குஞ்சர நிரை

தன் சிறிய தலையை ஆட்டியபடி ஒரு உற்சாக உருளையாய் “ததுக்கு பொதுக்கு” என்று பெல்லியை நோக்கி ஓடிவரும் பொம்மியை உலகமே இந்த வாரம் நெகிழ்வுடன் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறது. ஆண் பெண் பேதமின்றி வயது வித்தியாசமின்றி நம்முள் இருக்கும் தாய்மையை காற்றில் துழாவும் தன் கரத்தால் மெல்லத் திறக்கிறது பொம்மி. ஏற்கெனவே கனவுகளில் யானைக்குத் தன்னுடைய சோப்பை தேய்த்து விட்டுக்கொண்டிருக்கும் பிஞ்சிடம் பொம்மியை காட்டினால்? “நாம ஒரு யானைக்குட்டி வளர்க்கலாமாப்பா?” என்றான் மகன். நாற்பதாண்டுகளுக்கு முன் நான் என் தந்தையிடம் கேட்ட அதே கேள்வி!

எண்பதுகளில் மதுரையில் மட்டும் கிட்டத்தட்ட பத்து யானைகளேனும் இருந்தன. எங்கள் வீட்டின் அருகில் உள்ள கூடலழகர் பெருமாள் கோயிலில் இருந்த நொண்டி யானைதான் என் முதல் “தொடுகை”. வீட்டுப்பாடம், சாப்பாடு அனைத்தும் அதனருகிலேயே நிகழ்ந்தன. யானை பின்னாடியே போயிடாதடா என்பார் அம்மா.

யானை, நேர்மையாலும் அன்பினாலும் கட்டமைக்கப்பட்ட ஒரு உயிர் என்பது என் பால்யத்திலேயே மிகமிக ஆழமாக வேரூன்றிய ஒரு நம்பிக்கை. யானைகள் குறித்த பல்வேறு புனைவுகளின் வழியே அதை மேலும் மேலும் மெருகேற்றியபடி இருந்தேன். பதின்ம வயதுகளில் அது அடுத்த கட்டத்தை அடைந்தது. யானை போன்றதொரு வாழ்வு என் கனவானது. நேர்மையும் அன்பும் நிரம்பிய வாழ்வு அத்தனை எளிதானதல்ல என்று அனுபவங்களைக் கடந்து கண்டறிந்து, ஏராளமான சமரசங்களின் வழியே சாமானியனாய் மாறிப்போன என்னுள் இன்னும் ஏக்கமாய் தேங்கியிருக்கிறது. எதார்த்தம் மீறிய எதுவும் ஏக்கமாய் நீட்சியடைவது தானே உலகியல் நியதி! 

