
யூடா இலக்கிய எழுத்துப்பட்டறையில் இருந்து திரும்பிய அடுத்தநாள் காலை. பழக்கப்பட்ட படுக்கையில் எட்டுமணித் தூக்கமும் அம்மாவின் காப்பியும் மானஸாவின் பயணக்களைப்பைப் போக்காவிட்டாலும், சுகன்யா கொடுத்த அறிவுரையை மறக்காமல், கணினியில் முன் அமர்ந்தாள். ஒளி பரவுமுன் திரையில்… ஒரு வாரப் பழக்கத்தை ஒரே நொடியில் மறந்து அவளைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் ஜோசஃப் வேகமாக நடந்து மறைந்தான்.
ஏமாற்றம்
கிளைத்தெருவில் இருந்து கங்காவும் மானஸாவும் வீடுகளின் வட்டத்திற்குள் நுழைய இருந்தார்கள். அதுவரை காலியாக இருந்த சாலையில் தடதடவென அவர்களை யாரோ பிடிக்கவருவது போன்ற சத்தம். நின்று திரும்பிப் பார்த்தார்கள். பதின்பருவத்தைத் தாண்டாத முகத்துடன் இரு இளைஞர்கள். கோடைக்காலத்துக்குக் கொஞ்சமும் பொருந்தாத கறுப்பு கோட் பான்ட்ஸ், சிவப்பு ட்டை, வெள்ளை சட்டை. முக்கியமாக மார்பில் குத்திய பெயர்-அட்டை. அவர்கள் யார் என்பதில் சந்தேகம் இல்லை. கங்காவும் மானஸாவும் நகராமல் அவர்கள் அருகில் வருவதற்குக் காத்திருந்தார்கள்.
கோடை விடுமுறையின்போது மானஸாவுக்குப் பிடித்த விஷயங்களில் அம்மாவுடன் மாலையில் நடப்பதும் ஒன்று. வார நாட்களில் ஊர்திகளுடன் போராடி அவள் வீட்டிற்குவர ஆறுமணிக்கு மேல் ஆகும். ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் அவள் அலுவலக நேரத்தில் ஒரு மணி குறைவு. சமையல் முடிந்தபிறகும் மாலை வெளிச்சத்தில் மிச்சம். அதை வீணாக்காமல் நீச்சல் குளத்தில் சிறுவர்கள் போடும் சந்தோஷக் கூச்சல் காதில் விழும் வரை ஒரு நடை. சாய்ந்துவிட்ட சூரியனின் பின்னணியில் கனமில்லாத விஷயங்கள்.
“கதை எவ்வளவு தூரத்தில இருக்கு?”
“உன் வேலை நாள் எப்படி?”
வாரக்கடைசிக்கு இன்னும் ஒரு நாள் தான் என்பதால் அன்று பெரியோர்களுக்கும் மகிழ்ச்சி காட்டும் முகங்கள்.
“ம்ம், நீ ரைட்டிங் வொர்க்-ஷாப்புக்கு சால்ட்லேக் சிடி போகணும்” என்றாள் கங்கா வருத்தமும் பெருமிதமும் கலந்த குரலில்.
வரும் நாட்களில் அவள் தனியாக நடக்க வேண்டும். வீட்டிற்கு வெளியே அம்மாவின் பக்கத்தில் நிற்பது கூட தம்பி அலெக்குக்கு கௌரவக்குறைவு.
இளைஞர்கள் வேகத்தைக் குறைத்து பேசும் தொலைவில் நின்றார்கள்.
“ஹாய்! வாட் அ நைஸ் டே!” என்று ஒருவன் ஆரம்பித்தான்.
“வெரி நைஸ்!”
நிஜமாகவே பிரகாசமான ஆனால் மிதமான சூரியனின் பார்வையில் நாள் நன்றாகத்தான் இருந்தது.
“நாங்கள் வருவதைப் பார்த்து நின்றதற்கு நன்றி!”
“துரத்தும் நாய்க்குப் பயந்து நீங்கள் ஓடிவந்ததாக நினைத்து உங்களைக் காப்பாற்ற நிற்கிறோம்” என்றாள் கங்கா.
