அகார் அகார்

 “கொஞ்சம் வேகவைத்த உருளைக்கிழங்கு, மாவு, ஜெலட்டின், மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு இவற்றுடன்’’……….

 ஏதோ புதிய உணவுக்கான செய்முறை குறிப்பு போல தோன்றும் இந்த பட்டியல் நுண்ணுயிரியல் துறை உருவான துவக்க காலத்தில் நுண்ணுயிரிகளை வளர்க்க தேவைப்பட்ட திட வளர்ப்பு ஊடகத்திற்கான சோதனை முயற்சிகளில் பயன்படுத்த பட்டவைகள்.

 ஆண்டன் வான் லேவன்ஹோக் 17ம் நூற்றாண்டில் நுண்ணோக்கியை கண்டறிந்த பின்னர் நுண்ணுயிரியல் என்னும் துறை உருவாகியது.1880 லிருந்து 1990 க்குள்ளான காலகட்டத்தில்தான் நுண்ணுயிரியல் துறையில் முக்கிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து அக்காலம் நுண்ணுயிரியியல் பொற்காலம் எனப்பட்டது. ராபர்ட் காஹ்ஹும், பாஸ்டரும் நுண்ணுயிரியல் துறையை நிறுவியவர்களாகவே கருதப்படுகிறார்கள். அக்காலகட்டத்தின் குறிப்பிடத்தகுந்த நுண்ணியிரியலளர்களில் பலரும்  ராபர்ட் காஹ் மற்றும் லூயி பாஸ்டரின் மாணவர்களாகவே  இருந்தனர்.  

பாக்டீரியாவில் நடைபெற்றுக்கொண்டிருந்த பல  சோதனைக்கூட ஆய்வுகளில் திரவ வளர்ப்பு  ஊடகங்களே பயன்பாட்டில் இருந்தன 

ஆய்வுக்கு தேவைப்படும் பாக்டீரியாக்களை மட்டும் தனித்து வளர்க்க திட ஊடகங்களின் தேவை அப்போது இன்றியமையாததாக இருந்தது. அதன்பொருட்டு மக்காச்சோள கஞ்சி, வேகவைத்த உருளைக்கிழங்கு கெட்டியாக்கப் பட்ட முட்டையின் வெள்ளைக்கரு, மாவுக் கரைசல் மற்றும் இறைச்சி ஆகியவற்றில் பாக்டீரியாவை வளர்க்கும் முயற்சிகள் நடந்தன.

1881 ல் ஒரு சர்வதேச அறிவியல் சஞ்சிகையில் ராபர்ட் காஹ் தனது கண்டுபிடிப்பான புதிய திட வளர்ப்பு ஊடகத்தினை குறித்து விவரித்திருந்தார்.  அதில் தான்  மேற்கண்ட வேகவைத்து வெட்டப்பட்ட உருளைக்கிழங்கு சீவல், மாட்டிறைச்சி சாறு.  ஜெலட்டின், முட்டையின் வெள்ளைக்கரு, மாவு ஆகியவற்றின் கலவையை அவர் குறிப்பிட்டிருந்தார். 

தட்டையான கண்ணாடித்தட்டுக்களில் ஊற்றப்படும் இந்த கலவை கெட்டியாகும் போது அவற்றை  மணிச்சாடியில் வைத்து தேவைப்பட்ட பாக்டீரியாக்களை வளர்க்கலாம் என்பதை அதில் விளக்கியிருந்தார்.

இத்தாலிய மருத்துவரும் பூஞ்சையியல் நிபுணருமான விட்டாடினி (Carlo Vittadini)   30 வருடங்களுக்கும் மேலாக உபயோகித்திருந்த ஜெலட்டின் பசையையும், ஜெர்மானிய உயிரியலாளர் ஷ்ரோடெர் (Schroeter) உபயோகித்த உருளைகிழங்கு சீவலையும் தனது  கண்டுபிடிப்புக்களான முட்டைகரு மாவு ஆகியவற்றையும் சேர்த்து காஹ் கண்டறிந்த அந்த  திட வளர்ப்பு ஊடகம் பாக்டீரியாவை வளர்க்கும் முயற்சியில்  பெரும் திருப்புமுனையை உருவாக்கியது.

ஆனால் அவரது அந்த புதிய முறையில் இரு சிக்கல்கள் எழுந்தன. ஜெலட்டினை சில பாக்டீரியாக்கள் திரவமாக்கியதும் 25 பாகையில் ஜெலட்டின் திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறியதுமாக, உயர் வெப்பநிலையில் பாக்டீரியாக்களை வளர்க்க காஹ்ஹின் அந்த ஊடகமும் உதவவில்லை.