நொண்டி யானை

கொடுத்த ஊக்கத்தில் மீனாட்சி நோக்கி நகர்ந்தேன் நான். அவளுடன் அங்கயற்கண்ணி. சிறுதேர் பருவத்தில், தமிழ் புகும் புது நாக்கில், “சின்ன நானை பெரிய நானை” என்று அவர்களை அழைத்துக் கொண்டிருந்தவன், பிள்ளைத் தமிழ் பருவங்களை கடந்தேன், சில வருடங்களில் அவளை நோக்கி நடந்தேன்.. மீனாட்சி நல்ல உயரம். பொதுவாக பிடிகள் அத்தனை உயரம் கொண்டவையாக இருப்பதில்லை. புகர்முகம் என்னும் சொல் அவளுக்கு பொருந்தும். புள்ளிகள் கொண்ட முகமுடைய யானை என்பதே அதன் பொருள். கோன் ஐஸ்ஸில் உள்ள கோன் போன்ற நிறம் கொண்டது அவளது தும்பிக்கையின் முன்பகுதி. அதில் பரவியிருக்கும் புள்ளிகள்… கையில் நாலணாவுடன் வன்னி மரத்தடியில் நிலைகொள்ளாமல் அமர்ந்திருப்பேன். எதிரில் இருக்கும் கொட்டடியின் கதவு திறக்கும் சத்தம் கேட்டவுடன் ஓடிச் செல்வேன். நாலணா கொடுத்தால் மீனாட்சியையும் அங்கயற்கண்ணியையும் கண்டு வரலாம். இன்னொரு பக்கமிருக்கும் ஒட்டகத்தில் எனக்கு நாட்டமிருந்ததில்லை. நாலணா என்பது அன்று குறிப்பிடத்தக்க ஒரு தொகை. அடிக்கடி நாலணாவுடன் வரும் என்னை ஒரு தினம் தடுத்து நிறுத்திய பாகன் “உனக்கெப்படி பைசா கிடைக்குது போ போய் உங்கப்பாவை கூட்டிட்டு வா” என்று திருப்பி அனுப்பி விட்டார். அப்பாவும் ஒரு நாள் என்னுடன் வந்து “அவனுக்கு யானைய பிடிக்கும் அதான் வரான். நான் தான் பைசா தரேன்” என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். பாகனின் மனம் சில வாரங்களில் இளகத் துவங்கியது. “ஏறி உட்கார்ந்து பார்க்கணுமா?” என்றார். பாகனின் கால்களுக்கிடையில் அமர்ந்தவுடன் நகரத்துவங்கியது அந்தக் கைம்மலை. அம்புலிமாமா கதைகளில் வரும் அரசர்கள் போல என்னை நினைத்துக் கொண்டேன். ஆடிவீதியில் சிறிது தூரம் சென்றபின் அவள் தன் தும்பிக்கையை தலைக்கு மேல் உயர்த்தி ஆட்டியபடி இருந்தாள். “பிடிச்சிருக்கா”ன்னு கேக்குது என்றார். இனி வரும் தலைமுறைகளுக்கு சாத்தியமேயில்லாத நிமிடங்களை எனக்கு அன்று தந்தாள் அவள்.

தந்தைக்கு செவ்வாய் தோறும் குன்றம் செல்லும் பழக்கமிருந்தது. அங்கு அவ்வை இருப்பதை அறிந்தபின் நான் செவ்வாய்கிழமைகளுக்காக காத்திருக்கலானேன். அகலமான திருநீற்றுப்பட்டைகள், அதன் குறுக்கே செந்நிற வேல் என்று ஞானப் பழமாய் இருப்பார் அவ்வை. உள்ளே நுழைந்ததும்… மண்டபத்தில் இருக்கும் கடைகள் கடந்ததும்… சிலபடிகள் ஏறி வலது பக்கம் பார்க்கும் வரை பதைபதைப்பாக இருக்கும்…அவ்வை எங்கேனும் சென்றிருந்தால்…? வாரந்தோறும், வருடக்கணக்காய் சென்று கொண்டிருந்த‌ அப்பாவுக்கு பாகன்  பழக்கம். அதன் பயனாக, எனது மற்றொரு அவா அவ்வையின் மூலம் நிறைவேறியது. அந்த அற்புத நாளில், பாகன் தோள் மீதமர்ந்து ஒரு சிறிய கவளத்தை யானையில் வாய்க்குள் வைத்தேன். கையை எடுக்க மனமில்லை. அவ்வையும் திறந்த வாய் மூடவில்லை. பதட்டமடைந்த பாகன் “வச்சிட்டு உடனே கையை எடுத்துரணும்” என்றார். புரியாமல் விழித்தேன். “கை உள்ள‌ இருக்கும்போது வாய் மூடிருச்சுன்னா கையெலும்பு முறிஞ்சுரும். அதுக்காகத்தான் நீ கைய எடுக்கற வரைக்கும் வாயை மூடாம இருக்கு” என்றார். யானை போன்றதொரு வாழ்வு!

