர். சவால் என்ன என்றால், குவிந்திருக்கும் குப்பை வாகன உதிரிகளிலிருந்து அடிப்படையான ஒரு வண்டியை அமைக்க வேண்டும். இந்த யதார்த்தச் சூழலில் பொறியியலாளர்கள், மிக அதிக சிந்தனைக்குள்ளாகி செயல்படமுடியாமல் போனார்கள்; ஆனால், காட்சி சிந்தனையாளர்களான சீரமைப்போர்கள், பார்த்தனர், கட்டினர், சீரமைத்தனர். (எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டனர்- கம்பன்)
(Linda Silverman) லிண்டா சில்வர்மேன் என்ற மனோதத்துவ நிபுணர் நடத்திய ‘ஆம் அல்லது இல்லை’ என்ற சோதனையை இதில் கிரேண்டின் குறிப்பிடுகிறார். அது சொற் சிந்தனையாளரையும், காட்சி சிந்தனையாளரையும் பகுத்தறிய உதவும் ஒன்று.
அவர் கேட்ட கேள்விகள்:
- நீங்கள் உருப்படங்களால் முதன்மையாகச் சிந்திப்பவரா?
- ஏன், எப்படி என்று விளக்க முடியாமல் போனாலும், பொருட்களைப் பற்றி அறிந்திருப்பவரா?
- பார்த்ததை நினைவில் வைத்து, கேட்டதை மறப்பவரா நீங்கள்?
- வெவ்வேறு கோணங்களில் பொருட்களைப் பார்க்க முடியுமா உங்களால்?
- வாய்ச் சொல்லில் வரும் திசை அறிதலைக் காட்டிலும், வரைபடத்தைச் சார்ந்து இயங்குபவரா?
காட்சி சிந்தனையாளர்கள், இதில் பல கேள்விகளுக்கு ஆம் என்றே பதில் சொல்வார்கள். இதைப் போன்ற பல கேள்விகள் இருக்கின்றன.
அறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானியான (Cognitive Neural Scientist) மரியா கொழிவ் நிகோவ், (Maria Kozhevnikov) காட்சி சிந்தனையாளரையும், இடம் சார்ந்த சிந்தனையாளரையும் அடையாளம் காணும் வகையில் ஒரு சோதனை செய்தார். வெவ்வேறு தானியங்களின் வடிவம் மற்றும் அடர்த்தியை மனதால் பார்க்கும்படி பங்கேற்பாளர்கள் கேட்டுக் கொள்ளப் பட்டனர். உதாரணத்திற்கு திராட்சைக் கொத்துக்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டென்னிஸ் மட்டையின் சர இடைவெளிகளை விட இந்தத் திராட்சை பெரிதாக இருக்கிறதா? கிரேண்டின், இந்த பரிட்சையை எதிர் கொண்ட போது, டென்னிஸ் மட்டையின் இடைவெளியை விட திராட்சைகள் பெரிதாக இருந்ததால், அவற்றை அழுத்தி, அந்த இடைவெளியில் பொருத்துவதை மனக் கண்களில் பார்த்தேன் என்று சொல்கிறார். ‘திராட்சைகள் பெரிதாக இருந்தன என்பதில் எனக்குத் தெளிவிருந்தது; ஆனால், அவைகள் அழுத்தப்படுத்தப்படுவதைப் பற்றிய தெளிவான சித்திரம் கிடைக்கவில்லை.’
