மித்ரோ மர்ஜானி – 9

This entry is part 9 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தமிழாக்கம் : அனுராதா கிருஷ்ணஸ்வாமி

தன்னிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு,  விருந்தினரை சந்திக்க மாடிக்குச் செல்ல  காத்திருந்த மித்ரோவைப் பார்த்து பாலோவின் உடலும் மனமும் தகதகவென பற்றி எரிந்தன.

வேதனை தாளாமல் பெருமூச்சுவிட்டு, ” அட அதிர்ஷ்டக் கட்டையே! இதே தாசில்தார் தான் ஒரு காலத்தில் உன் காலடியே சரண் என விழுந்து கிடந்தான். உன்னையே சுற்றிச் சுற்றி வந்தான். இன்று அதே தாசில்தார் உன் மகளோடு கூடிக் களிக்கப் போகிறான். ச்சீ! ச்சீ! என்ன கேவலமான, தரங்கெட்ட வாழ்க்கையடி உன்னுடைய வாழ்க்கை!” என்று அவள் மனமே அவளைச் சாடியது. 

இது நாள் வரை மனதைக் கட்டி வைத்திருந்த நூல் சடாரென அறுந்தது போல, பாலோவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. பொறுக்க முடியாத துக்கம் தொண்டையை அடைக்க, “மித்ரோ… மித்ரோ… அடியே மித்ரோ” என்று மகளுக்குக் குரல் கொடுத்தாள்.

பாதி திறந்திருந்த விருந்தினர் அறைக்கதவின் கைப்பிடியைப் பிடித்திருந்த மித்ரோவின் கரங்கள், தாயின் குரல் கேட்டு,  கீழே விழுந்தன. அவளது கால்கள் நடக்க முடியாமல் தள்ளாடின. நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. அம்மா இந்த நேரத்தில் ஏன் என்னை கூப்பிட வேண்டும்?” என்று மனதுக்குள் கடுகடுத்தாள்.

” திரும்பி வா மித்தி,  திரும்பி வந்துவிடு” என்று பாலோ குரலெடுத்துக் கதறினாள்.

மித்ரோ,  கீழே இறங்க முதற்படியில் கால் வைத்தாள்.

” ஓ தாசீல்தார்! இப்போது உமக்கு மித்ரோ வேண்டி யிருக்கிறதா? மண்ணில் அழியப் போகிற என் தேகத்தை குளத்தில் தள்ளி விட நினைத்தீரா” என்று உரக்கப் புலம்பினாள்.

மித்ரோ இறங்கி வராந்தாவுக்கு வந்தாள். காரிருளில் மூழ்கி இருந்த வீட்டில் தாயின் ஒளிரும் இரு கண்களைத் தவிர, மித்ரோவுக்கு வேறு எதுவும் தெரியவில்லை. அருகே வந்து, மெல்லிய குரலில், “என்ன ஆயிற்று அம்மா? உனக்கு சுகக்கேடு ஒன்றும் இல்லையே? அறை வாசலிலிருந்தே திரும்ப அழைத்து விட்டாயே?” என்று கேட்டாள்.

துப்பட்டாவால் முகத்தையும் தலையையும் மூடிக்கொண்டிருந்த மித்ரோவின் அம்மா,  விசும்பி விசும்பி அழுதாள்.

” ஏதாவது பேசுங்கள் அம்மா” என்றாள் மித்ரோ.

விசும்பி விசும்பி அழும் அம்மாவைப் பார்த்து மித்ரோவின் நெஞ்சம் பொங்கி வந்தது.

” ஏதாவது பேசுங்கள் அம்மா. ஏதாவது சொல்லுங்கள். சற்று நேரம் முன்பு தானே மித்ரோவை சிரித்தபடி மேலே அனுப்பி வைத்தீர்கள். அதற்குள் என்ன நடந்து விட்டது?” என்று மித்ரோ அம்மாவிடம் மன்றாடினாள்.

பாலோ எதையோ சொல்ல வாய் எடுத்த போதிலும், அழுகையில் உதடுகள் படபடக்க,  எதுவுமே பேச முடியாமல் சிலை போல நின்றாள்.

மித்ரோ,  அம்மாவை அணைத்துக் கொண்டு ஆறுதலாக, ” மேலே விருந்தினர் அறையில் இருக்கும் தாசில்தாரை உங்களுக்கு அவ்வளவு  பிடிக்கும் என்றால்,  என்னை ஏன் அவரிடம் அனுப்ப சம்மதித்தீர்கள்?” என்று கேட்டாள்.

பாலோ, தலையை அசைத்து, மகளிடம் எதையோ சொல்ல முயன்று தோல்வி  அடைந்தாள். பிறகு, மகளை இறுகக் கட்டிக் கொண்டு, திக்கித்திணறி, “உன் அம்மாவின் காலம் முடிந்து விட்டதடி மித்ரோ. இப்போது யார் இவளுக்கு நண்பர் யார் இவளது கூட்டாளி- தோழர்? இவளுடைய ஆட்டம் பாட்டம் எல்லாம் முடிந்து விட்டதம்மா” என்றாள்.

“பீபோ!”

அதிர்ச்சியில் உறைந்து நின்ற மித்ரோவால் எதுவும் பேச முடியவில்லை. அம்மாவைத் தோளோடு அணைத்துக் கொண்டு, அவளது கண்களில் இருந்து வழியும் அருவியைப் பார்த்து, நிறுத்தி நிறுத்தி, ” நூற்றுக்கணக்கில் உன்னைத் தேடி உன் ரசிகர்கள் வருவார்களே அம்மா! அவர்களெல்லாம் இப்போது வருவதில்லையா? என்று கேட்டாள்.

