
நாணயம்
காலையில் தெருமுக்கின் கோயில் வாசலில் கும்பிட்டுக் கேட்டுக்கொண்டபோது
நாள் முழுக்க என் நாவில் குடியிருப்பதாக ஒப்புக்கொண்டார் கடவுள்.
அலுவலகம்வரை கை கோர்த்து நடந்தவர்
டீ குடித்து வருவதாய்க் கிளம்பினார்
எதிர்பாராமல் பொறியில் சிக்கும் எலிபோல
நாக்கு , சொற்களை நீட்டி மாட்டிக்கொள்ளும்போதெலாம்
மீட்பரை எதிர்பார்த்தேன்
மதிய உணவிற்குப் பிறகு திரும்பியவர்
தன் அறுந்த செருப்பைத் தைக்கச் சென்றிருந்ததாய்க் கூறினார்.
அப்போது பார்த்து மணியோசை எழும்பவே பக்தர் கூட்டம் காத்திருப்பதாய்
பூரண புன்னகையை உதிர்த்தபடி பதறியோடினார்.
பொறி துருத்தும் நாவுடன்
நாக்கு அலகு குத்தியதுபோல்
மாலை அதே வாசலில் மண்டியிட்டேன்.
யாரோவொரு கடன்காரனிடம் மும்முரமாய்ப்ப் பேசிக் கொண்டிருந்தவர் என்பக்கம் திரும்பக்கூட இல்லை.
நான் மனதில் இவ்வாறு சங்கல்பமிட்டேன்
நாளைமுதல் கோயில்கோயிலாக
நாணயமான கடவுளுக்கு
வலைவீச வேண்டும்
அதன்பின் முதல்வேளையாக
அவருக்கு லாடம் கட்டிக் கடிவாளமிட வேண்டும்.
காப்பி கேட்
காப்பிக்கென
அடுப்பில் பால் வைத்திருந்தேன்.
வீட்டுப்பாடம் செய்தவாறே
திண்பண்டம் கொறித்தபடியிருந்த
மகள்களிடையே
உரையாடல் சூடுபிடிக்கத் துவங்கியிருந்தது.
வார்த்தை கொதித்ததோ
பண்டம் பறிபோனதோ
தெரியவில்லை.
சீறிப்பொங்கும் அலைபோலொரு
நுரைத்த அலறலில்
பாலைத் தவறவிட்டு
சுடச்சுட
அழுகையை வடிகட்டி
அருந்திக் கொண்டிருக்கின்றன
என் செவிகள்.
காளி உலா
வீதியில்
பவனி வருகிறாள் காளி.
வரவேற்கும் பொருட்டு
தெருப் பொடிசுகள்
தங்கள் கால்களின் கட்டுதிர்க்கத் துவங்கியிருந்தனர்.
தரை பாவிய கால்கள்
பறையின் உச்சம் தொட
தெருவை நனைக்கிறது ஆட்டம்.
சீராய் குலுங்கும் மனத்தில்
அதிரும் பறை ஓர் அசுர உடுக்கை.
மினுங்கும் கல்நகை பூட்டி
என்றுமில்லாமல் அவ்வளவு நேரம்
கால்வலிக்க வாசலில் நின்றிருந்தாள்.
ஏனோ
சலங்கையற்ற சலங்கையைக் கட்டிக்கொண்டு
உதிரம் குதிகுதிக்க
பாவம் உதிர்க்கும் அலைகளை
வீசியபடியிருந்த
அச் சின்னப் பாதங்களைத்தான்
விழுந்து விழுந்து கும்பிட்டுக்கொண்டிருந்தேன்.