அங்கு ஏற்பட்ட பழக்கத்தால், அப்பா மேலேறிச் சென்று வேலோனைப் பார்த்து விட்டு வரும் வரை நான் அவ்வையின் அருகே அமர்ந்திருக்கலானேன். பெருமாள் கோயில் பாகன் சொன்னதை சரிபார்க்க அவ்வையின் பாகனே பொருத்தமென்று தோன்றியது. “யானைகளுக்கு நாம செய்யற தப்பு தெரியுமா?” என்றேன் ஒரு நாள். வெற்றிலைச் சாறு ஏறிய பற்களின் வழியே சிரித்தார் அவர். “யானை ஏன் தும்பிக்கையால தரையைத் துழாவிக்கிட்டே இருக்கு தெரியுமா? தரையில நடக்கற எல்லா விஷயத்தையும் உறிஞ்சு மூளைக்குள்ள வச்சுக்கும்.” என்றார். நான் சாமர்த்தியமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு “வேற எடத்துல நான் செய்யற தப்பு இங்க நிக்கற யானைக்கு எப்படித் தெரியும்” என்றேன். “தள்ளித் தள்ளி இருக்குற ரெண்டு யானைங்க எப்படி பேசிக்கும் தெரியுமா? தும்பிக்கையால தரையைத் தட்டித் தட்டி பேசிக்கும். பத்து கிலோமீட்டர் தள்ளியிருந்தாக்கூட கேட்டுக்கும். அப்படியே உறிஞ்சு வச்சிருக்குற எல்லா விஷயத்தையும் அனுப்பிரும். நீ அங்குட்டுச் செய்யற எல்லாத்தையும் பெருமாள் கோயில் யானை இங்குட்டுச் சொல்லிரும் தெரியுமா? இப்படியே ஒவ்வொரு யானையா பேசிப்பேசி ஊருல இருக்கற எல்லாரப்பத்தியும் விஷயம் சேர்த்து சித்திரகுப்தன் கிட்ட சொல்லிப்புடுங்க‌. அவரு எழுதி வச்சுக்குவார். எதுக்கு எல்லா கோயில் முன்னாடி யானை நிக்குதுன்னு நினைக்குற? தப்பு பண்ணிட்டு சாமிகிட்ட மன்னிப்பு கேட்டா தப்பிச்சுக்கலாம்னு நினைச்சு உள்ள வரவங்க விவரத்த‌ தனி லிஸ்ட் போட்டு வச்சுக்கும். சாமி மன்னிச்சாலும் யானை விடாது பாத்துக்க‌” என்றவுடன் எனக்கு பயத்தில் அழுகை வந்து விட்டது. அடுத்து வந்த இரவுகளில் அவ்வையும் அங்கயற்கண்ணியும் என்னைத் தூக்கி வீசின. கால்களால் மிதித்து “நல்ல பையனா இருப்பியா” என்று மிரட்டின.

நகர்ந்தன பல செவ்வாய்கள்.

நான் வளர வளர என்னுடன் வளர்ந்தது யானை வேட்கை. இதனால் சில ஸ்வாரஸ்யமான நிகழ்வுகளும் ஏற்பட்டதுண்டு. ஒரு முறை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு சென்றிருந்தோம். கோயிலை நெருங்கும் போதே இரவு ஏழு மணியாகி விட்டது. வாயிலில் நின்றிருந்த காவலர் எங்களுக்கு உதவும் எண்ணத்துடன், “சீக்கிரம் போங்க மேல ஏற முடியாது மூடிடுவாங்க” என்றார். நான் அவரிடம் “யானை இருக்கா கிளம்பிருச்சா” என்றேன். எரிச்சலாய் என்னை அவர் பார்த்த பார்வையின் பொருள், “ஏழு கழுதை வயசாச்சு. நான் என்ன சொல்றேன் நீ என்ன கேக்குற” என்பதே. மற்றோர் பொழுதில் நெல்லை காந்திமதியிடம் மயங்கி, “நான் யானை பார்த்துகிட்டுருக்கேன் நீங்களெல்லாம் உள்ளே போயிட்டு வாங்க” என்று குடும்பத்தினரிடம் சொல்லி விட்டு அமர்ந்தேன். அருகில் இருந்த இரு பெண்கள் தங்களுக்குள் “பாவம்…பார்த்தா நல்லாத்தானே இருக்காரு…” என்ற ரீதியில் பேசிக்கொண்டனர். நல்ல வேளை. என்னிடம் குணசீலம் போய்வரும்படி ஆலோசனை சொல்லவில்லை. புண்ணியம் தேடி மக்கள் குவியும் நூற்றுக்கணக்கான கோயில்களை யானையின் பொருட்டு நானும் சுற்றி வந்தேன். இராமேஸ்வரம் ராம‌லெட்சுமிக்கு தலைமுழுக்க‌ நிறைய முடியிருக்கும். செம்பட்டை நிற புற்களை பரப்பி வைத்ததைப் போல…அதை தடவிப் பார்ப்பதற்கென்றே ஒரு முறை இராமேஸ்வரம் போய் வந்ததுண்டு. பொம்மி வளர்ந்தபின் ராமலெட்சுமி போலிருப்பாள் என்பது என் கணிப்பு.