இதை தவிர்க்கவும் புதிய திட ஊடகத்தை கண்டுபிடிப்பதிலும் காஹ் மும்முரமாக ஈடுபட்டு இருந்தார்.  1881-1882ல் பெர்லினில்  (Kaiserliche Gesundheitsamt) அமைந்திருந்த அப்போது புதிய துறையாக இருந்த பாக்டீரியாவுக்கான ஆய்வகத்தில் ராபர்ட் காஹ்ஹின் மாணவராகவும் உதவியாளராகவும்  மருத்துவர் ஹெஸ்ஸ (Walther Hesse) இணைந்துகொண்டார்.

மருத்துவரான வால்டர் ஹெஸ்ஸ ஜெர்மனியின் ஒரு சிறு நகரமான  பிஷாஃப்ஸ்வெர்டா (Bischofswerda) வில் ஒரு மருத்துவக் குடும்பத்தில் 12 குழந்தைகளில் ஒருவர் .நோயியலில் முனைவர் பட்டமும் பெற்ற அவர் கப்பல் ஒன்றில் மருத்துவராக பணியாற்றி கடற்பயணிகளின் நோய்களை ஆராய்ந்தார். 

ஹெஸ்ஸ ஒரு இளம் மருத்துவராக மட்டுமல்லாது அறிவியலில் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த நுண்ணியிரியல் ஆய்வுகளை நன்கு அறிந்தவராகவும் இருந்தார். அவருக்கு லூயி பாஸ்டர், ராபர்ட் காஹ் ஆகியோரையும், அவர்கள் நுண்ணுயிரியியலில் செய்துகொண்டிருந்த ஆராய்சிகளை குறித்தும் அறிதலும் ஆர்வமும் இருந்தது. 

அது பாக்டீரியாக்களால் உருவாகும் நோய்களை குறித்த ஆய்வுகளின் துவக்க காலம் ஆகையால் அங்கு பல தளங்களில் உலகெங்கும் வியாபித்திருந்த பாக்டீரியாக்களை குறித்த ஆய்வுகள் நடந்தன. ஹெஸ்ஸி காற்றில் இருக்கும் பாக்டீரியாக்களை ஆய்வு செய்ய துவங்கினார். ஆய்வகத்தில்  பாக்டீரியா ஆய்வுகளில் திட வளர்ப்பு ஊடகம் இல்லாததால் பல தடைகள் உண்டாகி கொண்டே இருந்தன. ஹெஸ்ஸி அப்படியான ஊடகத்தை தயாரிக்கவும் நுண்ணுயிரிகளை வளர்ப்பதிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்தார். 

அச்சமயத்தில்தான் ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் வந்திருந்த தன் வருங்கால காதல் மனைவி ஃபேனியை அவர் சந்தித்தார்

ஏஞ்சலினா ஃபேனி எய்ல்ஷீமியஸ் (Angelina Fanny Eilshemius), நியூயார்க்கில் ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். 10 குழந்தைகளில் ஃபேனியே மூத்தவர். உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர் இளமையிலேயே மரணம் அடைந்துவிட்டனர். ஃபேனி தனது சகோதரிகளுடன் தன் தாயிடம் இருந்து சமையல், மனையியல் ஆகியவற்றை திறம்பட கற்றார்.

15 வயதில் உலகப்புகழ்பெற்ற ஸ்விட்சர்லாந்தின் மேல்தட்டு மகளிருக்கான பாவனைகள், நடையுடையலங்காரங்கள், நாசூக்குகள் ஆகியவற்றை கற்றுத்தரும் பிரத்யேக பள்ளியில் சேர்ந்து தனது படிப்பை முடித்தார். அந்த பள்ளியில் ஜெய்பூர் மூன்றாவது மஹாராணியான காயத்ரிதேவி உள்ளிட்ட பல நாட்டு அரச குடும்பத்து பெண்கள் பயின்றிருக்கின்றனர்.

அங்கு ஃபேனி குடும்ப பொருளாதாரமும் பயின்றார். அப்படிப்பில் குடும்ப வரவு செலவுகளை கையாள்வது, வீட்டை அலங்கரிப்பது பொருத்தமான உடைகளை தகுந்த அலங்காரங்களோடு அணிவது சத்தான, சுவையான உணவை தயாரிப்பது ஆகியனவும் கற்றுத்தரப்பட்டது

ஃபேனி பிரபல ஸ்விஸ் ஓவியரான  லியோபோல்டின் (Leopold Robert) பேத்தியுமாவர். ஃபேனியும் அவரது சகோதரர்  லூயிஸும்  (Louis Eilshemius)  ஓவியங்கள் வரைவதில் மிக திறமையானவர்கள். 

