
புளோரிடாவின் பிரபல நாளிதழான ‘Palm beach daily news’ ஆக்கிரமிப்பு தாவரங்களால் உண்டாகும் சூழல் சமநிலை குலைவை குறித்து ஒரு முக்கியமான கட்டுரையை 25/2/203 அன்று வெளியிட்டிருந்தது.1 அதில் லண்டானா என்னும் அலங்கார செடிவகையொன்றும் குறிப்பிடப்பட்டிருந்தது,
புளோரிடாவில் லண்டானாவின் இரு இயல் தாவரங்கள் உண்டு. தரையில் படர்ந்து வளரும், மெல்லிய தண்டுகளும் மஞ்சள் மலர்களும் கொண்ட Lantana depressa மற்றும் அடர்ந்த புதராக வளரும், கடினமான தண்டுகள், வெண்ணிற மலர் கொத்துக்கள், அடர் ஊதா கனிகளை கொண்டிருக்கும் Lantana involucrata.
மிக முக்கியமான தீங்கற்ற அலங்கார தோட்டத்தாவரங்களாக இருக்கும் இவற்றுடன் உலகின் மோசமான ஆக்கிரமிப்பு களையான நச்சுத்தன்மை கொண்ட கனிகளை கொண்டிருக்கும் லண்டானா கமாராவும் கலந்து விற்பனை செய்யப்படுவதையும் அயல் மற்றும் இயல் லண்டானாக்களை அடையாளம் காண்பதின் முக்கியத்துவத்தையும் விளக்கிய அந்த கட்டுரையின் பேசுபொருள் 200 ஆண்டுகள் பழமையான சூழல் பிரச்சனையை பற்றியது
வரலாறு, பரவல் 5
மத்திய மற்றும் தென் அமெரிக்காவை சேர்ந்த லண்டானாவின் பரவல் 1690களில் அதன் அழகிய மலர்களினால் அலங்காரச் செடியாக அறிமுகமானதில் துவங்கியது. ஐரோப்பியர்கள் லண்டானவை லத்தீன் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு 1800களில் அறிமுகப்படுத்தினார்கள். டச்சு இயற்கை விரும்பிகள் லண்டானாவை பிரேசிலில் இருந்து நெதர்லாந்துக்கு அறிமுகம் செய்தார்கள்.
19 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் லண்டானா ஆப்பிரிக்கா ஆசியா மற்றும் ஓசியானாவுக்கு அலங்கார தாவரமாக அறிமுகமானது. ஆஸ்திரேலியாவில் 1841ல் லண்டானா கவனிக்கத்தக்க அளவில் காணப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் 1858ல் லண்டானா அறிமுகமானது ராயல் தாவரவியல் பூங்காவிலிருந்து விதைகள் வழியே பரவி இலங்கை நிலப்பரப்பையும் லண்டானா ஆக்கிரமித்தது
18 மற்றும் 19 ம் நூற்றாண்டுகளில் தாவரவியலாளர்கள் பல நிறம் கொண்ட மலர்களுடன் லண்டானாவின் அலங்கார இனங்களை பிரபலமாக்கி உலகெங்கும் அறிமுகம் செய்தார்கள் கடந்த 300 வருடங்களாக லண்டானா அலங்காரச் செடியாகவும் வளர்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு லண்டானா பிரிட்டிஷாரால் 1807 ல் அறிமுகமானது. சில பத்தாண்டுகளில் வெகுவாக பரவியது. இவற்றின் பரவல் கவனத்துக்கு வராததால் கட்டுப்படுத்தும் முயற்சிகள் ஏதும் துவங்கப்படவில்லை இன்று லண்டானா உலக நாடுகளில் பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டிருக்கிறது
1944ல் வெளியான ’குமாவுன் ஆட்கொல்லிகள்’ என்னும் நூலில் ஜிம் கார்பெட் 1900 த்திலிருந்து 1930 வரையிலான தன் வன அனுபவங்களை பதிவு செய்கையில் சிறுத்தைகளின் மறைவிடங்களாக குமாவுனின் மலையடிவாரங்களில் லண்டானா புதர்கள் இருந்ததை குறிப்பிட்டிருக்கிறார். இந்திய ஊசியிலைகாடுகளில் பைன் மரங்களின் வளர்ச்சியிலும் இவற்றின் ஆதிக்கம் இருப்பது 1995ல் கண்டறியப்பட்டிருக்கிறது
2009ல் நடந்த ஒரு ஆய்வு இந்தியாவில் அடர்ந்து வளர்ந்து கொண்டிருந்த ஆடாதோடை, கறிவேப்பிலை, பவளமல்லி போன்ற தாவர வகைகள் லண்டானாவின் ஆக்கிரமிப்பால் மெல்ல மெல்ல எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன என்கிறது.
லண்டானா பேரினத்தின் சில வகைகள் ஆசியாவையும் ஆப்பிரிக்காவையும் சேர்ந்தவை.