மகளின் பேச்சைக் கேட்டு,  பாலோ ஹா ஹாவென இன்னும் உரக்கப் புலம்பினாள். மித்ரோவின் கைகளை பிடித்துக் கொண்டு அழுதவாறு,” இல்லையடி. இப்போது இந்த சூளை குளிர்ந்து போய் விட்டதில்லையா,  அதனால் யாரும் வந்து எட்டிப் பார்ப்பதில்லை. இதற்கு வாரிசுகள் என யாரும் கிடையாது. இறந்து போனவர்களின் பெயர் கூட இதற்குச் சொந்தமில்லை” என்று அரற்றினாள்.

சோகத்தில் மூழ்கி இருந்த தாயை,  அணைத்துக் கொண்டு ” என் மீது சத்தியம் அம்மா!  நீங்கள் கவலைப்படாதீர்கள்!” என்று மித்ரோ ஆறுதல் கூறினாள். பாலோ, விக்கியபடி, “தனித்து போன உன் அம்மாவை இந்த வீடு, இருக்கவிடாமல் துரத்தி அடிக்கிறதடி மித்ரோ” என்று அழுது புலம்பினாள்.

தாயின் புலம்பலை கேட்ட மித்ரோவுக்கு இனம் புரியாத பயம் ஏற்பட்டது. அந்தக் காரிருளில், மூடி கிடந்த ஜன்னல்களையும் வெறிச்சோடி கிடந்த வீட்டையும் பார்த்த மித்ரோவின் கண்களில் மின்னல் ஓடியது போன்ற பிரமை ஏற்பட்டது. வெறிச்சோடிக் கிடந்த வீடு, பூதங்கள் வாழும் மயானத்தைப் போலவும், அழுது புலம்பும் தாய், பசி தாகத்தால் தவிக்கும் ராட்சசியைப் போலவும் அவளுக்குத் தோன்றியது.

பாலோ, மகளை தன்னருகே இழுத்து, “மகளே! என்னை தனியாகத் தவிக்கவிட்டு போய்விடாதே. நான் சர்தாரிலாலிடம் பேசி சமாளித்துக் கொள்கிறேன்” என்றாள்.

இருட்டில் பருந்துக் கண்களைப் போல பளபளக்கும் தாயின் நீல நிற கண்களைக் கண்ட மித்ரோ, பயந்து நடுங்கி, மயங்கி கீழே சாய்ந்தாள்.

” என்னடி, என்ன ஆயிற்று உனக்கு?”

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தன்னை நோக்கி பாய்ந்த தாயைப் பார்த்து,  மித்ரோ பற்களை நற நறவென கடித்தாள். பிறகு எங்கிருந்தோ புதிய பலத்தைப் பெற்றவள் போல,  சுதாரித்துக் கொண்டு எழுந்து நின்றாள்.

அம்மாவைப் பார்த்து, ” அம்மா, உங்கள் திட்டமெல்லாம் என்னிடம் பலிக்காது. உங்கள் வெறுஞ் சட்டியில், என்னையும் என் கணவனையும் மீன் துண்டங்களாக வறுத்தெடுக்கப் பார்க்கிறீர்களா? உங்கள் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது. நிறைவேறவும் விடமாட்டேன்,” என்று உரக்கக் கத்தினாள். பிறகு கண்ணிமைக்கும் நேரத்தில், அம்மாவை புறந்தள்ளிவிட்டு, வராண்டாவையும் மாடிப்படிகளையும் ஒரே எட்டில் கடந்து, சர்தாரிலால் படுத்திருந்த அறைக்குள் சென்று, கதவை உட்புறம் தாளிட்டுக் கொண்டாள்.

உச்சி வெயில் மண்டைக்கேறும்பொழுதில் கண் விழித்த சர்தாரி உடலை முறுக்கிக் கொண்டான். அருகில் படுத்திருந்த மித்ரோ தன் கணவனை முத்தமிட்டாள்.

பிறகு,  குறும்புப் பார்வையுடன், “என் அன்பு கணவரே நேற்றிரவு எங்கெல்லாம் ஊர் சுற்ற போனீர்கள்? எங்கெல்லாம் தங்கினீர்கள்? எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கள். நானும் தெரிந்து கொள்கிறேன்” என்றாள்.

தூக்கம் கலையாத கண்களுடன், சர்தாரி,   தன் மனைவி மித்ரோவை உற்றுப் பார்த்து, அவள் தலையில் செல்லமாகத் தட்டி, “ராத்திரி எங்கும் போகவும் இல்லை. எங்கும் தங்கவும் இல்லை. இந்தக் கற்பனைக் குதிரை தான் எங்கெங்கெல்லாமோ சுத்தி விட்டு வந்தது” என்றான். 

மித்ரோ கணவனின் மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.” என் இதய தெய்வமே! உங்களுடைய கதை தான் இந்த மித்ரோவின் கதையும்” என்றாள்.

பிறகு,  சோம்பல் முறித்துவிட்டு,  கை கால்களை உதறிக் கொண்டு,  எழுந்து உட்கார்ந்தாள். கணவனின் கைகளையும் கால்களையும் அன்போடு இதமாக பிடித்து விட்டாள். குனிந்து, அவனது உள்ளங்கைகளையும் தலையையும் உதட்டால் தொட்டு, எச்சில் துப்புவது போல பாவனை செய்தாள். ” என் எஜமானரின் மீது இந்த இழவெடுத்த மித்ரோவின் கண்ணேறு படாமல் இருக்கட்டும்” என்றாள்.

(முற்றும்)

Series Navigation<< மித்ரோ மர்ஜானி – 8

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.