
முதலில் பப்பிக்குட்டியைப் பார்த்தது அம்மு தான்.
“அப்பா, அதோ பார், சின்ன பப்பி” என்றாள் அம்மு.
மதுரை பேருந்து நிலையத்தின் அமளிக்கு நடுவில் தூரத்திலிருந்து எப்படி அந்த சிறிய கூடையைப் பார்த்தாள் என்பது ஒரு அதிசயம் தான். முதலில் அது ஒரு பொம்மை நாய் என்று நினைத்தேன். அது லேசாக அசைந்தவுடன் தான் தெரிந்தது அது ஒரு உயிருள்ள ஜீவன் என்று.
“அப்பா, அதோட பேர் என்னப்பா?” .
அம்மு அடுக்கு அடுக்காக கேள்வி கேட்பதால் “அம்மு” என்ற பெயருக்குப் பதிலாக பதிலாக கே.பி. சுந்தராம்பாள் என்று பெயர் வைத்திருக்கலாம் என்று நான் வஸந்தியிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. வசந்தியின் முறைப்பை சில வார இடைவேளைக்குப்பின் நாளை மறுபடியம் பார்க்கலாம்.
“அப்பா”, என்றாள் அம்மு மறுபடியும். ஐந்து வயதானாலும் விடாமல் கேள்வி கேட்பாள்.
“நீயே ஒரு பேர் சொல்லு”,
“நானா…? சரி, பப்பிக்குட்டின்னு வெச்சுடலாமா?”
” பப்பிக்குட்டியா ? சரி, வெச்சுடலாமே?”
அப்படித்தான் பப்பிக்குட்டிக்கு நாம கரணம் ஆனது.
அன்று வெள்ளிக் கிழமையானதால் பேருந்து நிலையத்தில் நல்ல கூட்டம். எப்படியோ அம்முவைக் கூட்டிக் கொண்டு சென்னை போகும் பிளாட்பாரத்திற்கு வந்து சேர்ந்தேன்.
“அப்பா, பப்பிக்குட்டி ” என்றாள் அம்மு மறுபடியும் சந்தோஷத்துடன்.
பக்கத்தில் பார்த்தால் அதே கூடை.
“ஹை, பப்பிகுட்டியும் நம்ம கூட பஸ்ஸுல வரப் போறது” என்று குதித்தாள் அம்மு.
நான் கூடையைப் பார்த்தேன். வெள்ளைப் பஞ்சு மேகம் போல புசு புசுவென்று ஒரு அழகான குட்டி. பிறந்து சில வாரங்கள் தான் ஆகி இருக்க வேண்டும். பொமேரேனியன் வகை என்று நினைத்தேன். கூடையின் பக்கத்தில் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாள் நின்று கொண்டு யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தார்.
“ஆமாங்க, நம்ம பேரப் பிள்ளைங்களுக்குத் தாங்க. போன மாசம் தான் குட்டி போட்டது. எழுபதாயிரம் கேட்டாங்க. நாங்க அம்பதுக்கு பேசி முடிச்சிட்டோம்”.
“முதல்ல கார்ல போறதா தான் பிளான். ஆனா டிரைவருக்கு திடீருன்னு ஒடம்பு சரியில்ல . அது தான் வேற வழியில்லாம இப்போ பஸ்ஸுல வர வேண்டியதாய் போச்சு”.
அந்த அம்மாள் பஸ்ஸில் அவ்வளவாக பயணித்தது இல்லை என்று நன்றாகத் தெரிந்தது. அதற்காக கூடவே இரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு வந்திருந்தார்கள். ஒரு பெண் வேலைக்காரி போல தோன்றியது. இன்னொருவர் கொஞ்சம் விவரம் தெரிந்தவர் மாதிரி தோன்றியது.
இன்னும் பேருந்து வரவில்லை. நான் பக்கத்தில் லாலா கடைக்குப் போய் காரசேவும், இருட்டுக்கடை அல்வாவும் வாங்கலாம் என்று நினைத்தேன். வசந்திக்குப் பிடிக்கும்.
“அப்பா, நம்ம எப்போ நாய் வாங்கப் போறோம்?” என்றாள் அம்மு.
