ரத்னா

சேரன் போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகமாக மாறும் முன்பிருந்த பழைய இரண்டாம் நம்பர் பேருந்திலிருந்து செல்வபுரம் நிறுத்தத்தில் இறங்கிய சரஸ்வதி செந்திலை தோளிலிருந்து கீழே இறக்கிவிட்டாள். அந்த மதிய வெயிலில் அம்மாவும் மகனும் பிரசவமாகி பெரியாஸ்பத்திரியில் படுத்திருந்த பக்கத்து பிளாக் செல்வியைப் பார்த்துவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்கள்.

வெள்ளை நிறச் சேலை முழுவதும் சின்னச்சின்ன நீல நிற நந்திப்பூக்கள் படர்ந்த சிந்தெடிக் சில்க் சேலையின் முந்தானையை ஒரு கையால் தட்டித்தள்ளி விளையாடிக்கொண்டே இன்னொரு கையால் சரஸ்வதியின் கைவிரலைப் பிடித்துக்கொண்டு நடந்தான் செந்தில். வழியில் இருக்கும் மழலையர் பள்ளியை தூரத்திலிருந்து பார்த்ததும் செந்தில் நடக்காமல் நின்றான். ஆறு மாதங்களுக்கு முன்புதான் வீட்டைவிட்டு மற்றவரோடு இருக்கப் பழகட்டும் என்று செந்திலை அந்தப்பள்ளியில் சேர்த்திருந்தார்கள். பள்ளி என்றால் முன்னால் திண்ணை வைத்து சுவர் மறைத்த ஒரு பத்துக்குப் பதினாறு அறை, பத்துக் குழந்தைகள் அமர மூன்று மரபெஞ்சு, டீச்சர் ட்ரைனிங் முடித்துவிட்டு அரசு வேலைக்குக் காத்திருந்தபடியே பள்ளியில் வேலையில் இருக்கும் ஜாஸ்மின் டீச்சர், ஜாஸ்மினுக்கு உதவியாய் குழந்தைகளை மேய்க்கும் ரத்னா, அவ்வளவுதான்.

“சீக்கிரம் வாடா, போய் சமைக்கணும்,” என்று செந்திலின் கையைப் பிடித்து இழுத்தாள் சரஸ்வதி.

“நாம வேற வழியாப் போலாம்,” என்றான் செந்தில்.

“வேற வழி உங்கப்பா கட்டி விட்டாதான் உண்டு.”

செந்தில் நகராமல் நின்றான், “ரத்னாக்கா திட்டுவாங்க.”

“காலைலயே அவுங்கம்மாகிட்ட சொல்லிட்டேன்டா, வா.”

“நான் இங்கதான் இருப்பேன். நீ போ,” என்று சரஸ்வதியின் கையை உதறிவிட்டு தன் இரு கைகளையும் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு நின்றான் செந்தில்.

“இவனை…” என்று செந்திலைப் பிடித்து வாரித்தூக்கி இடுப்பில் அமர்த்திக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள் சரஸ்வதி.

“என்னை விடு, என்னை விடு,” என்று காற்றில் காலை உதைத்தான் செந்தில்.

“பேசாம வரயா இல்ல தூக்கிட்டுப்போய் தவிட்டுக்கு வித்துரட்டுமா,” என்று செந்திலை இடுப்பில் இறுக்கிக் கொண்டு நடந்தாள் சரஸ்வதி.

அமைதியான செந்தில், ஒரு நிமிடம் யோசித்து, “என்னைத் தவிட்டுக்கு வித்து நீ மட்டும் மைசூர்பாகு வாங்கித் திம்பியா,” என்று சரஸ்வதியிடம் கேட்டான்.

“இப்படி கணக்கறயே. உன்னை வித்து பசுமாடு வாங்கி வீட்டுல கட்டி பால் கறந்து விக்க போறேன்.”

“மா மா மா, நில்லு…” செந்திலின் பள்ளியின் சமீபத்தில் சென்றுகொண்டிருந்த சரஸ்வதி நின்று, “என்னடா?” என்று கேட்டாள்.

“ரத்னாக்கா… திட்டுவாங்க,” என்றான் செந்தில். 

ரத்னா பள்ளியின் வெளியே நின்று ஒரு இளைஞனிடம் பேசிக்கொண்டிருந்தாள். சரஸ்வதி செந்திலிடம் சொன்னாள், “அவ ஒண்ணும் சொல்ல மாட்டாடா. நீ பேசாம வா.”

“நான் மாட்டேன், நான் மாட்டேன்,” என்று செந்தில் மறுபடியும் கத்த ஆரம்பித்தான். 

சற்று யோசித்த சரஸ்வதி சேலை முந்தானையை உடம்போடு சுற்றி செந்திலின் முகத்தை மறைத்தாள். “போதுமா, உன்னை ரத்னாவுக்குத் தெரியாம ஒளிச்சு வெச்சு எடுத்துட்டுப் போயிடறேன்,” என்று நடக்க ஆரம்பித்தாள்.

செந்தில் தன்னைச் சுற்றியிருந்த மெல்லிய சேலை வழியாக வெளியே பார்த்தான். பள்ளி நெருங்கிக்கொண்டே வந்தது. பள்ளியின் முன் நின்றிருந்த ரத்னா சரஸ்வதியைப் பார்த்ததும் தயங்கி “சரஸ்வதிக்கா” என்று சத்தமாக அழைத்து சரஸ்வதியின் அருகே வந்து நின்றாள். அவளோடு பேசிக்கொண்டிருந்த இளைஞன் எதிர்புறமாய் நடக்க ஆரம்பித்தான். 

“எப்படி இருக்கு செல்வியக்காவுக்கு?” என்று ரத்னா கேட்டாள்.

நீலப்பூக்கள் வழியாக இருட்டாய் தெரிந்த ரத்னா சேலைக்கு வெளியே நின்று உதட்டைச் சுருக்கி, கைகளை இப்படியும் அப்படியுமாக ஆட்டிப் பேசுவது செந்திலுக்கு வேடிக்கையாக தெரிந்தது. அவர்கள் பேசுவது என்னவென்று புரியாமல் இருந்தவனுக்கு, “செந்தில் எங்கக்கா காணோம்,” என்று ரத்னா கூறியது நன்றாகக்  கேட்டது.