உலகின் 50 நாடுகளின் லண்டானாவின் அலங்கார செடி இனங்கள் காணப்படுகின்றன, 60 நாடுகளில் இது ஆக்கிரமிப்பு களையாக சூழல் சமநிலைக்கு பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
லண்டானா அதன் பரவிப்பெருகும் வேகம், பிற தாவரங்களை வளர விடாமல் தடுத்தல் சந்தர்ப்பவாத வளர்ச்சி, தீவிர இனப்பெருக்க இயல்பு மற்றும் மேய்ச்சல் பிராணிகளால் உண்ணப்படாதிருத்தல் ஆகியவற்றால் கவனத்துக்குள்ளாகிறது
லண்டானா தாவரவியல்
லண்டானா வெர்பினேசி குடும்பத்தை சேர்ந்தது. இந்த பேரினத்தில் கமாரா உள்ளிட்ட சுமார் 150 சிற்றினங்கள் உள்ளன. லண்டானா ஒரு பல்லாண்டு தாவரம் இவை 7 அடி உயுரம் வரை வளரும் புதர் வகைகளாகவும் மரங்களில் படர்ந்து ஏறி வளரும் உறுதியான தண்டுகளையும் கொண்ட கொடி வகை தாவரமாகவும் சிறு செடிகளாகவும் காணப்படுகிறது.
லண்டானாவின் அகன்ற முட்டை வடிவ எதிரிலைகள் கடும் நெடி கொண்டவை. இவை பல நிறம் கொண்ட மலர்கள் அடங்கிய மஞ்சரிகளை கொண்டிருக்கும். ஒரு செடியிலிருந்து சுமார் 12000 கருப்பு நிற சிறு கனிகள் உருவாகும்.
இந்தியாவில் லண்டானா
1807ல் கல்கத்தா தேசிய தாவரவியல் பூங்காவிற்கு லண்டானா அலங்கார புதர்ச்செடியாக அறிமுகமானது. அதே நூற்றாண்டில் அழகிய மலர்களுக்காக கோவாவில் லண்டானா போர்ச்சுகீசியர்களால் அறிமுகமானது
வடமேற்கு இமாலய பகுதியில் லண்டானா 1905ல் உத்திரகாண்ட் மாநிலத்தின் நைனிடால் மாவட்டத்தை சேர்ந்த கத்கோடம் என்னும் கிராமத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. நைனிடாலில் 1911ல் அங்கும் இங்குமாக தென்பட்ட லண்டானா புதர்கள், அங்கிருந்து சாலையோரங்களுக்கும் ரயில் தண்டவாள ஓரங்களிலும் வயல் வரப்புக்களிலும் காடுகளிலும் இவற்றின் கனிகளை உண்ணும் பறவைகளால் வேகமாக பரவின. 20 ஆண்டுகளில் 25 மைல் சுற்றளவில் இவை பெருகி பரவியிருந்தன
ஒரு நூற்றாண்டு கடந்தபின்னர் இந்தியச்சூழலின் மாபெரும் அச்சுறுத்தலாக இவற்றின் வளர்ச்சியும் பரவலும் ஆகிவிட்டிருக்கிறது. இப்போது இவை இந்தியாவெங்கிலும் இயற்கையான ஆக்கிரமிப்பு களையாக காணப்படுகின்றன

இந்தியாவில் லண்டானா பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களிலும் வனப்பகுதிகளிலும் ஊடுருவி உயிர்க்கோளத்தையும் சூழல் அமைப்பையும் சூழலின் பணியையும் வெகுவாக மாற்றி விட்டிருக்கிறது. இந்தியாவின் மேய்ச்சல் நிலங்களிலும், காடுகளிலும் லண்டானா கட்டுக்கடங்காமல் பரவி இருக்கிறது. .பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் சரணாலயங்கள் என அனைத்து நிலப்பரப்பிலும் லண்டானா செழித்து வளர்ந்திருக்கிறது
சமவெளிகளில் மட்டுமல்லாது கடல்மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்திலும் லண்டானா காணப்படுகிறது
பெயர்க்காரணம்
லண்டானாவின் இலைகளும் மலர்களும், Viburnum lantana என்னும் மரத்தின் இலைகளையும் மலர்களையும் ஒத்திருக்கும் இயல்பால் இதற்கும் லண்டானா எனும் அறிவியல் பேரினப்பெயர் வைக்கப்பட்டது. கமாரா என்னும் சிற்றினப் பெயர். கொத்துக்களில் ஏராளமாக உருவாகும் இதன் கனிகளை குறிக்கும் ’பல அறைகள்’ என்று பொருள் கொண்டது
வட அமெரிக்காவில் இதன் ஆங்கில பெயரும் லத்தீனப்பெயரான லண்டானா தான். ஆனால் உலகின் பிற பகுதிகளில் இதன் நெடியைக்கொண்டு இது yellow sage, wild sage அல்லது red sage என ஆங்கிலத்திலும், பிற பிரதேச மொழிகளில் வழங்கு பெயரையும் கொண்டுருக்கிறது. தமிழில் இது உண்ணிச்செடி 3 அல்லது உண்ணிமுள் செடி எனப்படுகிறது.
இந்திய வகைகள்,வளரியல்புகள்
இந்தியாவில் லண்டானாவின் 8 வகைகள் காணப்படுகின்றன.
L. camara,
L. indica,
L. veronicifoila
L. trifolia
L. camara var. aculeata Moldenke,
L. camara var. mista Bailey
L. camara var. nivea Bailey
இவற்றில் நாம் சாதாரணமாக சாலையோரங்களிலும் மலைப்பிரதேசங்களில் காண்பது லண்டானா கமாரா (L. camara var. aculeata). இந்த wild sage வகை தாழ்வான அடர்புதர்ச்செடியாக கடினமான உறுதியான தண்டுகளில் தடித்த முட்களுடன் 2 மீ உயரம் வரை வளரும் இவ்வகையில் முட்கள் இல்லாதவைகளும், மென்முட்கள் கொண்டவைகளும், பல வண்ண மலர்கள் கொண்டவைகளுமாக நூற்றுக்கணக்கான கலப்பினங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. குட்டையான ஒரே நிற மலர்களை கொண்ட லண்டானாக்களும் தொங்கும் கூடைகளில் வளர்க்க உருவாக்கப்பட்டிருக்கின்றன.
