அய்யனார் ஈடாடி கவிதைகள்

1.

சுள்ளெறும்புகள் கிடத்தியமரும்
அம்மிக்கல்லில்
வறண்டு கிடக்கும்
உப்பும் மஞ்சளும்
நிமிரும் மாடவிளக்கின்
நெற்றிச்சுடரில்
கோதியலையும் நிழலில்
நடவு செய்த
முத்தங்களைப்போன்று
தனித்திருக்கும் இரவுகளின்
எச்சமிருக்கும் நினைவுகளை
அள்ளிக்குவித்து
அரைக்கும் அம்மிக்கல்
புதர்மண்டிய பாங்கிணற்றில்
உறங்கும் ஆலங்கொடிபோன்று
உறங்குகிறது கொட்டடியில்…

2. எழும்பும் பக்கங்கள்

கனல் எழும்பும்
மணல்புதைந்த
பனிமோதிடும்
ஆற்றுப்படுகையில்
சிதறிய வடுக்களாக
சிப்பிகள் அப்பிய
குழிமேட்டில்
முண்டியெழும்புகிறது
நிர்வாண புழுக்கள்
ஒருபக்கம்.

படைகிளம்பும் மீன்குஞ்சுகளுக்கு
குடைபிடித்துவரும் அல்லிஇதழ்கள்
சடைப்பிடித்த பாசிகளுக்கிடையில்
விடைகொடுக்கும் நீரலைகளோடு
நடையெழுப்புகிறது மறுபக்கம்.

3.

இருட்டின் வாசனையில்
தலைநீளும்
மெல்லின‌ நத்தைபோல்
நகரும் பேருந்தில்
மூலையிடுக்கினுள்
இடம்பிடித்து வரும்
வெற்றிலைத்‌துண்டுகட்டருகே
கலைந்த ஆடையில்
உடல் கருத்த
நிர்வாண மரமாய்
மூத்திரக் கொச்சையோடு
மதுக்குளத்தில் மிதக்கிறான்
நிலையிலா
நினைவிலா
மானுடப்பிணம்…

4.

நிலவில்லாத இரவில்
கிடத்தி சாயும்
தலையணையில்
கடிந்து கொண்ட
முத்த வடுக்கள்
நிலைக்கண்ணாடியில்
பார்க்கையில்
சிவந்து கிடக்கிறது
கீழ் வானத்தில்
வெளிச்சம் பூக்கும் போதெல்லாம்…

5.

குருதி பெருகிட
வீழ்ந்து கிடக்கும்
குளத்து மீன்களிடம்
குமுறி யழுகிறாள்
ஊர்காத்த செல்லாயி

வேப்பந்தழையரைச்சு
வெடவெடனு ஊத்த;
வெங்கல கெளுத்தி
மண்குளத்துல பூக்க;
நத்தாங்கூடுகள்
நறுநறுவென நகர;
ஒவ்வாமை நின்னு
வெள்ளாமை பெருகிட ;
வெடக்கோழி முட்டையுடன்
கடக்காட்டு செவ்வரளி பூபோட்டு ;
மண்குலைத்த கைப்பிடியில்
கொடியருகு குத்தி ;
குடி பெருக
கரும்புகையுடன்
சூழ வருகிறது
பிடி சூடம்…

6.

காற்றின் பேரிரைச்சலில்
மௌனித்துக் கொண்டு
தனித்திருக்கும் மரங்களில்
முண்டிப் பரப்பும்
கிளை வேர்கள்
கட்டியணைக்கும்
அந்தர வெளியில்
யாரும் பறித்திடாத
பிரபஞ்சத்தின் நுழைவாயிலில்
சருகுதிர்க்கும் மைனாவின்
மெல்லிய இறகில்
பூங்காற்றின் ஒத்தடம்
கனத்துப் பதிகிறது
உச்சி நுகரும்
தாயைப் போன்று…

7.

கோதியலைகிறது
தலக்காற்று
வெடவெடுத்த
நாணல்களுக்கிடையில்.
களையெடுத்த கைகளில்
முத்திக் காய்கிறது காய்ப்பு.
வத்திக் காய்ந்த
வெம்மை மார்புகளில்
சுரக்கும் பால்
தணிக்கும் குழந்தையின் பசி.
அலப்பிவிட்டு உதிர்க்கும்
பூங்காற்றின் ரசனையில்
களையெடுப்பின் எச்சம்
முடிந்து எழுகிறது
கொஞ்சும் நஞ்செய்யில்.

8.

புகைமுண்டியெழும்பும் அடுப்படியில்
வியர்வை படிந்த அம்மத்தாவின்
அகண்ட நெற்றிக்கு
ஒத்தடங்கொடுத்து விடும்
ஊது காற்று
முகட்டு ஓடுகளை
தொட்டணைக்கையில்
நிமிர்ந்து எரிகிறது
சாணிப்பால் பூத்த
ஒடுங்கிய அடுப்பில்
ஈரக்கட்டையிலிருந்து
செந்தீ.

அடுத்த தொகுதி

One Reply to “அய்யனார் ஈடாடி கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.