இருவரும், “தட்ஸ் க்யுட்!” என்று ஜோக் கேட்டது போல விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
சற்றே வயதானவன், “நான் ஸ்டீவ், அவன் ஹென்றி” என்றான்.
“நான் கங்கா.”
“நான் மனா.”
“நாங்கள் உங்களைப் பிடித்துவைக்க வில்லையே?”
இல்லை என கங்கா திரும்பி வீட்டை நோக்கிக் கால் வைக்க அவர்கள் தொடர்ந்தார்கள்.
“நீங்கள் இந்தியர்களா?”
“இந்தியாவில் இருந்து வந்தவர்கள்.”
“அப்படியென்றால் உங்கள் கடவுள் அல்லா. சரியா?” என்றான் இளையவன்.
அவன் சமய அறிவை வளர்க்க முயற்சிக்காமல்,
“எங்களுக்கு பல கடவுள்கள்.”
“அவர்களில் யார் நிஜம், யார் கற்பனை என்று நிச்சயமாகத் தெரியுமா?” எல்லாருமே பொய் என்று சொல்வதற்கு ஸ்டீவ் அடிபோட்டான்.
“நான் கேட்டதைக் கொடுத்தால் நிஜம், கைவிரித்தால் கற்பனை” என்று சிரித்தாள் கங்கா.
“அது சரியில்லை” என்று அவன் இயேசுவின் படத்தைப் பையில் இருந்து எடுத்து அவளிடம் நீட்டினான். “உங்களுக்கு அந்த சந்தேகமே வேண்டாம்! இவர் நிஜமான கடவுள். உங்களை நேசிக்கிறார். கேட்டதை எல்லாம் கொடுப்பார்.”
மார்மன் மதத்தைப் பரப்பும் ஆர்வ இளைஞர்களுக்கு அப்பகுதியில் வசிக்கும் தெற்கத்தி பாப்டிஸ்ட்கள் யாரும் முகம்கொடுத்து பேசியிருக்க மாட்டார்கள். அதனால் அந்த இருவரும் கங்காவையும் மானஸாவையும் பார்த்து ஓடிவந்து பிடித்து இருக்கிறார்கள். அவர்கள் மனதைப் புண்படுத்தாமல், அதே சமயம் படத்தையும் வாங்கிக்கொள்ளாமல்,
“நான் வேலை செய்யும் இடத்தில் ஒரு மார்மன் இருக்கிறார்.”
“பெயர்..”
“கோர்டன் க்றிஸ்டியன்சன்.”
“ஓ! அவர் எங்கள் மதிப்பிற்குரிய எல்டர்.”
இளைஞர்களிடம் இருந்து விடுவித்துக்கொள்ள ஒரு துரும்பு.
“அவர் வழியாக எனக்கு எல்டிஎஸ் (லேடர்-டே செய்ன்ட்ஸ்) சர்ச் பற்றி ஏற்கனவே நிறையத் தெரியும். பை!”
‘புதிதாகத் தெரிந்துகொள்ள ஒன்றும் மிச்சம் இல்லை’ என வீட்டுப்பாதையில் கால்வைத்தாள்.
ஹென்றி மானஸாவைப் பிடித்துக்கொண்டான்.
“நீ கல்லூரி போகிறாயோ?”
அவர்களால் ஆபத்து இல்லையென கங்கா வீட்டிற்குள் நுழைந்தாள். அவள் சாப்பாட்டு மேஜையைத் தயார் செய்வதற்குள் மானஸா விடுவித்துக் கொள்வாள் என்ற எண்ணம்.
“அடுத்த ஆண்டு. நீ?”
“நான் இப்போது தான் முடித்தேன்.”
“எங்கே?”
“ஓரம் ஹைஸ்கூல். சமய சேவைப்பணி முடிந்தபிறகு தான் கல்லூரி.”
“என்ன படிப்பதாக இருக்கிறாய்?”
“மதயியல்.”
“நைஸ் டாக்கிங். பை!”
விற்பனைப் பிரதிநிதிகளைப் போல ஏமாற்றம் அவர்கள் முயற்சியின் ஒரு அங்கம்.