தண்டுகள் வருடத்திற்கு 20 செமீ வளர்வது. 5-6 மாதங்களுக்கு இலை வளர்ச்சியை கொண்டிருப்பது, வளர்கையில் எப்போதும் மலர்களும் கனிகளும் அளிப்பது ஆகியவை லண்டானாவின் பிரத்யேக இயல்புகள்
இவற்றின் நறுமணமிக்க மலர் கொத்துக்கள் குடைமஞ்சரிகளில் இருக்கும். இம்மஞ்சரிகள் மஞ்சள், ஆரஞ்சு நீலம் வெள்ளை இளஞ்சிவப்பு ஆகிவற்றின் கலவைகளில் இருக்கும். வளரும் போது மலர்களின் நிறம் மாறுபடும். மஞ்சரிகளில் இருக்கும் மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு சிறுமலர்கள் எப்போதும அருகருகே இருப்பதால் இம்மஞ்சரிகளுக்கு ’பிரிக்க முடியாதவை’ என்னும் பொருளில் ஆங்கிலத்தில் “Ham N Eggs” என்னும் செல்லப் பெயருண்டு
லண்டானாவின் சிறுமலர்கள் ஐந்து மடல்களுடன் குழல்போன்ற அமைப்பிலிருக்கும் தனி மஞ்சரிகள் 5 செமீ குறுக்களவு கொண்டிருக்கும் வருடம் முழுவதும் மலர்கள் உருவாகும். மலர்கள் உருவான 2 வாரத்தில் கருப்பு நிற கனிகள் உருவாகிவிடும்
4 அல்லது 5 மாதங்கள் வரை லண்டானாவில் மலர்களும் கனிகளும் இருப்பதால் மகரந்த சேர்க்கை செய்யவும், விதை பரவலுக்கு காரணமாகவும் இருக்கும் பூச்சி இனங்கள் தொடர்ந்து இவற்றை நாடி வருகின்றன.
மலர்களின் நிறம் மாறுவதால் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பல வகைப்பட்ட பூச்சிகள் இதை தேடிவருகின்றன. வண்ணத்துப்பூச்சிகள், இலைப்பேன்கள் (thrips), தேன் சிட்டுகள். தும்பி சிட்டுகள் (hummingbirds) ஆகியவற்றால் லண்டானா மகரந்தச் சேர்க்கை செய்கிறது

இவற்றோடு வண்டு குளவி, தேனீ, அந்துபூச்சி மற்றும் பிற சிறு பூச்சி இனங்களும் லண்டானா மலர்களை தேடி வருகின்றன. லண்டானாவில் தன்மகரந்த சேர்க்கை, அயல் மகரந்த சேர்க்கை இரண்டுமே நடைபெறுகிறது.
இம்மலர்கள் வண்ணத்துப்பூச்சிகள் வந்து மகரந்த சேர்க்கை செய்யும் வகையில் அவை வந்து அமர எதுவாக பகல்பொழுது முழுக்க திறந்து அமைந்துள்ளன (psychophilous flowers),
மிக அதிக அளவில் உருவாகும் சிறிய உருண்டையான கனிகளில் ஒற்றை கடின விதை இருக்கும். விதைகளில் இரண்டு கருக்கள் அமைந்திருக்கும், பெரும்பாலும் ஒரு கரு,அரிதாக இரண்டுமே முளைக்கும்.
சூழல் தகவமைப்பு
இத்தனை வேகமாகவும் இத்தனை அதிகமாகவும் லண்டானா பரவியிருக்க காரணம், பல்வேறுபட்ட சூழலிலும், பாதகமான சூழல்களையும் தாங்கி வளரும் இவற்றின் அசாதாரண தன்மையினால்தான்.
பலவிதமான மண் வகைகளில், பலவிதமான காலநிலைகளில் பலவிதமான வாழிடங்களில் இவை பல்கிப்பெருகி வளர்கின்றன
மழைக்காடுகளின் விளிம்புகளிலும், தரிசு நிலங்களிலும் கடற்கரை பகுதிகளிலும், காட்டெரியிலிருந்து மீண்டு வரும் காடுகளிலும் இவை செழித்து அடர்ந்து வளர்கின்றன. மனித நடமாட்டம் இல்லாத அடர்வனப் பகுதிகளிலும்,அதிக மனித நடமாட்டம் இருக்கும் தண்டவாளப்பகுதிகள், குடியிருப்பு பகுதிகளின் சாக்கடையொரங்களிலும் இவை வளர்கின்றன
வளமான நிலங்களில் வளர்வதை போலவே வளம் குறைந்த நிலங்களிலும் சுண்ணாம்புச் சத்து நிறைந்த நிலங்களிலும் இவை வளர்கின்றன
வெப்பநிலை 5 பாகைக்கும் குறைவான இடங்களில் மட்டுமே லண்டானா வளர்வதில்லை. அதுபோலவே மிக அடர்த்தியான உயரமான மரங்கள் இருக்கும் பகுதிகளிலும் இவை செழிப்பாக வளர்வதில்லை. பனிப்பொழிவு, உவர்நிலம் ஆகியவையும் லண்டானாவின் வளர்ச்சியை ஓரளவுக்கு பாதிக்கின்றன
இனப்பெருக்கம்
இவை வேர்கிழங்குகள், தண்டுகள் மூலமாகவும் மிக அதிக எண்ணிக்கையில் உருவாகும் விதைகளின் மூலமும் இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றின் உறுதியான படர்ந்த வேர் தொகுப்பு இவற்றின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது.