“முதல்ல நம்ம வீட்டுக்கு வரப் போற குட்டிப் பாப்பாவை பாக்கலாம். அப்புறம் நாய் பத்தி யோசிக்கலாம்”. அம்முவுக்கு இந்த பதில் அவ்வளவு திருப்தி தரவில்லை என்று தெரிந்தது.
“அப்பா, குட்டிப் பாப்பாக்கும் நாய் பிடிச்சா வாங்கலாமாப்பா?”.
“அதோ பார், பஸ் வந்தாச்சு. அப்பறம் பேசலாம்”.
அரசு பேருந்து ஆனாலும் நன்றாகவே இருந்தது. கீழே உட்காரும் இருக்கை . மேலே படுத்துக் கொள்ளும் வசதி. குளிர் சாதன வசதி இருப்பதால் வெளியுலகம் பற்றி ஏதும் தெரியாமல் தூங்கலாம்.
“இது என்னம்மா? நம்ம பஸ்ல நாயெல்லாம் கொண்டு போக முடியாது”. என்றார் கண்டக்டர்.
“சார், எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. சின்ன குட்டி சார். சத்தமே போடாது” என்றார் அந்த அம்மாளை ஏற்றி விட வந்தவர்.
“அது எப்படி? இது மனுஷங்க போற வண்டி. நாய் வண்டி இல்லை. நீ என்ன சொல்ற பாண்டி அண்ணா?” என்று கண்டக்டர், டிரைவரைப் பார்த்து கேட்டார். டிரைவருக்கு புரிந்து விட்டது.
“அது சரி தான். ஆனால் அவுங்க இப்போ என்ன பண்ண முடியும். நாம தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணனும்”.
ஏற்றி விட வந்தவருக்கும் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாகவே தெரிந்து இருந்தது. பாண்டி அண்ணனை தனியாக எங்கோ அழைத்து சென்றார். இருவரதும் திரும்பி வரும்போது பாண்டி அண்ணன் முகத்தில் மலர்ச்சி.
“நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க. அம்மாவுக்காக தான் இதை நாங்க செய்யறோம். நடு வழீல தீடீர்னு செக்கிங் பண்றேன்னு வந்துடுவாங்க. அவங்களை சமாளிக்கணும்ல? அதுக்குதான்”.
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. குட்டிக்கு வர்றதுக்கு முன்னாடி கொஞ்சம் தூக்க மருந்து கொடுத்து இருக்கோம். டாக்டர் இன்னும் கொஞ்ச நேரத்துல தூங்கிடும்ன்னு சொல்லிருக்கார். அதனால் யாருக்கும் ஒண்ணும் தெரியாது”
கூட வந்தவர் நாய்க்குட்டியின் உரிமையாளரைப் பார்த்து “எல்லாம், சரி பண்ணியாச்சு அம்மா. நீங்க பத்திரமா போயிட்டு வாங்க. ராணி, நீ அம்மாவ பாத்துக்கோ” என்றார்.
பஸ் கிளம்பும் நேரம் ஆகி விட்டது. எல்லாரும் ஏறி விட்டோம்.
“அப்பா, மேலே போய் படுத்துக்கலாமா?”
“இரு, பஸ் கிளம்பட்டும்”
கண்டக்டர் ஒரு முறை எல்லா பயண சீட்டுக்களையும் சரி பார்த்தார்.
“இன்னும் ரெண்டு பேர் இன்னும் வரலை”
“அதனால் பரவாயில்ல. நாம கரெக்ட்டா கிளம்பிடலாம்” , பாண்டி அண்ணன் சொல்லி முடிக்கவும் இரண்டு பேர் ஓடி வரவும் சரியாக இருந்தது.
“நல்ல வேளை வந்தீங்க. இல்லாட்டி விட்டுட்டு போயிருப்போம்”.
“சாரி, வி ஆர் லேட் . இட் இஸ் தி ப்ளடி டிராபிக்”
இரண்டு இளைஞர்கள். ஒருவன் அரைக்கால் சட்டை போட்டிருந்தான். இன்னொருவன் கிழிந்த ஜீன்ஸ். இரண்டு பேருக்கும் ஓடி வந்ததில் மூச்சு வாங்கியது.
கண்டக்டர் பயண சீட்டை சரி பார்த்தார்.
“இதுல யாரு விக்ரம், யாரு ஷண்முக சுந்தரம்?”.
அரைக்கால் சட்டை
“நான் விக்ரம்” என்றான்.
“நீ தான் ஷண்முக சுந்தரமா? நல்ல பேரு ”
என்று சீட்டுகளை திரும்பிக் கொடுத்து விட்டு “ரைட். போகலாம் அண்ணே”.
டிரைவர் எப்போதும் போல சம்பிரதாயமாக முதல் கியர் போட்டு விட்டு அப்புறம் ரிவேர்ஸ் எடுத்தார்.
“நல்ல வேளை, பஸ்சை பிடிச்சுட்டோம், சாம்! நாளைக்கு வேறே ஆபீஸ்ல கிளையண்ட் மீட்டிங்”.
“ஆமாம். மார்னிங் 8:30 கே மீட்டிங். சிட்னி கிலையண்ட் – புது காண்ட்ராக்ட் “.
“நல்ல வேளை ஸ்லீப்பர் பஸ் கிடைச்சது. நல்லா தூங்கிட்டு காலைல பிரஷ் ஆகப் போகலாம்”.
பஸ் இப்போது மதுரை நகரின் அமளியைத் தாண்டி வெளியே வந்து இருந்தது. எல்லோரும் தூங்குவதற்கு தயார் செய்து கொண்டிருந்தனர். டிரைவரும் பிரகாசமான விளக்குகளை அணைத்து விட்டு சிறிய விளக்குகளை எரிய விட்டார்.
அதற்காகவே காத்திருந்தது போல எழுந்தது கூடையில் இருந்து ஒரு சத்தம். முதலில் சிறிய முனகலாக வெளிப்பட்டு பின் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாயிற்று. முனகல், குலைப்பு , ஊளை என்று பிரித்து சொல்ல முடியாத ஒரு சத்தம்.
“என்னம்மா, நாய் குட்டி தூங்கிரும்னு சொல்லித்தானே ஏத்தினோம். இப்போ இப்படி பண்ணுதே”
“தூக்க மருந்து கொடுத்து தான் எடுத்து வந்தோங்க. இப்ப என்ன பண்றது?”, வழி அனுப்ப வந்தவர் இல்லாததால், இப்போது அந்த அம்மாளே பேச வேண்டிய ஒரு கட்டாயம். அவர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.
இப்போது சத்தம் நின்று விட்டது. எல்லோரும் அப்பாடா என்று கண் அயரும்போது மறுபடியும் தொடங்கியது முன்னை விட அதிகமாக.
“என்ன இது நியூசென்ஸ்? நாங்கள் எப்படி தூங்குவது? இது என்ன நாய் வண்டியா?”. விக்ரம் கடுப்பாகி விட்டான்.
“தூக்க மருந்து கொடுத்து தான் எடுத்து வந்தோங்க” என்று மறுபடியும் கிளிப் பிள்ளை மாதிரி அதேயே சொன்னார் அந்த அம்மா. “இதெ பாருங்க” என்று மாத்திரை டப்பாவே தூக்கி காட்டினார்.
“சரியா கொடுத்து இருக்க மாட்டீங்க. இன்னும் இருக்கா?
“இன்னும் இருக்கு. ஆனா டாக்டர் கூட கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு”
“அந்த டாக்டரை இங்க வந்து தூங்க சொல்லுங்க. அப்போ தெரியும். நாளைக்கு என்னோட கிளையண்ட் மீட்டிங்க அவரா அட்டென்ட் பண்ணப் போறார்? கொண்டாங்க அந்த டப்பாவை” பிடுங்காத குறையாக மாத்திரை டப்பாவை விக்ரம் வாங்கி மாத்திரை லேபிளை படித்தான்.
“மெலடோனின். சாம். நீ கூகுளை சர்ச் பண்ணிப் பார்”.
ஷண்முக சுந்தரம் தான் மொபைல் போனில் ஏதோ தட்டி விக்ரமிடம் காட்டினான்.
விக்ரம் அதை மேலோட்டமாக படித்து விட்டு, “நீங்க கூட ஒரு நாலு மாத்திரை கொடுக்கலாம். ஒண்ணும் ஆகாது” என்றான்.
அந்த அம்மா தன் வாழ்க்கையில் எந்த முடிவும் சுயமாக எடுத்தது இல்லை. எனவே விக்ரம் சொல்லுக்கு எதிராக ஒன்றையும் செய்ய தெரியவில்லை . பேருந்தில் எல்லாரும் மெளனமாக இருந்ததால் அவர்களும் அந்த முடிவுக்கு உடன் பாடுதான் என்று எடுத்த்துக் கொண்டாள் .
அம்முவுக்கு இந்த அமளி எதுவும் தெரியாது. பேருந்து கிளம்பிய பத்து நிமிடத்தில் தூங்கி விட்டாள். எனக்கும் நல்ல தூக்கம்.
பப்பிக்குக் கூட தூக்க மாத்திரை கொடுத்து இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எனறால் அடுத்த பத்து நிமிடங்களில் சத்தம் அடங்கி விட்டது.
நடுவில் உளுந்தூர் பேட்டை டோல் கேட் தாண்டி ஒரே ஒரு முறை பேருந்து நின்றது. “அம்மா, அது நல்லா தூங்குது ங்க” என்றாள் கூடையை வைத்திருந்த ராணி அந்த அம்மாவிடம்.
காலையில் விக்கிரவாண்டியில் சிற்றுண்டிக்கு நிறுத்திய போது பொழுது நன்றாக விடிந்து விட்டிருந்தது.
“அம்மா, அது இன்னும் அசையாம தூங்குது”
“எங்க பாக்கலாம்” என்று அந்த அம்மா கூடையைத் திறந்து பார்த்து விட்டு “கர்த்தரே” என்று என அதிர்ந்தாள். “என்னாச்சும்மா?” என்றார் கண்டக்டர். ஒன்றும் பேசாமல் கூடையை காட்டினார் அந்த அம்மாள். பப்பி மூச்சில்லாமல் ஒரு பொம்மை போல மீளா துயிலில் இருந்தது.
விக்ரம் “ஓ , மை காட். ஐ அம் சாரி” என்றான். அந்த அம்மாள் முகத்தை திருப்பிக் கொண்டார்கள். கொஞ்ச நேரத்தில் பேரக் குழந்தைகளுக்கு என்னடா பதில் சொல்வது என்ற கவலை . ஐம்பது ஆயிரம் வேறு போய் விட்டது. ஒழுங்காக காரில் வந்திருக்கலாம்.
“ஆமாம்ப்பா, இப்போ என்ன பண்றதுன்னு தெரியல்ல” யாரிடமோ கை பேசியில் பேசிக் கொண்டு இருந்தார்.
“சரிப்பா, நீ மறுபடியும் போன் பண்ணு”.
சரியாக இருபது நிமிடத்தில் அந்த அம்மாளுக்கு மறுபடியும் கை பேசி அழைப்பு வந்தது.
“அப்படியா. கர்த்தர் காப்பாற்றினார். நான் உன்னை கோயம்பேட்டில் பார்க்கிறேன்” என்றார்.
“ராணி. நல்ல வேளை. என் பையன் இன்னொரு நாய்க் குட்டிக்கு ஏற்பாடு செய்து விட்டான். நம்ம பஸ் ஸ்டாண்டிலயே கொண்டு வந்து கொடுக்கறாங்களாம். விலையும் அதிகம் இல்லை. பத்துக்குள்ள முடிச்சுட்டானாம். கர்த்தர் நம்மளை கை விட மாட்டார்”.
விக்ரவாண்டியில் பேருந்து கிளம்புவதற்குள் அந்த கூடை காலியானது, இன்னொரு நாய் குட்டிக்காக.
அம்மு எழுந்தவுடம் கேட்ட முதல் கேள்வி, “அப்பா, பப்பிகுட்டி எங்கப்பா?” எதிரில் இருந்த வெறும் கூடையைப் பார்த்த படி..
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நான் பதில் சொல்வதற்கு முன்னாள், அந்த அம்மாள் திரும்பி பார்த்து, அம்முவிடம் “அது சாமி கிட்ட போயிருச்சும்மா ” என்றார். என்ன புரிந்ததோ அம்மு அழத் தொடங்கினாள்.
வீட்டிற்கு வந்து வசந்தியைப் பார்க்கும் வரை அவள் அழுகை ஓயவில்லை.
பின் குறிப்பு:
அன்றைக்கு சிட்னி கிளையண்ட்டுக்கு தலை வலித்ததால் விக்ரமுடைய 8.30 மீட்டிங் நடக்கவில்லை.