
நான் இங்கே உட்கார முடியுமா? இல்லை, நீங்கள் எழுந்திருக்காதீர்கள் – எனக்கு இந்த மூலையே போதும். நான் வேறு பெஞ்சுகளுக்கு ஏன் போவதில்லை என்று நீங்கள் ஆச்சரியப்படக் கூடும். இவ்வளவு பெரிய பார்க் – நாலா பக்கமும் பல காலி பெஞ்சுகள்- நான் உங்கள் அருகே வந்து ஏன் புதைந்து கொள்ள விரும்புகிறேன்? நீங்கள் தவறாக நினைத்துக் கொள்ளவில்லை என்றால், ஒரு விஷயம் சொல்லட்டுமா – நீங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிற பெஞ்ச், என்னுடையது. ஆமாம், நான் இங்கு தான் தினமும் உட்காருகிறேன். இல்லை, நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டு விடாதீர்கள். இந்த பெஞ்ச்சில் என்னுடைய பெயர் ஒன்றும் எழுதி வைத்தி ருக்கவில்லை. முனிசிபாலிட்டியின் பெஞ்ச்சுகளுக்கு பெயர் எதற்கு? ஜனங்கள் வருகிறார்கள், ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ உட்கார்ந்து கொள்கிறார்கள், பிறகு போய்விடுகிறார்கள். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட ஆள் இங்கே உட்கார்ந்திருந்தான் என்பது கூட யாருக்கும் ஞாபகம் இருக்காது. அவர்கள் போன பிறகு பெஞ்ச் பழையபடி காலியாகி விடுகிறது. கொஞ்ச நேரம் கழித்து, வெளியிலிருந்து வந்து யாரோ ஒருவர் அதன் மீது உட்கார்ந்து கொண்டால், அதற்கு முன்னால் அங்கு ஒரு ஸ்கூல் குழந்தையோ, தனியான கிழவியோ, அல்லது போதையில் திளைத்திருக்கும் நாடோடியோ, உட்கார்ந்திருந்துவிட்டு போனது அதற்கு தெரியக்கூட வராது. இல்லை, நிலைத்து நிற்கக்கூடிய ஆள் மட்டும்தான் தன் பெயரை எழுதி வைத்துவிட்டுப் போவான் – அதனால்தான் வீடுகளுக்கு பெயர் இருக்கிறது, கல்லறைகளுக்கும்- இருந்தாலும் சில சமயம் நான் நினைப்பதுண்டு, கல்லறைகளுக்கு பெயர் இருக்கக்கூடாது – பெரிய வித்தியாசம் எதுவும் ஏற்படப்போவதில்லை. உயிருடன் இருக்கும் ஒரு மனிதன் தெரிந்தே அடுத்தவருடைய கல்லறைக்குள் ஒருபோதும் நுழைந்து கொள்ளப் போவதில்லை.
நீங்கள் அங்கே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் – குதிரை வண்டி இருக்கும் இடத்தில், இல்லையா? இல்லையே, இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. கல்யாணம் போன்ற சந்தர்ப்பங்களில் மக்கள் இன்னமும் குதிரை வண்டியை உபயோகப்படுத்துகிறார்கள்…. நான் தினமும் பார்க்கிறேன். அதனால்தான் நான் இந்த பெஞ்ச்சை தனக்காக தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறேன். இங்கு உட்கார்ந்து கொண்டால் பார்வை நேராக சர்ச்சின் மீது விழும் – கழுத்தை கோணலாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மிகவும் பழைய சர்ச். இந்த சர்ச்சில் திருமணம் செய்து கொள்வது மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது. ஜனங்கள் எட்டு-பத்து மாதங்களுக்கு முன்னாலேயே தங்கள் பெயரை பதிந்து விடுகிறார்கள். நிச்சயதார்த்தத்திற்கும் திருமணத்திற்குமிடையே இவ்வளவு நீண்ட இடைவெளி இருப்பது சரியில்லை. சில சமயம் நடுவிலேயே மன வேறுபாடு ஏற்பட்டு விடும். திருமணம் நடக்க வேண்டிய நேரத்தில் மணமகன் மணமகள் யாருமே கண்ணில் பட மாட்டார்கள். அந்நாட்களில் இந்த இடம் வெறிச்சோடிக் கிடக்கும். கூட்டமும் இருக்காது. குதிரை வண்டியும் இருக்காது. பிச்சைக்காரர்கள் கூட வெறுங்கையோடு திரும்புவார்கள்.