இவற்றின் விதைகள் கொறித்துண்ணிகளுக்கு நஞ்சு எனவே அவற்றால் உண்ணப் படாமல் விரைந்து பரவி வளர்கின்றன. இதமான வெப்பம், நல்ல ஒளி, மண்ணின் ஈரம் இருக்கையில் விதைகள் விரைவாக முளைக்கின்றன
விதைகளிலிருந்து லண்டானா மார்ச்சில் இருந்து வளர தொடங்கி ஏப்ரல் மாதத்தில் நன்கு வளர்ந்திருக்கும். இலைகள் அதிகபட்சம் 267 நாட்கள் வரை உதிராமல் இருக்கும் டிசம்பர் துவக்கத்தில் இலைகள் உதிர துவங்கி பிப்ரவரியில் முழுக்க இலையுதிர்த்திருக்கும்
கனியை ஆடுகள் பறவைகள், செம்மறியாடுகள்,பிற கால்நடைகள் குரங்குகள் மற்றும் நரி ஆகியவை உண்டு விதைகளை பரப்புகின்றன
செடியிலிருந்து விதைகள் நேரடியாக நிலத்தில் விழுகையில், முளைப்பது மெதுவாக நடக்கும். ஆனால் பறவைகளின், விலங்குகளின் எச்சங்களில் இருக்கும் விதைகள் வெகு விரைவாக முளைக்கும்
பல ஆக்கிரமிப்பு களைச்செடிகளை போல நிலத்தில் பல்லாயிரக்கணக்கான விதைகளை சேகரித்து வைத்திருக்கும் நிலவிதை வங்கி, லண்டானா தாவரத்திற்கும் இருக்கிறதா என்பது இன்னும் முழுதாக அறியப்படவில்லை. எனவே நிலத்திற்கடியிலும் இவற்றின் ஆயிரக்கணக்கான விதைகள் உறங்கி கொண்டிருக்கக்கூடும்.
லண்டானாவின் ஆக்கிரமிப்பு சூழலுக்கு அளிக்கும் அச்சுறுத்தல்கள்
உலகெங்கிலும் அறியப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பு களைகள் அனைத்தும் சூழலில் பெரும் ஆதிக்கம் செழுத்துபவைகளாகவே இருக்கின்றன. அவை அறிமுகமாகி வளரும் சூழலை அவற்றிற்கேற்றவாறு படிப்படியாக மாற்றியமைக்கின்றன. உலகின் மிக மோசமான ஆக்கிரமிப்பு களைகளில் 100ல் ஒன்றாக பட்டியலிடப்பட்டிருக்கிற லண்டானாவும் அவற்றைப் போலவேதான்
லண்டானா தான் அறிமுகமாயிருக்கும் சூழலில் இயல் தாவர வளர்ச்சியை, பரவலை, இனப்பெருக்கத்தை பெருமளவில் பாதித்து அச்சூழலின் இயற்கையான பணியை பெரிதும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அச்சூழலின் பெருமச்சுறுத்தலாக வெகுவிரைவில் மாறிவிடுகின்றன
IUCN லண்டானாவை உலகின் மோசமான நூறு ஆக்கிரமிப்பு களைகளிலும், பத்து ஆபத்தான களைகளில் ஒன்றாகவும் பட்டியலிட்டிருக்கிறது
லண்டானா ஆக்கிரமித்திருக்கும் நிலப்பரப்புக்களால் காட்டுயிர்களின் வாழிடம் குறைவது மட்டுமல்லாது காட்டுயிர்களின் தேவைகளுக்கு இடமில்லாததால் அவை மனிதர்கள் வசிப்பிடத்துக்கு வருவது அதிகரித்துவிடுகிறது.
