சுழற்சி

கோபம், ஆத்திரம், ஏமாற்றம், சுய பச்சாதாபம், அழுகை என்று பல உணர்ச்சிகள் அவனுள் ஒரே சமயத்தில் ஓடின. அவன் முகம் சுருங்கியிருந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் அவன் அழுதுவிடக்கூடும். அதே சமயத்தில் அவன் கண்களில் கோபம் தெளிவாக தெரிந்தது. பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருந்த பெண்மணி அவனை பார்த்து “இஸ் எவ்ரிதிங் ஓகே?” என்று கேட்டாள். “எஸ்” என்று சொல்லிவிட்டு சிரிக்க முயன்றான்  ஆனால் அது முடியவில்லை. அந்த பெண்மணி கேள்வி கேட்டவுடன் லேப்டாப்பில் ஏதோ செய்யத் தொடங்கிவிட்டாள். இவன் பதிலையும், முகபாவத்தையும் அவள் கவனிக்கவில்லை. இது அவனுக்கு எரிச்சலூட்டியது. ஆபிஸில் யாருக்கும் தன் மேல் அக்கறை இல்லை என்று அவனுக்கு தோன்றியது. அங்கு இருக்கப் பிடிக்காமல், ஆபிஸை விட்டு வெளியே வந்து, அருகில் இருந்த டீ கடை பெஞ்சில் உட்கார்ந்து, ஒரு டீ சொன்னான்.

அவன் மேலதிகாரியின் குரல் தெள்ள தெளிவாக அவன் காதுகளில் ஒலித்தது. “இந்த முறையும் உனக்கு பதவி உயர்வு கொடுக்க முடியவில்லை. நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும் மேல்மட்டக் குழு உன் பெயரை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த முறை கண்டிப்பாக பதவி உயர்வை வாங்கிக் கொடுத்துவிடுவேன்.” போன முறையும் இதே பாடல் தான் பாடப்பட்டது.. அடுத்ததாக அவர் சொன்னதுதான் ஏதோ எரியும் காட்டுக்குள் மாட்டிக்கொண்டது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது. “இந்த பதவிக்கு வேறொரு கம்பெனியிலிருந்து ஒருவரை தேர்வு செய்திருக்கிறார்கள்.” 

டீயைக் குடித்துக்கொண்டே தனக்கு இழக்கப்பட்ட அநீதியைப் பற்றிச் சிந்தித்தான். அவன் இந்த கம்பெனியில் இருபது வருடங்களாக வேலை செய்கிறான். நான்கு மாதங்களுக்கு முன் அவன் இருபது வருட சர்வீஸை பாராட்டி பார்ட்டி கொடுத்தார்கள். ஜெனரல் மேனேஜராக இருந்த அவன் இந்த முறை வைஸ் பிரெஸிடென்ட் ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தான். அதில் இப்பொழுது மண்ணை வாரி இறைத்துவிட்டார்கள். அவனை புறம் தள்ளிவிட்டு வேறொருவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத குற்றம். மிகப் பெரிய அநீதி. இந்த கம்பெனிக்காக எவ்வளவு உழைத்திருக்கிறேன். இன்று இந்த கம்பெனி நல்ல இடத்தில் இருக்கிறதென்றால் என்னுடைய உழைப்பும் ஒரு காரணம். வேறொருவரை வைஸ் பிரெஸிடெண்ட் பதவிக்கு தேர்வு செய்கிறார்கள் என்றால், நான் வேண்டாம் என்று தானே அர்த்தம்? எனக்கு என்ன ரோஷம் இல்லையா? என் திறமைக்கு வேறு இடத்தில் வேலை கிடைக்காதா? பத்து வருடங்கள் முன்பே வேறொரு கம்பெனியில் கூப்பிட்டார்கள். அப்பொழுதே சென்றிருக்கவேண்டும். இப்பொழுது அழுது என்ன லாபம். பதவியை தூக்கி எறிய வேண்டியதுதான். வேலையை விட்டுச் செல்லும்பொழுது நான் கேட்கும் கேள்விகளை கேட்டு உயர் அதிகாரி நாக்கை பிடுங்கிக்கொள்ளவேண்டும். 