1872 ல் ஃபேனி தன் சகோதரியுடன் ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோதுதான்  வால்தர் ஹெஸ்ஸவைச் (Walther Hesse) சந்தித்து காதல் வயப்பட்டார் 1873ல் இவர்களது உறுதி செய்யப்பட்ட இவர்களது திருமணம், 1874ல் ஜெனிவாவில் கோலாகலமாக நடந்தது

ராபர் காஹ்ஹின் ஆய்வகத்தில் தனது கப்பல் பணியிலிருந்து விடுப்பெடுத்துக்கொண்டு இணைந்திருந்த ஹெஸ்ஸி தனது வீட்டிலும் ஆய்வகமொன்றை அமைத்திருந்தார்

ஃபேனி வெறும் இல்லத்தரசியாக மட்டுமல்லாது ஹெஸ்ஸியின் ஆய்விற்குத் தேவையான நுண்ணுயிரிகளின் நீர்வண்ண ஓவியங்களை வரைந்துகொடுத்தும்,  பாக்டீரியாவை வளர்க்க மாட்டிறைச்சிச் சாற்றை தினமும் செய்து அனுப்பியும்  சம்பளமில்லாத பணியாளராக   பல உதவிகளை  ஆர்வத்துடன் செய்து கொடுத்தார். 

ஃபேனி புகழ்பெற்ற ஓவியரின் பேத்தி என்பதால் ராபர்ட் காஹ் வியந்து பாராட்டும் அளவிற்கு அவரது நீர் வண்ண ஓவியங்கள் துல்லியமும் நேர்த்தியும் கொண்டிருந்தன. நுண்ணோக்கி வழியே தெரியும் பாக்டீரியாக்களின் பெரிதாக்கப்பட்ட துல்லியமான சித்திரங்களை ஃபேனி தொடர்ந்து வரைந்து கொடுத்து கணவரின், ராபர்ட் காஹ்ஹின் ஆய்வுகளுக்கு பெரும் உதவியாக இருந்தார் 

காற்று பாக்டீரியா ஆய்வில் அவற்றை வளர்க்க ஜெலட்டின் தடவப்பட்ட சோதனை குழாய்களை ஹெஸ்ஸி உபயோகித்தார். ஆனால் பாக்டீரியா வளர்கையில் ஜெலட்டின் உருகி ஆய்வை பாழாக்கிக்கொண்டே இருந்ததில், அவர் மனமுடைந்து மீள மீள புதிய திட ஊடகத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காஹ்ஹுடன் இணைந்து இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருந்தார். ஃபேனிக்கும் இது கவலையளித்தது, அவர் கணவருக்கு எப்படியும் உதவ நினைத்தார்.

ஒரு விடுமுறை நாளில் கணவரை ஆய்வின் அழுத்தங்களிலிருந்து தற்காலிகமாக விலக்கி ஃபேனி ஒரு சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றார்.  மதிய உணவின் போது அவருக்கு பிரியமான ஆப்பிள் ஜெல்லியை பரிமாறியபடியே ஒரு முக்கிய யோசனையை ஃபேனி தெரிவித்தார். அந்த யோசனையே இன்று பாக்டீரியா வளர்ப்பிலும் பல்லாயிரம் புதிய கண்டுபிடிப்புக்களுக்கும் அடித்தளமாக அமைந்தது

ஃபேனி மனையியல் கல்வி கற்றவர் மிகத் தேர்ந்த சமையல் நிபுணரும் கூட. அவரது பிறந்த வீட்டிலிருந்து சமையலுக்கு தேவையான பல பொருட்களையும்  கொண்டு வந்திருந்தார். அவ்வபோது அவரது அன்னையும் அவருக்கு தேவையானவற்றை அனுப்பிக் கொண்டிருந்தார்.

ஃபேனியின் தாய்வீட்டுக்கு அருகிலிருந்தவர்களும் அவர்களது குடும்ப நண்பர்களுமான ஜாவா தீவுகளில் இருந்து வந்தவர்கள் கொடுத்த  சூப்புக்களை கெட்டியாக்கும் பொடியை, ஃபேனி ஆப்பிள் ஜெல்லி உருவாக்கவும் சூப்புகளை கெட்டியாகவும் பயன்படுத்துவார்..

‘கணவரிடம் ’அகார்’ என்றழைக்கப்படும் அந்த கடற்பாசிகளின் பொடியை பாக்டீரியா வளர்ப்பில் உபயோகப்படுத்தினால் என்ன என்னும் யோசனையை ஃபேனி கேட்டபோது நுண்ணுயிரியலில் பெரும் கதவொன்று அகலத்திறந்தது.

ஹெஸ்ஸி தனது ஆய்வுகூடத்தில் சோதனைக்குழாய்களில் மனைவி அளித்த பொடியை உபயோகப்படுத்தி தயாரித்த திட வளர்ப்பு ஊடகங்களில் பாக்டீரியாக்கள் முன்பு இருந்த எந்த தடைகளும் இன்றி எளிதில் வளர்ந்தன.

உடனடியாக இதை ராபர்ட் காஹ்ஹுக்கும்  1881 ன் இறுதிகளில் தெரிவித்தார். சில மாற்றங்கள் மூலம் காஹ் அந்த பொடியிலிருந்து பாக்டீரியாக்களை வளர்க்கும் சிறந்த திட வளர்ப்பு ஊடகத்தை உருவாக்கினார்.