லண்டானாவின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக அவற்றின் அடர்ந்த புதர்களில் ஒளிந்து கொண்டிருக்கும் கரடிகள் பயிர்களை சேதப்படுத்துவதும், மனிதர்களை தாக்குவதும் இமயமலை அடிவார பகுதிகளில் நடக்கிறது
இந்தியாவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு களைகள் ஏஜரேட்டம், யுபடோரியம், லண்டானா, மிக்கானியா மைக்ரந்தா மற்றும் பார்த்தீனியம். இவற்றில் லண்டானாவே மிக மோசமானது. இவற்றில் மிக அதிக நிலப்பரப்பை ஆக்ரமித்திருப்பதும் லண்டானா தான் 2
பிற களைகளை அழிக்கும் வழக்கமான எந்த முறையிலும் லண்டானாவை கட்டுப்படுத்தவும் அழிக்கவும் முடியவில்லை
லண்டானாவின் இலைகள் 13 லிருந்து 14 மாதங்களில் மட்கிவிடுகிறது. மட்கி, லண்டானா புதர்க்கடியிலேயே குவிந்திருக்கும் இலைக் கழிவுகளில் இருக்கும் அதிகப்படியான நைட்ரஜன் சத்து இவை மேலும் மேலும் வளர காரணமாகி விடுகிறது
லண்டாவின் பரவல், ஆக்கிரமிப்பு குறித்த சமீபத்திய புள்ளிவிவரங்கள் ஏதும் இல்லை. ஒரு ஹெக்டேரில் 1500லிருந்து 300 புதர்கூட்டங்கள் இருக்கின்றன என்று தோராயமாக கணக்கிடப்பட்டிருக்கும் இவற்றின் பரவலை நினைத்தால் எதிர்காலத்தில் சூழல் பாதுகாப்பில் இவற்றின் செல்வாக்கு குறித்த அச்சம் எழுகிறது
இந்தியாவில் லண்டானா ஆக்கிரமிப்பினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக கூர்க், வயநாடு, நீலகிரி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி,இமயமலை பகுதிகள் ஆகியவை அடையாளம் காணப்பட்டிருக்கின்றது
கத்திசவுக்கு,சரக்கொன்றை, தேக்கு போன்ற மரங்களின் அடியில் மிக அடர்ந்த புதர்களாக இவை வளர்ந்து அம்மரங்களின் வளர்ச்சியையும் பாதிக்கிறது
இந்த நிலப்பரப்புகளில் தரைப்பகுதியை லண்டானா புதர்கள் முழுவதுமாக மூடிவிடுவதால் நிலத்தில்,கொத்தி இரையுண்ணும் புறா குருவி போன்ற பறவைகளுக்கு இரை இல்லாமல் போகிறது. மேலும் லண்டானாவின் வேரிலிருந்து சுரக்கும் நஞ்சினால் தரைப்பகுதியின் சிறு பூச்சிகளும் புழுக்களும் அழிந்து போகின்றன. மலரமுதை உண்டு பிற செடிகளை மகரந்த சேர்க்கை செய்யும் ஈக்கள் குளவிகள் போன்றவற்றின் எண்ணிக்கையும் லண்டானாவினால் வெகுவாக குறைந்துவிட்டிருக்கிறது.
சில லண்டானா புதர்கள் மலேரியாவை பரப்பும் கொசுக்களின் வாழ்விடமாகவும் இருக்கின்றன
லண்டானாவின் இலை, வேர்ச் சாறுகள் காய்கறி பயிர்கள் பழமரங்கள் உள்ளிட்ட பலவகை தாவரங்களின் விதை முளைப்பு திறன், வளர்ச்சி ஆகிவற்றை நேரடியாக பாதிப்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன
லண்டானா வேர் துண்டுகள் கலக்கப்பட்ட நிலங்களில் நாற்றுக்கள் மடிவதும் வளர்ந்த செடிகள் விரைவில் வாடி அழிவதும் ஆய்வுகளில் நிரூபிக்க பட்டிருக்கிறது
கடந்த 200 ஆண்டுகளில் முயற்சிக்கப்பட்ட அனைத்து கட்டுப்படுத்தும் முயற்சிகளும் தோல்வியுற்றன. இந்தியாவில் 13 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பிலும் ஆஸ்திரேலியாவில் 5 மில்லியன் ஹெக்டேரிலும் தென்னாப்பிரிக்காவில் சுமார் 2 மில்லியன் ஹேக்டரிலும் லண்டானாவின் ஆக்கிரமிப்பு இருக்கிறது. பல பறவைகளின் விருப்ப உணவாக லண்டானாவின் கனிகள் இருப்பதும் இவற்றின் பரவலுக்கு முக்கிய காரணமாகி விட்டிருக்கிறது. இப்பறவைகள் தங்களையறியாமலேயே தங்களின் வாழ்விட அழிவிற்கு பங்களிக்கின்றன’
மேய்ச்சல் விலங்குகள் இவற்றை உண்ணாதது, பிற தாவரங்களை வளரவிடாத இவற்றின் வேதிப்பொருட்கள், பறவைகளால் நடைபெறும் விரைவான விதை பரவல், பலவகை பூச்சிகளால் மகரந்த சேர்க்கை, ஆயிரக்கணக்கான விதை உற்பத்தி ஆகியவை இவற்றின் ஆக்கிரமிப்புக்கு காரணங்களாக இருக்கின்றன.
இவற்றினருகில் களைகள் வளர்வதில்லை என்பதும், இவை தண்டுகள் மூலமும் விதைகளிலிருந்தும் இனப்பெருக்கம் செய்வதும் கூடுதல் காரணங்கள்
தற்சமயம் உலகில் எங்குமே லண்டானாவை அழிக்கவோ கட்டுப்படுத்தவோ எந்த வழிவகையும் இல்லை என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. லண்டானா நோய் உருவாக்கும் வைரஸ்போல கண்ணுக்கு தெரியாத ஒரு நுண்ணுயிரியோ அல்லது பறந்து சென்று மறைந்து கொள்ளும் பூச்சி இனமோ, கொடிய நச்சுவிலங்கோ அல்ல கண்ணெதிரே வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு தாவரம். ஆனால் அது உலகின் மிகப்பெரிய சிக்கலாகி விட்டிருப்பதும் அறிவியல் தொழில்நுட்பம் இத்தனை வளர்ச்சியடைந்திருக்கும் காலத்திலும் ஒரு தாவரத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமலிருப்பதும் பெரும் புதிர்தான்.
லண்டானாவின் ஈரலை தாக்கும் வேதிப்பொருட்கள் அவற்றை உண்ணவரும் மேய்ச்சல் விலங்குகளுக்கு நஞ்சாகிறது. இந்தியா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் ஏராளமான கால்நடைகள் லண்டானா ஈரல்செயலிழப்பால் உயிரிழந்துகொண்டிருக்கின்றன.