இது போன்ற டீ கடைகளுக்கு வராத இவனைப் பார்த்த சக தொழிலாளி ஒருவன், “ஹேலோ சார். ஹவ் கம் ஹியர்?” என்று கேட்டான். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவன் முழித்துக்கொண்டிருந்த போது, கேள்வி கேட்டவன் இவன் பதிலுக்குக் காத்திராமல் டீ கடைக்குள்ளே சென்றுவிட்டான்.  இவனுக்கு எரிச்சல் அதிகமானது. மறுபடியும் தன்னை யாரும் மதிப்பதில்லை என்ற உணர்வு அவனுக்குத் தோன்றியது. அப்பொழுது தொலைபேசியில் வந்த செய்தி அவனை மறுபடியும் நிலைகுலைய வைத்தது. தன்னுடைய ஜூனியர் ஒருவனுக்கு, இவன் சேர்ந்து மூன்று வருடங்களுக்கு பிறகு சேர்ந்தவனுக்கு, இப்பொழுது பதவி உயர்வு கிடைத்துவிட்டது. அவன் இப்பொழுது வைஸ் பிரெஸிடெண்ட் ஆகிவிட்டான். இவன் இன்னும் ஒரு வருடமாவது ஜெனரல் மேனேஜராக இருக்க வேண்டும். இதை நினைத்தபோது அவனுக்கு ஆத்திரமாக வந்தது.

யாரிடமாவது தன்னுடைய கோபத்தையும், ஆத்திரத்தையும் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்று தன்னுடைய பழைய சக தொழிலாளி ஒருத்தியை தொலைபேசியில் அழைத்தான். தன் ஜூனியர் ஒருவனுக்கு பதவி உயர்வு கிடைத்திருக்கிறது, தனக்கு கிடைக்கவில்லையே என்று சொன்னபோது, அவள், “அவனுக்குக் கிடைக்கும் என்று எனக்கு முன்பே தெரியும். அவன் ரொம்ப டைனமிக். எல்லோருக்கும் அவன் எனர்ஜி பிடிச்சிருக்கு. அவனுக்கு ப்ரமோஷன் வரும்னு எதிர்பார்த்தது தான்.” அவள் பேச்சு அவனை இன்னும் அதிகம் துயரத்தில் ஆழ்த்தியது. இந்த தருணத்தில் நண்பர்கள் யாரும் இல்லையே என்று ஏங்கினான். அவனுக்கு இருந்த இரண்டு நெருங்கிய நண்பர்கள் இருவரும் அமெரிக்காவில் இருந்தார்கள். இப்பொழுது அவர்கள் தூங்கிக்கொண்டிருப்பார்கள். பதவி உயர உயர நண்பர்கள் கம்மியானார்கள். இப்பொழுது என்னுடைய துயரத்தைக் கண்டு களிப்பவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்று அவன் எண்ணிக்கொண்டான்.

உடனே வேலையை விடுவது சாத்தியமில்லை என்று அவனுக்கு தெரியும். இப்பொழுதே ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிடவேண்டும் என்று அவனுக்கு தோன்றினாலும், இரண்டாவது வீட்டுக்கான ஈ.எம்.ஐ மற்றும் மகனுக்கு அடுத்த வருட அமெரிக்க கல்லூரியில் அட்மிஷன், பெண்ணுக்கு அடுத்த வருடம் மெடிக்கல் சீட், எல்லாம் நினைவுக்கு வந்து அந்த எண்ணத்தைக் கைவிட அறிவுறுத்தின. வேறொரு வேலை கிடைத்த பின் தான் இந்த வேலையை விடவேண்டும் என்று அவன் தீர்மானித்தான். 

அன்று மாலை தனக்கு பதவி உயர்வு கிடைக்காததை பற்றி மனைவியிடம் சொன்னான். அவள் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு கம்பெனியிலிருந்து லே-ஆஃப் செய்யப்பட்டிருந்தாள். அதற்கு பிறகு அவளுக்கு வேலைக்கு போவது என்பது பிடிக்காமல் போய்விட்டது. “கார்ப்பரேட் என்றாலே பொலிட்டிக்ஸ் தானே. பதவி உயர்வு கிடைக்காததில் என்ன ஆச்சரியம்? நான் பல வருடங்களாக கம்பெனியை மாற்று என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன். நீ எதற்காகவோ இந்த கம்பெனியை கட்டிக்கொண்டு அழுகிறாய். இப்பொழுதாவது வேலையை மாற்றப் பார்,” என்றாள். தனக்கு ஆதரவாக ஏதாவது சொல்வாள் என்று எதிர்ப்பார்த்த அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அன்று இரவு வெகு நேரம் முழித்திருந்து அமெரிக்காவில் உள்ள நண்பனிடம் பேசினான். அவனும் இவன் மனைவி போல் தான் அறிவுரை சொன்னான். அவனுக்கு அன்று இரவு வெகு நேரம் வரை தூக்கம் வரவில்லை.