சமீபத்தில் சென்னையிலிருந்து ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். என் மனைவியிடம் அலைபேசியில் மகன் என்ன செய்கிறான் என்று விசாரித்துக் கொண்டிருந்தேன். அவனை நான் செல்லமாக, “யானை” என்று அழைப்பது வழக்கம். “யானை சாப்டுச்சா?”…”நிறைய தண்ணி குடுத்தயா?”… “யானை சேட்டை பண்ணிச்சா?”,…”இருட்டினப்புறம் வாழைமரம் பக்கம் அனுப்பாத”… என்று பேசிக்கொண்டிருந்தேன். பின்னிருக்கையில் இருந்த ஒரு சிறுமி, “அம்மா அந்த அங்கிள் வீட்டுல யானை வச்சுருக்காரும்மா” என்று உரத்த குரலில் சொன்னபிறகுதான் நிமிர்ந்து பார்த்தேன். பலரும் என்னையே பார்த்தபடி இருந்தனர். பேசி முடிக்கும் வரை காத்திருந்தவர் போல் பக்கத்து இருக்கையில் இருந்தவர், “சார் தனி ஆள் யானை வளர்க்கறது இல்லீகல் ஆச்சே” என்றார். உண்மை தெரிந்தபின் பெட்டியில் ஒரு சிரிப்பலை எழுந்து அடங்கியது. அடுத்தவர் பற்றிய “அக்கறை” நம் மக்களுக்குத் தான் எத்தனை? அதன் பின்னும் மற்றொருவருக்கு ஒரு சந்தேகம். “உங்க பையன் ஓவர் வெயிட்டோ?” என்றார். “அவன் ரொம்ப ஒல்லியான யானை” என்றேன் சிரித்தபடி.

சில வருடங்களுக்கு முன் திருப்பரங்குன்றம் போயிருந்தோம். 80 வயது கடந்த தந்தைக்கு அதுவே அவர் விரும்பிய சேயோனின் இறுதியான இவ்வுலக தரிசனம். படியேறுகையில் அவரின் கையை பிடித்திருந்தேன். நாற்பது வருடங்களில் கரங்களின் பிடிப்பும் பொறுப்பும் இடம் மாறியிருந்தன. என் கண்கள் தானாக வலதுபக்கம் பார்த்தன. யானை மண்டபம், தளங்கள் இடப்பட்டு ஒரு பெரிய அறையாக மாற்றப்பட்டிருந்தது. ஊதுபத்தி மணம் பரவி வழிய‌, மாலைகள் அலங்கரித்த‌ சட்டத்தின் நடுவிலிருந்து “எப்படிடா இருக்க?” என்றாள் அவ்வை. “எத்தனை சேட்டை நீ இங்க பண்ணியிருக்க” என்றார் அப்பா. நினைவுகள் எடை அதிகரிக்கும் பொழுதெல்லாம் அது மெளனத்தை நோக்கி நகர வேண்டும் என்பது தானே காலத்தின் விதி? . அந்த மெளனத்தை உடைத்து, கைக்குழந்தையாய் இருந்த‌ மகனை தோள் மீது வைத்து, அவ்வையைத் தடவிப் பார்க்கச் சொன்னேன். நானும் தான். இப்பேரண்டத்தில், யானையின் பெருவாழ்வு முயன்று தோற்றுக்கொண்டிருக்கும் எண்ணற்ற மனிதர்களில் ஒருவனுக்கும், அப்பெருவாழ்வு சாத்தியமுடைய புதுநாத்து ஒன்றுக்கும் இடையிலுள்ள கண்ணியாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது அவ்வையின் அருகில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த தீபம்.

