
மாயம்
மணச் சங்கு ஊதியது
மத்தளமும் கொட்டியது
ஏனோ அன்று மட்டும்
வரும் போது ஓரடுக்காய்த்
தோன்றிய மேகங்கள்
பற்பல வானங்களாய்ப்
பரந்ததை எண்ணிக் கொண்டேன்.
இதென்ன மாயம்
நான் வாழ்த்துமிடத்திலும்
அவள் பெறுமிடத்திலும்.
இயலாச் சொல்
என் குரல் நாண்களின்
இடை வெளியில் இன்னமும்
நீங்கள் கேட்காத சொற்கள்
சிற்சிறு தூளிகளில் தொங்குகின்றன
எண்ணிக்கை ஓங்குகையில்
உடல் குறுக்கி அமர்ந்திருக்கும் சில
பாதம் நீட்டி படுத்திருக்கும் சில
முகம் காட்டி கண் மூடியிருக்கும் சில
கைகள் வெளிப்போந்திருக்கும் சில
திமிறி வரத் தெரியாதவை
உள்ளேயும் புதைக்க இடமில்லை
கழுத்தில் பாரித்தது நீலம்
இத்தனையும் மீறி ஆம்,
ஆம் எனச் சொல் இரட்டையர்
வருவதும் ஒரு வியப்பே!
பிரியும் நேரத்துப் ப்ரியங்கள் போல்
குறுகும் உடல் நீண்டு சிறிது
பேசிப் பின்னர் பதுங்கும்.
நீட்டிய பாதங்கள் கோண வளைவில்
பதிந்து நின்று அன்பிற்குக்
கறைகளும், கரைகளும் இல்லை எனும்
பின்னர் ஆமையின் கூட்டினுள் அடையும்.
தூளியின் விளிம்பில் முகம் காட்டுவை
உண்ணப் படுபவையே அனைத்தும் என
உன்னிப்பார் என்று முனகி மறையும்.
உட் சொல்லின் நடனமென
விரல்கள் காற்றில் எழுதும் சொற்கள்
அதன் எழுத்தைப் படிக்க மானுடம்
தவிர்க்கிறது பின்னர் தவிக்கிறது.
அதுவும் வெளியிலிருந்து உட்சென்ற நஞ்சு
என் அகம் சீறி படமெடுக்கையில்
இன்னமும் கழுத்தில் நெளியும் நடனம்
நஞ்சு உண்ட அமுதம் அது
சுவாதி விண்மீனின் துளி
வானதியின் வைர மீன்கள்
கருந்துளையில் மாட்டிய ஒளி