அடுத்த நாள் அவன் ரெஸ்யூம் தயாரிக்க ஆரம்பித்தான். அதை சரிபார்த்து வேலை தேட ஆரம்பிக்க ஒரு வாரம் ஆகியது. பிறகு வேறு கம்பெனிகளில் இருக்கும் தனக்கு பரிச்சயமானவர்களுக்கு தன்னுடைய ரெஸ்யூம்மை அனுப்பினான். வேலை வாய்ப்புகள் தேட உதவும் வெப்சைட்டில் எல்லாம் ரிஜிஸ்டர் செய்தான். பல பழைய நண்பர்களைக் கூப்பிட்டு பேசினான். தான் வேலை தேடுவதாக அவர்களுக்கு சொன்னான். எல்லோரும் உதவுவதாக சொன்னார்கள் ஆனால் ஒரு மாதம் கழிந்த பின்பும் யாரும் அவனை இன்டர்வியூவிற்கு கூப்பிடவில்லை. வேலை தேடலை இன்னும் மும்முரம் ஆக்கினான். இரண்டு வாரங்கள் கழித்து அவன் உழைப்பு பலனளிக்கத் துவங்கியது. இன்டர்வியூ அழைப்புகள் வர ஆரம்பித்தன.

முதல் இன்டர்வியூ ஒரு பெரிய கம்பெனியில் வைஸ் பிரெஸிடெண்ட் வேலைக்காக நிகழ்த்தது. முதல் கட்டத்தை தாண்டி இரண்டாவது கட்ட நேர்காணலுக்காக அழைக்கப்பட்டிருந்தான். அவனுக்கு சுற்றியிருந்த கருமேகங்கள் விலகி நீல வானம் தெளிவாய் தெரிவது போல் இருந்தது. இரண்டாவது சுற்றில் அவன் அளித்த பதில்களை அவன் மறுபடி மறுபடியும் அசைப்போட்டான். எல்லா பதில்களும் பிரமாதமான பதில்களாக அவனுக்கு தோன்றின. ஒரு பதிலை கேட்டு கம்பெனியின் மேலதிகாரி புன்னகை புரிந்தார். தனக்கு இந்த வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவனுக்குள் வலுவாக இருந்தது. அவனை அவர்கள் கடைசி எச்‌ஆர் சுற்றுக்கு அழைத்தபோது தனக்கு ஒரு புதுப்பாதை அமைந்துவிட்டது போல் அவனுக்கு தோன்றியது. எச்‌ஆர் இன்டர்வியூவில் அவன் சம்பளம் பற்றியும் அவன் ஜெனரல் மேனேஜராக என்ன செய்துக்கொண்டிருந்தான் என்பதை பற்றியும் கேட்டார்கள். வேலை கிடைத்துவிடும் என்று அவன் உறுதியாக நம்பினான். மனைவியிடமும் அதை சொன்னான். அன்று இரவு குடும்பதுடன் ஒரு படம் பார்த்துவிட்டு, பெரிய ஹோட்டலில் டின்னர் செய்துவிட்டு வீடு திரும்பினான். 

அடுத்த நாள் அவர்கள் தன்னை கூப்பிட்டு வேலை கிடைத்துவிட்டது என்று சொல்வார்கள் என்று நினைத்தான். ஆனால் யாரும் கூப்பிடவில்லை. தான் ஃபோன் செய்யலாமா என்று யோசித்தான். செய்தால் தான் வேலைக்காக மிகவும் டெஸ்பெரேட்டாக இருப்பதாக எண்ணுவார்கள். அதனால் அவன் ஃபோன் செய்யவில்லை. ஒரு வாரம் ஓடியது ஆனால் அவர்கள் இன்னும் மௌனம் காத்தார்கள். டென்ஷன் தாங்க முடியாமல் அவன் அவர்களுக்கு ஃபோன் செய்தான். “நீங்கள் ஹோல்ட்டில் வைக்கப்பட்டிருக்கிறீர்கள்” என்று சொன்னார்கள். “அப்படி சொன்னால் உனக்கு வேலை இல்லை என்று நாசூக்காக சொல்கிறார்கள் என்று அர்த்தம்” என்று அவன் அமெரிக்க நண்பன் சொன்னான். மறுபடியும் அவன் வாழ்க்கையை கருமேகங்கள் சூழ்ந்துக்கொண்டன.

