அதிரியன்  நினைவுகள் – 10

This entry is part 10 of 13 in the series அதிரியன் நினைவுகள்

தமிழாக்கம்: நாகரத்தினம் கிருஷ்ணா

பேரரசர் திராயான், டேசியர்கள் மீதான  வெற்றியைக்  கொண்டாடிய வேளையில் சார்மேத்தியர்கள்  படையெடுப்பு பற்றிய செய்தி உரோமாபுரிக்கு வந்துசேர்ந்தது.  நீண்டகாலமாக தள்ளிப் போடப்பட்டுவந்த  இந்த வெற்றிவிழா எட்டு நாட்கள் நடைபெற்றது. விழாவை முன்னிட்டுத் திறந்தவெளி அரங்கில் கூட்டம் கூட்டமாக வனவிலங்குகளை வெட்டுவதென முடிவுசெய்து  ஆசிய, ஆபிரிக்க காடுகளிலிருந்து  அவற்றைத் தருவித்திருந்தனர், அதற்கு  ஏறக்குறைய ஒரு வருடம்  பிடித்தது,  பன்னிரண்டாயிரம் காட்டு மிருகங்களின் படுகொலை, அத்துடன் பத்தாயிரம் கிளாடியேட்டர்களுக்கு வழக்கமான முறையில் சம்பவித்த கோர மரணங்கள் அனைத்தும் ரோமாபுரிக்கு கொலைக் களம் என்றொரு தீய பெயரை அளித்தன.  சார்மேத்தியர்கள் படையெடுப்புச் செய்தி கிடைத்த  அன்று மாலை  அத்தியானுஸ் இல்ல மொட்டைமாடியில் மார்சியஸ், டர்போ மற்றும் எங்கள் விருந்தோம்பியென்று நால்வருமாக இருந்தோம். நகரம் ஒளியில் மூழ்கிக்கிடந்தபோதும், சந்தோஷ ஆரவாரமும் கூச்சலும் ஒருவித அச்சத்தைத் தந்தன. மார்சியஸும் நானும் நான்குவருட இளமைப்பருவத்தை தாரைவார்த்திருந்த  இக்கடினமான போரும், அதன் வெற்றியும் அதைப்பற்றி அறிந்திராத மக்களுக்கு குடித்துமகிழ ஒருகாரணம், அதாவது காட்டுமிராண்டித்தனத்துடன் வெற்றி இரண்டாவது அவதாரம் எடுத்திருந்தது. மிகுந்த புகழ்ச்சிக்குரிய இவ்வகை வெற்றிகள் நிரந்தரமானவை அல்லவென்றும், எல்லையில் புதிதாக ஒரு எதிரி  ஊடுருவியுள்ளான் என்கிற செய்தியையும்  குடிமக்களுக்குத் தெரிவிக்க உண்மையில் இது உகந்த தருணமல்ல. மன்னர் கவனமோ ஆசியப் பகுதிகள் மீதான படையெடுப்பு, அதற்கான திட்டங்கள் என்றிருந்தன, பேரரசின் வடகிழக்குப் பிரச்சனைகளில் அவருக்கு அதிக ஆர்வமில்லை. இந்நிலையில் இப்பிரச்சனையை அதிகம் வளர்த்தாமல், நிரந்தரமானதொரு முடிவை எட்ட  அவர் விரும்பினார். சார்மேத்தியர்களுடனான இந்த முதல் யுத்தத்தை  யுத்தமாக அணுகாமல் குற்றவாளியொருவனைத் தண்டிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை போலக் கருதினார். பன்னோனியா(Pannonia) மாநில கவர்னர் என்பதுடன் அனைத்து அதிகாரமும்பெற்ற தலைமைத் தளபதி என்கிற இரண்டு தகுதிகளின் அடிப்படையில் பிரச்சனைக்குரிய பகுதிக்கு நான் அனுப்பி வைக்கப்பட்டேன்.