மறுநாள் கங்காவுக்கு வீட்டுவேலை. மானஸா வீட்டிற்கு வெளியே கால்வைத்தபோது… கிளைத்தெருவின் ஓரத்தில் ஹென்றி. வேடிக்கைக்காக, உள்ளே சென்று விவாதப்போட்டியின் போது பயன்படுத்திய பெயர்-அட்டையை சட்டையில் குத்திக்கொண்டு வெளியே வந்தாள். வட்டத்தின் விளிம்பில் நடந்த அவன் அவளைத் தற்செயலாகப் பார்ப்பதுபோல ஆச்சரியம் காட்டினான். மானஸாவும்,
“வாட் அ சர்ப்ரைஸ்!” என்றாள் போலியாக.
அவள் பெயர்-அட்டையில் கண்வைத்து,
“மா ன ஸா சஹா தே வன். உன் பெயரை நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.”
“எப்படி?” என்றாள் நிஜமான ஆச்சரியத்தில்.
“செவன்டீன் பத்திரிகை..”
அதில் அவள் எழுதிய பெண்ணியத்தை வலியுறுத்தும் கட்டுரைகள்.
“நீ அதைப் படிக்கலாமோ?”
“நாங்கள் அப்படியொன்றும் பிற்போக்கு அல்ல.”
கிளைத்தெருவில் நடந்தார்கள்.
“நான் மொழித்திறனை வளர்க்க ஒரு வாரம் யூடா பல்கலைக்குப் போகிறேன்.”
“ஓ! பாராட்டுக்கள்!” தொடர்ந்து மன்னிப்புகோரும் குரலில், “எனக்குக்கூட சுமாராக எழுத வரும்” என்றான்.
தினப்படி நிகழ்வுகளுக்கு குறிப்பு வைத்துக்கொள்வது அவன் கடமைகளில் ஒன்றாக இருக்கும். முந்தைய தினம் அதில் என்ன எழுதியிருப்பான்? தெற்கத்தி பாப்டிஸ்ட்கள் எங்களைப் பார்த்ததும் வீட்டுக்கதவுகளைப் படீர் என சாத்திக்கொள்ள… ஒரு தாயும் மகளும் எங்கள் பார்வையில் சிக்க… அவர்களை நாங்கள் எட்டிப்பிடிக்க…
அவள் மனதைப் படித்ததுபோல,
“நான் சொன்னது, படிக்கும் தரத்தில் எழுதியிருக்கிறேன் என்று. அதை உனக்கு அனுப்பட்டுமா?” என்று மறுக்கமுடியாத கெஞ்சல்.
“ப்ளீஸ்! என் விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும்.”
“சமீபத்தில் நீ எழுதியதைப் படிக்க ஆவல்.”
“முன்னெப்போதோ எழுதியதை அனுப்புவேன். உனக்குப் பிடிக்கும்.”
அதுவரை காரணத்துடன் காணாமல்போய் இருந்த ஸ்டீவ் கண்ணில்பட சந்திப்பு முடிந்தது.
எழுத்துப் பரிமாற்றத்தின் மறுநாள். மாலை நிழல் வீட்டு வட்டத்தை முழுக்க நிரப்பிய நேரம். வாசல் மணியின் அழைப்பு. எந்த விற்பனையாளன் என்று நுழைவிடத்துக்கு வந்த மானஸாவுக்கு கதவை ஒட்டிய கண்ணாடி வழியாகத் தெரிந்த ஹென்றியைப் பார்த்து ஆச்சரியம் வரவில்லை. தெருவில் நின்ற பரிச்சயம் இல்லாத ஊர்தியைக் கவனித்தாள். அதைக் கடன்வாங்கி அவன் தனியாக வந்திருக்க வேண்டும்.
கதவைத்திறந்து, “ஒரு நிமிடம்.”
தோள்களை மறைத்த நீண்ட சட்டையும் காலணிகளும் அணிந்து அவள் வெளியே வந்து,
“நான் முதலில்” என்றாள்.