கொரோனா காலம் முழுவதும்  NGCயின் வழியே அவ்வப்போது என் பசியைப் போக்கிக் கொண்டிருந்தேன். யானைப் பசிக்கு சோளப்பொறி! தொற்று குறைந்ததும் முதல் பயணம் மதுரைக்கே என்பது உள்ளங்கை தர்ப்பூசணி. வழக்கம் போல் ஆடி வீதியில் இருக்கும் யானை கொட்டடிக்குத் தான் கால்கள் சென்றன. முன்பெல்லாம் கோவில் நாள் முழுவதும் திறந்திருக்கும். நடை மட்டும் தான் மதியம் சாத்துவார்கள். மீனாட்சியின் மதிய நேரக் குளியல் பார்த்த பின்பு வன்னிமரத்தடியில் அமர்ந்தால்…மெல்லிய காற்று சுழன்றடிக்கும். அருகிலிருக்கும் நந்தவனத்திலிருந்து பூக்களின் மணம் பரவும். நூற்றுக்கணக்கான குருவிகளும் கிளிகளும் குடும்பம் குடும்பமாய் கீச்சிட்டுக் கொண்டு மரங்களில் இருந்து கிளம்பிப் பறந்து வந்தடையும். மயனின் தோட்டம் மதியத்தில் இப்படித்தான் இருக்குமோ என்றெண்ண வைக்கும். அழகிய ஓவியம் அழிக்கப்பட்டு, அதன் வண்ணங்களின் மிச்சம் ஒழுங்கின்றி பரவியிருக்கும் காகிதம் போல் இருந்தது ஆடி வீதி. 

“டேய் நீ இன்னுமா அப்படியே இருக்க?” என்றது ஒரு குரல். அவளே தான். உள்ளே அமர்ந்து ஊழ் உருவாக்கும் உமையே தான். யானையை மட்டும் பார்த்து விட்டு அவளைப் பாராது போகும் என் பழக்கத்தைத்தான் சுட்டிக் காட்டுகிறாள். உயிர்கள் ஜனிப்பதே ஏதோவொரு பிறப்பில் அவளின் அகப்பொருளுடன் இணைவதற்குதான் என்று தெரியாதவளா அவள்? பேரண்ணை அல்லவா? மகனிடம் விளையாடி விட்டுப் பிடிப்பதுதானே அன்னையின் குணம்? உமையின் வசிப்பிடத்தைச் சுத்தம் செய்யும் ஒரு ஊழியர் எங்களைக் கடந்தார். “யானை எப்ப வெளிய வரும்” என்றேன். “பார்வதிக்கு மேலுக்குச் சுகமில்லை. வெளிய வரதில்லை” என்றார் தன் குழந்தையைப் பற்றிய கவலை போல… பிள்ளைக்குக் காட்டணும்னு கேட்டுப் பாருங்க… விட்டாலும் விடுவாங்க என்று வழியும் சொன்னார். மதுரையை விட்டு வேலை நிமித்தம் மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பிய போது உறவினர்கள் அனைவரிடமும் தெரிவித்தேனோ இல்லையோ, “மீனாட்சி”யிடம் சொல்லி விட்டுத் தான் கிளம்பினேன்.  அவளும் அங்கயற்கண்ணியும் இல்லாது போனபின் எஞ்சியது பார்வதி. மதுரை செல்லும் பொழுதெல்லாம் பார்வதியையும் பார்ப்பதுண்டு. பெரிய கொலுசுகள் எழுப்பும் தாளக்கட்டில் ஒயிலாக நடப்பாள்.

யானையின் வாசம் சுமக்கும் இரும்பு கேட்… கதவு திறக்கும் நேரம் வரும் வரை எத்தனை ஆயிரம் முறை எம்பி எம்பி அதன் இடைவெளிகளின் வழியே பார்த்திருப்பேன்….”சார்” என்று கத்தினேன். இல்லாவிட்டால் பாகன் இருக்கும் இடம் வரை கேட்காத அளவு பெரிய பரப்பு. “பையனுக்கு ரெண்டு நிமிஷம் காட்டிட்டு போயிடுவோம்” என்பதற்குச் செவி சாய்த்து, தள்ளியிருந்து பாருங்க‌ என்ற எச்சரிக்கையுடன் கதவு திறந்தது. உற்சாகமான குளியல்… நாங்கள் மெல்ல நகர்ந்து கிழக்குப்பக்க மதில் சுவர் வரை சென்றோம். “யானைக்குப் பின்பக்கம் வராதீங்க‌” என்றார் கோபமாக. ஆம். நான் அங்கயற்கண்ணியின் முன்னங்கால்கள் தாண்டி நகர முயலும் பொழுதெல்லாம் பாகன் பலமுறை நகைச்சுவையாக இதை சொல்லியிருக்கிறார். “யானையோட கண்ணுக்கு படற மாதிரிதான் நீ இருக்கணும். முதுகுக்குப் பின்னாடி “வேலை காட்டுறவங்களை” யானைகளுக்குப் பிடிக்காது. சட்டுன்னு எத்தி அடிச்சுரும்” என்பார். யானை போன்றதொரு வாழ்வு!