பதினோரு மாதங்கள் நீடித்த அப்போர் மிகவும்  கொடூரமானது. டேசியர்களின் அழிவை  ஓரளவிற்கு  நியாயமானது என்றே இன்றைக்கும்  நம்புகிறேன்: எந்த ஆட்சியாளன் தனதெல்லையில்   கட்டுக் கோப்பாக  இருக்கிற ஓர் எதிரியைச்   சகித்துக் கொள்வான்.  ஆனால் டெசெபாலஸ்(Decebalus)45 இராச்சியத்தின் சரிவு அப் பகுதிகளில் ஒரு வெற்றிடத்தை உருவாக்க, குறிப்பாக ஆண்டுகள் பலவாக நடந்த யுத்தத்தில் நிலைகுலைந்திருந்த ஒருநாட்டை எங்கிருந்துதோ வந்ததொரு கும்பல், சார்மேத்தியர்கள் என்கிற பெயரில்  தாக்கியது, எங்கள் பங்கிற்கு  டெஸ்பாலஸை நாங்களும் தாக்கினோம், பலமுறை எரித்தோம். எங்கள் துருப்ப்புகளின் எண்ணிக்கையை பெருக்கிக்கொள்ளும் வாய்ப்பற்ற நிலையில், இப்புதிய எதிரிகள் எங்கள் டேசியர் வெற்றிச் சடலத்தில் புழுக்களாகத் தெரிந்தனர்.

அண்மைக்காலங்களில் போரில் நாம் ஈட்டிய வெற்றிகள், நெறிமுறைகளில் நமக்கென்றிருந்த நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தின, நம்முடைய மரியாதையைக் குறைத்திருந்தன. எங்கள் சைன்யம், முகாம்களில் மனஉறுத்தலின்றி இழிவானவகையில் ரோமானிய பண்டிகைகளைக் கொண்டாடியது. ஆபத்தான அநாமதேய பிரதேசமொன்றில் எங்கள் படை முகாமிட்டிருந்தது, எங்கள் முன்னாள் எல்லைப்பகுதி அதற்குள் அடங்கும் என்பதைத்தவிர குறிப்பிட்டுச்சொல்ல எதுவுமில்லை. ஏற்கனவே குறிப்பிட்டது போன்று எங்களுக்கு உதவிக்கு வரவேண்டிய  துருப்புகளும்  பிறவும் ஆசியாவில் குவிக்கப்பட்டிருக்க,  எங்கள் படைவீரர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்துகொண்டு வந்தனர்.  இதனையெல்லாம் இராணுவமுகாம்களில் ஆலோசகர்களாக இருந்த  திரிபுனூஸ்கள்(tribunus)  உணர்ந்தார்களா என்று தெரியவில்லை.  இராணுவ நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பது அவர்கள் கடமை, ஆனால் அவர்களில் ஒருசிலர் நாளுக்குநாள் எண்ணிக்கையில் குறைந்துவரும் எங்கள் துருப்பினரைக்கொண்டு எதிரியை வெல்வது சாத்தியம் என முட்டாள்தனமாக நம்பினார்கள்.