கட்டுப்படுத்தும் முயற்சிகள்

லண்டானாவை கட்டுப்படுத்த பலமுயற்சிகள் உலகெங்கிலுமே மேற்கொள்ளப்பட்டன. இரசாயன, உயிரியல் முறைக்ளும் சோதனை செய்யப்பட்டது.
வேருடன் அவற்றைப் பிடுங்கி எரிப்பது பல காலம் வழக்கத்தில் இருந்தது கிளைகளை தறித்து வேருக்கு மேலே அவற்றை குவித்து வைத்து புதிய கிளைகள் தோன்றுவதை தடுக்கும் முறையும் பின்பற்றபட்டது. செடியை அடியோடு வெட்டி எடுத்துவிட்டு சில நாட்கள் கழித்து வேரையும் பிடுங்கி எரிப்பது ஒரு முறையாக இருந்தது
மழைக்காலத்தில் வேருடன் பிடுங்குவது ஓரளவுக்கு கட்டுப்படுத்துதலில் வெற்றியளிக்கும் முறையாக இருக்கிறது.
வெட்டப்பட்ட லண்டானா தண்டுகளில் சோடியம் ஆர்ஸனேட்டை பூசி லண்டானாவின் வளர்ச்சி குறிபிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்பட்டது ஆனால் இம்முறை பிற மேய்ச்சல் விலங்கினக்களுக்கு நஞ்சானதால் கைவிடப்பட்டது
கேரளாவிலும் டேராடூனிலும் பல வகையான ரசாயனங்களை தெளித்து கட்டுப்படுத்தும் முயற்சிகள் பரிசோதிக்கப்பட்டு அவையும் தோல்வியில் முடிந்தன.
உயிரியல் கட்டுப்பாட்டு முயற்சிகளும் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டன. ஆஸ்திரேலியாவில் 30 வகையான பூச்சி இனங்கள் லண்டானாவை கட்டுப்படுத்த இயற்கை சூழலில் அறிமுகப்படுத்தப்பட்டன
ஆனால் இம்முறை எதிர்பாராமல் லண்டானாவின் ஆக்ரமிப்பை காட்டிலும் பெரிய ஆபத்தை கொண்டு வந்தது. அவற்றில் லண்டானா பூச்சி என்றழைக்கபட்ட ஒரு பூச்சியான Aconophora compressa லண்டானாவையும் பல தோட்டப்யிர்களையும் சேர்த்து நாசம் செய்ய துவங்கியது
லண்டானா அந்து பூச்சிகளான Epinotia lanata மற்றும் Lantanophaga pusillidactyla, ஆகிய இரண்டும் எதிர்பார்த்த அளவுக்கு லண்டானாவை உண்டு அவற்றை கட்டுப்படுத்துவதில் தோல்வியுற்றன.
லண்டானவை எரித்தழிக்க நினைப்பது அதன் வளர்ச்சியை மேலும் துரிதமாக்கும் என சமீபத்தில் கண்டறிய பட்டிருப்பதால் அம்முயற்சி இப்போது கைவிடப்பட்டிருக்கிறது
லண்டானாவின் பழுக்காத பச்சைநிற கனிகள் சிறிதளவு நஞ்சினை கொண்டிருப்பவை. பழுத்த பளபளப்பான கருமை நிறத்திலிருப்பவை நஞ்சற்ற உண்ணத்தகுந்த கனிகள். ஒரு சில தாவரவியலாளர்கள் பழுத்த பழுக்காத இரண்டு வகைகனிகளுமே நஞ்சுகொண்டவை என்கிறார்கள்.
லண்டானா போன்ற ஆக்ரமிப்பு களைகள் எப்படி புதிய சூழல்களுக்கு தங்களை தகவமைத்துக் கொள்கின்றன என்பதை துல்லியமாக இன்னும் அறிவியலால் விளக்க முடியவில்லை.
ஆஸ்திரேலியாவில் சுமார் 1400 இயல் தாவரங்களின் வளர்ச்சி மகரந்த சேர்க்கை மற்றும் இனப்பெருக்கத்தை லண்டானா நேரடியாக பாதித்திருக்கிறது. அங்கு சட்டபப்டி லண்டானாவை யாரும் விற்கவும் பரிசளிக்கவும் இயற்கையான வாழிடங்களில் அறிமுகப்படுத்தவும் தடை இருக்கிறது.4
வேதிப்பொருட்கள். மருத்துவப்பயன்கள்
1943 ல் P. G. J. Louw என்பவர் லண்டானாவிலிருந்து LantadeneA , B, ,Lantanin ஆகிய வேதிப்பொருட்களை பிரித்தெடுத்தார், இவை காய்ச்சலுக்கு எதிராக, நுண்ணுயிர்களுக்கு எதிராக, பூச்சிக்கொல்லியாக, பூஞ்சைக்கொல்லியாக பயன்படுத்தப்படும் இயல்புகளை கொண்டிருக்கிறது
லண்டானாவின் இலைகளின் இருக்கும் ட்ரைடெர்பீன்கள் கால்நடைகளின் ஈரலை நஞ்சூட்டுகிறது. லண்டானாவில் catalase, amylase, invertase, lipase, tannase மற்றும் glucosidase ஆகிய வேதிப் பொருட்களும் உள்ளன
பாக்டீரியா வளர்ச்சிக்கு எதிராக லண்டானாவின் செயல்பாடு உலகெங்கிலும் ஆய்வுகளில் உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது
இதன் மரப்பட்டையில் இருக்கும் சின்கோனா மரத்தின் குயினைனை ஒத்த ஆல்கலாய்டான lantanine ,காய்ச்சலுக்கும் வலிப்புக்கும் எதிராக செயல்புரிகிறது
மலர்களில் அந்தோசையனின் மற்றும் அக்ரோடீன் போன்ற நிறமிகள் உள்ளன
விதைகளில் . linolenic, linoleic, oleic, stearic , palmitic அமிலங்களும் அதிக கொழுப்பு சத்தும் இருக்கிறது
லண்டானாவின் வேர்களில் ஒலினோலெயிக் அமிலம் (oleanolic acid) பல இருக்கிறது
பிற பயன்கள்
லண்டானாவை மட்கச் செய்து உரமாக உபயோக்கிக்கலாம். இவற்றின் உறுதியான குச்சிகளை கூரைகள் வேலிகள் அமைக்க பயன்படுத்தலாம். இவற்றின் தண்டுகளில் லிக்னின் 14 சதவீதமும் செல்லுலோஸ் 30 சதவீதமும் இருப்பதால் இவற்றை கூழாக்கி காகிதம் தயாரிக்கலாம். ஒரு சில கிராமங்களில் பயன்பாட்டிலிருக்கும் இலைச்சாறு கொண்டு மரச்சாமான்களை மெருகேற்றுதலை பரவலாக்கலாம்.