எதிர்கால மிஷன் சேவைக்கு ஹென்றி ஏழு வயதில் இருந்தே பணம் சேர்க்க ஆரம்பிக்கிறான். அம்முயற்சியில் நாய்களை நடத்துதல், காலியான வீடுகளுக்குக் காவல் இருத்தல் என்று பல சுவாரசியமான நிகழ்வுகள். அவளுக்குப் பிடித்தது…
என் முதல் இருபது டாலர்
என் தாத்தா சென்ட்ரல் வர்ஜினியா கல்லூரியில் பேராசிரியர். ஹவாயி பல்கலையில் ஓர் ஆண்டு செபாடிகல் முடித்துத் திரும்பிப்போன போது எங்களுடன் சில நாட்கள் தங்கினார். அவரை அப்பா விமான நிலையத்தில் இருந்து அழைத்துவந்தார். வீட்டிற்குள் வந்து சோஃபாவில் அமர்ந்து அவர் கொஞ்சம் இளைப்பாறியதும், என் அம்மா சில மாதங்களுக்கு முன் பிறந்த குழந்தையைத் தொட்டிலில் இருந்து தூக்கிவந்து பெருமையுடன் காண்பித்தாள். அதை அவர் கொஞ்சியதும், எனக்கு கிறிஸ்மஸ் பரிசாகக் கிடைத்த வயலினை எடுத்துவந்து நான் காட்டினேன்.
“எதாவது வாசி, பார்க்கலாம்!”
தரையில் அமர்ந்து, ‘பாப்கார்ன் பாப்பிங் ஆன் த ஏப்ரிகாட் ட்ரீ ‘ பாட்டை இசைத்தேன்.
“க்ரேட்!” தாத்தா கைதட்டினார்.
என் தங்கை என்னைவிட இரண்டரை வயது சிறியவள். மற்றவர்கள் தாத்தாவின் கவனத்தைப் பிடித்துவைத்ததைப் பார்த்து, தன் பங்குக்கு அவரிடம் என்ன காட்டலாம் என்று யோசித்தாள். மாடியில் தன்னறைக்குப் போய் அவளுடைய கைப்பையை எடுத்துவந்தாள். அதில் ஒரு சிறிய பர்ஸ். அதைத்திறந்து அவள் சேர்த்துவைத்திருந்த டாலர் நோட்டுகளைப் பெருமையுடன் காண்பித்தாள்.
“இன்னும் நீ கின்டர்கார்டனே போகவில்லை. உனக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?”
“இது மார்கன் பாட்டி தந்தது” என்று பத்து டாலர் நோட்டை எடுத்துக் காட்டினாள். “கார் பயணத்தில் சமத்தாக இருந்ததற்கு ஐந்து டாலர். ஒரு வாரம் பாப்பாவின் ஈர டயபரை அழுக்குக்கூடையில் கொண்டுபோய்ப் போட ஒரு டாலர்” என்று கணக்கு ஒப்பித்தாள்.
“மொத்தம் எவ்வளவு?”
நோட்டுகளைத் தனியாகப் பிரித்து, விரல் விட்டு எண்ணி மனதுக்குள் கூட்டி, “இருபத்தியொன்பது.”
“க்ரேட்! நன்றாக எண்ணுகிறாயே” என்ற பாராட்டுடன் தாத்தா கோட் பாக்கெட்டில் கைவிட்டு ஒரு இருபது டாலர் நோட்டை எடுத்து அவளிடம் நீட்டினார்.
“இதையும் பர்ஸில் வைத்துக்கொள்! என் அன்பளிப்பு.”
அதை வாங்கிக்கொள்ள அவள் கைநீட்டவில்லை. மறுப்பாக தலையை அசைத்தாள்.
தாத்தாவுக்கு ஆச்சரியம்.
“ஏன் வேண்டாம்?”
“நீ எனக்கு மட்டும் கொடுத்தால் அது நியாயம் இல்லை.”
அதைக்கேட்டு அவருக்குக் கண்ணீர் துளித்தது. அதை மறைத்து, பாக்கெட்டில் இருந்து இன்னும் இரண்டு இருபது டாலர் நோட்டுகளை எடுத்தார். ஒன்று என்னிடமும் இன்னொன்று குழந்தைக்காக அம்மாவின் கையிலும் கொடுத்தார். பிறகு தான் என் தங்கை தன் பங்கை வாங்கிக்கொண்டாள்.
