
டிரிஸ்ட்டன் ஹாரிஸ்(Tristan Harirs) என்னும் பெயரை ‘தி சோஷியல் டைலமா’ (The Social Dilemma) என்னும் ஆவணப்படத்தில் முதன்முறையாகக் கேள்விப்பட்டேன். சமீபத்தில் ’21ம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்’ என்னும் புத்தகத்தை வாசிக்கும்போது இந்தப் பெயர் மீண்டும் வந்தது. இது ஒரு ஆர்வத்தை உருவாக்க, டக்டக்கோ (www.duckduckgo.com) தேடுதளம், Tristanharris.com என்னும் இணையதளத்துக்கு என்னைக் கொண்டு சென்றது.
டிரிஸ்ட்டன் ஹாரிஸ் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அது கூகுள் நிறுவனத்தால் வாங்கப்பட்டு, எனவே கூகிளின் பணியாளராக இருந்தவர். பின்னர் கூகுள் நிறுவனத்திலிருந்து விலகி Center for Humane Technology (CHT) என்னும் லாபநோக்கமில்லாத நிறுவனத்தை நிறுவி, நடத்தி வருகிறார்.அவரது இணையதளத்தில் உலவிக்கொண்டிருந்தபோது, யுவால் நோவா ஹராரி, டிரிஸ்ட்டன் ஹாரிஸ் மற்றும் CHT – ன் இன்னொரு நிறுவனரான அஸா ரஸ்கின் (Aza Raskin) ஆகியோரின் உரையாடலின் போட்காஸ்ட் (podcast) கிடைத்தது. இது கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் நீண்ட உரையாடல். இதன் மையக் கருத்து, தொழில்நுட்பம், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு(AI), மனித சமூகத்தின் மேல் ஏற்படுத்திக் கொண்டிருக்கும், ஏற்படுத்தப் போகும் தாக்கம்.
இதில் மனித செயலாண்மையின் (Human Agency) இடையீடு இல்லாமல் எல்லாவித மனிதத் தேவைகளும், அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ற மிகச்சரியானவற்றை, AI துணைக்கொண்டு மனிதர்கள் செய்யமுடியும் என்பதிலிருந்து, அதிகாரத்திற்காக சமூகத்தை மிக எளிதாக ‘ஹைஜாக்’ செய்யமுடியும் என்றும், எதிர்காலத்தில் தற்போதைய ராணுவங்கள் இருக்காது – எதிரி நாட்டை அடக்குவதை, அந்த நாட்டின் சமூகத்தை AI-ன் துணைக்கொண்டு மூளைச்சலவை செய்து அடையலாம் என்றும், மனித உடல்நலம் சார்ந்த அணுகுமுறையில் உருவாக்க சாத்தியமுள்ள நல்ல/தீய விளைவுகள் என்றும், இன்னும் இதைப்போன்றவையும் இந்த உரையாடலின் களமாக இருந்தது. அதாவது AI இன்னும் குறுகிய காலத்தில் மனித சமூகத்தில் எத்தகைய இடத்தைப் பெறும் என்றும் எவ்வாறான நல்ல/தீய தாக்கங்களை உருவாக்கலாம் என்பதும் உரையாடலின் பேசுபொருளாக இருந்தது. இந்த உரையாடலில் குறிப்பிடத்தக்கதாக நான் உணர்ந்தது, AI -ன் தாக்கம், தற்போது, மனித கற்பனையின் சாத்தியத்திற்கு அப்பாற்பட்டது என்னும் கருத்தையே.
இன்று செயற்கை நுண்ணறிவைப் பற்றி நிகழும் விவாதங்களின் பரப்பை கற்பனை செய்யவும் அதீதக் கற்பனைத் திறன் தேவைப்படுகிறது. உதாரணமாக AI-ன் துணையுடன் எதிர்கால கணினிகள் பிரக்ஞை உடையவையாகி விடுமா என்னும் இந்த விவாதம் – AI Won’t be conscious, and here is why. இவ்வாறு இருக்க, AI பற்றி என்னக் கற்பனை செய்தாலும் அது இன்றைய நிலையில் அர்த்தமுடையதுதான்.
முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட தாராளமயமாக்கம், இவ்வுலகின் பொருளாதாரக் கொள்கையாக மாறிய பிறகுதான் தொழில்நுட்பத்தின் பாய்ச்சல் அதிவேகமடைந்திருக்கிறது. இலாபத்தின் அளவு அதிகரிக்குந்தோறும், புதிய தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சிக்குச் செலவிடப்படும் தொகையும் அதிகரிக்கிறது. ஒரு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் இலாபம், அந்தத் தொழில்நுட்பம் மனிதர்களின் தேவையை எந்த அளவுக்கு பூர்த்தி செய்கிறது என்பதைப் பொறுத்தது. எனவே ஒரு தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்,
1) அந்த தொழில்நுட்பத்திற்கான தேவை சமூகத்தில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
2) தொழில்நுட்பத்தின் விளைவான பொருள் சமூகத்தின் வாங்கும் சக்திக்குள் இருக்க வேண்டும்.
3) அந்தப் பொருட்களின் தேவை தொடர்ந்து சமூகத்தில் இருக்க வேண்டும்.
தற்போது AI மனித இனத்துக்கு அளிக்கப்போகும் சேவைகள், அதனால் அடையப்பெறும் பயன்கள் ஒருபுறமும் அதன் காரணமாக அடையப்போகும் இழப்புகள் மறுபுறமும் என சமூகத்தின் முக்கியமான பேசுபொருளாக மாறி, அதன் மூலம் சமூகத்தில் AI-ன் தேவையை உருவாக்கும் படலம் நடந்துக் கொண்டிருக்கிறது.
தானியங்கித் தொழில்நுட்பம் (Automation) தொழில்துறைகளில் நுழைந்த காலங்களில், அது மனிதர்களின் வேலைவாய்ப்பை இல்லாமல் செய்து விடும் என்னும் நம்பிக்கை தொழிலாளர்களிடம் பரவலாக இருந்து வந்தது. ஆனால் உண்மையில் நடந்தது வேறு. மிக அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகின. செயற்கை நுண்ணறிவும் மனித சக்தியை தேவையில்லாததாக மாற்றும் என்றும், இல்லை என முந்தையத் தானியங்கித் தொழில்நுட்பத்தை உதாரணம் காட்டியும் இருவேறு தரப்புகள் இன்று உள்ளன.
தானியங்கித் தொழில்நுட்பம் வந்த காலங்களில் சமூகங்களின் நுகர்வு பெருமளவு வளர்ந்து கொண்டிருந்தது. இன்றைய காலகட்டத்தில் நுகர்வு கிட்டத்தட்ட அதன் அதிகபட்ச எல்லையை நெருங்கி விட்டது என்றே கருதுகிறேன். அனைவரும் சென்று சேரவிரும்பும் நுகர்வு இலக்கு, அமெரிக்க சமூகத்தின் தனிமனித நுகர்வாக இருந்தாலும், இன்னும் உலகின் பெரும்பாலானவர்கள் அந்த இலக்குக்கு வெகு தொலைவில் இருந்தாலும், அனைவரும் அமெரிக்க சமூகத்தின் தற்போதைய தனிமனித நுகர்வை எட்ட வாய்ப்பு இல்லை. அந்த இலக்கை அனைவரும் அடைய வேண்டுமானால் அதற்கான கச்சாப்பொருட்களை வழங்கவும், உருவாக்கும் கழிவுகளைக் கொட்டவும் இன்னும் சில பூமிக்கோளங்கள் தேவைப்படலாம். இந்த அடிப்படைத் தேவையை உதாசீனம் செய்து விட்டு உலகத்தின் தனிமனித நுகர்வை உயர்த்தினால், இருக்கும் ஒரு பூக்கோளத்திலிருந்து கச்சாப்பொருட்களை எடுத்து, கழிவுகளைக் கொட்டிக் கொண்டே இருந்தால், இங்கு மனித இனமும் அதன் பிழைத்திருத்தலுக்குத் தேவையான உயிர்ச் சங்கிலியின் பாகங்களான சில/பல பிற உயிரினங்களும் அந்த நுகர்வு இலக்கை அடையும்வரை இருப்பதற்கான வாய்ப்பும், எனவே AI-ன் தேவையும் மிகக் குறைவாகவே இருக்கும்.