சரஸ்வதி சொன்னாள், “உனக்கு தெரியாதாடி? ரோட்டுல ஜவ்வுமிட்டாய் வித்துட்டு வருவாரே ஒரு தாத்தா, அவருகூட செந்தில் ஓடிப் போயிட்டான்.”

“அச்சச்சோ, எங்க போனான்?” என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டாள் ரத்னா.

“தெரியலைடி. கடல்தாண்டி மலைதாண்டி எங்கோ போயிட்டான்னு சொல்றாங்க.”

ரத்னா சரஸ்வதியின் முந்தானையில் கைவைத்துப் பார்த்து. “அக்கா இந்தப் புடவை நல்லா இருக்கே. உள்ள வந்து கழட்டிக் குடுத்துட்டுப் போங்க,” என்றாள். 

பிடிபட்டு விடுவோமோ என்ற பயத்தில் சரஸ்வதியின் கழுத்தை இறுக்கினான் செந்தில். “சரிடி நான் கிளம்பறேன். அவரு சாப்பிட வரேன்னு சொல்லி இருக்கார்,” என்று ரத்னாவிடம் சொல்லிவிட்டு சரஸ்வதி நடந்தாள். ரத்னா அம்மாவின் பின்னாலிருந்து பார்த்து கையசைத்துவிட்டு பள்ளிக்குள்ளே சென்றதும் செந்தில் முந்தானையை உதறிவிட்டு வெளியே வந்த செந்தில் “ஏய், நீ ரத்னாக்கா கிட்டயே பொய் சொல்றயா,” என்று கேட்டு சிரித்தான்.

“இடுப்பு வலிக்குதுடா, இறக்கி விடறேன், நடக்கறயா?” என்று கேட்டாள் சரஸ்வதி.

“இல்லை இல்லை தூக்கிக்கோ.” 

“எவ்வளவு தூரம்டா.”

“மா…” என்று சரஸ்வதியின் தோளைத் தட்டினான் செந்தில்.

“என்னடா.“ 

“குஞ்சு வலிக்குதுமா.” 

வாய்விட்டு சிரித்த சரஸ்வதி செந்திலை இடுப்பில் தூக்கி அமர்த்திக் கொண்டு பாரதியார் காலனிக்குள் நுழைந்தாள். 

பாரதியார் காலனி நகர்ப்புற வளர்ச்சித் துறையால் குறைந்த வருமானம் ஈட்டும் ஏழ்நிலைக் குடும்பங்களுக்காக கட்டப்பட்டது. வடக்கில் செல்வசிந்தாமணிக் குளம், மெயின் ரோட்டில் இருந்து வழி குளக்கரையோர சாலையாக நீண்டு காலனியைத் தொடும், மேற்கே கவுண்டர் தோட்டம், கிழக்கே தனிவீடுகள், தெற்கே முள்ளுக்காடு. ஆங்கில எழுத்துக்கள் ‘A’ முதல் ‘T’ வரை இருபது பிளாக்குகள், தளத்திற்கு நான்கு என்று இரண்டு மாடிகள் கொண்ட ஒவ்வொரு பிளாக்கிலும் இரண்டு பத்துக்குப்பத்து அறைகள் கொண்ட பன்னிரண்டு வீடுகள். இருநூற்றி நாற்பது வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டதும் 1980ல் குலுக்கல் முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.  

இப்போது செந்தில் வசிக்கும் ‘ஜீ’ பிளாக் ஆறாம் நம்பர் வீடு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு அவன் அப்பா ஆறுமுகமும் பாட்டி பரிமளத்தம்மாளும் குடிவரும்போது ஆறுமுகத்துக்கு இருபது வயது. ரத்னாவின் அப்பா முத்துக்கண்ணும் அம்மா கௌசிகாவும் அவர்களுக்கு ஒதுக்கீடான ‘ஐ’ பிளாக் தரைத்தளத்தில் ஒன்றாம் நம்பர் வீட்டில் குடியேறியபோது ரத்னாவுக்கு நான்கு வயது.  

ரத்னா ஆறாவது படிக்கையில் அவள் அப்பா முத்துக்கண்ணு ஜவுளிக்கடையில்  வேலை முடித்து சைக்கிளில் வீடு திரும்பும்போது வைசியாள் வீதி முக்கில்  உக்கடத்திலிருந்து வந்த ஏதோ ஒரு வண்டி மோதி சாலை விபத்தில் உயிரிழந்தார். அந்தச் சமயத்தில் ஜவுளிக்கடை முதலாளி தனராஜ் ரத்னாவின் குடும்பத்துக்கு பணவுதவி செய்ததோடு ரத்னாவின் படிப்புச் செலவையும் ஏற்றுக் கொண்டார். அம்மா கௌசிகா ஆரம்பத்தில் ரத்னாவைப் பள்ளிக்கு அனுப்பியபின் பகலில் தெலுங்குபாளையத்தில் இருந்த தனராஜ் வீட்டில் வீட்டுவேலை செய்து வந்தாள். சில மாதங்களுக்குப் பின் தனராஜ் மாலை வேளைகளில் ரத்னாவின் வீட்டுக்கு வர ஆரம்பித்தார். அந்த நாட்களில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் ரத்னா மாலை முழுதும் விளையாடிவிட்டு வர கௌசிகா அனுமதிப்பாள். ரத்னாவும் துணிகளை மாற்றிவிட்டு காலனிக்கு நடுவே இருக்கும் மைதானத்துக்கு ஒரே ஓட்டமாய் ஓடி மற்ற சிறுமிகளுடன் விளையாடிவிட்டு இரவில் வீடு திரும்புவாள். 

புது சொந்தமாகி வீட்டுக்கு வரும்போதெல்லாம் சாக்லேட் வாங்கி வரும் தனராஜ், ரத்னா ஏழாம் வகுப்பு படிக்கும் நாட்களில் வாரத்தில் ஒரு இரவு வீட்டிலேயே தங்க ஆரம்பித்திருந்தார். தனராஜ் இப்படி வந்து போவது ஆரம்பத்தில் காலனி முழுக்க கிசுகிசுக்களையும் கோணல்முகங்களையும் உருவாக்கி அடுத்த ஒன்றிரண்டு வருடங்களில் சகஜமாகிப் போனது. பார்த்துப் பழகிய முகங்களுக்கு தனராஜ் தன் ஜவுளிக்கடையில் கொடுக்கும் தள்ளுபடியை ருசித்தபின் அவனைக் கண்டதும் சிரித்து நலம் விசாரிக்கும் கூட்டம் காலனியில் அதிகமானது. 