மிசிகன் பல்கலையில் கற்பிக்கும், நரம்பியல் விஞ்ஞானியும், மனோதத்துவருமான எதென் க்ராஸ், (Ethan Kross) காட்சி சிந்தனையாளர்கள், சொற் சிந்தனையாளர்களை விட எண்ணக் கவர்ச்சி தருபவர்கள் எனச் சொல்கிறார். ‘அரட்டை (இரைச்சல்): நம் மனதினுள் இருக்கும் குரல், அது ஏன் பொருட்படுத்தத் தக்கது? அதற்கு சேணம் இடுவது எப்படி?’ (Chatter: The Voice in Our Head Why it matters and How to Harness it) என்ற கட்டுரை சில கோணங்களைக் காட்டுகிறது. உட்செவி, (inner ear) உட்குரல் (inner voice) உள்ளிட்ட ஒலியியல் வளையங்களில் (Phonological loops) க்ராசிற்கு ஆர்வம் அதிகம். இந்த ஒலி வளையம் நரம்பு சம்பந்தப்பட்ட ஒன்று. நம்மைச் சுற்றி நடக்கும் எதனிலும் உள்ள சொற்களின் பரிவர்த்தனை அல்லது அகற்று (Clearing House) மையம் என இதைச் சொல்லலாம். இவரைப் பொறுத்த வரை சொற் சிந்தனையாளர்கள் ஒற்றை நீண்ட பாடலைப் பாடுபவர்கள்.
ஒலி வளையங்களைப் பற்றி கேள்வி எழுப்பிய மன இயல் நிபுணர்கள், மனிதர்கள் இதை பலவற்றிற்கும் பயன்படுத்துகிறார்கள் என அறிந்தனர். இந்த ஒலி வளையம் என்பது சிறு தற்காலிக குறிப்பேட்டைப் போன்றது. இது சுய நிர்வாகத்திற்கும் பயன்படுகிறது. தங்கள் பெற்றோர்களின் உபதேசங்கள் அல்லது ஊக்குவிப்புகளை சிறு குழந்தைகள் தனக்குள் உரக்கப் பேசிக் கொண்டும், பிறகு மௌனமாக அதையே உள்ளூரச் சொல்லிக் கொண்டும் இருப்பதை நாம் பார்க்கிறோம். (அந்தப் பேனாவை எடுத்து கண்டபடி என் புத்தகத்தில் கிறுக்காதே!) நம் உட்குரலின் மூலம் நம் முன்னேற்றத்தை நாம் கண்காணிக்கிறோம். எதை அடைய வேண்டும்/ என்ன செய்ய வேண்டும் என்பது நம் உட்பேச்சுக்களில் நிறைந்துள்ளது; ‘இந்த கார் சாவியை எங்கே வைத்தேன்? ஆ, மருத்துவ ஆலோசனைக்கான நாள் அல்லவா இன்று? ஓ, சாவியைத் தேடு’
2010களில் பரவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ந்யூயார்க்வாசிகளிடம், பிரித்தானிய மானுடவியலாளரான ஆன்ட்ரூ இர்விங், (Andrew Irwing) தங்களது அந்நேர எண்ணங்களை குரல் பதிவுகளாகத் தரச் சொல்லி கேட்டார். அது முழுதும் உண்மையான ஒன்றாக இருக்கும் எனச் சொல்வதற்கில்லை என்று சொல்லும் க்ராஸ், அதில் உண்மைகளும் இருக்கும் எனவும் எடுத்துக் கொள்கிறார். தங்கள் உட்குரலில் அவர்கள், ஈர்க்கும் அழகினை வியந்தார்கள்; போக்குவரத்து நெரிசலை சபித்தார்கள். தொடர்புள்ளவைகளிலிருந்து, மறைமுக உள்ளடக்கங்கள் வெளிவந்தன. ஒரு பெண் சொன்னார் “இங்கே ஸ்டேபில்ஸ் ( Staples-அலுவலக அறைகலன் போன்ற பொருட்கள் விற்கும் இடம்) இருக்கிறதா என்று நினைத்தேன்; உடனடியாக புற்று நோயாளியான நண்பியையும் நினைத்தேன். இந்தக் கெட்ட செய்தியை தனக்குள் பேசிக்கொண்ட அவர், உடனே “இங்கே ஸ்டேபில்ஸ் இருக்கிறதா? ஆம், இருக்கிறது” என்று விட்டுப் போன அந்த நினைவைத் தொடர்கிறார்.