இது உண்மையாக இருந்தால், உலகப் பொருளாதாரம், அதன் உச்சக்கட்ட எல்லையை நெருங்கிக் கொண்டிருக்கிறது எனலாம். அல்லது, ஒரு பேரழிவு இன்றையப் பொருளாதாரத்தை அதாலப் பாதாளத்திற்கு தள்ளிவிட்டு, அங்கிருந்து மீண்டும் வளர்ந்து வரவேண்டும். நம்மில் எவரும் இத்தகைய ஒரு வளர்ச்சியை விரும்பப் போவதில்லை என்பது உறுதி – நாம் விரும்பவில்லை என்றாலும் மனித இனத்தின் செயலூக்கத் தேவை நிறைவேற வேண்டும் என்றால் அந்த அழிவும் அதன் பின் வரும் வளர்ச்சியும்தான் ஒரே வாய்ப்பாகத் தெரிகிறது. அல்லது மனிதர்களின் செயலூக்கத் தேவை புறத்திலிருந்து அகம் நோக்கித் திரும்ப வேண்டும்! செயலூக்கத்திற்கு வாய்ப்பு இல்லாத மனிதர்கள் சுயஅழிப்பை நோக்கிச் செல்லலாம் – இதுவும் எதிர்கால சாத்தியங்களில் ஒன்றுதான், உலகம் இப்படியொரு நிலையை நோக்கி வருகிறதென்றால், AI, இயந்திரக் கற்றல் (Machine Learning -ML) போன்ற தொழில்நுட்பங்கள் உருவாக்கும் பொருட்கள் அல்லது சேவைகளின் தேவை எவ்வாறு இருக்கும்?
உலகத்தில் உள்ள பெரும்பாலான தொழில்நுட்பங்கள், மனிதர்களின் ஐந்து ஞானேந்திரியங்கள் மற்றும் ஐந்து கர்மேந்திரியங்களுக்கான சேவைகளைச் செய்யவும், சேவை செய்யும் பொருட்களை உருவாக்குவதற்குமாகவே பயன்படுகின்றன. AI அதிகப்படியாக புத்தி என்னும் ஞானேந்திரயங்களையும் கர்மேந்திரியங்களையும் ஒருங்கிணைக்கும் திறனுக்குச் சேவைசெய்கிறது. தொழில்நுட்பத்தின் சேவையை பெற்று வரும் ஞானேந்திரியங்கள், பலகோடி வருடங்களாக பரிணாம வளர்ச்சி மனிதர்களுக்கு வழங்கிய உணர்திறனின் சில பகுதிகளை இழந்து விட்டன – முற்றிலும் இழந்து விடவில்லை. தொழில்நுட்பத்திலிருந்து விலகி இருக்க முடிந்தால் தற்போது நம்மால் அவற்றை மீட்கமுடியும். பரிணாம வளர்ச்சி அத்தகைய மரபுமாற்றத்தை 50 அல்லது 100 வருடங்களில் கொண்டுவர முடியாது. ஆனால் இந்த நிலை இன்னும் சில பத்து தலைமுறைகள் தொடர்ந்தால், மனித இனத்தின் இந்த உணர்திறன் இழப்பு நிரந்தரமாகிவிடக் கூடும், இன்று. ஒரு சிறு சமூகமாக (சில நூறுபேர் மட்டும் கொண்ட சமூகம்) இவ்வுலகில் நாம் தனித்து விடப்பட்டால், நம்மால் எத்தனைக் காலம் உயிர்பிழைத்திருக்கு முடியும் என்பது மிகப் பெரிய கேள்வி.
