சக்குராவின் சலனம்

மூலப்பாடம்

கான்ஜி எழுத்துருக்களில்
ひさかたの
光のどけき
春の日に
しづ心なく
花の散るらむ

கனா எழுத்துருக்களில்
ひさかたの
ひかりのどけき
はるのひに
しづごころなく
はなのちるらむ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் தொமொனொரி

காலம்: கி.பி 850 – 904.

பேரரசர்கள் உதா மற்றும் தாய்கோவின் அரசவைகளில் அரசவைப் புலவராக இருந்தவர். புலவர் ட்சுராயுக்கி தொகுத்த கொக்கின்ஷூ தொகுப்பின் ஆசிரியர் குழுவில் இவர் இடம்பெற்றிருந்தார். ட்சுராயுக்கியின் உறவினர்கூட. ஆனால் அத்தொகுப்பு நிறைவடைவதற்கு முன்பே இவர் இறந்துவிட்டார். கொக்கின்ஷூ தொகுப்பில் இவர் எழுதிய 47 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவைதவிர 20 செய்யுள்கள் தொமொனொரிஷூ என்ற பெயரில் தொகுக்கப்பட்டு ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாகக் காணக்கிடைக்கிறது. காலத்தால் அழியாத 36 பழங்கவிஞர்கள் பட்டியலில் இவரும் இடம்பெற்றிருக்கிறார்.

பாடுபொருள்: சக்குரா மலர்களின் நிலையாமை.

பாடலின் பொருள்: சொர்க்கத்திலிருந்து வரும் ஒளிவெள்ளம்போல் இந்த வசந்தகாலக் கதிரொளி இதமாக இருந்தாலும் இந்த சக்குரா மலர்கள் ஏன் மன அமைதியற்றதுபோல் இவ்வளவு விரைவாக உதிர்ந்துகொண்டிருக்கின்றன?

ஆண்டுதோறும் ஏப்ரல் முதல்வாரத்தில் பூக்கும் சகுரா மலர்களின் அழகையும் பூத்த சில நாட்களிலேயே உதிர்ந்துவிடும் போக்கையும் கூறும் மிக எளிமையான பாடல். ஜப்பானிய இலக்கியத்தில் அஃறிணைப் பொருட்களுக்கும் மனம் இருப்பதுபோல் செய்யுள்கள் புனையும் வழக்கம் இக்காலகட்டத்தில் தோன்றியதாகக் கூறுகிறார்கள். இத்தொடரின் 26வது பாடலும் (காணும் பேறைத் தாரீரோ?) இதேபோன்ற தொனியில்தான் இருக்கும்.

இந்த சக்குரா மலரின் நிலையாமையை வைத்துப் பல செய்யுள்கள் காலந்தோறும் ஜப்பானிய இலக்கியத்தில் இயற்றப்பட்டிருக்கின்றன. இத்தொடரின் 17வது பாடலின் (கடவுளும் காணா அதிசயம்) ஆசிரியரான நரிஹிரா இசேவின் கதைகள் புதினத்தில் சக்குரா பற்றி ஒரு பாடலை இயற்றியுள்ளார். இந்த சக்குரா மலர்கள் மட்டும் இல்லையென்றால் வசந்தகால இதயங்களில் எப்படி அமைதி நிலவும் என்பது அதன் பொருள். 

இப்பாடல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக கி.பி 1332ல் புலவர் கென்கோ யொஷிதா இயற்றிய ஒரு பாடலில் சக்குராவின் இந்த நிலையாமைதான் அழகு என்கிறார். நிரந்தரமானவை மட்டுமே அழகு என்று சொல்லமுடியாது. முழுநிலா நாளில் மட்டும்தான் நாம் நிலவை இரசிக்கிறோமா என எதிர்க்கேள்வி கேட்கிறார்.

வெண்பா:

வானகம் ஈந்தநல் வெய்யவன் வீசிடும்
பூனதம் அன்ன ஒளிவரினும் - மானதம்
இல்லா உயிர்போல் சிதறும் சருகாய்
சகுரா மலரின் உதிர்வு
Series Navigation<< மலையாற்றின் இலையணைநீண்ட வாழ்வே சாபமோ? >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.