ரத்னா எட்டாம் வகுப்பு ஆரம்பித்து பள்ளிக்குச் சென்ற முதல்நாளில் புஷ்பவதியானாள். இரண்டு ஆசிரியைகள் ரத்னாவை பள்ளியிலிருந்து ஆட்டோவில் வீடுவரை கொண்டுவந்து விட்டுச் சென்றார்கள். தனராஜ் தன் செலவில் காலனியில் இருக்கும் சமுதாயக் கூடத்தில் விழா நடத்த ஏற்பாடு செய்தார். செந்திலின் பாட்டி பரிமளத்தம்மாளை துணைக்கு அழைத்துக்கொண்டு கௌசிகா அவள் கணவனின் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு பத்திரிகை வைக்கச் சென்றாள். அவர்கள் அனைவரும் சொல்லி வைத்ததுபோல பத்திரிகையில் கை வைக்கவில்லை. கௌசிகாவின் வீட்டு முறையிலிருந்தும் வருவதாய்ச் சொன்ன ஒருவரும் வராமல் இருந்துவிட விழா அன்று சடங்கு செய்யப் பெண்களில்லாமல் கூடம் காலியாக இருந்தது. கௌசிகா வாசலைப் பார்த்து அழுதுகொண்டு இருந்தாள். 

பொறுத்துப்பொறுத்துப் பார்த்த பரிமளத்தம்மாள், “கௌசி, நீ வீட்டுக்குப் போயி  ரத்னாவுக்கு அலங்காரம் பண்ணு கண்ணு. மீதியை நான் பாத்துக்கறேன்” என்று தன் வெள்ளைச்சேலைத் தலைப்பை உதறி இடுப்பில் சொருகிக் கொண்டு கிளம்பினாள். அறுபது வயதுக் குமரியாய் தன் உடைந்த இடுப்பை இழுத்துக்கொண்டு மாடிமாடியாய் ஏறி இறங்கி ‘எச்’, ‘ஐ’, ‘ஜே’ மூன்று பிளாக்கிலும் உள்ள முப்பது  வீட்டுப் பெண்களையும் குழந்தைகளையும் கூடத்துக்கு வர வைத்தாள். மாமன் சீர் செய்ய தன் மகன் ஆறுமுகத்தை முன்னே நிறுத்தினாள். தாமதம் ஆனாலும் ஒருவழியாய் ரத்னாவின் சடங்கு நடந்து முடிந்தது. தொடக்கத்தில் இருந்து இறுதிவரை தனராஜ் கடைசி வரிசை நாற்காலியில் அமர்ந்து ரத்னாவைப் பார்த்துக் கொண்டிருந்தார். சரியாக விழா முடியும் தருணத்தில் தனராஜ் ஆர்டர் கொடுத்திருந்த இரவு சிற்றுண்டிகள் ஆட்டோவில் வந்து இறங்கியது. 

அனைத்து வேலைகளையும் முடிந்து இரவு வீட்டுக்கு வந்து படுத்தபின் இருட்டில் ஏதேதோ யோசித்துக்கொண்டிருந்த ஆறுமுகம் பரிமளத்தம்மாளிடம் கேட்டான் “ஏம்மா, இந்த கௌசியக்கா பண்றது நியாயமா இருக்கா? இப்பவாவது அந்த ஜவுளிக் கடைக்காரன் பழக்கத்தை நிறுத்த வேண்டாமா?”

அமைதியாய் யோசித்த பரிமளத்தம்மாள், “தம்பி ஆறுமுகம், யாருக்கு எப்ப பசி அடங்கும்னு யாருக்கு தெரியும்?” என்று சொன்னாள். 

“அதுக்குன்னு இப்படியா ஒரு வயசு விசாரம் இல்லாம,” என்று ஆறுமுகம் உறங்க ஆரம்பித்தான். 

அடுத்த சில நாட்களிலேயே சிறுமுகைக்குச் சென்று நல்ல குடும்பத்துப் பெண்ணாய் தேடி ஆறு மாதத்துக்குள் ஆறுமுகத்துக்கு சரஸ்வதியை பரிமளத்தம்மாள் திருமணம் முடித்து வைத்தாள். மூன்றே மாதத்தில் சரஸ்வதி உண்டாகி இருக்கும் சந்தோஷத்தோடே ஒரு இரவு தூக்கத்தில் பரிமளத்தம்மாளின் உயிர் பிரிந்தது. பிணத்தைத் தூக்கும்போது, “ஆத்தா, கட்டக்கடைசிவரை துணைக்கு நின்னயே, இனி எனக்குன்னு பேச நாதியிருக்கா?” என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுத கௌசிகாவுக்கு எப்படி சமாதானம் சொல்வது என்று யாருக்கும் தெரியவில்லை. 

வயதுக்கு வந்தபின் மற்ற விஷயங்களைப் பற்றி தெரிந்துக்கொண்ட பின்புதான் தனக்கு விளையாட விருப்பமில்லை என்றாலும் மாலைகளில் வீட்டைவிட்டு தான் வெளியே அனுப்பப்பட்டதன் காரணத்தையும் சுற்றி இருந்தவர்களின் கிண்டல் பேச்சின் அர்த்தத்தையும் ரத்னா புரிந்துகொண்டாள். அவளுக்கு தனராஜின் மேல் இருந்த கோபத்தைவிட அவள் அம்மாவின் மேல் இருந்த பரிதாபம் அதிகமாக இருந்தது. கௌசிகா ரத்னாவிடம் இதைப்பற்றி வெளிப்படையாய் பேசவில்லை. ரத்னாவும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. தனராஜ் வருவதைப் பெரிதாக்காமல் அவருடன் அளவாக பேசிவிட்டு ஒதுங்க ஆரம்பித்தாள் ரத்னா. 