இந்த வாதம், நாம் அனைத்துத் தொழில்நுட்பங்களையும் விட்டுவிட்டு பின்சென்று விட வேண்டும் என்பதற்காகக் கூறப்படவில்லை. மாறாக இழப்பதற்கு நிகராக, ஒரு உயிரினமாக நமக்கு பரிணாம வளர்ச்சி அளித்திருக்கும் சில கொடைகளின் வழியாக அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறியிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே!
* * *
மாயை என்னும் கருதுகோள், இந்திய ஆன்மீக சிந்தனைகளில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. இது நம் ஐம்புலன்களால் (ஐந்து ஞானேந்திரியங்கள்) நேரடியாகப் பெறும் தகவல்கள் எவ்வாறு உண்மையைத் திரித்து ஒரு கற்பனை உலகில் நம்மை இருத்தி, நம் இருப்பின் இரகசியத்தை ஒளித்து வைத்திருக்கிறது என விளக்கும் கருதுகோள். இந்தக் கருதுகோளை மேலும் நகர்த்தினால், AI, நாம் இருக்கும் மாய உலகின் கட்டுமானத்தைக் கொண்டு, இன்னொரு மாய உலகைப் படைத்து நமக்கு அளிக்கிறது. ஆக, நாம் வாழப்போகும் உலகம், AI-ன் உலகமாக இருந்தால், அதன் தனித்த, மிக உண்மையான பயன்கள் ஒருபுறத்தில் இருக்க, அந்தப் பயன்களை நாம் அனுபவிப்பதிலிருந்து இந்த மாயத்தில் உருவான அதிமாய உலகம் நம்மை விலக்கி வைக்கவும் போகிறது. ஒரு மாயையைக் கடக்கவே பல பிறவிகள் வேண்டும் எனக் கூறும் மாயாவாதம், மாயையின் மாயையை கடக்கத் தேவையான பிறவிகளை இனிமேல் கணக்கிட வேண்டி வரலாம்!
அது எப்படி இருந்தாலும், AI தொழில் நுட்பம் அதிவேகம் எடுத்திருப்பதற்கு சில காரணங்கள் கூறப்படுகிறது.
1) மோர்ஸ் விதி (Moore’s Law) – இந்த விதியை தோராயமாக இவ்வாறு கூறலாம் – ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளிலும், கணினிகளின் செயல்திறன் இருமடங்காக அதிகரிக்கும்.
2. ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளிலும் பயன்படுத்தும் தரவுகளின் அளவு இருமடங்காகிறது.
3. ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளிலும் AI தொழில்நுட்பத்திற்காகச் செய்யும் முதலீடு இரண்டு மடங்காகிறது.
மூன்றாவது காரணத்தின் மூலம், எதிர்காலத்தில் AI உருவாக்கப்போகும் இலாபம் மிக அதிகமாக இருக்கப்போகிறது என அதில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் எதிர்பார்கின்றன போலும். AI பற்றி பேசும்போது முன்வைக்கப்படும் இன்னொரு முக்கியமான கருத்து, ‘உலகப் பொருளாதாரத்தில் இன்று பெட்ரோலியம் என்ன இடத்தை வகிக்கிறதோ அந்த இடத்தை எதிர்காலத்தில் தரவுக் கிடங்குகள் வகிக்கும்’ என்பது. இந்த அடிப்படையில் எதிர்காலத்தில் கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் உடைந்து சிறு நிறுவனங்களாக மாறவில்லை என்றால், அவை உலகின் பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறலாம் என்னும் கருத்து The A.I. Race ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
AI – ன் செயல்திறன், அது எவ்வளவுத் தரவுகளை, எவ்வளவு வேகத்தில் ஆராய்ந்து முடிவுகளை எடுக்க முடியும் என்பதைப் பொறுத்தது. இணையத் தொழில்நுட்பம் உலகின் எல்லா மனிதர்களும் கொண்டிருக்கும் அறிவின் பெரும்பகுதியை(Cumulative knowledge) தன்னுள் கொண்டுள்ளது. ஆனால் ஒரு நிறுவனம் சேர்த்து வைத்துள்ள எல்லாத் தகவல்களும் மற்ற நிறுவனங்களுக்கும் பொதுவாகக் கிடைப்பதில்லை. எனவே AI தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் நிறுவனம், அது எந்தத்தளத்தில் அதை செயல்படுத்திகிறதோ அது சார்ந்த அனைத்துத் தகவல்களும் அந்த நிறுவனம் தன்னுள் சேர்த்து வைத்திருக்க வேண்டும். அந்தத் தளம் சார்ந்த புதிய சிந்தனைகள் உருவாகுந்தோறும், அவை கண்டடையப்பட்டு சேகரிப்பு நிகழ்ந்து கொண்டிருக்க வேண்டும். இந்த சேமிப்புக்கு மிகமிக அதிகமான மின்சக்தி தேவைப்படும். AI-ன் இந்த மின்சக்தி நுகர்வும் அதன் மறைமுக விளைவுகளும் குறித்து இன்னும் பேசப்படத் தொடங்கவே இல்லை.