இப்போரால் மற்றொரு ஆபத்தும் தலைகாட்டியது: நான்கு வருடங்கள் தொடர்ச்சியாக ராணுவத்தின் தேவையைப் பூர்த்திசெய்ய  விவசாயக் குடிமக்கள் , அதிகாரத்தின் பேரால் நிர்ப்பந்திக்கபட்டனர், விளைவாக போர்முனைக்குச் சற்று   தள்ளியிருந்த பல கிராமங்கள் அழிவைச் சந்தித்தன. டேசியர்களுடன் ஏற்பட்ட முதற் சண்டையிலேயே இப்பிரச்சனை தெரியவந்தது. எதிரிகளிடமிருந்து  வெற்றிக்களிப்பில் பறிக்கப்பட்ட  மந்தையிலிருந்த ஆடுமாடுகள் ஒவ்வொன்றும் விவசாயக் குடியிடம் பறிக்கப்பட்ட எண்ணற்ற கால்நடைகள் கூட்டத்தைச் சேர்ந்தவை  என்பதைக் கண்டேன். இந்த நிலை நீடிக்குமெனில், நமது இராணுவத் தேவையின் பாரத்தைச் சுமக்க அலுத்து, காட்டுவாசிகளே பரவாயில்லை என விவசாயிகள் நினைக்கும் நாள் அதிக தூரத்திலில்லை.  சிப்பாய்கள் கொள்ளையடிப்பது ஒருவேளை அவ்வளவு முக்கியமற்றதாக இருக்கலாம், ஆனால் மிகவும் வெளிப்படையாக அது நடந்தது. இந்நிலையில் துருப்புக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது அவசியமாயிற்று, தவிர  « இப்படிபட்ட செயல்களுக்கு  அஞ்சுபவனில்லை » என்று பரவலாக நான் அறியப்பட்டிருந்தேன். அன்றியும், என்னுடைய சொந்தவாழ்க்கையில் கடைப்பிடித்த சிக்கனமுறையை இராணுவத்திற்காக மாற்றி அமைத்திருந்தேன்.  அகஸ்ட்டஸ் (Augstus)நெறிமுறை என்ற பெயரில் ஒருமரபை ஏற்படுத்தி பின்னாட்களில் ஒட்டுமொத்த இராணுவமும் அதனைக் கடைபிடிக்கச்செய்து வெற்றிபெற்றேன். இந்நிலையில் எனது பணியைச் சிக்கலாக்குவதற்கென்றே ஒருசிலர் இருந்தனர், காரணம் அவர்கள்  விவேகமின்மை  அல்லது தங்கள் சொந்தநலனைக் கருத்தில்கொண்டு செயல்பட்டது. இதனைப் புரிந்துகொண்ட நான்   அத்தகையவர்களை  உரோமுக்கு அனுப்பிவைத்தேன். மறுபுறம்,  சமீபத்திய வெற்றிகளினால் அடைந்த  பெருமையில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் நம்மால் புறக்கணிக்கப்பட்ட  குறிப்பாக பாதுகாப்பு நுட்பங்களைச் சரிசெய்வது அவசியம் என்பதால், எங்களிடம் இல்லாத தொழில்நுட்ப வல்லுநர்களை  அழைத்து வந்தேன்; எவையெல்லாம் பராமரிப்பதற்கு அதிகம் செலவைத் தருமோ, அவற்றைக் கைவிட்டேன். குடிமுறை நிர்வாகிகள் (les administrateurs civils),  அரை சுயாதீன தலைமையை (le rang de chefs semi -indépendants) படிப்படியாக உயர்ந்து பெற்றவர்கள், ஒவ்வொரு போருக்குப் பிறகும் தொடர்ந்து உருவாகும் ஒழுங்கின்மையைப் பயன்படுத்திக்கொண்டு பதவியில் தங்களைத் திடமாக நிலைநிறுத்திக்கொள்ளத் தெரிந்தவர்கள், அவர்கள் நம்முடைய குடிமக்களிடம் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு உடமைகளைப் பறிப்பதில், கொள்ளை அடிப்பதில் தேர்ந்தவர்கள், அதுபோல நமக்கும்  துரோகமிழைக்க அவர்கள் தயங்குவதில்லை. இப்பிரச்சினையில் அன்றே நம்முடைய எதிர்காலம் ஓரளவிற்கு கிளர்ச்சிக்கும், பிரிவினைக்கும் தயாராவதைக் கண்டேன். மரணத்தைப் போலவே இதுபோன்ற பேரழிவுகளையும் நாம் தவிர்க்கமுடியுமென எவராவது தெரிவித்தால்  நான் நம்பத் தயாரில்லை.  ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு இதுபோன்றவற்றைத் தள்ளிப்போடுவது நம் கையில் உள்ளது.  எனவே  திறமையற்ற அலுவலர்களை  விரட்டினேன், தீயவர்களைக் கழுவிலேற்றினேன், உண்மையில் நான் இரக்கமற்றவன் என்பதைப் புரிந்து கொண்ட தருணங்கள் அவை.  