கானுயிர் காண காடு செல்லும் பயணங்களில் சில முறை யானைகள் துரத்தியதுண்டு. மயிரிழையில் தப்பிய அனுபவமும் உண்டு. அப்போதெல்லாம் சட்டென்று மின்னல் போல் தோன்றி மறையும் எண்ணம் ஒன்றே. “யானை போன்றதொரு வாழ்வு” என்ற இலக்கிலிருந்து விலகிச் சென்ற என் மீது யானைகளுக்குக் கொஞ்சம் கோபம் இருக்கத்தானே செய்யும்? ஒரு முறை தொல்குடியைச் சேர்ந்த வன ஊழியருடன், தொலைவில் மேய்ந்து கொண்டிருந்த யானை ஒன்றை பார்த்தபடி இருந்தோம். அப்போது அவர் சொன்னவை அனைத்தும் எப்போதும் மறக்காதவை. “எங்கேயோதானே இருக்குதுன்னு நாம் நினைச்சிட கூடாது. இந்நேரத்துக்கு அது நம்மள வாசனை பிடிச்சிருக்கும். ஆனா ஒண்ணுமே தெரியாத மாதிரி நிக்குது பாருங்க… ஏமாந்து நாம‌ முன்னாடி போனோம்னா அப்புறம் அது மனசு வச்சாதான் நாம வீட்டுக்குப் போக முடியும். ஆனை போல் அதிசயம் உண்டா? அது நினைச்சா தும்பிக்கையால பூவக் கூட கசங்காம பறிக்கும், புல்டோசரயே புரட்டியும் போடும். சாமிகளோட அச்சு சார் ஆனை. சத்தியம் பண்ணிக் கொடுத்துட்டு வருதுக. அதான் நாம பண்ற அட்டகாசத்தையெல்லாம் பொறுமையா பாத்துட்டிருக்குது. இல்லேன்னா எப்பவோ மனுச எனத்தையே காலால தேய்ச்சு மண்ணோட மண்ணாக்கியிருக்கும்” என்றார். சாமியேறியதாகச் சொல்லப்படும் மனிதர்களை பார்த்ததுண்டு. யானை புகுந்த மனிதரை அன்று நேரில் பார்த்தோம். அம்மா சொன்ன “சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட”தில் துவங்கி, எத்தனையோ மனிதர்கள், ஏதேதோ இடங்களில், ஏதேதோ விதங்களில், என் ஏதேதோ வயதுகளில், மீண்டும் மீண்டும் எனக்குக் கற்பித்தவை ஒன்று மட்டுமே. “யானை போன்றதொரு வாழ்வு”.

பொம்மியைப் பார்த்த பிந்தைய இரவு. “எப்பப்பா எனக்கு யானை வாங்கித்தருவ” என்றான் மகன். “வாங்கினால் வருவதல்ல யானை. வாழும் வாழ்வினால் வரும் பேறாம் அது” என்று, நான் பார்த்த யானைகள் எனக்குச் சொல்லிக் கொடுத்தது போல் அவன் பார்க்கப் போகும் யானைகள் அவனுக்குக் கற்றுத் தராமலா இருக்கும்? “தூங்கு. நாளைக்குப் பேசுவோம்” என்று அவனை மேலே சாய்த்துக் கொண்டேன். என்னுள் உலவும் ஏராளமான யானைகளில் ஒன்றின் கன்று என்னைக் கட்டியணைத்துத் தூங்கத் துவங்கியிருந்தது…

One Reply to “குஞ்சர நிரை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.