1882ல்   காஹ் காசநோய் உண்டாக்கும் பாக்டீரியாவைக் குறித்த தனது ஆய்வுக்கட்டுரையில் அகார் எனும் கடற்பாசி பொடியை வளர்ப்பு ஊடகமாக பயன்படுத்தியதை ஒரு சிறு வாக்கியத்தில் குறிப்பிட்டதைத் தவிர அகாரின் பயன்பாட்டை, அதன் ஊடகவளர்ப்பு உபயோகத்தை பரிந்துரைத்த, கண்டுபிடித்த ஃபேனியை குறித்து எந்த ஒரு ஆய்வுக்கட்டுரையும் வெளியாகவில்லை.

அவரது கணவர் ஹெஸ்ஸியின்  ஆய்வுக்கட்டுரையில் கூட ஃபேனியின் பெயர்  ஒருபோதும் குறிப்பிடப்படவில்லை. வெப்பநிலை உயர்ந்தாலும் அகார் ஊடகங்கள் திரவமாகாததால் 19 ம் நூற்றாண்டில் ஜெலட்டின் உபயோகம் முற்றிலும் மறக்கப்பட்டு அகாரே பெரிதும் பயன்பாட்டில் இருந்தது.

இரண்டாம் உலகப் போர் வரை ஜப்பானை மையமாக கொண்டு  அகார் தயாரிப்பு நடைபெற்றது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் நுண்ணுயிரியல் ஆய்வுகளில் பல நாடுகளில் ஈடுபட்டதால் அகார் பல நாடுகளிலும் தயாரிக்கபட்டு, சுமார் 2,500டன் அகார் ஒரு வருடத்தில் தயரிக்கப்பட்டது.

1970ல் அகார் தயாரிப்பு பன்மடங்கு அதிகமாகி வருடத்திற்கு  10,000 டன் தயாராகியது

ஜாவாவிலிருந்து ஃபேனிக்கு கிடைத்த அந்த கடற்பாசி பொடியான அகாரின் சமையலறை உபயோகம் தென்கிழக்காசிய நாடுகளில் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.

வரலாறு

அகாரை  17ம் நூற்றாண்டில் கண்டுபிடித்தவராக  கியோட்டாவை சேர்ந்த சத்திர உரிமையாளரான டேரோ ஜமோன் மினோயா (Tarozaemon Minoya) கருதப்படுகிறார்.

அவரது பெயரிலேயே இருந்த  மினோயோ என்னும்  சத்திரத்திற்கு ஓர் கடும் பனி இரவில்  அப்போதைய ஜப்பானிய மன்னரும் அவரது அணுக்கப்படைகளும் முன்னறிவிப்பின்றி வந்தபோது டேரோ அவசரமாக  கடற்பாசி நூடுல்ஸ் உணவான டோகோ ரேட்டன் (tokoroten) என்பதை அனைவருக்கும் விரைவாக தயாரித்து அளித்தார்.  இரவு விருந்திற்கு பின்னர் மீதமான  உணவை வெளியில் கொட்டினார்.

கடும்பனியில் அந்த கடற்பாசி உணவு மறுநாள் காலை இறுகி அப்பம் போலாயிருந்ததையும் மதிய வெயிலில் மீண்டும் இளகி நீர்த்துப்போனதையும் மினோயோ கவனித்தார்.

ஆர்வமூட்டிய அந்த உணவில் அவர் பல சோதனை முயற்சிகளைச் செய்து அந்த கடற்பாசியை கரைத்து திரவமாகவும், உறையவைத்து ஜெல்லியைப்போலவும் உபயோகிக்கலாம் என்பதை. கண்டறிந்தார் உறைந்த அந்த பொருளை மீண்டும் வெப்பமூட்டி திரவமாக்குவதும் அவராலேயே கண்டுபிடிக்கப்பட்டது.(Thermoreversible)

அவரது உணவகத்தில் அதன்பிறகு அந்த கடற்பாசி சூப் பல வாடிக்கையாளர்களின் விருப்ப உணவாகிறது. அதை தேடி பலர் மினோயோவுக்கு வரத்துவங்கினர்

அதற்கு உலர்ந்த டோகோ ரேட்டன் என்று அவர் பெயரிட்டிருந்தார். ஒருமுறை மினோயோவில் தங்கி இருந்த பௌத்தத் துறவிகள் அந்த உணவிற்கு  பௌத்தத் துறவியான கேண்டெனின் பெயரிட்டனர். இன்றும் அகாரின் ஜப்பானிய பெயர் கேண்டென் தான்(kanten)

உலகெங்கிலும்  இந்த பொடி கடற்பாசியுணவு என்று பொருள்படும் மலாய் வேர்கொண்ட அகார் என்னும் பெயரிலும் போர்சுக்கீசிய, பிரெஞ்ச் மொழி பேசப்படும் நாடுகளில் ஜெலோஸா (gelosa). என்றும் அழைக்கப்படுகிறது.  