ஈரப்பதமான கோடையைத் தொடர்ந்து, பனிமூட்டத்துடன் ஓர் இலையுதிர் காலம், பின்னர் கடுங் குளிர்காலம்.  எனக்கு மருத்துவம் பற்றிய அறிவு தேவைப்பட்டது, முதலில் என்னை நானே குணப்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லையோரங்களில் நான் வாழ்ந்த வாழ்க்கை மெல்லமெல்ல  என்னை சார்மேத்தியினர் நிலைக்கு கொண்டு வந்தது: கிரேக்க தத்துவஞானிக்குரிய  குறுந்தாடி, காட்டுவாசிகள் தலைவன் ஒருவனின்  குறுந்தாடியாக மாறியது. டேசியர்களுடன் சண்டையிட்ட நாட்களில் என்னவெல்லாம் கண்டேனோ அவற்றைத் திரும்பவும் நானே வெறுக்கின்ற அளவிற்கு திரும்பக்  காண நேர்ந்தது. நம்முடைய எதிரிகள் தங்கள் கைதிகளை உயிரோடு எரித்தனர்;  உரோம் மற்றும்  ஆசிய அடிமைச் சந்தைக்கு  நம்முடைய  கைதிகளை அனுப்பிவைக்கப் போதிய வாகனவசதிகள் ஏற்பாடு செய்ய இயலாத சூழ்நிலையில் அவர்கள் கழுத்தை அறுத்து நாங்களும் கொல்லவேண்டியிருந்தது, விளைவாக,  துண்டிக்கப்பட்ட தலைகளுடன் நம்முடைய வேலிகளின் முளைக்கம்புகள் நின்றன. எதிரி தம்முடைய  பணயக்கைதிகளை சித்திரவதை செய்தான்; எனது நண்பர்கள் பலருக்கும் முடிவு  இந்த வகையிலேயே அமைந்தது.  அவர்களில் ஒருவன் இரத்தம்  தோய்ந்த கால்களுடன் முகாம்வரை நகர்ந்தே வந்தான்.  அவனுடைய முகம்  மிகவும் சிதைந்திருக்க, அதன்பின்னர் ஒருபோதும் பாதிப்பற்ற முகமாக அதனை நினைவுகூர என்னால் முடிந்ததில்லை. குளிர்காலமும்  தன்பங்கிற்கு உயிர்களைப்  பலிகொண்டது: குதிரைப்படையினர்  பனியில் புதையுண்டும்,  ஆற்றின் பெருவெள்ளத்தில் அடித்துச்செல்லபட்டும்,  இருமலால் தொண்டைகிழிந்து, பலவீனப்பட்டு நோயாளிகள் கூடாரங்களிலும், காயமுற்றவர்கள் கடுபனியில் உறைந்தும்  மாண்டனர். என்னைச் சுற்றியிருந்தவர்கள் போற்றத்தக்க நல்லெண்ணம் கொண்ட மனிதர்கள்.  ஒருவர் மற்றொருவருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, எனது கட்டளைக்கென காத்திருந்த சிறியதொரு  அப்படைக்குழு   நல்லொழுக்கத்தின் உச்ச வடிவம். என்றும் பயனுள்ளவகையில் இருக்க வேண்டும் என்பதில் அம்மனிதர்களுக்குள்ள திடமான பிடிப்பே, இன்றைக்கும் என்னை அவர்களுக்கு ஆதரவாக வைத்திருக்கிறது. சார்மேத்தியர்களின் ஒருவன் எதிரியான எங்களுடன்  கைகோர்த்திருந்தான், அவனை எனது மொழிபெயர்ப்பாளன் ஆகவும் பயன்படுத்திக்கொண்டிருந்தேன், அவன் தன்னுடையை உயிரைப் பணயம்வைத்து எங்களுக்கு ஆதரவாக தங்கள் பழங்குடி மக்களின் ஒரு தரப்பினரிடையே கலவரத்தைத் தூண்டி கிளர்ச்சியிலும் துரோகச்செயல்களிலும் ஈடுபடவைத்தான்.  இந்த ஆதிவாசிகளைப் பக்குவமாக கையாள்வதில் நானும் வெற்றிபெற்றதன் விளைவாக அம்மனிதர்கள் நம்முடைய சொந்தங்களைக் காப்பாற்ற களத்தில்  முன்நின்று போரிட்டார்கள். தடாலடியாக ஒரு சில நடவடிக்கைகள், இயல்பில் அலட்சியம், ஆனால் சாதுரிய திட்டமிடல் என்பவற்றைக்கொண்டு, உரோம்மீது மேற்கொண்ட தாக்குதல் ஓர் அபத்தமென்பதை எதிரிகளுக்கு   உணர்த்தமுடியும். சார்மேத்தியர் கூட்டத்தின் தலைவர்களில் ஒருவன் டேசியர்கள் மன்னன் டெசெபாலஸ்(Decebalus) என்பவனை முன்மாதிரியாகக் கொண்டு மாண்டிருந்தான்,  அவனுடைய கம்பளிக் கூடாரத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டான், அருகில் கழுத்துநெறித்துக் கொல்லப்பட்ட அவன் மனைவியும்  அதிர்ச்சி தருகிறவகையில் பொதியொன்றில் குழந்தைகள் உடல்களும் இருந்தன. பொதுவாக  எந்த ஒன்றிற்கும், எதையும் வீணடிப்பது எனக்குக் கசப்பூட்டும் ஒரு விஷயம், அன்றைய தினம் அது காட்டுமிராண்டித்தனமான ஓர் இழப்புவரை நீண்டிருந்தது. எதிர்காலத்தில் இம்மரணங்களை உரோம் உள்வாங்கிக்கொள்ளும், இம்மனிதர்களை காட்டிலும்  காட்டுமிராண்டிகளாகத் திகழ்ந்த கூட்டத்திற்கு எதிராக கைகோர்க்க நேர்ந்த மனிதர்களின் இழப்பென்கிற காரணத்தையும் கற்பிக்கக் கூடும், ஆனால்  உண்மையில் இம்மரணங்களுக்காக நான் பெரிதும் வருந்தினேன்.  உரோமாபுரி எல்லையில் தாக்குதல்களை நடத்தியவர்கள் சிதறியோடினர், வந்ததுபோலவே காணாமற்போனார்கள். எனினும்  கருமேகங்கள் சூழ்ந்த இப்பகுதியில் வேறுபல  புயற்காற்றுத் தாக்குதலுக்கு வாய்ப்புகள் இருந்தன. போர் முடியவில்லை, அதனை மீண்டும் நான் கையிலெடுக்க வேண்டியிருந்தது, நான் அரியணையில் அமர்ந்த சில மாதங்களுக்குப் பிறகே சார்மேத்தியர்களுடனான அப்போரை முடிவுக்குக் கொண்டுவந்தேன், தற்காலிகமாக இந்த எல்லைப் பிராந்தியத்தில் அமைதியையும் நிலைநாட்ட முடிந்தது.  உரோமுக்குத் திரும்பியபொழுது, எனக்கு ஏராளமான புகழ்மாலைகள். அதே வேளை முதுமையையும் அடைந்திருந்தேன்.  