வேலைக்குச் சென்ற ஆறுமுகம் செட்டிவீதியில் இருந்த பட்டறை வேலை முடித்து இரவு வீடு திரும்பும்வரை கர்ப்பமாய் இருந்த சரஸ்வதி ரத்னாவை வீட்டில் துணைக்கு வைத்துக் கொள்வாள். பரிமளத்தம்மாள் இருந்தவரை பொழுது சாய்ந்தபின் தாயக்கட்டை உருட்ட விடமாட்டாள். அவள் போனபின் சரஸ்வதியும் ரத்னாவும் இருட்டியபின்னும் பரமபதம் விளையாடிக்கொண்டே கதையாடிக்  கொண்டிருப்பார்கள். ஓரிருமுறை சரஸ்வதி ரத்னாவிடம் தனராஜைப் பற்றி கேட்டிருக்கிறாள். தான் அவரிடம் சரியாக பேசாவிட்டாலும் தனக்கு வேண்டியதையெல்லாம் அவர் விருப்பத்துடன் செய்து தருவதாக ரத்னா சொன்னாள். முப்பத்தைந்து வயதில் ஒரு பெண் குழந்தையுடன் விதவையாய் நின்ற கௌசிகா வாழ்நாள் முழுவதும் பிற ஆண்களின் அர்த்தப் பார்வையையும் பொய்க் கருணையையும் தாங்கிக்கொண்டு கஷ்டப்படுவதைவிட இப்படி யாரோ ஒருவருடன் நிலையாய் இருந்துகொள்வதுதான் அவளுக்குப் பாதுகாப்பு என்று ரத்னா சொன்னாள். இவளும் பிழைத்துக் கொள்வாள் என்று சரஸ்வதி மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் தவிர மற்ற அனைத்துப் பாடங்களிலும் தோற்றுவிட்ட ரத்னாவை மறுபடியும் படிக்கச் சொல்லி துன்புறுத்த கௌசிகா விரும்பவில்லை. ஒரு மாதம் சோகமாய் வீட்டில் அடங்கியிருந்த ரத்னா அதன்பின் ஆளில்லா வீட்டுக்குள் எதைப் பிடித்து இழுக்கலாம் என்று சுற்றிவரும் நாய்க்குட்டிபோல் பாவாடை சட்டை அணிந்துகொண்டு காலனி முழுவதும் சுற்றிவர ஆரம்பித்தாள். பிளாக்கில் யார் கூப்பிட்டாலும் இரண்டு ரூபாய் வாங்கிக்கொண்டு அவர்களோடு ரேஷன்கடைக்குச் சென்று கூடை தூக்கிக்கொண்டு வருவது, கீழ்தளத்தில் உள்ள வீட்டுப் பெண்கள் துவைத்துக்கொடுக்கும் துணியை மொட்டைமாடிக்குத் தூக்கிச்சென்று காயப்போடுவது, குடத்துக்கு நாலணா  வாங்கிக்கொண்டு காலனி பொதுக்குழாயில் இருந்து நல்ல தண்ணீர் பிடித்து மாடி வீட்டுகளுக்கு தூக்கிச்சென்று ஊற்றுவது என்று ரத்னா அலைந்துகொண்டே இருப்பாள். 

செந்தில் பிறந்ததில் இருந்தே அவனைத் தூக்க வேண்டும் என்று நச்சரித்தக் கொண்டிருந்த ரத்னாவின் கையில் செந்திலின் தலைநின்ற பின்புதான் அவனைக்  கொடுத்தாள் சரஸ்வதி. வெற்றிலையில் எண்ணெய் தடவி கரிச் சாந்து பிடிப்பதில்  இருந்து அரைத்துணி மாற்றுவதுவரை அனைத்தையும் சரஸ்வதியை செய்யவிடாமல் ரத்னாவே செய்தாள். “ஏண்டி, இவ்வளவு ஆசையா கொழந்தைய பாத்துக்கறயே, பையன் பாக்க சொல்லி கௌசி அக்காகிட்ட சொல்லட்டுமா,” என்று சரஸ்வதி கேக்கும்போதெல்லாம், “போங்கக்கா” என்று வெட்கப்பட்டு செந்திலை அணைத்துக்கொள்வாள் ரத்னா. எங்கு சென்றாலும் செந்திலைத் தூக்கிக்கொண்டு அலைவது ரத்னாவின் பொழுதுபோக்காக மாறியது. 

தனராஜ் தொடர்ந்து மூன்று வாரங்கள் வீட்டுக்கு வராமல் இருந்த ஒரு நேரத்தில் கௌசிகாவிடம் செலவுக்குக் காசில்லாமல் போனது. ரத்னாவை தனராஜின் ஜவுளிக்கடைக்குச் சென்று பார்த்துவரச் சொன்னாள்.  இரண்டு வயது செந்தில் அப்போது பேச ஆரம்பித்திருந்தான். அவனையும் தூக்கிக் கொண்டு ஜவுளிக்கடைக்குச் சென்ற ரத்னா உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு வாசலிலேயே தயங்கி நின்றாள். கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்த தனராஜின் மனைவி ரத்னாவை கவனித்தாள். ரத்னா கடைக்குள் நுழைந்து, “தனராஜ் மாமா இல்லைங்களாக்கா?” என்று கேட்டாள். 

“நீ யாரு பாப்பா,” என்றாள் தனராஜின் மனைவி. 

கடைப்பையன் உள்ளிருந்து கத்தினான், “அக்கா, இது செத்துப்போன நம்ம முத்துக்கண்ணு அண்ணன் பொண்ணு.” 

தனராஜின் மனைவி கடைக்குள் பார்த்து, “ஏன்டா நல்லா தெரியுமா அவரு  பொண்ணுதான்னு?“ என்று கத்திவிட்டு ரத்னாவைப் பார்த்து பரிவாக கேட்டாள், “தோள்ல யாரு கண்ணு, தம்பிப் பாப்பாவா?”

“இல்லங்க்கா, பக்கத்து வீட்டுப் பையன். அம்மா தனராஜ் மாமாவைப் பாத்துட்டு வர சொல்லிச்சு.”

“உங்க மாமாவுக்கு கிழமைக்கு ஒரு வீடு. ஒவ்வொரு வீட்டுக்கும் முறை செஞ்சா சொந்த வீட்டுக்காரி நான் எங்க போறது சொல்லு?”