1840 களில் ஜப்பானின் நகானோ பகுதியை சேர்ந்தவரான கொ ஸயமொன்  கோபயாஷி (Kuzaemon Kobayashi) கியோட்டோவை போலவே காலநிலையை கொண்ட தன் ஊரில் இந்த கேண்டெனை தயாரிக்க தொடங்கினார். ஜப்பானில் இப்படித்தான் அகார் தயாரிப்பு முளைவிட்டு இன்று விருட்சமாகியிருக்கிறது.

அகாரின் நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான தயாரிப்பு கலிஃபோர்னியாவில் மட்சுவோ என்பவரால் தொடங்கப்பட்டு அவரது தயாரிப்பு முறைக்கான காப்புரிமையும் 1921- 22ல் பெறப்பட்டது

ஜப்பானில் இன்றும் வெறும் சர்க்கரை அல்லது உப்பிட்ட அகார் சூப்புகள் பிரபலமாக இருக்கிறது. அகார் ஜப்பானில் சூடான திரவமாகவும் குளிர்ந்த ஜெல்லியாகவும் சந்தையில் கிடைக்கிறது.

அகாரின் வேதி அமைப்பும், இருபெயர்க்காரணமும்

அகார்   agarose, மற்றும் agaropectine ஆகிய இரண்டு பாலிமர்களை கொண்டிருக்கிறது.  agar(ose) அகரோஸ் agar(opectine) அகாரோபெக்டின் ஆகிய இரண்டும் இருப்பதால் இதன் சந்தைப்பெயர் ’’அகார் அகார்’ என  இருமுறை அமைந்திருக்கிறது. 

 இவற்றுடன் galactose, 3,6-anhydro-galactose . 80 சதவீதம் நார்ச்சத்து ஆகியவையும்  கால்சியம், பொட்டாஷியம் ,C மற்றும் B வைட்டமின்களும் இதில் அடங்கியுள்ளது.

அகார் அளிக்கும் கடற்பாசிகள்

அகார் கடற்பாசிகள் கடலின் 20 லிருந்து 25 மீட்டர் ஆழங்களில் , 2 லிருந்து 40 செ மீ உயரம் வரை வளரக்கூடியவை. மையத் தண்டின் இருபுறமும் ஒழுங்கற்றுக் கிளைத்த சிவந்த நிற உடலம்(Thallus) கொண்டவை

அகார் ஜப்பானில் Gelidium pacificum என்னும் கடற்பாசியிலிருந்தும் பிற நாடுகளில் Gelidium sesquipedale, வகையிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றது.  ஜெலிடியம் வகை கடற்பாசிகள் இல்லாத ஐரோப்பிய நாடுகள் பிற கடற்பாசிகளிலிருந்து அகாரை தயாரிக்கின்றனர்.

Gracilaria Pterocladia, Gelidiella  ஆகிய இரு கடற்பாசிகளிலிருந்தும் அகார் தயாராகிறது.Gracilaria, Ahnfeltia, Gelidium, மற்றும் Pterocladiella ஆகியவை சிவப்பு கடற்பாசி வகைகள்.

 Ahnpheltia plicata மற்றும் Acanthopheltis japonica, Ceramiun hypnaeordes மற்றும் Ceranium boydenii ஆகிய கடற்பாசிகளிலிருந்தும் அகார் தயாரிக்கப்படுகின்றது. கடற்பாசிகளின் செல் சுவர்களில் இருந்து அகார் எடுக்கப்படுகின்றது.

அகாரை அளிக்கும் அனைத்து கடற்பாசி இனங்களும் அகாரோபைட்டுகள் (agarophyte) என அழைக்கப்படுகின்றன.

அகாருக்கு  சீனக்கண்ணாடி, சீனப்புல், சீன ஐஸ் கண்ணாடி  என்னும் பெயர்களுமுண்டு (China glass, China grass, China isinglass).

இலங்கையின் Gracilaria lichenoides  என்னும் கடற்பாசியிலிருந்து கிடைக்கும் அகார், சிலோன் அகார் அல்லது அகால் அகால் (agal-agal) என்று அழைக்கப்படுகின்றது.