முதன் முதல் கான்சல்(Roman–Consul)46 ஆகப் பணியாற்ற ஆரம்பித்தபோது, ஓர் ஆண்டுகாலம், போர்க்கள அனுபவமாகவே  அது தொடர்ந்தது. ஆனால் இரண்டாவது, ஓய்வின்றி  அமைதியின்பொருட்டு நடத்திய ஓர் இரகசிய யுத்தம், தவிர தனியொருவனாக இதனை நான் முன்னெடுக்கவுமில்லை. நான் உரோமுக்குத் திரும்புவதற்கு முன்பே எனது நண்பர்கள் லிசியனுஸ் சுரா, அத்தியானுஸ், டர்போ மூவரின் அணுகுமுறையிலும் மாற்றம் நிகழ்ந்தது, அம்மாற்றத்தை எனது செயல்பாட்டிற்கு இணையானதென்று கூறமுடியும். கடுமையாகத்  தணிக்கை செய்து கடிதங்களை நான் எழுதியிருந்தபோதிலும், வாசித்திருந்த நண்பர்கள் அவற்றை நன்கு புரிந்துகொண்டிருந்தார்கள், விளைவாக தங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவோ அல்லது என்னைத் தொடரவோ அவர்களால் முடிந்தது. கடந்த காலங்களில், என்னுடைய நலனில் ஏற்படும் உயர்வு தாழ்வுகள், குறிப்பாக எனக்கேற்படும் பாதகங்கள் எனக்குச் சங்கடத்தை அளித்தன, காரணம் என் நண்பர்களுக்குத் தெரியவந்தால் அவர்கள் வருந்துவார்களே என்பதற்காக, எனது அச்சங்களையும் பொறுமையின்மைகளையும்  தனியொருவனாக,  பலவீனமான எனது நெஞ்சில் நான் சுமக்கவேண்டியிருந்தது. நண்பர்களுக்கு அவை எட்டக்கூடாது அல்லது தெரிவித்து அவர்களை வேதனைப் படுத்தக்கூடாதென்று மறைக்க  எத்தனித்து நான் சோர்ந்துபோவதுண்டு. என்னைக்காட்டிலும் என்னைப்பற்றி அதிகம் கவலைப்படுகிறவர்கள் சினேகிதர்கள். போதாதற்கு எதையும் ஒருபொருட்டாக கருதாமல், இக்கட்டுகள் எதுவாயினும் மீண்டெழும் சக்திபடைத்த ஒரு ஜீவன் உள்ளே ஒளிந்துள்ளது என்பதை மறந்து , மேலெழுந்தவாரியாக கண்ணிற்படும் குழப்பத்தைமட்டும் கருத்தில்கொண்டு வருந்துவதும் அவர்கள் குணம், அவர்களுடைய இத்தகைய அபிமானத்தின் மீது எனக்கு கோபம் வரும், இன்றைய தேதியில் என் சொந்த நலனில் அக்கறை கொள்ள அல்லது கொள்ளாதிருக்க நேரம் எனக்கு காணாது. நேற்றைய மனிதனில்லை நான். இன்று நான் என்ன தெரிவிக்கிறேன் என்பது கவனம்பெறத் தொடங்கியுள்ளது. இதில் முக்கியமாக கருத்தில்கொள்ளவேண்டியது,  நாடுபிடிக்கும் அரசியலை எதிர்த்த ஒருநபர் இன்று போரின் விளைவுகளை, முடிவை  எதிர்கொள்ளவும்  இயலுமெனில் தவறுகளைக் களையவும் தயராக இருந்தது.  