இப்படித்தான் ஒரு நாள், நான் எதிரில் இருக்கும் பெஞ்சில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். தனியாக உட்கார்ந்து கொண்டு சர்ச்சை வெற்றுப் பார்வை பார்த்து கொண்டிருந்தாள். பார்க்கில் இதுதான் ஒரு கஷ்டம். இந்த திறந்தவெளியில் எல்லோரும் தமக்குள்ளேயே முடங்கி உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் யாரிடமும் போய் இரண்டு வார்த்தை ஆறுதல் கூட சொல்ல முடியாது. நீங்கள் அடுத்தவர்களை பார்க்கிறீர்கள். அடுத்தவர்கள் உங்களை. ஒருவேளை, இதனால் கூட ஏதேனும் ஆறுதல் கிடைக்கலாம். இதே காரணத்தினால் தான் தனி அறையில், ஏதேனும் கஷ்டம் ஏற்பட்டால, ஜனங்கள், அறையை விட்டு வெளியே வந்து விடுகிறார்கள்.
தெருக்களில். பப்ளிக் பார்க்களில். பப்களில். அங்கே யாருமே உங்களுக்கு ஆறுதல் கூறவில்லை என்றாலும் கூட, உங்களுடைய துக்கம், ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் புரண்டுகொள்ளும். துக்கத்தின் கனம் குறையாது; இருந்தாலும் நீங்கள் அதை கூலியின் சாமானைப் போல ஒரு தோளிலிருந்து மறு தோளுக்கு மாற்றிக்கொள்கிறீர்கள். இது குறைவான ஆறுதலா என்ன? நான் அப்படித்தான் செய்கிறேன். காலையிலேயே என் அறையை விட்டு வெளியே கிளம்பி விடுகிறேன். இல்லை, இல்லை, நீங்கள் தவறாக புரிந்துகொள்ளாதீர்கள் – எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. நான் வெயிலுக்காக தான் இங்கே வருகிறேன். நீங்கள் கவனித்திருப்பீர்கள். முழு பார்க்கிலும் இந்த ஒரு பெஞ்ச் தான் மரத்தடியில் இல்லை. இந்த பெஞ்சில் ஒரு இலை கூட உதிர்ந்து விழாது – இதைத் தவிர இன்னொரு பெரிய ஆதாயம் என்னவென்றால், இங்கிருந்து நான் நேராக சர்ச்சை பார்க்க முடியும். ஆனால், இதை நான் நீங்கள் வருவதற்கு முன்பே செய்து விட்டேன்.
நீங்கள் உண்மையிலேயே நல்லூழ் படைத்தவர். முதல் முதலாக இங்கு வந்திருக்கிறீர்கள் – எதிரே குதிரை வண்டி! பார்த்துக் கொண்டே இருங்கள் – இன்னும் சற்று நேரத்திலேயே சர்ச்சுக்கு எதிரில் கூட்டம் சேர்ந்து விடும். அதில் அதிகம் பேருக்கு மணமகனனையும் தெரியாது, மணமகளையும் தெரியாது. ஆனால், ஒரே ஒரு முறை பார்ப்பதற்காக பல மணி நேரங்கள் வெளியே நிற்கிறார்கள். உங்களைப் பற்றி எனக்கு தெரியாது, ஆனால் சில விஷயங்களை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் வாழ்நாள் முழுவதும் குறைவதேல்லை. பாருங்கள், நீங்கள் இந்த பெராம்புலேட்டருக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்தீர்கள். உங்கள் குழந்தை மற்ற குழந்தைகளிடமிருந்து மாறுபட்டு இருக்குமோ என்கிற எண்ணத்தில், முதல் ஆசை, உள்ளே எட்டிப் பார்க்கத் தோன்றியது. இதுவும் வித்தியாசமாக இருப்பதில்லை. இந்த வயதில் எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள் – வாயில் ரப்பர் நிப்பிளை கடித்துக் கொண்டு படுத்து கிடக்கிறார்கள். இருந்தாலும் எப்போதாவது பெராம்புலேட்டரைக் கடந்து செல்லும்போது எனக்கு அதற்குள்ளே எட்டிப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை எழுதுகிறது. யோசித்துப் பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது – ஒரே மாதிரியாக இருக்கிற விஷயங்களை பார்ப்பது அலுத்துப்போவதற்கு பதிலாக, மனிதன் அவற்றைத் தான் அதிகம் பார்க்க விரும்புகிறான்.