டாக்டர் வீயனூர் ராமச்சந்திரன் ஒரு உரையில், நம் மூளையில் உள்ள சுமார் நூறு பில்லியன் நியூரான்களில் ஒவ்வொன்றும் சுமார் 1000 முதல் 10000 வரையிலான பிற நியூரான்களுடன் தொடர்பில் உள்ளன. இந்த கற்பனைக்கு அப்பாற்பட்ட தொடர்புகளின் மூலம் மனித மூளையின் வெவ்வேறு நிலைகளின் சாத்தியங்களின் எண்ணிக்கை, இந்த பிரபஞ்சத்தில் உள்ள மொத்த அடிப்படைத் துகள்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்று கூறுகிறார். மூளையின் ஒவ்வொரு நியூரானையும் இயக்குவதற்கு சில சக்தி துகள்கள்களும் (ions), சற்றே வேதியல் அலைபரப்பிகளும் (Chenical Transmitters) போதுமானது. AI தொழில் நுட்பம் அது செயல்படும் தளத்தில் மனித மூளையின் செயல்திறனை அடைய எவ்வளவு தரவு சேமிப்பு எந்திரங்களும் அவற்றுக்கான சக்தியும் தேவை என்பதை ஓரளவாவது நம்மால் கற்பனை செய்ய முடியலாம். ஆனால் உலகம் முழுவதுக்கும் ஒரு சில மூளைகளின் அளவுக்கான தரவு சேமிப்பு எந்திரங்கள் போதுமானவையாக இருக்கக் கூடும்.
மனித அறிவால் மட்டும் செய்து கொண்டிருக்கக்கூடிய பல வேலைகளை AI தொழில்நுட்பம் செய்யத் தொடங்கும்போது, அது தற்போதைய தாராளவாத பொருளாதார அமைப்பினால் உள்வாங்கிக் கொள்ளப்பட்டால், மனித அறிவின் பல்வேறு பரிமாணங்கள் தேவையற்றுப் போகலாம். ஆனால் அத்தகைய ஒரு வாய்ப்பு தற்போதைய பொருளாதார அமைப்பில் இல்லை என்றே தோன்றுகிறது. தானியங்கித் தொழில்நுட்பம் மனித உடல்உழைப்பின் தேவையை குறைவாக்கிய அதே நேரத்தில் மனித அறிவின் தேவையை அதிகரித்ததன் மூலமும் வளர்ந்துகொண்டிருந்த நுகர்வுக்கான தேவைகளின் மூலமும் மனித ஆற்றல் தேவையில் ஒரு சமன்நிலையை உருவாக்கியது. எனவே தராளவாத பொருளாதார அமைப்பு சிதைவடையாமல் இருந்தது.