போரை முன்னிட்டு எல்லைப் பகுதியில் இருந்த நாட்களில், மன்னர் திராயான் ஸ்தூபத்தில் (la Colonne Trajane) குறிப்பிடப்படாத,  வெற்றியின்  மற்றொரு முகத்தைக் காண நேர்ந்தது. இராணுவ பணிக்காலத்தில் இராணுவ செயல்பாடுகளுக்கு  எதிராக அனைத்து ஆதாரங்களையும் திரட்டியிருந்தேன், போர் முடிவுக்குவந்ததும்,  மீண்டும் குடிமுறை நிர்வாகத்திற்கு திரும்பினேன், இப்பணி  இராணுவ பணிக்காலத் தகவல்களுக்கு வலுவூட்டுகின்றவகையில்,  தீர்க்கமானதொரு  ஆவணக் கோப்பு ஒன்றைத் தயாரிக்க எனக்கு உதவியது. லீஜன் படைப்பிரிவு அதிகாரிகள் மற்றும் பிரட்டோரியன் காவலர்கள் இருதரப்பினரும்   இத்தாலியர் வழிமுறையில் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட வீரர்கள்.  ஏற்கனவே இந்த நாட்டில் போதுமான எண்ணிக்கையில் ஆண்களில்லை என்பது ஒரு குறை, இந்நிலையில்  தொலைதூரப் போர்கள் தேசத்தின் கைவசமிருந்த  ஆண்களின் இருப்பை வெகுவாகக் குறைத்தது.  போரில் உயிர்பிழைத்த மனிதர்கள்கூட  வேறொரு வகையில் தாய்நாட்டிற்காக  உயிரைச் சிந்தவேண்டியிருந்தது, காரணம் கைப்பற்றப்பட்ட புதிய பூமியில் வலுக்கட்டாயமாக இம்மனிதர்கள் குடியேற்றப்பட்டனர்.  மாகாணங்களில் கூட,  இராணுவ ஆட்சேர்ப்பு முறை  தீவிரமான கலவரங்களுக்கு அந்த நாட்களில் காரணமாயிற்று. யுத்தம் பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளையும் சீரழித்திருந்தது என்ற உண்மை ஸ்பெயினில்  எனது குடும்பத்திற்கென்றிருந்த தாமிரச் சுரங்கங்கள் பயன்பாட்டைக் கண்காணிக்கச் சென்றபோது உறுதியானது. இறுதியில் என்னைத்தேற்றி சமாதானப்படுத்தியது உரோமில் நான் அடிக்கடி சந்திக்கமுடிந்த தொழிலதிபர்களும், அவர்களின் ஆதாரபூர்வமான  மறுப்புகளும். போர்களைத் தவிர்ப்பது எப்பொழுதும் நம் கையில் இருக்கிறதென சொல்லப்படுவதை  நம்பும் அளவுக்கு நான் அப்பாவி இல்லை. ஆனால் அப்போரை தற்காப்பு என்று வருகிறபோது விரும்பவேண்டியிருந்தது, குறிப்பாக எல்லைகளில் ஒழுங்கைப் பராமரிக்கவும், பிரச்சனையெனில் சரிசெய்யவும் வேண்டும். அதேவேளை பாதுகாப்பிறகு உத்தரவாதம் அளிக்கக்கூடிய  நன்கு பயிற்சிபெற்ற இராணுவ அமைப்பு பற்றிய கனவும் எனக்கிருந்தது. பரந்ததொரு ஏகாதிபத்திய அமைப்பின் அனைத்து புதிய  மிகுதலும் அல்லது அபரிதமான பெருக்கமும் மரணத்தில் முடிகிற  முற்றிய  வியாதியாக, ஒரு புற்றுநோயாக அல்லது நீர்கோர்த்த கட்டியாக  எனக்குத் தோன்றியது.