தாத்தா அம்மாவிடம்,
“நான் பத்து வருஷமாக ‘எதிகல் ஃபிலாசஃபி’ ஆசிரியர். எத்தனையோ அறிஞர்களின் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கே உன் பெண் எது நியாயம் என்பதை ஒரே வாக்கியத்தில் விளக்கிவிட்டாள் – நீ எனக்கு மட்டும் கொடுத்தால் அது நியாயம் இல்லை.”
“ஒரு குறிக்கோளுக்காக பல சொகுசுகளை விட்டுக்கொடுத்து பணம் சேர்த்ததால் உன் உயர்ந்த குணம் உருவாகி இருக்கிறது.”
“அதேபோல, உன் தாய் இரக்கத்துடன் நின்றுவிடாமல் அக்கறையெடுத்து உன் அப்பாவை அழைத்தது பாராட்டுக்குரிய செயல். குடும்பநலனுக்கு முக்கியத்துவம் தரும் எங்களுக்கும் உங்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை.”
வீட்டுப்பாதையில் நடந்து தெருவுக்கு வந்து அவன் கார் அருகில் நின்றார்கள்.
“உண்மைதான். நம் கதைகளை மட்டுமல்ல அவற்றின் பின்னணியில் இருக்கும் பண்புகளையும் நாம் பகிர்ந்துகொண்டோம். அதைப்பற்றி நாம் இன்னும் விவாதிக்க வேண்டும்” என்றாள் மானஸா.
அது காதில் விழாதது போல், “புக் ஆஃப் மார்மன்…” என்று அவன் ஆரம்பித்தான்.
“நீ சொல்வதை நான் கேட்க வேண்டும் என்றால் பகவத் கீதாவின் சித்தாந்தத்தை நீ புரிந்துகொள்ள வேண்டும்.”
உண்மையில் அவளுக்கு அதுபற்றி அதிகம் தெரியாது. சும்மா பேச்சுக்கு.
ஹென்றிக்கு சேற்றில் காலை வைக்கும் உணர்வு. அவனுக்குத் தரப்பட்ட விதிமுறைகளில் முதலாவது – ஜாக்கிரதை! மற்றவர்களை மாற்றுவதற்கு பதில் நீ மாறிவிடாதே! அதிலும் தெற்கத்தி பாப்டிஸ்ட்கள் நம்மை அவர்கள் பக்கம் திருப்புவதற்கு புத்தகமே எழுதி இருக்கிறார்கள். அடுத்தவர்கள் தங்கள் மதங்களைப் பற்றிய பேச்சை எடுத்தால் திருப்பித்திருப்பி…
“இயேசு தான் நிஜமான கடவுள். நீ மட்டுமல்ல, மனித குலம் முழுவதும் உய்வதற்கே அவர் ஒரு திட்டம் வைத்திருக்கிறார். பூமி சூடாகிவரும் இச்சமயத்தில் அது எல்லாருக்கும் தெரிவது அவசியம்.”
மதப்பரப்பலுக்குப் போகும் மார்மன் இளைஞர்கள் வெறுங்கையுடன் திரும்ப வேண்டாம் என அந்நிலத்தின் பெண்ணை மணந்து அவளைக் கையோடு அழைத்து வருவது வழக்கம். அப்படியொரு எண்ணம் அவனுக்கு இருக்குமானால் அதை சோப் போட்டுக் கழுவி..
“ஹென்றி! நீ பண்பானவன். நம் இருவருக்கும் பொதுவாக எழுத்துத்திறன். ஆனால், நாம் நண்பர்களாகவோ அதையும் தாண்டி காதலர்களாகவோ நிச்சயம் இருக்க முடியாது. குட்லக்!”
திரும்பி திரும்பிப்பாராமல் வீடு நோக்கி நடந்தாள்.
அவனுக்கு ஏமாற்றம். ஆனால் கடமை இழுத்தது.
அடுத்த நாள் ஸ்டீவுடன் ஊரின் தெற்குப்பகுதிக்குப் போய்ப் பார்க்கலாம். அங்கே இந்தியர்கள் அதிகம். மனம் இளகிய பதின்பருவப் பெண் அகப்படலாம்.
(தொடரும்)