AI பெருமளவில் செயல்பாட்டுக்கு வந்தால் இந்த சமன்நிலை உருவாவதற்கான வாய்ப்பை எது அளிக்கும்? உடல் உழைப்பின் பல பரிமாணங்களை தானியங்கித் தொழில்நுட்பம் எடுத்துவிட்ட நிலையில் மனித அறிவின் தேவையின் பல பரிமாணங்களை AI-க்கு அளித்து விட்டால், இவை இரண்டையும் வழங்கிக்கொண்டிருந்த மனிதர்களின் தேவை எங்கு இருக்கும்? மனிதர்களின் உழைப்புக்கானத் தேவையை எது அளிக்கும்? ஒருவேளை பணம் என்னும் பொருளின் தேவை இல்லாத, மனித உழைப்பும் அறிவும் தேவை இல்லாத ஒரு சமூக அமைப்பு உருவாக வாய்ப்பு உள்ளதா? இவை இரண்டும் சமூகத்தில் தேவை இல்லை என்றால் செயற்கை நுண்ணறிவை செயல்படுத்துவதற்கான மனித ஆற்றல் எங்கிருந்து கிடைக்கும்? பணம் தேவை இருந்தால் அதைப் பெறுவதற்கான 800 கோடி மனிதர்களுக்கான உடலுழைப்பு அல்லது அறிவுத் தேவை எந்தத் துறைகளில் தொடர்ந்து இருக்கும்? அல்லது இந்தக் கேள்விகளை பொருத்தமற்றதாகச் செய்யும் பிற வாய்புகள் என்ன? பல கேள்விகள்! செயற்கை AI தொழில்நுட்பத்துக்காக பணத்தை வாரியிறைக்கும் நிறுவனங்கள் நிச்சயமாக இந்தக் கேள்விகளைக் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். எனில் அவை வந்து சேர்ந்த முடிவுகள் என்ன? இல்லையெனில் நீண்ட கால விளைவுகளைக் கருத்தில் கொள்ளாமல் அந்த நிறுவனங்கள் தங்களின் குறுகிய கால (சில பத்தாண்டுகள் வரை) பங்குச் சந்தை செயல்பாட்டை மட்டும் கருத்தில் கொள்கின்றனவா?
ஆனால் இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. மனித இனம் தன் பரிணாம வளர்ச்சியில் அடுத்த நிலையை எட்டுவது! இன்றைய பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கையில் புறவயமான தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதே இலக்காக உள்ளது. புறவயமான வாழ்க்கையின் அடிப்படைத் தேவையான உணவு உட்பட அனைத்துத் தேவைகளையும், பெரும்பாலும் சமூகமே முடிவு செய்கிறது. அதாவது நம் தனிப்பட்ட தேவைகளை நாம், ஏராளமான சமூகக்காரணிகளைக் கொண்டே தீர்மானிக்கிறோம். தேர்வு நம்முடையதாகத் தோற்றமளித்தாலும், அவை சமூகம் நம்மேல் திணிப்பவற்றைக் கொண்டுதான் தேர்வு செய்யப்படுகிறது. அவ்வாறு இல்லாமல், சமூகக் காரணிகளைத் தவிர்த்து நம் தேவைகளை சுயமாகவே முடிவு செய்ய முடியுமா? பரிணாம வளர்ச்சி நமக்கு அளித்திருக்கும் கொடைகளைக் கொண்டு, அதற்கான அகவிழிப்பை நம்மால் அடைய முடியுமா?