போரைக் குறித்த இப்படியான சிந்தனைகளில் எந்தஒன்றையும் மன்னரிடம் கொண்டுசென்றதாக தகவல்களில்லை. வாழ்க்கையில் ஒரு தருணமுண்டு, அத்தருணத்தில் மனித உயிர் தன்னையொரு தீய ஆவியிடமோ அல்லது சாத்தானிடமோ ஒப்படைத்து  புதிரானதொரு நியதியின்படி  விரும்பியோ விரும்பாமலோ  தன்னை அழித்துக்கொள்ள முனையும், ஆனால் அத்தருணம் மனிதர்க்கு மனிதர் வேறுபடும் தன்மையது, அத்தருணத்தை சக்கரவர்த்தியும் அடைந்திருந்தார். மன்னரின் இராச்சிய பரிபாலனத்தை ஒட்டுமொத்தமாக பார்க்கிறபொழுது போற்றுதலுக்குரியதாகவே  இருந்தது, ஆனால் போர் வெற்றியை மட்டுமே பொருட்படுத்திய பேரரசருக்கு, அவருடைய  முதன்மை ஆலோசகர்களின் சாதுர்யத்தினால்  கவனத்தைப் பெற்ற அமைதிக்கான நடவடிக்கைகளோ, கட்டிடக் கலைஞர்களின் முக்கிய திட்டங்களோ,  அரசியல் சட்ட வல்லுநர்களின் சிறந்த யோசனைகளோ அவ்வளவு முக்கியத்துவம்  வாய்ந்தவையாக இருக்கவில்லை.  பொதுவில் மிகவும் கண்ணியமாக செலவுசெய்யக்கூடிய பேரரசர்  சொந்தத் தேவைகள் என வருகிறபோது ஒருவித வெறித்தனமான ஊதாரிகுணத்தால் ஆட்டுவிக்கப்பட்டார். தான்யூப் நதிப் படுகையிலிருந்து சுத்திகரிக்கப்படாத தங்கத்தை எடுத்திருந்தோம், அதுபோல, டெசெபாலஸ் மன்னனிடமிருந்து பறித்த ஐந்துலட்சம் தங்கக் கட்டிகளும் கைவசமிருந்தன. மக்களுக்கு வழங்கப்பட்ட தானங்களுக்கும், என்னையும் சேர்ந்த்து முக்கியமானவர்களுக்கு வழங்கப்பட்ட இராணுவ நன்கொடைகளுக்கும், அர்த்தமற்ற சில விளையாட்டுகளின் செலவீனங்களுக்கும், ஆசியக் கண்ட படையெடுப்பின் ஆரம்ப நிதித் தேவைகளை சமாளிக்கவும்  தாராளமாகப் போதுமானது. தீயவழிமுறையில் ஈட்டி, அரசுக் கருவூலத்தில் இருப்பதாக நம்பப்பட்ட செல்வம், எங்கள் உண்மை நிதிநிலைமைக்கு மாறாக ஒரு மாயத்தோற்றத்தை அளித்தது. போரினால் நாங்கள் ஈட்டியதனைத்தும் போருக்கே திரும்பச் சென்றது.