இன்னும் இரண்டு இடங்களிலிருந்து அழைப்பு வந்தது, ஆனால் அங்கும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஒன்றில் முதல் சுற்றுக்கு பிறகு அவனை அழைக்கவில்லை. இன்னொன்றில் பிட்மெண்ட் சரியில்லை என்று சொல்லிவிட்டார்கள். இன்னும் இரண்டு வாரங்களில் புதிதாக வைஸ் பிரெஸிடெண்டாக நியமிக்கப்பட்டவர் வந்துவிடுவார். அதற்குள் கம்பெனியை விட்டு சென்றுவிடவேண்டும் என்று அவன் இன்னும் தீவிரமாக வேலையை தேடினான். கடைசியில் ஒரு கம்பெனியிலிருந்து அவனை நேர்காணலுக்கு அழைத்தார்கள். இந்த கம்பெனி அவன் இப்பொழுது வேலை செய்துக்கொண்டிருந்த கம்பெனி அளவு பெரிய கம்பெனி இல்லை. அவர்கள் இவனை மிகுந்த மரியாதையுடன் நடத்தினார்கள். “உங்களுக்கு இங்கே வைஸ் பிரெஸிடெண்ட் போஸ்ட் மட்டுமல்லாமல், உங்களை ஐரோப்பா ரீஜன் தலைவராகுவோம். உங்களுக்கு வேலை பளு அதிகமாகும். உங்களுக்கு சம்மதமா?” என்று கேட்டார்கள். “எனக்கு பதவி, பணம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். என்னை நம்பி நீங்கள் எந்த வேலை வேணுமானாலும் கொடுக்கலாம். ஜாப் சட்டிஸ்ஃபாக்ஷன் எனக்கு மிகவும் முக்கியம்” என்றான். அந்த கம்பெனியின் தலைவரே அவனுடன் பேசினார். அது அவனுக்கு மிகவும் உற்சாகம் அளித்தது. எச்‌ஆர் சுற்று முடிந்தவுடன், “உங்களுக்கு வேலை கொடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆப்பர் லெட்டர் உங்களுக்கு நாளை காலையில் ஈ-மெயில் மூலம் வந்து சேரும்” அன்று இரவு முழுவது சந்தோஷத்தில் மூழ்கியிருந்த அவனுக்கு தூக்கம் வரவில்லை. புது உலகம், புது வாழ்க்கை, புதுப்பாதை. எல்லாம் புதிதாக இருக்கப்போகிறது. அவனுக்கு இந்த எண்ணம் கிளர்ச்சியை அளித்தது.

அடுத்த நாள் புதிய வைஸ் பிரெஸிடெண்ட் வந்து சேரும் நாள். அன்று அவனுக்கு ஆப்பர் லெட்டர் வந்தால் அருமையாக இருக்கும். அவர் சேரும்போது இவன் ராஜினாமா செய்துவிடுவான். இதுதான் பழிக்கு பழி என்று எண்ணிக்கொண்டான். அடுத்த நாள் ஈ-மெயில் வரவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தித்தான். காலையில் அலுவலகம் வந்து ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. ஈ-மெயில் வரவில்லை. புது வைஸ் பிரெஸிடெண்ட் வந்துவிட்டார். அவரை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தும் படலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது ஒரு மெயில் வந்தது. “எல்லோரும் கான்பரன்ஸ் அறைக்கு வாருங்கள். புதிய வைஸ் பிரெஸிடெண்ட்டை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்” அவன் இருக்கையை விட்டு நகரவில்லை. “யு நாட் கம்மீங்?” என்று ஒருவன் கேட்டான். “ஒரு ஐந்து நிமிடத்தில் வருகிறேன்” என்றான். அப்பொழுது, “ஆப்பர் லெட்டர்” என்று தலைப்பிட்ட மெயில் வந்தது. அவன் முகத்தில் மகிழ்ச்சி. அவன் மெல்ல சிரித்தான். கான்பரன்ஸ் அறைக்குள் செல்ல இருந்த உயர் அதிகாரி இவனை பார்த்து, “கம்” என்றார். “கம்மிங், கம்மிங்” என்று சற்று நேரம் பொறுங்கள் என்று சைகை செய்தான். “நான் வரமுடியாது.போடா” என்று மனதுக்குள் கூறிக்கொண்டான். 