ரத்னா திரும்பி நடக்க ஆரம்பித்தாள். “ரோஷத்தைப் பாருடா,” என்ற தனராஜின் மனைவி, “எம்மா, இதை வாங்கிக்கோ,” என்று ரத்னாவிடம் இருபது ரூபாய் நோட்டை நீட்டினாள். பணத்தை வாங்கிக்கொண்ட ரத்னா கிளம்பும்முன் கேட்டாள், “மாமாவுக்கு என்ன ஆச்சு?”

தனராஜின் மனைவி சலித்துக்கொண்டு சொன்னாள், “ஆடாத ஆட்டம் ஆடினா? இப்போ நல்லாதான் இருக்காரு. ஒரு வாரத்துல வந்திருவார்.”

தலையாட்டிவிட்டு செந்திலைத் தூக்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் அங்கிருந்து கிளம்பி காலனிக்குள் நுழைந்த ரத்னா வீட்டு வாசற்கதவை இடித்தாள். அவசரமாய் வந்து கதவைத் திறந்த கௌசிகாவிடம் வாசலில் நின்றபடியே, “இனி ஒரு தடவை அந்தாளைப் பார்க்க அங்க அனுப்பினா அப்படியே சொல்லிக்காம வீட்டைவிட்டு ஓடிடுவேன்,” என்று கத்திவிட்டு செந்திலின் வீட்டுக்குச் சென்றாள். 

தன்னோடு எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கும் ரத்னா பாவாடை தாவணி அணிந்துகொண்டு வேலைக்குச் செல்வதாய் தன்னைவிட்டு விலகிச் செல்வது செந்திலுக்கு சோகமாகத்தான் இருந்தது. ரத்னா வேலை செய்யும் மழலையர் பள்ளியிலேயே அவனையும் சேர்ந்ததும் இனி நாள் முழுவதும் ரத்னாவுடன் சேர்ந்து இருக்கலாம் என்று நினைத்த செந்திலுக்கு ரத்னா தன்னிடம் பள்ளியில் மட்டும் கண்டிப்பாக இருப்பது ஏன் என்று புரியவில்லை. முன்பெல்லாம் மதிய உணவு சாப்பிடச் சொல்லி கொஞ்சிக் கொண்டிருந்த ரத்னா இப்போது மிரட்டுவதும், அருகில் அமரும் பெண்ணின் கன்னத்தைக் கிள்ளினால் திட்டுவதும், ஸ்லேட் பென்சிலை கடித்துத் தின்றால் அடிப்பதும் என்று தன்னையும் மற்ற குழந்தைகளை மேய்ப்பதுபோல நடத்துவது செந்திலுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இனி வாழ்நாள் முழுவதும் அவளுடன் பேசக்கூடாது என்று நினைத்துக் கொண்டான். 

மாரண்ண கவுடர் பள்ளியில் எல்.கே.ஜி சேர்த்தப்பட்டிருந்த செந்தில் முதல்நாள் பள்ளிக்கு சுறுசுறுப்பாகக் கிளம்பி ஆர்வத்துடன் ஆறுமுகத்தின் சைக்கிள் முன்னால் அமர்ந்து கொண்டான். சைக்கிள் காலனியைத் தாண்டும்போது எதிரே வந்துகொண்டிருந்த ரத்னாவைப் பார்த்து சிரித்த ஆறுமுகம் சைக்கிளை நிறுத்தினார். செந்தில் கன்னத்தைக் கிள்ளிய ரத்னா, “என்னடா செந்திலு, இத்தனை நாளா கூடவே இருந்துட்டு இப்படி விட்டுட்டு போற?” என்று கேட்டாள். செந்திலுக்கு ரத்னாவைப் பார்க்க பாவமாக இருந்தது. “நீயும் என்கூட வரியா,” என்று ரத்னாவிடம் கேட்டான். “நிஜம்மாவாடா“ என்று சிரித்த ரத்னா, “நீ போயிட்டே இரு. நான் பின்னாடியே வந்து சேர்ந்துக்கறேன்,” என்று சொல்லிவிட்டு திரும்பி நின்று செந்திலுக்கு டாட்டா காட்டினாள். பள்ளி வகுப்பறையில் செந்திலை விட்டுவிட்டு ஆறுமுகம் நகர்ந்து மறைந்ததும் தரையில் படுத்து அழுதுகொண்டு அடித்த நீச்சலில் செந்தில் அன்று ரத்னாவை மறந்தான்.

சேர்ந்து விளையாட அவன் வயதுப் பையன்கள் யாரும் பிளாக்கில் இல்லாததால் பள்ளிவிட்டு வரும் செந்தில் மாலையில் முதல்தளப் படிக்கட்டில் அமர்ந்துகொண்டு  சரஸ்வதியும் பிளாக்கில் இருக்கும் மற்ற பெண்களும் தரைத்தளப் படிக்கட்டுகளில் அமர்ந்து பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பான். ஒருநாள் பத்தாம்நம்பர் வீட்டில் இரவு பன்னிரண்டு மணியைத் தாண்டி விளக்கு எரிவதையும் அடுத்த நாள் காலையிலேயே சுகந்தி தலை குளித்திருப்பதையும் பற்றி பேசி பெண்கள் அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அன்று இரவு சுகந்தி கருவாடு இரவல் வாங்க சரஸ்வதியின் வீட்டுக்கு வந்திருக்கும்போது பெரியமனிதன்போல அவள் முன்னால் சென்று நின்ற செந்தில், “சுகந்தி அத்தை, எங்க வீட்டில இப்போ விளக்கு எறியுதே, நாளைக்கு தலைக்கு குளிப்பீங்களா,” என்று கேட்டான். சுகந்தி குழம்பி நின்றாள். தலையை எங்கோ திருப்பிக்கொண்ட சரஸ்வதியின் முகத்தைப் பார்க்கும்போது சுகந்திக்கு விஷயம் ஒருமாதிரி புரிந்தது. “ஏண்டி சரஸ்வதி, உங்களுக்கு எல்லாம் வேற வேலைமயிரு இல்லையாடி. எவ வீட்டுல எவ்வளவு மணிக்கு விளக்கு எறியுதுன்னு பாத்துட்டு இருக்கீங்க?” என்று கேட்டுவிட்டு கருவாடு வாங்காமலே கிளம்பிவிட்டாள். அதே சுகந்தி அடுத்தநாள் மாலை தரைத்தளப் படிக்கட்டில் அமர்ந்து மற்ற வீடுகளிலும் இரவு பன்னிரண்டு மணி தாண்டியும் விளக்கு எரிய வழிவகை சொல்லிக்கொடுத்தாள். அதன்பின் சரஸ்வதி மாலை வேலைகளில் கதையளக்கச் செல்லும்போது செந்திலை ரத்னா வீட்டில் விட்டுச் செல்வாள். 