கடற்பாசி  வளர்ப்பு

ஜப்பானிய கடற்கரைகளில் கரை ஒதுங்கும் இறந்த ஜெலிடியம் மற்றும் கிரேசிலேரியாக்களை சேகரித்து அவற்றின் வேர்களை போன்ற ஹோல்ட் ஃபாஸ்ட் களை கத்தரித்து அவை  பொருத்தமான  இடங்களில் நீருக்கடியில் வளர்க்கப்படுகின்றன

ஸ்கூபாவோடு முக்குளிப்பவர்களைக் கொண்டு கடலுக்குள் இருந்தும் ஜெலிடியம் எடுக்கப்பட்டு வளர்க்கப் படுகிறது. ஜப்பானில் அதிக ஆழத்தில் நீண்ட நேரம் மூச்சுப்பிடித்து நீரில் ஆழங்களில் முக்குளித்துக் கடற்பாசிகளைச் சேகரிக்கும் தனித்திறமை வாய்ந்த  ’அமா’’’ என்னும் இளம்பெண்களே ஜெலிடியம் சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

இந்தியா மற்றும் வியட்நாமிலும் சிறிய அளவில் அகார் தயாராகின்றது

பயன்கள்

மனிதர்களின் உணவில் முதன்முதலாக உபயோகப்படுத்தப்பட்ட கூழ்மமான அகார் பல நூற்றாண்டுகளை கடந்து  இன்றும் முக்கியமான இடம்பிடித்திருக்கிறது. 

மணமோ சுவையோ அற்ற அகார் எந்த உணவிலும் சேர்த்துக்கொள்ளும்படியான சத்தான சைவ உணவாக இருக்கிறது. அகார் அது சேர்க்கப்படும் உணவின் சுவை நிறம் மற்றும் மணத்தை கொண்டுவிடுவதால்  இதற்கு ’உணவுப் பச்சோந்தி’ என்றும் செல்லப்பெயருண்டு.

அகார் கருப்பு ,சிவப்பு,பசை நீலம் ஆகிய நிறங்களிலும் கிடைக்கிறது.

மதுபானங்களில் சிறிய அளவில் அழுக்கு நீக்கியாக அகார் சேர்க்கப்படுகிறது. ஆர்கிட் தாவர திசு வளர்ப்பு ஊடகத்தில் வெகுவாக அகார்  பயனாகிறது.

மிட்டாய், ஐஸ்கிரீம் தயாரிப்பிலும், உணவுப்பொருளாக மற்றும் பல வேதியியல் தொழிற்சாலைகளிலும் தான் அகாரின் பெரும்பாலான பயன்பாடு இருக்கிறது.  பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் கடல் உணவு வகைகளிலும், பொய்ப் பல் கட்டுவதில், தடயவியல் சோதனைகளில் ரேகைகள் பதிவு எடுக்கவும் அகார் பயன்படுகிறது.

அழகுசாதன பொருட்களின் தயாரிப்பில், மருந்துத் துறையிலும் அகாரின் பயன்பாடு குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் மற்றும் சீன உணவுகளில் பாதியளவிற்கு கடற்பாசிகளும் அகாரில் தயாரான உணவுகளும் எப்போதும் இடம்பெற்றிருக்கும்.  குளிர்ந்த நீரில் கரையாத அகார் சமைக்கப்படுகையிலும் உண்ணப்பட்டபின்பும், தன் எடையைக்காட்டிலும் 20 மடங்கு நீரை உறிஞ்சிக்கொள்ளுவதால் போதுமான அளவு உணவிலேயே வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். எனவே கூடுதலாக உண்பதும் உடல் பருமன் அதிகரிப்பும் ஏற்படாமல் அகார் தடுக்கிறது. மேலும் அகார் பல சத்துக்களும் அடங்கியது. இதன்பொருட்டே அகாரை உணவில் சேர்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் சீனர்களும் ஜப்பானியர்களும்

அகாரை போலவே தற்போது உலகெங்கிலும் பரவலான உபயோகங்கள் கொண்டிருப்பவை:

  • Kappaphycus alvarezii, Eucheuma denticulatum ஆகிய சிவப்பு கடற்பாசிகளிலிருந்து கிடைக்கும் அகாரைப் போன்ற அனைத்து உபயோகங்களையும் கொண்டிருக்கும் கேரெஜினின (Carrageenan)
  • Sphingomonas elodea என்னும் பாக்டீரியாவிலிருந்து கிடைக்கும் ஜெல்லான் பசை( Gellan gum) 
  • Phytophthora sojae என்னும் சோயாபீன்ஸ் செடிகளில் கருகல் நோயை உண்டாக்கும் பூஞ்சை போன்ற ஒரு உயிரினத்தை ஆய்வகங்களில் வளர்க்கப் பயன்படும் வெண்ணெய் பீன்ஸ் மற்றும் அகார்கலந்த ஊடகமான Lima bean agar – Agar medium. இந்த நோய்க்கிருமியை தூய அகார் வளர்ப்பு ஊடகத்தில் வளர்க்க முடியாது.
  • கேரட் பொடியும் அகாரும் கலந்த Carrot  agar.   

பிரபல அகார்  உணவுகள்

அன்மிட்ஸு (Anmitsu) எனப்படும் நூற்றாண்டுகளாக ஜப்பனிய கலாச்சாரத்துடன் தொடர்பிலிருக்கும் சிறு சதுரக்கட்டிகளாக இருக்கும் ஒரு இனிப்புவகை அகாரினால் தயாரிக்கபடுகிறது. அன்மிட்ஸுவுடன் சிறிய கிண்ணங்களில் கருப்பு சாஸ் வழங்கபடும் சாஸுடன் கலந்து உண்ணப்படும் இந்த இனிப்பு ஜப்பானில் மிகப் பிரபலம். ஜப்பானின் பிரபல சோற்று உருண்டையான வகாஷியிலும் அகார் கலக்கப்படுகிறது.

 மிஸு யோகான் (mizu yōkan,) எனப்படும் ஜப்பானின்  மற்றொரு குளிர்ந்த , வழுக்கும் தன்மையுடைய  கோடைக்கால கட்டி இனிப்பு வகையும் அகார் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸின் ஹேலோ ஹேலோ( Halo-halo) என்னும் குளிர்ந்த இனிப்பு வகை தேங்காய் பால், அகார் மற்றும் பொடித்த ஐஸ்கட்டி கொண்டு தயாரிக்கப்படுகிறது, பிலிப்பைன்ஸின் அங்கீகரிக்கப்படாத தேசிய பானம் என்றும் இதற்கு பெயருண்டு.

இந்தியா, பர்மா, தைவான் ஆகிய நாடுகளிலும் அகார் உணவில் பயன்படுத்தப்படுகிறது. 

ரஷ்யாவில் பறவைப்பால் என்றழைக்கப்படும் ஒரு கேக்கில் அகார் பிரதானமான இடுபொருள். (ptich’ye moloko -bird’s milk), 

தர்பூசணிப்பழ வில்லைகளைப்போல வடிவம் கொண்டிருக்கும் மெக்ஸிகோவின் வண்ணமயமான இனிப்பு மிட்டாய்கள்  அகாரைக்கொண்டே தயாரிக்கப்படுகின்றன 

திரவ உணவுகளை கெட்டியாக்க உலகெங்கிலும் அகார் பெரிதும் பயன்பாட்டில் இருக்கிறது. 

அகார் சந்தை

அகார் அகார் சந்தைப்படுத்தப்படுகையில் அவை பெறப்பட்ட கடற்பாசியின் பெயரோடு ஜெலிடியம் அகார், கிரேசிலேரியா அகார் என்று  குறிப்பிடப்பட்டே  சந்தைப் படுத்தப்படுகின்றன. 

தூய அகார் பொடியாகவும் கூழ்ம அடர்த்தி அதிகமாக்கப்பட்டும், பட்டைகளாகவும் சதுரக்கட்டிகளாகவும் ஜப்பானிலும் சீனாவிலும் இல்லத்தரசிகளின்  உபயோகத்துக்கு வசதியாக வில்லைகளாகவும். தகடுகளாகவும்  சந்தையில் கிடைக்கிறது.

உலகின் மொத்த அகார் சந்தையில் நுண்ணுயிரியல் வளர்ப்பு ஊடகங்களுக்கான சந்தையின் பங்கு வெறும் 10-5 சதவீதம் தான்.

 ஜப்பான் நார்வே சீனா மற்றும் சிலே  ஆகியா நாடுகளில் இயற்கையாக கடலில் கிடைக்கும் ஜெலிடியம் உள்ளிட்ட  கடற்பாசிவளம் அதீத அறுவடையினால் அபாயகரமான் அளவிற்கு எண்ணிக்கையில் குறைந்துள்ளதாக 2017 ல் நடந்த ஒரு அய்வு முடிவு எசரித்திருந்தது. குளங்களில் தொட்டிகளில்  ஜெலிடியம் வளர்க்கும் சோதனைகள் துவங்கி இந்நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

 உணவு மற்றும் ஆய்வக தேவைகளின் அதிகரிப்பால்  சர்வதேச அகார் சந்தை 2020-25 ல் மேலும் உயரக்கூடும் என  கணிக்கப்பட்டிருக்கிறது

மறக்கபட்ட ஃபேனியின் பங்களிப்பு

மருத்துவத்துறையிலும், நுண்ணுயிரியலிலும், கல்விக்கூட அறிவியல் சோதனைக்கூடங்களிலும் அகாரின் பயன்பாடு இன்றியமையாதது. அகார் பெட்ரி தட்டுகள் இல்லாத ஆய்வுகூடங்களே உலகில் இல்லை. எனினும் அகாரை இந்த உபயோகத்துக்காக பரிந்துரைத்த ஃபேனியின் பெயரில் ஒரு அகார் வளர்ப்பு ஊடகம் கூட இல்லை. அகார் பயன்பாட்டில் ஃபேனியின் பங்கு என்ன என்பதுவும் கல்லூரி பாடத்திட்டத்திலும் ஆய்வுக்கட்டுரைகளிலும்  இல்லவே இல்லை.  