ப்ராமில் படுத்திருக்கும் குழந்தை அல்லது புதிதாக திருமணமான ஜோடியின் குதிரை வண்டி அல்லது இறந்தவர்களின் பிண ஊர்வலம். இம்மாதிரியான வற்றைச் சுற்றி எப்பொழுதும் கூட்டம் கூடி இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். நம்மால் முடிகிறதோ இல்லையோ, நம் கால்கள் தானாகவே நம்மை அங்கு இழுத்துச் செல்லும். யோசித்துப் பார்க்கும்போது எனக்கு சில சமயம் மிகவும் ஆச்சரியமாக இருக்கும் – எந்தெந்த விஷயங்கள் நம்மை இந்த வாழ்க்கையைப் பற்றிப்பிடித்துக் கொள்ள உதவுகின்றனவோ, அவை பெரும்பாலும் நம் பிடிக்கு வெளியே நிற்கின்றன. அவற்றைக் குறித்து நம்மாலும் யோசிக்க முடியாது, பிறருக்கும் சொல்ல முடியாது. நான் உங்களிடம் கேட்கிறேன் – நீங்கள் பிறந்த நேரத்தை குறித்து உங்களுக்கு ஏதேனும் ஞாபகம் இருக்கிறதா, அல்லது உங்கள் மரணத்தைப் பற்றி யாரிடமேனும் எதையேனும் சொல்ல முடியுமா அல்லது உங்கள் திருமணம் குறித்த அனுபவத்தை மறுபடியும் ஒன்று விடாமல், உங்களுக்குள்ளேயே நினைத்துப் பார்க்க முடியுமா? நீங்கள் சிரிக்கிறீர்கள் – இல்லை, நான் சொல்ல வந்தது வேறு. தன் திருமண அனுபவங்களை யாரால் தான் நினைவு கூர முடியாது!
சில நாடுகளில், போதையில் முழுமையாக மூழ்கிய பிறகு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்… அதன் பிறகு அவர்களுக்கு அது குறித்து எதுவும் ஞாபகம் இருப்பதில்லை. இல்லை, நான் அந்த மாதிரியான அனுபவங்களைப் பற்றி பேசவில்லை. நான் சொல்ல வந்தது என்னவென்றால், அந்த நொடியை – நீங்கள், திடீரென, தனியாக இருப்பதை விட்டு, இன்னொருவருடன் சேர்ந்திருக்க….வாழ்நாள் முழுவதும்…. முடிவு செய்த அந்த நொடியை, உங்களால் நினைவு கூர முடியுமா? உங்களால் சரியாக அந்த புள்ளியின் மீது விரலை வைக்க முடியுமா முடியுமா? உங்களுக்குள் இருக்கும் தனிமையை சற்றே நகர்த்தி வேறொருவரை உள்ளே நுழைய அனுமதித்த அந்த தருணம். ஆமாம், சற்று முன்பு நீங்கள் சற்றே நகர்ந்து கொண்டு என்னை பெஞ்ச்சில் உட்கார அனுமதித்தீர்களே, அதேபோலத்தான். இப்போது, உங்களை பல வருடங்களாக அறிந்தவள் போல, நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.
பார்த்துக் கொண்டே இருக்கும் போது, இரண்டு மூன்று சிப்பாய்களும் சர்ச்சுக்கு எதிரே நின்று கொண்டுவிட்டார்கள். இப்படி கூட்டம் சேர்ந்து கொண்டேயிருந்தால், போகவரக் கூட வழி இருக்காது. இன்றைக்கு பரவாயில்லை, வெயில் வந்திருக்கிறது. ஆனால், குளிர் நாட்களில் கூட மக்கள் நடுங்கிக் கொண்டே நின்று கொண்டிருக்கிறார்கள். நான் பல வருடங்களாக இதைப் பார்த்துக் கொண்டு வருகிறேன். பதினைந்து வருடங்களுக்கு முன்பு என்னுடைய திருமணத்தின் போது கூடியிருந்த அதே ஜனங்கள் இன்றும் இருப்பார்களா, அதே குதிரை வண்டி ,அதே இங்கும் அங்கும் சுற்றிக் கொண்டிருக்கும் சிப்பாய்கள்… இடைப்பட்ட காலத்தில் எதுவுமே மாறவில்லை என்கிற ப்ரமை எனக்கு ஏற்படும். ஆமாம்! என்னுடைய திருமணமும் இதே சர்ச்சில் தான் நடந்தது. ஆனால் இது வெகு நாட்களுக்கு முந்திய விஷயம். குதிரை வண்டி நேராக சர்ச்சுக்கு எதிரே வந்து நிற்கிற மாதிரி அப்போது தெரு இவ்வளவு அகலமாக இல்லை. அந்த தெருவின் பின்புறம் நாங்கள் வண்டியை நிறுத்த வேண்டி இருந்தது. நான் என் தகப்பனாருடன் இங்கு வரை நடந்து வந்தேன். தெருவின் இருபுறமும் ஜனங்கள் நின்று கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் எதிரே, கால் தவறி நான் விழுந்து விடுவேனோ என்கிற பதட்டத்தில் என் இதயம் துக் துக் என துடித்துக் கொண்டிருந்தது. அன்று கூட்டமாக நின்று கொண்டு என்னை