மெயில் படிக்க ஆரம்பித்தான். “உங்களுடைய அனுபவமும், திறனும் எங்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. உங்களை போன்ற ஒருவரை தான் நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். உங்களுக்கு வேலை அளிப்பதில் நாங்கள் பேரு மகிழ்ச்சியடைகிறோம்.” அவனுக்குளிருந்து ஆனந்தம் வெளியே சிரிப்பாக பொங்கி வந்தது. மனதில் என்றும் அவன் அனுபவிக்காத மகிழ்ச்சியொன்று பரவியது. வாழ்கையில் ஜெயித்துவிட்டோம். இனி எந்த ஒரு எதிர்ப்பு வந்தாலும் அதை எதிர்த்து போராடலாம். நமக்கும் திறமை இருக்கிறது. நாம் யாருக்கும் அடிபணிய வேண்டியதில்லை. லேப்டாப்பை மூடி பைக்குள் வைத்தான். இனி வீட்டுக்கு கிளம்பவேண்டியது தான். இவர்கள் தேடுவார்கள். தேடட்டும்.

மெயில்லை மறுபடியும் படிக்க ஆரம்பித்தான். “உங்கள் திறமையை நாங்கள் வெகுவாக மதிக்கிறோம். அதனால் உங்களை ஐரோப்பிய நாடுகளுக்கு டெலிவேரி ஹெட்டாக நியமிக்கிறோம்” அவனுக்கு பெருமிதம் பெருகியது. யூரோப் ஹெட். அந்த சொற்றொடர் இனித்தது. “எங்கள் கம்பெனியில் நீங்கள் வேகமாக வளரலாம். நல்ல அனுபவங்களை பெறலாம். உங்க உழப்புக்கு தகுந்த மரியாதை இங்கு கிடைக்கும்” மறுபடியும் பூரிப்பு. “எங்கள் கம்பெனி சிறிய கம்பெனி என்பது உங்களுக்கு தெரியும். ஆதலால் எங்களால் சம்பளம் அதிகம் கொடுக்க முடியாது. நீங்கள் சம்பளம் ஒரு பொருட்டில்லை என்பதை தெளிவாக சொன்னீர்கள். அதனால் சம்பளம் சற்று குறைந்திருந்தாலும் நீங்கள் அதை பொருட்படுத்தாமல் எங்கள் கம்பெனியில் சேருவீர்கள் என்று நம்புகிறோம். உங்களை அன்புடன் வரவேற்க காத்துக்கொண்டிருக்கிறோம்” அவனுக்கு வேர்த்தது. இதயதத்துடிப்பு அதிகரிக்க சம்பளம் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்பதை பார்த்தான். இப்பொழுது அவன் வாங்கும் சம்பளத்தை விட முப்பது சதவிதம் கம்மியாக இருந்தது.. அவன் எதிர்பாரா சமயத்தில் யாரோ கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டது போல் அவன் முகம் மாறியிருந்தது.. 

அப்பொழுது அவன் தொலைபேசி ஒலித்தது. “கம் சூன்” என்று மேலதிகாரியின் குரல். அவன் பைக்குள் வைத்திருந்த லேப்டாப்பை பார்த்தான். தூக்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிடலாமா என்று யோசித்தான். பிறகு ஏதோ முடிவெடுத்தவன் போல் “கம்மிங்” என்று கூறிவிட்டு கான்பரன்ஸ் அறையை நோக்கி ஓடினான். 

2 Replies to “சுழற்சி”

  1. அருமையான நிஜ வாழ்க்கையை ஒத்த கதை. இவ்வகை நிகழ்வுகள் நம்மில் பலரும் அனுபவித்திருக்கிறோம். ஒரு தோல்வி எப்பொழுதும் ஒரு நெகடிவ் அதிர்வை உண்டு பண்ணும். என் அனுபவத்தில், அந்த அதிர்வில் புதிய பாதையைத் தேடுவது உகந்ததல்ல, ஒரு கருதரங்கு, அல்லது ஒரு டெமோ அல்லது ஒரு பெரிய வாடிக்கையாளர் சந்திப்பு, அல்லது ஒரு வெற்றிகரமான ப்ராஜக்ட் முடிவில் நம்மிடம் மிக பாஸிடிவான அதிர்வு இருக்கும். அந்தத் தருணமே புதிய பாதையை தேடும் சரியான தருணம் என்பது என் கருத்து.

    வாழ்த்துக்கள் சுரேஷ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.