அடர்ந்து வளரும் லண்டானா புதர்களை உயிர்வேலியாக பயன்படுத்தலாம்.
இலையிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் நிறமான நறுமண எண்ணையும்,மலர்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணையையும் மருதுவ மற்றும் தொழிற்சாலை உபயோகங்கள் கொண்டிருப்பதால் அவற்ற குறித்து அதிக விழிப்புணர்வு உருவாக்கி பயன்பாட்டை அதிகரிக்கலாம்
இமாலய மலைப்பகுதி கிராமங்களில் 20 சதவீத எரிவிறகாக லண்டானா தண்டுகளே இருக்கின்றன. இம்முறையை இந்தியாவின் பிற பாகங்களுக்கு அறிமுகம் செய்யலாம்.
காளான் வளர்ப்பில் லண்டானா குச்சிகளை வைக்கோலுக்கு பதிலாக பயன்படுத்திப்பார்க்கலாம்
ஜிம் கார்பெட் தேசிய பூங்காவின் முக்கிய முன்னெடுப்பான ’WELFARE’ (Women Empowerment through Lantana Furniture and Artifacts and Restoration of Environment) என்னும் அமைப்பு லண்டானாவின் மதிப்பு கூட்டிய பொருட்களிலிருந்து தொழில்முனைவோரை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறது.

லண்டானாவின் குச்சிகளை கொண்டு அழகிய காய்கறி பழங்கள் வைக்கும் கூடைகளும் சிறிய அலங்கார பொருட்கள், மரச்சாமான்கள் செய்யவும் இவ்வமைப்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது
மூட்டம் போடவும், நைட்ரஜன் சத்து மிகுந்திருப்பதால் வளம்குன்றிய நிலங்களில் பசுந்தாளுரமாகவும் இலைகளை பயன்படுத்தலாம். மைசூருவில் இம்முறை இப்போது சோதனை அளவில் இருக்கிறது.
புதிய நம்பிக்கைகள்
Ceratobasidium cornigerum என்னும் பூஞ்சை லண்டானாவில் ஒட்டுண்ணியாக வாழ்வது சமீபத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது.
sweet potato whitefly (Bemisia tabaci) என்னும் ஒரு பூச்சியும் லண்டானாவில் நோயை உருவாக்குகின்றது
L. camara, L. depressa, L. hirsuta, L. horrida, L. splendens, L. strigocamara, மற்றும் படர்கொடித்தாவரமான L.montevidensis ஆகியவை அலங்கார தாவரங்களாக சந்தைப்படுத்தப் பட்டிருக்கின்றன. Lantana montevidensis வெள்ளை மற்றும் நீல மலர்களுடன் இருக்கும் மிக அழகிய கொடித்தாவரம்.
அமெரிக்க பழங்குடியினரால் லண்டானா பல நூறாண்டுகளாக நோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இவை நோய் சிகிச்சையில் பயன்படுவதும், இவற்றிலிருந்து இயற்கை பூச்சிக்கொல்லி தயரிக்கலாமென்னும் சாத்தியங்களும் புதிய வெளிச்சம் அளிக்கின்றன. பட்டுப்பூச்சி பூங்காக்களில் இவற்றை வளர்த்து எண்ணிக்கையில் குறைந்து கொண்டே வரும் பட்டுப்பூச்சிகளை எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
லண்டானா இலைச்சாறு முட்டைகோஸ் பயிர்களை தாக்கும் Lipaphis erysimi என்னும் பூச்சியை கட்டுப்படுத்துகிறது
ஹவாயில் லண்டானாவை கட்டுப்படுத்தும் என நம்பப்பட்ட லண்டானா பட்டுப்பூச்சிகளான Lantana Scrub-hairstreak butterfly (Strymon bazochii) (Orthezia insignis Dougl.), லண்டானா ஈயான Lantana seed fly [Ophiomyia (Agromyza) lantanae Frog] மற்றும் லண்டானா வண்டான Lantana lace bug (Teleonemia scrupulosa Stal) ஆகியவை ஓரளவுக்கு இச்செடியின் வளர்ச்சியை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
லண்டானா ஆக்கிரமித்திருக்கும் இடங்களில் மலை வேம்பு, கல்மூங்கில் பெருந்தகரை ஆகிய விரைவில் வளரும் மரங்கள் வளர்ப்பது லண்டானாவின் வளர்ச்சியை ஓரளவுக்கு மட்டுப்படுத்துகிறது.