பிரபல விஞ்ஞானிகள் அறிவியலாளர்களின் பெயர் என்ன என்னும் கேள்விக்கு சிறியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் நினைவுக்கு வருவது  ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன் வாட்சன் கிரிக் போன்ற ஆண்கள் தான். (அரிதாக மேரி க்யூரி நினைவு கூறப்படுகிறார்) இவர்களெல்லாம்  மாபெரும் மேதைகள்தான் எனினும் அறிவியல் வரலாற்றில் ஃபேனியைபோல மிக முக்கியமான கண்டுபிடிப்புக்குக் காரணமான பெண்களும் இருக்கிறார்கள் என்பதை இந்த தலைமுறையினராவது அறிந்துகொள்ளவேண்டும்

பெண்களுக்கு கல்வியும் சுதந்திரமும் மறுக்கப்பட்டிருந்த காலத்திலும் பல முக்கிய கண்டுபிடிப்புக்களை அறிவியல் உள்ளிட்ட பல துறைகளில் செய்த சாதனைப்பெண்கள் பலரும் வரலாற்றில் விடப்பட்டவர்களே.  அறிவியல் கண்டுபிடிப்புக்களில் வரலாற்றில் இடம்பெற்றவர்கள் உண்டு.  வரலாற்றில் மறக்கப்பட்டவர்களும் மறக்கடிக்கப்பட்டவர்களும் உண்டு 

இந்தியாவின் முதல் தாவரவியலாளர் ஜானகியம்மாள், போகன்வில்லாவையும் மேலும் பல தாவரங்களையும் ஆண் வேடமிட்டு, உயிருக்கு துணிந்து உலகைக் கப்பலில் சுற்றிவந்து கண்டுபிடித்த ழான் பாரெ, DNA வின் இரட்டைச் சுழல் அமைப்பை கண்டுபிடித்து அவருடன் இணைந்து பணியாற்றிய  வாட்சனும் கிரிக்கும் நோபல் பரிசு பெறுவதற்கு நான்கு வருடங்களுக்கு முன்பே இறந்துபோன ரோஸலிண்ட் ஃப்ராங்க்லின் (Rosalind Franklin), பெனிசிலியத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் சிற்றினமான  கிரைசோஜீனத்தை  கனிந்த பழமொன்றின் பொன்னிற  பூஞ்சைத் தொற்றிலிருந்து கண்டுபிடித்த ஆய்வக உதவியாளர் மேரி,  இதயத்தில் நேரடியாக வடிகுழாயை செருகி ஆராயும் ஆய்வை தனக்குத்தானே செய்துகொண்ட வெர்னெர் ஃபோர்ஸ்மேனுக்கு (Werner Forssmann) ரகசிய உதவிகளை  செய்துகொடுத்த செவிலி கெர்டா டிட்ஸென் (Gerda Ditzen) இப்படிப் பலரை சொல்லலாம். இன்று பல  கோடிமக்கள்  உயிருடன் இருக்க அடிப்படையான ஆய்வுகளுக்கு இவர்களே காரணம்

அப்படித்தான்  நுண்ணுயிரியல் ஆய்வில்  தனது ஆர்வத்தினால் உதவி மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய ஃபேனியும் வரலாற்றில் மறக்கப்பட்டவர்.

1934ல் ஃபேனி காலமானபோது அவரது இறப்பு எந்த ஒரு நுண்ணுயிரியலாளருக்கும் தெரிந்திருக்கவேயில்லை. 1939 ல்  ஃபேனியின் வாழ்க்கையை  கட்டுரையாக எழுதிய ஹிட்சென்ஸ் (Hitchens) மற்றும் லெய்கிண்ட் (Leikind) ஆகியோர் ஃபேன்னியை சிறப்பிக்கும் பொருட்டு இனியாவது தூய அகார் வளர்ப்பு ஊடகத்தை’’ ஃபேனி ஹெஸ்ஸி ஊடகம்’’ என்று பெயரிடலாம் என்னும் பரிந்துரையை, கோரிக்கையை முன்வைத்தார்கள். 

80 வருடங்களுக்குப் பின்னும் அக்கோரிக்கை செயல்படுத்தப்படவில்லை. இன்னும் கூட தாமதமாகிவிடவில்லை.  அது செயல்படுத்தப்பட்டால் மனிதகுலத்திற்கும், அறிவியலுக்கும் தன்னலமின்றி மகத்தான சேவையாற்றியவர்களில் ஒரு பெண்ணுக்காவது நியாயம் கிடைத்தது போலிருக்கும்

மேலதிகத் தகவல்களுக்கு:

https://www.britannica.com/topic/agar-seaweed-product#ref1251391

https://en.wikipedia.org/wiki/Walther_Hesse

https://en.wikipedia.org/wiki/Fanny_Hesse

http://www.cuisine-innovation.com/index.php?controller=attachment?id_attachment=2

https://www.tarladalal.com/article-uses-of-agar-agar-305

அகார் வளர்ப்பு காணொளி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.