ஒலி வளையத்தில் சிக்குவது எளிது; தன்னுரையாடல் வலியுறுத்தும் ஒன்றாகி விடும். உள்ளே நடைபெறும் எதிர்மறை எண்ணங்களில் சிலர் சிக்குண்டு அந்த ‘அரட்டை’யிலிருந்து வெளிவரத் தவிப்பார்கள். இர்விங்கிடம் குரல்பதிவைக் கொடுத்த ஒரு பெண், சொல்கிறார் “என் நண்பன், ஊரில் தற்சமயம் இல்லாதவன், ஏதேனும் பேருந்து விபத்தில் இறந்து விட்டானா அல்லது வேறு யாருடனாவது ஓடிவிட்டானா?” ரிக் ஏங்கியல் (Rick Ankiel) என்ற ‘பேஸ்பால்’ விளையாட்டு வீர்ர், வெளிவட்டத்தில் தன்னை நிறுத்திக் கொண்டார்; காரணம், அவரது உட்குரல் இடை விடாது ‘பிட்சிங்கிற்கான பௌதீகப் பாகங்களை, அதன் இயக்கங்களைப் பற்றி ஓயாது பேசியதுதான்.
உள் உரையாடல் கொண்டவர்கள், தன்னைப் பற்றி, தன் உணர்வுகளைப் பற்றி, ஆசைகள், ஆவல்கள் பற்றி சிந்தித்த வண்ணமிருப்பார்கள். இந்தத் தன் மையமானது வெளியில் உரத்த குரலில் ஒலிக்கும். 1980ல் மனோதத்துவவாதியான பெர்னார்ட் ரைம், (Bernard Rime) நாம் ஏன் நம் எதிர்மறை எண்ணங்களை பிறரிடம் சொல்கிறோம் என ஆராய்ந்தார். கெட்ட அனுபவங்கள், அசை போடுவதோடு நிற்பதில்லை, அதை வெளிப்படுத்தும் இச்சையையும் கொண்டவை. நாம் மகிழ்ச்சியாக இல்லை என்பதை மற்றவரிடம் சொல்கையில், அவர் நம்மை விட்டு விலகிச் செல்கிறார். நடுப்பள்ளி மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், தங்களது கடுமையான அனுபவங்களை தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் மாணவர்கள் அந்தக் குழுவிலிருந்தே விலக்கப்படுகிறார்கள் என்று கண்டறிந்திருக்கிறார்கள். (நாம் சொல்லி அழ ஒரு தோளைத் தேடுபவர்கள்; கேட்பவர்கள் வம்பு பேசினாலும், நம் மனது சொல்லி அழுதவுடன் தெளிவாகிறது என்பது நம் அணுக்குமுறை- இது கூட கலாச்சார வேறுபாடோ?)
க்ராஸ் சொல்லவருவது நம் உட்குரல் சக்தி மிக்கது, அதை பழக்க வேண்டும் என்பதைத்தான். நம் இரைச்சலை அடக்க பல உபாயங்களையும் அவர் தருகிறார். ‘தொலைவு-தன் உரையாடல்’ (distanced self-talk) என்பதை முயலச் சொல்கிறார். உங்கள் பெயரையும், உங்களையும் இரு தொலைவிலுள்ள நபராக எடுத்துக் கொண்டு முயன்றீர்கள் என்றால், நம் சிந்தனையின் மீது நமக்கு கட்டுப்பாடு வரும். இதை ஒரு நண்பருக்கு, அவரது பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தரும் குறிப்புகளாக, உலகெங்கிலும் இந்த அனுபவம் ஏற்பட்டுக் கொண்டுதானே இருக்கிறது என்ற சமாதானமாக, இதை ஒரு சவாலாக எதிர்கொள்வோம் என்ற நினைப்பாக, நம் உட்குரலின் இரைச்சலை கட்டுக்குள் வைக்கலாமென்று க்ராஸ் சொல்கிறார்.
சொற் சிந்தனையாளரோ, காட்சி சிந்தனையாளரோ- இவர்களைத் திட்டவட்டமாக வரையறை செய்ய முடியாது. இதைப் பற்றி தொடர்ச்சியில் பார்ப்போம்.
‘காண வந்த காட்சி என்ன வண்ண நிலவே?’
அடுத்த பகுதி:
Ref: How should we think about different styles of Thinking? Article by Joshua Rothman dt 09/01/2023.
One Reply to “சொல்லா, காட்சியா, எண்ணங்கள்?”