முந்தைய பத்தியில் இருப்பதை இன்னொரு கோணத்திலும் கூறலாம். இன்று உலகம் உற்பத்தி இலக்கை (GDP)அடிப்படையாகக் கொண்ட பொருளாதார மாதிரியில் இயங்குகிறது. நுகர்வு இருக்கும்போதுதான் உற்பத்தித் தேவை. உலகம் இப்போது “சேமிக்க வேண்டாம், நுகர்ந்து அழியுங்கள், உற்பத்தியை பெருக்குங்கள்” என மிகமிகச் சத்தமாக பிரச்சாரம் செய்கிறது. எனவே மனிதர்களின் வாழ்க்கையும், உற்பத்திக்கான இடையறாத வேலை, பின் நுகர்வு என மாறிவிட்டது. அதீத வேலை அழுத்தங்கள் மனிதர்கள் நுகர்வையாவது சற்றேனும் உணர்வுடன் செய்வதிலிருந்தும் விலக்கி விடுகிறது. எனவே பெரும்பாலும் நுகர்வு என்பது தனிமனிதத் தேவை என்பதிலிருந்து விலகி சமூகத்தில் தொடர்ந்து இருப்பதற்கான தேவையாக மாற்றமடைந்திருக்கிறது. இதன் பின்விளைவாக மழுங்கி விட்ட உணர்வுகளின் சிறுபகுதியையாவது அனுபவிப்பதற்கான மன உச்சத்தை அடைவதற்கு, போதை, சூதாட்டம் போன்றவற்றில், கிடைக்கும் சிறிதளவு ஓய்வு நேரத்தையும் செலவிடுகிறார்கள். அதுவும் போதாமல் ஆகும்போது, தற்கொலை நோக்கி மனித சமூகம் செல்லக் கூடும். Blue Monday Phonomena என தற்கொலை ஆராய்ச்சியாளர்களால் பெயரிடப்பட்டிருக்கும் ஜப்பான் நாட்டின் தற்கொலை நிகழ்வு இதற்கு ஒரு உதாரணம். இன்றைய உயர் நடுத்தர வர்கத்தினர், பங்குச் சந்தையின் Derivatives, Algorithm trading போன்றவற்றை, சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அத்தகைய போதைக்கான ஒரு வழியாக வைத்திருக்கிறார்கள். அங்கு அவர்கள் இழக்கும்/சம்பாதிக்கும் பணம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. அது கொடுக்கும் மன அழுத்தமும் அதனால் அன்றாடத்திலிருந்து விலகியிருக்கும் சில நிமிடங்களும், அந்த நிமிடங்களில் அழுத்தத்தால் அடையப்படும் மனஒருமையும் அந்த மனஒருமையின் விழைவான சிறிதளவு மகிழ்ச்சியும் அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது – இந்தத் தேவையையும் அவர்கள் உணர்ந்து செய்யாமல் அனிச்சையாகச் செய்கிறார்கள். அனைத்து அழுத்தங்களையும் விட்டுவிட்டு, மனஒருமையை அடையும் வழியை நமது கல்வி அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. நமது கலாச்சாரத்திலிருந்து மிக விலகியக் கல்வி, அந்தக் கலாச்சாரம் அளிக்கும் மனஒருமைக்கான கருவிகளைப் பற்றிய அறிவையும் அவர்களிடமிருந்து மறைத்திருக்கிறது.
* * *
நமது பிரக்ஞையை புறச்செயல்பாடுகளில் மட்டும் நிலை நிறுத்தாமல், சற்றே அகவயமாகவும் திரும்பச் செய்தால், நம் உண்மையான தேவைகள் என்ன என்று நமக்குத் தெரியவரும். அப்போதும் சில சமூகக் காரணிகள் நம் தேர்வுகளைப் பாதிக்கலாம். ஆனால் அவை நம் அகவாழ்க்கைக்கும் தேவையானதாகவே இருக்கும்.
எல்லா உயிரினங்களுக்கும் பிரக்ஞை உள்ளது. ஆனால் மனிதர்களுக்கு அதன் வீச்சு மற்ற எந்த உயிரினங்களையும் விட மிகமிக அதிகம். அதை எங்கு பயன்படுத்துவது எனத் தெரிவு செய்யும் வாய்ப்பும் மனிதர்களுக்கு உள்ளது. இதுவே பரிணாம வளர்ச்சி மனிதர்களுக்கு அளித்துள்ள கொடை. அந்தப் பிரக்ஞையின் சிறு துளியை அகவயமாகத் திருப்ப முடிந்தால் சற்று தூரம் அகவயமாக பயணிக்க முடிந்தால், நம் புறத்தேவைகள் அமெரிக்காவின் தற்போதைய தனிமனித நுகர்வின் அளவை அடையவேண்டியத் தேவை இருக்காது. அகவயமாக பிரக்ஞையை திருப்ப முடிந்தால், நம் புறத்தேவைகள் உலகில் பிழைத்திருப்பதற்கான அடிப்படைத்தேவைகளும், ஏற்றுக்கொண்ட உலகியல் கடமைகளைச் செய்வதற்குமான தேவைகளும் மட்டுமே எஞ்சியிருக்கும். உயர் நடுத்தர வர்க்கம் என்று அழைக்கப்படும் பொருளாதார தன்னிறைவை அடைந்த பெரும்பாலானாவர்கள், இந்தப் பொருளாதார எல்லையை தொட்டுக் கடந்தவர்களே.