ரத்னாவுக்கும் செந்தில் இப்படி வருவது வசதியாகத்தான் இருந்தது. காலனி நடுவே இருக்கும் மைதானத்தில் சிறுவர்களுக்கு கிரிக்கெட் விளையாடச் சொல்லிக் கொடுக்கும் சந்திரன் கண்ணில் படுவதுபோல மைதான ஓரத்தில் நின்று ரத்னா செந்திலுடன் விளையாடுவாள். சந்திரன் வேண்டுமென்றே பந்தை ரத்னா இருக்கும் இடத்துக்கு அருகே வீசிவிட்டு பந்தை எடுத்துச் செல்லும்போது அவளை விழுங்குவதைப்போல பார்ப்பான். ரத்னாவுக்கும் இது பிடித்தது. சந்திரன் அருகே வரும்போது செந்திலைப் பார்த்து, “ஆனாலும் உனக்கு திமிரு அதிகம்தான்,” என்று சொல்வாள். சந்திரன் சிரித்து செந்திலின் இரு கண்ணங்களையும் தடவிக் கொடுத்துவிட்டுச் செல்வான்.   

சந்திரன் மாநகராட்சிப் பள்ளியில் பன்னிரண்டாவது படித்து முடித்துவிட்டு மூன்று வருடங்களாக மெயின் ரோட்டில் சாமி எலக்டிரிக்கல் ஷாப் என்ற கடையை வைத்திருந்த அவன் அப்பாவின் நண்பர் எலெக்ட்ரீஷியன் வேலுச்சாமிக்கு உதவியாய் இருந்து வந்தான். சாமி எலக்டிரிக்கல் ஷாப் ரத்னா வேலை செய்த மழலையர் பள்ளிக்கு எதிரே இருந்தது. ரத்னாவைப் பார்த்துப்பார்த்து மனதில் ஆசையை வளர்த்திக்கொண்ட சந்திரன் அவளைத் திரும்பிப் பார்க்க வைக்க அவள் பின்னால் ஆறுமாதங்கள் நடக்க வேண்டியிருந்தது. 

செந்தில் யு.கே.ஜி படிக்கும்போது ஒருநாள் மாலை அவனைத் தூக்கிக்கொண்டு மைதானத்துச் செல்வதாய் கௌசிகாவிடம் சொல்லிச் சென்ற ரத்னா காலனி மேற்கே இருக்கும் கவுண்டர் தோட்டத்துக்குச் சென்றாள். வெளியே இருந்து பார்க்கும்போது சிறியதாய்த் தெரியும் தோட்டத்துக்குள் இருநூறு தென்னை மரங்களும் அதைத்தாண்டி ஒரு கிணறும், கீற்றுக் குடிசையும் கரும்புத் தோட்டமும் இருந்தது. காலனி வருவதற்குமுன் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த தோட்டக்கிணறு இன்று வேலிக்கு வெளியே இருந்தது. காலனிக்குள் குடிநீர் குழாய் இணைப்பு கிடைத்தபின் சந்திரனைப்போல இடிந்தசுவரில் அமர்ந்து காத்திருக்கும் காதலர்கள் தவிர வேறு யாருக்கும் உபயோகப்படாமல் நீர்வற்றி அசுத்தப்பட்டுக் கிடந்தது அந்தக் கிணறு. 

கவுண்டர் தோட்டத்தை அதுவரை பார்த்திருக்காத செந்தில் இரண்டு மாடி பிளாக்குகள் அளவு உயரமாய் வளர்ந்திருந்த மரங்களையும் தொங்கும் தேங்காய்களையும் அதிசயமாகப் பார்த்தான். கிணற்றின் அருகே இருந்த மணல்மேட்டில் சந்திரன் அருகே அமர்ந்த ரத்னா செந்திலை அவர்கள் நடுவே அமர்த்திக் கொண்டாள். சந்திரன் கொண்டுவந்த ஒரு தாழம்பூவை ரத்னாவிடம் கொடுத்தான். பூப்போட்ட ஜாக்கெட்டும் மஞ்சள் நிற தாவணியும் அணிந்திருந்த ரத்னா அந்தத் தாழம்பூவை வாங்கி முகர்ந்து பார்த்துவிட்டு தலையில் வைத்துக் கொள்வதை செந்தில் பார்த்தான். அருகே இருந்த சந்திரன், “ஏன் ரத்னா, இப்படிப் பூவை எடுத்து தலையில வெச்சுக்கறயே, இவ்வளவு பாரத்தைப் பாவம் உன் இடுப்பு தாங்குமா?” என்று கேட்டான். ரத்னாவுக்கு வெட்கத்தில் உடல் கூசியது. அருகில் இருந்த செந்திலை இழுத்து தன் மடியில் அமர்த்தி அவன் கண்ணத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள். 

அந்த வார சனிக்கிழமை சரஸ்வதி ‘சி’ பிளாக் லட்சுமியுடன் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்குச் சென்றிருந்தாள். அம்மன் சந்நிதியில் பிரசாதமாகக் கொடுத்த பூவை சரஸ்வதி தலையில் வைப்பதை பார்த்துக் கொண்டிருந்த செந்தில், “அம்மா பூவை தலையில வைக்காத,” என்று கத்தினான். சுற்றி இருந்த அனைவரும் செந்திலை கவனித்தார்கள். “சும்மா இருடா,” என்று சரஸ்வதி அதட்டினாள். “மா, பூ வைச்சா இடுப்பு தாங்காது,” என்றான் செந்தில். அவனைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்ட சரஸ்வதி, “அம்மா பச்சைநாயகி, இந்தப் பிள்ளைக்கு பைத்தியம் பிடிக்காம நீதான் பாத்துக்கணும்,” என்று அம்மனிடம் கூடுதல் விண்ணப்பத்தை வைத்தாள். 