இந்தியாவில் காணப்படும் கருங்கீற்று தூக்கணம் (streaked weaver மற்றும் கருமார்பு தூக்கணாங்குருவிகள் black (throated weaver) தங்களது இணையை கவரும் பொருட்டு லண்டானாவின் பலவண்ண மலர்க்கொத்துக்கலை கொண்டு கூடுகளை அழகுபடுத்துகின்றன.
லண்டானாவின் சிற்றினங்கள் L. camara, L. lilacina மற்றும் L. trifolia ஆகியவை தேன் தரும் இனங்கள் எனவே தேன் சேகரிப்புக்காக இவை பல நாடுகளில் வளர்க்கப்படுகின்றன.
இலங்கையில் லண்டானாவுக்கருகில் ஆமணக்கு செடி மற்றும் சுடுகாட்டு சூரியகாந்தி ஆகியவற்றை (Tithonia diversifolia) வளர்ப்பது லண்டானாவின் வளர்ச்சியை பெருமளவுக்கு குறைப்பது கண்டறியப்பட்டு அம்முறை இப்போது புழக்கத்தில் இருக்கிறது
பளியர் மற்றும் சோளகர் இனப்பழங்குடிகள் லண்டானாவின் தண்டுகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் செய்கிறார்கள். ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தை சேர்ந்த தாமரைக்கரை கிராமத்தில் சோளகர் பழங்குடியினருக்கு லண்டானா செயல்திட்டத்தில் பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது
தாமரைக்கரையில் இயங்கும் பழங்குடியினர் அறக்கட்டளையின் லண்டானா செயல்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு U A. அன்புராஜ் சோளகர் பழங்குடியினருக்கு இதில் பயிற்சி அளிக்கிறார்.
லண்டானாவின் உடையும் தன்மையுடைய தண்டுகளை வேகவைத்து, வேகவைக்கப்பட்டதால் வளையும் தன்மை அடைந்த அவற்றின் மேற்தோல் உரிக்கப்படுகிறது, குளிர்ந்துவிட்டால் மீண்டும் வளையும் தன்மையை தண்டுகள் இழந்து விடுமென்பதால் அவற்றை சூடாக இருக்கையிலேயே வளைத்து வேண்டிய வடிவங்களில் நாற்காலி மேசை உள்ளிட்ட பலதரப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேசையாக கட்டிலாக வளைத்து செய்யப்[பட்டபின்னர் அவை மீண்டும் கடினத்தன்மை அடைந்து உறுதியாகி விடுகின்றன. மூங்கில், மற்றும் பிரம்பில் செய்யப்படும் பொருட்களுக்கு இணையான தரத்தையும் அழகையும் கொண்டிருக்கும் இவை மூங்கில் பிரம்பு பொருட்களின் விலையில் பாதியையே கொண்டிருக்கிண்றன
அழிக்கவே முடியாத அளவிற்கு பெருமளவு நிலப்பரப்பை ஆக்கிரமித்திருக்கும் லண்டாவிலிருந்து இப்படியான வெகுஜன புழக்கக்துக்கு அத்யாவஸ்யமான பொருட்களை தயாரிப்பதென்பது இந்த உலகளாவிய சூழல் பிரச்சனைக்கு மிகப்பெரிய தீர்வாக இருக்கமுடியும்.
லண்டானாவை முற்றிலும் அழிக்கமுடியாது என்னும் நிலையில் அதிலிருந்து மதிப்புக்கூட்டிய இவ்வாறான பொருட்களை தயாரிப்பது அதன் வளர்ச்சியையும் அதனால் உண்டாகி இருக்கும் சூழல் அச்சுறுத்தலையும் பெருமளவு குறைக்கும். அரசு இதில் ஈடுபட்டு பழங்குடியினத்தவரை இத்தொழிலில் மேலும் ஈடுபடுத்தினால் சூழலோடு அவர்களின் வாழ்வாதரமும் பாதுகாக்கப்படும்.
உலகின் 60 நாடுகளில் மிக மோசமான களையாக இருக்கிற, இந்தியாவின் 44 சதவீத காட்டுப்பரப்பை ஆக்ரமித்திருக்கிற, உலகளவில் 11×106 km2 என்னுமளவில் பரவிப்பெருகி இருக்கிற லண்டானாவுக்கெதிரான போரில் நூற்றாண்டுகளாக உலகநாடுகள் தோற்றுக்கொண்டே இருக்கின்றன. இவ்வேளையில், அவற்றிலிருந்து மதிப்புக்கூட்டிய பொருட்களை தயாரித்து, பயனடைவதில் இந்தியா பிற நாடுகளுக்கு வழிகாட்டியாகவும் இருக்கும்.
- https://www.palmbeachdailynews.com/story/lifestyle/home-garden/2023/02/25/planting-native-plants-in-palm-beach-is-just-smart-landscaping/69937171007/
- Ageratum conyzoides, Eupatorium sp., Lantana camara, Mikania micrantha , Parthenium hysterophorus
- http://www.flowersofindia.net/catalog/slides/Lantana.html
- https://www.daf.qld.gov.au/__data/assets/pdf_file/0009/62010/lantana.pdf
- https://encyclopedia.pub/entry/10496
மேலதிக தகவல்களுக்கு: