மரத்தில் மறைந்தது மாமதயானை

முழுதும் அறியாவிட்டாலும், திருமூலரின் கீழ்க்கண்ட இந்தப் பாடலைத் தமிழர் பலரும் அறிவார்கள்.

‘மரத்தில் மறைந்தது மாமதயானை
மரத்தை மறைத்தது மாமதயானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே!’ (10-ம் திருமுறை- திருமூலர் திருமந்திரம்)

கம்பீரமும், மதுரமும் பொருந்திய குரலில் திருமதி. கே பி சுந்தராம்பாள் பாடிய ‘ஒன்றானவன், உருவில் இரண்டானவன்’ என்ற பாடல் சொல்வதும் ஒன்றின் பலத் தோற்றங்களையும், அவை ஒன்றே என்பதையுமே.

டு டோர்ட்மண்ட் பல்கலையில் (Tu Dortmund University) கோட்பாட்டு இயற்பியலாளரான ஹைன்ரிச் பா(ஸ்) (Heinrich Pas) ‘இந்தப் பழங்கருத்தில் எதிர்கால இயற்பியல்’ உள்ளது என்று தனது ‘த ஒன்’ (The One) என்ற  நூலில் விளக்கியுள்ளார். துகள் இயற்பியல். அண்டவியல், கால- வெளியின் கட்டமைப்பு ஆகியவற்றைப் பற்றிய இவரது ஆய்வுகள் ‘சைன்டிஃபிக் அமெரிகன்’ மற்றும் ‘ந்யூ சைன்டிஸ்ட் மேகசினின்’ முகப்பில் இடம் பெற்ற சிறப்பைக் கொண்டவை. அவர் தன் நூலின் முக்கியக் கருதுகோள்களாக ஐந்து விஷயங்களைச் சொல்கிறார்.

1. நம் அனுபவங்களுக்குப் பின்னே ‘குவாண்ட உண்மை’ (quantum Reality) மறைந்துள்ளது. 

அடிப்படை உண்மையிலிருந்து நாம் அறிந்து கொண்டவைகள் அடிப்படை உண்மைகளா அல்லது நம் பார்வையின் தன்மைகளா? ‘வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம் கானலின் நீரோ, வெறும் காட்சிப் பிழைதானோ?’ என்று வினவுகிறார் நம் மகாகவி பாரதி. கோபன் ஹேகனில், (Copenhagen) குவாண்ட இயக்கவியலைப் பற்றிய சிந்தனையில், இந்தக் கருத்தின் வீச்சினாலும், அதன் புரியாத சாத்தியங்களாலும் 1927-ல் நீல்ஸ் போர், (Niels Bohr) வெர்னெர் ஹைசென்பெர்க் (Werner Heisenberg) இருவரும் திகைத்துப் போயினர். இயற்கையிலுள்ள பொருட்களில் ஒன்றான ஒளி, அலையாகவும், துகளாகவும் இருப்பதை அவர்கள் உணர்ந்தனர். ஆனால், ஒரே நேரத்தில் இரண்டையும் நாம் காண முடிவதில்லை அல்லவா? ஹைசென்பெர்க்கின் நண்பராகிய வுல்ஃப்கேங் பாவ்லி (Wolfgang Pauli) ஒரு உதாரணத்தின் மூலம் இதை விளக்க முற்பட்டார். இரு வேறு கண்கள் கொண்டு இந்த இரு வேறு குணங்களைப் பார்க்கலாம்; அது அலையோ, துகளோ, ஒன்று மட்டுமே பார்க்கக் கிடைக்கும். இரண்டையும் ஒரே நேரத்தில் பார்ப்பது- அது பித்தனாகி நம்மை அலைய வைத்துவிடும். துகளாகவோ, அலைகளாகவோ நம் அனுபவ ஒருங்கிணைத்தலில் இருப்பது மறைந்துள்ள உண்மைதானோ?

ஆனால், மேலே நாம் குறிப்பிட்ட மூன்று இயற்பியலாளர்களும் அவ்வாறு கருதவில்லை. கண்களில் தெரியும் காட்சியே உண்மை என்றும், பொதிக்கப்பட்டுள்ள மறைந்த அடிப்படை உண்மை என எதுவுமில்லை என்றும் அவர்கள் நம்பினார்கள். இவர்களின் கருத்து : “குவாண்டம் இயக்கவியல் (Quantum Mechanics) ஆழ்ந்த உண்மையைச் விளக்கவில்லை, நாம் இயற்கையை முழுவதுமாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதைத் தான் காட்டுகிறது.” குவாண்ட இயக்கவியலின் மரபுவழிக் கூற்றாக இது பல்லாண்டுகள் கோலோச்சியது.

ஐன்ஷ்டைன், ஷ்ரோடிங்கர் (Einstein, Schrodinger) போன்ற அறிவியல் மேதைகள் இதற்கு நேர்மாறான சிந்தனையைக் கொண்டிருந்தனர். கடைசிப் பத்தாண்டுகளில், நம்முடைய அனுபவங்களின் பின்னே, குவாண்ட உண்மை இருக்கிறது என்பதற்கான குறிப்புகள் வெளி வரத் தொடங்கின; உண்மையின் ஆழ் அடுக்குகளிலிருந்து நம் அனுபவங்கள் தொடங்குகின்றன என்பதும் புரிபடலாயிற்று. மிகப் பெரிய குவாண்ட அமைப்புகள், ஒரு மில்லி மீட்டர் அளவிற்கே பெரிதாக உள்ள பொருட்கள், பல நூறு கிலோமீட்டர்கள் பரப்பிலும் கவனிக்கப்பெற்ற ஒளியின் குவாண்டக் குணாதிசயங்கள் (உதாரணம்:  நோபல் 2022 இயற்பியல் பரிசு) போன்றவை குவாண்ட இயக்கவியலின் குறிப்புக்களைத் தந்து அதில் மேலே செல்ல உந்துதலை அளித்தன. முக்கியமான செயல் என்று, ‘டிகோஹிரன்ஸ்’  (Decoherence –சீர்மை இல்லாமை) வழிமுறையைக் கண்டுபிடித்ததைச் சொல்லலாம். இதுதான் குவாண்ட உண்மைகளை நாம் காண வழிவகை செய்தது.

2. ஒன்றேயான, அனைத்தும் ஒருமித்து இருப்பது மறைந்துள்ள உண்மை

நாம் அனுபவித்துக் கொண்டிருப்பதன் பின்னே மறைந்துள்ளதாகக் கருதப்படும் அந்த உண்மைதானென்ன? நீங்கள் நினைக்கக்கூடியவற்றில் மிக அழகானது என்று அதை நான் சொல்வேன். தடைகளற்ற அந்த ஒன்று, இந்த அகிலத்தில் உள்ள அனைத்தையும் ஒருமைப்படுத்துகிறது. அதீன் பந்த்யோபாத்யா, ‘நீலகண்ட பறவையைத் தேடி’ நாவலில் அற்புதமாக இதைச் சொல்கிறார். நீராய், வளமாய், தான்யமாய், பல்லுயிர்களாய், வானாய், காற்றாய், நெருப்பாய், வெளியாய் இருக்கும் அனைத்தையும் எப்படித்தான் ஒட்டுப் போட்டானோ?’

நூலாசிரியர் இதற்குக் காரணம் ‘குவாண்டப் பிணைப்பு (சிக்கல்) (Quantum Entanglement) என்று சொல்கிறார். சின்னஞ்சிறு பகுதிகளாய் அமைந்துள்ள குவாண்டப் பொருட்களின் குணம் இந்தப் பிணைப்பு. இதில் வியப்பிற்குரிய ஒரு செய்தி என்னவென்றால், அமைந்துள்ள பொருளைப் பற்றி என்னென்ன அறிய வேண்டுமோ, அதனை நன்றாக அறிந்திருந்தாலும், அதன் உட்பொருளான தொகுதிகள்/ பகுதிகள் பற்றி நிலவும் அறியாமை தான்.

சரக்கோட்பாட்டில் (String Theory) குறிப்பிடத்தக்கவரான லியோனார்ட் சஸ்கின்ட், (Leonard Susskind) இதை இப்படி விளக்குகிறார். நம் மகிழுந்துவை செப்பனிடும் ஒருவர், காரைப் பற்றி தான் முழுவதும் அறிந்துள்ளதாக பெருமை கொண்டாலும், காரின் தடுப்பான்கள், சக்கரங்கள், இயந்திரங்கள் பற்றி அவருக்குத் தெரியவருவதில்லை.

குவாண்டப் பொருட்கள், அலைகளால் அமைந்துள்ளதால் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. காற்றடிக்காத, அமைதியான, கண்ணாடித் தகடு போன்ற கடலை கற்பனை செய்யுங்கள்/ நேரிலும் பாருங்கள்(!). தனிப்பட்ட இரு அலை வகைகள், ஒன்றன் மீது மற்றொன்று மேலிட்டுவரும்போது, இது எப்படி சாத்தியமாயிற்று என்று சிந்தியுங்கள். முழுதும் தட்டையான பரப்புகள் இரண்டு, ஒன்றின் மீது மற்றொன்றாக அடுக்கப்படும்போது சீரான பரப்பு தெரியும்; மற்றொரு சாத்தியம், ஒரே மாதிரியான இரண்டு அலைகள் ஒன்றின் மீது மற்றொன்று  பயணிக்கிறதாக எடுத்துக் கொண்டு, (மாறி மாறியும் இது நடக்கலாம்) ஒன்றின் முகட்டின் மேல் மற்றொன்றின் நீளலைகள் பெயர்வதாலும் நடக்கலாம். கண்ணடித்தகடாகக் காட்சி அளிக்கும் கடலை இரு எழுச்சிகளின் விளைவாக மட்டுமே நாம் பார்த்தோமென்றால், தனித்தனி எழுச்சிகளின் வகைகளை நம்மால் அறிய முடியாது. இதைப் போலத்தான் குவாண்டப் பொருட்களின் அமைப்பில் இடம் பெறும் பகுதிகள், வரையறைக்கு உட்பட்ட வகையில் இருப்பதில்லை. பரிசோதனைகளின் மூலம் அவற்றை பகுத்து அறியும் வரை அவைகள் இல்லை; இதை, முழுமையைச் சிதைத்தே அறிகிறோம்.

3. நமது தினசரி வாழ்வில் நாம் காணும் பொருட்களின் பன்மை என்பது, வகுக்கப்படாத முழுமையைச் சார்ந்த நம் கண்ணோட்டமே

எல்லாம் ஒன்று என்றால், பொருட்களின் பன்மை ஏன்? இதற்கான விடை, நாம் முன்னர் குறிப்பிட்ட டிகோஹிரென்சில் உள்ளது. ஏதோ ஒன்றை நாம் கவனிக்கும்போது, என்ன நடக்கிறது என்பதை அறிவதற்கு, நாம் உலகை மூன்றாகப் பகுத்துக் கொள்ள வேண்டும்- பார்வையாளர், பார்க்கப்படும் பொருள், மீதி உலகம் (சூழல்). நம் சுற்றுப்புறத்திலிருந்து முழுவதுமாக நாம் தனித்திருக்க முடியாதென்பதால், நாம் அதனுடனும், பார்க்கப்படும் பொருளுடனும் இணைந்தே செயலாற்றுகிறோம். இந்த உட்செயற்பாடுகள் பிணைப்பை உண்டாக்குகின்றன. ஆயினும், முழு அண்டத்தை அறிந்தவர் எவருமே இல்லை என்பதால், பார்வையாளருக்கு, சூழலில் அடங்கியுள்ள தகவல்கள் அணுக முடியாதவையாகின்றன. இந்த அண்டத்தை ஒற்றையாகச் சேர்க்கும் வித்தை இந்த அணுகமுடியாமையில் இருக்கிறது.

முழுமையில், அண்டமானது ஒரு குவாண்டப் பிணைப்பில்உள்ளது என்றாலும், பார்வையாளருக்கு அது, பிளவுபட்டு, பலத் தோற்றங்களை அளிக்கிறது. அடிப்படையில், முழுமை நிச்சயமாக அழிவு படுவதில்லை; பார்வையாளரின் குறிப்பிட்ட கோணத்தில் அது அழிவுற்றதாகக் காட்சி அளிக்கிறது எனவே, அடிப்படையில் தனிப்பட்ட பொருள் என்பதெல்லாம் மாயையே.

நம் ஆதி சங்கரரின் அத்வைதம் இந்தக் கருத்தை வலியுறுத்திப் பேசிய ஒன்று. இரண்டற்றது என்பது அ-த்வைத சித்தாந்தம். காசியில், கங்கையில் குளிப்பதற்கு அவர் செல்லும் போது பஞ்சமன் ஒருவன் எதிரே வர அவனை விலகச் சொல்கிறார் அவர். அவன் அவரைக் கேட்கிறான்: ‘எதிலிருந்து எதை விலகச் சொல்கிறீர்ள்? ஆத்மா, ஆத்மாவை விலக்குமா? என் ஆத்மாவும், உன் ஆத்மாவும் வேறுவேறா?’ 

4. இந்த ஏகத்துவம் அல்லது ஒன்றே என்ற சிந்தனையை, மேலை நாடுகள் அடக்கியதால் (ஒழிக்க நினைத்ததால்) இந்த மெய்யறிவு பரவலான புகழ் பெறவில்லை

அனைத்தும் ஒன்றே என்ற சிந்தனை கிழக்கு ஆசிய நாடுகளின் தத்துவம் அல்லது மதம். பழங்காலத்தில், மேலை நாடுகளிலும் இந்த சிந்தனை நிலவி வந்திருக்கிறது என்பது வியப்பிற்குரிய செய்தி. எல்லாவற்றிலும் நிறைந்திருப்பவரும், அனைத்தும் ஒன்றேயானவரும் ‘கடவுள்’ என்று எகிப்தியர்கள் நம்பினார்கள். அந்தக் காலக்கட்ட கிரேக்க தத்துவவாதிகளான ஹெராக்ளிடஸ், (Heraclitus) பார்மினைட்ஸ், (Parmenides) ஆகியோர், அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்று என்பதைப் பற்றி எழுதினார்கள். நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்திய ப்ளாடோ, (Plato) ஏகத்துவத்தை, மறைபொருள் கோட்பாடென்றும், அதை வாய்மொழி வழியே பரப்ப வேண்டும் என்றும் செயல்பட்டவர்.

ரோம சாம்ராஜ்யத்தில் சில காலம் ப்ளாடோவின் சிந்தனைகளுக்கும், கிருத்துவ தத்துவங்களுக்கும் இடையே போட்டி நிலவியது. இந்தப் போராட்டத்தில் வென்ற கிருத்துவம், ப்ளாடோவின் சிந்தனையை ஏற்று அந்த ‘ஒன்று’ என்பது கடவுள் என்று சொன்னது. ஆயினும், இரண்டு என்ற பாகுபாட்டில் அது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தது- நன்மை, தீமை, தேவன், அசுரன், சொர்க்கம், நரகம். இத்யாதிகள்

அண்டத்தில் இத்தகைய தொடர் போராட்டங்கள் நிலவும் என்ற அந்தக் கொள்கையின் தாக்கத்தால், ‘ஒன்று’ என்று அழைக்கப்பட்ட ‘கடவுள்’ வேறோர் உலகைச் சேர்ந்தவரானார். கடவுளை ‘இயற்கை’ எனக் கருதாமல், அல்லது இயற்கையை கடவுள் எனச் சொல்லாமல் இயற்கை, கடவுளின் எதிரி என்ற கருத்து வலுப் பெற்றது. இதன் பின்னால் அரசியல் உள்ளது. கடவுள் எங்கும் உள்ளவராகவும், அனைத்திலும் ஊடுருவி இருப்பவராகவும் சொன்னால், தேவாலயப் பூஜாரிகளுக்குத் தேவை இல்லை அல்லவா? பழங்காலக்கட்டத்தின் இறுதியிலும், நடு யுகங்களிலும், அரசியல்வாதிகளின் முதுகெலும்பாக செயல் பட்டது தேவாலயங்களே., கடவுளுக்கும், நம்பிக்கை கொண்ட மனிதர்களுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுவது என்று சொன்னால் தான், அந்த இருமையை நிலை நிறுத்தினால் தான் தேவசபையினரால் அதிகாரம் செய்ய முடியும், அதை வைத்து அரசியல் செய்ய முடியும். கடவுளை இயற்கையுடன் இணைப்பதோ, அல்லது ஒன்றேயான தெய்வத்தில் இயற்கையைப் பார்ப்பதோ கடும் குற்றம் என தண்டிக்கப்பட்டது. இப்படிச் சொல்பவர்களை சாத்தான் பீடித்துள்ளது என்று சொல்லி, உயிரோடு எரிப்பது, நாக்கைத் துண்டிப்பது, சவக்குழியிலிருந்து பிணத்தை தோண்டி எடுத்து, புனிதமாக்கப்படாத நிலங்களில் புதைப்பது என்றெல்லாம் வன்முறைகள் நிகழ்ந்துள்ளன.

இத்தனை நடந்தும் ஏகத்துவம் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்தது. அது பாட்டிசெல்லி, (Botticelli) லியோனார்டோ டா வின்ஸி (Leonardo da Vinci) ஆகியோரின் ஓவியங்களில், மோஸார்ட், (Mozart) பீதோவென் (Beethoven) ஆகியோரின் இசையில், கோதா,(Goethe) கோல்ரிட்ஜ் (Coleridge) ஆகியோரின் கவிதைகளில், ந்யூட்டன், ஃபாரடே, ஐன்ஷ்டைன் (Newton, Faraday, Einstein) ஆகியோரின் அறிவியலில் இடம் பிடித்தது. ஆயினும், தேவாலயம் என்ன சொன்னதோ, எந்த இருமையைப் பேசியதோ, இயற்கைக்கு எதிராக எப்படி கடவுளை நிறுத்தியதோ, அது நிலை பெற்று நின்றது. “பெரும் சித்திரம் வரைவதற்கு மதத்திற்குத் தான் தனி உரிமை; அறிவியல், விவரங்களை இட்டு நிரப்பி, சிக்கல் தீர்விற்கான வழிமுறைகளை மட்டும் சொன்னால் போதும்.” அறிவியலாளர்கள், ‘ஒன்றும், இயற்கையும்’, அல்லது ‘ஏகத்துவமும், விஞ்ஞானமும்’ முரணானது என்று உள்வாங்கிக் கொண்டார்கள். ‘எல்லாம் ஒன்றே’ என்ற கருதுகோள், சரியான அறிவியல் இல்லை என்று நினைத்தார்கள்.

5. அடிப்படை இயற்பியலில் மேலும் முன்னேற்றம் காண, ஏகத்துவத்தை குவாண்ட இயக்கவியலின் விளைவு என எடுத்துக் கொள்ள வேண்டும்

இது அவ்வளவு பொருட்படுத்தத் தக்கதா? பல இயற்பியலாளர்கள் இந்தக் கூற்று உண்மை, பொய் என எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு இயற்பியல் என்பது, கணித மாதிரிகளை அமைப்பது, அதை வைத்து கணக்கிடுவது, முடிவுகளை பரிசோதனையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பதே. மீபொருண்மையுடன் ஆழச் சிந்தித்தல் இல்லாத வரை இது அவர்களுக்கு ஏற்புடையதே. ஆனால், உண்மை நிலவரம் இதுவல்ல. அடிப்படை இயற்பியல் இப்போது சிக்கலைச் சந்தித்து வருகிறது; எதை அடிப்படை என இதுவரை உணர்ந்தோமோ, அதைப் பற்றிய மறுபார்வையிடும் தேவை எழுந்துள்ளது.

நம்முடைய மிகச் சிறந்த தேற்றங்களில் கூட விளக்கவொண்ணா தற்செயல்கள் இருக்கின்றன. பொருள், வெளி, காலம் போன்ற அடிப்படைகளில் கட்டமைக்கப்பட்டுள்ள இயற்பியல், அனைத்திற்குமான கோட்பாட்டைக் கண்டறிய வேண்டிய ஆவலால், தள்ளாடுகிறது, துக்கப்படுகிறது. சின்னச்சின்ன கட்டமைப்புப் பகுதிகளின் வழியே உலகை நாம் அறிந்து வந்துள்ளோம். பொருட்கள் அணுக்களால் ஆனவை என்று நினைக்கப்படுகின்றன, அணுக்கள், ஆரம்ப நிலைத் துகள்களான க்வார்க், எலெக்ட்ரான் (Quark, Electron) ஆகியவற்றால், அந்த க்வார்க்கும், எலெக்ட்ரானும் மிக நுண்ணிய சரங்களால் என்று சரக் கோட்பாடு பேசுகிறது.

எவ்வளவு தூரம் இதை நியாயப்படுத்த முடியும்? குவாண்ட இயக்கவியலிற்கு முக்கியம் கொடுத்து இயற்பியலின் அடிப்படை கட்டமைப்பாக, முழு அண்டத்தையும் ஏற்றுச் செயல்பட வேண்டும்.  குறுக்கிக் கொள்ளக் கூடாது. இந்த முன்னுதாரண செயல், இயற்பியலில் வியத்தகு ஆய்வுகளையும், புரிதல்களையும் கொண்டு வரும். துகள் இயற்பியலாளர்கள், மிகச் சிறிதான, மிகப் பெரிதான பொருட்களின் இயற்பியலில், தொடர்பு உள்ளதா என்று ஆராய்கிறார்கள். (அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது- அதாவது நாமே உலகம்; உலகமே நாம். அதன் கட்டமைப்பும், நம் கட்டமைப்பும் ஒன்றே.) ஒன்றுபட்ட, அடிப்படையான குவாண்ட விவரணைகள் மூலம்  காலம், வெளி இவற்றை அறிய முடியுமா என்று சரக் கோட்பாட்டாளர்கள் ஆய்வு செய்கிறார்கள். இவைகளின் சாத்தியத் திறவுகோல் ‘ஒன்றில்’ இருக்கலாம்.

சமீபத்தில் பாரத பிரதமரைப் பற்றி ‘மோதி ஜன நாயக வாதி இல்லை; ஆனால், இந்தியா ஒரு குடியரசு’ என்று போகிற போக்கில் சொன்ன ஜியார்ஜ் சோராஸ், (George Soros) 1988-ல் தான் எழுதிய நூலில் ‘த தியரி ஆஃப் ரிப்ளெக்சிவிடி’ (The Theory of Reflexivity) என்பதில் இவ்வாறு சொல்கிறார்: “மனிதர்கள் உண்மையை அறிந்து கொள்வதில் ஒரு அங்கமாகவும் இருக்கிறார்கள். ஆனால், அந்தக் கண்ணோட்டங்கள் குறைகளுடன் கூடியவை. இந்தக் குறைகள், நாம் உண்மையுடன் வினைபுரியும் விதத்தை பாதிக்கின்றன; இது நம் கண்ணோட்டத்தை வடிவமைக்கிறது; சுருங்கச் சொன்னால், காரண- காரிய பிரதிபலிப்பு இது.”

நம் வேதங்கள் ஒவ்வொருக்குமான மூன்று உடல்களைப் பற்றிச் சொல்கின்றன. பரு உடல், சூக்ஷ்ம உடல், காரண உடல். பரு உடலில் செயல் புரிவதற்கான ஐந்து கருவிகளும், நுட்ப உடலில், ஞானக் கருவிகள் ஐந்தும், மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகியவையும் உள்ளன. காரண உடல் ஆன்மா- அது எங்கும் நிறைந்து, அனைத்து வல்லமைகளுடன் இருப்பது, அழிவற்றது. குவாண்ட இயக்கவியலின் படி உடல் அழிந்த பிறகு, நுட்ப உடலும், காரண உடலும், ஃபெர்மியான்கள், போஸான்கள் (Fermions, Bosons) போன்ற துகளாகி, பின்னர் அலை துகள் என்ற இருமையில் கலந்து, அதன் பின்னர் அலையாக, குவாண்டப் பரப்பாக, 10 பரிமாணமுள்ள சரங்களாகின்றன. கேன உபனிடதம் (3.6 3.10) ப்ரம்மன், அக்னி மற்றும் வாயு தேவனை, அழைத்து, துரும்பை நூலாகுமாறு எரிக்கவும், புல்லைப் பெயர்க்கவும் சொல்கிறார். இருவராலும் முடியவில்லை. நுட்ப உடலின் சரமே இதன் பொருள். நம் ஆடல்வல்லான் உருவம் புலப் பரப்பினை மட்டும் பேசவில்லை. உயிரியக்கத்தின் செயல்பாடும், அதன் முடிவில் சரங்களாவதையும் சுட்டுகிறது.

‘ஏகம் சத் விப்ர பெரும் வதன்தி’- உண்மை ஒன்றே. அதை ஞானிகள் பலவாறு அழைக்கிறார்கள்.

‘ஏகன் அனேகன் விமலன் அடி போற்றி’ என்று பாடுகிறார் மாணிக்க வாசகர்.

திருமங்கை ஆழ்வாரின்  திருநெடுந்தாண்டகப் பாடல் இவ்வாறு அமைந்துள்ளது:

“பாருருவில் நீர் எரிகால் விசும்பும் ஆகி
பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற
இமையவர் திருவுரு வேறெண்ணும்போது
ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ
ஒன்று மாகடலுருவம் ஒத்து நின்ற
மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி
முகிலுருவம் எம்மடிகள் உருவம் தானே.”

உசாவிகள்:

https://nextbigideaclub.com/magazine/one-ancient-idea-holds-future-physics-bookbite/40213/

கேன உபனிஷதம், திருவாசகம், திரு நெடுந்தாண்டகம், பாரதி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.