பார்த்துக் கொண்டிருந்தவர்ளெல்லாம் இன்று எங்கே இருப்பார்கள் என்று தெரியவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அன்று என்னைப் பார்த்தவர்களில் எவரேனும், இன்று தனியாக பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருக்கிற இந்தப் பெண் தான் அன்று வெள்ளை உடையில் சர்ச்சை நோக்கி நடந்து கொண்டிருந்தவள் என்று அடையாளம் கண்டு கொள்வார்களா? உண்மையைச் சொல்லுங்கள், அடையாளம் கண்டு கொள்வார்களா? மனிதர்களைப் பற்றி எனக்கு தெரியாது, ஆனால், அன்று எங்களை ஏற்றி வந்த அந்த குதிரை கட்டாயம் அடையாளம் கண்டு கொள்ளும் என்று தான் நான் நினைக்கிறேன். ஆம், குதிரைகளை பார்த்து நான் எப்போதுமே ஆச்சரியப்படுகிறேன். எப்போதாவது நீங்கள் அவற்றின் கண்களை கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா? மிகவும் நெருக்கமான ஒன்றை விட்டுப் பிரிந்திருப்பது போலவும், அதற்கு இன்னும் முழுமையாக தங்களை பழகிக் கொள்ளவில்லை என்பது போலவும் தோன்றும். அதனால்தான், அவை மனிதர்களின் உலகத்தில் மிகவும் வருத்ததமாக இருக்கின்றன. எந்த விஷயத்திற்கும், பழக்கம் இல்லாமல் இருப்பதென்பதை விட துரதிஷ்டம் வேறு எதுவும் இல்லை. கடைசி வரை தங்களை எதற்கும்கும் பழக்கிக் கொள்ள முடியாதவர்கள், ஒன்று, குதிரையைப் போல வாழ்தலைக் குறித்துஅலட்சியமாகி விடுகிறார்கள் அல்லது என்னைப் போல, வெயிலைத் தேடி ஒரு பெஞ்சிலிருந்து இன்னொரு பென்சுக்கு மாறி மாறி சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் என்ன சொன்னீர்கள்? இல்லை, நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள். எனக்கு குழந்தை எதுவும் இல்லை இது என் பாக்கியம். ஒருவேளை, குழந்தை இருந்திருந்தால், என்னால் ஒருபோதும் பிரிந்திருக்க முடியாது. ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே அன்பு இல்லாத போதிலும், குழந்தைக்காக அவர்கள் இணைந்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எனக்கு அந்த மாதிரி தடைகள் எதுவும் இருந்திருக்கவில்லை. அந்த வகையில் பார்த்தால் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் – சந்தோஷத்தின் பொருள் நம்முடைய தனிமையை நாமே தேர்ந்தெடுப்பது எனில். ஆனால், தேர்ந்தெடுப்பது ஒரு விஷயம், பழக்கப்பட்டு போவது என்பது முற்றிலும் வேறு விஷயம். மாலையில் வெயில் தீர்ந்து போகும் போது, நான் என் அறைக்கு திரும்பி விடுகிறேன். ஆனால் திரும்புவதற்கு முன்னால், அவன் எனக்காக காத்திருந்த அந்தப் பப்பில் சற்று நேரம் கண்டிப்பாக உட்கார்கிறேன். தெரியுமா – அந்த பப்பின் பெயர் போனபார்ட். ஆமாம், நெப்போலியன் முதல் முறை இந்த நகரத்துக்கு வந்த போது அந்த பப்பில் அமர்ந்ததாக சொல்கிறார்கள் – ஆனால் அந்நாட்களில் எனக்கு இதைப் பற்றித் தெரியாது. முதல் முறை அவன் என்னிடம் நாம் போனபார்ட்டிற்கு எதிரே சந்திக்கலாம் என்று சொன்னபோது, நான் மாலை முழுவதும், நகரின் மறு கோடியிலிருந்த, நெப்போலியன் குதிரை மீது அமர்ந்து கொண்டிருக்கும் சிலைக்குக் கீழே நின்று கொண்டிருந்தேன். நீங்கள் மாலை முழுவதும் பப்புக்கு எதிரிலும், உங்களுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண் பப்ளிக் ஸ்டேச்சுவுக்கு எதிரே நின்று கொண்டு தங்கள் முதல் டேட்டை கழித்ததாக நீங்கள் எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிறகு, அவனுடைய விருப்பம், என்னுடைய பழக்கமாக மாறியது. என்னை சந்திப்பதற்கு முன்னால் அவன் சுற்றிக் கொண்டிருந்த இடங்களுக்கு நாங்கள் இருவரும் போவோம் அல்லது நான் என் குழந்தைப் பருவத்தை கழித்த இடங்களில் சுற்றுவோம்.