ரத்னா செந்திலைத் தூக்கிக்கொண்டு கிணற்றுக்குச் செல்வதும் சந்திரனைப் பார்ப்பதும் செந்தில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்த பின்னும் தொடர்ந்தது. நடுவில் அமர்ந்திருக்கும் செந்தில் பார்க்காதவாறு ரத்னாவை சந்திரன் தொடுவான். அவள் கூச்சத்துடன் சிணுங்கி நகர்ந்து கொள்வாள். ரத்னா அறியாத ஏதாவது திருக்குறளை சந்திரன் சொல்லுவான், “ஏன் ரத்னா, நீ சும்மா பாத்தாலே நான் செத்துருவேன். இதுல அந்தக் காது ஜிமிக்கியும், சிவப்பு தாவணியும், மைவெச்ச கண்ணையும் வளைச்சு என்னைத் தாக்கினா நான் எங்க போவேன்?” ரத்னா வெட்கப்பட்டு செந்திலை அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுப்பாள். ஒரு தடவையாவது அந்த முத்தத்தைத் தான் வாங்கிவிட வேண்டும் என்ற சந்திரனின் ஆசையை ரத்னா நிறைவேற்றுவதாய் இல்லை. சந்திரன் ரத்னாவின் காதில் சொல்லிப் பார்த்தான், “ரத்னா, ரொம்பப் பசிக்குது. உதட்டுலதான் அவ்வளவு தேன் இருக்கே, கொஞ்சமா குடுக்கறயா.” ரத்னா எழுந்து செந்திலை நிற்கவைத்தாள். “கிணத்துக்குள்ள தண்ணி தேனாட்டம் இருக்குமாம், கூட நாலு பாம்பும் செத்துக் கிடக்கும். நகத்திப் போட்டு தூர்வாரி தேன் குடிங்க,” என்று சொல்லிவிட்டு செந்திலை இழுத்துக்கொண்டு ஓடினாள்.

ஜாஸ்மின் டீச்சர் மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு உயிரெழுத்துக்கள் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு மதியவேளையில் திடீரென சந்திரன் பள்ளிக்குள் நுழைந்தான். ரத்னா கடைசி பெஞ்சு ஓரத்தில் அமர்ந்திருந்தாள். அவளைப் பார்த்த சந்திரன், “திருட்டுத் தேவிடியா, உன்னையே நம்பின என்னை இப்படி ஏமாத்திட்டயேடீ,” என்று கத்தினான். ரத்னா மலைத்து நின்றாள். ஜாஸ்மின் டீச்சர், “யாரு நீங்க,” என்று கேட்டதைக் கவனிக்காமல் விறுவிறுவென சந்திரன் பள்ளியை விட்டு வெளியே நடந்தான். வாசலில் நின்றவன் திரும்பி ரத்னாவைப் பார்த்து, “இப்படி மானங்கெட்டு பொழைக்கறதுக்கு போய் சாவலாம்,” என்று பள்ளிக்குள் காறி உமிழ்ந்தான். சந்திரன் சென்றதும் ஜாஸ்மின் டீச்சர் எதுவும் புரியாமல் அழுதுகொண்டிருந்த ரத்னாவைப் பார்த்தாள். தலையைப் பிடித்துக்கொண்டு நாற்காலியில் சென்று அமர்ந்த ஜாஸ்மின் டீச்சர், “ரத்னா, வீட்டுக்கு போ. பிரச்சனையெல்லாம் முடிச்சுட்டு இங்க வா போதும்,” என்றாள்.   

ரத்னா எலக்டிரிக்கல் ஷாப்புக்கும் மைதானத்துக்கும் சென்று சந்திரனைத் தேடினாள். அவன் எங்கும் இல்லை. என்ன நடக்கிறதென்று புரியாத குழப்பத்தோடு ரத்னா வீட்டுக்கு வந்தாள். அவள் வீட்டினுள் நுழையும்போது தனராஜ் முன்னறையில் எப்போதும் அமரும் மரநாற்காலியில் அமர்ந்து பீடியை இழுத்துக் கொண்டிருந்தார். கௌசிகா சமையலறையில் இருந்தாள். ரத்னா எதுவும் பேசாமல் வீட்டின் உள்ளே சென்றாள். அவள் செல்வதைக் கவனித்த தனராஜ், “கௌசி” என்று கத்தினார்.  கௌசிகா சமையலறைக்குள் இருந்து வந்து தனராஜ் முன் நின்றாள். “இன்னைக்கு காலையில கடைக்கு ஒரு பையன் வந்தான்,” என்றார் தனராஜ். திறந்த கழிவறைக் கதவை படாரென மூடிவிட்டு ரத்னா முன்னறையைப் பார்த்தாள்.     

“முழுசா மீசை கூட வளரலை, என் முன்னாடி வந்து ரத்னாவைப் புடிச்சுருக்கு, கட்டி வைப்பீங்களான்னு கேக்கறான்.”

தனராஜ் பேசப்பேச முன்னறைக்கு வந்து கௌசிகாவின் பின்னே ஒடுங்கி நின்றாள் ரத்னா. அவர்கள் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும் பிடித்திருந்த பீடியை அணைத்துவிட்டு புதிதாய் ஒரு பீடியைப் பற்றவைத்து புகையை நன்றாய் இழுத்துவிட்டு பீடியின் கனலைப் பார்த்தார் தனராஜ். 

“நீங்க என்ன சொன்னீங்க?” என்று கேட்டாள் ரத்னா. 

ரத்னாவைப் பார்த்துக்கொண்டே பீடிப்புகையை வெளியே விட்ட தனராஜ் சொன்னார், “எவனோ திங்கவா அந்த உடம்பை இத்தனை நாள் சோறுபோட்டு வளர்த்தேன்னு கேட்டேன்.”