இப்படியொரு தருணத்தில் லிசினியஸ் சுரா இறந்திருந்தார். பேரரசரின் அந்தரங்க ஆலோசகர்களில் மிகவும் முற்போக்கான சிந்தனைக்குரியவர் ஒருவர் உண்டெனில்   அவர் லிசினியஸ்.  அவரது மரணம் ஒருவகையில் நம்முடைய போர்க்களத் தோல்விக்குச் சமம். ஒரு   தந்தையின் அக்கறையுடன் எப்போதும் என்னிடம் நடந்து வந்தவர். அவருடைய அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள கடும் உழைப்பு தேவைப்பட்டிருந்த நிலையில் நோயினால்  உண்டான பலவீனம் அதற்குத் தடையாக இருந்தபோதும், சரியெனப்பட்டதை செய்வதற்கு  எப்போதும் அது போதுமானதாக இருந்தது. அரேபியாவின் வெற்றி அவரது ஆலோசனைக்கு எதிராக நாங்கள் அடைந்த வெற்றி, அவர் உயிரோடு இருந்திருப்பாரேயானால்,   பார்த்தியர் மீதான படையெடுப்பினால், அரசுக்கு ஏற்பட்ட பெரும் செலவுகளையும்,  அதனால் நிர்வாகத்திற்கு ஏற்பட்ட சோர்வையும் தவிர்க்க எங்களுக்கு தனியொரு மனிதராக அவர் மட்டுமே உதவியிருப்பார். அவருடைய இறுதிக் காலத்தின்போது அவரருகில் நான் இருந்தேன், நிர்வாகத்தில்  கடைசியாக எடுத்த முடிவுகள் மற்றும் ஒருசில காலகட்டங்களில் எனது எதிர்கால அரசாட்சியில் கடைப்பிடிக்கவேண்டிய அணுகுமுறைபற்றிய விவகாரங்களின்போது அவருடன் நான் இருந்திருக்கிறேன். இறக்கும் தறுவாயிலிருந்த இம்மனிதரின் விமர்சனங்கள் சக்கரவர்த்தியைத்  தவிர்த்திருந்தன,  ஆனால்  பேரரசரோ, இராச்சிய நிருவாகத்தில் எஞ்சியிருந்த மதிநுட்பமும், தொலைநோக்கும் இறந்த இம்மனிதருடன் மறைந்ததாக நினைத்தார். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கூடுதலாக வாழ்ந்திருப்பாரெனில்,  ஆட்சி அதிகாரத்திற்கு நான் வந்தபோது குறுக்கிட்ட சில சிக்கல்களை ஒருவேளை நான் தவிர்த்திருக்க முடியும்;  என்னை அரசியல் வாரிசென்று வெளிப்படையாக மன்னர் அறிவித்ததில் காலதாமதம் ஏற்பட்டிருக்காது.  அரசியல் அதிகாரத்தை நான் கைப்பற்றியதற்கு இந்த அரசியல் மேதகையின்  கடைசி வார்த்தைகளும், பேரரசுக்கு அவர் ஆற்றவிருந்த கடமையைத் தொடர்வதற்கு  நானே பொருத்தமென  நினைத்ததும் ஒரு காரணம். 

தொடரும்……

—————————- …………………………………………………………………..

சில குறிப்புகள்

45 . டெசெபாலஸ் (Decebalus) கி.பி. 87லிருந்து கி.பி 106வரை தெற்கே தான்யூபு நதியிலிருந்து கிழக்கில் கருங்கடல்வரை பரவியிருந்த நிலப்பகுதியை ஆண்ட சிற்றரசன்.

46. கான்சல் (Roman) பண்டை உரோமாபுரி, முடிஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டு குடி அரசாக அறிவிக்கப்படபின்பு மாகாண நியாதிபதிகளாகவும், தண்டலாளர்களாகவும் பணியில் இருந்தவர்கள்.

Series Navigation<< அதிரியன் நினைவுகள் – 9அதிரியன் நினைவுகள் – 11 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.