ஒருவரை நாம் மிகவும் நேசிக்கத் தொடங்கும் போது, அவர்களுடைய நிகழ்காலத்தில் அவர்களோடு இருக்க விரும்புவதோடல்லாமல், அவர்கள் நம்மோடு இல்லாதிருந்த அவர்களுடைய இறந்த காலத்தையும் விழுங்க நினைக்கிறோம். இது கொஞ்சம் வினோதமாக இல்லை! இத்தனை பேராசை பிடித்தவர்களாகவும் பொறாமை பிடித்தவர்களாகவும் நாம் மாறி விடுவதில், ஒரு காலத்தில், நாம் இல்லாமலும் அவர்கள் இருந்திருக்க கூடும், அன்பு செலுத்தி இருக்கக்கூடும் தூங்கி விழித்திருக்க கூடும் என்றெல்லாம் யோசிப்பதை கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. பிறகு அவர்களோடு சில வருடங்கள் சேர்ந்து இருந்து விட்டால், எந்த பழக்கம் உங்களுடையது எந்த பழக்கம் திருடப்பட்டது என்று சொல்வது கூட கடினமாகிப் போகிறது…..ஆமாம், சீட்டுக்கட்டுகளின் சீட்டுகளைப் போல அவை ஒன்றுக்குள்ள் ஒன்று இணைந்து ஒன்றாகிவிடுவதில், ஒரு சீட்டை எடுத்து இது என்னுடையது இது அவனுடையது என்று நம்மால் சொல்ல முடிவதில்லை. பாருங்கள், இறப்பதற்கு முன்பு, நம் இதயத்தை நாமே கிழித்து காட்ட, எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நான் சில சமயம் நினைப்பதுண்டு.
நம்முடைய இறந்த காலத்தின் மடிப்புகளை வெங்காயத்தோல் போல ஒவ்வொன்றாக உரித்துப் போட. உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் – எல்லோரும் தத்தம் பங்கை வசூலித்துக்கொண்டு போக வருவார்கள். தாய்- தந்தை, கணவர், நண்பர்கள். எல்லா தோல்களும் அவர்களிடம். ஒரு உபயோகமும் இல்லாத, காய்ந்து போன கடைசி குச்சி உங்கள் கையில் மிஞ்சும். மரணத்திற்குப் பிறகு அதை எரிப்பார்கள் அல்லது மண்ணில் புதைப்பார்கள். மனிதன் தனியாகத்தான் இறக்கிறான் என்று எல்லாரும் சொல்கிறார்கள். நான் இதை ஏற்பதில்லை. அவனுக்குள்ளிருந்த, அவன் சண்டையிட்ட அல்லது அன்பு செலுத்திய அத்தனை பேரோடும் சேர்ந்து தான் அவன் இறக்கிறான். அவன் தனக்குள்ளிருந்த ஒரு முழு உலகத்தையே தன் கூட எடுத்துச் செல்கிறான். அதனால்தான் அடுத்தவர் இறக்கும்போது நமக்குள் ஏற்படும் துக்கம், கொஞ்சம் சுயநலம் கலந்த துக்கம். அவர்களோடு நம்முடைய ஒரு பாகமும் என்றென்றைக்குமாய் அழிந்துவிட்டது என்று நமக்கு தோன்றுகிறது.