உயர் நடுத்தர வர்க்கத்தினர், பிரக்ஞையை அகவயமாக திருப்ப முடியாததால், புறத்தேவைகளின் எல்லையை விரித்துக்கொண்டே செல்கிறார்கள். அதற்காக வாய்ப்பிருக்கும்வரை உழைக்கிறார்கள். அல்லது நுகர்வு மட்டுமே இன்பம் என நுகர்ந்து அழிப்பதற்காக உழைக்கிறார்கள். வேறு என்னச் செய்வது என்று தெரியாமல் உழைத்து உழைத்து சேர்த்து வைக்கிறார்கள். பலவிதமான போதைகளுக்குள் செல்கிறார்கள். உச்சக்கட்டமாக, ஒரு சில விதிவலக்குகள் தவிர, பிரக்ஞையின் விரிவைக் குறுக வைக்கிறார்கள் – தொழில்நுட்பங்களுக்கு முழுமையாக, தேவையைக் கடந்து, ஒப்புக்கொடுப்பதன் மூலம் நாம் அடைவது பிரக்ஞையின் குறுகலே.
AI பற்றிய பெரும்பாலன உரையாடல்களின் இறுதியில் முன்வைக்கப்படும் கருத்து; நாம் வழியறியாத பாதையில் செல்லத் தொடங்கியிருக்கிறோம் என்பதாகவே இருக்கிறது. The A.I. Race என்னும் ஆவணப்படத்தின் இறுதியில் கூறப்பட்டிருக்கும் இந்தக் கருத்தும் நம் கவனத்தில் கொள்ளத்தக்கது. //இத்தகைய தொழில்நுட்பங்களை நாம் உருவாக்கி புழக்கத்தில் விடுவதாக இருந்தால், அவை மனிதர்களின் நலன்களுக்காகவும் உலகத்தின் ஒட்டுமொத்தமான நலன்களுக்காகவும் மட்டும் உருவாக்கி விட முடியுமா, நாம் அத்தகைய புத்திக்கூர்மையுடன் இருக்கிறோமா என்பதுதான் தற்போதைய கேள்வி.//
பெர்னாடோ கஸ்தரப் (Bernardo Kastrup) அவர்கள், AI Won’t be conscious, and here is why என தலைப்பிட்ட கட்டுரையின் இறுதியில் கூறியிருக்கும் இந்தக் கருத்தும், அது உண்மையென்றால், இங்குக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானதாகும்.
//Having worked on the design and manufacture of computer ICs for over two decades, I estimate that perhaps only about 2000 people alive today know how to start from sand and end up with a working computer. This is extremely worrisome, for if a cataclysm wipes out our technical literature together with those 2000 people tomorrow, we will not know how to re-boot our technological infrastructure.//
முதலில் குறிப்பிட்டிருந்த போட்காஸ்ட்-ன் இறுதியில், சம்பிரதாயமான நன்றி நவில்தல்களுக்கு முன், யுவால் நோவா ஹராரி உரையை முடித்திருக்கும் இறுதி வாக்கியத்தை இங்கு குறிப்பிடுவதும் பொருத்தமானதாக இருக்கக் கூடும்.
// Just say to them, I’m leaving next week for a 45 days meditation retreat- … so maybe when I come back, I have some new ideas and all these things. So
yes, I’ll be happy to have another conversation in a couple of months and see
where it goes.//