கௌசிகா நின்ற இடத்தில் அப்படியே தரையில் அமர்ந்தாள். தனராஜ் சொன்னார், “சட்டம் எல்லாம் பேசி ரத்னாவுக்கு நான் இருக்கேன்னு சொன்னான். அவ ஏற்கனவே என்கூட படுத்துட்டாடான்னு சொன்னேன். அவ்வளவுதான், திரும்பிப் பாக்காம ஓடிட்டான்.“

கௌசிகா “ஓ” என்று கத்தி அழ ஆரம்பித்தாள். ரத்னா கௌசிகாவின் தோளை உலுக்கி “ஷ்ஷ்” என்று உதட்டில் விரல் வைத்துக் காண்பித்தாள். முன்னே சென்று தனராஜ் முன் நின்றாள். பீடியை இழுத்தபடி தனராஜ் ரத்னாவைப் பார்த்தார். இத்தனை வருடங்களாய் அவர் பார்வையில் ஒளிந்திருந்த காமம் முன்னால் வந்து நின்றது. இரு நிமிடங்கள் மௌனமாக தனராஜைப் பார்த்த ரத்னா திரும்பி ஒருமுறை கௌசிகாவைப் பார்த்துவிட்டு வீட்டைவிட்டு வெளியே சென்றாள். செய்வதறியாது அமர்ந்து அழுதுகொண்டிருந்த கௌசிகா எழுந்து நின்றாள். கால் இடறியது. சுவரைப் பிடித்துக்கொண்டு நடந்து கதவைத் தாண்டினாள். 

அன்று கடைவீதிக்குச் சென்றிருந்த சரஸ்வதி பள்ளிக்குச் சென்று செந்திலையும் அழைத்துக்கொண்டு மாலையில் வீட்டுக்கு வந்தாள். அவள் காலனிக்குள் நுழையும்போதே பெண்கள் இங்குமங்குமாய் கூடி நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். சரஸ்வதி ‘ஜீ’ பிளாக்கை நெருங்கும்போது ஆறாம் நம்பர் வடிவு தன் பெருத்த உடலுடன் அவசரமாய் படியிறங்கி வந்துகொண்டிருந்தாள். சரஸ்வதியைப் பார்த்ததும் ஓலமிடுவதுபோல “ஏண்டி சரஸ்வதி, நம்ம கௌசி கிணத்துல விழுந்துருச்சாம்டீ,” என்று கத்திக்கொண்டு முன்னே நடந்தாள். சரஸ்வதிக்கும் அவசரம் தொற்றிக் கொண்டது. செந்திலைக் கைப்பிடித்து இழுத்துக்கொண்டு கவுண்டர் தோட்டத்தை நோக்கி நடந்த சரஸ்வதி பதட்டமாய் கேட்டாள், “என்ன ஆச்சு மாமி?” 

“ரெண்டு மணிபோல நான் வீட்டுக்கு வரச்சே அந்த ஜவுளிக்கடைக்காரன் கௌசி வீட்டுக்கதவை வெறுமனே சாத்திட்டு கிளம்பறதப் பாத்தேன். தூங்கி எந்திரிச்சதும் இப்பதான் விஷயத்தை ரமணி சொன்னா,” என்று பெருமூச்சுவிட்டு நடந்துகொண்டே சொன்னாள் வடிவு. 

காலனி மக்கள் முழுவதும் தோட்டத்துக் கிணற்றை சுற்றி நின்றுகொண்டிருந்தனர். வடிவு கூட்டத்தின் உள்ளே இருந்து வெளியே வந்த சுமதியிடம் கேட்டாள், “சேச்சி, என்ன ஆச்சு?”

சுமதி தலையை உதறிக்கொண்டே சொன்னாள், “என்ன சொல்ல? அவ பாக்காத கஷ்டமா, வயசுப் பொண்ணை வெச்சுட்டு இப்படியா சாகணும்?”

வடிவு கேட்டாள், “எப்போ? எப்படி?”

சுமதி சொன்னாள், “ஒண்ணும் தெரியலயே மாமி, அதோ அந்தப் பையன் கிணத்துப் பக்கமா வந்ததாலே ஆச்சு. அல்லாட்டி யாருக்கு தெரியும். இப்போதான் உள்ள ஆள் இறங்கியிருக்காங்க.”

சந்திரன் கிணற்றின் அருகே பதட்டமாய் நின்றிருந்தான். சரஸ்வதி கேட்டாள், “ஹாஸ்பிடல் கொண்டு போகணுமே”

“முட்டங்கால் அளவுதானே தண்ணி. உள்ள வெறும் பாறைதான். ரத்தமாக் கிடக்கு”  என்று சுமதி சேலைத் தலைப்பால் வாயைப் பொத்திக்கொண்டாள். 

சரஸ்வதி செந்திலை வெப்பமரத்தடியில் ஓரமாய் நிறுத்திவிட்டு கிணற்றுவாயை நோக்கி நடந்தாள். செந்தில் சுற்றி நடப்பதை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். காலனியில் இருந்து ‘டீ’ பிளாக் பாயம்மா தன் மருமகளின் தோளைப் பிடித்துக்கொண்டு கிணற்றை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள். சுமதி பாயம்மாவின் கையைப் பிடித்து, “கௌசி போயிருச்சுமா,” என்றாள். “ஐயயோ,  மதியம்தான்டி அவளைப் பாத்தேன். மைதானத்தைத் தாண்டி வேகமா போன ரத்னா பின்னாடியே ரத்னா ரத்னான்னு அழுதுட்டே போன கௌசியைப் பாத்தேனே. பாவி, ஏதோ வேலைல நிறுத்தி என்னனு கேக்காம விட்டுட்டேன்,”  என்ற பாயம்மா ஒரு கேவலுடன் முன்னே நடந்தாள். 

கிணற்றுக்குள் கயிறுபோட்டு இறங்கியிருந்த ஆட்கள் உள்ளிருந்து “உள்ள இன்னொரு பொனம் கிடக்கு,” என்று கத்தி ஒரு சிவப்புத் துணியை வெளியே இழுத்தார்கள். “ரத்னா” என்று முன்னே பாய்ந்த சந்திரனை சுற்றியிருந்த ஆட்கள் பிடித்து அடக்கினார்கள். 

சுற்றி யாருமில்லாத வேப்பமரத்தடி நிழலில் தனியாக நின்றிருந்த செந்தில் தூரத்தில் நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான். ரத்னாவும் கௌசிகாவும் எப்போதும் அமரும் மணல்திட்டில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். சந்திரன் ரத்னாவின் சிதைந்த உடலருகே அமர்ந்து தன் தலையில் அடித்துக்கொண்டு அழுதான். செந்தில் ஏதோ ஞாபகத்தில் தன் கன்னத்தைத் தடவிக்கொண்டான்.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.