அட! அவன் விழித்துக் கொண்டு விட்டான் பாருங்கள்! பெரம்புலேட்டரை சற்றே அசையுங்கள். மெல்ல மெல்ல அசைத்துக் கொண்டே இருங்கள். தானாகவே மௌனமாகி விடுவான்….. சின்ன சைஸ் சிகார் பிடிக்கிறவன் போல வாயில் ரப்பர் நிப்பிளை அடைத்து வைத்திருக்கிறான். மேகங்களை எப்படி கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் பாருங்கள்! நான் சிறுமியாக இருந்தபோது, மேகங்கள் என்னுடைய ஆணைப்படி தான் வானில் சுழல்கின்றன என்று எண்ணி தடியை இங்குமங்கும் சுழற்றுவேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், குழந்தைகள் இந்த வயதில் பார்ப்பதும் கேட்பதும் அவர்களுக்கு பின்னால் ஞாபகம் இருக்குமா? கண்டிப்பாக இருக்கும் ஒரு ஓசை, ஒரு காலடிச் சத்தம், மின்னி மறையும் ஒரு காட்சி, பெரியவர்களாகும் போது இவை வயதென்னும் வலையில் சிக்கி தொலைந்து விடுகின்றன. ஆனால் ஏதேனும் ஒரு முன் பின் தெரியாத நொடியில், சிறு சங்கேதம் கிடைத்ததும், இந்த குரலை நாம் எங்கோ கேட்டு இருக்கிறோம் இந்த நிகழ்ச்சி அல்லது இதே போன்ற நிகழ்ச்சி முன்பு எப்போதோ நடந்திருக்கிறது என்று நமக்கு நினைவுக்கு வந்துவிடும். அதோடு, நமக்குள்ளே வருடக் கணக்காய் அடைந்து கிடந்த வேறு பல நினைவுகளும் தாமாகவே திறந்து கொள்ளும். தினசரி வாழ்க்கையின் ஓட்டத்தில் நமது கவனம் அதன் பக்கம் திரும்புவதில்லை. ஆனால் அவை அங்கேயே தான் இருக்கின்றன. தம் ஆயுதங்களுடன் – ஒரு வாய்ப்பை எதிர்நோக்கி – மௌனமாக ஒரு மூலையில் நின்று கொண்டிருக்கும். ஏதோ ஒரு சமயம், தெருவில் சென்று கொண்டிருக்கும்போதோ, டிரமுக்காக காத்திருக்கும் போதோ, அல்லது இரவு விழிப்புக்கும் உறக்கத்துக்கும் நடுவே, திடீரென உங்களைப் பிடித்துக் கொள்ளும். நீங்கள் எவ்வளவுதான் கை கால்களை அசைத்து தப்பிக்க நினைத்தாலும், எவ்வளவுதான் புரண்டு தவித்தாலும் அவை உங்களை விடாது. ஒருநாள் இரவு எனக்கும் அப்படித்தான் ஆனது.
நாங்கள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தோம். எனக்கு வினோதமாக ஒரு சத்தம் கேட்டது – சின்ன வயதில் நான் அதைக் கேட்டு என்னுடைய அறையில் பயந்து போய் எழுந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறேன் – அதே மாதிரியான சத்தம் – பக்கத்து அறையில் அம்மாவும் அப்பாவும் இல்லை என்கிற பயமும் கூடவே எழும். அவர்களை திரும்பி இனி பார்க்கவே முடியாது என்று எனக்கு தோன்றும் உடனே நான் அலற ஆரம்பிப்பேன். ஆனால் அன்று இரவு நான் கூச்சல் போடவில்லை. படுக்கையிலிருந்து எழுந்து வாசல் வரை வந்தேன். கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தேன். வெளியே யாரும் இல்லை. திரும்பி வந்து அவனை பார்த்தேன் அவன், எப்போதும் போல சுவற்று பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான். அவனுக்கு எதுவும் கேட்கவில்லை. அப்போதுதான் அந்த சத்தம் வெளியேயிருந்து இல்லை எனக்குள்ளேயிருந்து தான் கேட்டது என்று எனக்கு தெரிந்தது.
