காலை பிரார்த்தனைப் பாடல்

உலகத்தை நான் கவனித்துப் பார்க்கிறேன்
அதனுள் அங்கே பிரகாசிக்கிறது சூரியன்
அதனுள் அங்கே ஒளிர்கின்றன நட்சத்திரங்கள்
அதனுள் அங்கே உறங்குகின்றன கற்கள்
தாவரங்கள் அவை வாழ்கின்றன வளர்கின்றன
மிருகங்கள் அவை உணர்கின்றன வாழ்கின்றன
மனிதர்கள் அவர்கள் மெய்ப்பொருளை
ஆன்மாவில் தங்கிடத் தருகின்றனர்.

என் இருப்பினுள் வாழும்
ஆன்மாவை நான் கவனித்துப் பார்க்கிறேன்.
உலகத்தைப் படைத்தவர் நகருகிறார்
சூரிய ஓளியிலும் ஆன்ம-ஒளியிலும்
பரந்த உலகில் இல்லாதும்
இங்கே ஆன்மாவின் ஆழத்தில் இருந்தும்.

நீவிர், சிருட்டிகர்-ஆன்மா,
என் இதயத்தை மன்றாடச் சொல்கிறேன்,
அந்த ஆசிகளுக்காகவும் தூய வல்லமைக்காகவும்
கற்றுக் கொள்ளவும் உழைக்கவும்
என்னிடத்தில் வாழவும் வளரவும்.

*

மூலம்: Morning Verse, (Grades 5-12)

by Rudolf Steiner

*

ருடோல்ஃப் ஸ்டைனர் (1861-1925) ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர். அவரது காலத்தில் நன்கு கற்றுத் தேர்ந்த விஞ்ஞானியும், மதிக்கப்பட்ட தத்துவஞானியும், சமூகப் புரட்சியாளரும் ஆவார். கட்டிடக்கலை நிபுணர், உளவியல்வாதி, அமானுஷ்யவாதி ஆயினும் பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதியில் இலக்கிய விமர்சகராகவே உலகுக்கு ஆரம்பத்தில் அறிமுகமானார். விவசாயத்தில் உயிர் இயக்கவியல் அணுகுமுறையை முதன்முறையாக அறிமுகப்படுத்தியவர். பின்னாளில் இவரது கோட்பாடாகிய “மனித இன அறிவு” எனப்படும் ஆன்மீக-அறிவியல் அணுகுமுறைக்காக முக்கியத்துவம் பெற்றவர்.  மேற்கத்திய நாகரீகமானது ஆன்மீக உலகுக்கும் பௌதிக உலகுக்கும் இடையே பின்னிப் பிணைந்த உறவை சரி வரப் புரிந்து கொள்ளத் தவறினால் அது படிப்படியாக நாகரீக வாழ்வுக்கும் பூமிக்கும் அழிவைக் கொண்டு வரும் என சக அறிஞர்கள் சொல்வதற்குப் பல காலம் முன்னரே உலகுக்குத் தெளிவாக எடுத்துரைத்தவர். ஸ்டெயினரின் ஆன்மீக- அறிவியல் வழிமுறைகளும் நுண்ணறிவும் நடைமுறையில் கல்வி, கலை, வங்கி, மருத்துவம், மனோதத்துவம்  முக்கியமாக விவசாயம் ஆகிய துறைகளில் முழுமையான புதுமைகளுக்கு வித்திட்டன.

மேற்கண்ட செய்யுள் அவரது பெயரில் இயங்கும் கல்விக் கூடங்களில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கானக் காலை நேரப் பிரார்த்தனைப் பாடலாக உள்ளது.

*

தமிழாக்கம்: ராமலக்ஷ்மி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.