இல்லை எனக்குள்ளே யிருந்து கூட இல்லை – இருட்டில், வௌவாலை போல படபடத்து அது என்னை தொட்டு விட்டு சென்றது – வெளியேயும் இல்லை, உள்ளேயும் இல்லை, இருந்தும் நாற்புறமும் படபடத்துக் கொண்டு. நான் அவன் தூங்கிக் கொண்டிருந்த கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டு மெதுவாக அவனை தொட்டேன். ஒரு காலத்தில் எனக்கு பேரமைதி அளித்த அவனுடைய உடலின் ஒவ்வொரு மூலையையும் தொட்டேன். நான் அவனைத் தொட்ட பிறகும், என் கைகள் காலியாகத் திரும்புவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனுடைய உடலிலிருந்து வெளிப்பட்டு என்னுடைய ஆன்மாவில் வாசம் செய்யும், பல வருடங்களுக்கு முன்பான அதிர்வுகள், இப்போது எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பழைய இடிப்பாடுகளில் , நெடு நாட்களுக்கு முன் எழுதி வைத்த தம்முடைய பெயரை சிலர் தேடுவது போல, நான் அவனுடைய உடலில் தேடிக் கொண்டிருந்தேன். ஆனால் என்னுடைய பெயர் எங்கும் இல்லை. நான் முன்பு பார்த்திருக்காத வேறு சில அறிகுறிகள் இருந்தன. அவற்றோடு எனக்கு எந்த சம்பந்தமும் இருந்திருக்கவில்லை. நான் இரவு முழுக்க அவனுடைய தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். என் கைகள் உயிரற்று அவனுடைய உடல் மீது படிந்து கிடந்தன. எங்கள் இருவருக்குமிடையே ஏற்பட்டிருந்த வெற்றிடத்தைப் பற்றி நான் யாரிடமும் பேச முடியாது என்பது எனக்கு மிகவும் பயத்தை அளித்தது. ஆமாம், பல வருடங்களாக எனக்கு நன்றாக தெரிந்த என் வக்கீலிடம் கூட.
எனக்கு புத்தி குழம்பி விட்டது என்று அவர் நினைத்தார். என்ன சந்தேகம்? என் கணவர் வேறு பெண்ணோடு போக ஆரம்பித்து விட்டாரா என்ன? அவர் என்னிடம் கொடூரமாக நடந்து கொள்கிறாரா? ஆமாம் அவர் என்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார், நான் இடியட் போல அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் எனக்கு, முதல், முறையாக பிரிவதற்கு கோர்ட்டுக்கு போக வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிந்தது. நம்முடைய கஷ்டத்தை அடுத்தவர்களோடு பகிர்ந்து கொண்டால் நாம் லேசாகிவிட முடியும் என்று பெரும்பாலும் மக்கள் சொல்கிறார்கள். நான் ஒருபோதும் லேசா வில்லை. இல்லை, மக்கள் துக்கத்தை பகிர்ந்து கொள்வதில்லை… முடிவு மட்டுமே செய்கிறார்கள்… யார் குற்றவாளி யார் நிரபராதி… கஷ்டம் என்னவென்றால் எந்த நபர் உங்கள் துக்கத்தை மிகச் சரியாகப் புரிந்து கொள்கிறாரோ… அவரிடமிருந்துதான் நாம் விலகி விடுகிறோம். அதனால்தான் நான் இருந்த இடத்தை விட்டு நகரத்தின் இந்த இடத்தில் வசிக்கிறேன். இங்கு என்னை யாருக்கும் தெரியாது. இங்கு என்னை பார்த்து யாரும், ‘பார், இந்த பெண்மணி தன் கணவனோடு எட்டு வருடங்கள் சேர்ந்திருந்து விட்டு இப்போது தனியாக இருக்கிறாள்’ என்று சொல்வதில்லை.
முதலிலெல்லாம் யாராவது இப்படி சொன்னால் நான் நடுத்தெருவில் நின்று விடுவேன். ஒவ்வொருவரையும் பிடித்து நிறுத்திக் கொண்டு ஆரம்பத்திலிருந்து கடைசி வரை எல்லாவற்றையும்சொல்ல வேண்டும் போல இருக்கும். எப்படி நாங்கள் அந்த முதல் மாலை தனித்தனியாக அடுத்தவருக்கென காத்துக் கொண்டு நின்றிருந்தோம்… அவன் பப்புக்கு எதிரில். நான் சிலைக்கு கீழே. எப்படி அவன் முதன்முறை என்னை மரத்தின் மீது சாய்த்து முத்தமிட்டான்… எப்படி நான் முதல் முறை பயந்து கொண்டே அவனுடைய முடியைத் தொட்டேன்… ஆமாம்… நான் அவர்களுக்கு எல்லா உண்மைகளையும் சொல்லாத வரை, முதல்முறையாக எனக்குள் சந்தேகம் துளிர்த்த அந்த இரவைப் பற்றி என்னால் ஒன்றும் சொல்லிவிட முடியாது என்று நான் நினைத்தேன். பல வருடங்கள் கழித்து, என் அம்மா அப்பா படுத்துறங்கிய அந்த அறைக்கு ஓடிவிட வேண்டும் என்று என் மனதில் விருப்பம் எழுந்தது. ஆனால் அந்த அறை காலியாக இருந்தது. நீங்கள் நள்ளிரவில் விழித்துக் கொண்டு எவ்வளவு தான் கத்திக் கூப்பாடு போட்டாலும் அடுத்த அறையில் இருந்து யாரும் வர மாட்டார்கள் என்பது நீங்கள் பெரியவர்களாகிவிட்டதன் அடையாளம் என்று நான் தெரிந்து கொண்டேன். அது எப்போதும் காலியாக தான் இருக்கும். அந்த இரவுக்கு பிறகு நான் எவ்வளவு பெரியவளாகி விட்டேன் பாருங்கள்!
ஆனால் எனக்கு இன்னும் கூட ஒரு விஷயம் புரியவில்லை. நிலநடுக்கம் அல்லது அணுகுண்டு வெடிப்பு குறித்த செய்திகள் பத்திரிகைகளில் தொடர்ந்து பிரசுரமாகி வருக்கின்றன. அடுத்த நாள், குழந்தைகளின் பள்ளி இருந்த இடம் இப்போது சின்னாபின்னமாகி இடிந்து கிடக்கிறது என்று எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது. இடிபாடுகள் இருக்கும் இடத்தில் தூசி புகை. ஆனால் மனிதர்களுக்கு அவ்வாறு நிகழும்போது, அதைப் பற்றி யாருக்கும் எதுவுமே தெரிவதில்லை. அந்த இரவுக்கு அடுத்த நாள் நான் நகரத்தில் தனியாகச் சுற்றிக் கொண்டிருந்தேன். யாரும் என் பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை. நான் முதல் முறை இந்த பார்க்குக்கு வந்த போது, நீங்கள் இப்போது உட்கார்ந்து கொண்டிருக்கும் இதே பெஞ்ச்சில் தான் உட்கார்ந்து கொண்டிருந்தேன். தெரியுமா, என்னுடைய திருமணம் நடந்த அதே சர்ச்சுக்கு எதிரே நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன் என்பது எனக்கு மிகுந்த ஆச்சரியமளித்தது. அப்போதெல்லாம் தெரு இவ்வளவு அகலமாக இல்லை. எங்களுடைய குதிரை வண்டி சர்ச்சுக்கு எதிரே வர முடியவில்லை. நாங்கள் நடந்து தான் இங்கு வந்தோம்.
ஆர்கனில் சங்கீதம் இசைக்கிறார்கள், உங்களுக்கு அது கேட்கிறதா? பாருங்கள் அவர்கள் கதவை திறந்து விட்டார்கள். இசை இங்கு வரை கேட்கிறது. இதைக் கேட்டதுமே அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தமிட்டு கொண்டு மோதிரம் மாற்றிக் கொண்டு விட்டார்கள் என்று எனக்கு தெரிந்துவிடுகிறது. ஆயிற்று, இன்னும் கொஞ்சம் நேரம் தான். அவர்கள் இப்போது வெளியே வந்து விடுவார்கள். அமைதியாக நிற்க மக்களிடம் பொறுமை இருந்தால் தானே! நீங்கள் சென்று பார்க்க விரும்பினால், கவலை இல்லாமல் போய்விட்டு வாருங்கள். நான் இங்கு தான் உட்கார்ந்து கொண்டிருப்பேன். உங்க குழந்தையை பார்த்துக் கொண்டே இருப்பேன். என்ன சொன்னீர்கள்…. ஆமாம்.. மாலை வரை இங்குதான் இருப்பேன்… பிறகு இங்கு குளிர ஆரம்பித்து விடுகிறது. நாள் முழுவதும் ஒரு துண்டு வெயில் எந்த பெஞ்ச்சில் விழுகிறது என்று நான் பார்த்துக் கொண்டேயிருப்பேன் – அதே பெஞ்சில் போய் உட்கார்ந்து கொள்வேன். அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ நான் உட்காராத மூலை இந்த பார்க்கில் எதுவும் இல்லை. ஆனால் இந்த பெஞ்ச் எனக்கு எல்லாவற்றையும் விட மிகவும் பிடித்தமானது. முதலாவது இதன் மீது இலைகள் உதிர்வதில்லை…. இரண்டாவது….. நீங்கள் கிளம்பிவிட்டீர்களா என்ன….